பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

பதினேழாம் தேதி காலையில் தேனியில் ஆதித்யா விடுதியில் இருந்து நானும், கிருஷ்ணனும், கார்த்தியும்,விஜயராகவனும் கேரளம் நோக்கி கிளம்பினோம். இன்னொரு விடுதியில் வந்து தங்கியிருந்த அரங்கசாமி, சந்திரகுமார், ராஜகோபாலன், கெ.பி.வினோத் ஆகியோர் இணைந்துகொண்டனர். மொத்தம் எட்டுபேர். வருவதாகச் சொல்லியிருந்தவர்களில் கல்பற்றா நாராயணனுக்கு காய்ச்சல். தனசேகருக்கு ஒரு சிறு விபத்து. செல்வேந்திரன் வரவில்லை.

http://www.gaviecotourism.com/about_us.html


தேனியில் இருந்த சாரல் குமுளி தாண்டும்போதே மழையாக ஆக ஆரம்பித்தது. கேரளத்துக்குள் நுழையும் இடத்தில் வண்டியை நிறுத்தி சாராயம் இருக்கிறதா என்று அக்குவேறு ஆணிவேறாக பரிசோதனை செய்தார்கள். கேரளத்தில் பெரியாற்றுக்கு நிகராக சாராய நதி ஓடுகிறது. எதற்காக இங்கிருந்து கொண்டுபோகிறார்கள் என்று புரியவில்லை.

மதியம்தான் பெரியாறு புலிகள் புகலிடத்தில் உள்ள கவி என்ற கானிலையத்துக்குச் சென்று சேர்ந்தோம். கேரள அரசு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அடர்காடுகளில் சூழியல்சுற்றுலா [ எக்கோ டூரிசம்] என்ற முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்திவருகிறது. சூழலில் உறுத்தாத அழகிய கட்டிடங்களை காட்டுக்குள் வேலியிடப்பட்ட இடத்துக்குள் அமைத்து அங்கே சிறப்பான உணவு தங்குமிடம் கொடுத்து காட்டுக்குள் வழிகாட்டியுடன் அனுப்பி வைக்கிறார்கள்.

இதன் நன்மைகள் பல. ஒன்று, இதற்கான கட்டணம் மிக அதிகம். ஆகவே சுற்றுலாப்பயணிகளில் உண்மையான ஆர்வம் உடைய சிலர் மட்டுமே வர முடியும். டாப் சிலிப் போன்ற தமிழகப் பகுதிகளில் வண்டி வண்டியாக வந்து குவியும் ஆர்வமற்ற பயணிகள் உருவாக்கும் சூழியல் அழிவுகள் இல்லை. பயணிகள் சிலரே இருப்பதனால் சூழியல் நிபந்தனைகளை மிக கண்டிப்பாக அமல்படுத்த முடிகிறது.

இரண்டு, புகலிடம் அமைக்கையில் காட்டுக்குள் இருந்து காலிசெய்யப்படும் பழங்குடிகள் மற்றும் வனமக்களுக்கு வேறு இடத்தில் தங்குமிடம் அளித்து அவர்களுக்கு இங்கே வழிகாட்டிகளாகவும் உபசரிப்பாளர்களாகவும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். அவர்களுக்கான ஊதியத்தை மட்டுமல்ல அந்த வனபகுதியை காக்கும் செலவுகளைக்கூட பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Rain

ஆகவே பொதுவாக இந்த வனப்பகுதிகள் மிகச்சுத்தமாக இருக்கின்றன. ஒரு சாக்லேட் உறை கிடந்தால்கூட ஊழியர்கள் பொறுக்கி பைக்குள் போட்டுக்கொள்வதைக் காணலாம். வழிகாட்டிகள் பெரும்பாலும் பழங்குடிகள் என்பதனால் காட்டை நன்கறிந்தவர்களாகவும் வேலையை ஆர்வத்துடன் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்

கொட்டும் மழையில் கவிக்குச் சென்றோம். அங்கேயே மழைக்கோட்டுகள் கொடுத்தார்கள். மாலையில் மழையிலேயே ஒரு கானுலா சென்றோம். அட்டைக்கடியில் இருந்து தப்ப கிலோக்கணக்கில் தூள் உப்பு கையில் இருந்தது. காக்கி காலுறை கொடுத்தார்கள். அதை காலில் போட்டு கால்சட்டையை உள்ளே விட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டோம். இருந்தும் அட்டைகள் ஒட்டி மேலேறின. கால்சட்டை இடைவெளி வழியாக உள்ளே நுழைந்து ரத்தம் குடித்தன.

அட்டை

நான் பொதுவாக அட்டையை கண்டுகொள்ளவே மாட்டேன். அந்தளவுக்கு பழகிவிட்டேன். வினோத் தான் அட்டையை தட்டிவிடுவதே கானுலாவின் மைய நோக்கம் என்ற எண்ணம் கொண்டவராக செயல்பட்டார். மழையாகப்பெய்யும் நீர் நிலத்தின் வெம்மையால் ஆவியாகி மேகமாக காட்டுக்குள்ளேயே படர்ந்து நிற்கிறது. ஆகவே மொத்த காடுமே அடர்ந்த நீலமேகப்புகைப்படலத்துக்குள் இருந்தது. வானில் நடப்பதுபோல. வாலிலேயே மரங்கள் மிதப்பது போல.

மேகத்துக்கு அப்பால் ஒரு காட்டெருது [ Gaur ] பார்த்தோம். கனத்த தலையும் கொம்புகள் நடுவே வெண்ணிறபடலமும், திடமான பெரிய முன்னங்கால்களும் பெரிய திமிலும் கொண்ட இந்த கபிலநிற மிருகம் ஒருவகை காளை [அல்லது பசு] ஆனால் தவறாக இதை காட்டெருமை [Bison ] என்று சொல்கிறார்கள். அதாவது படித்தவர்கள். காட்டுமக்கள் இதை காட்டி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். மனிதர்களுடன் பழகாது. பொதுவாக தாக்குவதில்லை. ஆனால் முகம் சிவப்பாக இருக்கும் காட்டி கண்டிப்பாக துரத்தித் துரத்தி தாக்கும், மூன்று டன் வரை எடை கொண்ட அந்த பிரம்மாண்ட மிருகம் தாக்கினால் அதிகம் மிஞ்சுவதில்லை

நாங்கள் செல்வதை ஒரு பறவை எச்சரித்துக்கொண்டே இருந்தமையால் காட்டி பயந்து ஓடிவிட்டது. யானைத்தடம் பரவியிருந்த புல்வெளி வழியாகச் சென்று ஒரு புல்மேட்டை அடைந்தோம். மேகம் சூழந்திருந்தது. குளிர்காற்று வீசியதும் அது உக்கிரமான சிறிய மழையாக ஆகி அணைந்தது. காட்டுக் கோழிகள் வெகுதூரம் பறந்து பனிக்குள் இறங்கி மறைந்தன. கால்கள் தொய்ய நடந்து திரும்பி வந்தோம்

இரவு விடுதியில் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேய்க்கதைகள் சொல்லும்படி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். நான் பொன்னிறத்தாள் அம்மன் கதையின் ஒரு வடிவத்தை சொன்னேன். கொடூரமான கதை. உச்சகட்ட வன்முறை உச்சகட்ட அறவுணர்ச்சியால் சமன்செய்யப்படும் சித்தரிப்பு அது. குளிரும் மழையும் கொண்ட ஒரு புது இடத்தில் பேய்க்கதைகளைப் பேசும்போது கற்பனை சிறகடிக்கிறது!

