பகுதி 13 : பகடையின் எண்கள் – 2
புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். துயரம் நிறைந்த பெண்குரல். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவன் கால்கள் துண்டுபட்டு அப்பால் மழையில் நனைந்தபடி கிடந்தன. அவை பனிக்கட்டி என குளிர்ந்திருப்பதை உணரவும் முடிந்தது.
எங்கோ அருவி விழும் ஓசை. பின்னர் அது காற்றின் ஓசை என தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்தமர்ந்தபோது சற்று அப்பால் இருளில் ஒருவன் நிற்பதை உணர்ந்தான். அவன் கையில் ஒளிவிடும் வாள் இருந்தது. சற்று முன்னர் அவனை வெட்டி வீழ்த்தியவன் அவன் என உணர்ந்ததும் அச்சத்துடன் அவன் எழுந்து விலகமுயன்றபோது இடுப்புக்குக்கீழே கடும் குளிர் என உணர்ந்தான். அவனுடைய கண்கள் நீர்த்துளிகளென மின்னின. உதடுகள் மெல்ல அசைந்தன. அவன் வாளை ஓங்கி மீன்கொத்தி காற்றிலிறங்கும் ஒலியுடன் சுழற்ற அவன் கழுத்தை குளிரலை வந்து தொட்டது.
பூரிசிரவஸ் மூச்சுக்குள் அலறியபடி மீண்டும் எழுந்தமர்ந்தான். முன்னர் எழுந்தமரவில்லையா என எண்ணியபடி நோக்கியபோது கையில் தாலத்துடன் நின்ற ஏவலன் “இன்று மத்ரநாட்டுக்கு பயணம் செய்கிறீர்கள் இளவரசே” என்றான். அவன் எழுந்து நின்று தன் கைகால்களை நீட்டினான். கால்கள் குளிரில் விரைத்திருந்தன. கம்பளிப்போர்வையை சரிவர போர்த்தாமல் துயின்றிருக்கிறான். மேலும் சிலகணங்களில் அவன் மீண்டுவிட்டான். “நீராட்டறை சித்தமாக உள்ளதா?” என்றான். “ஆம் இளவரசே” என்றான் ஏவலன். “புரவிகளும் சித்தமாகிவிட்டன.புதிய ஏவலர்களும் வந்து நின்றிருக்கிறார்கள்.”
அவன் பெருமூச்சுடன் “நான் வந்துவிடுகிறேன். அமைச்சர் கர்த்தமரிடம் எனக்குரிய ஓலை சித்தமாகிவிட்டதா என்று கேட்டுவா” என்றான். முந்தையநாள் இரவு நெடுநேரமாகியும் அவரது ஓலைக்காக காத்திருந்ததை நினைவுகூர்ந்தான். அந்நினைவினூடாக தேவிகையின் நினைவெழுந்தது. இருநினைவுகளும் ஒன்றுடனொன்று ஊடாடின. அப்போதுதான் கனவுக்குள் அவனை அழைத்தவள் தேவிகை என தெளிவடைந்தான். தேவிகையைப்பற்றி அவன் எண்ணியே நெடுநாட்களாகின்றன என நினைத்துக்கொண்டதும் தலை இருபக்கமும் வலிக்கத்தொடங்கியது.
முந்தையநாள் அவனும் சலனுடன் அமர்ந்து மலைக்கிழங்கு நொதித்து வாற்றி எடுத்த ஹாஸம் என்னும் மதுவை சற்றே சூடுபடுத்தி அருந்தினான். புகையிடப்பட்ட கன்றின் ஊனும், சோளமாவில் பொதிந்து இலையில் வைத்து ஆவியில் அவித்த காளான்களும் பால்கலந்த அப்பங்களுமாக அவன் நெடுநாள் எண்ணி ஏங்கியிருந்த ஓர் இரவு. சலன் சொன்னான் “நாம் இங்கே மலையெலி போல வாழ்வதற்குக்கூட பூனைகளுடன் களமாடவேண்டியிருக்கிறது இளையோனே. படைப்பை ஆற்றியவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு எளியோரிடம் கனிவில்லை என்பது தெளிவு.”
பயண உடையுடன் அவன் அரண்மனைமுகப்பை நோக்கி சென்றபோது ஏவலன் வந்து “அமைச்சர் இன்னமும் அலுவல்நிலை வரவில்லை இளவரசே. அங்கே சுவடிநாயகமும் இல்லை. ஏவலன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவனிடம் கேட்டேன். அவனும் களிமயக்கு தீராமலிருக்கிறான்…” பூரிசிரவஸ் சினம் கொண்டு “நான் மத்ரநாட்டுக்கு அரசரின் ஓலையுடன் செல்லவேண்டும், தெரிகிறதா? அரச ஓலை சித்தமாகிவிட்டதா என்று கேட்டேன்… தெரிகிறதா?” என்று கூவினான். நான் என்ன செய்வது அதற்கு என்ற சொல் ஏவலனின் விழிகளில் தெரிந்தது. அவனிடம் சொல்லி என்ன பயன் என்ற எண்ணம் வந்ததும் பூரிசிரவஸ் திரும்பி அலுவல்நிலை நோக்கி சென்றான்.
