வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு

வணக்கம் ஜெமோ,

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் (??) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்? என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.

– சீனு

Cheenu Narasimhan

அன்புள்ள சீனு,

உங்கள் கேள்விக்கு நேரடியான பதில் இதுவே. விஷ்ணுபுரம் பஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தது. ஏனென்றால் தமிழகத்தில் அக்கால விஷ்ணுகோயில்கள் பஞ்சராத்ர ஆகம முறைப்படி அமைந்தவை. பஞ்சாராத்ர ஆகமத்தின் அடிப்படைகளான தத்வம்-ஹிதம்- புருஷார்த்தமே பின்னாளில் வைணவ கோட்பாடாக விரிவாக்கம் செய்யப்பட்டன. விஷ்ணுபுர அவையில் பஞ்சராத்ர ஆகமத்தின் கோட்பாடே பேசபப்டுகிறது


இருந்தாலும் இத்தகைய தருணங்களை நாம் முழுமையாக தத்துவ வளார்ச்சியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாமென்பதனால் பதிலை விரிவாக அளிக்கிறேன்

தமிழ்நாட்டில் இன்றுள்ள பெருமதங்களான சைவம் வைணவம் இரண்டும் உருவாகி வந்த பரிணாமத்தின் சித்திரத்தை மனதில் உருவாக்கிக்கொண்டு இதைப்பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. மரபான மத அறிஞர்களிடம் பேசினால் அவர்கள் வரலாற்றுச்சித்திரத்தை அளிக்காமல் ஒரு புராணச்சித்திரத்தையே அளிக்கிறார்கள். ஆனால் ஒரு வரலாற்றுச் சித்திரமானது இத்தத்துவங்களை புரிந்துகொள்ளவேகூட மிகவும் இன்றியமையாதது.

ஆனால் இவ்வாறு முழுமையான, புறவயமான ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நமக்கு போதிய தரவுகள் இல்லை. நம்முடைய மதங்களின் வரலாறு எழுதப்படவில்லை. எழுதுவதற்குரிய கோட்பாட்டுக் கருவிகள் இல்லை. ஆகவே அதிகமும் ஊகங்களையே நாம் ஆராய்ச்சி என்றபேரில் நிகழ்த்துகிறோம். வெற்றிகரமாக பல தளங்களுக்கு விரித்தெடுக்கக்கூடிய சாத்தியங்கள் கொண்ட ஊகமானது அனேகமாக உண்மை என்று வைத்துக்கொண்டு யோசிப்பதே ஒரே வழி

அதற்கு மார்க்ஸியம் உருவாக்கியளித்த ‘வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம்’ உதவிகரமான ஒரு கருவி. இன்றைய சமூகவியல், பண்பாட்டு ஆய்வுகளில் அதிகமும் கையாளப்படும் கருவியும் இதுவே. அது அழகியல், ஆன்மீகம் ஆகிய இருதளங்களில் விட்டுவிடும் இடைவெளிகளை மேலதிக கருவிகளால் நிரப்பிக்கொண்டு செய்யப்படும் ஆய்வுகளே இப்போதைக்கு முக்கியமானவை.

இந்த ஆய்வுமுறைப்படி மதங்கள் அந்தந்த காலகட்டத்துச் சமூகச்செயல்பாட்டின் விளைவாக உருவாகி வந்தவை. சமூகச்செயல்பாட்டின் அடித்தளமாக இருப்பது அன்றைய பொருளியல் இயக்கம். பண்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத்தேவை சார்ந்து உருவாகி வந்த ஒன்றுதான். அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியே மதம்.

இதன்படி, சைவமும், வைணவமும் இந்தியநிலப்பகுதிகளில் நிலவிய தொன்மையான பழங்குடிவழிபாட்டு முறைகளில் இருந்து உருவாகி வந்தவை என ஊகிக்கலாம். பல்வேறு பழங்குடித்தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் சமூக வளர்ச்சிப்போக்கில் உரையாடி ஒன்றுகலந்து வளர்ந்து அவை உருவாயின.பழங்குடிச்சமூகம் அரசுகளாகி, பேரரசுகளாக ஆனபோது அவை பெருமதங்களாக முதிர்ந்தன.

