இலக்கியமும் மீறல்களும்

ஜெ,

சமீபத்தில் ஒரு குறிப்பில் வெறுமே பாலியல் வன்முறை அதிர்ச்சிகளை மட்டுமே இலக்கியம் என நம்பும் ‘அமெச்சூர்’ எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் அத்தகைய வாசகர்கள் பலரை என் நண்பர்களாக வைத்திருக்கிறேன். கிம் கி டுக்கின் படங்களைப் பார்த்துவிட்டு அதுதான் கலை என்பார்கள். வெர்னர் ஹெர்ஷாக் பெயரைச்சொன்னால் bore என்பார்கள். அவர்கள் இதை பெரிய கலை என்றே நம்புகிறார்கள். வாதிடவே முடியவில்லை. வாதிடப்போனால் ‘வெளியே வா’ என்று நம்மை குனிந்து பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களிடம் எப்படிப் பேசுவது?

ராஜ்மோகன்

வெர்னர் ஹெர்சாக்
வெர்னர் ஹெர்சாக்

அன்புள்ள ராஜ்மோகன்,

வாசிப்பின் படிநிலைகளைக்கொண்டு இதைப்புரிந்துகொள்ளலாம். பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் வணிக எழுத்தே இயல்பாக நம் சூழலில் அறிமுகமாகிறது. இளமைமுதல் நெடுங்காலம் அதைத்தான் வாசிக்கிறார்கள். ஒருசாரார் தற்செயலாக இலக்கியத்திற்குள் வருகிறார்கள்.

வணிகஎழுத்தின் விதி ஒன்றே, ஈர்த்து கடைசிவரைக் கொண்டுசென்று சேர்ப்பது. ஆகவே ‘அடுத்தது என்ன?’ என்பதே அவற்றை வாசிக்கும் நிலை. அதில் வடுவூரார், ராஜேஷ்குமார் முதல் கல்கி சுஜாதா வரை பலவகைகள்.

இந்த எழுத்தில் சலித்து அடுத்தகட்ட வாசிப்புக்கு வருபவர்கள் இலக்கியத்தின் விளிம்புக்கு வந்துசேர்கிறார்கள். இவர்கள் இரண்டு வகை.

முதல்வகையினர் வணிக எழுத்து வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்று வாசிப்பது ‘பயன் தருவதாக’ அமையவேண்டும் என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆகவே அவர்கள் ‘கருத்தைச் சொல்லும்’ எழுத்துக்களை வந்தடைகிறார்கள்.

கருத்துச்சொல்லும் எழுத்துக்களில் சமூக ஒழுங்கு சம்பந்தமான கருத்துக்களைச் சொல்பவை, முற்போக்குப் புரட்சிகரக் கருத்துக்களைச் சொல்பவை என பலவகைகள் உண்டு. வணிக எழுத்தை மீறி வந்து இலக்கியம் வாசிக்க விழைபவர்கள் பெரும்பாலும் இந்தப்புள்ளியில் நின்றுவிடுவதைக் காணலாம்

சமீபகாலம்வரை வணிக எழுத்திற்கு வெளியே செல்ல இந்தஒரு வழியே இருந்தது. இப்போது இரண்டாவது ஒரு வழியும் உள்ளது. அது ‘அதிர்ச்சியூட்டும் எழுத்து’

வணிக எழுத்து பரவலான வாசகர்களுக்காக எழுதப்படுவதனால் அது ஓர் எல்லையை தனக்கென வரையறுத்துக்கொள்ளவேண்டும். அது அச்சமூகத்தின் பொதுவான ஒழுக்க மனத்தடைகள் சார்ந்ததாக இருக்கும்.

அதாவது வணிக எழுத்து பாலியல்- வன்முறை- மிகையுணர்ச்சி ஆகிய மூன்றாலும் கட்டமைக்கப்பட்டதே. ஆனால் முதலிரண்டையும் அது கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்

வணிக எழுத்தில் சலித்த இளம் வாசகன் பாலியல்- வன்முறை இரண்டுக்கும் வணிக எழுத்து கொண்டுள்ள சுயதடைகளை மீறிச்செல்லும் எழுத்துக்களை உடனே இலக்கியம் என எண்ண ஆரம்பிக்கிறான்.

ஏனென்றால் அவன் அதுவரை வாசித்த எழுத்துக்களில் இல்லாதவை அவை. சுயகட்டுப்பாடு கொண்ட வணிக எழுத்து அந்த வாசகனுக்கு பழகியிருப்பதனால் இவற்றின் எல்லைமீறல் படபடப்பையும் கிளர்ச்சியையும் அளிக்கிறது. அவன் அகம் நிலைகுலைகிறது. அதை தீவிர இலக்கிய அனுபவம் என அவனே கற்பனைசெய்துகொள்கிறான்.

