‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73

பகுதி 15 : யானை அடி – 4

திருதராஷ்டிரரின் அறைநோக்கி செல்லும்போது துரியோதனன் “தந்தையை நான் சந்தித்தே நெடுநாட்களாகின்றது” என்றான். துச்சாதனன் “அவர் அவைக்கு வருவதில்லை” என்றான். துரியோதனன் “ஆம், சிறிய அன்னை சம்படையின் இறப்புடன் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார். அவளுடைய எரியூட்டல் முடிந்த அன்று மாலை தொடங்கிய உடல்நடுக்கம் பன்னிருநாட்கள் நீடித்தது” என்றான். சௌனகர் “ஆனால் சிறிய அரசியைப்பற்றி அவர் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சொல்கூட பேசியதில்லை” என்றார். அச்செய்தியை புதியதாக கேட்பவர்கள் போல அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்கினர்.

பின்பக்கம் காலடியோசை கேட்டது. கைதட்டி அழைத்தபடி குண்டாசி ஓடிவந்தான். “எங்கே செல்கிறீர்கள்? நானும் அரசரைப்பார்க்கத்தான் வந்தேன். அவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து நான்குநாட்கள் ஆகின்றன” என்றான். துரியோதனன் முகத்தை சுளித்தபடி “விலகிப்போ” என்றான். குண்டாசி “ஏன்? நானும் கௌரவன்தான். இந்நாட்டு இளவரசனுக்குரிய எல்லா உரிமையும் எனக்குண்டு. நானும் அரசு சூழ்தலில் பங்கெடுப்பேன்” என்றான். “விலகு” என்று சொல்லி துச்சாதனன் கையை ஓங்கியபடி அருகே செல்ல குண்டாசி தயங்கி “இதெல்லாம் முறையல்ல. நான்…” என்றபின் நகைத்து “நீங்கள் என்னை அழைத்துச்செல்லாவிட்டாலும் நான் அனைத்தையும் அறிந்துகொள்வேன்” என்றான்.

சௌனகர் “நான் பார்த்துக்கொள்கிறேன் இளவரசே, நீங்கள் சென்று பேசுங்கள்” என்று சொல்லி குண்டாசியின் தோள்களை பற்றிக்கொண்டார். “வருக இளவரசே, நான் சொல்கிறேன் என்னவென்று” என்றார். “அவர்கள் உள்ளே செல்லும்போது நான்… குண்டாசி” என அவன் சுட்டிக்காட்ட “வருக, நானே சொல்கிறேன்” என்று அவனை தள்ளிக்கொண்டு சென்றார். துரியோதனன் பெருமூச்சுடன் “உளம்குலைந்துவிட்டான். இனி அவனை மீட்கமுடியுமென நான் நினைக்கவில்லை” என்றான். கர்ணன் திரும்பி இடைநாழியின் மறுமுனையில் மறைந்த குண்டாசியை நோக்கியபின் “அவனை என் தோள்கள் இன்னும் மறக்கவில்லை இளவரசே” என்றான்.

திருதராஷ்டிரரின் அறைவாயிலில் விப்ரர் விழி நோக்கா பார்வையுடன், ஓசையின்றி குடுமியில் சுழன்ற பெருங்கதவைத் திறந்து “உள்ளே வரச்சொல்கிறார்” என்று மெல்லியகுரலில் சொன்னார். “ஆனால் அவரிடம் நெடுநேரம் பேசவேண்டியதில்லை. அவரது உள்ளம் நிலையில் இல்லை. முதன்மையான எதையும் விவாதிக்கவேண்டியதில்லை. கால்நாழிகைநேரம் மட்டும் செலவிடுங்கள்.” துரியோதனன் “அவ்வளவுதான் விப்ரரே, ஓரிரு சொற்கள் மட்டுமே” என்றான். திரும்பி துச்சாதனனையும் கர்ணனையும் நோக்கிவிட்டு உள்ளே சென்றான்.

கூடம் அரையிருளில் இருந்தது. மறுபக்கத்தின் சிற்றறையிலிருந்து வந்த சுடர்வெளிச்சத்தில் அதன் கரிய உருண்ட பெருந்தூண்கள் நீர்நாகங்கள்போல மின்னி நெளிந்தபடி நின்றிருந்தன. இருண்ட குளிர்ந்த நீருக்குள் மூச்சடைக்க துழாவிச் செல்வதுபோல அவர்கள் உள்ளே சென்று பெரிய பீடத்தில் சற்று சரிந்து அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை பார்த்தனர். அவர்களின் காலடிகளுக்காக திரும்பிய அவரது காதுகளுக்கு அப்பால் முகம் சுளித்திருந்தது. “என்ன செய்தி?” என்று முழங்கும் குரலில் தொலைவிலேயே அவர் கேட்டார்.