மறுநாள் காலை 6 மணிக்கு தயாராக இருக்கவேண்டும் என்றார்கள். ஆறரைக்குத்தான் கூட முடிந்தது. ‘கட்டன்’ காபி குடித்துவிட்டு ஜீப்புகளில் காடு வழியாகச் சென்றோம். மழிகொட்டிக்கொண்டிருந்த காடு இரைச்சலிட்டது. சில இடங்களில் பச்சை ஒளி தேங்கிய புல்வெளிகள். மழையில் நீர்தேங்கிய குட்டைகள். பளபளக்கும் பெரிய இலைகள் ஆடிய சதுப்புகள். காடு என்பது ஓர் உயிர்க்கடல். உயிரின் இயல்பான நிறம் பச்சை.

இன்னமும் காலையில் சென்றிருந்தால் மிருகங்களை பார்த்திருக்க முடியும். பரம்பிக்குளம் அளவுக்கு இங்கே மிருகங்கள் அடிக்கடி கண்ணில்படாது என்றார் வழிகாட்டி. பரம்பிக்குளம் காடு கிட்டத்தட்ட 250 சதுர கிமீ அளவுக்கு துண்டுபட்டு உள்ளது. மிருகங்கள் அதில் ‘மாட்டி’க் கொண்டிருக்கின்றன. பெரியாறு வனப்பகுதி கிட்டத்தட்ட 900 சதுர கிமீ அளவுள்ளது. முண்டந்துறை போல மேலும் பல வனப்பகுதிகளுடன் இணைந்துள்ளது. ஆகவே குறைவாகவே மிருகங்கள் கண்ணில் பட வாய்ப்புள்ளன. இரு புள்ளிமான்களை திரும்பி வரும்போது பார்த்தோம் -காற்றில் பாயும் நிலையில்.
boat

திரும்பிவருகையில் கக்கி அணைக்குச் சென்றோம். பெரியாறு அ¨ணையின் ஒரு துணை அணை இது. பம்பா ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை மழை பெய்தும்கூட அதன் முழுக்கொள்ளளவை எட்டவில்லை என்றார்கள். காக்கி ஆற்றில் ஒருகாலத்தில் டிரவுட் மீன்கள் அதிகமாக வளர்த்தார்கள். இப்போது புலிகள் சரணாலயம் ஆகிவிட்டதனால் எந்த தொழில்முயர்சிகளும் இல்லை.

boat

காலையுணவுக்குப் பின்னர் அங்கிருந்த ஏரியில் படகில் சென்றோம். படகு மேகமூட்டத்துக்குள் செல்லும்போது நான்குபக்கமும் கரை தெரியாத கடலுக்குள் சென்ற உணர்ச்சி. மழையும் குளிருமாக இருந்தமையால் ஏரி நீர் வெம்மையாக இருந்தது. அரங்கசாமி நீரில் குதித்து படகைப் பிடித்துக்கொண்டு நீந்தி வந்தார்

ஏரிவழியாகச் சென்று அருவி ஒன்றை அடைந்தோம். கிட்டத்தட்ட குற்றாலம் புலியருவி அளவுக்கு. ஆனால் நிறைய நீர் கொட்டிக்கொண்டிருந்தது. அருவிக்குளியல் என்பது மழையெனும் அருவியில் இருந்து இன்னொரு அருவிக்குச் சென்றது போல. அங்கே கவி பயணிகள் அன்றி பிறர் வர இயலாது. ஆகவே எங்களுக்கு மட்டுமேயான அருவி. சந்திர குமார் குளிப்பதற்கு சோம்பல்பட்டார். அவரை மூளைச்சலவை செய்து நீரில் இறக்கினோம். அருவி தடதடவென முதுகை அறைந்தது.

