«

»


Print this Post

கறுப்பர்களின் உளவியல்


‘சாதியுடன் புழங்குதல்’ அருமையான விளக்கம் ஜெ. சிறு வயதில் நகரத்தில் பள்ளிக்கூடம் செல்லும் போது சாதி ஏன் பேசி வீணடிக்கிறார்கள் என்று தோன்றும். நீங்கள் கூறுவதை நான் பல ஆண்டுகள் கழித்தே உணர்ந்தேன். நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதாரண பேச்சின் மூலம் புண்படும் மன நிலையை அமெரிக்காவில் கறுப்பின மக்களிடம் கண்கூட காணலாம்.

முன்னூறு ஆண்டுகள் வன்முறை மூலம் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையும் அதன் பிறகு அதிலிருந்து விடுதலை கிடைத்தும் இன்னொரு நூறு ஆண்டுகள் வெள்ளை இன மக்களால் விலக்கி வைக்கப்பட்ட கடுமையான வாழ்க்கையின் வடுக்கள் மிக ஆழமாக அவர்கள் மனதில் பதிந்துள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்து அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் பெற ஆரம்பித்திருக்கின்றனர். இன்னமும் கூட வரலாற்றின் பிடியிலிருந்து அவர்கள் விலக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பழகும் போதும் மிக எச்சரிக்கையாக பழக வேண்டும். ஒரு சொல் போதும் அவர்கள் மனதை புண்படுத்த. ஆழமாக புண்படுத்தப்பட்டாலும் அவர்களும் சண்டை எல்லாம் போட மாட்டார்கள்.

கறுப்பின இளைஞர்களுக்கு ஹிப்-ஹாப் மற்றும் ராப் இசை பிடிக்கும். அதனால் அவர்களிடம் போய் அந்த இசை பற்றி விளக்கம் கேட்டு விட கூடாது நெருங்கிய நண்பர்கள் தவிர. பிப்டி சென்ட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு புன்னகையுடன் ஏதாவது சிறிது சொல்லி விட்டு போய் விடுவார்கள். அந்த இசைகள் அவர்களால் அவர்களுக்காகவே இயற்றப்பட்டவை. அவர்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். அதிலுள்ள அவமானம், கோபம், வன்முறை, துரோகம் போன்றவை மற்றவர்களுக்கு புரியாது என்பது அவர்கள் எண்ணம்.

அதே போல் வெகு காலம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததினால் அவர்கள் உண்ணும் உணவும் வேறு மாதிரி இருக்கும். அதிகம் வறுக்கப்பட்ட உணவு வகைகளே அவர்களால் விரும்பப்படும். உணவு பழக்கம் இப்போது மாறி வந்தாலும் அவர்களிடம் வறுத்த வெண்டைக்காய் பற்றி கேட்டால் அவமானப்படுத்துவது போல் இருக்கும்.

இயற்கையால் பெற்ற உடல் வலிமையினால் கூடைப்பந்து, அமெரிக்க கால் பந்து விளையாட்டுகளில் பெருவாரியாக பங்கேற்பதை பற்றி பேசும் போதும் யோசித்து பேச வேண்டும். வெள்ளை இன மக்களால் அறிவு குறைந்தவர்களாக கருதப்பட்ட “stereotype” இன்னமும் தொடர்வதால், படிக்கும் திறன் இல்லாததினால் தான் விளையாட்டில் அதிகம் இடம் பெறுகின்றனர் என்பது போல் எடுத்துக்கொள்ளப்படும். நடைமுறையில் இலட்சியம் வேறு யதார்த்தம் வேறு.

சிவா
stride

அன்புள்ள சிவா,

உண்மை. நானே இதை கவனித்திருக்கிறேன். அமெரிக்காவில் செல்லும்போது என்னிடம் பல நண்பர்கள் ‘இந்திய வழக்கப்படி அன்னியர்களை அதிலும் கறுப்பர்களை கூர்ந்து பார்க்காதீர்கள்’ என எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். கறுப்பர்களுக்கு அவர்களின் கண்களை நாம் நேரடியாகச் சந்திபது பிடிப்பதில்லை, அதில் ஏளனம் உள்ளதாக அவர்கள் எண்ணக்கூடும் என்றார்கள்

நியூயார்க் நகரின் தெருவில் நானும் நண்பர் முரளியும் சென்றுகொண்டிருந்த போது எதிரே ஒரு கறுப்பர் வந்தார். செந்தில் போல தோற்றம். மிக விசித்திரமான நீன்ட சடைகள் நான்குபக்கமும் தொங்கின. இயல்பாக என் கவனம் அந்தச் சடைகள் மீது சென்றது. உடனே கண்ணை எடுத்துக்கொண்டேன்

அந்த சாலையோரமாக பாலுறவுப்பொருட்கள் விற்கும் கடைகள். நான் ”உள்ளே சென்று பார்ப்போமா?” என்றுகேட்க முரளி திடுக்கிட்டார். ‘என்ன இது, பகவத்கீதைக்கு பொருள் எழுதுபவன் கேட்கிற கேள்வியா இது?’ என்று முகம் சொன்னது. நான் சிரித்தேன்.