இது உலகமெங்கும் நிகழ்வதுதான். ஏனென்றால் சமூகக்கட்டுப்பாடுகள் மிகமிக வலுவானவை. அவை சிந்தனையையே இளமைமுதல் பாத்திகட்டிவிட்டிருக்கின்றன. ஆகவே அவை மீறப்படும்போது பெரும்பரவசமும் விடுதலை உணர்வும் உருவாகிறது. இளம் வாசகன் மனக்கிளர்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகிறான். அதை சிந்தனைப்பாய்ச்சல் என எண்ணிக்கொள்கிறான்

லாக்ளோஸ்
லாக்ளோஸ்

ஆனால் உண்மையில் அப்படி அல்ல. சமகாலத்தின் எல்லைகளைக் கொஞ்சம் மீறுவது என்பது இளமையின் மிக இயல்பான ஒரு நிலை. ஒவ்வொரு முறையும் இன்னும் அதிக டோஸ் தேவைப்படுகிறது அதற்கு. ஆகவே கடைசியாக வந்தவரையே சிறந்தவர் என்பார்கள்

நான் பார்த்தவரை நுண்ணுணர்வுள்ள இளைஞனே கூட அது பெரிய விஷயமல்ல என உள்ளூர அறிந்திருப்பான். அதிலும் இன்று பாலியலெழுத்தும் படக்கலையும் எங்கோ சென்றுவிட்டன. இணையத்தின் 90 சதவீதம் பாலியல் விஷயங்கள்தான். பெரும்பாலானவர்கள் 9 வயதில் பார்த்துவிடுகிறார்கள். பெரும்பாலான கணிப்பொறியின் ஓரம் அது எப்போதும் திறந்திருக்கிறது. இருந்தும் ஒருவன் இவ்வெழுத்துக்களால் கிளர்ச்சியடைவான் என்றால் அவன் தான் ஒருமாதிரி அம்மாஞ்சி.

லாக்லோஸின் Dangerous Liaisons சென்ற நூற்றாண்டில் வெளிவந்தபோது பிரான்ஸே கொந்தளித்தது. ஆனால் இன்று அதில் மீறல் என ஏதுமில்லை. மீறலுக்கான மீறல் என்பதல்ல கலை என்பது. அதை மட்டுமே ரசிப்பதென்பது ஒரு ஆரம்பநிலை மட்டுமே.

இலக்கியவாசகன் என்பவன் இந்த இரு கட்டங்களில் விழுந்து அதை தன் சொந்த வாசிப்பால் மீறி வரவேண்டியவன். அந்த இருகட்டங்களிலும் அவன் இருக்கும்போது அவனை எளிதில் உடைக்க முடியாது. ஏனென்றால் அவன் மிகுந்த நம்பிக்கையுடன் , தீவிரத்துடன் இருக்கிறான். புரட்சிகர எழுத்தின் வாசகனிடமோ எல்லைமீறிய எழுத்தின் வாசகனிடமோ பேசவேண்டுமென்றால் அவனே எங்கோ அந்த வாசிப்பின் மேல் சிறு ஐயம் அடைந்திருக்கவேண்டும். இல்லையேல் சாத்தியமில்லை.

மேலும் ஒரு நுணுக்கமான விஷயம் உண்டு. சிந்தனையின் கட்டமைப்பை தாக்கி புதிய எல்லைகளை உருவாக்கும் ஆக்கங்களுக்கும் கருத்துச்சொல்லும் எழுத்துக்களுக்கும் நுட்பமான வேறுபாடுண்டு. தன் கலைத்தன்மையின் தேவைக்கேற்ப எல்லைகளை மீறிச்செல்லும் எழுத்துக்களுக்கும் எல்லைமீறலின் அதிர்ச்சியை மட்டும் அளிக்கும் எழுத்துக்களுக்கும் பெரிய வேறுபாடுண்டு

இளம் வாசகன் அவனே வாசித்து அறியாமல் இருந்தால் வாதிட்டு இவ்வேறுபாட்டை அவனிடம் சொல்லிப்புரியவைக்க முடியாது. இந்த நிலையில் ஒரு வாசகன் அவனுடைய 35 வயதுக்குள் இருப்பான் என்றால் அவனை நம்பலாம், அவனுக்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் அப்படி இருந்தான் என்றால் ‘சரிதான் சார், வணக்கம்’தான் சிறந்த வழி.

இலக்கியம் என்பது வெளியே நிகழும் வாழ்வுக்கு நிகரான ஓர் அகவாழ்க்கையை உருவாக்கி நிலைநிறுத்துவது. அவ்வாறாக பண்பாடு, வரலாறு, தத்துவம் ஏன் அறிவியல் அனைத்தையும் தன் போக்கில் மறுவரையறைசெய்தபடியே செல்வது. அதன்வழியாக முழுமையான ஓர் அகவாழ்க்கையை அளிப்பது. மானுடத்தின் கனவுகளை மொழி என்னும் ஊடகம் வழியாகக் பொதுவாகக் கட்டமைப்பது அது

அதைநோக்கி வருபவனே நல்ல வாசகன். கிம் கி டுக் போல வெர்னர் ஹெர்ஷாக் அனைவருக்கும் உரியவரல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஇருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ஜெயகாந்தன்