நாம் காணும் சைவ வைணவ பெருமதங்களில் மூன்று கூறுகல் உள்ளன. ஒன்று வழிபாட்டுமுறை. இரண்டு மதக்கட்டமைப்பு. மூன்று தத்துவம். சைவ வைணவ வழிபாட்டுமுறைக்கு நாம் ஊகித்துவிட முடியாத அளவு தொன்மை உண்டு.பல்வேறு வழிபாட்டுமுறைகளாக பழங்குடி வாழ்க்கையில் முளைத்தவை அவை. பௌத்தமும் சமணமும் வருவதற்கு முன்னரே அவை மத அமைப்புகளாக ஆயின. சோழர் காலத்தில் பெருமதங்கள் ஆக மாறின. அதன் பிறகு அவற்றுக்கான தத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது

சங்ககாலத்திலேயே விஷ்ணுவழிபாடு தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. சிலப்பதிகாரத்தில் அது ஒரு கட்டமைப்புள்ள மதமாக ஆகிவிட்டிருந்தது என்பதைக் காண்கிறோம். அப்படியானால் சங்க காலத்துக்கும் முந்தைய, நாம் இன்று அறியாத, தமிழ்ப் பண்பாட்டுக்களத்தில் நாம் இன்று தமிழகத்தில் காணும் விஷ்ணு என்ற தெய்வம் உருவாகி வந்திருக்கலாம்.

இந்த விஷ்ணுவில் நான்கு விஷ்ணுக்கள் அடங்கியிருக்கிறார்கள். மலைநின்ற நெடுமால், கடல்களின் அதிபனான விண்ணவன், புல்வெளிகளின் தெய்வமான விஷ்ணு, மற்றும் ஆயர்களின் தெய்வமான கிருஷ்ணன். இந்தக் கலவை நிகழ்ந்து இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னரும் தெளிவாக காணும்படியாக நான்கு வெவ்வேறு படிமங்களாகவே இத்தெய்வங்கள் உள்ளன. இவை தவிர பலராமன் வழிபாடு, சக்கர வழிபாடு, சூரிய வழிபாடு போன்றபலமதங்கள் வைணவத்தில் இணைந்துகொண்டே இருந்தன. சங்கம்மருவிய காலகட்டத்தில் இவை ஒரேதெய்வமாக ஆகி விண்ணவ [வைணவ] மதமாக உருவம் கொண்டுவிட்டிருந்தன.

தமிழகத்தில் பேரரசுகள் உருவான எட்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் சைவமும் வைணவமும் பெருமதங்களாக ஆக ஆரம்பித்தன. அவை பெருமதங்களாக ஆகும் வளர்ச்சிப்போக்கையே நாம் ஆழ்வார்,நாயன்மார் பாடல்களில் காண்கிறோம். இலக்கியத்தில் இக்காலகட்டத்தை பக்தி காலகட்டம் என்று சொல்வது வழக்கம்.

பக்திக் காலகட்டத்தில் நடந்தவை நான்கு விஷயங்கள். முதலில், நாடெங்கும் பரவிக்கிடந்த சைவ வைணவ கோயில்கள் ஒரு பொதுவான வழிபாட்டு ஒழுங்குக்குள் கொண்டுவரப்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஊர் ஊராகச் சென்று கோயில்களைப்பற்றிப் பாடியது இதற்காகவே. பாடல்பெற்ற கோயில்கள் அனைத்தும் ஒரே மதத்தின் பொதுவான கோட்பாடு, வழிமுறைகள், நம்பிக்கைகளுக்குள் வந்தமைந்தன

இரண்டாவதாக, மதத்தின் மையம் திடமாக நிறுவப்பட்டது. மையப்படிமம், மையத்தரிசனம் ஆகிய இரண்டும் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டன. ஆழ்வார்கள் நாயன்மார்களின் பாடல்கள் இவற்றை செய்கின்றன.

மூன்றாவதாக, பல்வேறு வழிபாட்டுமுறைகள் அந்த மையத்தில் தொகுக்கப்படுவதற்காக புராணங்கள் உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் முரண்பாடுகளை விளக்கவும் உட்கூறுகளை இணைக்கவும் கதைகளை பயன்படுத்துவனவே

