‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70

பகுதி 15 : யானை அடி – 1

துரியோதனன் தன் உள்கூடத்தில் சாய்ந்த பீதர்நாட்டுப்பீடத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டிருந்தான். அவனெதிரே சிறியபீடத்தில் வரைபடத்தை விரித்துப்போட்டு கர்ணன் கூர்ந்து நோக்க அருகே துச்சாதனன் நின்றிருந்தான். கர்ணன் “நெடுந்தூரம் இளவரசே” என்றான். “ஓரிரவில் கடக்கமுடியலாம். ஆனால் கடந்துவிடலாமென்று உறுதிகொண்டு ஒரு திட்டத்தைப்போடுவது பிழையாக முடியும்.” துச்சாதனன் “முடிந்தவரை நீரில் செல்வோம். நீரில் விரைந்துசெல்லும் பீதர்நாட்டுப் பாய்களை அமைப்போம்” என்றான்.

“ஆம், ஆனால் அதை முழுமையாக நம்பக்கூடாது என்கிறேன். காற்றும் ஒழுக்கும் நம் கையில் இல்லை.” துச்சாதனன் “பகலில் நாம் தங்கவேண்டுமென்றால் அதற்குரிய இடம் தேவை. நமது நட்புநாடுகள் என இப்பகுதியில் இருப்பது ஒன்றே. ஆனால் நாம் படை கொண்டுசெல்கிறோம். படை தமது மண்ணில் தங்க அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றான். “அதற்கொரு வழி இருக்கும்… பார்போம்” என்ற கர்ணன் நிமிர்ந்து “இளவரசே, தாங்கள் இச்சொற்களை செவிகொள்ளவில்லை” என்றான். துரியோதனன் “கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான். “இல்லை. நீங்கள் கேட்கவில்லை. உங்கள் உள்ளம் இங்கில்லை.”

துரியோதனன் எழுந்து கைகளை விரித்து உடலை நெளித்து “காலையில் இருந்தே மணநிகழ்வுகள், குலச்சடங்குகள், அரசமுறைமைகள்… சலித்துவிட்டேன் கர்ணா” என்றான். கர்ணன் புன்னகைத்து “அரசநிலை என்பதே ஒரு மனிதனை இறைவடிவமாக ஆக்குவதுதானே? தெய்வங்கள் சடங்குகளால்தான் மண்ணில் வாழ்கின்றன” என்றான். துரியோதனன் எழுந்து சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்று “அவனும் இன்று அவளை மணந்துவிட்டான் என்றான் ஒற்றன்” என்றான். இருவரும் ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

“நேராக பாஞ்சாலத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே திரௌபதியே அரண்மனை முகப்புக்கு வந்து எட்டுமங்கலம் காட்டி அவர்களை வரவேற்றிருக்கிறாள். இசைச்சூதரும் வைதிகர்களும் அரண்மனைப்பெண்களும் உடனிருந்திருக்கிறார்கள். அவர்களை திரௌபதியின் அன்னையிடம் அழைத்துச்செல்ல அவர் பலந்தரையின் கை பற்றி இல்லம் புகச்செய்திருக்கிறார். அரண்மனையில் பெருவிருந்துக்கு ஒருங்குசெய்யப்பட்டிருக்கிறது. மூன்றுநாட்கள் நகரில் விழவும் களியாட்டும் நிகழுமென அறிவித்திருக்கிறார்கள். அரண்மனைப்பெருமுற்றத்தில் பந்தலிட்டு சூதர்களின் பாடல்நிகழ்வுகளுக்கும் நாடகங்களுக்கும் ஒருங்குசெய்திருக்கிறார்கள்.”

கர்ணன் மெல்லிய குரலில் “இயல்புதானே?” என்றான். துரியோதனன் சினத்துடன் திரும்பி “என்ன இயல்பு? சொல்! எதை இயல்பு என்கிறாய்?” என்றான். கர்ணன் ”இங்கும் அவையெல்லாம் நிகழ்ந்தன. நாமும் மூன்றுநாள் குடிவிழவுக்கு ஆணைபிறப்பித்திருக்கிறோம்… உண்டாட்டும் களியாட்டுமாக அஸ்தினபுரம் மயங்கியிருக்கிறது” என்றான். துரியோதனன் பற்களைக் கடித்தபோது அவன் தாடை அழுந்தியது. ”பானுமதி அஸ்தினபுரியின் பட்டத்தரசி. அவள் தங்கை அப்படியல்ல. அவள் பட்டத்து இளவரசனின் இளையோனின் இரண்டாவது மனைவி. பட்டும் பொன்னும் அணியும் அரண்மனைச்சேடி. அவ்வளவுதான்.” கர்ணன் “ஆனால் அவர் காசிநாட்டுக்கு இளவரசி. காசிமன்னருக்கு பாஞ்சாலம் ஓலையனுப்பி மகளை கவர்ந்தமையை முறைப்படி அறிவித்திருக்கிறது என்கிறார்கள். அக்கொண்டாட்டங்கள் காசியிளவரசி இந்திரப்பிரஸ்தத்தில் அரசிக்கு நிகராகவே கருதப்படுவாள் என்பதைக் காட்டுவதற்காக என்றே நான் எண்ணுகிறேன்” என்றான்.

