தூரன்:கடிதங்கள்

டியர் சார்,

இன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர  வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் தனித்து இருப்பது என்பது கொஞ்சம் எரிச்சலைத் தரும்.  அந்த எரிச்சலில்தான் இன்று முழுவதும் இருந்தேன்.


கிளம்பலாம் என்று நினைக்கும் போது உங்களின் பெ.தூரன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்த மாத உயிர்மையில் கவிஞர். சுகுமாரன் தூரன் பற்றிய நல்லதொரு கட்டுரையை எழுதியிருந்தார். தூர‌ன் ப‌ற்றி நிறைய‌ப் ப‌டிக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். 

 

உங்க‌ளின் க‌ட்டுரை வாசிக்கும் போது ஒரு செய்தி மிக‌ப்பெரிய‌ ச‌ந்தோஷ‌த்தை எனக்கு கொடுத்த‌து. தூர‌ன் வைர‌விழா ப‌ள்ளியில் ப‌ணியாற்றினார் என்ப‌து. பள்ளியின் பெயரைப் பார்த்தவுடன் “அட தூரன் ந‌ம்மாளு” என்ற எண்ண‌ம் வநதது. அந்த ஸ்கூலில் நான் அரைடிரவுசர் அணிந்து அரைஞாண் கயிறு பெல்ட் அணிந்து திரிந்தது சட்டென்று ஞாபகத்திற்கு வந்து விட்டது.

வைர‌விழா ப‌ள்ளி 1898ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. பெய‌ர்க் கார‌ண‌ம் சுவார‌சிய‌ம். அந்த‌ ஆண்டு விக்டோரியா ஆட்சிக்கு வ‌ந்து அறுப‌தாண்டுகள்(வைரவிழா) என்பதால் இந்தியா முழுவ‌தும் அதை கொண்டாடுகிறார்கள்(இந்தியா முழுவதும் என்பது தவறு.உலகம் முழுவதும் என்பதே சரி. பினாங்கு நகரில் கார்ன் வாலிஸ் கோட்டையருகே “வைரவிழா” மணிக்கூண்டை அதே ஆண்டில் கட்டியிருக்கிறார்கள்). கோபியில் இருந்த‌ மிராஸ்தார‌ர்கள் ஊரில் ப‌ள்ளிக் கூட‌ம் க‌ட்டுவ‌தாக முடிவெடுத்தார்க‌ள். கட்டி முடித்து அதற்கான பெயரையும் வைர‌விழா என்றே வைத்துவிட்டார்கள். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி எல்லாம் பிற்பாடு சேர்ந்து கொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் வெண்மை புர‌ட்சிக்கு வித்திட்ட‌ டாக்ட‌ர்.வ‌ர்கீஸ் குரிய‌ன் ஓரிர‌ண்டு ஆண்டுக‌ள் இந்த‌ப்ப‌ள்ளியில் ப‌டித்திருக்கிறார். கு. அருணாச்சலக் கவுண்டர் பள்ளியின் பழைய மாணவர். நூறாண்டு தாண்டிவிட்ட பள்ளியில் இப்படி ஒரு பெரிய லிஸ்ட் தயாரிக்க முடியும். ஆனால் பட்டியல் முழுமையடையுமா என்பது சந்தேகம்தான்.

காந்திய‌டிக‌ள், வினோபா போன்ற‌வ‌ர்க‌ள் பள்ளிக்கு வ‌ந்து சென்றிருப்ப‌த‌ற்கான‌ குறிப்பினை எல்லாம் நான் ப‌ள்ளியில் ஏதேனும் சான்றுக‌ளில் பார்த்திருக்கிறேன்.
 
ஆனால் தூர‌ன் ப‌ற்றிய‌ ஒரு அறியாமை அங்கு இருந்து கொண்டிருக்கிற‌து. 1998௧ ஆம் ஆண்டு நான் இல‌க்கிய‌ ம‌ன்ற‌ச் செய‌லாள‌ராக‌ இருந்த‌ போது ப‌ள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடினோம். அப்பொழுது கொண்டு வ‌ந்த‌ நூற்றாண்டு ம‌ல‌ரிலோ அல்ல‌து அர‌ங்குக‌ளிலோ தூர‌ன் பெய‌ரை முன்னெடுத்த‌தாக‌ ஞாப‌க‌மில்லை.

