‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72

பகுதி 15 : யானை அடி – 3

துரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம் தூக்கியதிலும் மெல்லிய செயற்கைத்தனம் இருந்ததை அவன் பார்த்தான். ஆனால் சிரித்தபடி சென்று பீடத்தில் அமர்ந்து “மன்னியுங்கள், சற்று பிந்திவிட்டேன்” என்று அவன் சொன்னது அதைவிடவும் செயற்கையாக இருந்தது. “சிசுபாலரிடமிருந்து மீண்டும் ஓர் ஓலை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். “என்ன?” என்று துரியோதனன் விழிதூக்கி கேட்டான்.

கர்ணன் ”ஓலையில் ஒன்றுமே இல்லை. நம்மை சந்திக்கவேண்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்” என்றான். ”சந்தித்தால் என்ன?” என்றான் துரியோதனன். “சந்தித்தால் ஒன்றை மட்டுமே பேசமுடியும். அவர் துச்சளையை கோருவார்” என்றான் கர்ணன். துரியோதனன் முகவாயை தடவியபடி “ஆம்” என்றான். துச்சாதனன் “அவருக்கே மணமுடித்துக்கொடுத்தாலென்ன? அவர் என்ன நம்மை மீறியா சென்றுவிடுவார்?” என்றான். துரியோதனன் சினத்துடன் முகம் தூக்கி “எந்நிலையிலும் சிசுபாலருக்கு துச்சளையை நாம் கொடுக்கப்போவதில்லை. அந்தப்பேச்சே தேவையில்லை” என்றான்.

கர்ணன் வியப்புடன் நோக்க “அதை துச்சளை விரும்பமாட்டாள். இளைய யாதவனின் எதிரியை மணக்க பாரதவர்ஷத்தின் எந்தப்பெண்ணும் விரும்பப்போவதில்லை” என்றான் துரியோதனன். “பானு அதை சொல்லும் வரை நானும் உணரவில்லை” என விழிகளை திருப்பிக்கொண்டு சொன்னான். அடக்கப்பட்ட சினத்துடன் “காசிநாட்டு இளவரசி அப்படி சொன்னார்களா? இதில் அவர்களின் விருப்பத்திற்கு என்ன இடம்?” என்றான் கர்ணன். “கர்ணா, அவள் உண்மையிலேயே விழையாத எதையும் இனி என் வாழ்நாளில் என்னால் செய்யமுடியாது” என்றான் துரியோதனன். சற்றுநேரம் அமைதி நிலவியது. கர்ணன் அதைவெல்ல வெறுமனே தன் ஏடுகளை புரட்டிக்கொண்டான்.

பட்டாடை சரசரக்க சௌனகர் உள்ளே வந்தார். துரியோதனன் எழுந்து அவரை வணங்கினான். அவனை வாழ்த்தியபின் “வந்துவிட்டீர்களா?” என்றார். “இவர்களிருவரும் காலைமுதலே காத்திருக்கிறார்கள்.” துரியோதனன் “காலைமுதலா? ஏன்? நான் வழக்கமாக விடிகாலையில் வருவதில்லையே” என்றான். கர்ணன் “இல்லை, முதன்மையான அரசச்செய்திகள் இருந்தமையால்…” என்றான். “என்ன செய்திகள்? சிசுபாலரின் ஓலை மட்டும்தானே?” என்றான் துரியோதனன். “ஆம், அது முதன்மையாக…” என கர்ணன் சொல்ல ”அதில் எந்த முடிவையும் எடுக்கவேண்டியதில்லை என்றல்லவா நீயே சொன்னாய்?” என்றான் துரியோதனன்.

“ஆம், ஆனால் அந்தமுடிவையே விரைந்து எடுத்தாகவேண்டும். அவர் விதுரரின் அழைப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு வந்துவிட்டாரென்றால் நாம் சந்தித்தேயாக வேண்டியிருக்கும்” என்றான் கர்ணன் எரிச்சலுடன். அவனை திகைப்புடன் நோக்கிய சௌனகர் ”யார் சிசுபாலரா? அவர் எப்படி அவ்வாறு வரமுடியும்? அவர் அரசர். அவருக்கென சில முறைமைகள் இங்குள்ளன. அங்கர் அவற்றை அறிந்திருக்கமாட்டார்” என்றார். கர்ணன் சிவந்த முகத்துடன் உரக்க “ஆம், நான் முறைமைகளை அறியமாட்டேன். ஆனால் எனக்கு அரசு சூழ்தல் தெரியும்…” என்றான்.

