பகுதி 15 : யானை அடி – 6
நோயில் படுத்திருந்தபோது இருந்த உளநிலைகளும் எழுந்தமரும்போது உருவாகும் உளநிலைகளும் முற்றிலும் வேறானவை என்று துரியோதனன் அறிந்துகொண்ட நாட்கள் அவை. படுக்கையில் எழுந்து அமர்ந்திருக்கத் தொடங்கியபின் அயலவர் எவரையும் சந்திக்க அவன் விழையவில்லை. ஆனால் படுத்திருக்கையில் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்க எவரெல்லாம் வருவார்கள் என்பதையே எண்ணிக்கொண்டிருந்தான். படுத்திருக்கையில் எழுந்து நிற்கும் உலகிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டவனாக, உதிர்க்கப்பட்டவனாக உணர்ந்தான். மரங்கள், மனிதர்கள், மலைகள், கட்டடங்கள் என அனைத்துமே எழுந்து நின்றுகொண்டிருந்தன. எழுந்து நிற்பவையே வாழ்கின்றன. அவன் அவற்றை கீழிருந்து கையறுநிலையில் நோக்கிக்கொண்டிருந்தான்.
அந்த எண்ணம் முதலில் பெரும் கழிவிரக்கத்தை அளித்தது. நெஞ்சு நெகிழ்ந்து உருகி விழிநீராக வழியத் தொடங்கியபின் அதுவே ஒரு விடுதலையை உருவாக்கியது. நின்றிருக்கும் உலகின் வஞ்சங்கள், விழைவுகள், திட்டங்கள் அனைத்தையும் பிறிதொருவனாக நின்று நோக்கமுடிந்தது. அவற்றின் பொருளின்மையும் வெறுமையும் ஒவ்வொரு கோணத்திலும் தெரிந்தது. படுத்திருப்பவன் ஒரு குழந்தை என அவன் பானுமதியுடம் சொன்னான். அவன் பிறரால் ஊட்டப்பட்டு நீராட்டப்பட்டு கொஞ்சப்பட்டு வாழவேண்டியவன். பிறரது கைகளால் கையாளப்படுபவன். பிறர் கைகள் தொடுவதென்பதே மனிதனை மெல்லியலாளன் ஆக்கிவிடுகிறது. அவனுள் உறைந்திருந்த அனைத்தையும் கரைந்தோடச்செய்து நீர்வடிவினனாக ஆக்கிவிடுகிறது.
ஒவ்வொருநாளும் அவனை முதலில் தொடும் இளையமருத்துவனின் மென்மையான கைகளுக்காக விழிப்பு வந்ததுமே அவன் காத்திருந்தான். அந்த இளைஞன் தன்னை மென்மையாகத் தூக்கி புரட்டி ஆடைகளை மாற்றத்தொடங்கும்போது உள்ளம் இளகி இனிய இளவயது நினைவுகள் எழுவதை அவன் சிலநாட்களுக்குள்ளாகவே கண்டுகொண்டான். அவனுடைய தொடுகை இளமையின் தொடுகையாக ஆகியது. வலியோ துயரோ எழும்போது ஏதாவது ஒன்றின்பொருட்டு அவனை அழைத்து தன்னை தொடவைத்தான். அங்குள்ள ஒவ்வொருவரும் தன்னை தொடவேண்டுமென விழைந்தான். மனிதர் தொடும்போது உண்மையிலேயே வலி குறைந்தது. எனவே ஒருகட்டத்தில் எப்போதும் எவரேனும் தன்னை தொட்டுக்கொண்டிருக்கவேண்டுமென விழைந்தான். தனிமையில் கணநேரம்கூட இருக்கமுடியாதவனானான்.
அங்கிருந்த அத்தனைபேரையும் அவன் தனிப்பட்டமுறையில் அறிந்துகொண்டான். கைகளால் ஆன உயிர்கள். மனிதர்களின் கைகளைப்போல அவர்களின் உள்ளத்தை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை வேறில்லை. அவன் அதற்கு முன் கைகளை நோக்கியதே இல்லை. கைகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. தவிக்கின்றன, உரைக்கின்றன. பதைக்கின்றன. கண்டுகொள்கின்றன. மீண்டும் மீண்டும் கைகள் உடலை தொட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏன் மனிதர்களின் கைகள் அவர்களின் உடலையே மீண்டும் மீண்டும் தொடுகின்றன? கைகள் தாங்கள் பிற ஏதோ இருப்பு என்பதுபோல அவ்வுடலை தொட்டுத்தொட்டு கண்டடைகின்றன. உறுதிப்படுத்திக்கொள்கின்றன.