“தங்களிடம் அமைச்சர் சொல்லியிருப்பார்” என்றான் துரியோதனன். “ம்” என்றார். “காசிநாட்டரசருக்கு தன் மகளை இளையோனுக்கு அளிப்பதில் உவகையே.” திருதராஷ்டிரர் “ஆம், அச்செய்தியையும் அமைச்சர் சொன்னார்” என்றார். “காந்தாரத்து பட்டத்து இளவரசர் அசலருக்கு ஏழு மகள்கள் இருக்கிறார்கள். விருஷகருக்கு எட்டு மகள்கள். பதினைந்துபேரையுமே நம் இளையோருக்கு மணம்செய்துவைக்கலாமென அன்னை விழைகிறார்கள். மாதுலர் சகுனியும் அந்த எண்ணம் கொண்டிருக்கிறார்” என்றான் துரியோதனன். “நாம் காந்தாரத்துடனான உறவை எந்நிலையிலும் இழக்கமுடியாது.” திருதராஷ்டிரர் “அதுவும் நன்று… மணநிகழ்வுகள் நடக்கட்டும்” என்றபின் பெருமூச்சு விட்டார்.

“பிற இளையோருக்கும் மணமக்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கோசலம், வங்கம், மச்சம், மாளவம் என பல நாடுகளிலிருந்து பெண்களைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரரின் தலை எடைமிகுந்து வருவதுபோல தாழ்ந்தபடியே வந்தது. வலிகொண்டவர் போல முகத்தை சுளித்தபடி “அவர்களின் மணச்செய்திகள் என்னவாயின?” என்றார். துரியோதனன் ஒருகணம் தயங்கி உடனே புரிந்துகொண்டு ”தருமன் சிபிநாட்டு இளவரசி தேவிகையை மணந்திருக்கிறான்” என்றான். திருதராஷ்டிரர் உறுமல் போன்ற ஒலியில் “அதை அறிவேன்” என்றார். “பீமன் காசி இளவரசி பலந்தரையை மணந்துகொண்டிருக்கிறான்.” திருதராஷ்டிரர் “ம்ம்” என்றார்.

அவரிடம் என்ன சொல்வதென்று துரியோதனனுக்கு தெரியவில்லை. “சகதேவனுக்கு மத்ரநாட்டு இளவரசியைப் பேசி முடித்திருக்கிறார்கள். நகுலனுக்கு சேதிநாட்டரசர் தமகோஷரின் மகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரர் “ம்” என்றார். “சிசுபாலர் இளைய யாதவனை வெறுக்கிறார். எனவே அவர் தன் தங்கையை பாண்டவர்களுக்கு அளிக்க விரும்பமாட்டார். சேதிநாட்டு இளவரசிகளை நம் இளையோர் அடைந்தால் நமக்கு நல்லது. தமகோஷருக்கும் பெண்களை நமக்களிப்பதில் தயக்கமில்லை”. திருதராஷ்டிரர் ஒன்றும் சொல்லாமல் தலையை உருட்டினார். “சிசுபாலரை நாம் விட்டுவிட முடியாது தந்தையே. அவர் துவாரகை மீதுகொண்ட வஞ்சத்தால் மகதத்துடன் சேர்ந்துகொண்டார் என்றால் நம் எதிரிகள் வலுப்பெறுவார்கள். அங்கம் சூழப்பட்டுவிடும்.”

அவர் மறுமொழி சொல்வார் என எண்ணி சிலகணங்கள் தயங்கியபின் “ஆகவே இளையோர் சேதிநாட்டு மகளிரை மணமுடித்தேயாகவேண்டும். அவர்களை சென்று கைப்பற்றி வருவது இனிமேல் நிகழக்கூடியதல்ல. அரசமுறைத் தூதாக பெண்கேட்டுச்செல்வது ஒன்றே வழியாக உள்ளது” என்றான். திருதராஷ்டிரர் “ம்” என்றார். “அதற்கு தங்களின் ஆணை தேவை. தங்கள் கைப்பட எழுதிய ஒருவரி கொண்ட ஓலை இருந்தால் போதும், தமகோஷர் மறுக்கமுடியாது. சேதிநாட்டு இளவரசியர் இங்கே என் இளையோருக்கு மனைவியராக அமைவர்.”