துரியோதனன் புன்னகையுடன் “சரி, இதை ஏன் நாம் இத்தனை பேசவேண்டும்? இப்போது எது முதன்மையானதோ அதைப்பற்றி பேசுவோம்” என்றான். சௌனகர் “காசி அரசியிடமிருந்து எனக்கு இரண்டு ஆணைகள் வந்துள்ளன இளவரசே. ஒன்று, இளவரசர் துச்சாதனருக்காக காசிநாட்டு இளவரசி அசலையைக்கேட்டு தூதனுப்பலாமா என நான் மாமன்னரிடம் கேட்டு சொல்லவேண்டும். இரண்டு, அங்கநாட்டரசருக்கு புளிந்தர் நாட்டு இளவரசி சுப்ரியையை கோரலாமா என்று அங்கரிடமும் அரசரிடமும் நான் கேட்டு சொல்லவேண்டும்” என்றார். “ஆம், அவள் நேற்று என்னிடமும் அதைப்பற்றி சொன்னாள்” என்றான் துரியோதனன்.

கர்ணனின் முகம் மிகவும் சிவந்துவிட்டதை துரியோதனன் கண்டான். துச்சாதனனிடம் நிமிர்ந்து “நீ என்ன சொல்கிறாய் இளையோனே?” என்றான். “ஆணை என்பதற்கு அப்பால் நான் என்ன சொல்லப்போகிறேன்?” என்றான் துச்சாதனன். துச்சலன் முகம் மலர்ந்து “சிறியவருக்கு உள்ளூர உவகைதான் மூத்தவரே” என்றான். “நீ எப்படி அறிவாய்?” என்றான் துரியோதனன் சிரித்தபடி. “அவரது கை அறியாமல் மீசை நோக்கிச் சென்று கீழே தழைந்தது” என்று துச்சலன் சொல்ல அவனை துச்சாதனன் அறைந்தான். மூவரும் நகைத்தனர்.

சௌனகர் “அரசர் இன்றும் அவை வரப்போவதில்லை. நேராக இசைமண்டபம் சென்றுவிட்டார். நான் அங்கு சென்று இவற்றை அவர் செவிகளில் வைக்கிறேன்” என்றார். “அவை கூடியாகவேண்டும். பல முடிவுகளை எடுக்கவேண்டும்” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் மாமன்னர் இப்போதெல்லாம் அவை வருவதே இல்லை. முடிவுகளனைத்தையும் விதுரரே எடுக்கலாமென்று சொல்லிவிட்டார். விதுரர் இல்லாதபோது மாமன்னரின் சார்பில் யுயுத்ஸு முடிவெடுக்கலாமென்றார்.” துரியோதனன் “ஆம், அவன் இந்த நாட்டை ஆளும் வல்லமை கொண்டவன்…” என்றான்.

சௌனகர் தலைவணங்கி “நான் சொல்லிவிடுகிறேன்” என்று திரும்ப கர்ணன் உரத்தகுரலில் “நில்லும் சௌனகரே” என்றான். அவர் திகைத்து திரும்பினார். “அங்கநாட்டரசன் அஸ்தினபுரியின் அடிமை அல்ல. அரசி ஆணையிட்டு மன்னர் வழிகாட்டும்படி வாழவேண்டுமென்ற தேவையும் எனக்கில்லை” என்றான். சௌனகர் திகைத்து துரியோதனனை நோக்கினார்.

துரியோதனன் அந்தத் தருணத்தை எளிதாக்குவதற்காக “என்ன சொல்கிறாய்? அடிமையா? சரி, நீ ஆணையிடு. சௌனகர் சென்று அரசரிடம் பேசுவார், இவ்வளவுதானே?” என்றான். “இளவரசே, நான் எவரை மணம்புரியவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை அஸ்தினபுரியின் அரசருக்கு இல்லை. உங்களுக்கோ உங்கள் மனைவிக்கோ இல்லை. அந்த முடிவை எடுக்கவேண்டியவள் ஏழை சூதப்பெண்ணான ராதை. என் அன்னை” என்றான். “அது உண்மை. ஆனால் ராதை ஏழை சூதப்பெண் என்றாய் அல்லவா? அது பிழை. அவர் இன்று அங்கநாட்டுக்கு பேரரசி” என்றான் துரியோதனன். “நான் அவர்களிடம் பேசுகிறேன்.”

தொடையில் தட்டி உரத்த குரலில் “வேண்டியதில்லை“ என்றபடி கர்ணன் எழுந்துகொண்டான். “அதை நீங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் எண்ணியிருந்தால் அது முறை. என்னையும் என் தாயையும் மதிக்கிறீர்கள் என்று பொருள். இனிமேல் நான் சொல்லித்தான் என் அன்னையிடம் கேட்பீர்கள் என்றால் முன்னரே என் முடிவை சொல்லிவிடுகிறேன், நான் உங்கள் ஆணைக்கோ வழிகாட்டலுக்கோ ஆட்படப்போவதில்லை.” கர்ணன் தலைவணங்கி வெளியே சென்றான்.

