அஞ்சலி : ஜெகே

images

ஒருவாரத்துக்கும் மேலாக விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை. இரு மலையாளப்படங்கள் தொடங்கிவிட்டன. ஒரு தமிழ்த்தொடர்- இன்னமும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஒரு மெகா தமிழ் சினிமாவின் தொடக்கக் கட்ட பணிகள். நாங்களே தொடங்கவிருக்கும் ஒரு புதிய முயற்சியின் தொடக்க கட்டப் பணிகள். விரைவில் அறிவிப்போம். நடுவே வெண்முரசு. காலையில் எழுந்ததுமே வெண்முரசு ஒரு அத்தியாயம். பின்னர் நள்ளிரவில்தான் அடுத்த நினைப்பு.

திடீரென்று காலையில் ஒரு சோர்வு. அன்று ஒன்றுமே எழுதவில்லை. அதீதமான செயலூக்கம் திடீரென்று அப்படி சோர்வு நோக்கிக் கொண்டுசென்றுவிடும் என்று தெரியும்.ஆனால் நிலையின்மை காலைமுதல் இருந்துகொண்டே இருந்தது. மாலையில் அன்பு கூப்பிட்டு “ஜெ.கே தவறிட்டார்” என்று சுருக்கமாக சொன்னபோது அதற்காகத்தானா என்ற எண்ணம் வந்தது.

ஜெகே நெடுநாட்களாகவே விளிம்பில்தான் இருந்தார். நானும் சுகாவும் கடைசியாக அவரைச் சென்று பார்த்தபோது அவரால் எங்கள் இருவரையுமே அடையாளம் காணமுடியவில்லை. அடையாளம் காணமுடியாத பெரியவர்கள் சிரிப்பதுபோல மையமாகச் சிரித்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு “சோர்வாக இருக்கிறது” என்று படுக்கச்சென்றுவிட்டார். அதன்பின் அவரைச் சந்திக்கவில்லை. அந்த ஜெகெயை சந்திப்பதில் ஒரு தயக்கம் இருந்தது

ஜெகே எனக்கு இருவகையில் அறிமுகம். இளமையில் என் பள்ளி ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ நாவல் வழியாக முதல்முறை. அது ஒரு ஜெகே . ஆணித்தரமான கருத்துக்களுடன் புனைவுகளை எழுதியவர். துடுக்குத்தனமும் நிமிர்வும் கொண்ட பெரும் எழுத்தாளர்

பின்னர் 1991ல் அன்புவுடன் சென்று அறிமுகம்செய்துகொண்ட ஜெகே வேறு ஒரு மனிதர். அன்று அவர் கனிந்திருந்தார். தன்னுள் ஆழ்ந்து தானே பேசிக்கொள்ளும் மனிதராக இருந்தார். துடுக்கும் திமிரும் கொண்ட ஜெகே உள்ளேதான் இருந்தார். ஆனால் கனிவே ஓங்கியிருந்தது அந்த ஜெகே எனனை மேலும் வசீகரித்தார். மேலும் அவருடன் இருந்தேன்.

ஜெகே மறைவு இரு ஆளுமைகளையும் எண்ணத்தூண்டுகிறது. நூல்களில் நானறிந்த ஜெகே இருப்பார். நேரில் நானறிந்த ஜெகே நினைவுகளாக இருப்பார். வலக்கையால் மீசையை நீவியபடி ஒரு புதிய எண்ணம் வரும்போது உருவாகும் தோள்பொங்குதலுடன் “கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர். ஓச்சின்னா என்ன? சுழற்றுதல். மெல்லச்சுழற்றி எறியணும். யானை கல்லை விட்டெறிவதை பார்த்திருக்கிறீர்களா? மென்மையா பூவை போடுவதுபோல எறியும். ஏன்னா அரசன் யாரு? அவன் யானை. அவன் அப்படித்தான் செய்யவேண்டும்” என்று எழுந்தெழுந்துபோகும் அவரது குரலை நினைத்துக்கொள்கிறேன்

இன்று வேறேதும் செய்யப்போவதில்லை. ஜெகே மட்டும்தான்

.

முந்தைய கட்டுரைஇலைமேல் எழுத்து- கடிதம்
அடுத்த கட்டுரை‘ஜெகே ‘ கடலூர் சீனு