நான்காவதாக பெரிய திருவிழாக்கள், பண்டிகைகள் மூலம் பெருவாரியான மக்கள் பங்கேற்பு உருவாக்கப்பட்டு பெருமதங்கள் வெகுஜன இயக்கங்களாக ஆயின. கலைகளும் இலக்கியமும் அதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த அலைக்குப் பின்னர்தான் தத்துவம் முன்னிலைப்படுகிறது. அதாவது பெருமதத்துக்கு மூன்று அடிப்படைகள் தேவை. மையத்தெய்வம், மையப்படுத்தப்பட்ட அமைப்பு, மையமுள்ள கோட்பாடு. மையத்தெய்வம் உருவாகி அதை ஒட்டி அமைப்பும் உருவானது பக்தி காலகட்டத்தில்தான். அதன் பின் மையமுள்ள கோட்பாட்டுக்கான தேவை உருவானது

இன்று நாம் காணும் சைவ சித்தாந்தமும், வைணவ சித்தாந்தமும் இக்காலகட்டத்தில்தான் உருவாயின. அனேகமாக பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர். அது இந்திய சிந்தனைத்தளத்தில் மிகப்பெரிய அலைகள் நிகழ்ந்து முடிந்து பலநூற்றாண்டுகள் கழித்து என்பதை நாம் நினைவுகூரவேண்டும். ஆகவே சைவசித்தாந்தம், வைணவசித்தாந்தம் இரண்டிலும் முற்றிலும் அசலான சிந்தனைகள் அனேகமாக இல்லை. அன்றுவரை இந்தியநிலத்தில் நடந்த சிந்தனை அலைகளின் நீட்சிகளும் மறு அமைப்புகளுமாகவே அவை உள்ளன.

வைணவ சிந்தனைகளைப் பொறுத்தவரை அவற்றின் தொடக்கம் வேதாந்தத்திலேயே உள்ளது. வேதங்களின் இறுதிப்பகுதியாக கருதப்படும் ஞானகாண்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது வேதாந்தம். அதன் பின் உபநிடதங்களின் ஞானவிவாதக்காலகட்டம். அந்த விவாதக்காலகட்டத்தின் சுருக்கமே பாதராயணரால் வேதாந்தசூத்திரங்களாக தொகுக்கப்பட்டது. வைணவ தத்துவ நூல்கள் அனைத்துமே வேதாந்த மூலநூல்களையே சார்ந்திருக்கின்றன. பிறகால வைணவத்தின் பல மூலநூல்கள் வேதாந்த நூல்களுக்கான உரைகள்தான்.

வேதாந்தம் எவற்றையெல்லாம் விவாதித்ததோ அவற்றையெல்லாம்தான் பௌத்தமும் விவாதித்தது. குறிப்பாக பிற்கால பௌத்தம் வேதாந்தத்தின் வினாக்களை மிக விரிவான தளங்களுக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அத்வைதம் வேதாந்தத்தின் சாரத்தில் இருந்து அதன் அத்தனை தரிசனங்களையும் தர்க்கங்களையும் பயன்படுத்திக்கொண்டு முளைத்து வந்தது. அத்வைதத்துடன் முரண்பட்டு, அதேசமயம் அதன் அனைத்து கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு உருவானதே பாஸ்கராச்சாரியார், யாதவப்பிரகாசர், யமுனாச்சாரியார் வழியாக ராமானுஜர் வரை வந்த விசிஷ்டாத்வைதம். அதுவே இன்று வைணவக் கோட்பாடாக பல வளார்ச்சிநிலைகளுடன் அறியப்படுகிறது.

ஆகவே இன்றைய வைணவக்கோட்பாடு பேசும் எந்தக் கருதுகோளும் புதியதல்ல. அதன் எந்த கலைச்சொல்லும் புதியதல்ல. இன்றைய வைணவசித்தாந்தத்தை சுருக்கமாக ‘ஞான கர்ம சமுச்சய வாதம்’ என்று சொல்லலாம். ராமானுஜரின் சொற்களில் ‘பக்தி ரூபாபனம் ஞானம்’ – பக்தியே ஞானத்துக்கான வழி.

வேதாந்தத்தின் பிறப்புமுதலே உள்ள ஒரு முரண்பாடு என்பது தூய ஞானத்தேடலுக்கும், வேள்வி முதலிய செயல்பாடுகளுக்கும் உள்ள மோதல். அதை சமன்செய்து, ஞானத்தை வேள்வி முதலிய வழிபாட்டுச் சடங்குகளின் விளைவாகவும், வேள்வியையும் இறைவழிபாட்டையும் ஞானத்தை அடைவதற்கான வழியாகவும் விளக்க முயன்றதன் விளைவே வைணவக்கோட்பாடு என்பது.