எப்ப‌டி இத்த‌கைய‌ ஒரு ஆளுமையை த‌வ‌ற‌விட்டோம் என்ப‌தும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து. அடுத்த‌ முறை கோபி செல்லும் போது(அநேக‌மாக‌ என‌து திரும‌ண‌த்திற்குத்தான்) இத‌னை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.

த‌ங்க‌ளின் குறிப்பு இன்றைய‌ வ‌ற‌ட்சியில் சார‌ல் வீச‌ச் செய்த‌து என்று சொன்னால் ‘பிட்’ ஓட்டுறான் பாரு என்று யாராவ‌து திட்ட‌லாம். ஆனால் நான் சொல்வ‌து உண்மை. உண்மையைத் த‌விர‌ வேறொன்றுமில்லை யுவ‌ர் ஆன‌ர்.

குறிப்பு: தூர‌ன் கூட்ட‌ம் என்ற‌ ஒரு குல‌ப்பிரிவு கொங்கு வெள்ளாள‌க் க‌வுண்ட‌ர்க‌ளில் உண்டு.(தூரன் கூட்டம்,கூறை கூட்டம், பயிரன் கூட்டம், ஓதாளன் கூட்டம்,சீர்க்காரன் கூட்டம், முழுக்காதன் கூட்டம் etc.,)   த‌ற்ச‌ம‌ய‌ம் தூர‌ன் குணா என்னும் பெய‌ரில் ந‌ண்ப‌ர் ஒருவர் சிற்றித‌ழ்க‌ளில் க‌விதை எழுதி வ‌ருகிறார்.

பிரிய‌த்துட‌ன்,
வா.ம‌ணிக‌ண்ட‌ன்.

அன்புள்ள வா மணிகண்டன்

நலம்தானே? திருமணத்துக்குப் பின்னர் பண்டிகைகளில் அலுவலகம்போவதற்கு ஆண்களுக்கு உரிமை கிடையாது. அதை மனதில் கொள்ளவும்.

தீபாவளிக்குப் படுத்து தூங்கி எழுந்து மலையடிவாரத்தில் ஒரு நெடுந்தூர நடைசென்று திரும்பினோம். மலையே கண்ணுக்குப்படவில்லை ஒரே மேகக்கூட்டம். ”புல்லு நாணல் இப்டி எதைப்பார்த்தாலும் ஹீரோ இப்டித்தான் அப்பா மறைஞ்சு நிக்கும்” என்றாள் சைதன்யா. பொதுவாக நாய்களுக்கு மறைந்து நிற்பதில் ஒரு அலாதி குஷி இருக்கிறது. அதன் பழங்கால வேட்டை ஞாபகம்.

தூரன் பற்றிய அறிமுகம் இலக்கியவட்டாரத்திலேயே குறைவு. அவர் மறைக்கப்பட்டதற்கு அவர் உறுதியான காங்கிரஸ்காரர் என்பதும் இப்போது காங்கிரஸ்காரர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாது என்பதும்தான் காரணம்.

நம்முடைய நாட்டில் நூறுவருடம் முன்பு பொதுக்கல்வி பற்றிய ஒரு ஆர்வம் தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒரேபோல பீரிட்டெழுந்தது.  அது இந்திய தேசிய எழுச்சியின் ஒரு விளைவுதான்.  இன்றைய இந்தியா உருவாக் ஆரம்பித்தது உண்மையில் 1900 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில்தான். திருவிதாங்கூரில் மன்னர் உதவியுடன் மன்னர் பெயரில் பல கல்விநிறுவனங்கள் அமைந்தன– அஜிதன் படிக்கும் எஸ்.எல்.பி பள்ளி அதில் ஒன்று [சேதுலட்சுமிபாய் நினைவு பள்ளி] பெரும்பாலான ஊர்களில் கிட்டத்தட்ட 100 வயதான பழைய கல்விநிறுவனங்கள் காணப்படும்.  அதேபோல 100 வயதான இதழ்களும் எல்லா மொழியிலும் சில இருக்கும்.

