https://www.youtube.com/watch?v=pec9IrCVDf4&feature=youtu.be
ஜெ
நீங்கள் ஜெனரல் பிக்சர்ஸ் ரவி பற்றி எழுதியிருந்த அன்றைக்குத்தான் நான் அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படத்தைப்பார்த்தேன். தொடர்ந்து வேகமாகச்செல்லும் படங்களைப் பார்த்து சலித்துப்போயிருந்ததனால் மெதுவாகப்போகும் இந்த கிளாஸிக் படம் என்னை மிகவும் கவர்ந்தது. பலகோணங்களில் தொடர்ந்து சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. stunning visuals கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படிச் சாதாரணமாகப் போகும் ஒரு படத்தின் visuals என் கண்ணிலே தங்கியிருக்கும் என்று நினைக்கவில்லை.
முக்கியமான காரணம் என்னவென்றால் நானும் ஒரு எலிதான். எலிப்பத்தாய வாழ்க்கைதான். இது நவீன மனிதனுடைய நரகம் என்று தோன்றுகிறது. சார்த்ர் other தான் நரகம் என்றார். தப்பு. nothing happens என்பதுதான் உண்மையான நரகம்
நான் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்தில் ஒரு எழுத்தாளர் இதில் எலிப்பொறி ஒரு குறியீடு என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது, அப்புறம் ஏன் இதோ குறியீடு என்று கூவவேண்டும் என்று எழுதியிருந்ததை வாசித்தேன்.
அன்புள்ள சிவகுமார்,
உங்களுக்கு என்ன வயது என்று தெரியவில்லை. நான் சென்ற இருபத்தைந்தாண்டுகளாக சினிமாவில் வந்துகொண்டிருக்கும் மாற்றத்தைக் கண்கூடாகக் கண்டவன். சினிமா தொழில்நுட்பத்தை பெரிதும் சார்ந்த கலை. தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த பாய்ச்சல் சினிமாவின் அழகியலையே பெருமளவு மாற்றிவிட்டது.
முக்கியமான மாற்றம் என்பது ஏராளமாக சினிமா பார்க்கக்கிடைப்பதுதான். எண்பதுகளில் சினிமாவே குறைவு. நல்ல சினிமாவை காத்துக்கிடந்து ஃபிலிம் சொசைட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவேண்டும். அதைப்பார்ப்பதற்கான மனநிலை முன்னரே உருவாகிவிட்டிருக்கும்
இன்று எங்கும் சினிமா கொட்டிக்கிடக்கிறது. ஆகவே எந்த சினிமா நம்ம அறைந்து இழுத்துக்கூப்பிடுகிறதோ, எதற்கு விளம்பரமும் ஓசையும் இருக்கிறதோ அதை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். அப்படிக் கவர்வதற்கு மிக எளிய வழி என்பது வன்முறை, பாலியல் சித்தரிப்பு மூலம் அதிர்ச்சியளிப்பது
சமீபத்தில் திருவனந்தபுரம் திரைவிழாவில் கிம் கி டுக்கிடம் ஒரு வினா. ‘கவன ஈர்ப்பு என்பதற்கு அப்பால் இந்தப்படங்கள் வழியாக நீங்கள் அடைவது என்ன?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை. திரைவிழாக்களில் வரும் படங்களிலேயே பாதிக்குமேல் மனப்பிறழ்வை சித்தரிக்கக்கூடியவை. அத்தகைய படங்கள் உடனடியான ஒரு தாக்கத்தை எளிய ரசிகர்களிடம் உருவாக்குகின்றன.
இந்த அலை உலகமெங்கும் நல்ல சினிமாவுக்கு எதிரான வலுவான சக்தியாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள். எண்பதுகளில் ஆஸ்கார் விருதை அறிவுஜீவிகள் கவனிக்கும் வழக்கமே இருக்கவில்லை.கான், கார்லேவாரி, லண்டன் , வெனிஸ், டோக்யோ திரைவிழாக்களின் படங்களே பேசப்பட்டன. இன்று அவ்விழாக்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பல திரைவிழாக்களே ஆடம்பரநிகழ்வுகளாக ஆகிவிட்டன
இந்நிலையில் திரைரசனையிலேயே பெரிய மாற்றம் வந்திருக்கிறது. கலைப்படம் – வணிகப்படம் என்னும் கோடு கண்ணுக்குத்தெரியாததாக ஆகிவிட்டிருக்கிறது. கலைப்படங்கள் என்பவையும் வணிகப்படங்களைப்போலவே வன்முறையையும் பாலியலையும் மிகைப்படுத்துபவையாக உள்ளன என்ற நிலையில் அவற்றைப்பார்க்க எந்த வகையான தனிமனநிலையும் தேவையில்லை என்றாகிவிட்டிருக்கிறது.