பிறரிடம் பேசும்போது மனிதர்களின் கைகள் விழைவுகொண்ட நாகங்கள் போல எதிர்தரப்பை நோக்கி நீள்வதை நோக்கிக்கொண்டிருந்தான். இருவர் கைகளும் பிணைந்துகொண்டால் அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களும் பொருளற்றவையாகிவிடும். ஆனால் மனிதர்கள் கைகள் மேல் முழுச் சித்தத்தாலும் கட்டுப்பாடு கொண்டிருக்கிறார்கள். கைகளை அவர்கள் நீளவே விடுவதில்லை. படுத்திருக்கையில் பார்க்கும் உலகம் மனிதர்களின் கைகள் அசையும் உயரத்தில் அமைந்திருந்தமையால் கைகள் பறக்கும் ஒரு காற்றுவெளியை அவன் எப்போதும் தலைதிருப்பி நோக்கிக்கொண்டிருந்தான். அவன் நன்கறிந்த கைகள் அனைத்தும். அவன் கனவில் அக்கைகளின் மெல்லிய தொடுகைகள் வந்தன. வியர்வையின் ஈரம் கொண்ட அச்சுதனின் கை. குட்டையான விரல்கள் கொண்ட ஜலதனின் கை. உள்ளங்கை காய்ப்பு தட்டிய கரமனின் கை. அல்லித்தண்டு போல எப்போதும் குளிர்ந்திருக்கும் பானுமதியின் கை.
படுத்திருக்கையில் இருந்த உலகம் அனைத்துப்பகுதிகளிலும் கனிந்திருந்தது. கனிந்த மொழிகள். கனிந்த விழிகள். அது தொழில் உளநிலை அல்ல. இரக்கம் அல்ல. மானுடர் அனைவரும் ஐயமின்றி புரிந்துகொள்ளும் ஒன்று வலிதான். வலிக்கு மட்டுமே அனைத்து மானுடரும் ஒரே எதிர்வினை காட்டுகிறார்கள். அவன் சிலநாட்கள் இரவில் வலியுடன் விழித்துக்கொள்வான். பகலில் வலி சிதறி அந்தக்கூடம் முழுக்க பரவிச்சென்றுவிடும். இரவில் இருள் வலியை எதிரொலித்து அவன் மீதே பொழியும். வலி எப்போதும் துயிலில் ஒரு பொருள்கொண்டிருப்பதை அவன் அறிந்தான். ஒரு நிகழ்வின் உச்சியாகவே வலியை அறிந்தான். துரத்தி வந்த களிறு அதன் கொம்பை அவன் நெஞ்சுக்குள் பாய்ச்சியது. அவன் கீழே விழுந்த இடத்திலிருந்த மரக்கிளை அவன் அடிவயிற்றுக்குள் குத்திச் சென்றது. அவன் மல்லாந்து விழ அவன் மேல் ஒரு பாறை உருண்டு விழுந்தது. பேருருக்கொண்ட கதாயுதம் ஒன்று அவன் தோளை அறைந்து உடைத்தது.
உடலின் வெவ்வேறு பகுதிகளில் வலியை உணர்ந்து விழித்துக்கொள்கையில் அவன் உடல் நடுநடுங்கிக்கொண்டிருக்கும். வலி குளிராக நடுக்கமாக அச்சமாக மாறி தெரியும். சில கணங்களுக்குள் வலி அனைத்து பொருள்களையும் இழந்து வெறும் அதிர்வாக மாறிவிடும், போதும் போதும் என்பதை அன்றி எந்தப்பொருளையும் வலிக்கு மேல் ஏற்றமுடியாது. கல்வியை எண்ணக்குவையை நினைவுகளை உணர்வுகளை அனைத்தையும் அழித்து தான் மட்டுமாக நின்றிருக்க வலியால் முடியும். ஆண்மையை தருக்கை இல்லாமலாக்கி புழுவென நெளிய வைக்கும் வல்லமை கொண்ட கொடுந்தெய்வம் அது. கைகளை படுக்கையில் அறைந்து அவர்களை அழைப்பான். அவர்களில் எவரேனும் வந்து அருகே நின்றதும் வயிற்றை அழுத்தச் சொல்வான். அவர்களின் கைபடும்போது சூழ்ந்துவந்த ஏதோ ஒன்று விலகிச்சென்றிருக்கும்.
