‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 1

அஸ்தினபுரியை அணுகுவது வரை முற்றிலும் சொல்லின்மைக்குள் ஒடுங்கியிருந்தான். அவன் புரவி அதையறிந்தது போல எந்த ஆணையையும் அவன் உடலில் இருந்து எதிர்பார்க்காமல் உள்ளத்திலிருந்தே பெற்றுக்கொண்டு முன்னால் சென்றது. முதலிரண்டுநாட்கள் புரவியின் குஞ்சிமயிர் பறப்பதை அதன் இரு செவிகளுக்கு நடுவே இருந்த சதுரம் வழியாகத்தெரிந்த பாதையை மட்டுமே அவன் பெரும்பாலும் பார்த்தான். சப்தசிந்துவின் பச்சைவெளி வந்தபோது அவனையறியாமலேயே தெளிந்து இருபக்கமும் நோக்கத்தொடங்கினான்.

சிந்தையற்று அமர்ந்திருந்தமையால் அவன் உடல் புரவியின் உடலுடன் இணைந்து ஒருமையை அடைந்து பயணம்செய்வதையே உணராமலாகிவிட்டிருந்தது. பகலெல்லாம் சென்றும் அவன் களைப்படையவில்லை. அவனுடைய உடலின் ஒருமையால் புரவியும் களைப்படையவில்லை. நுரைதள்ளிய புரவிகளுடன் வீரர்கள் மூச்சிரைப்பதைக்கண்டு சகனே விடுதிகளில் புரவிகளை நிறுத்த ஆணையிட்டான். பூரிசிரவஸ் அதையும் அறிந்ததாகத் தெரியவில்லை. சத்திரத்தை அடைந்ததும் உணவருந்திவிட்டு அப்படியே படுத்து அக்கணமே அவன் துயிலில் ஆழ்ந்தான். ஆனால் பின்னிரவில் எழுந்த சகன் அவன் படுக்கையில் இருளில் விழிகள் தாழ்த்தி அமர்ந்திருப்பதை கண்டான்.

குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தமையால் சாலையிலெங்கும் வெயில் தெரியவில்லை. வானம் முகில்படலத்தால் மூடியிருக்க மரங்களின் அடியில் குளிர்ந்த நிழல்கள் பெருகிக்கிடந்தன. சப்தசிந்துவின் மாபெரும் வண்டல்நிலம் ஒற்றைப்பெருவயல்வெளியாக இருந்தது. ஆங்காங்கே வந்த சிறிய உழவர் ஊர்களில் களிமண்ணையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் மூங்கிலால் ஆன புகைக்குழல்கள் வழியாக எழுந்த அடுமனைப்புகை முகில்மரம் போல கிளைவிரித்து வானில் நின்றது. ஊர்க்காவல்நாய்கள் காவல்தெய்வத்தின் சிற்றாலயங்களில் இருந்து சீறி எழுந்து குரைத்தபடி குதிரைகளைத் தொடர்ந்தோடிவந்து தங்கள் எல்லைகளில் நின்று உறுமி வால்தாழ்த்தி திரும்பிச்சென்றன.

வயல்வெளிகளுக்கு நடுவே வானம் வெளித்துக்கிடந்த நீலச்சுனைகளில் குளிர்காலத்திற்கு வரும் வெண்ணிறமான சாரசப்பறவைகள் வந்திறங்கத் தொடங்கியிருந்தன. நீண்ட கழுத்தும் கரியகூரலகுமாக அவை ஒற்றைக்கால்களில் வரப்புகளில் நின்றிருந்தன. சிவந்த பெரிய கால்களும் வளைந்த அலகுகளும் கொண்ட செங்கால்நாரைகள் சிலவற்றையும் வயல்களில் காணமுடிந்தது. “இம்முறை பறவைகள் முன்னரே வந்துவிட்டன. சாரசங்கள் இமயமுடிகடந்து அப்பால் பீதர்நாட்டிலிருந்து வருபவை. அவை முன்னரே வந்துவிட்டன என்றால் அவ்வருடம் குளிர் மிகையாக இருக்கும் என்பார்கள்” என்றான் சகன். பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை.

சகலபுரியில் இருந்து ஐராவதியைக் கடந்து திரிகர்த்தர்களின் பிரஸ்தலத்திற்கு வந்து தங்கினர். அங்கிருந்து சரஸ்வதியையும் திருஷ்டாவதியையும் யமுனையையும் கடந்து காட்டுப்பாதை வழியாக வாரணவதம் வந்தனர். வாரணவதத்திலிருந்து புரவிகளுடன் வணிகப் படகிலேறிக்கொண்டு ஒரே இரவில் அஸ்தினபுரியை அடைந்தனர். படகில் வணிகர்கள் அவர்கள் அஸ்தினபுரிக்கு செல்கிறார்கள் என்று கேட்டதுமே மகிழ்விழந்தனர். “ஆம், இப்போதெல்லாம் ஏராளமான படைவீரர்கள் பல திசைகளிலும் இருந்து அஸ்தினபுரிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். கேட்டீரா மச்சரே, வேலிபோடத்தொடங்கிவிட்டவனுக்கு காட்டில் முள் போதாமலாகும்” என்றார் ஒருவர்.

