அங்கேயே அப்போதே இருக்கும் ஞானம் (விஷ்ணுபுரம் கடிதம் இருபது)

”தெரிந்ததில் இருந்து தெரியாததற்கு, அறிந்ததிலிருந்து அறியாததற்கு, அதுதானே ஞானத்தின் பாதை? நம் புலன்களுக்குச் சிக்குவதே உண்மையான முதல் உலகம். இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இது பஞ்ச பூதங்களால் ஆனது. ஆனால் அவை மட்டுமல்ல. அவற்றை சுமந்து இயக்கும் சக்தியாக பிராணன் இங்கு துடிக்கிறது. மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் பொதுவான பிராணன் சேதனங்களுள் எல்லாம் கரையின்றித் ததும்பி நிற்கிறது. அன்னமும் பிராணனும் பின்னிப்பிணைந்து உருவாக்கிய பலகோடித் தோற்றங்களடங்கியதே இப்பிரபஞ்சக் காட்சி. ஆனால் கண் இல்லாமல் அக்காட்சி இல்லை. எங்கும் கண் இல்லையென்றால் பிரபஞ்சமே இல்லை என்றாகிவிடும். பஞ்ச புலன்கள் இல்லையெனில் பஞ்ச பூதங்களும் இருக்காது. “
(சபையினர் முன் பவதத்தர்)

அன்பு ஜெயமோகன்,

உள்ளங்கையின் சிறுபரப்புக்குள் ஒரு விதையை வைத்திருந்தேன். முதலில் அது விதையாக மட்டும் தெரிந்தது. மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் பலகாட்சிகளில் விதையையும் ஒன்றாக வைத்துப் பார்த்திருக்கிறேன் என்பதாகப் பட்டது. பிற காட்சிகளைப் புறந்தள்ளி விதையை நோக்கிக் கவனத்தைக் குவித்தபோது அவ்வதிசயம் நிகழ்ந்தது. முதலில் விதையாக மட்டும் தெரிந்த அதில் இப்போது வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள் போன்றவையும் காட்சிதரத் துவங்கின. இப்போதும் என் கையில் அதே விதைதான் இருக்கிறது. மனதிலோ அது முன்பைப்போல் விதையாக மட்டும் இல்லை; வேர்களாக, தண்டாக, கிளைகளாக, இலைகளாக, மலர்களாக கிளைத்து நிற்கும் மரத்தின் காட்சியாக மாறி இருந்தது. விதை எனும் தெரிந்த ஒன்றிலிருந்து அதன் தெரியாத வேர்களை, தண்டை, கிளைகளை, மலர்களைக் காணும் சாத்தியம் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. நாம்தான் அதைக் கண்டுகொள்ள அக்கறை கொள்வது இல்லை. மனதில் ஊசாலாடிக்கொண்டிருக்கும் காட்சிகளில் இங்கும் அங்கும் தாவிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதையே வாழ்க்கை எனச்சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதன்பொருட்டே நிறைவின்றிப் புலம்பியும் கொண்டிருக்கிறோம்.

மனம் என்பதே எப்போதும் பல காட்சிகளைக் கொண்டிருப்பதுதான். அக்காட்சிகளும் நாம் விரும்பியவாறு இருக்காது. அதில் ஒரு காட்சியை மட்டும் நம்மால் நிறுவிவிட முடியாது. மனதின் பல காட்சிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றில் கவனம் செலுத்தலாம். அதுவே நம்மால் முடிந்தது. ”நான் அப்படி நினைக்கிறவனில்லை. ஆனால், அப்படியான எண்ணம் எனக்குள் எப்படி வந்தது?” எனும் கேள்வியை எழுப்பும் ஒருவன், மனம் அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் அவயம் எனக் கருதுகிறான். அங்குதான் சிக்கலே துவங்குகிறது. திரும்பவும் புரிந்து கொள்வோம். மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இருப்பதன்று; கட்டுப்பாட்டுக்கு அடங்கக் கூடியதுமன்று. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அதில் கிளைக்கும் எண்ணங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கலாம்; பலவற்றை ஒதுக்கிவிடலாம். நம்மை அலைவுறச் செய்யாத எண்ணங்களை ஏற்கப் பழகுதல் என்பது அவ்வளவு எளிதன்று. அப்பழக்கத்தை வெளியிலிருந்து பிறிதொருவர் நமக்குக் கற்றுத் தந்துவிட முடியாது; வேண்டுமானால் தூண்டலாம். எளிய இன்னொரு வழி இருக்கிறது. மனம் திகைத்து நிற்கும்படியான காட்சிகளைத் தொடர்ந்து அதற்குக் காட்டி வந்தோமானால் ஓரளவு அதன் அலைக்கழிப்பிலிருந்து மீளலாம். மனதை எப்படி திகைக்க வைப்பது? தொடர்ந்து அது தெரிந்திருப்பதாக நம்பும் விஷயங்களில் இருந்து தெரியாத ஒன்றுக்கு அதை நகர்த்த முயற்சிப்பதே. கலைகளும், இலக்கியங்களும் அதையே செய்கின்றன. ஒரு மனிதன் தன்னை மறந்திருப்பதாக நம்புவது கலைகளிலும், இலக்கியங்களிலுமே. தன்னை மறந்திருப்பது என்பது மனதின் இயக்கத்தால் அலைவுறாமல் இருப்பது. கலைகளும், இலக்கியங்களும் ஒரு தெரிந்த சம்பவத்தை அல்லது காட்சியை உள்ளவாறே சொல்வதில்லை. மாறாக, அச்சம்பவத்தின் வழியாக தெரிந்திராத அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. அதனாலேயே கலைகளும், இலக்கியங்களும் கொண்டாடப்படுகின்றன.

சமயத்தின் அடிப்படைகளாக இன்றுவரை கலைகளும், இலக்கியங்களுமே பெரும்பான்மைச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சமயத்தின் மூலவித்தாகிய தத்துவத்தை நேரடியாக அணுகும் துணிச்சல் கொண்டவர்கள் மிகச்சிலரே. அம்மிகச்சிலர்தான் கலைகளையும், இலக்கியங்களையும் குப்பைகள் எனச் சொல்லிவிடுகின்றனர். என்றாலும், அதைச் சொல்லவும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வடிவம் தேவைப்படுகிறது. “அறிந்தவற்றில் இருந்து முழுக்க விடுபடுவதே ஞானம்” எனும் மூலச்சிந்தனையை, தான் கண்டு கேட்ட அனுபவங்களின் வழியாகவே ஜே.கிருஷ்ணமூர்த்தியால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. கலைகளும், இலக்கியங்களுமே பெரும்பான்மைச் சமூகத்தின் மனக்குடைச்சல்களுக்கு தீர்வாக அமைந்திருக்கின்றன. இன்றுவரை சமயமும் தனக்கான கலைகள் மற்றும் இலக்கியங்களால்தான் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கிறது.

நம் மொழியின் மூன்று பிரிவுகளுமே கலை இலக்கியத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன என்பது வியப்பான செய்தி. இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் எனும் மூன்று பிரிவுகளில் கலை இலக்கியக்கூறுகள் அடங்கிவிடும் என்றே சொல்லலாம். நம் மரபில் கலையும், இலக்கியமும் பலவகையான வடிவங்களில் சொல்லப்பட்டாலும் அவற்றை இரண்டு வடிவங்களில் வரையறுத்து விடலாம். ஒன்று செவ்வியல் வடிவம்; மற்றது நாட்டார் வடிவம். ஒவ்வொரு வடிவத்திலும் செயல்படும் ’நுண்ணரசியலை’ப் பேசுவதற்கு ஆட்கள் இருப்பதால் ‘மேலோட்டமாக’ப் பார்த்தால் போதும் என நினைக்கிறேன். எவ்வித வடிவமானாலும் அதில் ஒருவித செய்நேர்த்தியும், அழகியலும் இருந்தே தீரும். தட்டையான(மொக்கையான) ஆக்கங்கள் பெரும்பான்மைச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டுவிடும். எது எப்படியோ, கலை இலக்கிய வடிவங்கள் வழியேதான் இலட்சியவாதச் சிந்தனைகளே கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

