தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)

”சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டு பண்ணுகிறது. உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாக பரமஞானம் அடைய முடியும்”

(பிங்கலனின் மற்றுமொரு கூற்று)

அன்பு ஜெயமோகன்,

தருக்கங்களின் மீது தீராக்காதல் கொண்டவர்களாக இருக்கிறோம். அது தவறன்று. அதேநேரம், தருக்கங்களைக் கொண்டு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும் என முடிவு செய்கிறோம் பாருங்கள். அங்குதான் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறோம். தருக்கம் என்பது நிரந்தரமான வடிவம் கொண்டது. எப்போதும் தன்வடிவை மாற்றிக்கொள்ள் அது விரும்புவதில்லை. அதனாலேயே தருக்கங்களை அளவுக்கு மீறி நம்புவதை முட்டாள்தனம் என்கிறேன். உடனே தருக்கத்திற்கு எதிரானவனாக என்னைக் கருதிக்கொள்வதையும் அறிவீனம் என்பேன். உயிர்ப்பரிணாமத்தில் நாம் ஆறாவது அறிவு கொண்டிருப்பவர்கள். அதன் சிறப்பியல்பே தருக்கங்களை முன்வைப்பதும், அவற்றின் வழியாகத் தங்கள் வாழ்வை வரையறுத்துக் கொள்வதும்தான். என்றாலும், ஒரு குறிப்பிட்ட தருக்கத்தை மட்டுமே தொடர்ந்து வலுக்கட்டாயமாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதையே நான் குறையாகச் சொல்கிறேன். குறிப்பிட்ட தருக்கத்தின் மீது அதிதீவிரமாக நம்பிக்கை கொள்ளும் ஒருவன் தன்னிலிருந்து முழுமையாக விடுபட்டு அத்தருக்கத்தின் கைப்பாவையாகி விடுகிறான். எதைச்செய்தாலும் அத்தருக்கத்திற்குச் சார்பாகவே அது இருக்க வேண்டும் என்றும் வலிய விரும்புகிறான். கிட்டத்தட்ட அத்தருக்கத்தின் அங்கீகரிக்கப்படாத அடிமையாக மாறிவிடுகிறான். தனித்து நிற்கும் துணிச்சலையும் இழந்தவனாகிறான். அரசியல், கலை, இலக்கியம் மற்றும் சமயம் உள்ளிட்ட எல்லாத்துறைகளின் தருக்கங்களுக்கும் இவ்வுண்மை பொருந்தும்.

தருக்கங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட வடிவத்தை அல்லது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்படுகின்றன. எப்போதும் தருக்கங்கள் குழுசார்ந்து அல்லது தனிநபர் சார்ந்து எனும் இரண்டுநிலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன். குழு சார்ந்த தருக்கங்களின் தொகுப்பு பெரும்பாலும் நிலையானது. அதாவது, சூழலுக்குத் தகுந்தவாறு தன்னுடைய வடிவத்தில் மாற்றம் செய்து கொள்ள பெரிதும் விரும்பாதது. அப்படி சில தருக்கங்களில் மாற்றம் வேண்டுமென்றாலும் குழுவின் பெரும்பான்மை ஆதரவு வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் வேண்டுகோளை குழு கண்டுகொள்ளவே செய்யாது. தனிநபர் சார்ந்த தருக்கங்களோ அப்படியன்று. சூழலைப் பொறுத்து அவை மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால், தருக்கங்களைக் குறித்து தீர்மானிக்க வேண்டியது குறிப்பிட்ட தனிநபர் மட்டுமே. முடிவுகளும் உடனுக்குடன் எடுக்கப்பட்டுவிடும். இரண்டு நிலைகளிலுமே சாதக, பாதகங்கள் உண்டு. எல்லாத்துறைகளிலும் இரண்டுவிதமான நிலைகளிலான தருக்கங்கள் உண்டு. எதில் நம்மைப் பொருத்திக் கொள்வது என்பதே மானுடகுலத்தின் ஆகப்பெருங்கவலையாக இன்றுவரை இருக்கிறது; இனியும் இருக்கும்.

