கறுப்பர்களின் உளவியல்

‘சாதியுடன் புழங்குதல்’ அருமையான விளக்கம் ஜெ. சிறு வயதில் நகரத்தில் பள்ளிக்கூடம் செல்லும் போது சாதி ஏன் பேசி வீணடிக்கிறார்கள் என்று தோன்றும். நீங்கள் கூறுவதை நான் பல ஆண்டுகள் கழித்தே உணர்ந்தேன். நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதாரண பேச்சின் மூலம் புண்படும் மன நிலையை அமெரிக்காவில் கறுப்பின மக்களிடம் கண்கூட காணலாம்.

முன்னூறு ஆண்டுகள் வன்முறை மூலம் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையும் அதன் பிறகு அதிலிருந்து விடுதலை கிடைத்தும் இன்னொரு நூறு ஆண்டுகள் வெள்ளை இன மக்களால் விலக்கி வைக்கப்பட்ட கடுமையான வாழ்க்கையின் வடுக்கள் மிக ஆழமாக அவர்கள் மனதில் பதிந்துள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்து அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் பெற ஆரம்பித்திருக்கின்றனர். இன்னமும் கூட வரலாற்றின் பிடியிலிருந்து அவர்கள் விலக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பழகும் போதும் மிக எச்சரிக்கையாக பழக வேண்டும். ஒரு சொல் போதும் அவர்கள் மனதை புண்படுத்த. ஆழமாக புண்படுத்தப்பட்டாலும் அவர்களும் சண்டை எல்லாம் போட மாட்டார்கள்.

கறுப்பின இளைஞர்களுக்கு ஹிப்-ஹாப் மற்றும் ராப் இசை பிடிக்கும். அதனால் அவர்களிடம் போய் அந்த இசை பற்றி விளக்கம் கேட்டு விட கூடாது நெருங்கிய நண்பர்கள் தவிர. பிப்டி சென்ட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு புன்னகையுடன் ஏதாவது சிறிது சொல்லி விட்டு போய் விடுவார்கள். அந்த இசைகள் அவர்களால் அவர்களுக்காகவே இயற்றப்பட்டவை. அவர்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். அதிலுள்ள அவமானம், கோபம், வன்முறை, துரோகம் போன்றவை மற்றவர்களுக்கு புரியாது என்பது அவர்கள் எண்ணம்.

அதே போல் வெகு காலம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததினால் அவர்கள் உண்ணும் உணவும் வேறு மாதிரி இருக்கும். அதிகம் வறுக்கப்பட்ட உணவு வகைகளே அவர்களால் விரும்பப்படும். உணவு பழக்கம் இப்போது மாறி வந்தாலும் அவர்களிடம் வறுத்த வெண்டைக்காய் பற்றி கேட்டால் அவமானப்படுத்துவது போல் இருக்கும்.

இயற்கையால் பெற்ற உடல் வலிமையினால் கூடைப்பந்து, அமெரிக்க கால் பந்து விளையாட்டுகளில் பெருவாரியாக பங்கேற்பதை பற்றி பேசும் போதும் யோசித்து பேச வேண்டும். வெள்ளை இன மக்களால் அறிவு குறைந்தவர்களாக கருதப்பட்ட “stereotype” இன்னமும் தொடர்வதால், படிக்கும் திறன் இல்லாததினால் தான் விளையாட்டில் அதிகம் இடம் பெறுகின்றனர் என்பது போல் எடுத்துக்கொள்ளப்படும். நடைமுறையில் இலட்சியம் வேறு யதார்த்தம் வேறு.

சிவா
stride

அன்புள்ள சிவா,

உண்மை. நானே இதை கவனித்திருக்கிறேன். அமெரிக்காவில் செல்லும்போது என்னிடம் பல நண்பர்கள் ‘இந்திய வழக்கப்படி அன்னியர்களை அதிலும் கறுப்பர்களை கூர்ந்து பார்க்காதீர்கள்’ என எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். கறுப்பர்களுக்கு அவர்களின் கண்களை நாம் நேரடியாகச் சந்திபது பிடிப்பதில்லை, அதில் ஏளனம் உள்ளதாக அவர்கள் எண்ணக்கூடும் என்றார்கள்

நியூயார்க் நகரின் தெருவில் நானும் நண்பர் முரளியும் சென்றுகொண்டிருந்த போது எதிரே ஒரு கறுப்பர் வந்தார். செந்தில் போல தோற்றம். மிக விசித்திரமான நீன்ட சடைகள் நான்குபக்கமும் தொங்கின. இயல்பாக என் கவனம் அந்தச் சடைகள் மீது சென்றது. உடனே கண்ணை எடுத்துக்கொண்டேன்

அந்த சாலையோரமாக பாலுறவுப்பொருட்கள் விற்கும் கடைகள். நான் ”உள்ளே சென்று பார்ப்போமா?” என்றுகேட்க முரளி திடுக்கிட்டார். ‘என்ன இது, பகவத்கீதைக்கு பொருள் எழுதுபவன் கேட்கிற கேள்வியா இது?’ என்று முகம் சொன்னது. நான் சிரித்தேன்.

அப்போது அந்த கறுப்பர் என்னை நோக்கி ஆவேசமாக வந்து ‘மிஸ்டர், என் தலையைப்பார்த்துத்தானே சிரித்தாய்?’ என்று கேட்டார். நான் ‘இல்லை இல்லை’ என்று பதறினேன். ஒருகணம் அஞ்சி நடுங்கிவிட்டேன். அவர் என்னை தாக்கப்போகிறார் என்று நினைத்தேன். அப்படி அவர்கள் தாக்குவதைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தேன். அவர் ‘இல்லை நீ என்னைப்பற்றித்தான் சிரித்தாய். நான் என் தலையில் எதை வளார்த்திருந்தால் உனக்கென?’ என்றார்.

நான் அந்தக்கடையில் முன்னால் பெட்டிகளில் இருந்த செயற்கை ஆண்குறிகளைக் காட்டி ‘நான் சிரித்தது அதைப்பற்றி…கண்டிபபக உங்களைப்பற்றி அல்ல’ என்றேன். அவர் கொஞ்சம் தடுமாறியபின் ‘ஓக்கே’ என்று சென்றுவிட்டார்

உண்மையிலேயே இவர்களுடன் எப்படி பழகுவது என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. இந்த நூற்றாண்டு ஒரு சங்கடமான நூற்றாண்டு. சென்ற காலகட்டங்களுடைய சுமைகளை சுமக்கவேண்டியிருக்கிறது – சுரண்டியவர்களும், சுரண்டப்பட்டவர்களும்

அந்த சங்கடங்களை நேர்மையான உரையாடல்கள் மூலம் மிக எளிதாக கடந்து சென்றுவிட முடியும். தடையாக இருப்பது இந்த அறச்சிக்கல்களை மிகையுணர்ச்சிகள் மூலம் கோபதாபங்களாக ஆக்கி பிம்ப உற்பத்திக்கு அலையும் போலி முற்போக்கினர். உள்ளூர சென்று நோக்கினால் அப்பட்டமான பிற்போக்கு மனநிலைகளை ஒளிக்கவே அந்த அதிதீவிர முற்போக்கு பாவனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று புரியும்

ஜெ

முந்தைய கட்டுரைபருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்
அடுத்த கட்டுரைவைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு