பகுதி 13 : பகடையின் எண்கள் – 6
காலையில் ஏவலனின் மெல்லிய ஓசை கேட்டு பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். அவன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு தலைவணங்கியபோதுதான் மத்ரநாட்டில் இருப்பதை உணர்ந்தான். தலை கல்லால் ஆனது போலிருந்தது. எழுந்தபின் மீண்டும் அமர்ந்து சிலகணங்கள் கண்களை மூடி குருதிச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். கீழே விழுந்துகொண்டிருப்பதைப்போலவும் வானில் தொங்கி ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் தோன்றியது.
முந்தையநாளிரவு வந்து படுத்தபோது அறைமுழுக்க நீராட்டறைக்குள் இருப்பதுபோல நீராவி நிறைந்திருந்தது. கணப்புக்குள் எரிந்த கனல்துண்டுகளின் ஒளியில் நீராவியை நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சுத்திணறுவதுபோல தோன்றியதனால் காற்றை இழுத்து இழுத்து நெஞ்சை நிரப்பிக்கொண்டான். பின்னர் மெல்ல விழியடங்கி அகம் மயங்கியபோது கீழே விழுந்துகொண்டிருப்பதுபோன்ற கனவு வந்து திகைத்து எழுந்தமர்ந்தான். நீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்தான். மீண்டும் கீழே விழும் கனவு. மாளிகைகள் மரத்தின்மேல் அமைந்திருப்பதனால்தான் அக்கனவு வருகிறதா?
விழித்து மேற்கூரையை நோக்கியபடி படுத்திருந்தான். நீராவி செம்புகை போல கூரைக்குக் கீழே பரவி மறுபக்கம் இறங்கிக்கொண்டிருந்தது. தேவிகையின் நினைவு வந்தது. அவளை துவாரகைக்குத்தான் பீமன் கொண்டுசென்றதாக சொன்னார்கள். பாண்டவர்களும் குந்தியும் முன்னரே துவாரகைக்குச் சென்று காத்திருந்தனர். திரௌபதி மட்டும் காம்பில்யத்திலேயே தங்கிவிட்டாள். பிறந்த நகர் நீங்கி அவள் கால்பதிவது புகுந்த நகராகவே இருக்கவேண்டும் என நிமித்திகர் சொன்னார்கள். தேவிகையை தருமன் மணக்கவேண்டுமென குந்தி ஆணையிட்டதாகவும் துவாரகையின் மணிவண்ணன் ஆலயத்தின் முன்னால் நிகழ்ந்த மணச்சடங்கில் அவளுக்கு தருமன் மாலையிட்டதாகவும் ஒற்றர் செய்தி வந்தது.
கவர்ந்துகொண்டுவரப்பட்ட பெண்ணுக்கு தந்தை கைப்பிடித்துக்கொடுக்கவேண்டிய தேவையில்லை. அவளுக்கு மூதாதையராகவும் கந்தர்வர்களே அமைவார்கள். மணிவண்ணன் ஆலயத்தின் முகப்பிலிருந்த அணிமண்டபத்தை நூற்றெட்டு கந்தர்வர்கள் அலங்கரித்தனர். அங்கே மணம் நிகழட்டுமென யாதவன் சொன்னான். யாதவமூத்தாரும் நகர்ப்பெருமக்களும் சூழ மணம் நிகழ்ந்தது. பின்னர் நகர் முழுக்க விருந்துண்டு களியாடியது. இரவு முழுக்க அனைவருக்கும் வணிகர்களே ஊனும் மீனும் மதுவும் அளித்தனர்.
தேவிகைக்கும் அவனுக்குமான உளத்தொடர்பை பாண்டவர்கள் அறிவார்களா? அவளுக்கு அவன் சொல்லளித்ததை சிபிநாட்டு குலப்பாடகர்கள் சந்தைகளில் பாடுவதுண்டு என்றனர் ஒற்றர். அஸ்தினபுரிக்கு மேலும் திறன் வாய்ந்த ஒற்றர்கள் இருப்பார்கள். அவள் உள்ளத்தை அவள் தந்தையும் தாயும் குலமும் நாடும் பொருட்டாகக் கருதவில்லை. ஷத்ரியர்களுக்கு அது நாற்களத்தின் எளிய காய் மட்டுமே. அவன் நெஞ்சு நெகிழ்ந்தது. என்ன எண்ணியிருப்பாள்? பீமனின் படைகள் சூழ கூண்டுவண்டியில் பிறந்து வளர்ந்த நகரையும் நாட்டையும் விட்டுச் செல்லும்போது திரும்பி நோக்கி ஏங்கியிருப்பாளா?
