இலைமேல் எழுத்து- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நண்பர் கெ.பி. வினோத் (உங்களுக்கு நண்பரென்றால் அவர் எனக்கும் நண்பரே!) கவிஞர் ஞானக்கூத்தனைக் குறித்து எடுத்த ஆவணப்படத்தை உங்கள் தளத்தில் பார்த்தேன். சமீபத்தில், அதுவும் தமிழில், சந்தேகமில்லாமல் நான் பார்த்த மிகச் சிறந்த ஆவணப்படங்களில் ஒன்று இது. ஆற்றொழுக்காக, எந்த விதமான அனாவசிய சலனங்களுமின்றி, எடுக்கப்படும் பொருளை மட்டுமே மையமாக வைத்து தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் தமிழில் அரிதினும் அரிது. நான் இதுவரை பார்த்த தமிழ் ஆவணப்படங்கள் அத்தனையுமே வெற்றுக் கூச்சலும், இரைச்சலும் கொண்டவை. ஜெயகாந்தனைக் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படமும் ஒரு விதிவிலக்கு. அதுவும் நன்றாகவே எடுக்கப்பட்டிருந்தது.

பொதுவில் தமிழ் ஆவணப்படங்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். கெ.பி. வினோத்தின் ஆவணப்படத்தைப் போன்ற தரமான, ஆழமும் அர்த்தமும் தொனிக்கும் பல மலையாள ஆவணப்படங்களையும், பேட்டிகளையும் பார்த்திருக்கிறேன். தமிழில் ஏன் இதுவரை இதுபோன்ற தரமான ஆவணப்படங்கள் வருவதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. நீங்கள் சொன்னது போல தமிழில் இன்னும் பல படைப்பாளிகளும், ஆலயங்களும் இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. சென்ற தலைமுறையின் பல அற்புதமான படைப்பாளிகள் நம் நினைவில் இருந்து மெல்ல, மெல்ல மறைந்து வருகிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் தமிழ்ச் சமூகம் அவர்களை முற்றிலும் மறந்து விட்டிருக்கும். நகர்ப்புறங்களில் வசிக்கும் அடுத்த தலைமுறை தமிழ் படிப்பதில்லை. ஞானக்கூத்தனின் பேத்தியைப் போல. கிராமங்களிலும் இது நடக்கத் துவங்கியிருக்கிறது. இன்னும் இரண்டு தலைமுறைகளில் தமிழும் அதனைப் படிப்பவர்களும் அபூர்வமானவர்களாக ஆகக் கூடும். இந்தச் சூழ்நிலையில் கெ.பி. வினோத்தின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கது. போற்றத் தக்கது. அவர் இதுபோல் இன்னும் பல நல்ல ஆவணப்படங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இன்னொன்று. தமிழ் ஆவணப்படங்களில் காணப்படும் எரிச்சலூட்டும் சத்தமும், கர்ண கடூரமான, சகிக்க இயலாத இசையும், அங்குமிங்கும் அலைந்து கண்ணை வலிக்கச் செய்யும் காமிரா கோணங்களுமின்றி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நிச்சயமாக இனிவரும் தலைமுறைக்கு ஆர்வமூட்டும் என்றே நம்புகிறேன். அவர்களும் இதுபோன்ற தரமான, செலவு அதிகமற்ற படங்கள் எடுக்கக் கூடும். எடுக்க வேண்டும்.

நண்பர் கெ.பி. வினோதிற்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நரேந்திரன்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் காணொளிகள்

முந்தைய கட்டுரைகொற்றவை பித்து- 3
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ஜெகே