அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)

”நான் தேடுவது எதை? அவனுக்குத் தெரியவில்லை. எனக்கு உண்மை வேண்டும். மயங்களற்ற உண்மை. என் உள்மனதிற்கு ஐயமே இல்லாமல் ஏற்புடையதாகும் உண்மை. அது பிளவுபடாததாக அநாதியாகத்தான் இருக்க முடியும். அது என் உண்மை அல்ல. எந்தக் காலத்துக்கும் உரிய உண்மை அல்ல. உண்மை என்ற வகைப்படுத்தலுக்குரியதும் அல்ல. அது அதுதான். அதை நான் அறிவேன். அது என் கண்முன் நிரம்பி இருக்கும் காற்றுப்படலத்திற்கு அப்பால், மிக மிக அருகில், ஆனால் எளிதில் அணுக முடியாதபடி உள்ளது. அதன் அருகாமையை உணர்கிறேன். அதனால்தான் எனக்கு நிம்மதி இல்லை.”

(பிங்கலனின் மனக்குமுறல்)

அன்பு ஜெயமோகன்,

பிங்கலனைப்போல் எங்களுக்கும் உண்மைதான் தேவைப்படுகிறது. அதைத்தான் தேடியபடியே இருக்கிறோம். பலர் வழியே நமக்குப் பல உண்மைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எவ்வுண்மையை எடுத்துக் கொள்வது? சலிப்பாய் இருக்கிறது. ஒரு உண்மையைப் பிடித்துக் கொண்டு அதற்குள் செல்ல முயற்சித்தாலும் மனது நிறைவடைவதில்லை. கொஞ்சம் நுணுக்கிப் பார்த்து, தனது அனுபவத்தையே அவர் பொதுஉண்மையாக்க முயன்றிருக்கிறார் என்பதையும் தெளிந்து கொள்கிறோம். என்றாலும், அவரைக் குறைபட்டுக்கொள்ள நாங்கள் தயாராயில்லை. நாங்கள்தான் விடாப்பிடியாய் உண்மையை அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பவர்களாயிற்றே? எங்களைப் போன்றோரின் தவிப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு அது வசதியாகப் போய்விடுகிறது.

”உள்மனதிற்கு ஐயம் தராததாகவும், பிளவுபடாததாகவும் உண்மை இருக்க வேண்டும்” எனக்கேட்கிறான் பிங்கலன். அப்படியான உண்மையை எதற்காகத் தேட வேண்டும்? ஒருவேளை, அவ்வுண்மையை அறிந்து கொள்ளும்போது நம் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு விடலாம் என்கிற நப்பாசையோ? பிங்கலனுக்கு எப்படியோ எங்களுக்கு அப்படியான மனநிலைதான். குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதாக நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உலகியல் சம்பவங்கள் ஒருகட்டத்தில் அப்படியாக இல்லை எனத் தெரிய வரும்போது அதிர்ச்சியடைகிறோம். அதை அப்படியே ஒப்புக்கொள்ளும் மனமின்றி அதற்கான மூலகாரணம் ஏதாவது இருக்க வேண்டும் எனத் தேடவும் துவங்குகிறோம். அம்மூலகாரணத்தை அறியும் முயற்சிகளையே உண்மையைத் தேடுவதென்றும் குறிப்பிடுகிறோம். ஆதிமூலத்தைத் தேடும் பயணத்தில் இருக்கும் ஒருவனுக்கு புறத்தில் சொல்லப்பட்டிருக்கும் / சொல்லப்படும் வடிவங்கள் எப்போதும் நிறைவான பதிலைத் தந்துவிடுவதில்லை. அதற்காகப் புறவடிவங்களை முற்றிலும் பயனற்றவை எனச்சொல்வதும் அறிவீனமாகிவிடும். அவ்வடிவங்களின் தூண்டுதலோடு தனது அகத்தில் பயணிக்கும் ஒருவன் வெகுநிச்சயம் உணமையைக் கண்டுகொள்வான். ஆனால், அவ்வுண்மை அவன் எதிர்பார்த்த எவ்வித நிறைவையும் தராது. தன் கால்களுக்கு அருகே எதிர்பாராமல் வந்துவிட்ட பேரலையை எதிர்க்கொள்ளும் சிறுவனின் மனநிலையைத்தான் நமக்களிக்கும். அவ்வனுபவம் மகிழ்ச்சியா, துக்கமா அல்லது இரண்டும் கலந்ததா என்பதை எப்படி சிறுவனால் உணரமுடியாதோ அதுவே நம் நிலையும்.