சகன் “ஏன்?” என்று அவரிடம் கேட்க “அஸ்தினபுரிக்கு சென்றிறங்கியதுமே அறிந்துகொள்வீர் வீரரே. அங்கே போர் ஒருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பாரதவர்ஷம் உடன்பிறந்தார் போரைக்கண்டு நீணாள் ஆகிறது. உள்ளிருந்து அழிக்கும் அரசப்பிளவை நோய் அது” என்றார். “அங்கு திருமணம் அல்லவா நிகழ்கிறது?” என்றான் சகன். “நீர் எளிய படைவீரர் என நினைக்கிறேன். வீரரே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். அரசகுடிகளில் போரை உருவாக்கவும் போரைத்தவிர்க்கவும் திருமணமே ஒரே வழி” என்றார் அவர். “என் பெயர் திரிதன். நான் இந்த கங்கைமேல் வணிகம் செய்யத்தொடங்கி ஐம்பதாண்டுகளாகின்றன. என் தாடியின் ஒவ்வொரு மயிரும் ஒரு பெரிய அறிதல். பெரிய அறிதல்கள் அனைத்தும் குருதியோ கண்ணீரோ சிந்தி பெறப்பட்டவை.”

சகன் தன்னுள் மூழ்கி நதிக்கரை காடுகள் நிழலென ஒழுகிச்செல்வதை நோக்கியிருந்த பூரிசிரவஸ்ஸை ஒருகணம் நோக்கிவிட்டு “என்ன நிகழ்கிறது அங்கே?” என்றான். “நீர் சொன்னீரே அதுதான், திருமணங்கள்” என்றார் திரிதர். “சிபிநாட்டு இளவரசி தேவிகையை பீமசேனர் சென்று கவர்ந்துவந்திருக்கிறார். அவளை தருமர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மத்ரநாட்டு இளவரசி விஜயையை சகதேவர் திருமணம் செய்துகொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.” திரிதர் குரல்தாழ்த்தி “பீமசேனருக்கும் நகுலருக்கும் சேதிநாட்டு இளவரசிகளை கேட்டிருக்கிறார்கள். சேதிநாட்டு தமகோஷருக்கு மகள்களை பாண்டவர்களுக்குக் கொடுப்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால் சிசுபாலர் துரியோதனருக்கு அணுக்கமானவர். அவர் தன் தங்கைகளை துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் மணமளிக்க விழைகிறார்” என்றார்.

சகன் உண்மையிலேயே திகைத்துப்போய் “வணிகர்கள் அறியாத செய்தி ஏதும் அரசவையில் இல்லையென்றல்லவா தோன்றுகிறது?” என்றான். “இன்னும் இருக்கிறது வீரரே. காசிநாட்டரசரின் மகள்களை மணக்க பீமசேனரும் அர்ஜுனரும் விழைகிறார்கள். துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் அந்த இளவரசிகளை பாண்டவர்கள் மணக்கலாகாதென்ற எண்ணம் இருக்கிறது. உண்மையில் எந்த இளவரசியை எவர் மணக்கப்போகிறார் என்பதில்தான் நாளைய அரசியல் இருக்கிறது. அரசியலை நம்பிதான் வணிகமும் இருக்கிறது. ஆகவே எங்களுக்கு இவற்றையெல்லாம் தெளிவாக அறிந்துவைக்காமல் வேறுவழியும் இல்லை” திரிதர் சொன்னார்.

சகன் சற்று நேரம் கழித்து “என்ன நிகழும்?” என்றான். “எதுவும் நிகழலாம். சிபிநாட்டு இளவரசியை ஜயத்ரதன் மணந்திருக்கவேண்டும். இறுதிக்கணத்தில் பீமசேனர் கவர்ந்துசென்றுவிட்டார். அதை எண்ணி எண்ணி அவர் குமுறிக்கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசியை அவருக்கு அளித்து அவரை அமைதிப்படுத்தலாமென்று காந்தார இளவரசர் சகுனி சொல்கிறார்.” பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். “அதற்கு வாய்ப்புள்ளதா?” என்றான் சகன். “உண்டு. ஆனால் துச்சளையை மணக்க சிசுபாலரும் விழைகிறார். நடுவே ஒரு நிகர்நிலையை உருவாக்குவது மிகக்கடினம். ஆகவே பால்ஹிகநாட்டு இளவரசர் பூரிசிரவஸ் அவளை மணக்கலாமென்று ஒரு சொல்லிருக்கிறது. பூரிசிரவஸ்ஸையே இளவரசி விழைவதாகவும் அஸ்தினபுரியில் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார் திரிதர்.

சகன் பெருமூச்சுவிட்டான். திரிதர் “நடுவே துவாரகை உள்ளது. துவாரகையின் ஆதரவை தங்களுக்கு உறுதிசெய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். யாதவ இளவரசி சுபத்ரையை தருமருக்கு அரசியாக்கலாமென்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் யாதவர்கள் பாண்டவர்களின் அரசில் முதன்மைபெறுகிறார்கள் என்ற பேச்சுக்கு அது வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவேதான் தேவிகையையே அவர் மணக்கட்டும் என அரசி குந்திதேவி முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார்.