ஆனால் உள்புண் சற்று ஆறி எழுந்தமர்ந்ததுமே அனைத்தும் மாறிவிட்டன. மருத்துவர் அவன் எழுந்தமரவேண்டுமென வற்புறுத்தினார். அவன் அதை அஞ்சினான். எழுந்தமர்வதையே அவன் உடல் மறந்துவிட்டிருந்தது. எழுந்து அமரமுயன்றபோது தசைகள் தொடர்பின்றி அசைந்து உடல் ததும்பியது. “நுரையீரல் என்பது தொங்கவேண்டிய உறுப்பு இளவரசே. படுத்திருந்தீர்கள் என்றால் அது தரைதொட்ட பலாப்பழம்போல ஆகிவிடும்” என்றார் மருத்துவர். அவரே அவனை தூக்கி படுக்கையில் அமரச்செய்தார். அவன் எழுந்தமர்ந்ததும் மூச்சுத்திணறி “படுக்கிறேன்… படுக்கிறேன்” என்றான். “இல்லை, அது ஒரு உளமயக்கே. சற்று நேரம்… சற்று நேரம்” என்றார் அவர். இல்லை, முடியவில்லை என்று அவன் கையசைத்தான். “எனக்குத்தெரியும்… நானே சொல்கிறேன்” என மருத்துவர் கடும் சொல் சொன்னதும் கையூன்றி உடல் வளைத்து அமர்ந்துகொண்டான்.
நுரையீரலின் எடை. பூசணிக்கொடி கூரையில் படர்ந்தது போல. அவன் மூச்சிரைத்தான். விலா எலும்புகள் அதிர்ந்து வலியில் நெற்றி நரம்புகள் இழுபட்டன. பின்னர் மெல்ல உடலெங்கும் குருதி வழிந்து கீழே சென்றது. “தலை சுழல்கிறது.” ”பலநாட்களாக படுத்தே இருக்கிறீர்கள் அல்லவா?” என்றார் மருத்துவர். “பழகவேண்டும், இனிமேல் முடிந்தபோதெல்லாம் அமருங்கள்.” உடனே படுத்துவிட்டான். படுத்ததும் வந்த ஆறுதலில் விழிமூடி திளைத்தான். எஞ்சிய வாழ்நாளெல்லாம் படுத்தே இருக்கப்போகிறேனா என்ன? ஆனால் நின்றிருக்கும் உலகம் எங்கோ இருந்தது. அதில் இனிமேல் சென்று இணைய முடியாதென்று தோன்றியது.
மறுபடியும் மருத்துவரின் காலடிகள் மாலையில் அணுகிவந்தபோது எழவேண்டுமே என்றுதான் அஞ்சினான். அவர் மீண்டும் வற்புறுத்தினார். “எழுந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஒன்றுமே ஆகவில்லை. நாடி தெளிவாக சொல்கிறது. எழுந்தமருங்கள்.” எழுந்து அமர்ந்ததும் தலைசுழலவில்லை. சுழல்கிறதா என நோக்கியபோது சுழல்வதுபோலிருந்தது. பின்னர் அப்படியல்ல என்று தெரிந்தது. எழுந்து அமர்ந்துவிட்டேன். அவ்வளவுதான், முடிந்துவிட்டது. அந்த எண்ணம் அளித்த ஏமாற்றத்தை அவனே வியப்புடன் நோக்கினான்.
மறுநாள் காலை அவனே எழுந்தமர விழைந்தான். கையை ஊன்றி உடலை தூக்கி மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து தலையணைமேல் சாய்ந்து அமர்ந்துகொண்டான். இளையமருத்துவன் அவனைக்கண்டு சிரித்து “அடடா, இளவரசே, எழுந்தமர்ந்துவிட்டீர்கள்… நன்று” என்று சொன்னபோது ஒருகணத்தில் சினம் பற்றிக்கொண்டது. அதை அடக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். பின்பு அந்தச் சினத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். அந்தநாள் வரை அவர்கள் அவனை குழந்தையென நடத்தினர். கேலிசெய்தனர். கண்டித்தனர். உணவருந்தும்போது அளவு மிஞ்சிவிட்டால் பாதியிலேயே பறித்துச்சென்றனர். அப்போதெல்லாம் சினம் எழவில்லை. எழுந்தமரும்போதுதான் சினம் வருகிறதா?
எழுந்தமர்ந்த பின் நின்றிருக்கும் உலகை அடைந்துவிட்டான். அதில் அவன் நிற்கமுடியாதவனாக இருந்தான். ஒவ்வொரு கணமும் நடக்க விழைந்தவனாக, நின்றிருக்கும் நடக்கும் ஒவ்வொருவருடனும் உளத்தால் போட்டியிட்டு தோல்வியை சினமாக மாற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒருநாளுக்குள் அவனுக்குள் சினம் பெருகத்தொடங்கியது. விரைந்து நடந்துசென்ற ஒரு மருத்துவனை நோக்கி “மூடா, உன் காலடிகளைக் கேட்டு நான் விழித்துக்கொள்ளவேண்டுமா?” என்று கூவினான். அவன் விழிகளில் வந்த மாறுதலை அவர்கள் உடனே புரிந்துகொண்டார்கள். “பொறுத்தருள வேண்டும் இளவரசே…” என்றான் அவன்.