அவளுடைய நாட்டையே அவள் கண்டதில்லை. சிபிநாட்டின் விரிந்த பாலை நிலத்தைக் கண்டு விழிகள் விரிய வண்டியின் சாளரத்தருகே அமர்ந்திருப்பாள். தொலைதூரத்து பாறைக்குன்றுகள் மெல்லச் சுழன்று மறுபக்கம் செல்வதை, காற்று புழுதியை புகையென பட்டென பறக்கவிடுவதை, இலைகூர்த்த முள்மரங்கள் மணல்காற்றுக்குப் பணிந்து சீறுவதை, அலையலையாக விரிந்த மென்மணல் கதுப்பை நோக்கியிருப்பாள். அள்ளிவிடலாமென அருகே தெரியும் விண்மீன்கள் கீழ்வானில் தோன்றி மெல்ல வானமெங்கும் நிறைந்து கனிந்து கனிந்து உதிர்வன போல நின்று அதிர்வதைக் கண்டபடி வெந்த மணம் வீசும் புழுதிக்காற்றில் தன்னந்தனியாக வண்டியில் அமர்ந்திருக்கையில் அவள் உளமுருகி விம்மியழுதிருப்பாள். அப்போது அவனை நினைத்திருப்பாள்.
அவன் அந்தக்கடிதத்தை ஒருமுறைக்குமேல் வாசிக்கவில்லை. அதை முழுமையாக மறந்துவிடவே அவன் உள்ளம் விழைந்தது. அது எண்ணமாக எழுந்ததுமே அவன் நிகழ்காலத்தின் இருமுனைகளையும் இழுத்து அதை முழுமையாக மூடிக்கொண்டான். அகப்பட்ட அனைத்தையும் அள்ளி அதன்மேல் போட்டுக்கொண்டே இருந்தான். ஆழத்திற்குச்செல்லும்தோறும் அது இறுகி விதையாகியது. ஒளிகொண்டு மணியாகியது. எங்கோ ஏதோ ஓர் அரண்மனை அறையில் அவளும் அப்போது துயிலாமல் அவனை எண்ணிக்கொண்டிருக்கிறாள் என எண்ணியதும் அவனுடைய தடைகளை மீறி கண்ணீர் வழியத்தொடங்கியது. உடல்திரவம் முழுக்க கண்ணீராக வெளியேறுவதுபோலிருந்தது.
விசும்பல்களுடன் அழுது முடித்தபோது அவன் இருளுக்குள் சுருண்டு தன்னை எண்ணி நாணினான். அந்த ஒலியை எவரேனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் என எண்ணியதுமே கூசி அதிர்ந்த உடலுடன் எழுந்து அமர்ந்துகொண்டான். பீடத்தில் இருந்த தன் வாளை எடுத்து உறையிலிருந்து உருவி அதன் கூர்முனையை நீவி நோக்கினான். நாளை இதன்மேல் குருதிபடியலாம். அல்லது நாளையுடன் அவன் வாழ்க்கை முடியலாம். சல்லியர் களமிறங்கமாட்டார் என்றே அவனுக்கும் தோன்றியது. ஆனால் அவனை வெல்ல பிறரால் முடியாதென்றும் அவர் அறிந்திருப்பார்.
ஏவலன் விழிகளை நோக்காமல் “என் வாளை கூர்செய்து வைக்கச்சொல்” என்றபின் நீராட்டறைக்குச் சென்றான். நீராட்டறைகளும் பிறவும் தரைத்தளத்தில் அமைந்திருந்தன. இரவில் அவன் துயின்றபின்னர் மழைபெய்திருந்தமையால் மண் நனைந்து நீரூறிக்கொண்டிருந்தது. குளிர்காற்று காடுகளுக்கு அப்பாலிருந்து பொழிந்து மரங்களால் சீவப்பட்டு மென்மையாகச் சுழன்றது. வானில் கதிர் எழுந்திருக்கவில்லை என்றாலும் நகரம் முழுக்க மென்மையான ஒளி நிறைந்திருந்தது. நகரெங்கும் ஓடிய நீரிலிருந்து அவ்வொளி எழுவது போல தோன்றியது.
ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் கூர்வாளுடன் முதன்மை ஒற்றன் சகன் வந்து வணங்கினான். அவன் விழிகளை நோக்கியதுமே செய்தி ஏதோ உள்ளது என பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். “புலரிக்கு முன் புறா செய்தியுடன் வந்தது” என்றான். பூரிசிரவஸ் நோக்கினான். அவன் கரியநூல் கட்டிய தோல்சுருளை எடுத்து நீட்டினான். பூரிசிரவஸ் அதை வாங்கி அதில் சலனின் அடையாளத்தை கண்டுகொண்டான். கட்டுகளை அவிழ்த்து சுருளை விரித்து மந்தண எழுத்துக்களில் இருந்த கடிதத்தை வாசித்தான்.
சலன் அவனுடைய வழக்கப்படி சுருக்கமாகவும் ஆணையிடும் தோரணையிலும் எழுதியிருந்தான். அஸ்தினபுரியிலிருந்து துரியோதனனின் நேரடியான கடிதம் பால்ஹிகபுரிக்கு வந்திருக்கிறது. சோமதத்தருக்கு எழுதப்பட்டது. பால்ஹிகபுரியின் அஸ்தினபுரிக்குரிய தூதரை துரியோதனனே நேரில் அரண்மனைக்கு அழைத்து சொல்லி அனுப்பிய அக்கடிதம் பூரிசிரவஸ் உடனடியாக அஸ்தினபுரிக்குச் செல்லும்படி கோரியது. அரசகுல மணநிகழ்வின்பொருட்டு அச்சந்திப்பு என்றும் பிதாமகர் பீஷ்மர் பூரிசிரவஸ்ஸை காணவிழைவதாகவும் துரியோதனன் சொல்லியிருந்தான்.