அலுவல்கூடங்களில் எவருமே இல்லை. அமர்ந்து எழுதுவதற்கான கம்பளித்திண்டுகள் வழக்கமாக அவற்றில் அமர்ந்தவர்களுக்கான குழிகளுடன் காத்திருக்க எழுத்தாணிச்சுவடுகளுடன் மைக்கறைகளுடன் எழுத்துப்பீடங்கள் விளக்கொளி பளபளக்க கிடந்தன. அவனைக்கண்டதும் மீண்டும் படுத்துவிட்டிருந்த அலுவலன் எழுந்து நின்றான். “அமைச்சர் எங்கே?” என்றான் பூரிசிரவஸ். “மாளிகையில்… இல்லை, வேறெங்காவது…” என்ற அவன் ”நானறியேன் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு தன்னை வென்று கீழே பரவியிருந்த சுவடிப்பேழைகளை நோக்கினான். “அமைச்சர் நேற்று இரவு ஏதேனும் சுவடிகளை எழுதினாரா?” என்றான். “அறியேன் இளவரசே.”
“அமைச்சரின் சுவடிப்பேழை எது?” என்றான் பூரிசிரவஸ். “அது அறைக்குள் உள்ளது. அறை பூட்டப்பட்டுள்ளது” என்றான் ஏவலன். “உடை அதை” என்றான் பூரிசிரவஸ். “உடைக்கவேண்டுமென்றால் தச்சன் வரவேண்டும் இளவரசே… அத்துடன்…” பூரிசிரவஸ் பொறுமை இழந்து “நிறுத்து” என்று கூவிவிட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஓர் எண்ணம் வந்தது. ஓலை ஒன்றை அவனே எழுதி அரசரின் முத்திரையைப்பெற்று கொண்டுசெல்வதே செய்யக்கூடுவது. அரசர் துயின்றுகொண்டிருந்தால்கூட கையில் இருந்த முத்திரைமோதிரத்தை ஒற்றி எடுத்துக்கொள்ள முடியும். வேறுவழியில்லை.
பூரிசிரவஸ் ஓலைநாயகத்தின் பீடம் என தெரிந்த ஒன்றில் அமர்ந்துகொண்டு பேழையை திறந்தான். அது மூடியிருந்தது. குறுவாளை உள்ளே செலுத்தி அதன் தாழை உடைத்து இழுத்தான். உள்ளே ஓலைச்சுருட்களும் தோல்சுருட்களும் மண்டியிருந்தன. கையால் அளைந்து ஏற்கெனவே அமைச்சுமுத்திரைகள் உள்ள சுவடிகள் கிடக்கின்றனவா என்று பார்த்தான். அந்தப்பேழை அவன் எண்ணியதைவிட மிகப்பெரியதென்று தெரிந்தது. அவன் கையால் துழாவத்துழாவ நூற்றுக்கணக்கான சுவடிகளும் தோல்சுருட்களும் ஃபூர்ஜமரப்பட்டைகளும் செம்புச்சுருட்களும் வந்தபடியே இருந்தன. சௌவீரர்களும் மத்ரர்களும் யவனர்களும் கூர்ஜரர்களும் அனுப்பியவை. பலவகையான ஒற்றுச்செய்திகள். பெரும்பாலானவை உடைத்துப்பார்க்கப்படாதவை.
அவன் கை அறியாமல் நின்றது. ஏன் என உள்ளம் திகைத்தது. அவன் எதையோ ஒன்றை கண்டுவிட்டிருந்தான். எதை? அதை உடனே மீண்டும் துழாவி எடுத்துவிட்டான். சிபிநாட்டிலிருந்து வந்த பறவைத்தூது. இறுகச்சுருட்டிய தோல்சுருள் சிபிநாட்டு நூல்முடிச்சு முத்திரைகளுடன் அவிழ்க்கப்படாமலே இருந்தது. அவன் விரல்கள் நடுங்கத்தொடங்கின. அதில் விரும்பத்தகாத செய்திதான் உள்ளது என எப்படி உள்ளம் உணர்ந்துகொண்டது? அதை உடனடியாக தவிர்க்கவேண்டுமென்று எண்ணியபடி அதை நோக்கினான்.
நிலையற்ற விழிகளுடன் அவன் அதை விரல்களில் வைத்து நெருடிக்கொண்டே இருந்தான். சற்று பழைய செய்தி என தோன்றியது. அது ஆறுதலளித்தது. அந்த ஆறுதலில் உள்ள மூடத்தனம் உடனே வியப்பையும் கொடுத்தது. ஆனால் காலம்கடந்த கெட்டசெய்தி அதன் வீச்சை இழந்துவிடுகிறது. துயரம்தாங்கி கடக்கவேண்டிய அந்தக் காலம் அறியாமலே கடக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது ஓர் உளமயக்கு மட்டுமே. அறிதலே அடைதல். இல்லை. உண்மையிலேயே காலம் கடந்துவிட்டதென்றால் அதை நெஞ்சு அறிகிறது. கடந்துசெல்லவே ஒவ்வொரு உள்ளமும் விழைகிறது. ஆனால்…
தன் தயக்கத்தைக்கிழிப்பது போல பல்லைக்கடித்தபடி நடுங்கும் கைகளுடன் அவன் அதை திறந்தான். மஞ்சள்பூசப்பட்ட தோற்சுருள். முகப்பில் சிபிநாட்டரசனின் முத்திரை. ஸ்வஸ்தி சுழிக்குப்பின் “சிபிநாட்டரசரும் கஜபாகுவின் மைந்தருமான கோவாசனரின் ஆணைப்படி ஓலைநாயகம் எழுதிக்கொண்ட செய்தி” என எந்த முறைமைகளும் இல்லாமல் நேரடியாகவே தொடங்கியது ஓலை. அவன் எழுத்துக்களை தொட்டுத்தொட்டுச் சென்று மையச்செய்தியை வாசித்தான். “அரசரின் மகளும் தொன்மையான சிபிநாட்டுக்கு முதன்மை இளவரசியுமான தேவிகைக்கு அஸ்வினி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாள் திருமணத்தன்னேற்பு விழா நிகழவிருப்பதனால்…”