அந்தக்கணம் முதல் அவர்கள் அத்தனை பேரும் முழுமையாகவே மாறினர். அவர்கள் எத்தனையோ நோயாளர்களை கண்டிருப்பார்கள். அந்த மாறுதலே இயல்பானதென்பதுபோல. அவன் தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். ஏன் இந்தமாறுதல்? என் அகத்தை நான் இழந்துசெல்கிறேனா? ஆனால் குளிருக்கு போர்த்திகொண்ட அழுக்குக் கம்பளியை ஒளியில் கூசுவதுபோல அந்த மருத்துவநிலையை அந்தப்படுக்கையை அங்கிருந்த மணங்களை ஒலிகளை வெறுத்தான். அங்கே அதுவரை கிடந்த துரியோதனனின் உள்ளிருந்து உடைத்துத் திறந்து எழுந்து அகன்றுவிட முயன்றான். அந்தச்சினத்தை அனைத்து மருத்துவர்களிடமும் காட்டினான்.
துரியோதனன் எழுந்து படுக்கையில் அமர்ந்து இளைய மருத்துவன் அள்ளி ஊட்டிக்கொண்டிருந்த உணவை உண்டுகொண்டிருந்தபோது ஏவலன் வந்து வணங்கி நின்றான். அவன் நோக்கியதும் “பால்ஹிகர்” என்றான். அவன் கைகாட்ட திரும்பிச்சென்றான். துரியோதனன் அப்போது பூரிசிரவஸ்ஸை சந்திப்பதை விரும்பவில்லை. ஆனால் ஒரு கணம் கடந்ததும் அவன் வந்து தன்னிடம் அரசு சூழ்தலை பேசுவதனூடாக அந்த நோய்ப்படுக்கையிலிருந்து மீண்டுவிடலாமென்று எண்ணினான். பூரிசிரவஸ் வந்து தலைவணங்கியதும் அவன் தன் உடல்நிலை பற்றி ஏதும் கேட்கக்கூடாதென்று விழைந்தான். ஆனால் அவன் “நலம்பெற்றுவிட்டீர்களா மூத்தவரே?” என்றான். அவன் கைகாட்ட அமர்ந்தபடி “தாங்கள் இன்னும் ஓரிருநாட்கள் இங்கே தங்கி முழுமையாக உடல்நலம் தேறுவது நன்று” என்றான்.
“நீர் நலம் பெற்றுவிட்டீரா?” என்றான் துரியோதனன். “நலமாகத்தான் உணர்கிறேன். புரவியேறும்போதுமட்டும் தொடையில் மெல்லிய வலி இருக்கிறது. ஆறுமாதமாகும் அது முழுமையாகச் சீரடைய என்றனர் மருத்துவர்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கிளர்ச்சியடைந்திருப்பதை உடலில் மெல்லியநடுக்கமாகவும், முகத்தில் வந்து வந்துபோகும் செம்மையாகவும் பார்க்கமுடிந்தது. “நான் கேள்விப்பட்டேன்” என்று அவன் திக்கிக்கொண்டு சொன்னான். “ஆனால் நான் அதைப்பற்றி பேசலாமா என்று எனக்குத்தெரியவில்லை. பேசலாமென்று தோன்றியது. ஆனால்…”
துரியோதனன் அவனை எரிச்சலுடன் நோக்கினான். அவன் சொல்லவருவது என்ன என்று அவனுக்குத்தெரியவில்லை. “சேதிநாட்டு செய்திதான். சேதிநாட்டில்…” என்றவன் “நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை” என்றான். துரியோதனன் திகைப்புடன் “சேதிநாட்டிலா?” என்றான். அவனுடைய திகைப்பைப் புரிந்துகொண்ட பூரிசிரவஸ் வியப்புடன் “தாங்கள் அறியவில்லையா? தங்கள் உடல்நலம் கருதி சொல்லாமல் விட்டிருப்பார்கள். நான் முந்திவிட்டேன். மூடன் நான்” என்றான். “என்ன என்று சொல்லும்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “இல்லை…” என்று தயங்க “சொல்லும்” என துரியோதனன் உரத்தகுரலில் ஆணையிட்டான்.
பூரிசிரவஸ் “சேதிநாட்டுக்குள் நேற்று இரவு, இல்லை, இன்று விடிகாலையில் பீமனும் நகுலனும் படைகளுடன் புகுந்து அந்தப்புரத்தைத் தாக்கி இளவரசியர் கரேணுமதியையும் பிந்துமதியையும் கவர்ந்து சென்றுவிட்டனர்” என்று சொன்னான். துரியோதனன் “நீர் எப்படி அறிந்தீர்?” என்றான். பூரிசிரவஸ் பதைப்புடன் “என் ஒற்றன்…” என்றபின் அமைதியானான். “நீர் ஓர் அரசமகனாக இருக்கலாம். ஆனால் என் நாட்டில் நீர் தனியாக உளவறிவதை நான் ஏற்கமுடியாது” என்றான் துரியோதனன். “இல்லை இளவரசே, இங்கு நான் ஒற்றறியவில்லை. இது எங்கள் ஒற்றனால் எனக்கு இன்று சொல்லப்பட்டது.” துரியோதனன் “அவன் இங்கிருக்கிறான் அல்லவா?” என்றான் துரியோதனன்.
