சலசலப்புகளுக்கு அப்பால்…

ஜெ

சலசலப்புகளில் நான் வேண்டுமென்றே தான் கடுமையாக எதிர்வினை வைத்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ‘அல்லக்கை, அடிவருடி’ கோஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் இதுவரை சீண்டியதில்லை. ஆனால் அவ்வப்போது எரிச்சலை உண்டாக்கியது என்பதென்னவோ உண்மைதான். இப்போது இந்த கோஷம் வரைமுறையின்றி செல்கிறது என தோன்றியதால் என்னுடைய பதிலை வைத்தேன். என்னுடைய பதில் வெண்முரசு குறித்த விரிவான விமர்சனம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான சுருக்கமான, நேரடியான பதில்.

இந்த எதிர்வினையை வைத்ததற்கு காரணம் இருக்கிறது:

(1) ஜெவின்/வெண்முரசின் புது வாசகர்கள் பொதுவெளிக்கு, குறிப்பாக சமூக வலைதளங்களுக்கு, வந்து நாவலை பற்றி பேசுவதற்கு மிகவும் தயங்கிறார்கள். வெண்முரசு குறித்து மிகமிக நல்ல வாசிப்பு அவர்களிடம் தான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. வெண்முரசு குறித்து இன்னும் நுட்பமான புரிதலை அவர்களுடைய வாசிப்பும், அதன் மீது ஏற்படும் விவாதமும் உருவாக்கும். ஏன் இணையத்தில் வந்து பேசுவதில்லை என்று சிலரிடம் கேட்டதற்கு ‘ஜெ. படைப்பை பற்றி ஏதாவது நல்லா சொன்னலே துதிபாடி, அடிவருடின்னு சொல்றாங்க… எதுக்கு தேவையில்லாம அங்க வந்து எவன்கிட்டையோ திட்டு வாங்கணும்…” என்கிறார்கள்.

ஏன் சமூக வலைதளத்திற்கெல்லாம் வரவேண்டும் என்ற அவர்களின் கேள்வி ஒருவகையில் சரியானது தான். ஆனால் தங்கள் வாசிப்பை பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டும், அதன் மூலம் ஒரு விவாதத்தை துவக்க வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. அது நல்ல எழுத்து பயிற்சியும் கூட. அதை நடக்க விடாமல் தடுப்பது இது போன்ற அடிவருடி கோஷங்கள் தான்.

(2) இப்படி அடிவருடி, கொடி பிடிப்பவன் என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சியே நம் நண்பர்கள் சிலரும் ஒருவித ”சமநிலையை” பேணுகிறார்கள். அது அவர்களது கருத்துக்களின் வீச்சை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்க முடியும் போது தான் அந்த கருத்துக்களும் உண்மையுடன், தனித்தன்மையுடன் இருக்கும். யாராவது குரல்வலையை கடித்துவிடுவார்களோ என்ற எந்நேரமும் அச்சத்துடன் இருக்கும் சூழல் நல்லதல்ல.

(3) இவர்கள் எழுதிய பதிவிற்கு யாரும் எதிர்வினை வைத்திருக்கவில்லை என்றாலும் இதே ‘அடிவருடி, சினிமா ரசிகர்களின் மனநிலை’ கமெண்டை தான் வைத்திருக்கப்போகிறார்கள். ’நேரடியாகவே சவால் விட்டேன், ஒரு பயலும் வரவில்லை. எல்லாரும் தண்டம். பஜனை கோஷ்டிகள். ஒருத்தனுக்கும் சுய சிந்தனை இல்லை’ என்பதே அடுத்த பதிவாக இருந்திருக்கும்.

நிதானமாக அளிக்கப்பட்ட என் பதில்கள் அனைத்தையும் உடனடியாக நீக்கம் செய்தார்கள். இந்த விவாதத்தின் மூலம் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகியது. ‘கமெண்டை வெளியிடாமல் இருந்தது தப்பு’ என்று இவர்களின் நண்பர்கள் ஒருத்தர் கூட சொல்லவில்லை. அவ்வளவுதான் அவர்கள்!

வெளியே தான் பெரும் நியாயஸ்தர்களாக, ஜனநாயக விவாதம் கருத்துச் சுதந்திரம் எல்லாவற்றையும் காப்பவர்களாக வேஷம்! ஆகவே, மேற்கொண்டு இதை பற்றி விவாதிக்க ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.