ஒரு கணம் அவன் உள்ளம் சொல்லிழந்து நின்றது. மீண்டும் அச்சொற்களை வாசித்தான். எத்தனைநாள் எத்தனைநாள் என சித்தம் தவித்தது. கீழே விழுந்துகொண்டே இருப்பவன் கைநீட்டிப் பற்றுவதுபோல அவன் எதையோ பிடித்துக்கொண்டான். “இன்னும் ஒன்பது நாட்கள்” என எவரோ உரக்கக்கூவுவது போல் உணர்ந்தான். “ஒன்பது நாட்களா? ஒன்பதா? ஒன்பதா?” என அவன் கூவினான். யாரோ ஓடிவரும் ஒலி. காதில் ஒரு மெல்லிய ரீங்கரிப்பு ஒரு வெடிப்புபோல அச்சொல் ஓசையின்றி அவனுள் பரவியது. ஒன்பது நாட்கள். ஒன்பது நாட்களில் குதிரையில் நில்லாமல் சென்றால்…
சலன் உள்ளே வந்து “என்ன செய்கிறாய்?” என்றான். எடைமிக்க ஒன்றை என பூரிசிரவஸ் அந்தச் சுருளை நீட்டினான். சலன் வாங்கி வாசித்துவிட்டு “இது வந்து பலநாட்களாகியிருக்கும் போலிருக்கிறது. குளிர்காலம் இன்னமும் வரவில்லை அதற்குள் குடித்துவிட்டு துயிலத்தொடங்கிவிட்டனர் மூடர்கள்” என்றான். பூரிசிரவஸ் அவன் உதடுகளையே பொருளின்றி பார்த்துக்கொண்டு நின்றான். ”இத்தனை சிறிய அரசு என்ன நினைத்து மணத்தன்னேற்புக்கு அழைப்புவிடுகிறது? இளையோனே, இதில் ஏதோ சூதிருக்கிறது” பூரிசிரவஸ் உள்ளம் அச்சொற்களை கேட்கவில்லை. “அவர்கள் எதையோ விரைந்துசெய்ய முயல்கிறார்கள்…” என்றான் சலன். “நாம் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணியதேயில்லை. ஆகவே அங்கு நமக்கு ஒற்றர்களும் இல்லை.”
ஏதோ ஒரு எண்ணத்தில் முட்டி தீச்சுட்டு எழுந்தவன் போல பூரிசிரவஸ் திரும்பி வாயிலை நோக்கி ஓடினான். “மூடா, என்ன செய்கிறாய்?” என்று சலன் கூவியதை அவன் கேட்கவில்லை. அவனுடைய காலடியோசையே இடைநாழியில் அவனை துரத்திவந்தது. அரண்மனை முற்றத்தில் இறங்கி செங்கல் பரவிய தரையில் குறடுகள் ஒலிக்க ஓடிச்சென்று தன் புரவிமேல் ஏறி அதை உதைத்து விரையச்செய்தான். கனைத்துக்கொண்டு முன்கால் தூக்கிப்பாய்ந்து அது இன்னமும் ஒளி வராத நகரத்தெருக்களில் ஓடியது. அவனைத்தொடர்ந்து வரவிருந்த படைவீரர்கள் எவரும் அவன் வந்து புரவியில் ஏறிக்கொண்டதை பார்க்கவில்லை. அவன் கிளம்பிய ஒலிகேட்டு அவர்கள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு அவனை தொடர்ந்து வந்தனர்.
தூமபதத்தை கடப்பதுவரை பூரிசிரவஸ்ஸின் உள்ளம் முன்னால் முன்னால் முன்னால் என்னும் ஒற்றைச்சொல்லாகவே இருந்தது. சுழல்பாதையில் விரைந்து இறங்கிக்கொண்டிருந்தபோதுதான் மெல்ல அச்சொல் எண்ணங்களின் ஒழுக்காக மாறியது. என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என அவனால் உய்த்தறிய முடியவில்லை. சலன் சொன்னதுபோல ஒரு மணத்தன்னேற்பு நிகழ்த்துமளவுக்கு சிபிநாட்டுக்கு செல்வவளம் இல்லை. குலப்பெருமையும் இல்லை. அவன் அகவிழியால் அந்தச் சுருளை மீளமீள வாசித்தான். ஒவ்வொரு எழுத்தாக, தோலின் ஒவ்வொரு புள்ளியாக. பொருள் அழிந்தபின் வெறும் அடையாளமாக. அப்போது அது இன்னமும் தெளிவாகப்புரிவதுபோலிருந்தது.
சற்று நேரத்திலேயே அவன் அனைத்தையும் பார்க்கத்தொடங்கிவிட்டான். அந்தத்திருமணத்தன்னேற்பு என்பது எவருக்கோ சிபிநாடு சொல்லும் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே. ஒரு மன்றாட்டு. மணத்தன்னேற்பில் எவரும் வந்து வென்று பெண்கொண்டு மீளலாம். எவருக்கோ தேவிகையை அளிக்க கோவாசனர் விழைகிறார். அதனால் வேறுஎவரோ சினம் கொள்ளாதிருக்கவும் முயல்கிறார். யார்? இன்று வடபுலப் பாலைநிலத்தின் படைக்கல ஆட்டக்களத்தில் அமர்ந்திருப்பவர்கள் இருவர் மட்டுமே. துவாரகையின் யாதவனும் சிந்துநாட்டின் ஜயத்ரதனும். அச்சொற்கள் எழுந்ததுமே அனைத்தையும் அவன் கண்டுவிட்டான். சிபிநாட்டு கோவாசனர் தன் மகளை அளிக்கப்போவது ஜயத்ரதனுக்குத்தான்.