துரியோதனன் உரக்க “இல்லை இல்லை“ என்று கூவினான். அவன் கழுத்துநரம்புகள் புடைத்தன. முகம் சிவந்து மூச்சிரைத்தது. “அவன் உள்ளம் எனக்குத்தெரியும். மிகமிக அண்மையில் என அவனை நான் காண்கிறேன். இது அவன் எனக்களிக்கும் செய்தி.” கர்ணன் “நாம் இதை மிகைப்படுத்தவேண்டாமென்றே நினைக்கிறேன்” என்றான். “நான் மிகைப்படுத்தவில்லை. கர்ணா, தேவிகை பட்டத்து இளவரசன் யுதிஷ்டிரனின் துணைவி. அவளுடைய மணநிகழ்வு இத்தனை பெரிதாக கொண்டாடப்பட்டதா என்ன?” கர்ணன் “கொண்டாடினர்” என்றான். ”இல்லை அது ஒருநாள் நிகழ்வு. அது எந்த அரசமணத்திற்கும் உரியது. மூன்றுநாள் மணம் என்பது அப்படி அல்ல. அது பட்டத்தரசனுக்கும் அரசிக்கும் உரிய முறைமை… இது அவன் எனக்களிக்கும் அறைகூவல். எங்கோ அவன் அமர்ந்துகொண்டு என்னை நோக்கி நகைக்கிறான் இந்நேரம்…”

துச்சாதனன் கர்ணனை நோக்கி பேசாமலிருக்கும்படி கண்காட்டியதை துரியோதனன் கண்டான். சற்று தணிந்து “நான் மிகைப்படுத்தலாம். ஆனால் என்னால் அவ்வாறு எண்ணாமலிருக்கமுடியவில்லை. கர்ணா, இன்று காலை மணநிகழ்வுகள் தொடங்கிய கணம் முதல் நான் எண்ணிக்கொண்டிருப்பது இதைமட்டுமே” என்றான். துரியோதனன் தோள் தளர எடைமிக்க காலடிகளுடன் நடந்து மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்தான். “என் வாழ்நாளில் இனிய தருணங்களில் ஒன்று. நான் உவகையும் பதற்றமுமாக காத்திருந்த நாள். நேற்றிரவு முழுக்க நான் அவனை எண்ணியபடி துயிலாமலிருந்தேன். அமரவோ படுக்கவோ முடியாமல் அரண்மனை அறைகளுக்குள் நடந்துகொண்டிருந்தேன். புலரி எழுந்தபோது ஏதோ கசப்புதான் எனக்குள் குமட்டி எழுந்தது. புரவிஏறி காட்டுக்குள் சென்று மறைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.”

“அணிகொண்டபோது ஒருமுறைகூட நான் என்னை ஆடியில் பார்த்துக்கொள்ளவில்லை. அவளருகே மணமேடையில் அமர்ந்தபோது ஒருமுறைகூட அவளை திரும்பிப்பார்க்கவில்லை. அவள் கழுத்தில் மங்கலநாணிட்டு மலர்மாலை மாற்றியபோதுகூட அவளைப்பற்றி எண்ணவில்லை.” அவன் எரிச்சலுடன் கையை வீசினான். “இந்தநாளில் நான் அடைந்த துன்பத்தை சமீபத்திலெங்கும் அறிந்ததில்லை. என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. தசைகள் அனைத்தும் நொய்மையாகிவிட்டிருந்தன. ஒவ்வொரு ஓசையும் என்னை எரிச்சல்கொள்ளச்செய்தது. மங்கல முழவு என் தலையிலேயே அடிப்பது போல் உணர்ந்தேன்… வேதநாதம் புகை தெய்வங்கள் மூத்தார் குடிகள் அன்னையர் பெண்கள்… கர்ணா, ஏதோ ஒரு தெய்வத்தால் நான் கட்டுப்படுத்தப்பட்டிருந்தேன். இல்லையேல் வாளை உருவி அத்தனை பேரையும் சீவி எறிந்திருப்பேன்…”

அவன் கண்களை மூடிக்கொண்டு தலையை பின்னால்சாய்த்து அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் ஓசையின்மை அவர்களை சூழ்ந்தது. துரியோதனன் எழுந்து உரக்க “மூடா! என்ன செய்கிறான் அந்தச்சூதன். விசிறியிழுக்கத்தெரியாது என்றால் அவன் தலையை கொய்யச் சொல்” என்றான். துச்சாதனன் வெளியே ஓடினான். தொங்குவிசிறி முன்னும்பின்னும் விரைந்தாடத் தொடங்கியது. தோலால் ஆன வரைபடம் பீடத்திலிருந்து எழுந்து தரையில் விழுந்தது. கர்ணன் அதை எடுத்து சுருட்டினான். துரியோதனன் கண்களை மூடியபடி “எவ்வளவு ஓசைகள்… ஏன் நாம் ஒவ்வொரு சடங்குக்கும் இத்தனை ஓசையிடுகிறோம்? இங்கே இப்படி இருக்கிறோம் என விண்வாழும் தெய்வங்களுக்கு கூவிச்சொல்கிறோமா? தவளை ஓசையிட்டு நாகத்தை அழைப்பதுபோல?” என்றான்.

