நமது கைகளில்….

அன்புள்ள ஜெயமோகன்,

நானும், எனது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கிழக்கு அமெரிக்க நேரம் 3.43 க்கு ஒரு ஆண் மகவினை ஈன்றெடுத்தோம். ஆதர்ஷ் என்று பெயரிட்டுள்ளோம்.உங்களைப் போன்ற நல்லெழுத்தாளனின் ஆசி அம்மகவினை சான்றோனாக்கும் என்பது என் நம்பிக்கை. தங்கள் மேலான ஆசிகளை அவனுக்கு வழங்குங்கள்.இத்தருணத்தில் நீங்கள் ஏதேனும் அறிவுரையோ ,ஆலோசனையோ அல்லது கருத்தோ தெரிவிக்க விரும்பினால் பெருமகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்.

அன்புடன்,

M

அன்புள்ள எம்

குழந்தை பிறந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நான் அப்பாவாக ஆகி இப்போது பதினைந்து வருடங்கள் ஆகின்றன. 1993 பெப்ருவரி 28 ஆம் தேதி. அப்போது தருமபுரி மாவட்டத்தில் தொலைபேசி நிலையத்தில் நான் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அப்போதுதான் தபால்துறையில் வேலைகிடைத்திருந்தது. ஆறுமாத கருவவுடன் இருக்கும்போதே மதுரையில் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லிவிட்டார்கள்.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்பாட்டில் மதுரையில் பெருங்குடி என்ற ஊரில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கே குடியேறினோம். என் மனைவியின் அம்மா அப்பா இரண்டுமாதங்கள் கூடவே இருந்தார்கள். நான் ஒருமாதம் விடுப்பு எடுத்து அங்கே சென்று தங்கினேன். பெருங்குடி கிராமம் கலந்த புறநகர். பின்பக்கம் மாபெரும் ஏரி. ஏரிக்கரை ஓரமாக மீண்டும் மீண்டும் குழந்தையைப்பற்றி பேசியபடி நடை செல்வோம். என் மனைவி ருஷ்யச் செவ்வியல் நாவல்களை ஆவேசத்தோடு படித்த நாட்கள் அவை. பயம், இனம்புரியாத நெகிழ்ச்சி, உத்வேகம்,பரவசம் எல்லாம் கலந்த அந்த நாட்களைப்போல ஒவ்வொருகணமும் வாழ்ந்த காலகட்டம் பிறகு வரவேயில்லை என்று அவள் சொல்வதுண்டு.

பயிற்சி முடிந்து ஊருக்குச்செல்லலாம் என்றானதுமே அறையைக் காலைசெய்துவிட்டு நேராக தருமபுரிக்கு வந்தோம். என் மாமனார் மாமியார் வந்திருந்தார்கள். அது சனிக்கிழமை. ஞாயிறு தாண்டி திங்கள் கிழமை திருப்பத்தூருக்குச் சென்று வேலையில் சேர்ந்துவிட்டு லீவுபோட்டால் மகப்பேறு விடுமுறை கிடைக்கும் என்றார் மாமனார். ஆனால் மறுநாள் காலையில் ‘என்னமோ போல் இருக்கிறது’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள். ஆட்டோ வரவழைத்து கூட்டிக்கொண்டு டாக்டர் மணிமேகலை மருத்துவமனைக்குச் சென்றோம். வலி எல்லாம் இல்லை, நடந்தே உள்ளே சென்றாள்.

நான் போய் எல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வந்து உள்ளே நுழைந்தேன். மாமனார் வந்து அவளை மகப்பேறு அறைக்குக் கொண்டுசென்றிருப்பதாகச் சொன்னார். நான் அறைவாசலுக்குச் செல்லவும் டாக்டர் கதவை திறந்து வெளியே போகவும் சரியாக இருந்தது. ”என்ன ஆச்சு?”என்றேன். நடுவயதான நர்ஸ் சாதாரணமாக ”குழந்தை பொறந்திருக்கு ஆண்குழந்தை” என்றாள். அத்தனை சர்வசாதாரணமாக.!இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல! ‘காற்றில் விளைந்த கனி’ என்று அந்த வருகையை பின்னர் ஒரு கட்டுரையாக எழுதினேன் [ வாழ்விலே ஒருமுறை. கவிதா பிரசுரம்]

குழந்தையுடன் வீட்டுக்கு வந்த நான்காம்நாளே என் மாமனாரும் மாமியாரும் அவசரமாக பட்டுக்கோட்டை போகவேண்டும் என்றார்கள். இரண்டுநாள் கழித்து திரும்புவதாகச் சொல்லி பக்கத்து வீட்டு பாட்டியை ஏற்பாடுசெய்துவிட்டு கிளம்பினார்கள். அவர்கள் போனதும் பாட்டி அவருக்கு குழந்தையை குளிப்பாட்டுவதெல்லாம் தெரியாது என்று சொல்லி விட்டார். நான் வைத்திருந்த பெரிய புத்தகங்களில் குழந்தை பிறப்பு வளர்ப்பு பற்றி எழுதப்பட்டிருந்தவை எல்லாமே எனக்கு மனப்பாடம். துணிந்துவிட்டேன்.

குழந்தை மூன்றரை கிலோ எடை. மூக்கே கிடையாது. சிவப்புத்தோல், மென்மையான தலைமுடி. போதையேறிய ஜாக்கிசான் போல கைகளை கன்னாபின்னாவென்று ஆட்டி கால்களை உதைத்தபின் சிவந்த உதடுகளைக் கோணலாக்கி ர்ர்ர்ரீ  என்று ஒரு வீரிடல். அக்கணமே வாயில் பால் இருந்தாக வேண்டும். உடனே கண்கள் சரிந்துகொண்டே வரும். இறுக முஷ்டிபிடித்த மென்மையான கைவிரல்கள் மெல்லமெல்ல விடுபடும். தொடைகள் விலகி மல்லாந்துகொள்ளும். பூனைபோல மெல்லிய ஒலி எழுப்பி தூக்கம். மூக்கு அத்தனை சிறிய ஓட்டையாக இருக்கிறதே மூச்சு போதுமான அளவு உள்ளே போகுமா என்று கேட்டேன். ”போதாது நீயும் சேத்து கொஞ்சம் மூச்சு விடு, சும்மா போட்டு படுத்தாதே”என்று சொல்லிவிட்டாள்.

விழித்துக்கொண்ட மறுகணமே மீண்டும் ர்ர்ர்ரே.  படுக்கை நனைந்திருக்கும். கையில் எடுத்தால் உடனே அழுகை நின்றுவிடும். அப்படியும் நிற்காவிட்டால் இடது பக்க மார்போடு சேர்த்து வைத்து இதயத்துடிப்பைக் கேட்கச்செய்தால் போதும். மென்மையான உடலுக்குள் குருத்தான எலும்புகள் கைகளில் பிடிபடும். பின்னந்தலையில் சுட்டுவிரலைக் கொடுத்து தலைக்கு தாங்கு அளித்து தூக்க வேண்டும். கைகால் கண்கள் எதற்குமே ஒன்றுடன் ஒன்று ஒத்திசைவில்லை. ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வோரு திசைக்கு அசையும். அதற்குள் வந்து குடியேறிய மூர்த்தி இன்னமும் அதை முழுக்க தன்வசப்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பிக்கவில்லை.

நானே நான்காம்நாள் முதல் அஜிதனைக் குளிப்பாட்ட ஆரம்பித்தேன். கால்களை நீட்டிக்கொண்டு அதில் மெல்ல படுக்க வைத்து இளஞ்சூடான நீரால் குளிப்பாட்டி துடைப்பேன். இளஞ்சூடான ஒரு பெரிய மலர். பூக்களில் தாமரைப்பூவுக்கு மட்டும்தான் அப்படி கெட்டியான, எடையான, மலர்த்தன்மை உண்டு.