உண்மை என்பதால் அது மட்டுமே இருப்பது. அதைத்தவிர மற்றவையெல்லாம் பொய்கள். எளிதாக விளங்கிக்கொள்ள பழனி முருகன் வடிவத்தைச் சான்றாகக் கொள்கிறேன். போகர் வடித்ததாக நம்பப்படும் மலையுச்சியின் மேல் இருக்கும் சிலைவடிவம் ஆண்டி முருகன் தோற்றத்தையே தனது மூலமாகக் கொண்டது. ஆனால், நாமோ அதை ராஜமுருகனாகப் பார்த்து அவ்வடிவையே பழனி முருகன் என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவ்வடிவில் மட்டுமே அவரைப் பார்க்க விழைகிறோம். ஆண்டிக்கோலத்தில் முருகனைப் பார்ப்பது பேராபத்து எனக்கதைகளையும் கட்டி விடுகிறோம். பழனி முருகனின் உண்மை வடிவம் ஆண்டித்தோற்றம்தான். அதற்குமேல் நம்மால் செய்யப்படும் அலங்காரவடிவங்களே ராஜஅலங்காரம் உள்ளிட்டவை. அலங்கார வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அவை தற்காலிகமானவை. ஆதலால், அவற்றைப் பொய்வடிவங்கள் எனச்சொல்லலாம். அவ்வடிவங்களுக்கு அடிப்படையாய் மாறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் ஆண்டிக்கோலமே உண்மை. இருப்பது பழனிமுருகன் எனும் குறியீடு மட்டுமே. அதன் மூலஇயல்பும் ஆண்டிக்கோலம்தான். நாமோ அதற்கு அலங்காரம் செய்வதோடு அலங்கார முருகனை பழனிமுருகன் என்பதாக நம்பத்துவங்கும்போது முருகன் பிளவுபட்டுவிடுகிறான். ராஜ முருகனை நாம் ஒருபோதும் மறுக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை. அதேசமயம், அதைமட்டுமே முன்நிறுத்தி அதற்கு அடிப்படையான ஆண்டிக்கோலத்தைக் கண்டுகொள்ளவிடாமல் செய்வதே சிக்கலாகி விடுகிறது. ஆண்டி முருகன், ராஜமுருகன்(இன்னும் பல அலங்காரங்கள்) என்பது நம் அறிவால் பகுத்துக்கொண்ட பிரிவுகளே தவிர பழனிமுருகன் என்றால் ஆண்டிமுருகன்தான். அவன் பிளவுபடாதவன். அவன் எங்கோ இல்லை. அலங்காரங்களைக் கலைத்தால் போதும். அவனைக் கண்டுகொள்ளலாம். பொய்களிலிருந்து விடுபட்டவனுக்கு உண்மை மிக நெருக்கத்தில்தான் இருக்கிறது.

உலகம் மற்றும் மாந்தர் தோற்றம் குறித்த ஆய்வியலை மெய்யியல் என்றுதான் சொல்கிறோம். சமயத்தில் அதையே மெய்ஞானம் எனச் சொல்கின்றனர். அறிவியலை மூலமாகக் கொண்டு நகரும் மெய்யியல் நீண்டுகொண்டே செல்வது. பலகண்ணிகள் கொண்ட அச்சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் ஒவ்வொருவிதமான தருக்கம். எத்தருக்கமும் பிறிதொரு தருக்கத்தைத் தழுவியோ அல்லது எதிர்த்தோதான் தன்னை நிறுவிக்கொண்டிருக்கும். பகுதிகளாக இருந்து கொண்டே முழுமையைக் காண விரும்பும் அவ்வியலின் அடிப்படை பெரும்பாலும் சலிப்பையே தருவதாக இருக்கிறது. மேலும், மெய்யியலின் தருக்கங்கள் வரையறைக்குட்பட்டவை. அவ்வரையறை கடந்த நிலையில் பயனற்றவை. சமயமோ நாம் பகுதிகளாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொள்கிற ஒருவன் பகுதிகளிலிருந்து வெளிவருகிறான். பகுதிகளிலிருந்து விடுபடலே முழுமை என்பதை அப்போது உணர்கிறான். ”விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவி போல” எனப் பாரதி குறிப்பிடும் நிலையாக அதைச் சொல்லலாம். அதற்குப் பலவருடங்கள், மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு கணம்போதும். அறிவைத் தூக்கிப்பிடிக்க மெய்யியல் வலியுறுத்த அறியாமையை உணர்ந்து கொள்வதைச் சமயம் முன்வைக்கிறது. பகுதிகளின் போதாமையைப் புரிந்து கொள்கிற ஒருவனுக்கு அவற்றால் ஓரளவு பாதிப்பில்லை. மேலும், அறிவியல் சமூகத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட சமயமோ தனிமனிதனை முதன்மைப்படுத்துகிறது. அறிவியலின் பங்களிப்பைக் குறைசொல்வது நம் நோக்கமன்று. அது தான் விரும்பும் வடிவத்திலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் எனும் அபத்தத்தைத்தான் ஆபத்து என்கிறோம்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59
அடுத்த கட்டுரைகொற்றவை- கனவுகளின் வெளி