கால்களை தரையில் தட்டிக்கொண்டான். எழுந்து சிவந்த விழிகளுடன் கோணலாகச் சிரித்து “இந்தப் பெண்ணை அடைந்ததுதான் வாழ்க்கையில் நான் இதுவரை அடைந்த பெரிய வெற்றி அல்லவா? அதிலும் பாதிவெற்றி” என்றான். கர்ணன் “நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள விழைகிறீர்கள்” என்றான். “என்ன?” என்றான் துரியோதனன். “ஏனென்றால் நீங்கள் ஆணவம் மிக்கவர். ஆணவம் மிக்கவர்களின் வழி தங்களைத்தாங்களே துன்புறுத்திக்கொள்வது” என்றான் கர்ணன். “அது அவர்களுக்கு ஒருவகை இன்பம்.” துரியோதனன் மீண்டும் கோணலாக நகைத்து “நீயும் அப்படி செய்வதுண்டு அல்லவா?” என்றான். “ஆம், ஒவ்வொருநாளும். நான் அடையும் உச்சகட்ட உணர்ச்சி என்பது தன்வருத்தமே” என்று சொன்ன கர்ணன் சிரித்தபடி “ஆகவே தெய்வங்களும் என்னுடன் ஒத்துழைத்து மேலும் துயர்களை அளிக்கின்றன” என்றான்.

துரியோதனன் அந்த நகைச்சொல்லை உளம்கொள்ளாமல் நிலையில்லாமையுடன் பார்வையைச் சுழற்றி பின் உரக்க “ஏன் இப்படி விசிறியை இழுக்கிறான்? அந்த மூடனிடம் மெல்ல இழுக்கச் சொல்!” என்றான். துச்சாதனன் வெளியே ஓட கர்ணன் “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் இளவரசே” என்றான். துரியோதனன் நிமிர்ந்து நோக்கி “ஆம், நான் சற்று மதுவருந்தி துயிலவே விழைகிறேன்” என்றான். “இன்றிரவு உங்கள் மதுபர்க்கச் சடங்கு உள்ளது…” என்று தயங்கியபடி கர்ணன் சொன்னான். அவன் விழிகளை நோக்கிய துரியோதனன் அவன் தனது சினத்தையும் எரிச்சலையும் எவ்வகையிலேனும் விரும்புகிறானோ என்ற எண்ணத்தை அடைந்தான். “மதுபர்க்கம், ஆம்” என்றான். “அதை நீங்கள் தவிர்க்கமுடியாது” என்றான் கர்ணன். துரியோதனன் எழுந்துகொண்டு “நான் ஓய்வெடுக்கவேண்டும்” என்று வெளியே சென்றான். தன்னை கர்ணன் பின்னால் நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

படுக்கையறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்ததும் ஏவலன் வந்து நின்றான். “மது” என்றான். அவன் விழிகளில் ஒரு சிறிய அசைவாக வியப்பு தோன்றி மறைந்தது. ”ம்” என்றதும் தலைவணங்கி வெளியே சென்று அவனுக்குப்பிடித்தமான யவனமதுவை கொண்டுவந்து வைத்தான். ஒருகணம் அது செங்குருதி என்ற திடுக்கிடலை அடைந்தபின் துரியோதனன் புன்னகைத்தான். யவனர் அதை சிறுத்தைத்தோலணிந்தவனின் குருதி என்று சொல்வதுண்டு. அவர்களின் மதுவுக்குரிய தெய்வம் சிறுத்தைத்தோலணிந்து கையில் திராட்சைக்குலையுடன் நின்றிருக்கும்.

சோனகர்நாடுகளிலும் உயர்தரமான திராட்சை விளைவதுண்டு. ஆனால் யவனமதுவில் நிறைந்திருக்கும் கனவுகளை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறுத்தைத்தோலணிந்தவனின் உடலில் ஓடுவது விண்ணுலகின் தூயநஞ்சு. அவனுடைய ஒருதுளிக்குருதி ஒருமுறை திராட்சைப்பழச்சாறில் விழுந்து அது மதுவாகியது. அந்த முதல் நச்சுமதுக்கிண்ணத்தில் எஞ்சியதுளியை அடுத்த மதுக்குடத்தை உறையிடும்போது கலந்தனர். தலைமுறை தலைமுறையாக அந்த நஞ்சு அவர்களின் மதுவில் வாழ்கிறது. மும்முறை கிண்ணத்தை நிறைத்தபின் துரியோதனன் விழிகளை மூடிக்கொண்டான். கண்களுக்குள் செம்மஞ்சள்நிற சிறுத்தைத்தோல் அசைந்ததை கண்டுகொண்டிருந்தான். சென்னியின் இருபக்கமும் மண்புழு போல நரம்புகள் தெறித்தன. பின் எழுந்து மஞ்சத்தில் கால்நீட்டி படுத்தான்.