ஒருகணம் அவன் உள்ளம் சோர்வுகொள்ள அதற்கேற்ப குதிரையும் விரைவழிந்து மெல்லடி வைத்தது. அவனுக்கும் சிபிநாட்டுக்குமிடையே நெடுந்தொலைவு இருந்தது. அடிவைக்க அடிவைக்க அந்தத்தொலைவு பெருகிச்சென்றது. சென்றுசேரவே முடியாதென்று தோன்றியது. தொலைவிலெழுந்த தொடுவான் வளைவு கடக்கமுடியாத கோட்டை. வெண்ணிற அனலால் கட்டப்பட்டது. வாயில்கள் அற்றது. பின்பு தன் அனைத்து அகவிசைகளையும் திரட்டிக்கொண்டான். புரவியின் விலாவை ஓங்கி மிதித்து அதை அலறிப்பாயச்செய்து மரக்கூட்டங்கள் நடுவே கிளைகள் உடலைக்கீற காற்று அறைந்து பின்தள்ள விரைந்தான்.
ஆனால் அகத்தின் விரைவை உடலுக்குக் கொண்டுவருவதற்கு ஓர் எல்லை உண்டு என ஒருநாளுக்குள்ளாகவே தெரிந்தது. அவன் உடலறிந்த விரைவை புரவி அறியவில்லை. புரவியறிந்த விரைவை அவனைத்தொடர்ந்த வீரர்கள் அடையவில்லை. முதல்நாள் கடந்த தொலைவில் முக்கால்பங்கைக்கூட மறுநாள் கடக்கமுடியவில்லை. அதற்கடுத்தநாள் மேலும் விரைவுகுறைந்தது. சகலபுரியை சென்றடையவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. அசிக்னியில் படகில் குதிரைகளுடன் ஏறிக்கொண்டபோது சற்று ஓய்வெடுக்கமுடிந்தது. மூலத்தானநகரி வரை நீரொழுக்குடனேயே சென்றமையால் விரைவும் கைகூடியது.
ஆனால் ஓய்வெடுத்த புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடங்கமுடியுமென அவன் எண்ணியிருந்தது நிகழவில்லை. படகில் அமர்ந்து ஒழுகிச்செல்லும் கரையின் மெல்லிய அசைவை பார்க்கப்பார்க்க அக எழுச்சி வழிந்தோடியது. காலம் பிறிதொரு பெருக்காக தெரியத்தொடங்கியது. அதை நோக்கிய நெஞ்சு தன்னை அசைவின்மையென உணர்ந்து சிலைத்தது. பின்னர் எந்த உணர்ச்சிகளைக்கொண்டும் அதை முன்னகர்த்த முடியவில்லை.
மூலத்தானநகரியில் இறங்கியபோது படுத்து ஓய்வெடுக்கவேண்டுமென்றே உடல் விழைந்தது. அவன் தன்னை தன்னிலிருந்தே பிய்த்து எடுத்துக்கொண்டான். சென்றாகவேண்டும். இல்லையேல்… அந்த எண்ணத்தை தொடவே அகம் நடுங்கியது. சீற்றத்துடன் சவுக்கைச்சுழற்றி ஏவலருக்கு ஆணையிட்டான். உரக்க வசைபாடி மிரட்டினான். அவையனைத்தும் அவன் தன்னை செலுத்தும்பொருட்டு சொன்னவை. அதை அவர்களும் உணர்ந்திருந்தனர். சொற்களுக்கு உள்ளத்தை தொட்டு அசைக்கும் விசை இருந்தது. ஒருநாழிகைநேரத்திற்குள் உணவையும் புல்லையும் சேர்த்துக்கொண்டு மீண்டும் கிளம்பினார்கள்.
முதல்நாள் உடல் சித்தமாக இருந்தும் உள்ளம் ஓய்ந்துகிடந்தது. அதை பற்றவைத்து எரியச்செய்ய ஒருநாள் முழுக்க தேவைப்பட்டது. சொற்களை கொட்டிக்கொட்டி அந்த அடுப்பை எரியச்செய்தான். விரைவு. விரைவு. இன்னும். இன்னும். சிந்துவின் வண்டல்கரைகள் பின்னடைந்தபோது மீண்டும் விரைவு குறையத்தொடங்கியது. இன்னும் இரண்டுநாட்கள் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். வழக்கத்திற்கு சற்று மீறிய விரைவில்சென்றால்கூட அவனால் சென்றுவிடமுடியும்.
ஆனால் கனவில் ஓடுவதுபோல கால்கள் எத்தனைதொலைவுக்கு மண்ணைத்துழாவினாலும் சுற்றிலும் காற்று அசைவழிந்து நின்றது. வானம் மாறாமல் இருந்தது. உள்ளம் கட்டுண்டு படபடத்து தவித்தது. ஒவ்வொன்றையாக எண்ணி அகம் சலித்தது. உணவும் நீரும் கொண்டுவரும் புரவிகள் தொடராமலிருந்தால் மேலும் விரைவு கொண்டிருக்கலாம். தனியாகச்சென்றால் மேலும் விரைவு கொண்டிருக்கலாம். இரவில் ஓநாய்களை அஞ்சி ஓய்வெடுக்காமல் சென்றால் எளிதில் சென்றடைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றாலும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது பயணம். நத்தை சுமந்துசெல்வது அதன் அச்சத்தை.