அப்போது அந்த கறுப்பர் என்னை நோக்கி ஆவேசமாக வந்து ‘மிஸ்டர், என் தலையைப்பார்த்துத்தானே சிரித்தாய்?’ என்று கேட்டார். நான் ‘இல்லை இல்லை’ என்று பதறினேன். ஒருகணம் அஞ்சி நடுங்கிவிட்டேன். அவர் என்னை தாக்கப்போகிறார் என்று நினைத்தேன். அப்படி அவர்கள் தாக்குவதைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தேன். அவர் ‘இல்லை நீ என்னைப்பற்றித்தான் சிரித்தாய். நான் என் தலையில் எதை வளார்த்திருந்தால் உனக்கென?’ என்றார்.

நான் அந்தக்கடையில் முன்னால் பெட்டிகளில் இருந்த செயற்கை ஆண்குறிகளைக் காட்டி ‘நான் சிரித்தது அதைப்பற்றி…கண்டிபபக உங்களைப்பற்றி அல்ல’ என்றேன். அவர் கொஞ்சம் தடுமாறியபின் ‘ஓக்கே’ என்று சென்றுவிட்டார்

உண்மையிலேயே இவர்களுடன் எப்படி பழகுவது என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. இந்த நூற்றாண்டு ஒரு சங்கடமான நூற்றாண்டு. சென்ற காலகட்டங்களுடைய சுமைகளை சுமக்கவேண்டியிருக்கிறது – சுரண்டியவர்களும், சுரண்டப்பட்டவர்களும்

அந்த சங்கடங்களை நேர்மையான உரையாடல்கள் மூலம் மிக எளிதாக கடந்து சென்றுவிட முடியும். தடையாக இருப்பது இந்த அறச்சிக்கல்களை மிகையுணர்ச்சிகள் மூலம் கோபதாபங்களாக ஆக்கி பிம்ப உற்பத்திக்கு அலையும் போலி முற்போக்கினர். உள்ளூர சென்று நோக்கினால் அப்பட்டமான பிற்போக்கு மனநிலைகளை ஒளிக்கவே அந்த அதிதீவிர முற்போக்கு பாவனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று புரியும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7353

7 comments

Skip to comment form

 1. jasdiaz

  I had a recent experience in USA. I was driving a rented car and the ‘tire pressure low warning’ beeped. I pulled up to the nearest fuel station and was struggling with the quarter dollar air-pump. I asked for help from a black american who drove in an expensive car. He asked me whether I can pay for his petrol which I said I can not. The he asked me for atleast two dollars and took the money. He also could not fill up the air. He fiddled for some time and since I was losing quarter dollars fast. I stopped him.

  I am unable to understand a person driving an expensive car asking for two dollars. Can any one who had lived long in USA, explain this?

  jas

 2. kthillairaj

  ஒவ்வோவ்று தாழ்த்தப்பட்ட இனதைசேர்ந்த வர்கள் பல இடங்களில் ஏதிர்கொள்ளும் இந்த உணர்ச்சி இப்பொழுது வேலை செய்கிற இடங்களில் படித்தவர்கலாலேயே அவமான பட வேண்டியுள்ளது என்ன்பது மிகையாகது

 3. rangadurai

  //உள்ளூர சென்று நோக்கினால் அப்பட்டமான பிற்போக்கு மனநிலைகளை ஒளிக்கவே அந்த அதிதீவிர முற்போக்கு பாவனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று புரியும்//

  தமிழக இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் பற்றிய மிகச் சரியான அவதானிப்பு. பாராட்டுகள்.

  – பா. ரெங்கதுரை

 4. tamilsabari

  ////உள்ளூர சென்று நோக்கினால் அப்பட்டமான பிற்போக்கு மனநிலைகளை ஒளிக்கவே அந்த அதிதீவிர முற்போக்கு பாவனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று புரியும்//

  தமிழக இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் பற்றிய மிகச் சரியான அவதானிப்பு. பாராட்டுகள்.

  – பா. ரெங்கதுரை//

  வழிமொழிகிறேன்.

  ஆனாலும் ஒடுக்க பட்டிருந்தவர்கள் தாங்கள் தாழ்நிலையில் இருப்பதாக பிறர் நினைக்க கூடாது என்பதற்காக உள்ள உணர்ச்சி இருக்க தான் செய்யும். அது இயல்பானது, சரியானது என உணர்கிறேன்.