பூரிசிரவஸ் தத்தளிப்புடன் “ஆம்” என்றான். “அவனை உடனடியாக என் படைகளிடம் ஒப்படைத்துவிடும். அவன் இனிமேல் நகருக்குள் நடமாடக்கூடாது. அவனை நாங்கள் விசாரித்தபின் பால்ஹிகநாட்டுக்கே அனுப்பிவிடுகிறோம்.” பூரிசிரவஸ் பேசாமல் நின்றான். “இது என் ஆணை” என்றான் துரியோதனன். “என்னை பொறுத்தருள்க இளவரசே. நான் என்னை நம்பியவனை காட்டிக்கொடுக்கமுடியாது. ஈடாக நான் சிறைசெல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். அவன் விழிகளில் நீர் நிறைந்தது.
துரியோதனன் அதைக் கண்டதும் விழிகளை திருப்பிக்கொண்டான். அவன் உள்ளம் கரைந்தது. “கண்ணைத்துடைத்துக்கொள் மூடா. நீ என்ன சிறுவனா?” என்றான். “சொல்மேல் கடிவாளமில்லாமல் நீ எப்படி இந்த அரசியல் களத்தில் வாழப்போகிறாய்? என்னிடம் பேச வருவதற்கு முன்னரே நான் கேட்கக்கூடியவற்றை உய்த்து விடைகளுடன் வரவேண்டுமென்றுகூட தெரியாதவனா நீ?” பூரிசிரவஸ் கண்களை துடைத்துக்கொண்டு புன்னகைசெய்தான். “நான் அப்படித்தான் செய்வேன். தங்களிடம் அப்படி எண்ணி வரவில்லை.”
துரியோதனன் “என்னிடம் இன்னமும் சேதிநாட்டின் செய்திகள் வந்துசேரவில்லை. நீர் சொன்னதுபோல எதையும் என்னிடம் இவர்கள் இப்போது உடனுக்குடன் தெரிவிப்பதில்லை. சிசுபாலன் என்ன செய்தி அனுப்பியிருக்கிறான் என்று தெரியவில்லை” என்றான். பூரிசிரவஸ் “என் பிழை பொறுத்தருளவேண்டும் மூத்தவரே. நான் எதையும் எண்ணாமல் மூடத்தனமாக வந்து பேசிவிட்டேன்” என்றான்.
துரியோதனன் அவனை கூர்ந்து நோக்கி “அப்படி பேசுவதாக இருந்தால் உமக்கு அதற்குரிய நோக்கங்கள் உண்டு என்று பொருள்” என்றான். பூரிசிரவஸ் பதறி “இல்லை, எந்த நோக்கமும் இல்லை” என்றான். “நோக்கமில்லாமல் ஒரு செயலைச்செய்யும் அளவுக்கு முதிர்ச்சியற்ற சிறுவனா நீர்?” பூரிசிரவஸ் “மூத்தவரே, எனக்கு எப்படி பேசுவதென்றே தெரியவில்லை. உங்கள் முன் என் சொல்வன்மைகள் அழிகின்றன. நான் தனித்தவன்… அறியாதவன்…” என்றான். பின்னர் “நோக்கம் இல்லை. ஆனால்…” என்றான்.
துரியோதனன் சிரித்துக்கொண்டு அவன் தோளில் தட்டி “நோக்கம் என்ன என்று எனக்குத்தெரிகிறது. நீர் அன்று சொன்னதுதானே அது? நீர் விழையும் மணப்பெண்?” என்றான். அப்போது ஏவலன் வந்து அப்பால் நின்றான். “யார்?” என்றான் துரியோதனன். “அங்கநாட்டரசரும் இளையவர் துச்சலரும் வந்திருக்கிறார்கள். உடனே பார்க்கவேண்டும் என்கிறார்கள்.” துரியோதனன் “உன் மணமகளைப்பற்றி கேட்டுக்கொள்கிறேன் இரு” என்றபின் “வரச்சொல்” என்றான்.
பூரிசிரவஸ் தவிப்புடன் அமர்ந்திருந்தான். கர்ணனும் துச்சலனும் வந்ததும் எழுந்து நின்றான். “இளையோனே, நீரும் இரும். அவர்கள் சொல்லவருவதைத்தான் நீரும் அறிந்திருக்கிறீரே” என்றான். “நான் சற்று முன்னர்தான் அறிந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், எங்கள் ஒற்றர்கள் உமது ஒற்றர்களைவிட எவ்வகையிலும் திறன் மிக்கவர்களாகவே இருப்பார்கள்” என்றான் துரியோதனன். கர்ணனும் துச்சலனும் அருகே வந்தனர்.