Gavi aruvi

திரும்பி வரும்போது மதியமாகிவிட்டிருந்தது. குளிரும் மலைச்சுற்றலும் அதிகமான ஆற்றலை எடுத்துக்கொள்வதனால் இம்மாதிரி பயணங்களில் உக்கிரமாக பசிக்கும். கவியில் உணவு மிகச்சிறப்பாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நாங்கள் மதியச்சாப்பாட்டுக்கு இன்னும் கொஞ்சம் மலிவான ஒரு இடத்துக்குச் சென்றோம். அங்கே பணியாற்றும் ஒருவரின் வீடு. நல்ல சாப்பாடு. குளிரும் பசியும் இருக்கையில் எந்தச் சாப்பாடும் அமுதமே.

கவியில் இருந்து கிளம்பி வண்டிப்பெரியார் வந்தோம். அரங்கசாமி,சந்திரகுமார், விஜயராகவன் ஆகியோர் திரும்பிச்செல்ல திட்டமிட்டிருந்தார்கள். பொதுவாக எங்கள் பயணங்களில் முக்கியமான காரணம் இல்லாமல் எவரேனும் பாதியில் திரும்புவது அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அது பயணம் முடிந்தது என்ற எண்ணத்தை உருவாக்கி பிறரது உற்சாகத்தைக் குறைத்துவிடும். ஆனால் இம்முறை ஒருநாள் பயணத்தை நீட்டித்தது பிறகு கிருஷ்ணன் செய்தது என்பதனால் அவர்கள் பிரிந்துசெல்வது முன்னரே அனுமதிக்கப்பட்டிருந்தது.

எஞ்சியவர்கள் மாலை நான்குமணிக்கு பீர்மேட்டில் எங்கள் வழக்கமான ‘பருமழை இல்ல’த்துக்கு வந்து சேர்ந்தோம். கேரள அரசின் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான கிருஷ்ணன் கோயிலுக்குரிய ஒரு தங்கும் விடுதி அது. நடுத்தர வசதி. ஆனால் மொத்த கட்டிடமே 700 ரூ வாடகைக்கு கிடைத்தது. அறையில் பொருட்களைப்போட்டுவிட்டு காரில் பருந்துப்பாறை சென்றோம்

கேரளத்தின் உயரமான மலையுச்சிகளில் ஒன்று அது. மொத்த தென்கிழக்குப் பருவக்காற்றையும் அது தடுத்து மழையாக ஆக்குவதனால் அதைச்சுற்றி உள்ள நிலம் முழுக்க மழைப்பிடிப்புப்பகுதியாக ஆகிறது. போகும்வழியில் சாலையில் மழையின் விளைவாக உருவான தற்காலிக அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. சுற்றிலும் மலைகள் முழுக்க வெள்ளிக்கோடுகளாக வெள்ளிச்சிதறல்களாக அருவிகள். நீரின் ஒலி. நீரின் ஒளி.

பருந்துப்பாறை மலையுச்சியாதலால் மரங்கள் இல்லை. முழுக்கமுழுக்க புல்மேடுகள். அலையலையாக எழுந்த புல்மலைகள் முழுக்க மேகத்தால் மூடிக்கிடந்தன. காற்று வேகமாக அடிக்கும்போது மேகம் மழையாக மாறி கொட்டி முடிந்ததும் அடுத்த மேகமூட்டம் வரை அப்பகுதி பச்சை வெளியாக காடுகளாக மலைகளாக அருவிகளாக காட்சி தந்து மெல்ல மேகத்தில் புதைந்தது. மீண்டும் அடுத்த மழை.

மழைக்கோட்டு அணிந்திருந்தோம். ஆனால் இம்மாதிரி உக்கிரமான மழைக்கு அது போதாது. கழுத்து இடுக்கு வழியாக உள்ளே சீறிச்சென்ற மழை நீர் கீழே கால் வழியாக வழிந்தது. காற்று வீசும் போது நடுநடுக்கும் குளிர். மலைப்பள்ளத்தை கைப்பிடிச்சுவர் அருகே நின்று பார்த்தோம். காற்றில் ஏறி வரும் மேகம் மலைப்பரப்பில் முட்டி செங்குத்தாக மேலே ஏறியது.

