நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு
என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம்
ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப், ராமானுஜர் முக்கியமானவை. அம்பையின் பயங்கள், எஸ்.எம்.ஏ.ராம் எழுதிய ஆபுத்திரன் கதை ,பிரபஞ்சனின் முட்டை, ந.முத்துசாமி நாற்காலிக்காரர், எஸ்.ராமகிருஷ்ணன் அரவான் என்று ஒரு பட்டியலை நான் அளிக்கமுடியும்.
இந்திய மொழிகளில் கன்னடம் மலையாளம் மராட்டி வங்காள நாடங்கள் முக்கியமானவை. பலவற்றை ஆர்வி சுட்டிச்செல்கிறார். நாமறிந்த வங்க நாடகாசிரியர் பாதல் சர்க்கார் மட்டுமே. வங்க நாடகங்களில் தாகூரின் விசர்ஜனம், சித்ராங்கதா போன்ற இசைநாடகங்கள் செவ்வியல் படைப்புகள். தொடர்ந்து அங்கு ஒரு வலுவான நாடக இயக்கம் இருந்தது.பெரும்பாலான எழுத்தாளார்களும் கவிஞர்களும் நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள்.
கன்னட நாடக இயக்கம் அவர்களின் தேசியகவிஞரான குவெம்புவில் தொடங்குகிறது. குவெம்புவின் பெரகெலெ கொரல் முக்கியமானது.கிரிஷ் கர்நாட், பி.லங்கேஷ், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்களின் நாடகங்கள் புகழ்பெற்றவை.[ பாவண்ணன் கிரிஷ் கர்நாட்டின் நாகமண்டலா, ஹெ.எஸ். சிவப்பிரகாஷின் மாதவி போன்றவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறார்]
மலையாள நாடகவுலகில் இரண்டு முன்னோடிகள் முக்கியமானவர்கள். ஜே.ஜே.சிலகுறிப்புகள் வழியாக நமக்குத்தெரிந்த சி.ஜே.தாமஸ், மூன்று ராமாயணநாடகங்களின் வழியாக புகழ்பெற்ற சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். அவரது காஞ்சனசீதா அரவிந்தனால் படமாக்கப்பட்டது.
சி.என்.ஸ்ரீகண்டன் நாயரின் லங்காலட்சுமி என்ற நாடகம்தான் எனக்கு முதல் நாடக அனுபவத்தை அளித்தது. அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.மறைந்த முரளி அதில் ராவணனாக நடித்திருந்தார். அதன்பின்னர் திரிச்சூர் ரூட்ஸ் குழுவின் முத்ரா ராட்சசம் எனக்கு பெரிய அனுபவத்தை அளித்தது
நாடகம் என்ற கலை மேடையில் உயிர்பெறவேண்டும். ஆனால் அதில் ரீடேக் என்பதே இல்லை. ஆகவே உண்மையான கலைஞர்கள் நன்கு பயின்றபின்னரே அதை நடிக்கமுடியும். தமிழ்நாடகத்தின் பிரச்சினையே இதுதான் என நினைக்கிறேன்.
நான் கனடா சென்றபோது அ.முத்துலிங்கம் என்னை இருநாடகங்களுக்கு அழைத்துச்சென்றார். ஷேக்ஸ்பியரின் As you like it Guess who is coming to dinner இரண்டுமே நன்கு பயின்ற நடிகர்கள் அளிக்கும் நாடக அனுபவம் என்ன என்று காட்டியவை. வாழ்க்கையை புனைவாக்குவது இலக்கியம் என்றால் புனைவை வாழ்க்கையாக ஆக்குபவை நாடகங்கள் என்று கண்டேன். அதன்பின் நியூயார்க் அரங்கில் பார்த்த Chicago ஒரு பெரிய நாடக அனுபவம்.
கேரள அரசு வருடம்தோறும் திரைவிழா போலவே திரிச்சூரில் நாடகவிழா ஒன்றை நடத்துகிறது. முக்கியமான இந்தக்கலைவிழா தமிழகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. திருவனந்தபுரம் திரைவிழா அளவுக்கே முக்கியமானது இது.உலகநாடகத்தின் முகத்தைக் காட்டும் விழா இது. நான் சென்ற விழாக்களில் இருந்து ஈரான், பாகிஸ்தான், சிங்கள நாடகங்கள் மிகச்சிறப்பானவை என்று அறிந்தேன்.
இது உடனே நினைவுக்கு வரும் பெயர்கள்தான்.ஒரு விரிவான கட்டுரையை என்றேனும் எழுதவேண்டும்
http://putlocker.is/watch-guess-whos-coming-to-dinner-online-free-putlocker.html