சகன் புன்னகையுடன் “அனைத்தும் முழுமையாகக் குழம்பி ஒன்றன் மேல் ஒன்றாகிவிட்டன வணிகரே. நன்றி” என்றான். ”இதை நீர் ஒரு அமைப்பாக பார்க்கவேண்டியதில்லை வீரரே. ஒரு நாற்களத்தில் வைக்கப்பட்டிருக்கும் காய்களாக பாரும். ஆகவேதான் எந்தக்காய் எந்த திசைநோக்கி செல்கிறது என்று விளக்கினேன்” என்றார் திரிதர். ”ஒவ்வொன்றுடனும் மோதும் எதிர்விசை என்ன என்று பார்ப்பது வணிகரின் வழக்கம். அரசியலும் அவ்வாறே புரிந்துகொள்ளத்தக்கது. என் இத்தனைநாள் வாழ்க்கையில் நானறிந்த ஒன்றுண்டு. அரசியலை அரசியலாடும் ஷத்ரியரைவிட வணிகரே நுட்பமாக புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் ஷத்ரியர் தங்கள் மறுபக்கத்தை ஒருபோதும் சரிவர மதிப்பிடுவதில்லை. ஆனால் வைசியர் மறுபக்கத்தின் ஆற்றலைத்தான் முதலில் கருத்தில்கொள்கிறார்கள். மழையை நன்கறிந்திராத உப்புவணிகனை பார்த்திருக்கிறீரா?” சகன் சிரித்துவிட்டான்.

அஸ்தினபுரியின் துறைமுகப்புக்கு சகன் முன்னரே வந்திருந்தான். பூரிசிரவஸ் முதல்முறையாக அதை பார்த்தமையால் விழி வியந்து அண்ணாந்து அமர்ந்திருந்தான். துலாத்தடிகளால் தூக்கப்பட்ட பெரிய பொதிகள் வானிலெழுந்து சுழன்று சென்றன. யானைகள் போல உடலாட்டியபடி பெரிய கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருக்க அவற்றின் மேல் செம்பருந்துகள் அமர்ந்து சிறகடிப்பதுபோல கொடிகள் பறந்தன. பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்ட பெருங்கலங்களின் தட்டில் சிந்திய மணிகளுக்காக பறந்தமைந்த புறாக்களின் குரல்கள் வடங்கள் இறுகி நெகிழும் ஒலியுடன் இணைந்து ஒலித்தன.

மாலை வந்துகொண்டிருந்தமையால் நீர் கருமை கொள்ளத் தொடங்கியிருந்தது. பொதி ஒன்று தலைக்குமேல் பறந்துசெல்வதைக்கண்டு பூரிசிரவஸ் முதல்முறையாக வாய்திறந்து “கருடன் மலைகளை தூக்கிக்கொண்டு செல்வதைப்போல” என்றான். “இளவரசே, துவாரகையில் இதைப்போல நூறுமடங்கு பெரிய பொதிகளைத் தூக்கும் துலாக்கள் உள்ளன. நானே கண்டிருக்கிறேன்” என்றான் சகன். “கலங்களையே தூக்கிவிடுவார்களா?” என்றான் பூரிசிரவஸ் கேலியாக. “இளவரசே, உண்மையிலேயே கலங்களைத் தூக்கி மறுபக்கம் வைக்கிறார்கள்” என்று சகன் மறுமொழியுரைத்தான். பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் துலாக்களை நோக்கினான்.

அவர்கள் கரையிறங்கியபோது துறைக்காவலர்தலைவனும் சுங்கநாயகமும் வந்து வணங்கி வரவேற்றனர். பூரிசிரவஸ் கங்கையின் விளிம்பிலமைந்திருந்த இரு சிற்றாலயங்களை நோக்க “அவை அம்பை அன்னையின் ஆலயமும் அவள் அணுக்கன் நிருதனின் ஆலயமும். குகர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். அவர்களில் அம்பை, நிருதன் போன்ற பெயர்களை நீங்கள் நிறையவே காணமுடியும்” என்றார் சுங்கநாயகம். “காசிமன்னன் மகள் அம்பை அல்லவா?” என்றான் பூரிசிரவஸ். “அவர்களேதான். இங்கு குகர்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு முடியிறக்கி காதுகுத்துகிறார்கள். குகர்களின் ஊர்களில் எல்லாம் இவ்விருவரின் இறைப்பதிட்டைகள் உண்டு” என்றார் காவலர்தலைவன்.

அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட தோரணவாயிலைக் கடந்து புரவிகளில் செல்லும்போது பூரிசிரவஸ் மீண்டும் அமைதிகொண்டான். சாலையைக் கடந்து இரு கீரிகள் ஒன்றையொன்று துரத்திச்சென்றன. ”இருள்வதற்குள் சென்றுவிடமுடியுமா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இருட்டிவிடும், குளிர்காலம் அல்லவா?” என்றான் சகன். அவர்கள் அஸ்தினபுரியை அடைந்தபோது இருட்டு பரவிவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை முதலில் நோக்கியபோது பூரிசிரவஸ் ஏமாற்றத்தை அடைந்தான். அது உயரமற்றதாகத் தெரிந்தது. அதன் மரத்தாலான காவல்மாடங்களில் பந்தங்கள் எரிந்தன. கோட்டைவாயிலுக்குள் நிரைநிரையாக வணிகவண்டிகளும் தேர்களும் காவல்புரவிகளும் சென்றுகொண்டிருந்தன.

கோட்டை கரியபாறையடுக்குபோல தோன்றியது. அவன் எண்ணத்தைப்புரிந்துகொண்ட சகன் “மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. அன்று பாரதவர்ஷத்தின் உயரமான கோட்டை இதுவே. தலைமுறைகள் கடந்துவிட்டன. இன்று இதைவிடப்பெரிய கோட்டைகள்தான் அனைத்து பெருநகர்களிலும் உள்ளன” என்றான். பூரிசிரவஸ் கோட்டையை நோக்கியபடியே அதன் நுழைவாயிலை நோக்கி சென்றான். பெருமுரசு முழங்கியதும் நகருக்குள் வெவ்வேறு காவல்மாடங்களில் முரசுகள் முழங்கும் ஒலி கேட்டது. “இது கட்டப்படும்போது கங்கை இங்கே ஒழுகியது. இன்று அந்தத்தடம் புராணகங்கை என்று அழைக்கப்படுகிறது” என்றான் சகன்.

“இங்குமட்டும் எப்படி கோட்டை களிமண்மேல் நிற்கிறது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “தெரியவில்லை. இந்தக் கோட்டைக்கு அடியில் உறுதியான பாறை இருக்கலாம். அல்லது வேறேதேனும் அமைப்பு இருக்கலாம். ஆனால் அஸ்தினபுரி ஏழு ஆமைகளால் மண்ணுக்கு அடியில் தாங்கப்படுகிறது என்பது இங்குள்ள நம்பிக்கை” என்றான் சகன். அவர்கள் நெருங்கிச்சென்றபோது கோட்டைக்கு மேல் காவலர்தலைவன் தோன்றி அவர்களை நோக்கினான். பால்ஹிகர்களின் மறிமான் கொடி கோட்டைமேல் ஏறியது. அணிமுரசு முழங்க கொம்புகள் பிளிறத்தொடங்கின.

கோட்டைவாயிலில் காவலர்தலைவன் வந்து அவர்களை வாழ்த்தும் முகமனும் சொல்லி வாள்தாழ்த்தி வரவேற்றான். ”இளவரசே, தாங்கள் தேரில் செல்லலாம்” என்றான். “இல்லை, நான் அங்கிருந்தே புரவியில்தான் வந்தேன்” என்றான் பூரிசிரவஸ். அவன் தலைவணங்கினான். நகர்த்தெருக்களில் அந்தி மூடிவிட்டிருந்தது. அங்காடிகளிலும் இல்லமுகப்புகளிலும் நெய்விளக்குகளும் ஊன்நெய்விளக்குகளும் மீன்நெய் விளக்குகளும் எரிந்தன. “அஸ்தினபுரியின் தெருக்களில் என்றும் திருவிழாதான் என்பார்கள்” என்றான் சகன். “இங்கு மக்களே பெரும்பாலான பொருட்களை வாங்கிவிடுகிறார்கள். சற்று மாறுபட்ட எதைவேண்டுமானலும் இங்கு கொண்டுவந்து விற்றுவிடலாம் என்று வணிகர் சொல்வதுண்டு.”

“அதற்கான பணத்தை எங்கிருந்து அடைகிறார்கள்?” என்றான் பூரிசிரவஸ். “கருவூலம் நிறைந்திருக்கிறது. ஆகவே அரண்மனைப்பணியாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் ஊதியம் மிகை. வேள்விகளும் வழிபாடுகளும் நிகழாத நாளில்லை. ஆகவே வைதிகர் கொழிக்கிறார்கள். அவர்களிடமிருந்து செல்வமெல்லாம் வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் யாதவர்களுக்கும் வருகிறது” என்றான் சகன். “கருவூலத்தை அஸ்தினபுரியின் அண்டைநாடுகள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், அது எப்போதும் அப்படித்தானே? மலையில் பெய்யும் மழையெல்லாம் ஊருக்குத்தான் என்பார்கள்” சகன் புன்னகைத்தான்.

அவனை பெரும்பாலும் எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தெருவில் சென்ற சிலர் மட்டும் நின்று கூர்ந்து நோக்கி அவன் சென்றபின் அறிந்து மெல்லியகுரலில் “பால்ஹிகர்… இளவரசர் பூரிசிரவஸ்” என்று சொல்லிக்கொண்டார்கள். அரண்மனைக் கோட்டைமுகப்பில் காவலன் அவன் கொடியை அடையாளம் கண்டதும் பந்தம் சுழற்ற ஏழு படைவீரர்கள் முறைமைக்காக அவனை நோக்கி வந்து எதிர்கொண்டு வாழ்த்தி வாள்தாழ்த்தினர். அவனை முறைமைசார்ந்து வரவேற்று கோட்டைக்குள் அழைத்துச்சென்றனர். அவையனைத்துமே முடிகொண்ட அரசனுக்குரியவை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.

அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்திருந்த மாளிகைகளில் எரிந்த பந்த வெளிச்சம் அங்கே செந்நிறப் புகையென சூழ்ந்திருந்தது. முற்றத்தை நிறைத்திருந்த தேர்களும் பல்லக்குகளும் மஞ்சல்களும் பட்டுத்திரைகள் ஒளிகொண்டு நெளிய உலோகப்பரப்பில் சுடர்கள் தோன்ற இருளுக்குள் பாதியென அமைந்திருந்தன. புரவிகளின் தோல்பரப்புகள் ஒளிவிட்டன. அரண்மனைக்குமேல் அமைந்திருந்த பெருமுரசின் தோல்வட்டம் ஒரு செந்நிலவென பந்த ஒளியில் தெரிந்தது. அரண்மனை இடைநாழிகள் முழுக்க ஏவலர் விரைந்து முன்னும் பின்னும் சென்றுகொண்டிருக்க உள்ளே அவர்கள் பேசிய ஒலி முழக்கமாக எழுந்து சாளரங்கள் வழியாக முற்றத்தில் பரவியது.

உள்ளிருந்து இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் ஏந்திய வீரர்கள் சூழ அணிப்படை அவனை நோக்கி வந்தது. முன்னால் வந்த இசைச்சூதர்கள் முழவும் கொம்பும் மணியும் முழக்கினர். பொன்வண்டுகளென உடலணிகள் மின்ன வந்த மூன்று அணிப்பரத்தையர் தாலங்களில் ஐந்து மங்கலங்கள் ஏந்திவந்தனர். நடுவே வந்த இளைஞன் அவனை அணுகி வணங்கி “நான் பிரதீபன். என் தந்தை சத்ருஞ்சயர் இங்கு பெரும்படைத்தலைவராக இருந்து மறைந்தார். நான் தென்படைத்தலைவன்” என்றான். “பால்ஹிக இளவரசரை வரவேற்பதில் நான் பெருமைகொண்டேன்.” பூரிசிரவஸ் “தங்களால் எங்கள் குடியும் பெருமைகொண்டது பிரதீபரே” என்றான். “தங்களை அரசமாளிகையில் தங்கவைக்க ஆணை. தாங்கள் விழைந்தால் இரவே பட்டத்து இளவரசர் துரியோதனரை சந்திக்கலாம்.”

“நான் இரண்டுநாழிகையில் சித்தமாகிவிடுவேன்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வாறே சென்று அறிவிக்கிறேன்” என்று பிரதீபன் சொன்னான். அவனே பூரிசிரவஸ்ஸை அரசமாளிகைக்கு அழைத்துச்சென்றான். செல்லும் வழியெங்கும் ஏவலர்கள் தலைவணங்கி அவனுக்கு வாழ்த்துரைத்தனர். அவனுக்கான அறை அரசர்களுக்குரிய பெரிய மஞ்சத்துடன் விரிந்து பூந்தோட்டத்தைக் காட்டிய சாளரங்களுடன் இருந்தது. பிரதீபன் தலைவணங்கி “தங்களுக்கு நீராடவும் உணவருந்தவும் ஓய்வுகொள்ளவும் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன” என்றான். “நான் படகில் முழுமையான ஓய்வில்தான் இருந்தேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவன் சித்தமானதும் ஏவலனிடம் செய்தி அனுப்பியபின் காத்திருந்தான். துரியோதனன் அவனிடம் பேசப்போவதென்ன என்று தெரியவில்லை. பீஷ்மபிதாமகர் அவனிடம் என்ன கேட்கப்போகிறார்? படபடப்புடன் எழுந்து சாளரம் வழியாக இருண்டு நின்றிருந்த மரக்கூட்டங்களை நோக்கினான். பெருமூச்சுடன் நிலையழிந்து அறைக்குள் உலவினான். ஆனால் அந்தப்பதற்றம் உவகையுடன் கலந்திருந்தது. எதற்கான உவகை? இந்த நாட்டின் மணமகன் என்ற எண்ணமா? அதுவல்ல. ஆனால் உவகை உடலெங்கும் நிறைந்திருந்தது. விரல்களை நடுங்கச்செய்தது. பெரிய பரிசை எதிர்நோக்கி நின்றிருக்கும் சிறுவனின் உளநிலை.

இடைநாழியின் மரத்தரையில் எடைமிக்க காலடியோசைகள் கேட்டன. அவன் நின்று வாயிலை நோக்கி சென்றான். துச்சலனும் சுபாகுவும் உள்ளே வந்தனர். துச்சலன் தலைவணங்கி ”தமையன் தங்களுக்காக காத்திருக்கிறார் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் நகைத்தபடி “இருவரும் வருவதற்கு மாற்றாக ஒருவர் பின்னால் ஏவலன் ஒரு பேராடியை தூக்கிவந்தால் போதுமானது அல்லவா?” என்றான். துச்சலனும் நகைத்து “எண்ணிக்கை என்பது முறைமையின்பாற்பட்டது பால்ஹிகரே. வருக!” என்றான்.