சென்றுகொண்டே இருந்தான். மேலிருந்து விழுந்துகொண்டே இருப்பதைப்போல குதிரைக்காலடிகளால் ஆன காலம். நிழல்களால் ஆன காலம். மணல் பொருபொருக்கும் ஒலியாலான காலம். நாட்கள் என்பவை எண்ணங்களாலேயே பகுக்கப்படுகின்றன. காலமில்லாததுபோல நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒற்றை எண்ணத்தின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு சென்று சேர்ந்தபோது எத்தனை பகலிரவுகள் கடந்திருக்கின்றன என்பதையே அவன் அறியவில்லை. ஒவ்வொருநாளும் ஐங்களத்தை நோக்கித்தான் நாள் குறித்தான். இன்னும் ஒருநாள். ஒருநாள் என்பது அறுபது நாழிகை. அறுபது நீண்ட வாழ்க்கைகள். மீண்டும் காலமின்மை. வெளித்து வெறித்துக்கிடந்த செம்மண் பாலை. மாற்றமில்லாமை எனும் தோற்றம் கொண்ட பாறைமுகங்கள். காற்று கடந்துசெல்லும் புதர்க்குவைகளின் நடுக்கம். காற்றின் ஓலம். தொடுவானத்தின் கண்கூசும் வெண்வெயில்.
எட்டாவது நாள் சைப்யபுரி மேலும் ஒருநாள் பயணத்தில் இருக்கின்றது என்றான் வழிகாட்டி. பகல் முழுக்க வெயிலில் நடந்திருந்த புரவி மிகவும் களைத்திருந்தது. அதன் முதுகின்மேலிருந்தபடி குனிந்து குளம்புகளை நோக்கியபோது அவை கணுவுக்குக்கீழே வளைந்தவை போலத்தெரிந்தன. இறங்கி முன்னங்காலைப்பற்றி நோக்கினான். குளம்பின் வளைவின் பின்பக்க இடைவெளி விலகியிருந்தது. பின்னால் வந்த பாலைநில வழிகாட்டி “இளவரசே, இன்றிரவு ஓய்வு தேவை. இனிமேலும் சென்றோமென்றால் நாளை புரவி காலெடுத்து வைக்கமுடியாமல் ஆகிவிடும்” என்றான். ஏவலன் “இன்னும் அரைநாழிகை தொலைவிலேயே சோலை உள்ளது, நீரும் இருக்கலாம் என்கிறான்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.
சாம்பல்நிற வெளிச்சம் பரவியிருந்த வானில் விண்மீன்கள் முழுமையாகத் தெளிவதுவரை பாலையில் சென்று கண்டடைந்த முட்புதர்க்காட்டில் தங்கலாமென முடிவெடுத்தார்கள். சோலையின் நடுவே இருந்த சிறுகுழியில் செம்மண் கலங்கிய நீர் இருந்தது. குடிப்பதற்கான நீரை அள்ளியபின் புரவிகளுக்கு நீர் காட்டினர். குடிநீரை மணல்சல்லடையில் சலித்து முருங்கைவிதைத்தூள் போட்டு தெளியவைத்து குடித்தபின் உப்பிட்டஊனும் அப்பமும் தின்றுவிட்டு சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர்.
இரவில் கிளம்பிய சிற்றுயிர்கள் சருகுமேல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒலியைக் கேட்டபடி பூரிசிரவஸ் படுத்திருந்தான். எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அவனால் எந்தவகையிலும் கட்டுப்படுத்தமுடியாதபடி அவை பெருகிச்சென்றன. எங்கெங்கோ சென்று அலையடித்தன. அவ்வப்போது மீண்டு வந்து அப்படி என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என நோக்கியதும்தான் அவற்றின் பொருளற்ற பெருக்கு அச்சுறுத்தியது. தனக்குள் இப்படி ஒரு பெரும் கட்டின்மை திமிறிக்கொண்டிருப்பதை எண்ண அச்சம் பெருகி அவன் தலையை அசைத்து விடுவித்துக்கொண்டான்.
இரவு செல்லச்செல்ல காட்டின் சிற்றுயிர் ஒலிகள் பெருகின. படைவீரர்களின் குறட்டை. குதிரைகளின் மூச்சொலி. புதரின் முட்கள் வழியாக கிழிபட்டுச் செல்லும் காற்றின் ஓசை. ஒருகணம் கூட துயிலவில்லை என அவன் உணர்ந்தான். அறைமூலையில் இரவெல்லாம் அணையாத கணப்பு போலிருந்தது உடலுக்குள் சித்தம். புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து அமர்ந்து காட்டை நோக்கினான். துயிலவில்லை என்றாலும் படுத்திருந்தாலே மறுநாள் களைப்பின்றி சென்றுவிடலாமென்று தோன்றியது. வெள்ளிமுளைப்பதற்குள் கிளம்பினால் முதற்கதிர் எழும்போது சைப்யபுரிக்கு சென்றுவிடமுடியும். மணத்தன்னேற்பு. எத்தனை அரசர்கள் வந்திருப்பார்கள்? ஜயத்ரதன் வந்திருப்பான். உறுதியாக அவனுக்காகத்தான் இந்தத் தன்னேற்பு. யாதவன் அதற்கு என்ன செய்யப்போகிறான்?