கர்ணன் அருகே வந்ததும் பூரிசிரவஸ்ஸை நோக்க “அவரும் இருக்கட்டும். அவர் நீ சொல்லப்போகும் செய்தியை என்னிடம் முன்னரே சொல்லிவிட்டார். நாம் எண்ணுவதுபோல பால்ஹிகர்கள் எளியவர்கள் அல்ல. அவர்களுக்கும் உளவுப்படைகள் உள்ளன” என்றான். கர்ணன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கி சிரித்து “உடல்நலம் தேறியிருக்கிறது. ஆனால் இங்குள்ள கோடையில் மிகவும் சிவந்துவிட்டார்” என்றான்.
துச்சலன் “மூத்தவரே, செய்தி இதுதான். சேதிநாட்டு இளவரசிகள் கரேணுமதியையும் பிந்துமதியையும் பீமனும் நகுலனும் கவர்ந்து பாஞ்சால நகரிக்கு கொண்டு சென்றுவிட்டனர்” என்றான். “அது தமகோஷரின் எளிய சூழ்ச்சி என்று அறிவதற்கு அரசியலறியவேண்டியதில்லை. சூக்திமதி நகரின் கன்னியர் மாடத்திற்குள் நுழைந்து இளவரசியரைக் கவர்ந்து தேரிலேற்றிக்கொண்டுசென்று சூக்திமதிப்பெருக்கில் இறங்கி படகிலேறி கங்கை வழியாக தப்பிச்சென்றுவிட்டனர். போர் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரு வீரர்கள் புண்பட்டிருக்கிறார்கள். எவரும் இறக்கவில்லை.”
துரியோதனன் “அந்தவகையில் நல்லது. நாடகத்தில் எவரும் இறக்கமுடியாது” என்றான். “சிசுபாலரின் செய்திக்காக காத்திருந்தேன். சிசுபாலர் மதுராவின் எல்லைக்கு அனுப்பப்பட்டிருந்தார். செய்தியறிந்ததும் அவர் சூக்திமதி நோக்கி படகில் கிளம்பிச்சென்றுகொண்டிருக்கிறார். அவர் நமக்கு செய்தி ஏதாவது அனுப்புவார் என்று நான் எண்ணினேன். செய்தி ஏதும் இல்லை என்றதும் அவரை உளவறிய ஆணையிட்டேன். அவர் செய்தி அனுப்பியது ஜராசந்தருக்கு” என்றான் கர்ணன்.
துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். “அவர் உள்ளம் செல்லும் வழி அதுதான்…” என்றான் கர்ணன். துரியோதனன் மீசையை நீவிவிட்டு விழிகளை சரித்தான். “தெளிவாகவே நம் கையைவிட்டு சேதிநாடு சென்றுவிட்டது மூத்தவரே” என்றான் துச்சலன். “அது மகதத்துடன் சேரும் என்றால் நமக்கு அவர்களைவிடப்பெரிய எதிரிகள் பிறரில்லை.” துரியோதனன் “நம்மை இன்று எதிரிகளாக மகதம் எண்ணாது. தருமனும் நானும் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கும்” என்றான்.
“இல்லை இளவரசே, மகதம் அப்படி நினைக்கலாம். ஆனால் நம்மை நன்கறிந்தவர் சிசுபாலர். அவர் அவர்களுக்கு வழிகளை சொல்லிக்கொடுக்க முடியும். இன்று நாம் படைபலமற்றவர்கள். துணைகள் இன்னமும் உருவாகவில்லை. இருகுருதிவழிகளாக பிரிந்துமிருக்கிறோம். நீங்கள் முடிசூடியதுமே ஜராசந்தரின் படைகள் அஸ்தினபுரிமேல் திரண்டு வருமென்றால் அதில் வியப்பதற்கேதுமில்லை.”
துரியோதனன் விழிதூக்கி கர்ணனை நோக்கி மீசையை நீவிக்கொண்டிருந்தான். “ஆகவேதான் நானும் அங்கரும் வரும் வழியிலேயே ஓர் எண்ணத்தை சென்றடைந்தோம். நமக்கு வேறுவழியில்லை. நமக்கு இன்று தேவை நம்முடன் இறுதிவரை ஒன்றாக நின்றிருக்கும் ஒரு பெரியநாடு. ஒரு பெருவீரன்” என்று துச்சலன் சொன்னான். “நம் இளவரசியை சிந்துநாட்டரசர் ஜயத்ரதருக்கு அளித்தாலென்ன?”