“இளையோனே, அதன் நோக்கம் தெளிவு. உன்னைப்பற்றி அறிய பிதாமகர் விழைகிறார். அவர் உன்னைப்பார்த்தபின் நீ அஸ்தினபுரியின் மணமகனாவாய். நாம் எதிர்பார்த்திருந்த தருணம். ஆகவே எந்த சொல்லையும் மத்ரர்களுக்கு அளிக்கவேண்டியதில்லை. அனைத்துச் சொல்மாற்றுகளையும் அப்படியே நிறுத்திவிட்டு கிளம்பி அங்கிருந்தே அஸ்தினபுரிக்கு சென்றுவிடு. மீண்டும் இங்குவந்து செல்வது நாள் பிந்தச்செய்வது. மேலும் நீ அங்கிருந்தே அஸ்தினபுரிக்குச் செல்வது அனைத்துவகையிலும் தேவையான ஒன்று” என்று சலன் எழுதியிருந்தான். காய்ந்த மலரிதழ்போன்ற மென்மையான தோலில் நான்குபக்கங்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அனைத்து ஆணைகளும் உறுதியாக இருந்தன.
பெருமூச்சுடன் ஓலையை திரும்பக்கொடுத்துவிட்டு பூரிசிரவஸ் ”தந்தைக்கு நான் ஒரு கடிதம் அளிக்கிறேன். மூத்தவரின் ஆணையை தலைக்கொண்டேன். இன்றே அஸ்தினபுரிக்குக் கிளம்புகிறேன் என்பது செய்தி. துரியோதனரின் அழைப்பு பால்ஹிகபுரிக்குக் கிடைத்ததும், அது அரசமணமுறைக்கானது என்பதும் அதில் இருக்கவேண்டும். அது பால்ஹிக அரசச்செய்திகளுக்குரிய பொதுவான மந்தணமொழியில் இருக்கட்டும்.” சகன் தலைவணங்கினான். அவன் புரிந்துகொண்டான் என்று தோன்றியது. “எழுதிக்கொண்டுவருகிறேன் இளவரசே. தாங்கள் முத்திரையிட்டதும் புறா உடனே கிளம்பும்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.
சகன் சென்றபின் பூரிசிரவஸ் படுக்கையிலேயே அமர்ந்துகொண்டு உடைவாளை எடுத்து உருவி அதன் கூரை நோக்கினான். விழிகளாலேயே அதன் முனையை வருடிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு கணத்தில் அப்படியே அதை எடுத்து கழுத்தில் வைத்து இழுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தைக் கண்டு திகைத்து அதை உறையிலிட்டான். ஆனால் அத்தனை எண்ணங்களையும் விலக்கி மீண்டும் அவ்வெண்ணம் எழுந்து வந்து நின்றது. அதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிலமுறை விலகி விலகிச் சென்றுவிட்டு சலிப்புடன் நின்று அதை திரும்பி நோக்கினான். எதற்காக? அவனால் அப்படி செய்துகொள்ள முடியுமா என்ன? போரில் தோல்வியடைந்தால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளவேண்டுமென்பது பால்ஹிகக்குடிகளின் நெறி. அதை சுகண்டம் என்று சொல்வார்கள். சுகண்டம். நன்றாக வெட்டப்பட்டது. நல்ல கழுத்து. நன்று… சுகண்டத்தில் இறந்தவன் தன்னை தோற்கடித்த தெய்வங்களை வென்றுவிட்டவன். ஆகவே அவன் களப்பலிவீரனுக்கு நிகரான பலிவழிபாட்டை பெறும் தகுதிகொண்டவன். அதை செய்துகொள்வதற்கான பயிற்சியை பால்ஹிககுலத்தின் படைக்கலப்பயிற்சிகள் அனைத்திலும் அளிப்பார்கள். செய்துகொள்ளமுடியும்தான். ஆனால் அதற்கு அவன் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் வாளை மீண்டும் எடுத்தான் பால்ஹிகநாட்டு வாள்களின் உறைகளுக்குமேல் மலைமுகில்வளைவுகள் செதுக்கப்பட்டிருக்கும். அவன் அவ்வளைவுகள் மேல் விரலோட்டினான். மிகமென்மையான வளைவுகள். முகில்களின் மேல் பறந்தது விரல். ஒருகணத்தில் வாளை ஓசையுடன் உருவி பளபளக்கத் திருப்பி தன் கழுத்தில் வைத்தான். வலப்பக்கப் பெருங்குழாயை தொட்டு அது நின்றது. கட்டைவிரலால் ஒருமுறை அழுத்திக்கொண்டால் போதும். இமையசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். காலடியோசை கேட்டது. அவன் வாளை தாழ்த்தி கட்டிலில் வைத்துவிட்டு கண்களை மூடி தலைகுனிந்தான்.