 5. ramji_yahoo

  கடைசி இரண்டு பத்திகள் மிக அருமை. உலகில் எல்லா வித பேதங்கலுமே கொடுமை. சாதி பேதம், வர்க்க அதிகார பேதம், பணத்தின் அடிப்படையால் ஆனா வேறுபாடு, திறமையின் அடிப்படையால் ஏற்படும் வேறுபாடு.

  உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் இவற்றால் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்பு நாம் பொருளாதார ரீதியான வேறுபாடுகளை நம் நாட்டிலேயே மிக அதிக அளவில் காண்போம் என நினைக்கிறேன்.

 6. baski

  அன்பின் ஜெமோ,
  நெடுங்காலம் இங்கே வாழ்பவன் என்ற வகையில் அமெரிக்க வாழ் கறுப்பர்களின் உளவியல் பற்றி இங்கே தெரிவிக்கப்பட்டக் கருத்துகளில் அடிப்படைப் பிழை இருக்கக் காண்கிறேன். அவர்கள் அப்படி இருக்கக் காரணங்களைப் பார்ப்போம். இங்கே கருப்பறாக வாழ்வது மிகவும் கடினம். எந்த ஒரு நிறுவனமும் தகுதி இருந்தாலும் எளிதில் வேலை கொடுக்காது. வெள்ளையர்கள், சும்மா படித்திருந்தால் போதும். என்னுடன் வேலை பார்த்தவர்களிலேயே அதி புத்திக்கூர்மை உள்ள கறுப்பினப் பொறியாளர்களைப் பார்த்திருக்கிறேன். வெள்ளையர்கள் பெரும்பாலும் ஜல்லி அடித்தே மேலே செல்வார்கள். அதிலும் அழகான வெள்ளைப் பெண்ணாக இறுதி விட்டால் கேட்கவே வேண்டாம். கறுப்பர்களுக்கு உத்தியோக உயர்வு ரொம்பக் கடினம்.

  வங்கிகளில் கடன் வாங்கச் சென்றால் கிடைக்காது, அப்படியே கொடுத்தாலும் உள்ளதிலேயே மட்டமான ‘டெர்ம்ஸ்’ அடங்கிய கடனைக் கொடுப்பார்கள். தேர்தலில் நின்றால் வெள்ளையர்கள் சும்மா குடும்பத்துடன் ஒரு போட்டோ + ஒழுங்காக சர்ச் சென்று வருவதற்கு அத்தாட்சி, இவை போதும். கருப்பர்கள் ஏறக்குறைய தண்ணீரின் மேல் நடந்து காட்ட வேண்டியிருக்கும். (ஒபாமாவின் தேர்தலில் நின்ற வகையை ஆய்ந்து பாருங்கள்).

  இது இப்படி இருக்க, லோக்கல் சானல்களில் தினசரி வரும் குற்றச் செய்திகளைப் பார்க்க வேண்டும். வெறும் வெள்ளையர் அல்லாதவர்களையே முதல் குற்றவாளிகளாய்க் காட்டுவார்கள். உதாரணமாக, ஒரு வீட்டுக்குள் கொலை நடந்து விட்டால், அந்தப் பக்கமாக தேமே என்று போய்க் கொண்டிருந்த ஒரு கருப்பரை சந்தேகப்படும் குற்றவாளியாக சித்தரித்துப் படம் வரைந்து செய்தி வரும். நேரில் பார்த்த சாட்சியங்கள் விலாவாரியாக விவரிப்பார்கள். விசாரணைக்குப் பின்னர் நிஜக் குற்றவாளியாக ஒரு வெள்ளைக்காரன் பிடிபடுவான். அனால் அந்தத் டீவீக்கள் இதைப் பெரிய விஷயமாகக் கருதுவதே இல்லை. டெக்சஸ் போன்ற பார்டர் மாநிலங்களில் ‘சந்தேகக் குற்றவாளிகள்’ ஸ்பானிஷ் மக்கள்.

  போதாக்குறைக்கு, ஒரு வசதியான கறுப்பர் விலை உயர்ந்த ‘கெடிலாக்’ ரகக் காரில் சென்றால், போலீஸ் அவரை சந்தேகத்தின் பேரில் ஓரம் கட்டி விசாரிப்பது சர்வ சாதாரணம். சுருக்கமாக, ஒரு வெள்ளையர் ‘குற்றம் செய்தார்’ என்று எதிர்த்தரப்பு வக்கீல் நிரூபிக்க வேண்டும், ஆனால் ஒரு கறுப்பர், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
  — பாஸ்கி
  http://baski-reviews.blogspot.com

 7. sankarg.siva

  I agree with JeMo sir. These kind of conflicts can be handled with humurous way of approach and speech.I have seen “standup comedians” doing this just like that and making people laught at these historical,cultural conflicts.I guess, this is by far the best way of protesting against these kind of sensitive issues.

Comments have been disabled.