ஜெகே நீடிப்பாரா? – கே ஜே அசோக் குமார்

jeyaganthan02

அன்புள்ள ஜெ.

ஜெயகாந்தன் இறந்ததைவிட அவர் எங்கேயாவது காணாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கே சாகக்கூட துணியமுடியாது. யாராவது அப்படி செய்திருக்கிறார்களா தெரியவில்லை?

முக்கிய தமிழ் பத்திரிக்கை, தொலைக்காட்சி எதிலும் அவரைப்பற்றி சொல்லவில்லை. சில தொலைக்காட்சியில் அடிக்குறிப்பில் மட்டும் ஜெயகாந்தன் மரணம் என்று வந்தது.

சமூகவலைத்தளங்களில் திடீரென்ற கண்டுபிடிப்பாக அவர் எழுத்து தட்டையானது நான் படிப்பதில்லை, இலக்கியத்தை பொறுத்தவரை அவர் எப்போதோ இறந்துவிட்டார், வேறுபக்கம் சாய்ந்துவிட்டவர் என்று சகட்டுமேனிக்கு வார்த்தைகள் வருகின்றன. ஜெயகாந்தனை ஒதுக்கிவைத்துவிட்டு வேண்டுமென்றே ஹனீபாவை புகழ்பாடுவதை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. எத்தனைதான் இருந்தாலும் அவர் நம் சமூகத்திற்காக வாழ்ந்துவர், சிந்தித்தவர் அல்லவா? தன் வாழ்வை அர்ப்பணித்த ஒருவருக்கு கிடைக்கும் பரிசு இவ்வளவுதானா?

இந்த மாதிரியான மோசமான சமூகத்தில் வாழ்வது ஒரு சாபம் என்றால் சாவது ஒரு சாபம். நிறைய சொல்ல நினைத்து ஏதோ வந்துவிட்டது.

கே.ஜே அசோக்குமார்

அன்புள்ள அசோக் குமார்,

ஜெயகாந்தனைப்பற்றிய அந்த காழ்ப்புகளுக்குப் பின்னாலிருப்பவர்கள் நம்மூர் தமிழ்த்தேசியர்கள், போலி மார்க்ஸியர்கள். ஏனென்றால் அவர் இந்தியதேசியத்திலும் வன்முறையற்ற சமூகமாற்றத்திலும் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டிருந்தார். அவர்கள் இவரை அரசியல் வழியாக அன்றி வேறெப்படியும் அறியமாட்டார்கள்

அவர் எழுத்து தட்டையானது என்பவர்களிடம் அவரது எத்தனை படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள், அவற்றைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ன என்று கேட்டுப்பார்க்கலாம்.அப்போது தெரியும் தட்டைக்குமேல் கூட அமரமுடியாத குட்டைகள் இவர்கள் என.

ஜெயகாந்தனின் படைப்புகள் உரக்கப்பேசியவை. அவை உருவான காலம் அப்படி. அவை முன்கண்ட வாசகர்கள் அப்படி. ஆனால் உரக்கப்பேசுவதென்பது ஒருபடைப்பின் முதல்தளம் மட்டுமாக இருக்கமுடியும். அது அப்படைப்பின் ஒரு வகையான புனைவுப்பாவனையாக இருக்கமுடியும்.

புனைகதைகள் பலவகையான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கின்றன. ‘நான் எளிமையாக சொல்கிறேன்’ என்றோ ‘இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை’ என்றோ ‘மிகமிக ஆழமான விஷயம் இது’ என்றோ ‘அறைகூவுகிறேன்’ ஒரு படைப்பு ஒரு தோரணையைக் காட்டலாம். அந்தத் தோரணையை அப்படியே வாங்கிக்கொள்பவன் மிகமேலோட்டமான வாசகன். அதையும் புனைவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்பவனே நல்ல வாசகன். அப்புனைவு எதை மறைக்க அல்லது எதை முன்னிறுத்த அப்படி பாவனை மேற்கொள்கிறது என்றே அவன் பார்ப்பான்.

ஜெயகாந்தனுக்கு மேல்தளம் அப்படி உரத்ததாக இருந்தாகவேண்டியிருந்தது, ஏனென்றால் அவை விகடன் போன்ற இதழ்களில் வந்தவை. எளியவாசகர்களுக்கானவை.அத்துடன் அவர் அந்த மேல்தளத்தின் அடியில் தன்னிச்சையாக ஏதாவது உருவாகி வரவேண்டும் என எதிர்பார்த்தார்.

அதற்கப்பால் அவரது பல முக்கியமான ஆக்கங்களின் அடித்தளம் மிகச்சிக்கலானது. அதை இந்த மொண்ணைவாசகர்கள் எளிதில் சென்று தொட்டுவிடமுடியாது. நுட்பமான உளவியல்குறிப்புகளும் குறியீடுகளும் கலந்து உருவான பல அர்த்த தளங்கள் கொண்டவை அவரது முதன்மையான ஆக்கங்கள்.

உதாரணமாக, சுயதரிசனம் போன்ற ஒரு கதை. அது மேல்தளத்தில் எதைச் சொல்கிறதோ அதற்காக எழுதப்படவில்லை. அதை ஜெயகாந்தனே ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். என்ன என்று கேட்டுச்சொல்லுங்கள் பார்ப்போம்.

இந்த ‘நுட்ப’ வாசகர்கள் சிலாகிக்கும் கதைகள் மேலே மட்டுமே சிக்கலானவை. ஆனால் அடியில் மிகமிக எளிய சில விஷயங்களைச் சென்று தொடுபவை. பெரும்பாலும் எளிமையான வேட்கையை, அவ்வளவுதான். அவர்கள் திரும்பத்திரும்ப ஒரு புதிர் கண்டுபிடித்தல் விளையாட்டைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்

ஜெயகாந்தன் தொட்ட உண்மையான விஷயங்களை சென்று தொட வாசிப்பில் ஒரு பயிற்சி தேவை. முதலில் காலத்தால் பழமைகொண்ட மொழிக்கு அடியில் சென்று உண்மையான பிரதியை வாசிக்கும் பொறுமை. அக்கதைகள் முன்வைக்கும் பண்பாட்டுச்சிக்கல்களை தொட்டறியும் வரலாற்றறிவு. படைப்பின் பாவனைகளுக்கு அடியில் அதன் நுண்விரல் தீண்டும் ஆழ்பிரதியை காணும் கற்பனை

ஜெயகாந்தன் என்ன, எந்த எழுத்தாளரும் இறுதியில் அவரது முதன்மையான சில ஆக்கங்களில் தான் வாழ்வார். ஜெயகாந்தனின் ஒரு இருபது சிறுகதைகள், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் போன்ற படைப்புகள் நீடித்து நிற்கும். அந்த அளவு சாதித்தவர்கள் தமிழில் குறைவே

ஜெ

முந்தைய கட்டுரை‘ஜெகே ‘ கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘ஜெகே’ – எம்டிஎம்