சோழப்பேரரசின் காலகட்டத்தில் [கிபி பத்தாம் நூற்றாண்டு] நாதமுனிகள் ஆழ்வார்பாசுரங்களை தொகுக்க முற்பட்டதுடன் இந்த முயற்சி ஆரம்பித்தது. அது ஒரு குருபரம்பரையாக ஆகி ராமானுஜர் வரை வந்து சேர்ந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் இதேபோலத்தான் நம்பியாண்டார் நம்பி சைவ திருமுறைகளை தொகுத்தார் என்பதை நாம் அறிவோம். சோழப்பேரரசு சைவ வைணவ மதங்களை பெருமதங்களாக கட்டமைத்துவிட்டது. அவற்றுக்கு உறுதியான கோட்பாடு தேவைப்பட்டது. அதற்காகவே இந்த தொகுப்புச் செயல்பாடு தேவையாக ஆனது.

இந்த தொகுப்புச்செயல்பாட்டின் விளைவாக மையமாக உருவாகி வந்ததே ‘தத்வம் – ஹிதம்- புருஷார்த்தம்’ என்ற மூன்றுநிலைக் கருதுகோள். சுருக்கமாகச் சொன்னால் ‘அறிபொருள்-அறியும்முறை-அறிந்ததன் பயன்’ என இதைச் சொல்லலாம். ‘இறைவன் – அடையும் வழி – வீடுபேறு’ என்று இன்னும் திட்டவட்டமாகச் சொல்லலாம். கடவுள் கோயில் முக்தி என்னும் இலக்கு மூன்றையும் நிறுவுவதுதான் இது.

ஆனால் இச்சொற்களும் சரி, இந்தக் கருத்துக்களும் சரி, பிற்கால வைணவ தத்துவத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. வைணவ தத்துவம் இவற்றை திட்டவட்டமாக முன்வைக்கிறது என்பதே அதன் பங்களிப்பாகும். தத்வம் என்பது விஷ்ணுவே என்றும், ஹிதம் என்பது பக்தியும் கைங்கரியமும் மட்டுமே என்றும், புருஷார்த்தம் என்பது மோட்சம் மட்டுமே என்றும் உறுதியாக நிறுவியதே பிற்கால வைணவத்தின் கொடை. இக்கருத்துக்களையே ஆழ்வார்களும் சொல்லியிருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டவையே பிரம்மாண்டமான வைணவ உரைகள்.

தத்வம், ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்றும் ஆரம்ப வேதாந்தகாலம் முதல் உள்ளவை. அச்சொற்களுக்கு ஒவ்வொரு ஞானமரபிலும் விரிவான அர்த்தம் உண்டு. அந்த அர்த்தம் அந்த தத்துவ அமைப்பைச் சார்ந்து நுண்மையான மாறுதல்களுக்கு உள்ளாகும். உதாரணமாக தத்வம் என்ற சொல் ‘அறிபடு பொருள்’ ‘விவாதிக்கப்படும் பொருள்’ என்ற அர்த்தத்தில் நியாய- வைசேஷிக மரபில் பயன்படுத்தப்படுகிறது. சைவ மரபு 36 தத்துவங்களைப்பற்றி பேசுகிறது [ சிவம்,சக்தி, சுத்த வித்யை, மாயை, கலை, வித்யா, ராகம்… என]

ஒவ்விரு மரபிலும் தத்வம் வேறுபடுகிறது. சாங்கியத்தில் இயற்கையே தத்வமாகும். அதாவது அறியப்படவேண்டிய முதல்பொருள். அதை அடையவேண்டிய வழியாகிய ஹிதமும் மாறுபடுகிறது. புருஷார்த்தம் என்பது அதை அடைவதன் விளைவாக கிடைக்கும் நலன். அது நான்கு புருஷார்த்தங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டிருக்கிறது. தர்மம், அர்த்தம்,காமம், மோட்சம். சார்வாகர்கள் போன்ற பொருள்முதல்வாதிகளுக்கு காமம் [உலக இன்பம்] மட்டுமே புருஷார்த்தம்.

தமிழகத்தில் வைணவம் பெருமதமாகத் தொகுக்கப்படுவதற்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளில் அது பலவகையான வளர்ச்சிநிலைகளை அடைந்திருந்தது என்று காணலாம். ஆகவே ஒரு மதமாக வைணவத்தின் அடிப்படைகள் நெடுங்காலம் முன்னரே பேசப்பட்டிருந்தன. குறிப்பாக குப்தர்களின் காலகட்டமான மூன்று முதல் ஐந்து வரையிலான நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வைணவம் பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தது. அப்போது உருவான தத்துவ நூல்களின் நீட்சியாகவே தமிழகத்தில் பிற்காலத்தில் வைணவ தத்துவம் உருவானது.