இப்படி ‘அடிக்கக்’ கூடிய படங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் இன்று சினிமா பற்றி அதிகம்பேசுகிறார்கள். உண்மையில் இவர்கள் வணிகசினிமாவுக்குமேல் படம் பார்க்கும் ரசனைத்தரம் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் கலைப்படங்களாக வருபவற்றிலும் கணிசமானவற்றை வன்முறைக்காகவும் பாலுணர்வுக்காகவும் பார்க்க்க முடியும் – சிறந்த உதாரணம் கிம் கி டுக் தான்
கலைப்படங்களைப் பார்ப்பதற்கான அழகியல் பயிற்சி இல்லாதவர்கள் அவற்றைப்பார்க்கையில் உருவாகும் மேலோட்டமான குறிப்புகளில் ஒன்றே நீங்கள் சொன்னது. அவற்றை இன்று பல இடங்களில் பார்க்கமுடிகிறது, சினிமாவுக்கான இதழ்களில்கூட
நீங்கள் எழுதியதை வாசித்தபின் இணையத்தில் தேடி தமிழில் எலிப்பத்தாயம் பற்றி எழுதப்பட்ட நல்ல விமர்சனம் ஒன்றை கண்டுபிடித்தேன். சரியான கோணத்தில் எழுதப்பட்ட விமர்சனம் அது.
எலிப்பத்தாயம் போன்ற படங்கள் எழுபது எண்பதுகளின் கலைப்பட அலையைச் சேர்ந்தவை.அவற்றின் அழகியல் சில குறிப்பிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது.
1. நிலக்காட்சி அல்லது கதாபாத்திரங்களை முன்னிறுத்தி அவற்றின் நுட்பமான மாறுதல்கள் வழியாகவே தொடர்புறுத்தக்கூடியவை அவை. தர்கோஸ்வ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் நிலக்காட்சியின் நுட்பமான சித்தரிப்பை முதன்மையாக காட்டுகிறது.
அடூர் முகங்களை முதன்மையாக கருதும் திரைக்கலைஞர். சூழல் எல்லாம் அவருக்கு இரண்டாம்பட்சம்தான். அடூரின் எலிப்பத்தாயம் அந்தக் கதாபாத்திரங்களின் தோற்றங்களையே அடிப்படைச் சித்தரிப்பாகக் கொண்டது. மெதுவாக அவர்களின் முகங்களில், தோற்றத்தில் உருவாகும் மாற்றமே அந்தப்படம் காட்டவிரும்புவது. படம் தொடங்கி முடியும்போது மூன்று மையக்கதாபாத்திரங்களும் மாறுவது தெரியாமலேயே மாறியிருக்கிறார்கள். அதுதான் அவர் உணர்த்தவிரும்புவது.
2. உண்மையான வாழ்க்கைச்சூழலில் உள்ள நிதானமான நகர்வை திரையில் கொண்டுவர முயல்பவை இத்தகைய படங்கள். ஆகவே வணிகசினிமாவுக்கான வேகமான படத்தொகுப்பு இருக்காது. வெவ்வேறு கோணங்களில் இயல்பான நிகழ்வுகளை சாதாரணமாகக் காட்டிக்கொண்டிருக்கும். அதனூடாக பார்வையாளனே படத்துக்குள் இருந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வை உருவாக்க முனையும். அடூர் திரைப்படத்தில் எது ‘தெரிந்தாலும்’ அது கலை அல்ல என்று நம்புபவர்.
3. வாழ்க்கையின் நுட்பமான சில இக்கட்டுகளை, கேள்விகளை வாசகனே சென்று தொடும்வண்ணம் குறைவாகச் சொல்லி நின்றுவிடும் தன்மை கொண்டவை. அடூரின் படங்களில் வாசகன் செல்லவேண்டிய திசை நோக்கிய சில குறிப்புகளை மட்டுமே காட்சிகள் உணர்த்துகின்றன.
இந்த அழகியலுக்கு நாம் கொஞ்சம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் இப்படங்களைப் பார்க்கமுடியாது. பிரக்ஞபூர்வமாக அதை பயிலவேண்டியதுதான். ஆரம்பக்காட்சிகளில் எலிப்பத்தாயத்தின் இரு பெண்களின் முகங்களிலும் உள்ள கனிவை கவனிக்காதவர்கள் அவை மெல்லமெல்ல மாறுவதை உணரமுடியாது. எலிப்பத்தாயத்தை ரசிக்கவும் முடியாது.
இத்தகைய படங்கள் இலக்கியத்திற்கு மிக அண்மையாக இருந்தன. அதை ஒரு நாவல் படித்த அனுபவம் என்று ராஜரத்தினம் சொல்கிறார் . ஒரு வாழ்க்கைக்குள் சென்றுகொண்டே இருப்பதாகத் தோன்றுவது அது. ஆகவே இலக்கியங்களை ரசிப்பதற்கு அவசியமான சில அடிப்படை ரசனைப்பயிற்சி இத்தகைய படங்களை ரசிப்பதற்கும் தேவை. அது இல்லையேல் பொத்தாம்பொதுவான சில மதிப்பீடுகளே உருவாகும்.