“என்ன சொல்கிறான்?” என்றான் துரியோதனன். “அவர் நேற்றுமுதல் சினந்திருக்கிறார் மூத்தவரே. நேற்று அவர் தன் ஏவலனை அடித்திருக்கிறார்” என்றான் துச்சலன். துரியோதனன் ”எதற்கு?” என்றான். “நேற்றிரவு முழுக்க மதுவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். நள்ளிரவின் ஏவலன் துயின்றிருக்கிறான்” என்றான் துச்சலன். “என்ன ஆயிற்று அவனுக்கு?” என்ற துரியோதனன் ஒருகணம் விழி விலக்கி சாளரத்தை நோக்கியபின் “பால்ஹிகன் உடல்நிலை எப்படி உள்ளது?” என்றான். “நேற்று மாலை பார்த்தேன். நலமாகவே இருக்கிறார்” என்றான் துச்சாதனன். “தொடைப்புண் ஆழமானது. அது முழுமையாக ஆறி அவர் இயல்பாக நடக்கத் தொடங்க ஆறுமாதம்கூட ஆகலாம். அம்பு எலும்பில் பாய்ந்திருக்கிறது. தோள்புண் இன்னும் ஒருமாதத்தில் வடுவாகிவிடும்.”

“அவனை சென்று பார்க்கவேண்டும்” என்றான் துரியோதனன். “இன்று காலையில் பிந்திவிட்டேன். பணிகள் ஒவ்வொன்றாக கூடிக்கூடி செல்கின்றன.” சௌனகரிடம் “அமைச்சரே, இனிமேல் அரசமுறைமைகள் மணச்சடங்குகள் என ஏதுமில்லை அல்லவா?” என்றான். “இல்லை இளவரசே, நீங்கள் இன்னொரு மணம்கூட செய்துகொள்ளலாம்.” துரியோதனன் புன்னகைத்தான். “மூத்தவரே, அங்கரை என்ன செய்வது?” என்றான் துச்சாதனன். “ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அவனே திரும்பி வருவான். அவன் என்னிடம் சினம் கொள்வது புதிதா என்ன?” துச்சாதனன் “ஆம், சினம் கொள்வதுண்டு. ஆனால் ஒருபோதும் உங்களை அவமதிப்பதுபோல பேசிவிட்டு சென்றதில்லை” என்றான்.

“இளையோனே, என்னை அவமதிப்பதற்கும் கொல்வதற்கும்கூட உரிமைகொண்டவன் அவன்” என்றான் துரியோதனன். “அவன் விரும்பும்படி மட்டுமே என் வாழ்க்கை அமையும்… நான் என் ஆசிரியருக்கும் தந்தைக்கும் பின் அவனுக்கே என்னை முழுதளித்திருக்கிறேன்.” துச்சாதனன் “அதை அறியாதவர் எவரிருக்கிறார்கள் அஸ்தினபுரியில்?” என்றான் புன்னகையுடன். “அவனுடைய சினம் எனக்கும் நேற்று மாலைவரை புரியவில்லை. இன்று புரிகிறது.” துச்சாதனன் “ஏன்?” என்றான். “காசிநாட்டு இளவரசியை மணமுடித்த மறுநாள் நீயும் புரிந்துகொள்வாய்” என்றான் துரியோதனன்.

“விடைகொள்கிறேன்” என்று சௌனகர் சென்றபின் துச்சாதனன் “மூத்தவரே, சேதிநாட்டு இளவரசிகளை நாம் கைப்பற்றியாகவேண்டும் என கர்ணர் உறுதியாக இருக்கிறார். சேதிநாடு நம்முடன் இல்லை என்றால் அங்கநாடு மகதத்தாலும் யாதவர்களாலும் சூழப்பட்டதாக ஆகிவிடும் என்பது அவரது எண்ணம். சேதிநாட்டுக்கு நாம் இன்றே கிளம்பவேண்டும் என்றார். இன்று எப்படி கிளம்பமுடியும், நேற்றுதானே மதுபர்க்கம் முடிந்திருக்கிறது மூத்தவருக்கு என்றேன். சுவடியைத் தூக்கி வீசி அப்படியென்றால் உன் தமையனுக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு அன்னமூட்டல் முடிந்தபின் போவோம் என்று கூவினார்” என்றான்.