வைணவ தத்துவங்களுக்கு ஆதாரமாக உள்ள மூலநூல்களான வைகானச ஆகமம், பஞ்சராத்ர ஆகமம் போன்றவை குப்தர் காலத்தில் உருவானவை. இவை தமிழகத்திலும் பரவலாக புழக்கத்தில் இருந்திருக்கலாம். தமிழகத்தில் மாபெரும் விஷ்ணு கோயில்கள் இருந்ததை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம் [ சிலப்பதிகாரம் மணிவண்ணன் கோட்டதைப்பற்றிச் சொல்கிறது. கோட்டம் என்றால் பெரிய சுற்றுச்சுவர்கொண்ட பேராலயம்] அவை இந்த ஆகமங்களின் அடிப்படையில் வழிபடப்பட்டிருக்கலாம்.

பஞ்சராத்ர ஆகமத்தை எடுத்துப்பாருங்கள். அதன் முக்கிய பேசுபொருட்கள் தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்றே. பரம தத்வமான விஷ்ணுவின் ஐந்து தோற்றங்களையும் [ பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சம்] அதை வழிபடும் ஆறு வழிபாட்டுமுறைகளையும் அந்த வழிபாட்டின் விளைவான ஒரே புருஷார்த்தமான மோட்சத்தையும் பற்றி அது பேசுகிறது. ராமானுஜர் பஞ்சராத்ர ஆகமத்தை முன்னிறுத்தியவர். அதாவது,பிற்கால வைணவக் கோட்பாடுகள் வைணவஆகமங்கள் மற்றும் மூல வேதாந்த நூல்களை அடியொற்றி உருவானவை.

வைணவம் பெருமதமாக வளர்ந்தபோது இதுதான் தத்துவம் இதுதான் ஹிதம் இதுதான் புருஷார்த்தம் என்று நிலைநாட்டியதையே பிற்காலத்து வைணவக்கோட்பாட்டு இயக்கம் செய்தது. இவ்வியக்கம் ஆகமங்களுக்கு உரை எழுதியதன் மூலமே அதைச் சாதித்தது. கிட்டத்தட்ட இதுவே சைவத்துக்கும். சம்ஸ்கிருதத்தில் இருந்த ரைரவ ஆகமத்தின் மொழியாக்கமே சைவசித்தாந்தத்தின் முதல்மூலநூல்.

ஆகவே தத்வம்-ஹிதம்-புருஷார்த்தம் போன்ற அடிப்படைகள் நெடுங்காலம் முன்னரே தமிழகத்தில் பேசப்பட்ட¨வையாக இருக்கவே வாய்ப்பு. ஆகமங்களின் உள்ளடக்கத்தை வைத்துப்பார்த்தால் அவை தெற்கே தோன்றி சம்ஸ்கிருதத்தில் யாக்கப்பட்டவையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

விஷ்ணுபுரம் ஞானசபையில் பவதத்தர் முன்வைப்பது வேதாந்தத்தின் தத்துவ அடிப்படை கொண்ட அக்காலத்து வைணவம். அதன் அடிப்படை பஞ்சராத்ர ஆகமம் என்பது விஷ்ணுபுரத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லப்படும் முன்றுநிலை உண்மையே தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்று அதில் ஒரு வைணவரால் பேசப்படுகிறது

சுவீரா ஜெயஸ்வால் எழுதிய ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் தமிழிலும் வந்துள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு. உதவிகரமான நூல்.

ஜெ

பட்டர் என்ற பெயர் நீட்சி ஆகம முறைப்படி அமைந்த கோயில்களில் பூசைமுறைகளை செய்பவர்களைக் குறிக்கும் சொல்லாக புத்தர் காலத்துக்கு முன்னாலிருந்தே புழங்கிவருகிறது. தமிழகத்தில் அச்சொல் வழக்கொழிந்து பெருமாள்கோயில் பூசாரியை மட்டுமே குறிப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் பட்,பட்டாச்சாரியா போன்ற சொற்கள் இந்தியா முழுக்க உள்ளன

முந்தைய கட்டுரைகறுப்பர்களின் உளவியல்
அடுத்த கட்டுரைநாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்