அவன் பேசிமுடிப்பதற்குள் கர்ணன் “அரசே, தமகோஷர் உறுதியாக இருக்கிறார் என்றால் சேதிநாட்டு மகளை பட்டத்து இளவரசரே மணப்பார். சேதிநாட்டரசி காசியரசிக்கு இணையான இடத்தில் இங்கே இருப்பார்” என்றான். திகைத்துத் திரும்பிய துரியோதனன் கையைப்பிடித்து அழுத்தி அவனை கட்டுப்படுத்தியபின் கர்ணன் தொடர்ந்தான் “நமக்கு வேறு வழியேதும் இப்போதில்லை. சேதிநாடு நம்முடனிருந்தால் தென்கிழக்கைப்பற்றிய எந்த அச்சமும் தேவையில்லை. கலிங்கம் வரை நமது படகுகள் தடைகளின்றி செல்லவும் முடியும்.” திருதராஷ்டிரர் “ம்ம்” என்றார்.

துரியோதனன் திரும்பி துச்சாதனனை நோக்க அவன் இரு ஓலைகளை எடுத்து அவனிடம் நீட்டினான். அவற்றை வாங்கிக்கொண்டு அவன் மெல்ல சென்று திருதராஷ்டிரரின் அருகே பீடத்தில் வைத்தான். “என்ன அவை?” என்றார். “ஓலைகள் தந்தையே” என்றான் துரியோதனன். “சௌனகர் பலமுறை அளித்தும் தாங்கள் கைச்சாத்திட மறுத்தீர்கள் என்றார்…” திருதராஷ்டிரர் “சேதிநாட்டான் சகதேவனுக்கு பெண்கொடுக்க விழைவதாகத்தானே சொன்னாய்?” என்றார். “ஆம், ஆனால்…” என அவன் சொல்லிமுடிப்பதற்குள் திருதராஷ்டிரர் தன் பெருங்கரங்களால் பீடத்தை ஓங்கி அறைந்தார். அது உடைந்து இரு துண்டுகளாக விழ அவர் எழுந்து தன் இரண்டு கைகளையும் தேள்கொடுக்கு போல விரித்தபடி மதமெழுந்த யானை போல பிளிறினார்.

“அடேய், இழிமகனே! அவர்களுக்குரிய பெண்களை நீ எப்படி கவர நினைக்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். கர்ணன் புரிந்துகொண்டு துரியோதனனை பிடிக்கப் போவதற்குள் திகைத்து நின்ற துரியோதனனை திருதராஷ்டிரர் ஓங்கி அறைந்தார். அந்த ஓசை அறையெங்கும் அதிர்ந்தது. சரிந்து தசைக்குவியலாக அவர் காலடியில் விழுந்த துரியோதனனை அவர் குனிந்து இரு கைகளால் அள்ளிக்கொண்டார். அவனைத் தூக்கி தூண்மேல் அறைந்தார். தூண் அதிர மொத்த மரக்கூரையே நடுங்கி அதன் இடுக்குகளில் இருந்து சுதைமண் கொட்டியது. மீண்டும் உறுமியபடி தூணில் அவனை முட்டியபோது முனகலுடன் தூண் விரிசலிட்டு முறிந்தது.

கர்ணன் அவரைப்பிடிக்கப்போக அவர் ஒருகையால் அவனைத் தூக்கி அறைமூலைக்கு வீசினார். துச்சாதனன் பாய்ந்துசென்று அவர்மேல் விழுந்து பிடிக்கமுயல அவர் அவனை ஓங்கி அறைந்து தரையில் வீழ்த்தினார். துச்சாதனன் கால்கள் இருமுறை இழுத்துக்கொள்ள நினைவழிந்தான். கர்ணன் எழுந்து நோக்க கொலைவெறிகொண்ட யானையின் துதிக்கையில் கிடப்பதுபோல நினைவிழந்து மூக்கிலும் வாயிலும் குருதி வழிய துரியோதனன் அவர் கையில் கிடந்தான்.

