இலைமேல் எழுத்தின் கலை

index [கெ.பி.வினோத்]

ஜெ

கே.பி.வினோத் எடுத்திருக்கும் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் மீதான ஆவணப்படம் எடுத்தேன். 40 நிமிடங்கள் செறிவான அழகிய அனுபவமாக அமைந்தது. ஞானக்கூத்தனின் வீட்டுச்சூழல், அலுவலகச்சூழல், அவரது நண்பர்கள், வாழ்க்கை எல்லாமே மிகச்சீராக அமைக்கப்பட்டிருந்தன. அவரைப்பற்றிய இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் சிறப்பாக இருந்தன. 40 நிமிடத்தில் இத்தனையையும் சொல்ல சினிமாவால்தான் முடியும்

கடைசியில அவரது கவிதை படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. அதில் ஒரு மனிதமுகம்கூட வராமல் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இயக்குநரின் நுட்பமான அழகுணர்ச்சி உள்ளது.

இரண்டு இடங்கள் மேலும் முக்கியமானவை. ஞானக்கூத்தன் பேசும்போது கை அசையும் சைகைகளைக் காட்டியிருக்கும் விதம். அதேபோல அவரது வெடிச்சிரிப்பு. அவரது மனைவியின் அழகுணர்வைக் காட்டும் இடமும் அருமை.

காமிரா மற்றும் கோணங்கள் அனைத்துமே கிளாஸிக் தன்மையுடன் இருந்தன. கமல்ஹாசன் காட்சியின் ஒளியும் நீங்கள் பேசும் காட்சியின் ஒளியமைப்பும் அழகுற இருந்தன. ஃப்ரேம்களும் சிறப்பானவை. கமல்ஹாசன் செயற்கை ஒளியிலும் நீங்கள் இயற்கை ஒளியிலும் அழகாகத் தெரிந்தீர்கள்.

படம் முழுக்க காமிரா நகரவே இல்லை. அது ஓர் ஆச்சரியம். இப்படித்தான் 70களில் எடுத்தார்கள். நகரமுடியும் என்னும்போதே பலவகையில் கோணலாக வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அசையாத ஃப்ரேம்களுக்கு ஒரு நிதானமான கம்பீரம் இருந்தது.

அதேபோல இயற்கையான ஒளியின் அழகும் நன்றாக இருந்தது. ஞானக்கூத்தன் கதவைமூடும் காட்சியும் கடைசிக்காட்சியும் மிகச்சிறந்தவை.

ஜஸ்டின் ராஜ்

அன்புள்ள ஜஸ்டின்,

காமிரா அசைவதும் செயற்கை ஒளியும்தான் இன்று படங்களுக்கான பெரிய செலவுகள். டிஜிட்டல் காமிரா செலவானது அல்ல. ஆனால் காமிராவை அசைக்கவேண்டுமென்றால் பலவகையான கருவிகள், உதவியாளர்கள் தேவை. அதற்கு ஒளியமைக்க நிபுணர் தேவை

இந்த ஆவணப்படம் ஒரேஒருநபரால் , ஓர் உதவியாளர்கூட இல்லாமல், ஒரே ஒரு 7 D காமிராவை மட்டுமே கருவியாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயற்கை வெளிச்சமும், வீடுகளில் கிடைக்கும் வெளிச்சமும் மட்டுமே. காமிரா எப்போதுமே முக்காலி மேல்தான் அமர்ந்திருந்தது. மொத்தச்செலவு 16000 ரூபாய்

மிக எளிமையாகவே நம்மால் ஏராளமான விஷயங்களைச் செய்யமுடியும். தமிழில் இன்றும் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு ஆவணப்படங்கள் எடுக்கப்படவில்லை. பெரும்பாலான ஆலயங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை

ஜெ

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் காணொளிகள்

https://www.youtube.com/channel/UCupjLl0G0Wx_WizehL-LWTw

முந்தைய கட்டுரைநாடகமும் இலட்சியவாதமும்
அடுத்த கட்டுரைமாட்டிறைச்சித் தடை