எனக்கு அதிகம் நெருக்கமான சமயத்தைக் கொண்டு தருக்கங்களின் அலைபாய்தலைச் சொல்ல முயற்சிக்கிறேன். சமயத்தின் குழுசார்ந்த தருக்கங்களை முன்னெடுப்பவர்கள் சமயிகள் என்று அறியப்படுகின்றனர். குறிப்பிட்ட கடவுள், கோவில், சடங்குகள் என்பதாகவே சமயத்தை அணுகுபவர்கள் இவர்கள். தங்கள் சமயத்தருக்கங்களைத் தவிர மற்றவையெல்லாம் போலியானவை என்பது சமயிகளின் தீர்மானமான கருத்து. சமயம் எனும்போது நான் சமயங்களையும், சமயங்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். பிறசமயத்தின் குறைகளைக் குறிப்பிட்டு அதிலிருந்து தங்கள் சமயம் எவ்வகையில் மேம்பட்டது என்பதை நிரூபிக்கும்படியாகவே தங்கள் தருக்கங்களை வடிவமைப்பர். தம் சமயத்தை அகச்சமயம் என்றும், பிறருடைய சமயங்களை புறச்சமயங்கள் எனவும் சொல்வர். எக்காலத்தும் எச்சூழலிலும் தங்கள் சமயத்தின் கோட்பாடுகளை அல்லது முழுமுதற்கடவுளை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பர். அதேநேரன், தங்கள் சமயத்தின் கோட்பாடுகளைத் தம்வாழ்வில் கடைபிடிக்கின்றனரா என்று பார்த்தால் பெரிதும் இருக்காது. எல்லாச் சமயத்தினருக்கும் இது பொருந்தும். தனித்துச் சிந்திக்கும் துணிவற்றவர்கள் ஏதேனும் ஒரு சமய அமைப்பைத் தேர்ந்து அதன் தருக்கங்களைத் தம்முடையதாக்கிக் கொண்டதாக வெறுமனே பாவனை செய்கின்றனர். அவ்வகையில் சமூகத்தில் ஒரு பாதுகாப்பையும் உணர்கின்றனர். மற்றபடி, சமயத்தின் தருக்கங்களை உள்ளவாறே நம்புபவர்களாகவும் பின்பற்றுபவர்களாகவும் சமயிகள் இருப்பதில்லை. அதுவே சமயத்தைக் குறித்த மோசமான சித்திரத்தை நவீனசமூகத்திற்கு அளித்திருக்கிறது.

சமயத்தின் தருக்கங்களைத் தனிநபராக முன்னெடுப்பவர்கள் சித்தர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். அவர்கள் தங்கள் கருத்துக்களைத் தயங்காது தெரியப்படுத்தும் துணிவு கொண்டவர்கள். சமயத்தின் அடிப்படையைக் குழுவாகப் புரிந்து கொள்ளவே முடியாது எனத் தொடர்ந்து வலியுறுத்துபவர்கள். குறிப்பிட்ட கோவில், கடவுள், சடங்குகள் போன்றவற்றை மறுதலித்தவர்கள். “கோவிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா / கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே / கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே / ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே” எனும் சிவவாக்கியனின் பாடல் போதும், அவர்களைப் புரிந்து கொள்ள. “சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும் / சேமமாய் ஓதினும் சிவனைநீர் அறிகிலீர் / காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் / ஊமையான காயமாய் உள்ளிருப்பன் ஈசனே”, “ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே / வாசலுக்கு வைத்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் / பூசைக்கென்று வைத்த கல்லில் பூவும்நீரும் சாத்துறீர் / ஈசனுக்கு உகந்தகல் எந்தகல் சொல்லுமே?” போன்ற பாடல்களின் வழியே சிவவாக்கியர் சமயிகளின் தருக்கங்களை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறார். எவ்வித சமய அடையாளங்களும் நமக்குத் தேவையில்லை என்பதைத் துணிச்சலாகச் சொன்னவர்கள் சித்தர்கள். எவ்விதக் குறிப்பிட்ட சித்தாந்தமும் நம்மை உண்மையில் இருந்து விலக்கிவிடும் என்பதே அவர்களின் மையத்தருக்கம். இன்று சித்தர்களுக்குச் சமய அடையாளங்கள் பூணப்பட்டு அவர்க்ளும் சமயிகளால் வணங்கப்படும் நிலையும் உருவாகி இருக்கிறது. என்றாலும், சமயிகளும் சித்தர்களும் அடிப்படையில் முற்றிலும் எதிரான தருக்கங்களைக் கொண்டவர்கள்.