தான் செய்யவிருப்பது என்ன என அதுவரை சிந்திக்கவில்லை என அப்போதுதான் பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனை மணமகன்களின் நிரையில் பார்த்ததுமே அவள் முடிவெடுத்துவிடுவாள் என்று தோன்றியதுமே அப்படி நிகழுமா என்ற ஐயமும் வந்தது. அவள் அம்முடிவை எடுப்பாள் என நம்புவதற்கான அடிப்படை என்ன? அவள் அவனுடன் பேசிய சில சொற்களா? மிகச்சில சொற்கள். ஓரவிழி நோக்குகள். அவற்றைக்கொண்டு அவளை முழுமையாக கணித்துவிடமுடியுமா? பெண்கள் அத்தனை எளியவர்களா என்ன? ஒவ்வொருகணமும் சூழலுக்கேற்ப உருமாறிக்கொண்டிருக்கும் மானுட உள்ளம். அச்சம் விழைவு கனவு என அகச்சரடுகளாலும் குலம் குடி முறைமை என புறச்சரடுகளாலும் இயக்கப்படும் எளியபாவை.
எண்ண எண்ண அந்த ஐயம் பெருகிப்பெருகிச் சென்றது. அவள் ஓர் அரசியாகவே விழைந்தாள். அந்தச்சின்னஞ்சிறு கற்சிறையில் இருந்து வெளியேறி விரிந்தவானையும் மண்ணையும் பார்க்கவிழைந்தாள். அவள் கண்ட முதல் சாளரவெளிச்சம் அவன். ஆகவே அவனிடம் கோரினாள். இன்று அவள்முன்னால் விரிந்திருப்பது மாபெரும் தோரணவாயில். ஜயத்ரதனின் துணைவியாக அவள் ஆவாள் என்றால் நாளையே அவன் அவள் காலடியில் தலைவணங்கி நிற்கக்கூடும். அவளுடைய கருணையில் அவனும் அவன் நாடும் வாழக்கூடும். பால்ஹிகர்கள் சிபிநாட்டை ஒருநாளும் தங்கள் குலத்தொகையில் சேர்த்துக்கொண்டதில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பு அமையும் செய்தியையே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை.
எவ்வகையில் சிந்தனைசெய்தாலும் அவள் ஜயத்ரதனையே தெரிவு செய்யமுடியும். அவளுடைய நாட்டுக்கு அது பெரும்பாதுகாப்பு. சிபிநாட்டின் வணிகம் பெருகும். வறுமை அகலும். ஓர் இளவரசியாக அது அவள் கடமை. அவளுடைய தந்தையும் குலமும் அமைச்சும் அதை எண்ணியே அம்முடிவை எடுத்திருக்கமுடியும். அதை அவள் தட்டமுடியாது. அரசியரும் இளவரசியரும் பெண்கள் அல்ல, அரண்மனைப்பாவைகள். அரசியல் நாற்களத்தில் ஆண்களின் கைகளால் ஆடப்படுபவர்கள். வெட்டுண்டு சரிபவர்கள். விழிநீரையும்கூட அகத்தளத்து இருட்டில் மட்டுமே அவர்கள் சிந்தமுடியும்.
ஆனால் அதற்கும் அப்பால் அவள் ஒருபோதும் அவனை விட்டுவிடமாட்டாள் என்று அவன் அகம் சொல்லிக்கொண்டிருந்தது. அந்த உறுதியை அவனுக்களித்தவை அவளுடைய கண்கள். அவை இளவரசியின் விழிகளல்ல. பெண்ணின் விழிகள், காதலியின் விழிகள். இரு அழகிய சிறு கருங்குருவிகள் அக்கண்கள். மெல்லிய சிவந்த பட்டுத்திரையை என அவள் உடலை அவை பற்றிக்கொண்டு பறக்கின்றன. அவை அவனை எப்போதும் தொடர்பவை. ஒவ்வொருமுறையும் அக்கண்களை அவன் அகக்கண்ணில் பார்க்கையிலும் அவை மேலும் அண்மைகொண்டன. ஒவ்வொருமுறையும் அவற்றில் புதிய சொல் பூத்திருந்தது. கனிந்த சொல். இதழ்வெம்மை கொண்ட மென்முத்தம்போன்ற சொல். ஆம், ஐயமே இல்லை.
விடிவெள்ளியை அது எழுந்ததுமே அவன் பார்த்தான். விண்மீன்களின் பெருவெளியில் அது எப்படி கண்ணுக்குத்தெரிந்தது? அதையே நோக்கிக்கொண்டிருந்தது அவனுள் ஒரு தனிவிழி என்று தோன்றியது. உடலெங்கும் காற்று கொண்டு வந்து மூடிய மென்மணலை உதறிவிட்டு எழுந்ததுமே அவன் தன் குதிரைச்சவுக்கை மும்முறை சொடுக்கிவிட்டு சென்று புரவிமேல் ஏறிக்கொண்டான். ஓசைகேட்டு அவன் வீரர்கள் ஓடிவந்து புரவிகளைப் பற்றி ஏறினர். எவரும் காலைக்கடன்களைக் கழிக்கவோ நீரருந்தவோகூட நேரமில்லை. இன்னும் சற்றுநேரம், இன்னும்… இதோ இந்தப்பாலைவெளிக்கு அப்பால்…
ஆனால் அவன் மிக வியப்புக்குரிய ஒன்றை தன்னுள் உணர்ந்தான். அனைத்தும் முடிந்துவிட்டன என்ற வெறுமையுணர்வு அவன் புரவியில் பாய்ந்தேறியதுமே ஒரு துளி எண்ணமென உருவாகியது. புகை இறுகி பாறையாகியது. அசைக்கமுடியாமல் அமைதியின் குளிருடன் அங்கே இருந்தது. ஏன்? எதை உணர்ந்தேன்? எதை? அவன் அகம் தவித்தபடியே இருந்தது. சித்தம் எதையும் தொடமுடியவில்லை. சித்தத்தின் ஆழம் தொட்டுவிட்டது. பார்த்திவம் முளைத்த திரவத்தில் ஆணவம் விழித்த வெளியில் ஒரு நிழல் அசைந்தபடியே இருந்தது.