சமயத்தின் இலக்கியங்களை நாம் பெரும்பாலும் மொண்ணையாகவே பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக நவீன சமூகத்தினர் சமய இலக்கியங்களான புராணங்களையும், கதைகளையும், பாடல்களையும் ’பயனற்ற குப்பைகள்’ எனச் சொல்லும்படியான மனநிலைக்கும் வந்துவிட்டனர். சமய இலக்கியங்களை விமர்சிக்கவே கூடாது, அவை புனிதமானவை என்பதான தளத்தில் இருந்து எம் கருத்தை விளங்கிக் கொண்டால் அது அறிவீனமாகவே இருக்கும். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய நோக்கம் சமயத்தளத்தின் கலை, இலக்கிய வடிவங்களை எவ்விதத்திலும் பயனற்றவை என ஒரேயடியாய் ஒதுக்க முயல வேண்டாம் என்பதுதான். நம் மரபின் வரலாற்று வேர்களைச் சமயங்களின் உதவியின்றி நம்மால் கண்டறிந்துவிடவே முடியாது என்பது என் தீர்மானமான கருத்து. சமயம் என்று சொல்லியவுடன் கடவுள் இருக்கிறார் என வற்புறுத்தும் அமைப்பு என்பதான சிந்தனையே முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியது. கடவுள் இருக்கிறார் எனும் ஆத்திகத்தரப்பும், கடவுள் இல்லை எனும் நாத்திகத் தரப்பும் நம்மைக் குழப்பியடித்து விடும். அவற்றில் இருந்து விடுபட்டுத் தனித்து சமயத்தை ஆய்வதே சரியானதாக இருக்கும். ஆத்திகமும், நாத்திகமும் சமயத்தை ஒற்றைத் தன்மையிலேயே அணுகுகின்றன. தனி ஒருவனாக சமயத்தின் இலக்கியங்களுக்குள், கலைகளுக்குள் பயணிக்கும் ஒருவனுக்கு அதன் பன்முகப் பரிமாணங்களைக் காணும் வாய்ப்பு அமைகிறது. தனியாக தனக்குள் நுழையும் ஒருவனைச் சமயம் தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றுக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது.

முருக வழிபாட்டோடு அதிகம் தொடர்புடையவன் என்பதால் அதில் புழக்கத்தில் இருக்கும் ஒரு கதையைச் சொல்கிறேன். எல்லோரும் அறிந்த கதைதான்; ஞானப்பழக்கதை. நாரதர் ஒரு பழம் கொண்டு வருகிறார். அது ஞானப்பழம். விநாயகன், முருகன் என இருவர் இருக்கின்றனர். “பழத்தைப் பங்கு போட்டுத் தந்துவிடலாம்” என உமையம்மை சொல்கிறார். நாரதர் அப்படி செய்ய முடியாது எனச் சொல்கிறார். “அப்படியானால் ஒரு போட்டி வைப்போம். உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கே ஞானப்பழம்” எனச் சொல்கிறார் சிவபெருமான். “சரியான முடிவு” என எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். போட்டி துவங்கிய மறுகணமே முருகன் தன் மயிலின் மீது ஏறி உலகம் சுற்றக் கிளம்பி விடுகிறான். விநாயகனோ அங்கிருந்தபடியே நாரதரிடம் கேட்கிறார். ‘நாரதரே! அம்மை அப்பன் என்றால் உலகம். உலகம் என்றால் அம்மை அப்பன்தானே?” எனக் கேட்கிறான். நாரதரால் அக்கருத்தின் உண்மையை மறுத்துவிட முடியுமா? ஆம் என்பதுபோல் தலையசைக்கிறார். “அப்படியானால் அவர்களை வலம்வந்தாலே உலகை வலம் வந்தது போலத்தானே?” என்றபடியே விநாயகன் சிவனையும், உமையாரையும் சுற்றி வருகிறார். நாரதர் உள்ளிட்ட எல்லோரும் ஆடிப்போகிறார்கள். என்றாலும், விநாயகரின் நேர்மைச் செயலால் ஞானப்பழம் அவருக்கே கிடைக்கிறது. இங்கு ஒன்றை வலியுறுத்திச் சொல்லிவிடுகிறேன். இது வெறும் கதை மட்டுமே. இச்சம்பவத்தை வரலாறாகத் திரித்துச் சொல்லும் எண்ணம் எமக்கில்லை. ஆனால், இக்கதையின் தெரிந்த செய்திகள் வழியே நான் அதுவரை தெரிந்திராத அனுபவத்தைப் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொண்டாக வேண்டும். நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம். அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு. “உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான். விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான். எளிமையாகச் சொல்வதானால் முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம். யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1) ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது. 2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். 3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 79
அடுத்த கட்டுரைஞானயோகமும் விவாதமும்