யானைபோலவே இருந்தன அவரது அசைவுகள். உரக்க உறுமியபடி, காலால் நிலத்தை உதைத்தபடி, அவர் தன்னைத்தானே சுற்றினார். அவனை நிலத்தில் ஓங்கி அறைந்து காலைத்தூக்கி அவனை மிதிக்கப்போகும் கணத்தில் கர்ணன் பாய்ந்து அவர் காலை பிடித்துக்கொண்டான். அவர் கர்ணனைத் தூக்கி தூணில் அறைந்து சுழற்றி வீசினார். அவன் இன்னொரு தூணில் முட்டி கீழே விழுந்து வாயில் குருதியுடன் மங்கலாகிவந்த பார்வையுடன் நோக்கியபோது அவர் இருகைகளையும் விரித்து பேரொலி எழுப்பியதைக் கண்டான்.

கீழே கிடந்த துரியோதனனுக்காக தேடி கண்டுகொண்டு குனிந்து அவனைத்தூக்கி தன் முழங்காலில் வைத்து அவன் உடலை ஒடிக்கப்போகும் கணத்தில் கதவைத்திறந்து உள்ளே வந்த விப்ரர் “நிறுத்துங்கள் அரசே” என்றார். தோள்தசைகள் இறுகி துடிதுடிக்க திருதராஷ்டிரர் உறைந்தார். “நிறுத்து திருதா… மூடா. நீ என்ன, மறுபிறவியிலும் தீரா இருளுக்கா செல்லவிருக்கிறாய்?” என்றபடி விப்ரர் ஓடிவந்து திருதராஷ்டிரர் கைகளைப்பிடித்து முறுக்கினார். மரத்தரை ஒலிக்க திருதராஷ்டிரர் மைந்தனை கீழே போட்டுவிட்டு மூச்சு வாங்கியபடி குனிந்து நின்றார். அவரது பெரிய கைகள் கொட்டியபின் தேள்கொடுக்கென மெல்ல தாழ்ந்தன.

“மூடா… என்ன செய்யவிருந்தாய்? அவன் உன்மகன். அவன் செய்ததெல்லாம் நீ செய்த பிழை. உன் பிறவிப்பெருங்கடன் அவன். அதை தீர்த்துவிட்டுச்செல் இழிமகனே. அன்றி அவனைக் கொன்றால் நீயிருக்கும் இருளிலிருந்து உனக்கு விடுதலை வந்துவிடுமா? விழியிழந்தது உன் ஊழ். மதியையுமா இழக்கப்போகிறாய்?” என்று உடல்நடுங்க விப்ரர் கூவினார். ஒரு கை மட்டும் உயிருடன் எஞ்ச துரியோதனன் அதை ஊன்றி உடலை இழுத்து இழுத்து நகர்ந்துகொண்டு மேலே நோக்கினான். ”இனி இவன் என் முன் வரக்கூடாது. இனி என் அறைக்குள் இவர்கள் இருவரும் நுழையக்கூடாது” என்று திருதராஷ்டிரர் கூவினார்.

“வரமாட்டார்கள்… வரமாட்டார்கள், நான் சொல்கிறேன்… நீ உன்னை அடக்கு. வேண்டாம். உன்னில் இருண்ட உலகத்து தெய்வங்கள் குடிகொண்டிருக்கின்றன” என்று விப்ரர் அழுகையுடன் சொன்னார். திருதராஷ்டிரரின் கைகளைப்பிடித்துக்கொண்டு “அமர்ந்துகொள்… அமர்ந்தாலே நீ மாறிவிடுவாய். அமர்ந்துகொள் திருதா” என்றார். திருதராஷ்டிரரின் உடல் தளரத்தொடங்கியது. இறுகி நின்ற அத்தனை தசைகளும் எலும்புகளிலிருந்து விடுபட்டு சுருண்டன. நூறுபெருநாகங்கள் பிணைந்து உருவானதுபோன்ற அவரது உடல் அலையிளகும் சுனை என அசைந்து தன் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டது.

அவரைப்பற்றி பீடத்தில் அமரச்செய்தார் விப்ரர். அவர் அமர்ந்ததும் தன் தலையில் கைகளால் ஓங்கி அறைந்தபடி விலங்குபோல பெருங்குரல் எழுப்பி அழத்தொடங்கினார். அவரது கழுத்துத்தசைகள் அதிர்ந்து இழுபட்டன. கண்ணீர் முகம் முழுக்க பரவி மார்பில் சொட்டியது. கைகளால் தன் தலையையும் முகத்தையும் ஓங்கி ஓங்கி அறைந்தார். ஒவ்வொரு அடியின் ஓசையும் தூண்களை அதிரச்செய்தன “வேண்டாம், திருதா. சொல்வதைக்கேள்! வேண்டாம்” என அந்தக்கரங்களைப்பிடித்த விப்ரர் அவற்றுடன் தானும் ஊசலாடினார்.