மலையாளப்பையன்களின் குழு ஒன்று காரில் வந்து ஒலிப்பெருக்கியில் ‘புலிவருகுது’ பாட்டை போட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேளாதபடி விலகிச் சென்றோம். குடிவெறிதான் அந்தக் களியாட்டம்.சென்ற கால்நூற்றாண்டில் கேரளத்தில் இளைஞர்களிடைடே குடி ஒரு பெரிய சமூக அலையாகப் பரவியிருக்கிறது. குடியைத்தவிர எதிலுமே ஆர்வமில்லாத ஒரு தலைமுறை. அரசியல் கலை இலக்கியம் எல்லாமே இதன் காரணமாக கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

இரவில் விடுதியில் மின்சாரம் இல்லை. மெழுகுவத்தியை ஏற்றி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் பேய்க்கதைகளைப்பற்றி பேச்சு வந்தது. பேய் என்ற உருவகம் எல்லா பண்பாடுகளிலும் உள்ளது. அந்த உருவகத்துக்கான காரணம் அல்லது அவசியம் என்ன என்று விவாதித்தோம். பேய் என்பது ஒரு விளக்கம் மட்டுமே. அந்த விளக்கத்துக்கு பாத்திரமாகும் அந்த நிகழ்வு எங்கும் உள்ளது. அது என்ன என்பது ஒரு சிக்கலான வினா. உளவியலும் நரம்பியலும் சமூகவியலும் குறியியலும் எல்லாம் இணைந்து ஆராயவேண்டியது – எளிதில் விளக்கிவிடக்கூடியது அல்ல. நானெழுதும் பேய்க்கதைகளை அந்த முச்சந்தியில் வைத்து சித்தரித்திருக்கிறேன்.

மிக அபூர்வமான சில நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். அவற்றை எளிமையான ‘பகுத்தறி’வைக் கொண்டு விளக்கிவிடமுடியாது என்று சொல்லி சில உளவியலாளர்கள் பதிவு செய்த நிகழ்ச்சிகளைச் சொன்னேன். கார்த்தி அவை உளநிகழ்வுகள்தானே, ஆகெவே பேய் என்பது ஒரு புறவயமான இருப்பு என்று ஏன் கொள்ள வேண்டும் என்றார். நம் புறஉலகம் என்பதே நம்முடைய நரம்புகளின், நம்முடைய உள்ளத்தின் ஒருவகையான வெளிவிளக்கமாக இருக்கக் கூடும். ஆகவே நம்முள் இருக்கும் ஒன்று வெளியே தோன்றவும்கூடும் என்பதே அதற்கு நரம்பியலின் பதில்.

உதாரணமாக ஓரு மனச்சிதைவு நோயாளி கண்ணெதிரே ‘ரத்தமும் சதையுமாக’ இல்லாத ஒருவரைக் காணக்கூடும். கண்ணில் இருந்து விழித்திரை வழியாக மூளைக்குக் கிடைக்கும் காட்சியை அவர் தன் மூளைக்குள் இருந்தே எடுத்துக்கொள்கிறார்,அவ்வளவுதான். மூளை எப்படி புலன்வழியாக வரும் குறிகளை பொருள்படுத்திக்கொள்கிறதென்பதை வைத்தே நாம் வெளியதார்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறோம். வெளி யதார்த்தம் என்று முற்றிலும் சுதந்திரமாக ஒன்று இல்லை என்றால் பேய் என்பது உள்ளும் வெளியும் ஒரே சமயம் இருக்கும் ஒன்றாக ஆகலாம். நான் வாசித்த பல பேய் அனுபவங்கள் உண்மையில் நம் மூளையை ஒரு பேர்ய்வீடாக நமக்குக் காட்டி பெரும் பீதியை நம்மிடம் உருவாக்கக்கூடியவை.