இடைநாழி வழியாக செல்லும்போது பூரிசிரவஸ் தன் உவகையை அடையாளம் கண்டுகொண்டான். துரியோதனனை சந்திக்கப்போவது மட்டும்தான் அந்த உவகையை உருவாக்குகிறது. துச்சளையிடம் அவன் கண்டதும் அதுவே. பெண்வடிவுகொண்ட துரியோதனன் அவள். ஆரத் தழுவிக்கொள்ளும் துரியோதனனின் பெருந்தோள்கள் நினைவில் எழ அவன் புன்னகைத்துக்கொண்டான்.

புஷ்பகோஷ்டத்தை அரண்மனை உள்ளிணைப்பு வழிகளினூடாகவே அடைந்து மாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக நடந்து துரியோதனனின் சரத்மண்டபத்திற்குள் நுழைந்தான். உள்ளே கர்ணனும் துச்சாதனனும் துச்சகனும் இருந்தனர். அவன் வருகையை துச்சலன் உள்ளே சென்று அறிவித்ததுமே துரியோதனன் உரக்க நகைத்தபடி எழுந்து வாயிலைத் திறந்து வெளிவந்து அவனை தன் பெரிய கைகளால் அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்துக்கொண்டான்.

”இளைத்துவிட்டீர் பால்ஹிகரே” என்றான் துரியோதனன். “ஆம், நீண்ட பயணங்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசனைக் கண்டதும் சொல்லவேண்டிய முறைமைச்சொற்கள் எவற்றையும் சொல்லவில்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் துரியோதனன் அவனை அள்ளி அணைத்து கிட்டத்தட்ட தூக்கி உள்ளே கொண்டுசென்று நிறுத்தி “குழந்தை போலிருக்கிறார். பால்ஹிகர்கள் பேருருக்கொண்டவர்கள் என்கிறார்கள் சூதர்கள்…” என்றான். கர்ணன் தன் தொடையில் அடித்து நகைத்து “பால்ஹிகர்களை மலையிலிருந்து இறங்கிய பீதரினப்பெண்கள் கவர்ந்து குலக்கலப்பு செய்துவிட்டனர்” என்றான்.

வெடித்துச்சிரித்த துரியோதனன் “அதுவும் நன்றே… இவர் சலிக்காமல் மலைகளில் பயணம்செய்கிறார்” என்றபடி அவனை பீடத்தில் அமரச்செய்து தோள்களில் கையூன்றி நின்று “ஆயினும் நீர் அழகானவர் பால்ஹிகரே. இளம்பெண்களைப்போன்ற நீள்விழிகளும் செந்நிறமான இதழ்களும் கொண்டவர்” என்றான். பூரிசிரவஸ் நாணத்துடன் “நற்சொற்களுக்கு நன்றி இளவரசே” என்றான். “அடடா நாணுகிறார். அற்புதமாக நாணுகிறார்” என்று துரியோதனன் கைகளைத் தட்டி நகைத்தான். அவன் உடன்பிறந்தவர்களும் நகைப்பில் சேர்ந்துகொண்டனர். பூரிசிரவஸ் தன் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்துவிட்டதை உணர்ந்தான். அங்கு அன்றி எங்கும் அத்தனை உள்ளம் நிறையும் இன்பத்தை அவன் அடைந்ததில்லை.

“அறிந்திருப்பீர் பால்ஹிகரே, நாங்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் இளவரசிகளை மணந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான் துரியோதனன். “நேற்றுவரை ஒவ்வொரு ஷத்ரிய மன்னரும் தயங்கினர். இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. எவருக்கும் தயக்கமில்லை. அஸ்தினபுரியின் அரசியாக தன் மகளை அனுப்பவே ஒவ்வொருவரும் விழைகின்றனர். ஆனால் அனைத்தும் மிகச்சிக்கலாகிவிட்டன. இளவரசிகளுக்காக பாண்டவர்களும் நாங்களும் போட்டியிடுகிறோம். எங்களுக்கு பெண்ணளித்தால் அவர்களுக்கு எதிரியாகிவிடுவோம் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.” பூரிசிரவஸ் புன்னகைத்து “அது இயல்பே” என்றான். துரியோதனன் “அத்துடன் நாங்கள் இளவரசிகளை அவர்களுக்காக மணக்க முடியாது. இங்கிருக்கும் அரசியல்களத்தில் அந்த நாடு ஆற்றும் பங்குதான் முதன்மையானது” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