கர்ணன் எழுந்து தூணைப்பிடித்து நிற்கமுயன்று நிலைதடுமாறி முகம் மரத்தரையில் அறைய விழுந்தான். கையூன்றி எழுந்து காலை உந்தித் தவழ்ந்து துரியோதனனை அணுகினான். துரியோதனன் “இளையவன்… இளையவனுக்கு என்னாயிற்று பார்” என்று விக்கலுடன் சொல்வதற்குள் குருதி அவன் வாயை நிறைத்தது. அதை இருமுறை கக்கிவிட்டு “அவனுக்கு நினைவே இல்லை… கர்ணா, அவன் இறந்துவிட்டான்” என்றான். அவன் மார்பு விம்மியது. மீண்டும் குருதி வாயில் பொங்கி வந்தது. முகம் நிறைந்த குருதிமேல் கண்ணீர் வழிய “இளையோன்… அவனைப்பார்” என்றான்.

கர்ணன் “அஞ்சவேண்டாம், அவன் இறக்கவில்லை” என்றான். “எழமுடியுமா என்று பாருங்கள். அறை வாயிலுக்கு சென்றுவிடுங்கள். ஏவலனை அழைக்கிறேன்.” துரியோதனன் எழமுயன்றபோது அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. முகம்பதிய தரையில் விழுந்து ஒருமுறை துடித்தான். கர்ணன் மேலும் ஓர் உந்தலில் அவனிடம் வந்து “இளவரசே” என்றான். துரியோதனன் முகத்தை உந்தித்தூக்கி “ஒன்றுமில்லை… அவனைப்பார்” என்றான்.

திருதராஷ்டிரர் தன் இரு கரங்களையும் நீட்டி துழாவி விப்ரரின் தலையைத் தொட்டார். “விப்ரா, நாம் இன்றே இங்கிருந்து கிளம்புவோம். என்னால் இங்கிருக்க முடியாது. நாம் காட்டுக்குச் சென்றுவிடுவோம். நீ மட்டும் என்னுடன் வந்தால் போதும்.” விப்ரர் “சென்றுவிடுவோம் அரசே” என்றார். “உடனே. இப்போதே… உள்ளே சென்றதுமே என் ஆடைகளை எடு… நாம் காட்டுக்குச்செல்வோம். சப்தகோடிக்கு செல்வோம். சிறுவர்களாக விளையாடினோமே அங்கேயே சென்றுவிடுவோம்.”

விப்ரர் திருதராஷ்டிரரை தூக்கினார். சற்றே கூனிவிழுந்த பெரிய உடலுடன் அவர் திருதராஷ்டிரரை கிட்டத்தட்ட தூக்கி கொண்டு சென்றார். இரு கைகளையும் ஆட்டி “சென்று விடுவோம்… இனி இங்கிருக்கமாட்டேன்… நீயும் நானும் சென்றுவிடுவோம்” என்றபடி திருதராஷ்டிரர் சென்றார்.

கர்ணன் உரத்தகுரலில் “சௌனகரே, சௌனகரே” என்று கூவினான். தரையை தன் காலால் அடித்தான். மீண்டும் கூவியபோது கதவு மெல்ல திறந்து வெளியே நின்ற சௌனகர் எட்டிப்பார்த்தார். உள்ளே ஓடிவந்து “இளவரசே” என்று கூவினார். “உடனே மருத்துவர்களை அழையுங்கள். நாங்கள் மூவருமே அடிபட்டிருக்கிறோம். இளையோன் இறப்பின்நிலையில் இருக்கிறார். மருத்துவர்கள் வரட்டும், ஆனால் அரண்மனையில் வேறு எவருக்கும் தெரியவேண்டியதில்லை” என்றான். “ஆம், இதோ” என்று சௌனகர் வெளியே ஓடினார்.

துரியோதனன் கைகளை ஊன்றி உந்தி உடலை இழுத்து துச்சாதனன் அருகே சென்று அவன் தோளைத் தொட்டு “இளையோனே இளையோனே” என்று அழைத்தான். பிணம் போல துச்சாதனன் உடல் அசைந்தது. அவன் தோள்மேல் தலைவைத்து துரியோதனன் சாய்ந்துவிட்டான்.