இவற்றுக்கு நான்கு தலைமுறைக்கால இந்திய எழூச்சியின் கதை சொல்வதற்கு இருக்கும். ஆரம்பகால தலைமுறை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் வரலாறு கொண்டதாக இரண்டாம் தலைமுறை அறிவுத்துறைச் சாதனைகளின் வரலாறு கொண்டதாக மூன்றாம் தலைமுறை அறிவியல் சார்ந்த தொழில்களில் வெற்றிவரலாறு கொண்டதாக இருக்கும். முதல் தலைமுறை சாதனையாளர்களில் முதலிரு சாதியினர் அதிகமாக இருப்பார்கள். இன்றைய தலைமுறையினரில் அடித்தட்டுச் சாதியினரும் சம அளவில் சாதனையாளர்களாக இருப்பார்கள். இது நவின இந்தியாவின் ஒரு நுண்வரலாறு.

முதல் இரு தலைமுறையில் உள்ள ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அன்பு பற்றி அத்தலைமுறையினர் உணர்ச்சிபூர்வமாக பதிவுசெய்திருப்பார்கள். அவர்கள் எந்த தளத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அந்தப் பதிவுகளில் அக்கால வெள்ளையர் மற்றும் பிராமண ஆசிரியர்களைப்பற்றிய நெகிழ்ச்சிகள் இருக்கும் என்பதை தமிழில் சுயசரிதைக்குறிப்புகளைக் கவனித்தால் மீண்டும் மீண்டும் காணலாம். இது இந்தியா முழுக்க உள்ள நிலைமை. கற்பித்தல் என்பது மிகவும் கௌரவமான அன்றாக கருதப்பட்டதால் முதன்மைத்தகுதி கொண்டவர்கள் ஆசிரியப்பணிக்கு வந்தார்கள். அவர்கள் விரும்பித் தேர்வுசெய்த தொழில் ஆகையால் அவர்களுக்கு அதில் அர்ப்பணிப்பு இருந்தது.

அன்று வெள்ளைய ஆட்சி நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் ஆசிரியர்களாகப் பணியாற்றிய வெள்ளையர் அந்த அரசியல் முரண்பாடுகளுக்குள் செல்லவேயில்லை. அவர்கள் ஆசிரியர்களாகவே இருந்தனர். தேசியப்போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மாணவர்களைப் பாதுகாக்க வெள்ளைய அரசுடன் மோதிய வெள்ளைய ஆசிரியர்கள்கூட உண்டுஎனபதை பல சுயசரிதைகளில் காணலாம்.

மூன்றாம் தலைமுறை முதல் கற்பித்தல் என்பது வெறும் தொழிலாக ஆகியது. அதை தவிர்க்க முடியாது. ஏனென்றால் இன்று சமூகமே தொழில்முறைச் சமூகமாக உள்ளது. இன்று ஆசிரியர் சேவை செய்ய்யவில்லை என்பதில் பொருள் இல்லை. இன்று தொழில்முறை நெறிகளும் விதிகளும் கல்வித்துறையில் பேணப்பட வேண்டும். அவை தனியார் கல்விநிறுவனங்களில் பேணப்படுகின்றன. அரசுக் கல்விநிறுவனங்களில் பேணப்படுவதில்லை. ஆகவே பெரும் வரலாறு கொண்ட கல்வி நிறுவனங்கள் மெல்லமெல்ல அழிந்துகொண்டிருக்கின்றன.

ஜெயமோகன்
*****

அன்புள்ள ஜெ

தூரன் பற்றிய கட்டுரை மனதை நெகிழச்செய்தது. இன்று எல்லா சாதிகளும் தங்களில் உள்ள முக்கியமான மனிதர்களைக் கண்டுபிடித்து முன்னிறுத்துகிறார்கள். வீரர்கள், வீரர்கள் போன்ற ரவுடிகள், அரசியல்தலைவர்கள், நடிகர்கள் என்று வெவ்வேறு மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இந்தப்பட்டியலில் பெரும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஞானிகள் போன்றவர்கள் இடம்பெறுவதே இல்லையே. இல்லையென்றால் கொங்குவேளாளர் சாதியின் பெருமிதப்பட்டியலில் பெ.தூரனும், ஆர்.ஷண்முகசுந்தரமும், சித்பவானந்தரும் இடம்பெற்றிருக்க வேண்டுமே. அவர்களை அறிந்த கவுண்டர்களே சிலர்தானே?

இவர்களை சாதிச்சிமிழுக்குள் அடைக்க நான் இதைச் சொல்லவில்லை. சாதியால் அளவிடப்படவேண்டியவர்கள் அல்ல இவர்கள். ஆனால் எப்படியோ இன்று எல்லாரும் சாதிகளாக திரண்டுகொள்கிறார்கள். அப்படி திரளும்போது தங்கள் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக அவர்கள் எதைக் காட்டுகிறார்கள் என்பது முக்கியமல்லவா?

