செண்பகம் பூத்த வானம்

index

என்னிடம் ஒருவர் கேட்டார் “கமலஹாசன் அய்யாவோட படம் முடிஞ்சிட்டுங்களா?”. என்ன காரணத்தாலோ மூளைக்குள் கோபம் கொந்தளித்தது. அடக்கிக்கொண்டு அந்தத் தருணத்தைக் கடந்துசென்றேன். மறுநாள் கமலஹாசனைச் சந்தித்தபோது சொன்னேன் “கமல்,யாராவது உங்களை சார், அய்யா என்றெல்லாம் சொன்னால் கடும் கோபம் வருகிறது. உங்களை வயசானவரா நினைக்கப்பிடிக்கலை. ஏன்னா, அது என்னை வயசானவனா காட்டுது” சிரித்துவிட்டார்.

சமீபத்தில் அவரது ஐம்பதாவது சினிமாவாழ்க்கை வருடமும் ,அறுபதாவது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டதே உண்மையில் எனக்குப்பிடிக்கவில்லை. அதற்கான காரணம் உளவியல்சார்ந்தது. நான் என்னை ஆணாக உணரத்தொடங்கிய காலத்தில் கமலஹாசன் மலையாள சினிமாவின் காதல் இளைஞனாக இருந்தார். என்னை அறிவுஜீவியாகக் கட்டமைத்துக்கொண்டிருந்தபோதே மறுபக்கம் அந்தரங்கத்தில் அவர் வழியாக நான் என் பொறுக்கி- ஊதாரி- அசட்டு- முரட்டுக் காதலனை கண்டடைந்துகொண்டிருந்தேன்.

அவர் செய்தவற்றை எல்லாம் நான் என் பகற்கனவுகளில் செய்தேன். அவரது கதாநாயகிகள்- சரி வேண்டாம். அந்தக்கால என் புகைப்படங்களைப் பார்க்கையில் மலையாளக் கமலஹாசன் மாதிரியே இருந்ததை உணரமுடிகிறது. அவரைப்போல சட்டைப்பித்தானை அவிழ்த்துவிட்டு கல்லூரிக்குப்போய் வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறேன். அவரைபோலவே தலைமயிர் அலங்கரித்திருக்கிறேன்.

அன்று அவருக்கு மிகச்சரியான ஒரு மலையாள முகம் இருந்தது. பின்னர் தமிழில்தான் அவர் சற்று அன்னியமாக உணர்ந்தார். பலவகையான ஒப்பனைகள் வழியாக அதைக் கடந்தார். இன்றும் அப்பிரச்சினையை எங்கோ அவர் உணர்கிறார். மலையாளத்தில் ஏதும் தேவைப்படவில்லை [ஆனால் வயநாடன் தம்பான் என்றபடத்தில் நூற்றியிருபது வயதான கிழவராக தன் இருபது வயதில் நடித்திருக்கிறார்]

கமலஹாசனை நடிகராகக் கண்டடைந்தது மலையாள சினிமாதான். கே.எஸ்.சேதுமாதவன் மலையாளத்தின் நல்ல சினிமாக்களில் ஒன்றான கன்யாகுமரியில் அவரை கதாநாயகனாக நடிக்கவைத்தார். கதாநாயகனாக நடிக்க வந்த தன்னை நாகர்கோயிலில் இருந்து கன்யாகுமரிக்கு டவுன்பஸ்ஸில் கூட்டிச்சென்றதை கமலஹாசன் வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார். ஓட்டுக்கட்டிடத்தில் படுக்க ஒரு தலையணையும் பாயும் தரமுடியும் அளவுக்குத்தான் பட்ஜெட்.

மறுநாள் மொத்தக்குழுவுமே காமிராவுடன் டவுன்பஸ்ஸில் படப்பிடிப்பு இடத்துக்குச் சென்றபோதுதான் அவருக்கு கொஞ்சம் நிதானம் வந்திருக்கிறது. காட்சி இல்லாதபோது கிளாப் அடிக்கவேண்டியிருந்தது. டிராலி தள்ளவேண்டியிருந்தது. ஓடிப்போய் சிங்கிள் டீ வாங்கிவர எவரும் சொல்லாத அளவுக்கு கௌரவம் இருந்தமைக்கு அவர் கதாநாயகன் என்பதுதான் காரணம்= கண்டினியுட்டி.

கமலஹாசன் அவரது மலையாளச் சினிமா அனுபவங்களைச் சொல்லும் போது ஒரு காலகட்டமே கண்ணில் வந்துசெல்கிறது. பிற்பாடு தமிழில் விரிவாக்கி எடுத்துக்கொண்ட ‘உற்சாகமான அப்பாவியான காதலன்’ என்ற ஆளுமையை அவர் மலையாளத்தில் தான் உருவாக்கிக்கொண்டார். ஆனால் தமிழ்க்காதலனுக்கும் மலையாளக் காதலனுக்கும் முக்கியமான வேறுபாடுண்டு. மலையாளக்காதலன் மேலும் ஆண்மையானவன், மேலும் மண்சார்ந்தவன். தமிழில் அதை மேலும் சினிமாத்தனமான, ஸ்டைலான ஆளுமையாக மாற்றிக்கொண்டார்