கதவு திறந்து மருத்துவர்கள் உள்ளே வந்தபோது துரியோதனன் மட்டும்தான் தன்னினைவுடன் இருந்தான். கர்ணன் மயங்கி சோரி வழியும் வாயும் மூக்குமாக மல்லாந்து கிடந்தான். “எனக்கு ஒன்றுமில்லை… அவர்களைப்பாருங்கள்” என்றான் துரியோதனன். கதவு திறந்து மேலும் வீரர்கள் உள்ளே வந்தனர். மேலும் ஒருமுறை கதவு திறந்து குண்டாசி வந்தான். திகைத்தவன்போல அறையை நோக்கியபின் கறைபடிந்த பற்களைக் காட்டி சிரித்தான்.

அவனுடைய முன்பல் இரண்டும் உதிர்ந்திருந்தமையால் சிரிப்பு ஒரு காற்றொலியுடன் பீறிட்டது. “ஆ! போர்க்களக் காட்சி. தெய்வங்கள் பழிவாங்கிவிட்டன” என்றான். துச்சாதனனை நோக்கி “செத்துவிட்டானா? படுத்திருப்பதைப்பார்த்தால் முதுகெலும்பு முறிந்திருக்கும் என்றல்லவா தோன்றுகிறது” என ஓடிவந்து தன் சுள்ளி போன்ற கால்களால் துச்சாதனனை தட்டிப்பார்த்தான். “சாகவில்லை. ஆனால் எஞ்சிய வாழ்நாளில் எழுவானா என்பது ஐயம்தான்” என்றான்.

துரியோதனன் “ம்ம்” என்று முனகினான். குண்டாசி ஓடி வந்து அவனருகே அமர்ந்து “என்னை கொல்லவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? இதோ என் கழுத்து கொல்லுங்கள். கொல்லுங்கள் அஸ்தினபுரியின் அரசே. ஏன் முதுகெலும்பு முறிந்துவிட்டதா?” என்றான். துரியோதனன் வாயிலிருந்த குருதியைத் தொட்டு “ஆ, குருதி! என்ன அநீதி இது? அரசனின் குருதியை வீழ்த்துவது என்றால்…” என்றான்.

சௌனகர் “இளவரசே, வெளியே செல்லுங்கள்” என்றார். “நீ அமைச்சன். நாகப்புற்றில் வாழும் வெள்ளை எலி நீ. நீ சொல்லாதே. டேய் பிராமணா, முறைப்படி நீ என்னை வணங்கினால் உன்னை கொல்லாமல் விடுவேன்” என்றான் குண்டாசி கோணலாக சிரித்தபடி. “ஆ, இளவரசர் சினம் கொள்கிறார். என்னை கொல்ல ஆணையிடப்போகிறார். யானைக்காலில் வைத்து… ஆனால் இவர்களைத்தான் யானைக்காலில் போட்டு அடித்ததுபோல தெரிகிறார்கள்…”

இரு மருத்துவர்கள் துணிமஞ்சலில் துச்சாதனனை உருட்டி ஏற்றி தூக்கினார்கள். “யானைச்சாணியை அள்ளிச்செல்வதுபோலிருக்கிறது… கூ கூ கூ யானைச்சாணி ஆ யானைச்சாணி” என்று குண்டாசி கை நீட்டி சிரித்தான். சௌனகர் கடும் சினத்துடன் “அழைத்துச்செல்லுங்கள் அவரை” என்று ஆணையிட்டார். “அடேய், என் மேல் கைவைப்பீர்களா? நான் அஸ்தினபுரியின் இளவரசன். பாண்டவர்களைப்போல உங்களையும் எரித்து…” அவன் துரியோதனனை நோக்கி கண்களைச் சிமிட்டி “அச்சம் வேண்டாம். சொல்லமாட்டேன்” என்றான். குரலைத் தாழ்த்தி மந்தணம் போல “நாம் அந்தக் கிழட்டு அரசனையும் அரக்கு மாளிகையில் போட்டு கொளுத்திவிடலாம்” என்றான்.

துரியோதனன் பற்களைக் கடித்தபடி கண்களை மூடினான்.வீரர்கள் கர்ணனை மஞ்சலில் கொண்டுசென்றார்கள். துரியோதனன் அருகே வந்த இரு மருத்துவர் மஞ்சலை விரிக்க “தேவையில்லை” என்று சொல்லி துரியோதனன் கைநீட்டினான்.