இரண்டுநாழிகை கழித்து எதிரே தொலைவில் ஒருவணிகர்குழு வருவதை கண்டான். அவர்களைக் கண்டதுமே அவர்களை அவன் அவ்வாறு காணும் அந்நிகழ்ச்சி முன்னரே நடந்திருக்கிறது என்று தோன்றியது. அப்படியே அங்கே நின்று அவர்கள் அணுகுவதை பார்த்திருக்கிறான். சாம்பல்நிறமான விடிவெளிச்சத்தில் நிழல்கள் என புரவிகளின் கால்கள் அசைந்தன. வானப்பின்னணியில் பிடரி மயிர்கள் சிலிர்த்தசைந்தன. குளம்படி அணுகி அவர்களைச் சூழ்ந்து நெடுநேரமாகியும் அவர்கள் வந்துசேரவில்லை.
நீண்ட தாடியுடன் முன்னால் வந்த வெண்பளிங்குநிற வணிகரைக் கண்டதும் மேலும் அகம் உறுதிகொண்டது. முன்னரே பார்த்த முகம். குதிரையூர்ந்த வணிகர்களும் அத்திரிகளும் கொண்ட குழு கொடியில் காற்றில் தவழும் ஆடைகள் போல வானில் நின்று அசைந்தது. பின்னர் அது முப்பரிமாணம் கொண்டது. ஒன்றன் பின் ஒன்றாக வந்த பன்னிரண்டு புரவிகள் இருபத்தைந்து அத்திரிகள். முன்னால் வந்த இரு காவலர்களுக்கு நடுவே அந்தப்பெருவணிகர் புரவியில் அமர்ந்து அசைந்தாடி வானில் தவழ்பவர் என வந்தார்.
அணுகியதும் பெருவணிகர் தன் இளநீலவிழிகளால் நோக்கி புன்னகைசெய்து தலைவணங்கினார். ஒருகணம் அவன் நெஞ்சில் ஓர் அதிர்வு போல தேவிகையின் முகம் எழுந்து மறைந்தது. மீளாது தொலைத்துவிட்ட ஒன்றை நினைவுகூர்வதுபோல. அவரிடம் ஏதும் கேட்கலாகாதென எண்ணினான். ஆனால் கேட்காமல் கடக்கமுடியாதென்றும் தோன்றியது. ஏனென்றால் அதை அவன் முன்னரே அவ்வண்ணமே கேட்டிருந்தான். “நாங்கள் உத்தரகங்கை நிலத்து சிசிரகுடியினர் பெருவணிகரே, தங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றான்.
வணிகர் மீண்டும் தலைவணங்கி “நான் உத்தர யவனநாட்டவன். செங்கழுகுக்குலம். பெயர் ஊர்த்வன். சிபிநாட்டு வணிகம் முடித்துமீள்கிறேன். சோலையில் மீண்டும் நீர் ஊறியிருக்குமென எண்ணுகிறேன்” என்றார். “நாங்கள் இன்று நீர் எடுத்துக்கொள்ளவேயில்லை. சைப்யபுரிக்கு காலையொளி எழுகையிலேயே சென்றுவிடவேண்டுமென எண்ணுகிறேன்.” அவன் நெஞ்சு அதிரும் ஒலி உடலெங்கும் கேட்டது. “அங்கே இளவரசியின் மணத்தன்னேற்புக்கு சென்றுகொண்டிருக்கிறோம். சென்றுவிடமுடியும் அல்லவா?”
அவரது புருவங்கள் சுருங்கியதுமே அவன் தளரத்தொடங்கினான். “மணத்தன்னேற்பு நிகழவேயில்லையே” என்றார். பூரிசிரவஸ் தன்னால் இயல்பான முகத்துடன் எப்படி “ஏன்?” என்று கேட்கமுடிகிறது என்று தானே வியந்துகொண்டான். ஊர்த்வன் “நீங்கள் எச்செய்தியையும் அறியவில்லையா?” என்றார். ”நாங்கள் வந்தவழியில் எவரையும் சந்திக்கவில்லை வணிகரே” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அதற்கு வாய்ப்பில்லை” என்றபின் “கோவாசனர் தன் மகளுக்கு இன்று முற்பகலில் மணத்தன்னேற்பு ஒருக்கியிருந்தது உண்மை. அவளை சிந்துமன்னர் ஜயத்ரதன் மணக்கக்கூடும் என நகர்மக்கள் பேசிக்கொண்டனர். பால்ஹிக இளவரசர் ஒருவருடன் இளவரசி உளஒப்புதல் கொண்டுவிட்டதாகவும் பேசப்பட்டது” என்றார்.
“ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னரே அஸ்தினபுரியில் இருந்து ஆயிரம்பேர்கொண்ட படை ஒன்று இளவரசர் பீமசேனர் தலைமையில் வந்தது. அவர்கள் வருவதை சிபிநாட்டுப்படைகள் கண்டன. ஆனால் அவர்கள் ஜயத்ரதனின் படைகள் என எண்ணிவிட்டார்கள். கோட்டைக்காவல் படைகள் அவர்களைக் கண்டதும் ஓடிச்சென்று தங்கள் அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். எதிர்க்கவேண்டாம், கோட்டையையும் கருவூலத்தையும் அரண்மனையையும் திறந்துவிடுங்கள் என கோவாசனர் ஆணையிட்டார். அவரே படைக்கலமேதுமில்லாமல் அரண்மனைமுற்றத்திற்கு வந்து பீமசேனரை வணங்கி வரவேற்றார்.”