சகன் சுருள் எழுதிக்கொண்டு வந்திருந்தான். அதை வாங்கி வாசிக்காமலேயே முத்திரையிட்டு திரும்ப அளித்தான். சகன் ஒருகணம் மெத்தைமேல் கிடந்த உருவிய வாளை நோக்கினான். “அரசவை இரண்டுநாழிகைக்குப்பின் கூடுகிறது. அதற்குள் இக்கடிதத்தின் படிவை அவர்கள் எடுத்து படித்திருப்பார்கள்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்து “அவைகூடி ஒருநாழிகை கடந்தபின்னர் நாம் அவைபுகுவோம்” என்றான். சகன் அடுத்து அவன் சொல்லப்போவதற்காக காத்திருந்தான். “நமது படைகள் சித்தமாக உள்ளன அல்லவா?” சகன் ஆம் என தலைவணங்கினான். “அவைக்குச் சென்றதும் நாம் உடனே கிளம்பவேண்டும்.” சகன் “ஆணை” என்றான். அவன் உடலெங்கும் கேள்வி துடித்தது. “அஸ்தினபுரிக்கு” என்றான் பூரிசிரவஸ். அப்போது அவன் குரல் அடைத்தது போலிருந்தது.
சகன் உடல் மெல்ல தளர்ந்ததைக் கண்டதும்தான் அவன் அப்பதிலை எதிர்நோக்கியிருந்தான் என பூரிசிரவஸ் அறிந்துகொண்டான். விழிதூக்கி நோக்கினான். சகன் அப்பதிலால் ஏமாற்றமடைந்ததையும் புரிந்துகொண்டான். “நமக்கு வேறுவழியில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அஸ்தினபுரியின் ஆணைக்கு பொருள் என்ன என்று எவருக்கும் தெரியும். நான் இங்கு வந்ததும் என்ன செய்யவிருக்கிறேன் என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதை விட்டுவிட்டு செல்லும்படிதான் துரியோதனரின் ஆணை வந்திருக்கிறது.” சகன் விழிகள் மாறவில்லை. “பீஷ்மபிதாமகர் என்னைப் பார்ப்பதுதான் முதன்மையானது என்றால் ஏன் உடனே வரும்படி ஆணையிடவேண்டும்?” சகன் தலையசைத்து “ஆம்” என்றான்.
ஓர் எண்ணம் மின்னிச்செல்ல பூரிசிரவஸ் தலைதூக்கி “நாம் இளவரசியுடன் அஸ்தினபுரிக்கு செல்வோம்” என்றான். சகன் திகைப்படைந்து நோக்கினான் “மத்ரநாட்டு இளவரசியை சகதேவன் கொள்வதைத் தடுக்க எனக்கு வேறுவழி தெரியவில்லை என்று சொல்கிறேன். அதை துரியோதனர் புரிந்துகொள்வார்.” சகன் தெளிந்து புன்னகைசெய்து “ஆம், இளவரசே” என்றான். “இவள் என்ன இருந்தாலும் எளிய மலைமகள். துச்சளைக்கு இரண்டாம் அரசியாக இருக்க இவள் நாணப்போவதில்லை. சிலநாட்களுக்குப்பின் மத்ரநாட்டுடன் பேசி அனைத்தையும் முடிவுசெய்தபின் அவளை இங்கேயே இருக்கச் சொல்லவும் முடியும்.”
சகன் புன்னகையுடன் “ஆம், அது அனைத்துவகையிலும் நல்லதே” என்றான். ”பால்ஹிகக்கூட்டமைப்பு உடையாமல் காப்பது துரியோதனருக்கு தவிர்க்கமுடியாதது. அதைக் காக்கவேண்டுமென்றால் சகதேவன் விஜயையை மணப்பது தடுக்கப்பட்டாகவேண்டும்” என்று மீண்டும் பூரிசிரவஸ் சொன்னான். அதை தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறோம் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சொல்ல எழுந்த உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொண்டு “அவைபுகும்போது என்னருகே நீர் நின்றிருக்கவேண்டும். உம்மிடமும் வாள் இருக்கட்டும்” என்றான். சகன் தலைவணங்கினான்.
சகன் செல்லும்போது பின்னாலிருந்து அழைத்து “இந்த வாளும் உம்முடன் இருக்கட்டும்” என்றான். சகன் நிமிர்ந்து நோக்க “நான் வாளுடன் செல்வது அவர்களுக்கு வேறுவகையில் பொருள் அளிக்கக்கூடும்” என்றான். சகன் “ஆம்” என்றபின் வாளை வாங்கிக்கொண்டு நடந்தான். அவன் செல்வதையே சிலகணங்கள் நோக்கி நின்றபின் பூரிசிரவஸ் சாளரத்தருகே சென்று கீழே விரிந்த நகரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். பசுமையாலான நகரம். அப்பால் அசிக்னியில் படகுகள் வெண்பாய்கள் இளவெயிலில் ஒளிவிட மெல்ல சென்றுகொண்டிருந்தன. நகரெங்கும் இருந்து மக்களின் ஒலி எழுந்துகொண்டிருந்தது. இளவெயிலில் மின்னியபடி சில செங்கழுகுகள் நகருக்குமேல் வட்டமிட்டன. அவற்றை நோக்கி நின்றபோது மெல்ல அவன் உள்ளம் அமைதிகொண்டது
சகன் வந்து வணங்கியபோது பூரிசிரவஸ் ஒரு சொல்பேசாமல் கூடவே சென்றான். அவைபுகுந்தபோதே அனைவர் முகங்களிலும் இருந்த மாறுபாட்டை கண்டுகொண்டான். சுதீரர் வந்து வணங்கி “தங்களுக்காக அவை காத்திருக்கிறது பால்ஹிகரே” என்றார். “அவைச்செயல்பாடுகள் முடியட்டுமே என்று பார்த்தேன் அமைச்சரே. நான் இன்றே பால்ஹிகபுரிக்கு கிளம்புகிறேன். விடைகொள்ளவே அவைக்கு வருகிறேன்” என்றான். அவரது விழிகளில் வந்த மெல்லிய ஒளிமாறுபாட்டைக் கண்டதும் பூரிசிரவஸ் உள்ளூர புன்னகைத்துக்கொண்டான். அவனுடைய புறாச்செய்தி மறிக்கப்பட்டு வாசிக்கப்பட்டுவிட்டது.