என்னுள் நஞ்சு ஓடுக என எண்ணிக்கொண்டான். ஏன் சிறுத்தை? பதுங்கி விழியொளிர அமர்ந்திருப்பதனால். மெல்ல மெல்ல அணுகிவருவதனால். இல்லை, செந்நிறமான நாக்கால். நாக்கெனும் தழலால். தழல் குளிர்ந்த தழல். என்னை நக்கியுண்ணும் தழலில் நான்… வியர்வையில் உடல் நனைய அவன் விழித்துக்கொண்டபோது அறைக்குள் துச்சாதனன் நின்றிருந்தான். “மூத்தவரே, மதுபர்க்கச் சடங்குக்கு உங்களை சித்தமாக சொன்னார்கள்.” துரியோதனன் நாக்குழற “அது நாளைக்கு…” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன். “போடா” என்று கூவியபடி துரியோதனன் எழுந்து அமர்ந்தான். துச்சாதனன் பணிந்த உடலுடன் அப்படியே நின்றான். துரியோதனன் அவனை நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் “சரி… ஏவலரை வரச்சொல்” என்று விழிகளை விலக்கிக் கொண்டான்.

ஏவலர் இருவர் உள்ளே வந்தனர். அவனை நீராட்டறைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவன் “நீராட்டுக்கு சமையர் கிருபையும் மாணவிகளும் வந்துள்ளனர்” என்றான். துரியோதனன் “ம்” என்றான். நீராட்டறை வாயிலில் இருபாலினத்தவராகிய கிருபை வந்து வணங்கி அவனை வரவேற்றார். “இவர்கள் எதற்கு?” என்றான் துரியோதனன் சினத்துடன். “இளவரசே, இதுவும் மங்கலமுறைமைகளில் ஒன்றே” என்றார் கிருபை. “இவர்கள் என் மாணவிகளான துருவையும் சம்பையும். தங்கள் அருள் அவர்களுக்கும் தேவை.” துரியோதனன் “எந்த ஊரை சேர்ந்தவர்கள் நீங்கள்?” என்றான். “கலிங்கத்தைச்சேர்ந்தவர்கள். சமையக்கலையை நாங்கள் காமரூபத்தில் சென்று பயின்றோம்.” துரியோதனன் “ஏன் அங்கு?” என்றான். “எங்காவது வெளியே சென்று படித்தால்தானே மதிப்பு?”

துரியோதனன் புன்னகைத்து அவர் தோளை தொட்டான். “நான் நிலையழிந்திருக்கிறேன் சமையரே. அதை உம்மிடம் சொல்லவும் முடியாது” என்றான். “அதற்காகவே சமையம். நம் உடலிடம் நாம் சொல்கிறோம், நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று. அது நம் உள்ளத்திடம் சொல்லும்” என்ற கிருபை “வருக” என உள்ளே அழைத்துச்சென்றார். நீராட்டறையின் முத்துச்சிப்பி வடிவ பெரிய வெய்யநீர் தொட்டியில் ஆடைகளில்லாமல் அவனை அமரச்செய்தார். “அசையாது நின்றிருக்கும் துலாக்கோலின் முள் போன்றிருக்கிறது உங்கள் மூக்குநுனி இளவரசே” என்றார். “இன்றுவரை இருபக்கமும் முழுமையாக சமன்செய்யப்பட்ட ஓர் உடலை நான் பார்த்ததில்லை.” சம்பை “பாஞ்சால இளவரசி இத்தகையவள் என்றனர்” என்றாள்.

துரியோதனன் உடலில் ஒரு துடிப்பு ஓடியது. அதை கைகளாலேயே அறிந்த கிருபை “ஆம். ஆனால் நேர்நிலை ஆண்மைக்கும் வளைதல் பெண்மைக்கும் அழகு” என்று சொல்லி அதே ஒழுக்கில் பேச்சை முன்கொண்டுசென்றார். “காசிநாட்டு இளவரசியை சற்றுமுன்னர்தான் கண்டோம். அணிகளில் அழகியதை அணிந்திருக்கிறார்கள். அக்கண்களில் உள்ள கருணை என்றும் உங்களை மகிழ்விப்பது இளவரசே” என்றார். “கருணையைக் கண்டு காதல்கொள்ளமுடியுமா என்ன?” என்றான் துரியோதனன் புன்னகையுடன். அந்தப்பேச்சு கிருபை எண்ணியதைப்போலவே அவனை எளிதாக்கியது.

கிருபை “பிழையாக நினைக்கிறீர்கள் இளவரசே. இளமையில் சிலநாட்கள் மட்டுமே பெண்ணின் உடலழகும் சொல்லழகும் ஆணை கவர்கிறது. பின்னர் வாழ்நாளெல்லாம் அவனை காமம் கொள்ளச்செய்வது அவள் கண்களில் உள்ள கருணைதான்” என்றார். துரியோதனன் நிமிர்ந்து அவரை நோக்கினான். அவர் மெல்லிய கடற்பஞ்சால் அவன் உடலை தேய்த்தபடி “ஆம், என்னை நீங்கள் நம்பலாம். உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் அவர் விழிகளைக் கண்டு மட்டுமே காமம் கொள்ளப்போகிறீர்கள். மைந்தருக்கு அன்னையாகி அவர் உடல் தளர்ந்தபின் மேலும் காமம் கொள்வீர்கள். ஒருபோதும் அவரது விழிகளிடமிருந்து விடுபட மாட்டீர்கள்” என்றார்.