வினோத் மட்டும் தனியாக படுக்கும்படி ஆகியது. கார்த்தி தன்னால் தனியாக படுக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பேய்க்கதைக்கு உரிய உதாரணமான சூழல். நல்ல மழை, குளிர், இருள். அன்னியமான ஊர். பழங்காலத்து மாளிகை! வினோத் தனக்கு இரவில் கடுமையாக தாகம் எடுத்ததாகவும் எழுந்து தண்ணீர் குடித்தால் எல்லாரும் கிண்டல்செய்வார்கள் என்பதனால் அப்படியே தூங்கியதாகவும் சொன்னார்.

மறுநாள் மீண்டும் பருந்துப்பாறை சென்றோம். காலை ஒளியில் அதைப்பார்க்கலாமென. எட்டு மணிவரை அங்கிருந்தோம். அங்கே பொழுதுகளே இல்லை என்று பட்டது. வானமே இல்லை. எங்கும் மேகம் மட்டுமே. திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு வாகைமண் சென்றோம். பருவமழைக்காலத்தில் வாகைமண்ணின் மாபெரும் புல்வெளிகளைப் பார்ப்பதற்காகவே நாங்கள் வருடம் தோறும் வருகிறோம். கிட்டத்தட்ட இருநூறு சதுர மைல் அளவுள்ள இந்த புல்பரப்பு கேரளத்தின் மிகச்சிறந்த சுற்றுலாக் கவற்சி. ஆனால் மழையில் யாருமே வருவதில்லை.

அம்புகளாக வந்து தைத்த மழையில் நடுங்கிக்கொண்டே புல்வெளி வழியாக நடந்தோம். அவ்வப்போது மழைநின்ற இடைவெளியில் பச்சைக்கடல் உறைந்தது போல புல்வெளியைக் கண்டோம். புல்பரப்பில் ஒரு சிறிய பாம்பு தட்டுபட்டது. சின்ன தலை கனமான வால். மண்ணுளி. ஆனால் மண்ணுளி இன்னும் பளபளப்பாக இருக்கும். அங்கே உருமாறியதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் விரியன்குட்டியோ என்னவோ.

மழையில் ஊறி கைகள் விரைத்துக்கொள்ள இரண்டுமணி வரை அங்கேயே நின்றோம். பின்பு திரும்பி வந்தோம். வரும்வழியில் ஒரு சிறிய மெஸ்ஸில் அனல் பறக்கும் மீன்குழம்புடன் சாப்பிட்டோம் – ராஜகோபாலும் கிருஷ்ணனும் கார்த்தியும் சைவம். பிறகு மழையில் உருவாகி சாலையோரம் குற்றாலம் பேரருவி அளவுக்குக் கொட்டிக்கொண்டிருந்த ஓர் அருவியை காணச்சென்றோம். பெயர் இன்னும் போடப்படவில்லை. குளிக்க முடியாது.

மாலை ஐந்து மணிக்கு விடுதியில் இருந்து திரும்பும்போது பெட்டியிலும் உடலிலும் இருந்த எல்லா உடைகளும் ஈரம். ஈரத்திலேயே இருநாட்களாக உழன்றுகொண்டிருந்தோம். கொஞ்சநேரத்தில் ஈரமே இயல்பு நிலை என்றாகிவிட்டிருந்தது. இந்தவருட பருவமழைப்பயணத்தில் மழையை குளிரக்குளிர தரிசிக்க முடிந்தது

அனைத்து புகைப்படங்களும் இங்கே :
http://picasaweb.google.co.in/112702711803427276201/JeyamohanOnGAVIKerala#

பருவமழைப்பயணம்-மழையில்லாமல் http://www.jeyamohan.in/?p=546

பயணம் http://www.jeyamohan.in/?p=91
அவலாஞ்சி http://www.jeyamohan.in/?p=411
மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும் http://www.jeyamohan.in/?p=179

http://www.jeyamohan.in/?p=623 அக்காமலையின் அட்டைகள்.

முந்தைய கட்டுரைகுப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்
அடுத்த கட்டுரைகறுப்பர்களின் உளவியல்