துரியோதனன் சிரித்து “ஆம், அதுவும்கூட நல்ல எண்ணம்தான்” என்றான். பின் மீசையை நீவியபடி உடலை எளிதாக்கி பீடத்தில் சாய்ந்தமர்ந்து “இளையோனே, இதுதான் உண்மை. நான் இனிமேல் சேதிநாட்டுப் பெண்களை மணமுடிக்க விரும்பவில்லை. இனி ஒரு பெண் என் வாழ்க்கையில் நுழைவதை எண்ணினாலே ஒவ்வாமை உருவாகிறது” என்றான். துச்சாதனன் “ஆனால் எப்படியும் தாங்கள் பல இளவரசிகளை மணம் கொண்டாகவேண்டும்… அஸ்தினபுரியின் ஒருமை…” என தொடங்க “எனக்கு நீங்கள் நூறுபேர் இருக்கிறீர்கள். உங்கள் அரசிகள் அனைவரும் அஸ்தினபுரியில் நிகர்தான். நூறுநாடுகளை கண்டடைவதுதான் கடினம்” என்றான் துரியோதனன்.

“இல்லை மூத்தவரே, அரியணையமர்பவரின் மனைவியர்…” என்று துச்சாதனன் மேலும் பேசப்போக துரியோதனன் கைகாட்டி “நாம் இனி அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான். துச்சாதனன் “எவர் மணமுடித்தாலும் சரி, சேதிநாட்டு இளவரசிகள் இங்கிருந்தாகவேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன். சேதிநாட்டை மையமாகக் கொண்டே இனிமேல் நம்முடைய அரசியல் இருக்கப்போகிறது” என்றான்.

துரியோதனன் “பார்ப்போம்” என்றான். கைகளை உரசிக்கொண்டபடி எழுந்து “நான் கர்ணனிடம் பேசி மகிழச் செய்து அழைத்துவருகிறேன். நான் செல்ல எத்தனை நேரமாகிறது என்பதை வேறு அவன் கணக்கில் வைத்துக்கொண்டிருப்பான்” என்றான். துச்சாதனன் சிரிப்பை அடக்கினான். “நீ வேண்டுமென்றால் சென்று பார். நாழிகைமணிக்குடுவைகளின் அருகில்தான் அமர்ந்திருப்பான். கையில் ஒரு சுவடி இருக்கும். அதை வாசிக்கமாட்டான்” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம் மூத்தவரே” என்றான்.

துரியோதனன் தன் சால்வையை அணிந்தபடி திரும்பி “கர்ணனிடமே கேட்டுவிடுவோம். முடிந்தால் இன்று அல்லது நாளை காலை சேதிநாட்டுக்கு செல்வோம்” என்றான். துச்சாதனன் தயங்கி “சேதிநாட்டு தமகோஷர் உதவியில்லாமல் நம்மால் மகளிரை கவர முடியாது. முன்பு அவர் ஒப்புக்கொண்டார் என்றால் அது அவர்கள் இந்நாட்டு அரசியர் ஆவார்கள் என்பதனால். இனிமேல்…” என்றான். “இளையோனே, அந்த இளவரசிகள் விரும்பாமல் அவர்களைக் கவர்வதை நான் ஒப்பவில்லை. அவர்கள் கோருவதென்ன என்று தூதனுப்பி கேட்போம். தமகோஷர் என்ன எண்ணுகிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அவ்விளவரசிகளின் எண்ணமே எனக்கு முதன்மையானது.”

“அவர்கள் அரியணை கோருவார்கள். அரசனின் மனைவியராக ஆள விழைவார்கள். வேறென்ன?” என்றான் துச்சாதனன். “அவ்வாறென்றால் அதை செய்வோம். மூத்தவளை நீ மணம்புரிந்துகொள். உனக்கு அஸ்தினபுரியின் பாதிநிலத்தை நான் தனிநாடாக அளிக்கிறேன். செங்கோலேந்தி அமர்ந்துகொள்” என்றான் துரியோதனன். “அசலையும் அவளும் உன் இருபக்கமும் அமர்ந்து நாடாளட்டும்.”

“என்ன பேசுகிறீர்கள்?” என்று துச்சாதனன் கூவினான். “பேசுவதற்கோர் அளவிருக்கிறது.” “இல்லை இளையோனே…” என துரியோதனன் தொடங்க “நிறுத்துங்கள் மூத்தவரே. நான் என்றும் உங்கள் காலடியில் கிடப்பவன். பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை” என்றான் துச்சாதனன். அவன் குரல் இடற கண்களில் நீர் கசிந்தது. ”சரி, விடு. நான் ஓர் எண்ணம் தோன்றியதை சொன்னேன்” என்ற துரியோதனன் பார்வையை விலக்கிக்கொண்டு “என்ன செய்யலாம் என்று கர்ணனிடம் கேட்கிறேன். என்னால் பெண்களை கவர்ந்து வருவதையே இழிவெனத்தான் எண்ணமுடிகிறது” என்றான்.