துரியோதனன் உரக்க நகைத்து “நான் எங்கும் கட்டுப்படுவேன் என நினைக்கவில்லை கிருபையரே” என்றான். “கட்டுப்படுவீர்கள் இளவரசே. நீங்கள் என்றும் கட்டுப்பட்டுத்தான் இருந்திருக்கிறீர்கள்…” துரியோதனன் நிமிர்ந்து நோக்கி மீசையை வருடினான். “முதலில் உங்கள் தந்தைக்கும் பின்னர் ஆசிரியருக்கும். அதை மானுடனின் கடமை எனலாம். நிகராகவே நீங்கள் இளையோன் துச்சாதனருக்கு கட்டுப்பட்டவர்.” துரியோதனன் “நானா?” என்றான். “சொல்லுங்கள், இதுநாள்வரை எத்தனைமுறை அவரிடம் சினந்திருக்கிறீர்கள்?” துரியோதனன் தலைதாழ்த்தி “ஆம், அவனிடம் என்னால் சினம் கொள்ளமுடியாது. அவன் முகம் எனக்குள் கனிவை சுரக்கச்செய்கிறது. ஆகவே அவன் விழிகளையே நான் பார்ப்பதில்லை” என்றான்.

பெண்களைப்போல மணியொலியுடன் நகைத்து கிருபை சொன்னார் “அவர் சொன்ன எதையும் தட்டியதில்லை நீங்கள். அதைப்போல அங்கர். அவர் உங்களை ஆள்கிறார்.” துரியோதனன் “ஆளட்டும், அதனால் நான் வாழ்வேன்” என்றான். “இது இன்னொரு கட்டு. இளவரசே, காட்டிற்கு பேரரசன் யானை. அது குடிசூழ வாழும் பெருவாழ்க்கை கொண்டது.” துரியோதனன் “நற்சொற்கள் கிருபையரே. என் உளநிலையை மாற்ற உம்மால் முடிந்தது” என்றான். அவன் உடலை துணியால் துடைத்து தாழம்பூ மலர்ப்பொடி கலந்த வெண்நறுஞ்சுண்ணமும் சந்தனப்பொடியும் பூசினர். மீசையில் புனுகு பூசி அணில்வால் தூரிகையால் நீவினர். தலைமுடிக்கு குங்கிலியப்புகையிட்டு உலரச்செய்து சீவி பின்னால் கோதி வைத்தனர்.

துரியோதனன் ”நான் என் உடலுக்குள் இருந்து ஒரு அடியை வெளியே எடுத்துவைத்துவிட்டதாக உணர்கிறேன்” என்றான். “அப்படியே நடந்து வெளியேறிவிடுங்கள் இளவரசே… நெடுந்தூரம் செல்லமுடியும்” என்றார் கிருபை. “நெடுதொலைவிருக்கிறது செல்ல, அறிய, தொலைந்துபோக.” துரியோதனன் “சொல்வலர் சொல் கேட்கலாகாது என்பார் என் தந்தை… அவர்கள் நம் சிந்தையை சொற்களால் நிறைத்துவிடுவார்கள்” என்று சிரித்தபின் “நன்று கிருபையரே… உங்களுக்கு நன்றி” என்றான். “நலம் திகழ்க!” என்றார் கிருபை.

ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோது அவனை அழைத்துச்செல்ல அரண்மனை ஏவலன் வந்திருந்தான். “இளையவன் சித்தமாகிவிட்டான் அல்லவா?” என்றான் துரியோதனன். “இல்லை” என்றான் ஏவலன். “ஏன்? கர்ணன் எங்கே?” அவன் வணங்கி “இளவரசே, இது மதுபர்க்க நிகழ்வு. நீங்கள் மகளிரறை புகுதல். அவர்கள் கலந்துகொள்ளலாகாது” என்றான். துரியோதனன் “ஏன்?” என்றான். ஏவலன் பேசாமல் நின்றான். துரியோதனன் அவனை நோக்கி எரிச்சலுடன் ஏதோ சொல்ல வந்து அவனைக் கடந்து முன்னால் நடந்தான். அவன் பின்னால் வந்தான். அருகே நெருங்கி மெல்லிய குரலில் “மெல்ல செல்லுங்கள் இளவரசே” என்றான். துரியோதனன் விரைவைக் குறைத்து தலையை விரைப்பாக்கிக்கொண்டான்.

மகளிர்மாளிகை வாயிலில் மங்கல இசைக்கருவிகளுடன் விறலியர் நின்றனர். அவனைத் தொடர்ந்துவந்த ஏவலன் கைகாட்டியதும் அவர்கள் இசைக்கத்தொடங்கினர். யாழ், குழல், மணி ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே கொண்ட மென்மங்கல இசை. தாலத்தில் விளக்கு, பொன், பழம், மலர், மஞ்சள் எனும் ஐந்து மங்கலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் முன்னால் வந்து அவனை வரவேற்றனர். அவர்களுக்குப்பின்னால் வந்த துச்சளை சிரித்தபடி “வருக இளவரசே, உங்கள் வருகையால் நலமும் மங்கலமும் நிறைக!” என்று சொல்லி தன் கையிலிருந்த பொற்தாலத்தில் இருந்து செங்குழம்பைத் தொட்டு அவன் நெற்றியில் இட்டாள். குனிந்து அதை பெற்றுக்கொண்ட துரியோதனன் “நீ ஏன் இதை செய்கிறாய்?”என்றான்.