அதில் ஒன்றே நீங்கள் சொல்லும் எழுத்தாளரின் கருத்து. இந்தப்படத்தில் எலிப்பொறி குறியீடு அல்ல. குறியீடுகள் என்பது ஒரு சித்தரிப்பின் அடிப்படை நெசவின் பகுதியாக இருக்கக்கூடிய உருவகங்கள். அவை புடைத்துத் தெரியலாகாது. அவற்றை பார்வையாளன் தன் இயல்புக்கு ஏற்ப அடையாளம் கண்டு பொருள்கொள்ளலாம். மிகச்சிறந்த உதாரணம் பாதேர்பாஞ்சாலியில் அப்புவும் துர்க்காவும் பார்க்கும் ரயில். [குறியீடுகளை விமர்சகன் விளக்கக் கூடாது.]
எலிப்பொறியை ஏன் குறியீடு என இவர் சொல்கிறார் என்றால் ஒரு படைப்பில் வரும் அர்த்தமேற்றப்பட்ட பொருள் எல்லாமே குறியீடு என்று வணிகசினிமாவை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொண்டிருப்பதனால்தான்
எலிப்பொறியை இப்படத்தில் எவரும் கண்டுபிடிக்கவேண்டியதில்லை, எலிப்பத்தாயம் தன் தலைப்பிலேயே அதைச் சுட்டிக்காட்டிவிட்டது. முதல் ஷாட்டே எலி கடித்துவிட்டது என்பதுதான். அதன்பின் எலிப்பொறியை எடுத்து தூசி தட்டி எலியைப்பிடிப்பது என படம் நீள்கிறது. அதாவது அதை ஒரு கவியுருவகமாகவே [மெட்டஃபர்] இயக்குநர் முன்வைக்கிறார்.
சினிமா, நாடகம், நாவல் போன்றவற்றில் கவியுருவகத்திற்கு பெரிய இடம் உண்டு. [உதாரணம் நாற்காலிக்காரர் நாடகத்தில் நாற்காலி, புளியமரத்தின் கதையில் புளியமரம் ஜோஸ் சரமாகோவின் Blindness நாவலின் பார்வையின்மை] பெரும்பாலும் ஆசிரியரே அது ஏதோ ஒன்றின் உருவகம் என சொல்லிவிடுகிறார். அதன் பின் அந்த உருவகத்தை வாசகன், பார்வையாளன் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து குறிப்புகளையும் அளித்து உரிய இடைவெளிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்செல்கிறார்.
எலிப்பொறி எதைச்சுட்டுகிறது என அறிந்ததும் அது முடியவில்லை, அங்கேதான் படமே ஆரம்பிக்கிறது.எலிப்பொறியை நோக்கும் பெண்களின் கண்களில் உள்ள பாவனை முக்கியமானது. அந்த எலியை அவர்கள் ரசிக்கிறார்கள். எலியையே மெல்லிய கேலியுடன் பார்க்கிறார்கள். அதை பல கோணங்களில் மென்மையாகச் சுட்டிச்செல்கிறார் அடூர்
மெல்ல அந்த மனநிலை மாறுகிறது. பொறிக்குள் சிக்கிய எலியின் பதைப்பு நிறைந்த கண் தெரியும் ஒரு காட்சி பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்று. படம் விரிய விரிய எலிப்பொறி என்ற உருவகம் பல கோணங்களில் விரிக்கப்படுகிறது.
எலிப்பொறியில் சிக்கியிருப்பது யார்? அந்தப்பெண்களா?அவர்களை அண்டிவாழும் சகோதரனா? அந்த வீடுதான் எலிப்பொறியா? அந்தக்காலகட்டமா? பண்பாடா? அவர்கள் வாழும் காலமா? எல்லாகோணங்களிலும் படம் காட்சிகளை முன்வைத்துக்கொண்டு செல்கிறது. ஆகவேதான் அது முதன்மையான கலைப்படைப்பாக இன்றும் கருதப்படுகிறது.அதை இன்று ரசிக்க சமகால பொதுரசனையை விட சற்று மேம்பட்ட பயிற்சி தேவை, அவ்வளவுதான்.
நன்றி சிவக்குமார். இணையத்தில் இந்தப்பிரதி அழகாகவும் புதியதாகவும் உள்ளது. அக்காலத்தைய படங்கள் இத்தனை துல்லியமாகக் கிடைப்பதில்லை. பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் விருது கிடைத்த ஒரே காரணத்தால்தான் பிரதி இத்தனை பாதுகாப்பாக இருந்திருக்கிறது.
எழுபது எண்பதுகளில் நாங்கள் விழுந்து விழுந்து பார்த்த ருமேனிய, ஹங்கேரிய, இத்தாலியப் படங்கள் இன்று எவராலாவது பார்க்கப்படுகின்றவா? ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி மைக்கலாஞ்சலோ அண்டோனியோனி எல்லாம் காதில் விழுந்தே நெடுநாட்களாகின்றன
ஜெ