வெளியே வந்தபோது அதுவரை இருந்த நெஞ்சின் எடை குறைய பெருமூச்சு விட்டான். அரண்மனை முகப்புக்கு வந்து தேர்வலனிடம் “அங்கமாளிகை” என்றபின் தேரில் அமர்ந்துகொண்டான். அன்று காலைமுதலே தன் உள்ளம் நிறைந்து வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அப்போது யுதிஷ்டிரன் வந்து நாட்டை கேட்டால்கூட கொடுத்துவிடுவோம் என எண்ணியதும் புன்னகைத்துக்கொண்டான். விடியற்காலையில் விழிப்பு வந்ததும் முதலில் எழுந்த எண்ணம் அந்த பகுளம்தான். உள்ளம் மலர்ந்தது. இருள் நிறைந்த விழிகளுக்குள் அதை மீண்டும் பார்க்கமுடிந்தது. மெல்ல எழுந்து சென்று சாளரத்தருகே நின்று அதை பார்த்தான். அசையாமல் இருளுக்குள் அப்படியே அமர்ந்திருந்தது. அவன் அதைநோக்கிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

நெய்ச்சுடர் அணைந்திருந்தமையால் அறைக்குள் இருள் நிறைந்திருந்தது. ஆனால் மெல்லமெல்ல விழியொளி துலங்கி மஞ்சள்பட்டு சேக்கைமேல் படுத்திருந்த பானுமதியை பார்க்கமுடிந்தது. அவள் ஆடையின்றி கிடந்தாள். அவன் அவள் உடலை நோக்கிக்கொண்டிருந்தான். ஆடையின்றி ஒரு அயலவனிடம் தன்னை ஒப்படைக்கையில் பெண் உணரும் விடுதலை என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். உடலென உணர்ந்த நாள் முதல் எப்போதும் அவளுக்குள் ஆடை இருந்துகொண்டிருக்கிறது. ஆடைகுறித்த அச்சமே அவள் உடலசைவுகளை அமைக்கிறது. ஆடைசார்ந்த அசைவுகளே அவள் அழகை வெளிப்படுத்துகின்றன. ஆடையணிவதை அவள் தன்னை சமைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறாள். பெண்கள் காலம் மறந்து ஆடையை தேர்வுசெய்கிறார்கள். தெய்வத்தின் முன் என ஆடியில் தெரியும் ஆடையணிந்த தன்னுருவைக் கண்டு நிற்கிறார்கள். ஆனால் பெருங்காதலின் உச்சத்தில் துறப்பதற்கென்றே அணிந்தவர்கள் என அதை ஒரே கணத்தில் களைந்துவிடுகிறார்கள்.

முந்தைய நாள் அவன் அவளிடம் மேலாடையை நீக்கும்படி சொன்னான். அவள் “ம்” என தலையசைத்து மறுத்துவிட்டாள். இருமுறை சொன்னபின் அவன் அவள் மேலாடையை நீக்கினான். அவள் பெரிதாக எதிர்க்கவில்லை. கைபடப்போகும் இடம் சிலிர்க்கும் பசுவின் தோல் என அவள் உடலில் அவன் கண்பட்ட இடம் புல்லரித்தது. ஆடைகளை களையக்களைய அவள் அவற்றிலிருந்து மிக இயல்பாக வெளியேறினாள். விறகிலிருந்து நெருப்பென ஆடைகளிலிருந்து எழுந்து வந்தாள்.

அவளை அணைத்துக்கொண்டு காதுக்குள் “ஏன் ஆடைகளைவது பிடிக்கவில்லையா?” என்றான். “அவற்றை நீங்கள் உங்கள் கைகளால் களையவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றான். “அதை நீங்கள் செய்வதில்தான் பொருள் செறிந்த ஏதோ ஒன்று உள்ளது.” “என்ன?” என்றான். “ஏதோ ஒன்று… ஒருவேளை…” என்றாள். “என்ன ஒருவேளை?” பானுமதி சிரித்து “சிம்மத்தால் உண்ணப்படும் மான் அடையும் நிறைவாக இருக்கலாம் அது” என்றாள். அவன் சிரித்தான்.

துரியோதனன் அப்போது முதல் கதைப்போருக்கு அவன் சென்று நின்றபோது பலராமர் அவன் ஆடைகளைக் களைந்து தோளையும் இடையையும் தொடைகளையும் தொட்டுத்தொட்டு நோக்கியதை நினைவுகூர்ந்தான். அவர் அவனை ஒரு பொருளென நடத்தினார். அவரது கைகள் தயக்கமில்லாமல் அவனை தொட்டும் அழுத்தியும் பிசைந்தும் நோக்கின. அவனுடைய விதைகளை அவர் கைகளால் தொட்டு அளைந்தபின் “இளவயதில் விதைகளில் அடிபட்டவன் உச்சகட்ட கதைப்போர் செய்யமுடியாது” என்றார். “தொடைநரம்பு ஒன்று அதனுடன் தொடர்புடையது. உன் இடத்தொடை வலுவற்றிருப்பது போலிருந்தது நீ வருகையில். ஆனால் ஒன்றும் தெரியவில்லை.”