*

விஷ்ணுபுரத்தில் தொடங்கி ஜெவின் பல ஆக்கங்களில் மகாபாரதப் பாதிப்பு உண்டு. அதில் உள்ள பல கிளைக்கதைகள், உருவகங்கள் என. இப்போது மகாபாரதத்தை மறுஆக்கம் செய்யும் போது தான் முன்பு எழுதிய எல்லா படைப்புகளையும் இதில் கொண்டு வர முடியுமா என பார்க்கிறார். அதில் வெளிவரும் நுண்மையாக்கதை [improvisation] தான் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ’நுண்மையாக்கம் தான் கலை. விதவிதமாகச் சொல்லிச் செல்வது அல்ல’ என்று வெண்முரசு குறித்த கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார். உண்மையில் வித்விதமாக எழுதிச் செல்லும் ஸ்டீபன் கிங் போன்ற வணிக எழுத்தாளர்களின் நாவல்களின் இடையே கூட பல பொதுகூறுகளை பார்க்க முடியும். அது அந்த எழுத்தாளர் முன்வைக்கும் மையமான கேள்விகளுள் ஒன்று என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகள் இல்லை, சமகால இணைப்புகள் எதுவும் இல்லை என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அதற்கு என்னதான் பதில் வைப்பது? ஒரு படைப்பில் சமகால இணைப்புகள் எவ்வளவுக்கு எவ்வளவு மெல்லியதாக உள்ளதோ, அந்த அளவு அது வீச்சுடன் இருக்கும். ஏன் என்றால் வாசகர்கள் அவற்றை இன்னும் பெரிதாக வளர்த்தெடுக்கக்கூடிய ஸ்பேஸ் அதில் உள்ளது. எழுவதுகளில் reader-response criticism வந்ததில் இருந்து இவற்றையெல்லாம் ஆங்கிலத்திலும், தமிழிலும் விமர்சகர்கள் மாறி மாறி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒரு படைப்பை விமர்சிக்க வரும் போது மட்டும் ஏனோ இதெல்லாம் இவர்களுக்கு மறந்து போய் விடுகிறது. என்ன சொல்ல…

அரவிந்த்

அன்புள்ள அரவிந்த்,

இந்த விஷயத்தில் புதியதாக வந்த இளையதலைமுறையினருக்கு வியப்பும் வருத்தமும் இருக்கும், எனக்கு இல்லை. ஏனென்றால் விஷ்ணுபுரம் வந்தபோதும் அச்சு அசலாக இதுவே நிகழ்ந்தது.

விஷ்ணுபுரம் வெளிவந்ததுமே அதற்கு உருவான பலகோணங்களிலான மிக விரிவான வாசிப்பு அன்று சூழலில் இயங்கிக்கொண்டிருந்த பலரை அச்சுறுத்தியது, எச்சரிக்கை கொள்ளச்செய்தது. ஏனென்றால் தமிழில் அப்படி ஓர் இலக்கியப்படைப்புக்கு தொடர்ச்சியான பலமுனைவாசிப்பும் விவாதமும் நிகழ்வதில்லை.. அந்த விவாதம் நிகழும் தளம் பிற அனைத்து எழுத்துக்களையும் முக்கியத்துவமிழக்கச் செய்தது. அது உருவாக்கிய அளவை அன்றிருந்த ்பிறவற்றை மேலோட்டமானதாக மாற்றியது

ஆகவே தொடர்ச்சியாக அதன் மேல் இந்தவகையான சில்லறை எதிர்ப்புகள், முத்திரைகுத்தும் எளிய விமர்சனங்கள் வெளிவந்தன. ‘அதில ஒண்ணுமே இல்ல, எல்லாமே முன்னாடி இருக்கிற புராணம்தான்’ என்பதில் தொடங்கி ‘பிஜெபி அரசியல் அதில இருக்கு’ என்பதுவரையிலான கருத்துக்கள் வந்தன. கூட்டங்கள் போடப்பட்டன. ஏன் கருத்தரங்குகள் கூட நடந்தன. நூறுகட்டுரைகளுக்குமேல் அந்நாவல் பற்றி எழுதப்பட்டன. பிழைகளைச் சுட்டிக்காட்டுபவை, நுண்ணரசியலைக் கண்டுபிடிப்பவைதான் அனைத்துமே.