அவையில் அவன் நுழைந்தபோது முந்தையநாள் இருந்த ஆரவாரமான வாழ்த்தும் வரவேற்பும் இருக்கவில்லை.அது முன்னரே சொல்லி ஒருங்கமைக்கப்பட்டது. அதனுள் ஒரு மெல்லிய கேலி இருந்தது. இப்போதிருப்பது திகைப்பும் குழப்பமும். பூரிசிரவஸ் சல்லியருக்குத் தலைவணங்கி வாழ்த்துரைத்தான். அவர் முகமனும் வாழ்த்தும் சொன்னார். பிறருக்கும் வாழ்த்துரைத்துவிட்டு அவையின் தென்மேற்குமூலையில் கன்னியர் மாடத்தின் வெண்ணிறத்திரையை ஒருமுறை நோக்கிவிட்டு அமர்ந்துகொண்டான். சுதீரர் அவனுக்கு முறைமைசார்ந்த வாழ்த்துக்களை சொன்னார்.
சல்லியர் “இளையோனே, நீ இன்று பால்ஹிகபுரிக்கு திரும்புகிறாய் என்று நினைக்கிறேன்” என்றார். “உனக்குரிய முறைமைகளை எல்லாம் செய்ய ஆணையிட்டிருக்கிறேன். மத்ரநாட்டின் பரிசுகளை உனக்கு அளிக்கிறோம். என் நண்பர் சோமதத்தரிடம் என் உசாவல்களையும் உன் தமையன் சலனிடம் நான் சொன்ன செய்திகளையும் அறிவி. நலம் திகழட்டும்!” அவரது விழிகள் அவன் விழிகளை சந்தித்தபோது பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் விலகிக்கொண்டு ஒரு பாக்கை எடுத்து வாயிலிட்டார்.
“அரசே, நான் உடனே பால்ஹிகபுரிக்கு செல்லவில்லை. அஸ்தினபுரிக்குத்தான் செல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். சல்லியர் “விந்தையாக உள்ளதே…” என்றார். “நேற்று என் தமையனிடமிருந்து செய்திவந்தது. அஸ்தினபுரியின் இளவரசரின் ஆணை. அரசப்பணி ஒன்றுக்காக நான் விரைந்துசெல்லவேண்டியிருக்கிறது. மீண்டும் பால்ஹிகபுரிக்குச் சென்று திரும்புவது நாள் விரயம்.” சல்லியர் “ஆம், அது உண்மை” என்றார். “அஸ்தினபுரியின் இளவரசரிடம் என் அன்பை தெரிவி. என்ன இருந்தாலும் நானும் அவரும் குருதியுறவு கொண்டவர்கள். அவ்வுறவு மேலும் இறுகவும்போகிறது.” பூரிசிரவஸ் “குருதியுறவுகள் பல திசைகளில் விரிந்துகொண்டிருக்கின்றன அரசே” என்றான். சல்லியர் மீசையை நீவியபடி விழிசுருங்க நோக்கி “ஆம், அது தெய்வங்களின் பகடை” என்றார்.
அவை மெல்ல நெகிழ்ந்தது. அந்த ஒலியை அவன் கேட்டாலும் தலைதிருப்பவில்லை. அவர்கள் காலையிலேயே கேட்டிருந்த செய்தியை உறுதிசெய்துகொண்டுவிட்டார்கள். மேலும் ஒரு சொல் வழியாக ஒரடி முன்னகரலாமா என பூரிசிரவஸ் எண்ணினான். எப்படியாவது துச்சளை என்ற சொல்லை அங்கே உச்சரிக்கலாமா? எண்ணுவதற்குள் சொல்லத்தொடங்கிவிட்டான் “இளவரசர் துரியோதனர் பதவி ஏற்கும்போது தார்த்தராஷ்டிரர் அனைவரும் உடனிருக்கவேண்டுமென்பது காந்தாரியன்னையின் ஆணை. நூற்றுவருக்கும் ஒரே தங்கை இளவரசி துச்சளை. அவளை மணம்புரிந்து மறுநாடு அனுப்புவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.”