“சிபிநாட்டு இளவரசியை பீமன் கவர்ந்துசென்றதை அறிந்திருப்பீர்” என்று துரியோதனன் சொன்னான். “இப்போது காந்தாரத்திற்கும் கூர்ஜரத்திற்கும் நடுவே ஒரு பெரிய கத்தியை செருக அவர்களால் முடிந்திருக்கிறது. நாம் அங்கே தோற்றுவிட்டோம். மத்ரநாட்டை அடைந்தது வழியாக அவர்கள் பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களுடனிருப்பதன் வழியாக அதை ஈடுகட்டிவிடலாம்.” பூரிசிரவஸ் ”சல்லியர் பால்ஹிகர்களை வென்று அடக்கிவிடலாமென எண்ணுகிறார். அதை ஒப்பமாட்டோம். அவருக்கு அஞ்சுவதைவிட பால்ஹிகக்கூட்டமைப்பில் நிகர்நிலையில் நீடிப்பதையே எங்கள் மக்கள் விழைவார்கள்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். முடிசூடியதுமே நான் அங்கே வந்து பால்ஹிகர்களை சந்திக்கிறேன்” என்றான் துரியோதனன்.

தன் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு பருத்த தோள்களில் தசைகள் புடைத்தசைய துரியோதனன் சற்று நேரம் எண்ணத்திலாழ்ந்தபின் திரும்பி மீசையை நீவியபடி சிறிய கண்களால் நோக்கினான். பின்னர் “நமக்கு இன்று முதன்மை இலக்கு சேதிநாடுதான் பால்ஹிகரே. பலவகையிலும் அது தவிர்க்கமுடியாதது. அது மகதத்திற்கு மிக அருகே உள்ளது. சேதிநாட்டரசர் தமகோஷர் மகதமன்னன் ஜராசந்தனுடன் நல்லுறவுடன் இருக்கிறார். பட்டத்து இளவரசர் சிசுபாலருக்கும் ஜராசந்தனுடன் நட்பு இருக்கிறது. நாம் வென்றெடுக்காவிட்டால் நம் எதிரிகள் அவர்கள். நமக்கு வேறு வழியே இல்லை” என்றான்.

கர்ணன் “பால்ஹிகரே, பாண்டவர்கள் யமுனைக்கரையில் அமைக்கவிருக்கும் தட்சிணகுரு நாடும் அவர்களின் துணைநாடான பாஞ்சாலமும் மதுரா உள்ளிட்ட மூன்று யாதவநிலங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வல்லமைமிக்க ஒரு ஜனபதமாக உள்ளன. அவை காலப்போக்கில் ஒற்றைநாடாக ஆனாலும் வியப்பதற்கில்லை. அந்த நிலத்தொகுதிக்கு மிக அண்மையிலுள்ள பெரியநாடு சேதிதான். சேதியை நம் நட்புநாடாக்கினால் பாண்டவர்களின் பெருநிலத்தொகுதிக்கு தெற்கே நமக்கு ஒரு களம் அமைகிறது. அவர்களை நாம் சூழ்ந்துகொள்ள முடியும். சூழ்ந்தாகவேண்டும்” என்றான்.

அந்த உரையாடல் பூரிசிரவஸ் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால் அவன் மாறி மாறி முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். “சேதிநாட்டு தமகோஷருக்கு இரு பெண்கள், அறிந்திருப்பீர்கள்” என்றான் துரியோதனன். “மூத்தவள் பிந்துமதியும் இளையவள் கரேணுமதியும் கல்வியும் கலையும் பயின்ற அழகிகள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “சூதர்கள் பாடாத இளவரசிகள் எவர்?” என்றான். துரியோதனன் வாய்விட்டு நகைத்து “ஆம், அவர்கள் கல்வியும் அழகும் அற்றவர்கள் என்றாலும் நமக்கு அது பொருட்டல்ல. நானும் துச்சாதனனும் அவ்விரு பெண்களையும் மணந்தாகவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அதற்கு என்ன தடை?” என்றான்.

“நீர் அதை அறிந்திருக்கமாட்டீர் பால்ஹிகரே” என்றான் கர்ணன். “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் ஓர் உறவுண்டு. மதுவனத்தின் அரசரும் வசுதேவருக்கும் குந்திதேவிக்கும் தந்தையுமான சூரசேனரின் தந்தை ஹ்ருதீகருக்கு தேவவாகர், கதாதன்வர், கிருதபர்வர் என மூன்று மைந்தர்களும் உண்டு.. அவர்களில் மூன்றாமவரான கிருதபர்வரின் மகள் சுருதகீர்த்தியைத்தான் சேதிநாட்டரசர் தமகோஷர் மணம்புரிந்திருக்கிறார். அவர் முறைப்படி யாதவ அரசி குந்தியின் தமக்கை. அவர்களின் மைந்தனே சிசுபாலன். தமகோஷரின் பிற இரண்டு மனைவியரும் கலிங்கநாட்டவர். மூத்தவர் சுனிதையின் மகள் பிந்துமதி. இளையவர் சுனந்தையின் மகள் கரேணுமதி. அவ்வழியில் சேதிநாட்டவரும் பாண்டவர்களும் உறவினர். தாய்வழியில் பெண்கொள்ளும் முறைமையும் யாதவர்களிடமிருக்கிறது.”