ஆனால் அந்த வம்புகள் நாவலுக்கு நன்மையையே அளித்தன. ஏனென்றால் நல்ல வாசகன் எங்கும் உண்டு. அவன் இந்த சில்லறைக்குரல்களைத்தான் அதிகமும் முதலில் கேட்பான். அந்த மனப்பதிவுடன் வாசிக்கவந்தவர்கள் விஷ்ணுபுரத்தின் வரலாற்று,பண்பாட்டு, தத்துவ உள்ளடுக்குகளை அறியும்தோறும் அந்த விமர்சகர்களுக்கு ஒரு மெல்லிய ஏளனப் புன்னகையையையே மறுமொழியாகக் கொடுத்தார்கள். இன்று அக்குரல்கள் எங்கோ பின்னகர்ந்துவிட்டன.

ஆனால் ஒன்று நடந்தது. விஷ்ணுபுரம் வாசகர்கள் முழுக்க இந்த்துத்துவர்கள் என இடைவெளியில்லாமல் பேசப்பட்டதனால் நல்ல வாசகர்கள் பொதுவெளிக்கு வராமலேயே ஆகிவிட்டனர். இன்றும் நிகழ்வது இதுதான்.

வெண்முரசு உருவாக்கும் வாசகப்பரப்பும் அது உருவாக்கும் அளவைகளும் இன்று எழுதப்படும் சல்லிசான எழுத்துக்களை தொடர்ந்து கீழே தள்ளுவததை சாதாரணமாகவே காணலாம். இன்று எந்த ஒரு பிற சமகால ஆக்கமும் வாசகர்களிடம் மதிப்புபெறாமலாகிறது. அதை எழுதியவர்கள் ஒன்று இதை ஓர் அறைகூவலாகக் கொள்ளவேண்டும், அல்லது இதை எதிர்க்கவேண்டும். முதல் விஷயத்தைச் செய்ய திராணி இல்லாதவர்கள் இரண்டாவதை காமாசோமாவென்று செய்கிறார்கள்.

ஒருபடைப்பை நுட்பமாக வாசிக்க இரண்டு கோணங்கள் எப்போதும் தேவை. ஒன்று, அது எதை நோக்கிப்பேசுகிறது என்ற அறிதல். இன்னொன்று அது எதையெல்லாம் சுட்டிச்செல்கிறது என்ற அறிதல். அதன் ஆழ்பிரதியடுக்குகள் இவ்விரு அடிப்படைகளால் உருவாகக்கூடியவை. அதன் குறிப்புறுத்தல்களை அப்படித்தான் வாசிக்கமுடியும். ராதையின் கதை நீலத்தில் எப்படி மாறியிருக்கிறது என்றறிய கொஞ்சமேனும் ராதாமாதவ மரபை அறிந்திருக்கவேண்டும். வெறுமே சமகாலவாழ்க்கையின் அன்றாட அரசியலையும் எளிய பாலியல் சிக்கல்களையும்கொண்டு அவ்வாசிப்பை நிகழ்த்தமுடியாது.

விஷ்ணுபுரம் முதலான என் நாவல்கள் அனைத்துமே நீண்ட மரபால் கட்டமைக்கப்பட்ட தனிமனிதன் தன்னை மறுவரையறை செய்துகொண்டாகவேண்டியிருக்கும் இந்த நூற்றாண்டின் பண்பாட்டுநெருக்கடியை நோக்கிப்பேசுகின்றன. இந்திய வரலாறு, பண்பாட்டின் மொத்தத்தையும் சுட்டுவெளியாகக் கொண்டுள்ளன. இவ்விரண்டிலும் அவை கொடுக்கும் குறிப்புகளே அவற்றின் நுண்பிரதிகளின் அடுக்குகளை உருவாக்குபவை

ஆகவே முதற்கட்டத்தில் தனிமனித உளச்சிக்கல்களைப்பற்றி அவை பேசுகின்றன. ஒவ்வொருதருணத்தையும் எதிர்கொள்ளும்போது மனம்கொள்ளும் சிக்கலும் திரிபும் விவரிக்கப்படுகிறது. வரலாற்றையும் பண்பாட்டையும் மறுஆக்கம் செய்யும் முயற்சிகள் இரண்டாம்தளமாக உள்ளன. மூன்றவாதாக மிகச்சில வாசகர்களுக்கு மட்டுமே உரிய ஆன்மீக- மறைஞானத்தளம் ஒன்று எப்போதும் உள்ளது. அது இந்தியமரபின் குறியீட்டுமொழி அறிந்தவர்களுக்காக மட்டும்.