துரியோதனன் மூச்சடக்கி நின்றான். பலராமர் “இடத்தொடையில் என்றேனும் அடிபட்டதுண்டா?” என்றார். “இல்லை” என்றான் துரியோதனன். அவரது முதல் தொடுகை அவனை திகைக்கச்செய்தது. உடல்கூசி சிலிர்த்து அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து பின் மெல்ல தளர்ந்தான். அவர் பேசத்தொடங்கியபோது முழுமையாகவே தன்னை அவர்முன் வைத்துவிட்டதாகத் தோன்றியது. ஏதும் எஞ்சியில்லை. ஒரு துளிகூட. “நான் பலராமர் முன்னால் இப்படி ஆடை இழந்திருக்கிறேன்” என்றான். பானுமதி “ம்” என மூச்சோ குரலோ என தெரியாமல் சொன்னாள். “அது முதல் நான் அவருக்குரியவன் ஆனேன். அவர் என்னைக் கொல்வதும் நன்றே என நினைக்கத் தொடங்கினேன்.” பானுமதி “ம்” என்றாள்.

அவன் பகுளத்தை நோக்கிக்கொண்டு புன்னகைத்தான். பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். உடலாக அவர்களின் உள்ளம் அமைந்துள்ளது. உடலைக் கொண்டு உள்ளத்தை அவர்களால் கையாளமுடிகிறது. உடனே இன்னொரு எண்ணம் வந்தது. அவர்களின் உடலை கைப்பற்றுபவன் உள்ளத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும். உடலை அவமதித்தும் ஊடுருவியும் உள்ளத்தை சிதைக்கமுடியும். முதல்முறையாக அவன் சேதிநாட்டு இளவரசியரை தூக்கிவர எண்ணியமைக்காக நாணினான். அவர்களுக்கு அவனைப்பிடிக்கவில்லை என்றால் அதற்கிணையான இழிசெயல் வேறு என்ன? அவன் அரக்கர்கோன் ராவணனை நினைத்துக்கொண்டான். அரசர்களனைவருமே ராவணன்கள்தான் போலும்.

அவள் உடலை மீண்டும் நோக்கினான். சங்கு என்று தோன்றியது. அவள் இடையின் மெல்லிய தோல்வரிகளைத் தொட்டு “சங்கு” என்றான். அவள் சிரித்தாள். அப்போது விழிகள் மாறிவிட்டிருந்தன. மதம்கொண்ட விழிகள். மதம் கொண்ட சிரிப்பு. அவள் விழிகள் அவனுக்கு ஆணையிட்டன. அவன் செய்யப்போகும் ஒவ்வொன்றையும் அவள் உடலே முடிவெடுத்தது. ஒரு பெண் முழுமையாக ஆணை வென்று சூழ்ந்துகொள்கிறாள். உடலால். அவன் அர்ஜுனனை எண்ணிக்கொண்டான். பெண்கள் வழியாக சென்றுகொண்டே இருப்பவன் எப்போதாவது பெண்ணை அறிந்திருக்கிறானா?

விடிந்து வந்தது. விழிகள் ஒளிகொண்டபடியே செல்வதுபோல. ஒவ்வொரு இலையும் திரவப்பரப்பின் அடியிலிருது எழுந்து வருவதுபோல. திரையொன்றில் ஒவ்வொன்றாக தீட்டப்பட்டு தெளிவு கொள்வதுபோல. பகுளம் நன்றாகத் துலங்கியது. அதன் சங்குபோன்ற உடலுக்குள் இருந்து கழுத்து மெல்ல நீண்டு வெளியே வந்தது. முதுகை நீட்டி சிறியவாலை அடித்தது. கால்கள் கருமையாக நீண்டன. அமர்ந்தவாறே இருமுறை சிறகுகளை அடித்தபின் மெல்ல காற்றால் ஏந்தப்பட்டதுபோல வானில் எழுந்தது. அந்தக்கணம் அவன் உணர்ந்த ஒன்றை எப்போதுமே அறிந்ததில்லை. அந்தப்பறவையுடன் இணைந்து அவனும் வானில் ஏந்தப்பட்டதுபோல. எடையற்றவனாக ஆகிவிட்டதுபோல. வானில் கரைந்துவிட்டதுபோல. உடல் கூசி குளிர்ந்து நரம்புகள் எல்லாமே அதிர்ந்து கண்களில் நீர்பரவி ஓர் உலுக்கல். சிலகணங்கள் எங்கிருக்கிறான் என்றே அவன் அறியவில்லை.