ஊர்த்வன் சொன்னார் “வெட்டுக்கிளிகள் வயலில் இறங்குவதுபோல அவர்கள் வந்து நிறைந்தனர். பீமசேனர் அரண்மனைக்குள் புகுந்து மகளிர்மாளிகைக்குள் சென்று இளவரசியைக் கண்டு வண்டியில் ஏறிக்கொள்ளும்படி ஆணையிட்டார். இல்லையேல் நகரம் அழிக்கப்படும் என்றார். இளவரசி ஒன்றும் சொல்லாமல் தலையாடையால் முகம் மூடி தலைகுனிந்து ஏறிக்கொண்டார். அப்போதே திரும்பி நகரை விட்டு விலகிச்சென்றுவிட்டனர். இப்போது அவர்கள் மூலத்தானநகரியை அடைந்திருக்கலாம்…”
பூரிசிரவஸ் கடிவாளத்தைப்பற்றிய கைகள் மடிமீது விழ தோள்கள் தளர அவரை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். “நாங்கள் வழியிலெங்கும் அவர்களை எதிர்கொள்ளவில்லையே” என்றான் காவலன். “அவர்கள் மணலில் ஓடும் அகன்ற பரப்புகொண்ட சகடங்கள் பொருத்தப்பட்ட மூங்கில்வண்டிகளில் வந்திருந்தனர். துவாரகைக்கு சோனகநாட்டிலிருந்து வந்திறங்கும் அவை மிகவிரைவாக செல்லக்கூடியவை. புரவிகளின் கால்களிலும் அவர்கள் அகன்ற குளம்புக்காப்பை மாட்டிவிடுவதனால் அவையும் பாலையில் புதையாமல் கால்வைத்து விரைந்துசெல்லமுடியும். நீங்கள் மூலத்தானநகரியை அடைவதற்குள் அவர்கள் கடந்து சென்றிருப்பார்கள்” என்றார் பெருவணிகர்.
”அவர்கள் சைப்யபுரியில் நான்கு நாழிகைநேரமே இருந்தனர். அவர்கள் வருகை படையெடுப்புபோலத்தான் இருந்தது. ஆனால் நகர்மக்கள் தெருக்களின் இருபக்கமும் கூடி வாழ்த்தொலி எழுப்பி அவர்களை வரவேற்றனர். கோவாசனர். அவர்களை மலர்ந்த முகத்துடன் வந்து பணிந்தார். அவர்கள் இளவரசியுடன் சென்றபின் அரண்மனையிலும் நகர்த்தெருக்களிலும் பெரும்கொண்டாட்டம் தொடங்கியது. அரண்மனையில் பெருவிருந்து நிகழப்போவதை அறிவித்தபடி நகர் முழுக்க முரசுகள் முழங்கத்தொடங்கின. தெருக்களெங்கும் மக்கள் சிரித்துக்கொண்டு வண்ணங்களை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசி நடனமிட்டனர்.”
“அஸ்தினபுரிக்கு அரசியாகச் செல்லும் இரண்டாவது சிபிநாட்டுப்பெண் இவள் என்றனர் மக்கள். முன்பு சந்தனு மன்னரின் அன்னை சுனந்தை இங்கிருந்துதான் சென்றிருக்கிறாள். அனைவரும் கொண்டாடியே ஆகவேண்டிய நிலை. வணிகர்கள் மதுக்குடங்களை வாங்கிக்கொண்டு வந்து அனைவரும் அருந்துவதற்காக தெருவோரங்களில் வைத்தனர். நானும் நூறுகுடம் அரிசிமதுவை வாங்கி அனைவருக்குமாக திறந்துவைத்தேன். இருபது வெள்ளிக்காசுகளை அதற்காக செலவிட்டேன். இரண்டுநாட்கள் கொண்டாட்டம் நீடித்தது. அதன்பின்னர் அரசருக்கு முகம் காட்டி என் வாழ்த்துக்களைத் தெரிவித்து மணப்பரிசுகளை அளித்தேன். அதற்கு நூறு பொற்காசுகள் செலவாயின. இந்தப்பயணம் மொத்தத்தில் எனக்கு பெரிய பொருள்மிகையை அளிக்கப்போவதில்லை…”
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே பூரிசிரவஸ் புரவியை திருப்பிவிட்டான். வழிகாட்டி “இளவரசே” என்று கூவ அவன் குதிரையின் விலாவை உதைத்து சவுக்கால் சொடுக்கி பாலைநிலத்தில் மணல் தெறிக்க விரைந்தான். “இளவரசே, எல்லைக்குள் வந்தபின் அரசரை சந்திக்காமல் செல்வது முறையல்ல” என்று கூவியபடி தலைமை ஏவலன் பின்னால் வந்தான். பூரிசிரவஸ் மேலும் மேலும் என புரவியை சவுக்கால் அடித்துக்கொண்டும் குதிமுள்ளால் குத்திக்கொண்டும் இருந்தான். எதிர்க்காற்றில் அவன் பார்வை முழுமையாகவே மறைந்தது. காலமின்மையில் வெளியின்மையில் அவனும் புரவியும் நின்று துழாவிக்கொண்டிருந்தனர்.