இந்தவாசிப்பை நிகழ்த்துவதற்கு ஒன்று இந்தப்படைப்புகளையாவது கூர்ந்து வாசிக்கவேண்டும். இவை முன்நோக்கும், சுட்டும் வெளியை மேலதிகமாக அறியவேண்டும். அத்தகைய ஒரு வாசிப்பு சாதாரண அரசியல் வம்புகளையும் அன்றாடப் பாலியல்சிக்கல்களையும் மட்டுமே அறிந்தவர்களால், அதிலேயே உழல்பவர்களால் செய்யப்படக்கூடியது அல்ல. இது அவர்களுக்குரியதே அல்ல. அவர்கள் உள்ளே நுழையவே முடியாது. நுழையமுடியவில்லை என்ற புலம்பலையே விமர்சனமாக முன்வைக்கிறார்கள்.

இவர்கள் எழுதும் பிறகுறிப்புகள், படைப்புகளை வைத்துப்பார்த்தால் அப்படி ஏதேனும் நுண்வாசிப்பை நிகழ்த்தியிருந்தால்தான் ஆனந்த அதிர்ச்சி கொள்ளவேண்டும். அதிர்ச்சியூட்டும் ஒரு பாலியல் அல்லது வன்முறைச்சித்தரிப்பையே இலக்கியம் என நம்பும் எளிய தொடக்கநிலையாளர்கள் இவர்கள்.

ஒரு நல்லவாசகன் என்பவன் எழுத்தாளனை தொடர்ந்து வாசிக்கக்கூடியவன். ஒவ்வொருபடைப்பையும் ஒன்றுடன் ஒன்றுகோர்த்துக்கொள்ளக்கூடியவன். அந்த இணைப்பு வழியாக அவனே அந்த ஆசிரியனை தன்னுள் முழுமையாகக் கட்டி எழுப்புவான். அவ்வாசிரியன் உருவாக்கும் அற-தத்துவ-ஆன்மீகச் சிக்கலின் தானும் ஈடுபட்டு தன் விடையைக் கண்டடைவான்

அந்த வாசிப்பில் ஒரு வகை அர்ப்பணிப்பு கண்டிப்பாக உண்டு. அத்தகைய ஒன்று இருப்பதையே வணிகஎழுத்தின் வாசகன் அறியமாட்டான். அவனுக்கு வாசிப்பு என்பது ‘விதவிதமாக’ ரசிப்பதுமட்டுமே. ‘ஏன் வகைவகையாக சமைப்பதில்லை’ என்ற எளிமையான வினா இலக்கியத்தை வாசிக்காமல் வணிக எழுத்துக்கள் வழியாகவே வந்த மனங்களுக்குரியது.

பண்பாட்டுவெளியில் தீவிரமாக இயங்கும் இலக்கியம் மரபின் ஆழ்படிமங்களை மீளமீளக் கையாளும். நுணுக்கமாக மறுஆக்கம் செய்யும். என் ஆக்கங்கள் அனைத்திலும் அப்படி ஒரு ஆழ்படிமத்தொகை உண்டு. அனைத்தையும் வெண்முரசில் எழுதி முழுமையாகவே காலியாகிவிடவேண்டும் என்பதே என் இலக்கு. எஞ்சுவது எது என்று பார்ப்போம். அப்போதும் சில ஆயிரம் வாசகர்கள் என்னுடன் வந்து நின்றிருப்பார்கள் என்பதே தமிழ்ச்சூழலில் நான் அடைந்த வெற்றி.

ஆனால் ஒவ்வொருமுறையும் இத்தகைய எதிர்வினைகள் சோர்வை உருவாக்குகின்றன. ஒருபோதும் இப்படைப்புகள் நுட்பமாக வாசிக்கப்படாதா, இத்தனை எளியமனங்களிடமா உயிர்வேகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற திகைப்பும் சலிப்பும் எழும். ஆனால் தொடர்ந்து கூர்ந்த வாசகர்களின் தனிப்பட்ட கடிதங்கள் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த ஊசலாட்டமே என் மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. தீவிரமாக எழுதும் எவருக்கும் இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்.

தொடர்ந்து இந்த அசட்டுத்தனங்களை பார்க்கையில் ஒரு அகங்காரநிறைவு ஏற்படுவதை மறுக்கமுடியாது. இவர்களால் இந்த எழுத்தின் வாசல்படியையே தாண்டமுடியாது என்ற எண்ணம் கொள்பவன் நம்முள் உள்ள அறிவாளி. ஆனால் அது ஒரு கீழ்மைநிலை. தன்னை வாசகன் கண்டுகொள்ளவேண்டும். அணுகிவரவேண்டும் என்றே நம்முள் உள்ள கலைஞன் ஏங்குவான்

ஜெ

முந்தைய கட்டுரைஆர் சிவலிங்கமும் கலேவலாவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63