சிரித்தபடி “மதுபர்க்கம் என்பது மணப்பெண்ணின் பெற்றோர் செய்வது. கவர்ந்து வரப்பட்ட பெண்ணுக்கு இங்கு நாங்கள்தான் எல்லாம்” என்றாள் துச்சளை. அவன் புன்னகைத்து “அவள் பெற்றோரையும் கவர்ந்துவர ஆணையிடுகிறேன்…” என்றான். “அவர்களே ஓரிருநாட்களில் வந்துவிடுவார்கள். விதுரர் நேற்றே விரிவான திருமுகம் அனுப்பிவிட்டார். அஸ்தினபுரியின் அரசி என்பது எளிய வெற்றியா என்ன? காசியில் கொண்டாட்ட மனநிலை நிலவுவதாக சொன்னார்கள்” என்றாள் துச்சளை. “இன்று படையெடுப்புகளைப்பற்றி பேசவேண்டாம். இன்று நீங்கள் வெல்லவேண்டியது ஒரு பெண்ணின் உள்ளத்தை மட்டுமே.”

உள்ளே பெருங்கூடத்தில் அணிகளும் ஆடைகளும் மின்ன பெண்கள் நிறைந்திருந்தனர். யார் யாரென்று துரியோதனனால் முதல் நோக்கில் அடையாளம் காணமுடியவில்லை. பெண்களை அப்படி ஒரு தொகை மட்டுமாக அதற்கு முன் பார்த்ததில்லை என எண்ணிக்கொண்டான். பெண்களில் ஒருத்தி வந்து “உள்ளே வா” என்று சொன்னபோதுதான் அது அவன் இளைய அன்னை தசார்ணை என்று தெரிந்தது. அவன் புன்னகைசெய்தான். அவள் அவன் கைகளைப்பற்றி அழைத்துச்சென்று உள்ளே மஞ்சள் பட்டு போர்த்தப்பட்டிருந்த பீடத்தில் அமரச்செய்தாள். “இது என்ன சடங்கு அன்னையே?” என்றான்.

“இதுவா? இதை மதுபர்க்கம் என்பார்கள். உன்னை மணமகள் வீட்டார் இனிப்பு அளித்து வரவேற்கிறார்கள். இனிமையான பெண்ணை உன்னிடம் ஒப்படைக்கிறார்கள்” என்றாள் தசார்ணை. பதின்மரில் இறுதியானவள் என்பதனால் எப்போதுமே அவளிடம் ஒரு குழந்தைத்தன்மை உண்டு. துரியோதனன் அவளிடம் மட்டுமே கேலியும் கிண்டலுமாக பேசுவது வழக்கம். “இனிமையானது என நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?” என்றான் சிரித்தபடி. “அப்படித்தான் எண்ணுகிறேன். இல்லை என்றால் எனக்கு நீயே நாளை சொல்” என்றாள்.

அருகே நின்றபெண்கள் கூட்டமாக சிரிக்க துரியோதனன் நாணி தலையை தாழ்த்திக்கொண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் அவன் அதுவரை பார்த்திராத விடுதலையுணர்வுடன் இருப்பதை கண்டான். சொற்களிலும் உடல்மொழிகளிலும் நாணத்தை இழந்துவிட்டவர்கள்போல. சிவந்தமுகமும் மிதக்கும் விழிகளும் மெல்லிய வியர்வையும் துள்ளல் குடிகொண்ட உடலுமாக அனைவருமே காமம் கொண்டவர்களென தோன்றினர். ஒருவருக்கொருவர் மெல்லியகுரலில் பேசி கூட்டமாக உரக்கச்சிரித்து ஒருவரை ஒருவர் அடித்தனர். பிடித்து தள்ளிக்கொண்டனர்.

சத்யசேனை உள்ளிருந்து ஒரு பெரியதாலத்துடன் வந்தாள். அவளுடன் விதுரரின் மனைவி சுருதையும் மலர்த்தாலத்துடன் வந்தாள். சத்யசேனையை விழிகளால் சுட்டிக்காட்டி ஒருத்தி ஏதோ சொல்ல கூட்டமாக சிரிப்பு எழுந்தது. சுதேஷ்ணை “என்னடி சிரிப்பு? மங்கலநிகழ்வுக்கு வந்தால் சிரிப்பதா? தள்ளிச்செல்லுங்கள்” என்று அதட்டினாள். வாயைப்பொத்தி கண்கள் ஒளிர ஒருத்தி “ஆணை அரசி” என்றாள். உடனே மீண்டும் சிரிப்பு. அணிப்பரத்தையரும் அரண்மனை மகளிரும் பிரித்தறியமுடியாதபடி கலந்துவிட்டிருந்தனர். அவர்களை எப்போதும் வேறுபடுத்தும் வெவ்வேறு உடல்மொழிகள் மறைந்துவிட்டிருந்தன.