திரும்பி அவளைப்பார்த்தான். மஞ்சம் நோக்கி சென்றபோது கால்கள் தளர்ந்திருந்தன. அவள் இடையைச்சுற்றி அணைத்தபோது அவளுடைய துயிலுக்குள் அவன் சென்றிருப்பானா என்ற ஐயம் எழுந்தது. அவள் திடுக்கிடவில்லை. துயிலிலேயே புன்னகைத்து அவனுடன் உடலை இணைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் அரசருக்கு இரவு மட்டும் போதுமா?” என்றாள். அவன் அவள் காதில் “இன்னும் நெடுநேரமிருக்கிறது” என்றான். காற்றில் மிதந்து செல்லும் பகுளத்தை கண்டுகொண்டிருந்தான் அப்போது.

கர்ணனின் இல்லத்தின்முன் தேர் நின்றது. துரியோதனன் இறங்கி சால்வையை போட்டபடி நிமிர்ந்தபோது முற்றக்காவலன் ஓடிவந்தான். அப்போதுதான் அங்கே நின்றிருந்த அரண்மனைப்பல்லக்கை கண்டான். ஏவலன் “காசியரசி” என்றான். அவன் வியப்புடன் உள்ளே சென்றபோது முதிய ஏவலர்தலைவன் வந்து வணங்கி “காசியரசியும் அங்கநாட்டரசரும் அரசரின் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வரவை அறிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் தலையசைத்தான். அவனால் புன்னகையை அடக்க முடியவில்லை.

ஏவலர்தலைவனுடன் அதிரதனும் கர்ணனும் வந்தனர். இருவருமே சற்றுமுன் நகைத்த விழியொளிகளுடனும் மலர்ந்த முகத்துடனும் தெரிந்தனர். அதிரதன் “நான் இப்போதுதான் சொல்லிக்கொண்டிருந்தேன் தங்களைப்பற்றி. எடைமிக்க புரவிகள் தங்கள் கால்களுக்கு நடுவே விடும் இடைவெளியை வைத்து அவற்றின் இயல்பை சொல்லிவிடமுடியும். பின்னங்கால்கள் நடுவே மேலும் இடைவெளி இருந்தால் அவை விரையமுடியாது” என்றார். கர்ணன் “வருக இளவரசே” என்றான். “நான் இங்குவந்தபோது காசியரசி பானுமதி இங்கே அன்னையிடம் அனைத்தையும் பேசி முடித்துவிட்டார்கள்.” துரியோதனன் “அவள் வந்தால் பேசி முடித்துவிடுவாள் என்பதில் என்ன ஐயம்?” என்றபடி உள்ளே சென்றான்.

பானுமதி அவனை நோக்கி சிரித்து “நான் இவர் வந்ததுமே சொன்னேன், பின்னாலேயே நீங்களும் வந்துவிடுவீர்கள் என்று” என்றாள். துரியோதனன் “எங்கள் உறவு அப்படிப்பட்டது. இவனை நான் வாரம் ஒருமுறை அமைதிப்படுத்தி திரும்ப கூட்டிச்செல்வேன். சினமடங்காத மலைத்தெய்வம் போன்றவன்” என்றபடி அமர்ந்துகொண்டான். ராதை “என்னைப்போலவே இவளும் இளைய யாதவனை வணங்குகிறாள் அரசே. அதைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தோம். மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். பானுமதி “அன்னையின் பெயரே ராதை என்றிருக்கிறது” என்றாள். ராதை முதியமுகத்தில் நாணத்துடன் “ஆம், அதை அனைவரும் கேலியாக சொல்வதுண்டு” என்றாள்.

“ஆனால் அன்னை இதுவரை யாதவரை நேரில் கண்டதில்லை” என்றாள் பானுமதி. “நேரில் ஏன் காணவேண்டும்? நான் வழிபடும் மாதவன் மிக மிக இளையவன். என் மடியில் இருக்கும் குழந்தை” என்றாள் ராதை. கர்ணன் கைகட்டி உயர்த்திய தலையுடன் நின்றபடி சிரித்துக்கொண்டு “இந்தச்சூதர்கள் கதைகள் வழியாக யாதவனை நூறு ஆயிரமாக பிரித்துப்பரப்பிவிட்டிருக்கிறார்கள்” என்றான்.

துரியோதனன் “நீ சினம் கொள்வது ஏன் என்று எனக்கு இன்று காலைதான் தெரிந்தது” என்றான். “நானாக இருந்தாலும் சினம்கொள்வேன்.” பானுமதி சிரித்து “உண்மையில் எனக்கு இருவர் மேலும் கடும் சினம் இருந்தது. இருவரையும் வெல்லமுடியாதென்பதனால் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டேன்” என்றாள். “என்ன ஒப்பந்தம்?” என்றான் துரியோதனன். “ஆளுக்குப்பாதி” என்றாள் பானுமதி. ”எப்பக்கம் பகிர்ந்தாலும் நீங்கள் நிகரானவர். ஆனாலும் நான் இடப்பாதியை தெரிவுசெய்தேன். அதுதானே முறை?”