டாக்டர் மாணிக்கவாசகம் எழுதிய நூலில் கட்டளைகள் தெளிவாகவே இருந்தன. அதிகசூடான நீரை விட்டு குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அப்படி ஒரு கிராமிய வழக்கம் உண்டு. அது குழந்தையை அதிக நேரம் தூங்கச்செய்யும். ஆகவே அது நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் தோல் எரிச்சலை அளித்து குழந்தையை அழவைக்கும் அது. கண்களில் சில இடங்களில் எண்ணை விடுவார்கள். அது பெரும்தவறு. உள்ளுக்கு ஆமணக்கெண்ணை கொடுப்பது ஆபத்து. ஒவ்வொரு கட்டளையையும் எழுதி வைத்துப் படித்து அப்படியே நிறைவேற்றுவேன்.

தொடைகளிலும் கைகளிலும் உள்ள மலரடுக்கு போன்ற தசைமடிப்புகளில் மென்மையான சோப்பு போட்டு குளிப்பாட்டுவேன். நீர் ஒற்றிவிட்டு பவுடர் போட்டுவிடுவேன். என் மனைவிக்கும் எல்லாவற்றையும் நானே செய்தேன். நடுவே சமையல். மலையாளச் சமையலையும் தமிழ்ச் சமையலையும் கலந்து சோதனை முயற்சிகள். நடுவே  அவர்கள் தூங்கும் போது விஷ்ணுபுரத்தின் உக்கிரமான ஞானசபை விவாதங்கள் தினம் இரண்டு அத்தியாயம் வீதம் எழுதினேன். அஜிதன் புன்னகையுடன் எழுந்து நின்று தன் தர்க்கங்களை தன்னம்பிக்கையுடன் சொல்லும் இடங்கள். குழந்தைக்கு அஜிதன் என்ற பெயரை ஏற்கனவே அருண்மொழி முடிவுசெய்துவிட்டிருந்தாள்.

தூங்கும் குழந்தையை பெற்றொர் பார்க்கலாகாது என்பார்கள். பார்க்காமலிருக்கவும் பெற்றோரால் முடியாது. அந்தச்சின்னஞ்சிறு உடலுக்குள் என்ன இருக்கிறது என்ற பெரும் வியப்பு ஏற்படும். எங்கிருந்து வருகிறது? அந்த வியப்பு பதிவாகாத தாலாட்டே கிடையாது. ”சித்தினியே இத்தினியே இத்தனை நாள் எங்கிருந்தாய்?” என்ற வரி. எவ்வளவு எளிமையான கவித்துவம்.

தூங்கும் குழந்தை முகம் சுளிக்கிறது. சிறிய பறவை போலக் கொட்டாவிவிடுகிறது. அவையெல்லாமே முகத்தசைகளை பயில உள்ளிருக்கும் புதியவர் செய்யும் முயற்சி. தனக்குக் கிடைத்த புத்தாடையை இழுத்து இழுத்துப் பார்க்கிறார். ஆனாலும் திடீரென்று முகம் மலர்ந்து உதடுகள் விரிய எழும் புன்னகையின் பேரழகுக்கு ஈடு இல்லை. எதையும் எண்ணி அச்சிரிப்பு நிகழவில்லை என்கிறார் மாணிக்கவாசகம். எதையும் எண்ணாமல் எழுவதனால்தான் அச்சிரிப்பு திருவட்டார் சயனப்பெருமாளின் அனைத்தறிந்த சிரிப்பு போலிருக்கிறதா?

ஏழுநாட்கள் கழிந்தே என் மாமனாரும் மாமியாரும் வந்தார்கள். அப்போதே குழந்தை மிகவும் வளர்ந்துவிட்டது போன்ற ஒரு பிரமை.  என்னை அவன் அகம் நன்கறிந்துவிட்டிருந்தது. யாரையும் பார்க்காத பனிக்கண்கள். ஆனால் ஒலியையும் மணத்தையும் தொடுகையையும் அறியும் அதி தூய மிருகம். அழுதால் வெறும் தோளில் கவிழ்த்திக் கொண்டு மெல்ல நடப்பேன். பின்பக்கம் முதுகில் சூடான எச்சில் வழிந்து செல்லும். நின்றதுமே ‘அஹ அஹ’ என்று சிணுங்கல்.மீண்டும் நடை. ஒருநாளில் வீட்டுக்குள் அவனை தோளில் போட்டு நான் சென்ற தூரம் மிகமிக அதிகம். தொடுவானுக்கு மறுபக்கம்.

கண் தெளிந்த குழந்தை நம்மை அடையாளம் காணும்போது நாம் நம் இருப்பை புதிதாக மீண்டும் அறிகிறோம். ”இதோ இதோ இருக்கிறேன்” என்று நம் அகம் விம்முகிறது. நம்மை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறது? நம் குரல் கேட்டு சிரிக்கிறது. இரு கைகளையும் இரண்டு திசைகளில் வீசி நம் குரலைப் பிடிக்க முனைகிறது. மகிழ்ச்சியை மொத்த உடலாலும் வெளிப்படுத்த குழந்தைகளாலும் எளிய மிருகங்களாலும் மட்டும்தான் முடியும்.

ஒரு குழந்தை நிபுணர் சொல்லியிருந்தார். ‘கொஞ்சினால் குழந்தைகள் கெட்டுப்போய்விடும் என்பது ஒரு மூடநம்பிக்கை. கொஞ்சப்படுவதற்காகவே குழந்¨தைகள் அப்படி படைக்கப்பட்டிருக்கிறார்கள். அறிவுள்ள மிருகங்கள் எல்லாம் இடைவெளியில்லாமல் குட்டிகளைக் கொஞ்சுகின்றன. கொஞ்சுங்கள். குலாவுங்கள். உங்களால் முடிந்தவரைக் கொஞ்சுங்கள்’. கொஞ்சலில் சலிப்படையும் குழந்தையே இல்லை. ஒரு நாய்க்குட்டியைக்கூட கொஞ்சி திருப்திசெய்துவிடமுடியாது.

கொஞ்சும்போது நம்மிடம் வெளிப்படும் நாம் நமக்கு எவ்வளவு அன்னியன். எங்கிருந்தான் அத்தனை நாள்? அவனது மொழியும் பாவனைகளுமே வேறு. அவ்வளவு கனிந்தவன். அவ்வளவு இளமையானவன். அவனுக்கு இப்பிரபஞ்சத்தில் துக்கமே இல்லை. நாம் கொஞ்சுவது எதை? குழந்தைமை என்ற என்றும் அழியாத ஒன்றையா? நம்முள் உறையும் குழந்தை குழந்தையொன்றைக் கண்டுகொள்கிறதா?

குழந்தைகளை, மிருகங்களைக் கொஞ்சிக் குலாவாமல் சென்று மறையும் ஒவ்வொருநாளும் நம் வாழ்க்கையில் கடன் பத்தியிலேயே எழுதப்படுகிறது. மனிதன் முழுமையடையும் கணங்கள் அவை. விளையாடும்போது நம் அகம் அறியும் ஒன்று உண்டு. இந்த மாபெரும் பிரபஞ்சமே மிகமிகப்பெரிய குழந்தை ஒன்றின் தன்னை மறந்த விளையாட்டு மட்டுமே.

அருகிருந்து குழந்தை வளர்ச்சியைப் பார்ப்பது ஒரு யோகம். நம் கண் முன் ஒரு பிரபஞ்சம் பிறந்து விரிந்து தன்னை நிறுவிக்கொள்கிறது. ஒவ்வொரு கணமும் ஐந்து திசைகளிலும் விரிவதற்காக விம்மும் உந்துதலே குழந்தை. உலகில் உள்ள அனைத்தையும் நாக்குநுனி போன்ற சிறு மென் விரல்களால் தொட்டும்  கொழகொழ வாயால் நக்கியும் பார்க்க வேண்டும். கைக்குச் சிக்குவதை வீசி எறிய வேண்டும். அடித்தும் தட்டியும் பார்க்க வேண்டும். உள்ளே நுழைய முடியுமென்றால் நுழைய வேண்டும். ஒவ்வொரு கணமும் வெளியேறிக்கொண்டே இருக்க வேண்டும் அதற்கு….

அஜிதனுடன் தவழ்ந்துதான் நான் எறும்புகளின் உலகை மீண்டும் கண்டுபிடித்தேன். அதிசுறுசுறுப்பான எறும்பு கால்பங்குநேரத்தை சந்தேகப்பட்டு அங்குமிங்கும் ஓடுவதில்தான் செலவழிக்கிறதென கண்டறிந்தேன். நம்வீட்டில் மூலைகளும் இடுக்குகளும் நம் கண்களுக்குப் படுவதேயில்லை. நாம் மையங்களில் வாழ்கிறோம். ஆனால் குழந்தைகள் முதலில் அங்குதான் செல்கின்றன. மறந்து விடப்பட்ட பொருட்கள் அவர்களால் தான் கண்டடையப்படுகின்றன

அஜிதனை தோளில் தூக்கி வெளியே கொண்டு செல்வேன். புருவம் தூக்கி இருகைகளையும் ”வேணும் வேணும்” என்பது போல நீட்டி விரலசைத்து ஆழ்ந்த பரவச நிலையில் செயலற்று இருப்பான். ஆச்சரியம் இடைவெளி விடும்போது என்னைப் பார்த்து ‘பார்த்தாயா’ என ஒரு புன்னகை. காகத்தை விரிந்த வானத்தின் அரசப்பிரதிநிதியாக கண்டறிந்தேன். பன்றியை மண்ணின் ஆழத்தின் தூதுவனாக. வியப்படையத்தேவையற்ற எதுவுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை என்ற ஞானமே குழந்தை எனக்கு அளித்தது.

அஜிதனுக்கு நான் அருகிருக்கும்போதெல்லாம் நான்தான் ஊட்டுவேன். நான் விரும்பும் அளவுக்கு ஊட்டமாட்டேன், அவன் விரும்பும் அளவுக்கு மட்டுமே ஊட்டுவேன். அருண்மொழிபோல மிஞ்சிய சாதத்தை கணக்கு பார்த்து பதற்றம் கொள்வதில்லை. அப்படியே காகத்துக்குக் கொட்டிவிடுவேன். சாப்பிடுவதை ஒரு இனிய விளையாட்டாக அவனுக்கு ஆக்கிவிடுவேன். ஒருபோதும் பயமுறுத்தி ஊட்டக்கூடாது. சாப்பிடாவிட்டால் காக்காய்க்குக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி ஊட்டக்கூடாது. காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான் சொல்லவேண்டும்.

‘காக்கா பறந்து போச்சு’ என்று ஒற்றைவரியில் கதை சொல்லி அவனுக்கு ஊட்டிவிட்டிருக்கிறேன். பின்னர் உபநிடதங்களைப்பற்றி விரிவாக விவாதித்தபடி ஊட்டிவிட்டிருக்கிறேன். அவன் ஏழாம் வகுப்பு தாண்டுவது வரை நானே அவனைக் குளிப்பாட்டினேன். இப்போதும் ஊட்டிவிடுவதுண்டு. நம் கைகள் வழியாக குழந்தைகள் வளர வேண்டும். அவனை கைபிடித்து நீண்ட நடைபயணங்கள் செய்வேன். என்னருகே அவனைப் படுக்கவைத்துக்கொண்டு நான் நினைப்பதையெல்லாம் பேசியிருக்கிறேன். இப்போதும் குழந்தைகள் என்னிடம் விரும்பும் ஆகப்பெரிய பரிசே பேசிக்கொண்டே நடப்பதும் பேசிக்கொண்டே படுத்திருப்பதும்தான்.

குழந்தைகள் உரையாட ஆசைப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஒவ்வொருநாளும் ஏராளமாகச் சொல்ல இருக்கிறது. ”அப்பா எங்க கிளாஸிலே நிதீன்னு ஒருத்தன்…” என்று ஆரம்பித்து சைதன்யா கையையும் காலையும் ஆட்டி, ஜிமிக்கி குலுங்க தலையை சிலுப்பி, கண்களைச் சுழற்றி மணிக்கணக்காகச் சொல்லுவாள். அஜிதனுக்கு வீர விளையாட்டுகள். அவற்றைக் கேட்பவர்களுக்கே அவர்கள் உலகில் இடம்.