தேஸ்ரவை அவன் அருகே வந்து “உன்னை அணிக்கோலத்தில் இன்றுதான் பார்க்கிறேன் மைந்தா. அழகாக இருக்கிறாய்” என்றாள். பின்னிருந்து ஒருத்தி “இருபக்கமும் நிகரானவர் அல்லவா?” என்றாள். அவனுக்குக் கேட்காமல் எவரோ ஏதோ சொல்ல அத்தனைபெண்களுக்கும் அது கேட்டு கூட்டச்சிரிப்பு அலையாக பரவியது. துரியோதனன் எழுந்து ஓடிவிடவேண்டுமென எண்ணினான். “சற்று வெறுமனே இருங்களடி… பித்தெடுத்த பெண்கள்” என்று தேஸ்ரவை திரும்பி கூவியபோது அவள் விழிகளிலும் சிரிப்பு இருந்தது. ஒரு சேடி “அரசி, வேழத்தின் வல்லமையை எதைவைத்து மதிப்பிடுவது?” என்றாள். தேஸ்ரவை “வந்தால் ஒரே அடியில் தலைகளை பிளந்துவிடுவேன்” என்றாள்.

பெண்கள் சிரித்துக்கொண்டே இருக்க “துதிக்கை என்று இவள் சொல்கிறாள்” என்றாள் அந்தப்பெண். அவர்களின் நகைப்பொலி பெருகி அவனை சூழ்ந்தது. ”போதும், செல்லுங்கள்” என்று சத்யவிரதை அவர்களை அதட்டியபடி உள்ளறையிலிருந்து வந்தாள். நிகுதியும் சம்ஹிதையும் சுஸ்ரவையும் அவளுடன் வந்தனர். ” இறுதியாக ஒரே இரு வினா. பிடியானைக்கு எப்போது மதம்சுரக்கும்?” என்றாள் ஒருத்தி. சத்யவிரதை சினத்துடன் கையை ஓங்கி “இங்கே எவரும் நிற்கக்கூடாது. செல்லுங்கள். குரவையிட ஆள்வேண்டும் என்று கூட்டிவந்தால்…” என்று சீற பெண்கள் சிரித்து குழைந்தனர். விழிகள் மின்னி மின்னி அவனை சூழ்ந்திருந்தன. உடல்கள் காற்றிலாடும் நாணல்களென குழைந்தன. இப்பெண்கள் எவரையும் முன்னர் பார்த்ததே இல்லை என அவன் எண்ணிக்கொண்டான். அணங்கு உடற்கூடியவர்கள். இதோ நின்று நெளிவது விண்ணிலிருந்து பெண்மேல் இறங்கும் பித்து.

சுபை உள்ளிருந்து ஓடிவந்து “அக்கா, மூத்தவர் மைந்தனை பார்க்கவேண்டும் என்கிறார்” என்றாள். யாரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்ல பெருஞ்சிரிப்பு எழுந்தது. “பார்த்தபின் மதுபர்க்கம் செய்யலாமா?” என்றாள் சத்யவிரதை. “எப்போதுவேண்டுமானாலும் செய்யலாம். இனிப்புதானே?” என்றாள் ஒருத்தி. அந்த எளிய வரிக்கே ஏன் அத்தனை சிரிப்பு என்று துரியோதனனுக்கு புரியவில்லை. சத்யவிரதை அவன் கையைப்பற்றி “நாம் அன்னையரசியைப் பார்த்து வாழ்த்து பெற்று வருவோம்” என்றாள். அவன் எழுந்து அவளுடன் நடக்க “பார்த்து, வாயில் இடிக்கும்” என்றாள் பின்னால் ஒருத்தி. சிரிப்பொலிகள் நடுவே “வாயில் இடிந்தால் பெரிதாக்கிவிடலாமடீ” என்ற குரல் எழுந்தது.

அறைக்குள் காந்தாரி மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். அவன் காலடியை முன்னரே கேட்டிருந்தமையால் அவள் கிளர்ச்சிகொண்டு நன்றாக சிவந்திருந்தாள். வெண்ணிறமான தடித்த பெருங்கைகள் கூட சிவப்போடியிருந்தன. அவனை நோக்கி கைகளை நீட்டியபடி “வருக துரியா…” என்றாள். அவன் அருகே சென்று அவள் கால்களைத் தொட்டு வணங்க அவள் கைநீட்டி அவன் தலையைத் தொட்டாள். மெல்லியவிசும்பல் கேட்டு அவன் நிமிர்ந்து நோக்கினான். அவள் அழுதுகொண்டிருந்தாள். நீலக் கண்கட்டுக்கு அடியில் நீர் ஊறி கன்னத்தில் வழிந்து துளிகள் மோவாயில் தொங்கி ஆடி மார்பு மேல் உதிர்ந்தன.