அவர்கள் அனைவரின் விழிகளும் அவனை நோக்கி வெறித்திருந்தன. அச்சொற்கள் பொருத்தமின்றி ஒலிக்கின்றன என்று உணர்ந்தான். அவற்றை எப்படி மையப்பேச்சுடன் இணைப்பது என்று புரியவில்லை. “இளவரசர் துரியோதனருக்கும் மணநிகழ்வு ஒருங்குசெய்யப்படுகிறது. அதுகுறித்த பேச்சுக்களில் சொல்கேட்டு துணைநிற்கும் ஒருவனுக்காக அவர் என்னை நாடுகிறார். பால்ஹிகர்களை இறுதிவரை நம்பமுடியுமென அவர் அறிவார்.”
அடுத்த பிடி கிடைத்ததும் அவன் தெளிவடைந்தான். “மேலும் இன்று குருகுலத்தின் முதல்பிதாமகர் எந்தை பால்ஹிகர்தான். அவர் எந்த மலையில் இருக்கிறார் என நானே அறிவேன். பால்ஹிகப் பிதாமகரின் நற்சொல் இன்றி மணநிகழ்வுகளை செய்ய அஸ்தினபுரியின் குடிகள் விரும்பமாட்டார்கள்.” அவன் அகம் உவகையால் எழுந்தது. மிகச்சரியான இடம் என நினைத்துக்கொண்டவனாக “இன்று அஸ்தினபுரியின் இளவரசர்களில் பிரதீபரின் நேரடிக்குருதி என்பது இளவரசர் துரியோதனரே. இன்னொரு கிளைக்குருதி பால்ஹிகருடையது. சந்தனுவின் பெயர்மைந்தரான திருதராஷ்டிரர் பால்ஹிகரை அழைத்துவந்து அஸ்தினபுரியில் நிறுத்த விரும்பியிருக்கலாம். அதன்வழியாக எவர் உண்மையான கொடிவழி என்பதும் நிறுவப்படுகிறதல்லவா?” என்றான்.
சல்லியர் புன்னகை செய்தார். அவனுடைய விளையாட்டை அவர் நன்கு புரிந்துகொண்டதற்கு அடையாளமாக இன்னொரு பாக்கை வாங்கி வாயிலிட்டபடி “ஆம், பால்ஹிகரைத் தேடவே உன்னை வரச்சொல்லியிருப்பார்கள். அவர்களிடம் சொல், பால்ஹிகர் மத்ரபுரிக்கும் முதற்பிதாமகர் என்று” என்றபின் “அஸ்தினபுரிக்கு நீ செல்வதற்கான அனைத்து ஒருக்கங்களும் நிகழட்டும். உனக்கு அனைத்து நலன்களும் கைகூடட்டும்” என்று வாழ்த்தினார். பூரிசிரவஸ் தலைவணங்கி திரும்பி அவையை நோக்கினான். அவர்கள் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் இறுதியாக ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு செல்வான் என்பதுபோல. எவருக்கும் விஜயையை அவன் சந்தித்தது தெரியவில்லை என்பது தெளிவாக இருந்தது.
“அரசே, என் சொல் பிழை எனில் பொறுத்தருள்க! செல்வதற்கு முன் தங்களிடமும் தங்கள் இளையவர் தியுதிமானரிடமும் ஒரு சொல் சொல்லவேண்டியிருக்கிறது.” அவையில் இருந்து மூச்சொலியையே கேட்கமுடிந்தது. தியுதிமானரின் பெயர் சேர்க்கப்பட்டதை அவையில் அனைவருமே கண்டுவிட்டனர். “சொல்” என்றார் சல்லியர். ”சென்றமுறை தாங்களும் இளையோரும் இளவரசியுடன் பால்ஹிகபுரிக்கு வந்தபோது நான் அவரை தனியாக சந்தித்தேன். அப்போது நான் அவருக்கு மணச்சொல் அளிக்க நேர்ந்தது.” அவை முழுக்க எழுந்த கலைந்த குரல்களின் முழக்கத்தில் த்யுதிமானரின் திகைப்பையும் அரசிகளின் பதற்றத்தையும் பார்த்தபடி பூரிசிரவஸ் நின்றான். தன் முகத்தை உணர்ச்சிகளற்றதாக வைத்துக்கொள்ள பற்களை கிட்டித்துக் கொண்டான்.
“சொல்” என இடுங்கிய கண்களுடன் சல்லியர் சொன்னார். அப்போதுதான் பூரிசிரவஸ் ஒன்றை உணர்ந்தான். த்யுதிமானர் முகத்திலும் உடலமைப்பிலும் பீதர்குலத்தவர் போலிருந்தார். சல்லியர் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கூரிய மூக்கும் கொண்டிருந்தார். வேறு எங்கோ அவரை பார்த்திருப்பதாக தோன்றிக்கொண்டே இருந்தது. ”நான் இந்த அவையில் பால்ஹிக குலமுறைப்படி இளவரசிக்கு நானளித்த மணச்சொல்லை நிறைவேற்ற ஒப்புதல் கோருகிறேன்.” சல்லியர் மீசையை வருடியபடி அவனையே நோக்கிக்கொண்டிருந்தார். அவரது விழிகள் இல்லையென்றானதுபோலிருந்தது. “இளவரசியை கைப்பற்றி அழைத்துக்கொண்டு இந்த அவை நீங்கவிருக்கிறேன். குலமூத்தார் பால்ஹிக வழக்கமென்ன என்பதை சொல்லலாம்.”
