நாடகமும் இலட்சியவாதமும்

அன்புள்ள ஜெ,

நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி வாசிப்பது. தங்கள் தளத்தின் அத்துனை கதைகளையும் வாசித்திருந்தும் வடக்கு முகத்தை நான் தவிர்த்து வந்ததற்கு மேற்கூறிய என் முன் முடிவுகளும், முன்பு வாசித்த சில நாடகங்கள் தந்த சலிப்பும் காரணமாக இருக்கலாம். சில நாட்களுக்கு முன், ”தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதினால் தவறில்லை, நாவலுக்கு வசனம் எழுதினால்தான் தவறு” என்ற உங்களின் வரிகளை படித்து சிரித்தேன். என் போன்றோரின் மன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக அது இருந்தது. ஆயினும், இத்தகைய கூற்றுக்கு சொந்தக்காரர் தம் நாடகத்தை எப்படி படைத்திருப்பார் என்ற ஆர்வமும் எழுந்தது. எனவே ‘வடக்கு முகம்’ வாசித்தேன். ஒரு உலகத்தரமான படத்தை பார்த்த பூரண திருப்தி.

அதன் வாசிப்பனுபவத்தை சொல்லும் அளவுக்கு எனக்கு மொழி இன்னும் கைவரவில்லை. பலமுறை எழுதி கசக்கி சோர்ந்து போனேன். சிந்தனை ஓட்டம் மட்டும்அடங்கியபாடில்லை. அன்று இரவு முழுவதும் தூங்காமல் என் அறையில் நிழல்களின் நடனத்தை பார்த்தபடி அம்பு படுக்கை பீஷ்மரை போல் பிரமைகளில் ஆழ்ந்திருந்தேன். அடிக்கடி என் மனதில் கருத்துக்களை எறிந்து குழப்பி விடுகிறீர்கள். உங்களிடம் இருந்து என்ன கருத்து பெற்றேன் என்று இறுதியாக யோசித்தால் எதுவும் பிடி கிடைப்பதில்லை. ஆனால் அவை உருவாக்கிய குழப்பம், அதன் தொடர்ச்சியான எண்ண ஓட்டங்கள், பித்து நிலை – யாவும் அடங்கும் நேரத்தில் அமைதியாக உணர்கிறேன். என் உலகம் இன்னும் அழகானதாக தெரிகிறது. நன்றி. அது கூட ஒரு ஒப்புக்காகத்தான் சொல்கிறேன். என்னால்(வாசகன்) நீங்களும் உங்களால் நானும் முழுமை நோக்கி செல்கிறோம். இதில் நன்றி எதற்கு. உங்களுக்கு பின் எங்களில் யாரேனும்தானே உங்கள் பயணத்தை, கனவை தொடரப்போகிறோம். அப்போது இந்த கடன் தானாய் அடையட்டும்.

தவிர ஒரு கேள்வி,

லட்சியவாதம் குறித்து ஒரு புறம் பேசுகிறீர்கள், மறுபுறம் புலன்களின் தீவிரத்தையும் சொல்கிறீர்கள். ஒரு மனிதன் புலன்களின் இடையூறின்றி பூரணமான ஒரு விரதத்திற்கு தன்னை ஒப்பு கொடுக்க வாய்ப்பே இல்லையா..? உடல் சார்ந்த ஒரு மனிதனின் தவிப்புகள் வெகு இயல்பானதே. ஆனாலும் அது வெறும் ஹார்மோன்களின் ஆட்டம்தானே..? புலன்களை விட மனம் வலிமையானதல்லவா..? அந்த மனது ஒன்றில் தீவிரமாக இறங்கியபின் புலன்கள் அதற்கு பணிந்துதானே ஆக வேண்டும். தியாகம், கடமை என்னும் பெறும் அற விழுமியங்களுக்கு உருவமான(என்று நான் நினைத்த) பீஷ்மரின் மனமும் சஞ்சலம் கொண்டிருக்க முடியுமா..? புனைவெனினும், இது தாங்கள் வலியுறுத்தும் லட்சியவாதத்திற்கு எதிராக உள்ளதாக தோன்றுகிறது. என் வாசிப்பில் பிழை உள்ளதா..?

நன்றியுடன்
பிரகாஷ் கோவிந்தன்

அன்புள்ள பிரகாஷ்,

மகாபாரதத்தை ஒட்டுமொத்தமாக வாசித்தால் அது எந்த பேரிலக்கியத்தையும்போல புலனின்பங்களுக்கும் இலட்சியங்களுக்கும் இடையேயான தீராத போரையே சொல்கிறது. இலக்கியங்கள் அதைச் சொல்லிச்சொல்லி முடிக்காமல் இன்றும் சொல்கின்றன. தேவாசுரப்போர் என்பது அதுதான்

புலன்கள் என்பது புலன்களை ஆட்டுவிக்கும் ஐந்துபொறிகளும் [இவை கர்ம இந்திரயங்கள் எனப்படுகின்றன] மனம், சித்தம் [இவை ஞான இந்திரியங்கள் எனப்படுகின்றன] ஆகியவையும் அடங்கியதுதான். அவை ஒன்றாகவே செயல்படுகின்றன. அறிபுலன்கள் செயற்புலன்களை இயக்குகின்றன. மனிதனின் உலகநாட்டம் முழுக்க அவற்றாலானது

இலட்சியவாதம் என்பது அவற்றுக்கு அப்பால் உள்ளதல்ல. அவற்றின் மேல் ஏறிச்சென்று தொடவேண்டிய உச்சம் மட்டுமே. அது எளிதல்ல.

நாம் பீஷ்மரை காந்தியைக்கொண்டே புரிந்துகொள்ளமுடியும்.காந்தியைப்போல பீஷ்மரும் கடைசிவரை உலகியல்களத்தில்தான் இருந்தார்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64
அடுத்த கட்டுரைஇலைமேல் எழுத்தின் கலை