“அய்யய்யோ, அதெப்படி? செல்லும் வழியெல்லாம் கரைந்த மலம் விழுந்தால் அரண்மனையை தூய்மைசெய்யவேண்டுமே” என்றான் குண்டாசி. அவனே அதை மகிழ்ந்து நகைத்து “இல்லை, மஞ்சலை மட்டும் தூய்மைசெய்வதுதானே எளிது? அதற்காக சொன்னேன்” என்றான். சௌனகர் பொறுமையிழந்து “அடேய், இவரை பிடித்துக்கொண்டு சென்று அறைக்குள் அடையுங்கள்” என்று கூவினார். அப்போதும் வீரர் தயங்க குண்டாசி மிடுக்குடன் “தேவையில்லை. நானே பெரும்பாலும் அறைக்குள்தான் இருக்கிறேன்” என்றான்.

உள்ளிருந்து விப்ரர் வருவதைக்கண்டு “ஆ, வந்துவிட்டது நிழல். குருட்டு நிழல். ஆ” என்றான். துரியோதனனை வீரர் தூக்க அவன் “ஆ” என வலியுடன் அலறினான். குண்டாசி திகைத்து திரும்பி நோக்கியபின் “அஸ்தினபுரிக்கு நான் அரசனாக வேண்டியிருக்கும் போலிருக்கிறதே” என்று சொல்லி துணி கிழியும் ஒலியில் மீண்டும் சிரித்தான். சௌனகர் “எப்படி இருக்கிறார்?” என்றார். “துயிலட்டும்… இப்போது அவர் தனிமையிலிருப்பதே நன்று” என்றார் விப்ரர். துரியோதனனை மஞ்சலில் போட்டு தூக்கிக்கொண்டுசெல்ல அவனுடைய பெரிய கை ஒன்று தொங்கி தரைதொட்டு ஆடியபடி சென்றது.

“எவ்வளவு பெரிய கை… இதைவைத்து பீமனுக்கு உடல் வலி தீர சிறப்பாக உழிச்சில் செய்துவிடலாம்” என்ற குண்டாசி திரும்பி சௌனகரிடம் கண்சிமிட்டி “உடல் வலிக்கு நல்லது” என்றான். விப்ரரிடம் “ஆடியை அடித்து உடைக்க முயன்ற அறிவாளி என்ன செய்கிறார்? குருடன். அகமிருண்ட குருடன். நீ நட்ட விதை நஞ்சாக முளைத்தால் நீ அதை வெட்டவேண்டும்… இதோ போய் கேட்டுவிட்டுவருகிறேன்” என்று கீழே விழுந்து கிடந்த தன் சால்வையை குனிந்து எடுக்கப்போய் தள்ளாடி தூணை பற்றிக்கொண்டான்.

சௌனகர் “கூட்டிச்செல்லுங்கள் அவரை” என்று உச்சகட்ட சினத்தில் முகம் சிவந்து உடல்நடுங்க கூவினார். விப்ரர் “இல்லை சௌனகரே, அவர் செல்லட்டும். முதியவருக்கு அது தேவைதான்” என்றபின் “உள்ளே செல்லுங்கள் இளவரசே” என்றார்.

“நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. சில எளிய வினாக்கள்… ஏன் இப்படி ஆயிற்று? உறைகுத்தாமல் மோர் புளிக்குமா? உறைமோர் உன்னுடையது அல்லவா? அதைமட்டும் கேட்டுவிட்டு வருகிறேன்” இளித்து “அத்துடன் என் உடலில் குருதியில் மது குறைந்தபடி இருக்கிறது. கிழவர் முன்னால் என்னால் மதுவருந்த முடியாது. என்ன இருந்தாலும் அவர் என் தந்தை. மறைந்த சம்படை என் அன்னை. இவர் என் அன்னையை கவர்ந்து வந்து…” என்றான்.

அவன் ஒருமுறை விக்கி வாயில் வந்த கோழையை தரையில் துப்பிவிட்டு “அவளை அரசியாக்கி அரியணைமேல் அமரச்செய்தார் அல்லவா? பட்டும் பொன்னும் மணியும் அணிந்து அவள் அமர்ந்திருக்கும் அழகை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்? என்னை அவள் அள்ளிக்கொஞ்சி நெஞ்சோடு சேர்ப்பாள் அப்போதெல்லாம். ஆனால் அவளுக்கு நான் அவளுடைய மேலாடை என்றுதான் நினைப்பு…” என்றான்.