அதேபோல இன்னொன்றும் தோன்றியது. அதாவது, திருப்பூர் குமரன் போன்றவர்களை நாம் மிக வியந்து போற்றி பாராட்டி பாடநூல்களில் எல்லாம் படிக்கிறோம். கொடிகாத்த குமரன் என்றால் தமிழ்நாட்டில் எவருக்கும் தெரியாமல் இருக்காது. குமரனின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதைவிட முக்கியமான முன்னுதாரணம் பெ.தூரன் அல்லவா?

குமரன் உணர்ச்சிகரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். கொடியைக் காப்பதற்காக உயிர்துறந்தார். அது ஒரு குறியீடு அவ்வளவுதான். ஆனால் தூரன் தன் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் நம் சமூகத்துக்காக தன்  மொத்த உழைப்பையும் செலவிட்டார். பயன்கருதாத பெரும் பணியைச் செய்தார்.சாதனைகளை ஆற்றினார். தன் உழைப்பிலும் அறிவிலும் ஒரு துளியைக்கூட வீணாக்கவில்லை. குமரன் கொள்கைக்காக இறந்தார். தூரன் கொள்கைக்காக வாழ்ந்தார். சாவை விட வாழ்வுதானே முக்கியம். குமரனின் இடத்தை ஒரு நிமிட உணர்ச்சி வேகம் மூலம் அடைந்து விடலாம். ஆனால் தூரனின் இடத்தை வாழ்நாள் முழுக்க தவம்செய்தால்தானே அடையமுடியும்?

ஆகவே நாம் நம் குழந்தைகளுக்கு குமரனைப்பற்றிச் சொல்லிக்கொடுப்பதைவிட அதிகமாக தூர¨னைப் பற்றித்தானே சொல்லிக்கொடுக்கவேண்டும். ஏன் நாம் செய்வதில்லை?  எனக்குத்தோன்றுகிறது, வீரம் மற்றும் வீரமரணம் என்பதற்கு நாம் அதிகமான முக்கியத்துவம் தருகிறோம் என்று. வீரமும் வீரமரணமும் ஒரு போர்ச்சமூகத்தில்தான் முக்கியமானதாக இருக்க முடியும். இன்றைய நம் சமூகம் போர்ச்சமூகம் அல்ல. இது அறிவார்ந்த சமூகம். இப்போது வீரத்தைவிட அறிவுதான் வழிபடப்படவேண்டும். கல்வியா செல்வமா வீரமா என்று கேட்டால் கல்வி செல்வம் வீரம் என்றுதான் ஒரு நல்ல நாகரீக சமூகம் வரிசைப்படுத்தும்.

நாம் இன்னும் பழைய மனநிலைகளிலேயே இருக்கிறோம். ஆகவேதான் நாம் உணர்ச்சிகரமான வீரவழிபாடுகளில் ஈடுபடுகிறோம். வீரர்களை கண்டுபிடிக்கிறோம். இந்த மனநிலை காரணமாகவே நாம் சமகால அரசியலில் வீரனாக தோற்றம் அளிப்பவர்களைக்கூட போற்றுகிறோம்.  இதிலிருந்து நாம் விடுபட்டால் ஒழிய நம் பிள்ளைகளுக்கு சரியான மனநிலைகளைக் கற்பிக்க முடியாது. மரணம் முக்கியமல்ல வாழ்க்கையே முக்கியம் என்று நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தியாகம் என்பது ஒரு கணநேர ஆவேசத்தில் இல்லை அது வாழ்நாள் முழுக்க ஒரு குறிக்கோளுக்காக நம்மை அர்ப்பணிப்பதில்தான் உள்ளது என்று சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆகவே நமக்கு குமரன்கள் முக்கியம் அல்ல. தூரன்கள்தான் முக்கியம்

இதெல்லாம் என்னுடைய சிந்தனைகள். உங்கள் கட்டுரையை படித்தபோது ஏற்பட்ட நினைவுகள். கோர்வையாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்

செந்தில் பழனிச்சாமி
[தமிழாக்கம்]

முந்தைய கட்டுரைதீபாவளி
அடுத்த கட்டுரைதீபாவளி கடிதங்கள்