தீபாவளி

எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் உண்டு. தீபாவளி, ஓணம், பொங்கல், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், சரஸ்வதி பூஜை… ஒவ்வொன்றையும் மரபான முறைப்படி கொண்டாடிவிட்டு ஏதாவது புதிதாகவும் செய்ய முயல்வோம். அனேகமாக பிள்ளைகளுடன் ஏதாவது ஒரு சிறு ஊர் சுற்றல். போன முறை ஏதேனும் ஒரு புதிய பறவையைப் பார்க்காமல் வீடு திரும்புவதில்லை என்ற சபதத்துடன் கிளம்பி மூன்றரை மணிநேரத்துக்குப் பின் திரும்பி வந்தோம்.பட்டப்பகலில் ஒரு வெண்ணிற ஆந்தையை பாறையடிக்காடருகே பார்த்த பின்னர்.

இன்றுகாலை எழுந்ததுமே பல்தேய்க்காமல் வாய் கழுவிவிட்டு முறுக்கு, அச்சுமுறுக்கு, குலாப் ஜாமூன் என்று தின்றுவிட்டுதான் டீயே குடித்தேன். பழைய தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகும் கோலாகலங்கள் பற்றிய ஒரு நடிப்புச் சித்திரத்தை பிள்ளைகளுக்குச் சொன்னேன். குறிப்பாக டிக்கெட் எடுத்தபின் கவுண்டர் விட்டு நீங்க படும் அவஸ்தைகளை.  செண்டிரல் தியேட்டரில் அன்னமிட்ட கை படம் . பத்மநாபாவில் சித்ரவீணா. இங்கே கவுன்டரில் கைவிட்ட என்னால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. ஒரு துளைக்குள் ஒன்பது கைகள். நான் ”கை கை கை”என்று கதற உள்ளே இருந்த சிப்பந்தி ”கை சென்டிரலிலே கை செண்டிரலிலே” என்று கத்தினார். சிரித்து குழைந்து விழுந்தார்கள். சென்றகாலத்தில்  உயிர்பிரச்சினையாக இருந்த எதுவும் இன்று நகைச்சுவைதான்.

பின்னர் எண்ணை தேய்ப்பு. அஜிதனுக்கு நானே உடலெங்கும் எண்ணை தேய்த்தேன். உடனே உள்ளே சென்று நிலைக்கண்ணாடியில் தன் உடலை மஸில் வரவழைத்துப் பார்த்துக்கொண்டான். ”அஜி உனக்கு மிஸ்டர்பீன் மாதிரி இருக்கு பாடி”என்று சைதன்யா சொன்னாள். துரத்திப்பிடித்து தன் உடலின் எண்ணையாலேயே அவளை தேய்த்து அழவைத்தான்.

குளியல் முடிந்து மீண்டும் இட்லி பலகாரம் சாப்பிட்டோம். அஜிதனும் சைதன்யாவும் புதிய ஆடைகள் அணிந்து மாறி மாறி ·போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்கள். நான் துணிகளின் ·பேஷன் மாறுவதை கிண்டல்செய்து நடித்துக்காட்டினேன். சாவித்ரி அந்தக்காலத்தில் கனுக்கை வரை ஜாக்கெட் போட்டு நடித்தார். வயதானபிறகு குட்டைக்கை போட்டு நடித்தார். கை தும்பிக்கை போல இருந்தது.படம் முழுக்க கை ஜெல்லி மாதிரி உருமாறிக்கொண்டே இருக்கும்

அதன் பிறகு பட்டாசு வெடித்தல். பட்டாசு வெடிக்க ஆரம்பித்து இரண்டு நாள் ஆகிறது. நான் வாங்கியது, அண்ணா வாங்கி கொடுத்தனுபியது என்று நிறைய பட்டாசு ஸ்டாக் இருந்தது. தெருவெங்கும் ஒரே பயல்கள் கூட்டம். இப்போதும் பெரிய பட்டாசுகள் வெடிக்க எனக்கு பயம்தான். சின்ன வயசில் அண்ணா வெடிப்பதை நான் வேடிக்கை பார்ப்பேன். இப்போது அஜிதன் வெடிக்க வேடிக்கை பார்த்தேன்.”அப்பா பயந்திராதே…இது கொஞ்சம் பெரிசு” என்று அவன் அடிக்கடி பயமுறுத்தினான்.

மதியச் சாப்பாடுக்குப் பிறகு சாகஸப் பயணம் என்ன என்று இன்னும் திட்டமிடவில்லை.  எண்ணைதேய்த்து குளித்தால் நான் சொக்கி விழ ஆரம்பித்துவிடுவேன். வெடி வெடிப்பதே ஒரு தாலாட்டுபோல இப்போது பழகிவிட்டிருக்கிறது.