அவன் பற்களைக்காட்டி நகைத்து “இன்று சம்படைக்காக ஒரு நல்விருந்து. கண்ணற்ற யானைக்கு மதமெழுந்தமைக்காக இன்னொரு நல்விருந்து. கருந்தேள்கள் மிதிபட்டமைக்காக இன்னொரு நல்விருந்து” என்றான். மீண்டும் விக்கலெடுத்து காறித்துப்பி விட்டு அவன் உள்ளே சென்றான்.

வீரர்கள் அனைவரும் சென்றபின் கூடத்தில் சௌனகரும் விப்ரரும் மட்டும் நின்றிருந்தனர். சௌனகர் “இத்தனை ஆற்றல் மானுடனுக்கு இயல்வதுதானா? எப்படி இதெல்லாம் உடைந்தது?” என நிமிர்ந்து துண்களின் விரிசல்களை, உத்தரத்தின் உடைவை நோக்கினார். “இருமுறை இதை சீர்செய்திருக்கிறோம்.” விப்ரர் “அதற்கென்ன! மீண்டும் சீரமையுங்கள். இனிமேல் அடிக்கடி சீரமைக்கவேண்டியிருக்கும்” என்றார்.

சௌனகர் “நீங்கள் மேலும் மேலும் கசப்பு கொண்டவராக ஆகிவருகிறீர்கள் விப்ரரே” என்றார். “நான் நானல்ல. இப்போது சிறியவன் சொன்னதுபோல வெறும் நிழல்” என்ற விப்ரர் “நாங்கள் இன்று மாலையே சப்தகோடிக்கு செல்கிறோம். அங்கு ஒரு சிறு தங்குமிடம் அமையவேண்டும்” என்றார். “நீங்கள் என்றால்?” என்றார் சௌனகர். “அதாவது, நீங்களிருவரும் அரச அகம்படியினரும் அல்லவா?” விப்ரர் “இல்லை, நானும் அவரும் மட்டும்” என்றார்.

“விப்ரரே, இருவருமே முதியவர்கள். அரசர் பெருந்தீனிக்காரர்.” விப்ரர் “ஆம், ஆனால் அவரது உணவை என்னால் ஈட்டமுடியும். நாங்கள் இளமையில் அங்கே பல்லாண்டுகாலம் இருந்திருக்கிறோம்” என்றார். “அங்கே பிறிதொருவர் இருந்தால்கூட அரசரின் உள்ளம் அமைதிகொள்ளாது அமைச்சரே.” சௌனகர் தலையசைத்து “எவரும் அறியாமல் அனைத்தையும் ஒருக்குகிறேன்” என்றபின் “அவரது மைந்தரின் திருமணங்கள் வருகின்றன. அவரின்றி…” என தொடங்கினார். ”அவர் இருந்தால் மேலும் துன்புறுவார். பீஷ்மபிதாமகர் இருக்கிறார் அல்லவா? அவரே போதும்” என்றார் விப்ரர்.

“எப்போது மீள்வதாக எண்ணம்? பாஞ்சாலி நகர்புகும்போதா?” என்று சௌனகர் கேட்டார். “சொல்லமுடியாது. இருக்கலாம்” என்றார் விப்ரர். “விப்ரரே, அங்கு என்னதான் செய்யப்போகிறீர்கள்?” என்றார் சௌனகர். “அமைச்சரே, அறுபதாண்டுகளுக்கு முன் அங்கே இரு சிறுவர்களாக நாங்கள் விளையாடினோம். நான் அவரை திருதா என்று அழைப்பேன். என் உணவை அவர் திருடி உண்பார். சினம்கொண்டு அடிப்பேன். தலைகுனிந்து வாங்கிக்கொள்வார். அந்த இளமைக்கு திரும்பச்செல்லப்போகிறோம்.”

சௌனகர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “அமைச்சரே, மானுடனைப்போல இரக்கத்திற்குரிய உயிர் இப்புவியில் இல்லை” என்றார் விப்ரர் கசப்பான புன்னகையுடன். பின்பு விழியிழந்தவருக்குரிய நடையுடன் தலையை ஆட்டியபடி விலகிச்சென்றார்.

முந்தைய கட்டுரைஇருக்கியளா?
அடுத்த கட்டுரைநினைவின் நதியில்- மோனிகா மாறன்