அன்பு ஆசிரியனே!,
இவ்வெளிய வாசிப்பின் சாரமிது. மூன்று முறை வாசித்தும் எஞ்சும் பொருளென்று எனக்குண்டு.
அவள் ஒன்பது கோணங்கள் மேவி உறைபவள் அல்லவா!
கருவறைத் தாய்த்தெய்வம் ஒன்று தனது நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்த கணம் இந்நெஞ்சில் நீநேரம் அமிழவில்லை.
நாடும் காடும் சரி, பாலையும் காண விழைந்தது ஏன்? கன்னி தாயாக மாறி பின் சேய் கொல்லும் தவையாக மாற பாலை தான் உகந்ததோ?
‘மூவகைதீயும் முறைகொண்டு ஆளும் மண்ணில் சூழ் கொண்டவளே கொல்தவை’
கரும்பாறை மீது காலமெல்லாம் ‘காதலுடன்’ தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை, கரும்பாறை என்றும் அதன் ஊழித் தனிமையில் ஓங்காரம் செப்பி நில்கின்றது.
அடுத்து காற்று நெருப்பைக் கண்டுகொள்ளும் தருணத்தில் அனைத்தும் மீண்டும் தொடங்குகின்றன.
நெருப்பு அணைந்து புது நெருப்பு எங்கோ பூக்கும், காற்று அமிழ்ந்து பிரிதெங்கோ வீசும் ஆனாலும் கரும்பாறை என்றும் அதன் ஊழித்தனிமையில் அறியா மந்தணமென!
கண்ணகி, கோவலன் மற்றும் மாதவி உறவு உருபு சொல்ல எஞ்சிய சொல்லாடல் இனி உண்டா?
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்னும் தீதிலா பண்டம் இது எமக்கென்றும் தீர்ந்திடாத பண்டம் இது
வணக்கத்துடன்
சக்திவேல்
சென்னை