எந்தக் கொண்டாட்டத்தையும் விட்டுவிடக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். தொன்மையான பண்பாடுகளில் இருக்கும் முக்கியமான சிறப்பே அவர்களுடைய திருவிழாக்களும் கொண்டாட்டங்களும்தான். இந்திய சமூகத்தை விடவும் சீனர்களுக்கு திருவிழாக்களும் பண்டிகைகளும் அதிகம் என்று சொன்னார்கள். காரணம் பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு வளர்ந்தபடியே இருக்கும் தன்மை பெரிய பண்பாடுகளுக்கு உண்டு. அந்த பண்பாடுகளில் இருந்தெல்லாம் அது கொண்டாட்டங்களை உள்ளே இழுத்துக்கொள்ளும்.

மனித வாழ்க்கையை பின்னுக்குத்திரும்பிப் பார்க்கும் ஒருவர் ஒன்றை உணர முடியும், களியாட்டங்களும் கொண்டாட்டங்களும் இயல்பாக அமைவது மிக மிக அபூர்வம். ஆனந்தம் பெரும்பாலும் தானாக நிகழ்வதே இல்லை. தேடிச்சென்றால் மட்டுமே கிடைக்கிறது அது. மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதற்காக முயல்பவர்களே மகிழ்ச்சியை அடைகிறார்கள். மகிழ்ச்சிக்கான மனநிலையை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உரியது மகிழ்ச்சி.

நித்யா சொல்வதுண்டு, ”மனிதர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதல்ல பிரச்சினை, மகிழ்ச்சியாக இருப்பதெப்படி என்று தெரியவில்லை என்பதே” என்று. நம்மில் ஒருவரை நிறுத்தி ‘நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் அதற்கு உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால் பெரும்பாலும் நம்மிடம் பதில் இருக்காது.

பெரும்பாலும் நுகர்வையே நாம் மகிழ்ச்சிக்கான காரணமாகச் சொல்வோம். நுகர்வில் வரும் மகிழ்ச்சி என்பது மிகக்குறுகியது. முதல்முறை மட்டுமே உவகையளிப்பது. அதை அடைந்ததுமே இன்னும் அடுத்த கட்டம் சார்ந்த ஒன்றை நோக்கி நம் மனம் நகரும். வெற்றியின் இன்பம் இன்னும் தற்காலிகமானது, வென்றேன் என்ற கணத்திலேயே அது முடிந்துவிடும். ஆதிக்கம் அதிகாரம் அளிக்கும் இன்பம் நம் அகங்காரத்தை குளிர்விக்கிறது. ஆனால் அதற்கு அதேயளவுக்கு விலையும் நாம் அளிக்கவேண்டியிருக்கும். தராசின் மறுதட்டில் மனக்கவலையையும் எரிச்சலையும் வைத்தாகவேண்டும். அங்கீகாரம் புகழ் அளிக்கும் மகிழ்ச்சியோ இன்னும் அதிகமாக விலை தரவேண்டிய ஒன்று.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடைகள் இல்லையென்றாலே மகிழ்ச்சியாக இருப்பேன் என்பதே இயல்பான மனநிலை. அதையே நாம் பயின்று உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது இப்போது. தடைகளை மீறியும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்பது யோகம்.

சின்னஞ்சிறு விஷயங்களில் உள்ளது மகிழ்ச்சி. அதை அறியும்படி நம் மனதை வைத்துக்கொண்டாலே போதுமானது. மகிழ்ச்சிக்கான முகாந்திரங்களை உண்டு பண்ணுவதே முக்கியம். பண்டிகைகளும் திருவிழாக்களும் நம் மரபு நமக்கு உருவாக்கியளிக்கும் கொண்டாட்டங்கள். குறிப்பாக சிறு குழந்தைகளின் வாழ்க்கையில் அவை உருவாக்கும் உவகை சாதாரணமல்ல. இளமையில் பண்டிகைகளை இழந்தவர்கள் பின்பு ஒருபோதும் ஈட்ட முடியாத செல்வமொன்றை தவறவிடுகிறார்கள்.

இந்த நாளின் உவகையை காரண காரியத்துடன் அடைய வேண்டுமென்றால் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஞானபீடம். லாட்டரியில் நாலைந்து கோடி ரூபாய் விழவேண்டும். நியூயார்க் டைம்ஸ் அட்டையில் படம் வரவேண்டும். ஒன்றுமே தேவை இல்லை என்றால் எல்லா நாளிலும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ”அப்பா இப்ப தவுசன் வாலா கொளுத்தப்போறோம்…பயப்படுறதுக்கு வாறியா?”என்று சைதன்யாவின் குரல். கிக்கீகீ என்று சிரிப்பு.

தீபாவளி முடிந்ததும் ஒரு வெறுமை. உடனே திருக்கார்த்திகை வரும் என்பது ஓர் எதிர்பார்ப்பு. இன்னும் எத்தனை நாள் என்று சைதன்யா எண்ண ஆரம்பிப்பாள்.

முந்தைய கட்டுரைநகைச்சுவை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதூரன்:கடிதங்கள்