ருக்மாங்கதன் எழுந்து “அதை நீர் சொன்னால் போதாது பால்ஹிகரே. எங்கள் இளையோள் சொல்லவேண்டும்… இந்த அவை வந்து அவள் சொல்லட்டும்” என்றான். திரைக்குப்பின் இருந்து உரத்தகுரலில் விஜயை “நான் இளவரசரின் சொல் பெற்றது உண்மை. இந்த அவை முன்பு அதை ஆணையிடுகிறேன்” என்றாள். அவை முழுக்க திரும்பி வெண்திரையை நோக்கியது “நான் அவர் கை பற்றி அவைநீங்க சித்தமாக இருக்கிறேன்” என்று விஜயை உறுதியான குரலில் மீண்டும் சொன்னாள்.
அவை விழிவெளியென உறைந்து அமர்ந்திருந்தது. திரைக்கு அப்பால் வளையல் ஒலித்த ஓசை அனைவருக்கும் கேட்டது. அரசி த்யுதிமானின் கைகளை மெல்ல தொட அவர் திரும்பி புருவத்தால் அவளை அடக்கினார். முதியவரான பால்ஹிககுடித்தலைவர் எழுந்து “இளவரசே, நாசிக குலத்தின் தலைவனாகிய நானே இங்குள்ள பால்ஹிக குடிமூத்தாரில் முதியவன். பால்ஹிகமுறைமையை நீரும் அறிவீர். இங்குள்ள குடிகளில் முதன்மை வீரனை நீர் போரில் வெல்லவேண்டும். போர் நிகழும் இடத்தையும், படைக்கலத்தையும் அவனே முடிவுசெய்வான். அவனை வெல்லமுடிந்தால் நீர் எங்கள் குலமகளை கொண்டுசெல்லமுடியும்” என்றார்.
“உங்கள் குடிகளில் போர் அறிந்த இளையோர் பலர் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனக்கிணையான இளவல் ஒருவனை தெரிவுசெய்யுங்கள்” என்றான் பூரிசிரவஸ். உடனே திரும்பி சல்லியர் விழிகளை நோக்கினான். அவர் ஏதோ சொல்லவருவதற்குள் முதியவர் “இளையபால்ஹிகர் வாள்வீரர் என்று அறிந்திருக்கிறேன். வாட்கலை தேர்ந்த வீரர் எம்மிடமும் உண்டு. நினைவுகொள்க இருவர் போரென்பது இறப்பு வரை” என்றபின் திரும்பி அவையை நோக்கி “வாளேந்தப்போவது யார்?” என்றார். அவை முழுக்க அசைவுகள் ஓடின. முதியவர் திரும்பி நோக்க பின்நிரையிலிருந்து ஒருவன் எழுந்தான். உடனே ஏழெட்டுபேர் எழுந்தனர். ருக்மரதனும் எழுந்தான். சகன் வாட்களுடன் பூரிசிரவஸ் அருகே வந்து நின்றான்.
சல்லியர் “இளையோனே, இந்த அவையில் உள்ள அனைவருமே உன்னை வெல்லும் திறன்கொண்டவர்களே” என்றார். “ஆனால் உனது பெயர் பால்ஹிகக்குடியின் தொன்மையான மூதாதை ஒருவருடையது.” அவர் எங்கே செல்லவிருக்கிறார் என்று பூரிசிரவஸ் சித்தத்தால் துழாவினான். தேடாதது சிக்குவதுபோல அவனுள் மின்னலென அது யாரென தெரிந்துவிட்டது. அக்கணமே அவன் “அங்கநாட்டரசர் கர்ணன் ஒருமுறை என்னிடம் இதை சொன்னார்” என்றான். சல்லியரின் உடல் அதிர்வதை மிக அண்மையிலென காணமுடிந்தது. “என்னை அவர் முதிய பால்ஹிகர் என்றே அழைப்பது வழக்கம். இதை அவர் சொன்னபோது அவர் முகமும் இப்படியே இருந்ததை நினைவுகூர்கிறேன்.” சல்லியர் தளர்ந்து மீண்டும் அரியணையில் அமர்ந்தார். நடுங்கும் கைகளை கோர்த்துக்கொண்டார்.
திரும்பி அவையிடம் “என்னிடம் வாள்கோர்ப்பவர் எவரென அவை அறிவிக்கட்டும்” என்றான். ருக்மரதன் “நாம் போர்புரிவோம் இளவரசே” என்று தன் வாளை உருவி முன்னால் வந்தபோது சல்லியர் எழுந்தார். அத்தனை விரைவில் அவர் மீண்டுவிடுவார் என பூரிசிரவஸ் எண்ணவில்லை. திகைப்புடன் திரும்பினான். “இளவரசே, தாங்கள் என் மகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கா செல்லவிருக்கிறீர்கள்?” என்றார் சல்லியர். “ஆம், சிலநாட்கள் நான் அங்கிருக்க எண்ணுகிறேன்.” சல்லியர் அவனை கூர்ந்து நோக்கி இரு அடிகள் எடுத்துவைத்து “அவளை அழைத்துச்செல்ல அவள் முதற்தந்தையாக நான் ஒப்புதலளிக்கிறேன்” என்றார். அவையெங்கும் எழுந்த ஒலியைக் கேட்டு தலைதிருப்பாமல் என்ன நடக்கப்போகிறது என்று பூரிசிரவஸ் உளம் கூர்ந்தான்.