அவன் திரும்பி சத்யவிரதையை பார்க்க அவளும் கண்கலங்கியிருந்தாள். பின்னால் நின்றிருந்த சுபை ஒன்றும் கேட்காதே என விழியசைத்தாள். அவன் காந்தாரியின் உள்ளங்கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டான். நீர்நரம்பு ஓடும் தூய வெண்ணிறத்தில் ஒரு பெரிய மலரிதழ் போலிருந்தது. குளிர்ந்த மென்மையான மலரிதழ். அவள் எப்போதும் அவன் தொடுகையை விழைபவள். அவனுடைய பெரிய கையை தன் இருகைகளாலும் பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். மீண்டும் விம்மினாள். விழிநீர்த்துளிகள் அவன் கைமேல் விழுந்தன. அவன் மீண்டும் திரும்பி அன்னையரை நோக்க சுபை விழியால் ஒன்றும் பேசாதே என்று சொன்னாள்.

காந்தாரியின் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. சுபை மெல்ல கனைத்து “மதுபர்க்கத்திற்கு நேரமாகிறது” என்றாள். “ஆம், நேரமாகிவிட்டது, கிளம்பு” என்று சொல்லி காந்தாரி அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள். ஒருகையால் கண்ணீரைத்துடைத்தபடி “அவள் வந்திருக்கிறாளா?” என்றாள். “யார்?” என்று துரியோதனன் அறியாமல் கேட்டான். “அவள்தான் வைசியப்பெண்…” சத்யசேனை “இல்லை மூத்தவளே, எந்தச்சடங்குக்கும் அவளை அழைக்கவில்லை” என்றாள். ஆனால் காலையில் திருமணச்சடங்குகளில் பிரகதியைக் கண்டதை துரியோதனன் நினைவுகூர்ந்தான். சுபை “போகலாம்” என்று வாயசைத்தாள். அவன் தலையை அசைத்து ‘ஆம்’ என்றபின் மீண்டும் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கி திரும்பிநடக்கும்போது அறைவிட்டு வெளியே செல்வதற்குமுன் அவளை மீண்டும் நோக்கினான். அவன் செல்லும் ஓசையைக் கேட்பதற்காக அவள் சற்று தலைதிருப்பியிருந்தாள்.

துரியோதனன் மீண்டும் பெருங்கூடத்திற்கு வந்தான். “கொற்றவையின் காணிக்கைப்பெட்டியில் போடப்பட்ட பொற்காசு அல்லவா?” என்றாள் ஒருத்தி. யாரோ “உஸ்” என அவளை அடக்க யாரோ சிரித்தனர். அவனை பீடத்தில் அமரச்செய்தபின் சத்யசேனை திரும்பி “பேசாதீர்கள்…” என்றாள். “இல்லை” என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பு. சத்யசேனை “எங்கே துச்சளை?” என்றாள். துச்சளை “இதோ” என்று தாலத்துடன் வந்தாள். அன்னையர் கூடி நின்றனர். ஒரு பசுந்தாலத்தில் ஐந்துமங்கலம் நடுவே பொற்கிண்ணத்தில் இருந்த திரவத்தை சத்யவிரதை எடுத்தாள். துரியோதனன் “என்ன அது?” என்றான். “ஐந்தினிமை என்பார்கள். தேன், பால், நெய், பழம், வெல்லம் கலந்தது” என்றாள் சத்யசேனை. “நீ இதை அருந்தியாகவேண்டும்.” துரியோதனன் “நான் இனிப்பு உண்பதில்லை” என்றான். பெண்களில் ஒருத்தி ஏதோ சொல்ல சிரிப்பு வெடித்தது. சத்யசேனை திரும்பி விழிகளால் அவர்களை அதட்டிவிட்டு “ஒருதுளி அருந்தினால் போதும்… இது ஒரு சடங்கு” என்றாள்.

ஆம்பல்கொடிக்கொத்துக்களைப்போல அத்தனை பெண்களும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அவனைச்சூழ்ந்து நின்றனர். முலைகள் விதவிதமாக அசைந்தன. கழுத்துகள் வளைந்தன. விழிகளிலும் இதழ்களிலும் சிரிப்பு ஒளிவிட்டது. அவன் கைகள் நடுங்கின. விழிகளை ஏறிடாமல் தரைநோக்கி அமர்ந்திருந்தான். “வாங்கிக்கொள்” என்றாள் சத்யசேனை. “இனிமை நிறையட்டும். இங்கு மைந்தர் திகழட்டும். இக்குடி பெருகட்டும். மூதாதையர் மண்ணிலிறங்கும் பாதைகளில் மலர் விரியட்டும்!”

துரியோதனன் அவளிடமிருந்து வாங்கி ஒரு மிடறு விழுங்கினான். மலைத்தேனின் கசப்பு கலந்த இனிப்பு. அவன் அதை வாங்கியதுமே பெண்கள் குரவையிடத் தொடங்கினர். விறலியரின் மங்கலஇசையும் இணைந்து எழுந்தது. அவன் இனிப்பை விழுங்கியதும் பெண்களில் ஒருத்தி ஏதோ சொல்ல சிரிப்பொலி கூடத்தை நிறைத்தது.

முந்தைய கட்டுரை‘ஜெகே – அஞ்சலிகள்’ கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘ஜெகே”- கடிதங்கள்