துரியோதனன் “அதற்கு பானு..” என்று சொல்ல கர்ணன் “அரசியலில் இது என்ன பேச்சு? நான் அவளிடம் சொல்லிக்கொள்கிறேன். துச்சளையிடமும் நானே சொல்கிறேன். சிசுபாலருக்கு அவளை கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் யாதவனின் நேர் எதிரி. ஆனால் ஜயத்ரதர் அப்படி அல்ல” என்றான். துச்சலன் “ஜயத்ரதருக்கு இதில் மிகுந்த ஆர்வமிருக்கிறது மூத்தவரே. உண்மையில் சிந்துநாட்டின் தூதர் வந்து ஒருவாரமாக இங்கே தங்கியிருக்கிறார்” என்றான்.
கர்ணன் “நம் கையைவிட்டு சிபிநாடு சென்றுவிட்டது. நாம் காந்தாரத்தில் இருந்து முழுமையாகவே துண்டிக்கப்பட்டிருக்கிறோம். சிந்துநாடு நம்மிடமிருந்தால் காந்தாரம் வரை நாம் ஒரே நிலம் என்றே சொல்ல முடியும். பால்ஹிகக்கூட்டமைப்பும் நம்முடன் இருந்தால் மேற்குப்புலம் முழுமையாகவே நம் கையில் இருக்கும். துவாரகையை அசையாமல் நிறுத்திவிடமுடியும்” என்றான். துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம், அது சிறப்பாகவே தோன்றுகிறது” என்றான். “பிறிதொரு வழியே இல்லை. இன்று இளவரசிக்குரிய இளவரசனுக்கு நாம் எங்கு போவோம்?” என்றான் துச்சலன்.
துரியோதனன் மீசையை நீவியபடி எண்ணத்திலிருந்து விடுபட்டு பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகரே, நீர் எண்ணுவதென்ன?” என்றான். பூரிசிரவஸ் “ஆம், அதுவும் ஒரு நல்ல வழிதான்” என்றான். துரியோதனன் சிரித்தபடி “இவர் சேதிநாட்டு கரேணுமதியையோ பிந்துமதியையோ உள்ளத்தில் கண்டிருக்கிறார். அவர்களை நகுலனும் பீமனும் கவர்ந்துசென்றுவிட்டனர் என்றறிந்ததும் பதறியடித்து என்னிடம் ஓடிவந்தார். நிற்கமுடியவில்லை. நாவில் சொல்லெழவில்லை. நான் சேதிநாட்டுக்கு பாண்டவர்கள் சென்றசெய்தியை அறிந்திருக்கிறேனா என்றுகூட எண்ணவில்லை…” என்றான்.
கர்ணன் திரும்பி நோக்கி புன்னகைசெய்து “துயரம் கொண்டிருக்கிறார்” என்றான். “ஆனால் அரசியலில் பெண்களை அடைவதும் இழப்பதும் எவ்வகையிலும் ஆண்மகன்களுக்கு ஒரு பொருட்டல்ல… இளையோனே, இதற்குமேல் நீ துயரத்தை காட்டினாய் என்றால் உன் மண்டையை உடைக்கவேண்டியிருக்கும்” என்றான். துரியோதனன் “சேதிநாட்டு இளவரசியரைப்பற்றித்தான் என்னிடம் சொல்ல முயன்றிருக்கிறார். சொல்லியிருந்தால் படைகளை அனுப்பியே கவர்ந்து வந்திருப்பேன். இப்போது இவர் ஏன் இப்படி ஓடிவருகிறார் என்று எண்ணியபோதுதான் எனக்கே புரிந்தது” என்றான்.
பூரிசிரவஸ்ஸை நோக்கி சிரித்துக்கொண்டு துரியோதனன் “இன்னமும் முதிரா இளைஞராகவே இருக்கிறார். அவர் கண்களில் உள்ள துயரத்தைப் பார்” என்றான். அவர்கள் அவனை நோக்கி சிரிக்க பூரிசிரவஸ் தானும் சிரித்து முகம் சிவந்து தலைகுனிந்தான். துரியோதனன் “எண்ணிப்பார்க்க இனி நேரமில்லை. ஜயத்ரதருக்கே துச்சளையை அளித்துவிடுவோம்” என்றான். “விதுரரிடம் பேசிவிட்டு தூதரிடம் என் சொல்லை சொல்லிவிடுங்கள்.”
கர்ணன் “நான் காலையிலேயே விதுரரிடம் இதுபற்றி சொன்னேன். அவரும் சிறந்த எண்ணம் என்றார்” என்றான். துரியோதனன் “பிறகென்ன? பானுமதியிடமும் துச்சளையிடமும் நீயே சொல்லிவிடு…” என்றான். மெல்ல தலையணைமேல் சாய்ந்துகொண்டு வலியுடன் பெருமூச்சுவிட்டு “ஒவ்வொன்றும் பகடைகள் போல மாறி மாறி விழுந்துகொண்டிருக்கின்றன கர்ணா” என்றான்.