அந்தக் கமலஹாசனின் படங்களை நான் என்றும் அந்தரங்கமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் மலையாளச் சினிமாக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அதைச் சொன்னேன். அத்தனைபேருக்குமே கிட்டத்தட்ட என் வயது. ஒரே குரலில் என் எண்ணங்களையே சொன்னார்கள். பெரிய நடிகர்கள் உட்பட மனமுருகினர். “நம்முடே காமதேவனல்லே கமல்? தமிழர் கொண்டுபோயி’ என ஒருவர் விஸ்கி மணத்துடன் மனமுடைந்து சொன்னார்

உம்பயி
உம்பயி

மலையாளத்தில் எழுபதுகளில் பத்துவருடம் எம்.கே.அர்ஜுனன் ஒரு பெரிய படைப்பூக்கநிலையில் இருந்தார். மலையாளி இன்றும் நினைவில் நிறுத்தும் அற்புதமான பல பாடல்களை அவரால் அமைக்கமுடிந்தது. அவை மலையாள நாட்டாரிசைக்கும் நாடகஇசைக்கும் இந்தியமரபிசைக்கும் நடுவே ஓரிடத்தில் அமைந்தவை. அவற்றில் பல அற்புதமான பாடல்களை கமல் நடித்திருந்தார்

சிலவருடங்களுக்கு முன் கோழிக்கோட்டின் புகழ்பெற்ற கஸல் பாடகரான உம்பயி ஒருபாடலைப் பாடுவதைக் கேட்டேன். ‘செம்பகத் தைகள் பூத்த மானத்து பொன்னம்பிளி சும்பனம் கொள்ளான் ஒருங்ஙீ” அந்தபாடல் கமல் நடித்தது. அர்ஜுனன் இசை. அது காலப்போக்கில் கஸலாக மாறிவிட்டிருக்கிறது!

கமலஹாசனிடம் சொன்னேன். “உங்களுக்கு வயதாவது என்பது என்னை நான் வயதாகிவிட்டது என ஒப்புக்கொள்வதுபோல.இன்னும் கொஞ்சநாள் இளமையாகத்தான் நீங்கள் இருந்தாகவேண்டும். அது எனது தேவை” நான் செம்பகத்தைகள் பாடலைச் சொன்னேன். அந்தப்பாடல் படமாக்கப்பட்டபோது அந்த நடிகை [விதுபாலா] வை திருமணம் செய்யப்போகிறவர் வந்து அமர்ந்து மொத்தப்படப்பிடிப்பையும் பதற்றமாக வேடிக்கைபார்த்ததைச் சொல்லிச் சிரித்தார்

பின் மெல்ல அந்த மெட்டை முனகினார். பாடுங்கள் என்றேன். அதே துல்லியத்துடன் மொத்தப்பாடலையும் பாடினார். இரண்டாவது வரியில் அம்பிளீ… என நீண்டு சுருளும் நோட் எளிதில் பாடக்கூடியது அல்ல.

செம்பகத்தைகள் பூத்த மானத்து பொன்னம்பிளி
சும்பனம் கொள்ளான் ஒருங்ஙி
அம்பிளீ பொன்னம்பிளீ
சும்பனம் கொள்ளான் ஒருங்கீ

அம்பிளி பொன்னம்பிளி
சும்பனம் கொள்ளானொருங்ங்கி

அத்தரின் சுகந்தமும் பூசி என் மலச்ச்செண்டில்
முற்றத்து விடர்ந்நில்லல்லோ
வெற்றில முறுக்கிய சுண்டுமாய் தத்தக்கிளி
ஒப்பன பாடியில்லல்லோ

அல்லிக்கை மைலாஞ்சி கொண்டு என்றே மேனியில்
அவள் படம் வரச்சில்லல்லோ
மாணிக்ய மணிமுத்து கவிள் என்றே கவிளிலே
மங்ஙலில் திளங்ஙியில்லல்லோ

M.K.Arjunan.

[தமிழில்]

செண்பகக் கன்றுகள் பூத்த வானத்தில் பொன்னிலவு
முத்தம் பெற வந்தது
நிலவு பொன்னிலவு
முத்தம் பெற வந்தது

அத்தரின் நறுமணமும் பூசி என் மலர்ச்செண்டில்
முற்றத்தில் விரியவில்லையே
வெற்றிலையிட்ட இதழ்களுடன் பச்சைக்கிளி
ஒப்பனைப்பாடல் பாடவில்லையே

அல்லிக்கொடி போன்ற கைகளின் மருதாணியால்
என் நெஞ்சில் அவள் படம் வரையவில்லையே
மாணிக்க மணிமுத்துக் கன்னத்தின் ஒளி
என் கன்னத்தின் மங்கலால் மேலும் ஒளிகொள்ளவில்லையே

[ஒப்பனை- இஸ்லாமிய திருமணப்பாடல்

மைலாஞ்சி- இஸ்லாமியர் அணியும் மருதாணி]

செம்பகத்தைகள் பூத்த மானத்து – உம்பயி கஸல் வடிவம்

ஆயிரவல்லிதன் திருநடையில்…
https://www.youtube.com/watch?v=aoUI7NIID7c

எம் கே அர்ஜுனன்

பிரம்மானந்தன்

முந்தைய கட்டுரைவிசிஷ்டாத்வைதம் ஓர் அறிமுகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66