“அங்கே அவள் தங்கள் முதன்மை மனைவியாக அமர்வது சகலபுரிக்கு பெருமைசேர்ப்பதென்பதில் ஐயமில்லை” என்றார் சல்லியர். “தாங்கள் ஒரு சொல்லை மட்டும் இந்த அவைக்கு அளித்தால்போதும். எங்கள் குலமகள் உங்கள் அரசியாக அமையவேண்டும். பிறிதொருத்தி அவளுக்குமேல் அமையக்கூடாது.” பூரிசிரவஸ் “அதை நான் இப்போது சொல்லமுடியாது” என்றான். “ஏன் சொல்லமுடியாது?” என உரக்கக் கூவினார் சல்லியர். “நான் இங்கிருந்து சென்று…” என பூரிசிரவஸ் தொடங்க “ஏன் உன்னால் முடியாது என்று நான் சொல்கிறேன். நீ செல்வது அங்கே அஸ்தினபுரியின் இளவரசியை மணமுடிப்பதற்காக. அதன்பொருட்டு பீஷ்மபிதாகமர் உன்னை பார்க்க விழைகிறார். இல்லையென்றால் சொல்” என்றார்.
ஏதும் பேசமுடியாமல் பூரிசிரவஸ் நின்றான். “செல்லும்போது எங்கள் குலமகளை அவளுக்கு சேடியாக அழைத்துச்செல்ல எண்ணுகிறாய். அதற்கு ஒருபோதும் நான் ஒப்பமாட்டேன். இதோ பால்ஹிகக் குடிகளின் பெருஞ்சபை உள்ளது. இவர்கள் சொல்லட்டும். விஜயையை நீ அழைத்துச்செல்ல அவர்கள் ஒப்புவார்களென்றால் அதை நானும் ஏற்கிறேன்.” பூரிசிரவஸ் “ஒப்பவேண்டியதில்லை அரசே. என்னுடன் வாள்போரிட வீரன் எழட்டும். வென்று கொண்டுசெல்ல ஒப்புதல் தேவையில்லை” என்றான்.
சல்லியர் சினத்துடன் சிரித்து “அந்த நெறி என்பது அரசன் ஒருவன் எங்கள் குலமகளை மணந்து தன் அரசியாக கொண்டுசெல்வதற்கு மட்டுமே. அரக்கனோ வணிகனோ அவளை கொள்ளையிட்டுச்செல்லும்போது அந்த நெறி ஒப்புதல் அளிக்காது. எங்கள் குலமகள் தொழும்பச்சியென செல்ல அந்நெறி ஆதரவு கொடுக்காது. அதை எங்கள் அத்தனை படைக்கலங்களும் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நிற்கும்…” என்றார். அவை முழுக்க எழுந்து தங்கள் வாள்களையும் கத்திகளையும் உருவி மேலே தூக்கி “ஆம் ஆம்” என்று கூவியது.
“இதோ, அவையில் ஒரே உறுதியைத்தான் நாங்கள் கேட்கிறோம். எங்கள் இளவரசிக்கு நீயளித்த சொல் என்ன? அவளை உன் அரசியாக ஆக்குவாய் என்றுதானே?” பூரிசிரவஸ் தலையசைத்தான். “அந்தச்சொல்லை இங்கு மீண்டும் சொல்லி அவளை அழைத்துச்செல்.” பூரிசிரவஸ் மூச்சுத்திணறியவன் போல அவை முன் நின்றான். முதியவர் “அச்சொல் அளிக்கப்படாமல் இங்கிருந்து இளவரசியை கொண்டுசெல்லமுடியாது” என்று கூவினார். அவை முழுக்க அதை ஏற்று கூவியது. “இல்லையேல் ஒன்று செய். சென்று அஸ்தினபுரியின் படையுடன் வா. எங்களை வென்று அவளை கொண்டுசெல். ஆனால் அதற்கு முன் செருகளத்தில் நாங்கள் அனைவரும் குருதிசிந்தி விழுந்திருப்போம்.”
அவை வெறிகொண்டதுபோல கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. சிலர் அவனை நோக்கி வரத்தொடங்க ருக்மரதன் அவர்களை கைவிரித்து தடுத்தான். உருவிய வாளுடன் சகன் அவனுக்கு முன்னால் சென்று அவையை எதிர்கொண்டான். ருக்மாங்கதன் ஆணையிட வீரர்கள் சென்று கன்னிமாடத்தை சூழ்ந்துகொண்டனர். உள்ளிருந்து விஜயை அழைத்துச்செல்லப்பட்டாள். அரசியர் அரியணையிலிருந்து எழுந்து வெளியேறினர். சல்லியர் “அவனை செல்லவிடுங்கள்” என கை காட்டினார். திரும்பி பற்கள் தெரிய சீற்றமா சிரிப்பா என தெரியாத முகத்துடன் “மீண்டும் சந்திப்பது சமர்களத்திலாக இருக்கட்டும் இளையோனே” என்றபின் உள்ளே சென்றார்.