“பகடைகளில் தெய்வங்கள் இருக்கின்றன. கருக்களிலும் காய்களிலும் நம் மதி இருக்கிறது” என்றான் கர்ணன். “இப்போது உடனடியாக நாம் இதை அறிவித்தாகவேண்டும். நாளை காலை சிசுபாலர் சூக்திமதிக்கு செல்வார். நாளைமாலை கிளம்பி மறுநாள்காலையோ மாலையோ மகதத்தை அடையக்கூடும். அவர் ஜராசந்தரை பார்ப்பதற்கு முன் ஜயத்ரதர் அஸ்தினபுரியின் மணமகனாக வரும் செய்தி அவரிடமிருக்கவேண்டும். அதுவே நாம் அவருக்களிக்கும் மறுமொழி. அது பாண்டவர்களுக்கும் உரிய மறுமொழியாகும்” என்றான்.
துரியோதனன் “ஆம், பாண்டவர்களை ஏவிய யாதவனுக்கும் அதுவே மறுமொழியாக அமையும்” என்றான். கர்ணன் “அதை பேசிவிட்டுச்செல்லலாம் என்றுதான் வந்தேன். மேலும் சில உடனடியான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது” என எழுந்தான். துரியோதனன் ஒரு கணம் தயங்கியபின் “கர்ணா, இந்த இளவரசிகளை எவர் மணக்கப்போகிறார்கள்?” என்றான்.
கர்ணன் “கரேணுமதியை நகுலன் மணக்கவிருப்பதாக செய்தி. அவர்களுக்கிடையே முன்னரே ஏதோ ஓலைத்தொடர்புகள் இருந்திருக்கின்றன என்கிறார்கள். இன்னமும் உறுதியான செய்திகள் இல்லை. அப்படியென்றால் பிந்துமதியை பீமன் மணக்கக்கூடும்” என்றான். துரியோதனன் தலையசைத்து “இதுவும் என் மீதான தன் வெற்றி என அவன் எண்ணுவான்” என்றபின் சிரித்து “இதை நான் தோல்வியென நினைக்கவில்லை என்பதனால் அவன் வெல்லவில்லை என அவனிடம் சொல்வது யார்?” என்றான்.
கர்ணன் புன்னகைத்தபடி “இதெல்லாம் நாற்களத்தில் காய்களைப் பரப்புவது மட்டுமே. ஆட்டம் இனிமேல்தான்” என்றபின் பூரிசிரவஸ்ஸின் தோளை தட்டியபடி கிளம்பினான். “இளையோனே, நீ நேரில் சென்று அன்னையரிடம் சொல்லிவிடு” என்றான் துரியோதனன். “ஆணை” என துச்சலன் தலைவணங்கினான்.
அவர்கள் சென்றபின் துரியோதனன் திரும்பி “உம் உள்ளம் எனக்குப்புரிகிறது இளையோனே. அதில் முதற்பிழை உம்முடையது. நீர் அன்றே சொல்லியிருக்கவேண்டும். ஒருபோதும் நீர் சேதிநாட்டு இளவரசியரை இழக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன்” என்றான். “ஆனால் இதெல்லாம் ஆண்மகனின் வாழ்க்கையில் கடந்துசெல்லும் சிறிய நிகழ்வுகள், கங்கையில் கொப்புளங்கள் போல. அதை நீரும் உணர்ந்திருப்பீர் என நினைக்கிறேன்…”
பூரிசிரவஸ் “ஆம்” என்றதுமே விழிநீர் எழ தலைகுனித்துக்கொண்டான். “வா” என்று துரியோதனன் கையை நீட்டினான். பூரிசிரவஸ் அருகே சென்று அமர்ந்தான். துரியோதனன் தன் எடைமிக்க கையால் அவன் தோளை வளைத்து “சிலநாட்கள் இந்த ஏக்கம் இருக்கும் இளையோனே. நான் உம் மூத்தவன், என் சொல் அப்படியே இருக்கிறது. உமக்கு இந்த பாரதவர்ஷத்தில் எந்த இளவரசி தேவை? சொல்லும். அவள் உம்மிடமிருப்பாள்” என்றான்.
அவன் தலைகுனிந்து முகத்தை துடைத்தான். “இல்லையேல், நானே உமக்கு மணமகள் பார்க்கிறேன். பாரதவர்ஷத்தின் பேரரசு ஒன்றின் இளவரசியாகவே அவள் இருப்பாள். அவளை நீர் பால்ஹிகநாட்டுக்கு கொண்டுசெல்லும்போது உம் மக்கள் மகிழ்ந்து கொந்தளிப்பார்கள்.” பூரிசிரவஸ் கண்களை துடைத்துக்கொண்டு அடைத்த குரலில் “நான் தங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் மூத்தவரே” என்றான்.