மேலும் அது நாம் அறியாத ஒரு புது உலகை நமக்குக் காட்டுகிறது. ஒரு சிறு உயிராக மாறி தளிர்கள் உயர்ந்த நாற்றங்காலுக்குள் காட்டில் மான்போல உலவி வரும் அனுபவம். புதுப்புதுச் சொல்லாட்சிகள். பாதிச்சொல்லாட்சிகள் வடிவேலு உருவாக்குபவை. ”ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.. ”. ”வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.” உள்ளூர் சொல்லாட்சிகள். ”செறையா இருக்குடே” வாத்தியார்களை நகல் செய்த கிண்டல்கள்.”அடிகளை வாங்காம ஹோம் வொர்க்குகளைச் செய்யுங்கடே” என்றும் உற்சாகமான இன்னொரு உலகம் அது. அங்கே பெரியவர்கள்தான் எப்படி கோணலாக பிரதிபலிக்கிறார்கள்!

அதேபோல குழந்தைகளுக்கு நம்மைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசை இருக்கிறது. நான் சின்னப்பையனாக இருக்கும்போது நடந்தவற்றைப் பற்றிய பேச்சுதான் என் பிள்ளைகளுக்கு மிகமிகப்பிடித்த பேச்சு. தோசைக்கு ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்போம் என்பதே பெரிய ஆச்சரியச் செய்தி. வீட்டில் மின்விளக்கு இல்லை, மண்எண்ணை விளக்குதான் என்பது இன்னும் ஆச்சரியம். மரக்கிளையில் அமர்ந்து ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா” என்று குதிரை ஓட்டி குப்புற விழுந்ததைப் பற்றிச் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பு.

குழந்தைகள் நாம் இன்னொரு முறை பிறந்து மீண்டும் ஒருமுறை வளர்வதற்காக இயற்கை நமக்கு அளிக்கும் மகத்தான வாய்ப்பு. மனிதனுக்கு குறைந்தது இருமுறை இயற்கை அந்த வாய்ப்பை அளிக்கிறது. நீண்ட ஆயுள் கிடைத்தால் மூன்றுமுறைகூட. ஆண்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாவது வாய்ப்பில்தான் அதை உணர்கிறார்கள்.

பெண்களுக்குக் குழந்தைகளுடனான உறவு மிகமிக இயற்கையானது. உயிரியல் சார்ந்தது அது. ஆண்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் அதை திட்டமிட்டு பயின்றுகொள்ள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அதைப்பற்றிய பிரக்ஞையுடன் அனுபவித்தறிய வேண்டும். அதனால்தான் நான் சொல்வது, குடும்பம் என்பது பெண்களுக்கான அமைப்பு அல்ல. குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் பெணகள் இன்னும் கொஞ்சம் வசதியாக வாழ்ந்துகொள்ள முடியும். ஆண் அனாதையாகிவிடுவான்.

நேற்று தீபாவளி. அஜிதனுக்கு உடம்பெங்கும் எண்ணை தேய்த்துவிட்டேன். எலும்புகள் இறுக்கமான தோலுக்குள் உலோகத்தாலானவை போல் இருந்தன.  தோள்களிலும் புஜங்களிலும் உருண்ட தசைகள். இறுகிய வயிறு. கைகால்களில் முடிகள் கைகளை நெருடின. என்னைவிட சற்றே உயரம். ஆனால் என் கைகளில் இன்னமும் நான்குநாளான அஜிதனின் உடலின் நினைவு இருக்கிறது. அந்நினைவுதான் இப்போது அவன் உடலை மெல்ல மெல்ல வருடிச்செல்கிறது.

அன்புடன்
ஜெ

இணைவைத்தல்

ஒவ்வொருநாளும்

மொழியும் நானும்

தேர்வு

ஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்

ஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்

தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!

தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!

முந்தைய கட்டுரைசாய்வுநாற்காலி
அடுத்த கட்டுரைஇரு சந்திப்புகள்