அவளுடைய சிறிய பற்களை நோக்கிய துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “நேற்றுமுழுக்க இவளுடைய சிறிய பற்களின் சிரிப்பைத்தான் நோக்கினேன் கர்ணா. விந்தையானவை” என்றான். கர்ணன் ஏறிட்டு நோக்கிவிட்டு “ஆம், சிறுகுழந்தையாக நடிக்க அவை உதவுகின்றன இவளுக்கு” என்றான். ஒருகணம் கடந்து “ஆனால் இளவரசி” என்று தொடங்க “இவள் என்றே சொல். என்றும் இவள் உனக்கு அணுக்கமானவளாக இருக்கட்டும்” என்றான் துரியோதனன். “நேற்று உன்னைப்பற்றியும் எண்ணிக்கொண்டேன் கர்ணா. நான் உனக்கு அண்மையானவன் என்றாலும் ஒருபோதும் உன் உள்ளாழத்தின் புண்களை என்னால் தொடமுடியவில்லை. மூடிய அறைகளுக்குள் காற்று மட்டுமே செல்லமுடியுமோ என நினைத்துக்கொண்டேன். இவளைப்போன்ற இனிய தோழி ஒருத்தியே உன்னை அணுகமுடியும்.”

கர்ணன் நாணத்துடன் முகம் சிவந்து “அப்படியெல்லாம் இல்லை” என்றான். பானுமதி “நான் அவரிடம் புளிந்த இளவரசி பற்றி பேசிவிட்டேன். அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றாள். “நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? இவள் ஆணையிட்டாள், நான் ஏற்றுக்கொண்டேன்” என்றான் கர்ணன். “பெண்கள் ஆணையிட்டால் பொதுவாக நம்மால் மீறமுடியவில்லை” என்றான் துரியோதனன். ராதை “நானே இதை நினைத்தேன். இவனுக்குத் தேவையாக இருந்தது ஒரு தங்கை மட்டும்தானோ என்று….” என்று சொல்ல அதிரதன் “நான் சொல்லவா? பொதுவாக மிக உயரமான உடல்கொண்டவர்கள் பெண்களுக்கு முழுமையாக கட்டுப்படுவார்கள். கழுத்து நீண்டபுரவிகளும் பெண்களுக்கு முழுமையாகவே கட்டுப்படும். ஏனென்றால்…” என்றார்.

ராதை எழுந்து “அவர்கள் அரசமந்தணம் ஏதேனும் பேசக்கூடும். நாம் ஏன் இங்கிருக்கவேண்டும்?” என்றாள். “அதாவது பெரிய புரவிகள்…” என்று சொல்லத்தொடங்கிய அதிரதன் ராதையின் விழிகளை நோக்கியபின் “நான் விளக்கமாக ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அஸ்வினீயம் என்று பெயர். எழுபது சர்க்கங்களிலாக பன்னிரண்டாயிரம் பாடல்கள்” என்றார். “பன்னிரண்டாயிரமா? என்ன சொல்கிறீர்கள் தந்தையே? அவற்றை எப்படி குதிரைகளால் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்?” என்றாள் பானுமதி. “தவறாகப்புரிந்துகொண்டாய். இது குதிரைகளுக்கு அல்ல… குதிரைக்காரர்களுக்கு… நீ நாளைக்கு வா. உனக்கு நான் வாசித்துக்காட்டுகிறேன்.”

ராதை “வருகிறீர்களா இல்லையா?” என்றாள். “நான் யானைநூல்தான் கற்க விழைகிறேன்” என்றாள் பானுமதி. “யானைநூலா? சொல்லப்போனால் யானையும் ஒருவகை குதிரையே” என அதிரதன் சொல்லத் தொடங்க “போதும்” என்றாள் ராதை. “சரி” என அவர் அவளுடன் சென்றார். அவர்களுக்குப்பின் கதவு மூடியதும் கர்ணனும் பானுமதியும் சேர்ந்து சிரிக்க “சிரிக்க என்ன இருக்கிறது? நீ அவரை கேலிசெய்யலாகாது. குதிரைபற்றிய அவரது பல அறிதல்கள் நுட்பமானவை” என்றான் துரியோதனன். “அப்படியென்றால் நீங்கள் ஏன் நகைத்தீர்கள்?” துரியோதனன் “நானா? இருவர் சிரித்தால் நம் முகமும் அப்படி ஆகிவிடுகிறது” என்றான்.

முந்தைய கட்டுரைஇந்துஞான மரபில் ஜெயமோகன்
அடுத்த கட்டுரைஇரவு- செந்தில்குமார்