பூரிசிரவஸ் “அவர்களுக்கு யாதவர்களிடம் நல்லுறவு உள்ளதா?” என்றான். “இருந்தது” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி. “சூதர்கள் அதற்கொரு கதை சொல்கிறார்கள். சிசுபாலனை சுருதகீர்த்தி கருவுற்றிருந்தபோதுதான் மதுராவில் கம்சன் தன் மருகனால் கொல்லப்பட்டார். அது சேதிநாட்டை அன்று பதறச்செய்தது. யாதவர்களில் தாய்மாமன் என்பவர் தந்தைக்கு நிகரானவர். தந்தைக்கொலை புரிந்தவன் என்று சுருதகீர்த்தி கிருஷ்ணனை ஒவ்வொருநாளும் வெறுத்தாள். எங்கோ ஒரு மூலையில் அவள் கம்சன் கருவிலிருக்கும் தன் மகனுக்கு தந்தைமுறை அல்லவா என்று எண்ணியிருக்கலாம். குழந்தை பிறந்ததும் அதன் பிறவிநூலைக் கணித்த நிமித்திகர் அஞ்சி அதற்கு நூல்குறிகளின்படி மூன்று கண்களும் நான்கு கைகளும் இருந்தாகவேண்டும் என்றார்கள்.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “நிமித்தக்குறிகளின்படி அவை ஆழ்பொருள் கொண்டவை இளையோனே” என்று கர்ணன் சொன்னான். “நான்கு கைகள் என்பவை அவன் எளிதில் வெல்லமுடியாத தோள்வல்லமை கொண்டவன் என்பதை காட்டுகின்றன. குறிப்பாக சொல்லப்போனால் எவரையோ கொல்லும்பொருட்டு பிறந்தவர்களுக்குத்தான் நான்கு கரங்கள் உண்டு என்கின்றன நிமித்தநூல்கள். அவை பிற எவற்றையும் தொடாமல் அவனுக்குள் காத்திருக்கின்றன. மூன்றாம் விழி என்பதும் அப்பொருள் கொண்டதே. தீராத வஞ்சம் என அதை சொல்வார்கள்.” பூரிசிரவஸ் “கிருஷ்ணன் மீதா அவ்வஞ்சம்?” என்றான்.

“ஆம், குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும்நாளில் பலராமரும் கிருஷ்ணனும் அங்கே சென்றதாகவும் குழந்தையை அவர்கள் மடியில் ஏந்தியபோது அதன் நான்கு கைகளும் வெளித்தெரிந்ததாகவும் நெற்றியில் மூன்றாம் விழிதிறந்ததாகவும் சொல்கிறார்கள்.” பூரிசிரவஸ் “எதை ஏற்பதென்றே தெரியவில்லை” என்றான். “நிமித்தநூல் நாமறியாத ஓர் உச்சியில் நின்று மானுடவாழ்க்கையை நோக்கிக்கொண்டிருக்கிறது இளையோனே” என்றான் துரியோதனன். “நான் அதை நம்புகிறேன். சிசுபாலரை நானறிவேன். கிருஷ்ணன் மீது அவர் கொண்டுள்ள சினம் இம்மண்ணில் வைத்து புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. இரும்புருக்கும் உறையடுப்பு போல அவருள் எரிந்து கொண்டிருக்கும் வஞ்சம் என்னை எப்போதும் அச்சம் கொள்ளச்செய்திருக்கிறது” என்றான்.

கர்ணன் “கம்சனின் பகை முழுக்க சிசுபாலரில் குடிகொண்டு மண்ணில் நீடித்து வாழ்கிறது என்கிறார்கள். வரலாறு காட்டும் உண்மை ஒன்றே, பெரும் பகைகள் மண்ணிலிருந்து மறைவதே இல்லை. மானுடர் மறைந்தால் அவை உடல்நீங்கி தெய்வ வடிவுகொண்டு காற்றில் வாழ்கின்றன. பிறிதொருவரைக் கண்டுகொள்கின்றன” என்றான்.  பூரிசிரவஸ் மெல்லிய நடுக்கம் ஒன்றை தன்னுள் உணர்ந்தான். அதை அனைவரும் உணர்ந்தது போல அங்கே சற்று நேரம் இயல்பான அமைதி உருவாகியது.

பூரிசிரவஸ் முகங்களை மாறி மாறி நோக்கியபின் “சேதிநாட்டு இளவரசர் இளைய யாதவர் மேல் கடும்பகை கொண்டிருக்கிறார் என்றால் அவர் பாண்டவர்களுக்கு தங்கையரை அளிக்க ஒப்ப மாட்டார். அவருக்கு வேறு வழியும் இல்லையே” என்றான். “ஆம், நமக்கும் வேறுவழியில்லை என அவர் எண்ணுகிறார். இளவரசர்கள் தன் தங்கையரை மணக்க அவர் ஒரே ஒரு மறுசொல்லை கோருகிறார்” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் காத்திருந்தான். “அவருக்கு அஸ்தினபுரியின் இளவரசியை அளிக்கவேண்டும் என்கிறார்.”

முந்தைய கட்டுரைசெண்பகம் பூத்த வானம்
அடுத்த கட்டுரைபாராட்டுக்கள்