வழக்கம்போல நமக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும். சமயிகளின் தருக்கங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது சித்தர்களின் தருக்கங்களை பின்பற்றுவதா? எப்போதும்போலத்தான் அதற்கு என்பதிலும். நீங்கள் முடிவு செய்யுங்கள் என்பதே. என்றாலும், என்தரப்பைச் சொல்லிவிடுகிறேன். இருவிதமான தருக்கங்களிலும் உள்ள சாதக அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்வதே சிறப்பானதாக இருக்கும் என்பது என் கோணம். சமயம் மட்டுமன்று; ஒவ்வொரு துறைக்கும் இது பொருந்தும். என்றாலும், இரண்டு நிலைகளிலுமே நமது ஆறாவது அறிவின் வெளிப்பாடே இருப்பதால் அத்தருக்கங்கள் குறித்த அதிகபட்ச விழிப்புணர்வு நமக்கு அவசியம். சமயிகள் முன்வைக்கும் சடங்குகளைக் குடைந்துகொண்டே போனால் அச்சமயிகளின் வாழ்வியலை(ஓரளவு அவர்கள் வரலாற்றயும்) அறிந்து கொள்ளலாம். சித்தர்கள் குறிப்பிடும் தருக்கங்களைச் சிந்திக்கும்போது நாம் யார், நமக்கும் உலகுக்குமான உறவு போன்றவை தொடர்பான அறிமுகப்புரிதல்கள் சாத்தியமாகலாம். சமயிகள் உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்த முயல, சித்தர்கள் உலக வாழ்வு கடந்திருப்பதைப் பற்றியே பேச முயற்சிக்கின்றனர். நமக்கும் இரண்டுமே தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். ஆக, ஒன்றைக்கொண்டு மற்றதை நாம் புறந்தள்ளிவிடக்கூடாது. சமயத்தை சமயிகளின் தருக்கங்களாகவோ அல்லது சித்தர்களின் தருக்கங்களாகவே மட்டும் தனித்துப் புரிந்து கொள்ளாமல் இரண்டின் இணைவாகப் பார்க்கத் துணிவதே தற்போதைய தேவை. அப்படியான பார்வையில்தான் ஓரளவாவது உண்மையை நம்மால் நெருங்க முடியும்.

பழனிமலைக் கோவிலைச் சமயத்தின் குறியீடாகக் கொள்வோம். அக்கோவிலில் இரண்டு முருகன் வடிவங்கள் இருக்கின்றன என்பது நாமறிந்ததே. மலையடிவாரமான திருவாவினன்குடியில் இருக்கும் குழந்தை வேலாயுதன். அவனைச் சமயிகளின் குறியீடு எனக் கொள்வோம். மலையுச்சியில் எவ்வித உடையுமற்று(அடையாளங்களற்று) ஆண்டிக்கோலத்தில் நிற்கும் ஆண்டிமுருகன். அவனைச் சித்தர்களின் குறியீடாகக் கொள்வோம். பழனிமலைக் கோவில் என்றால் அது இருமுருகன்களையும் உள்ளடக்கியதே. இப்போது சொல்லுங்கள். சமயம் என்பது சமயிகளை மட்டும் கொண்டதா அல்லது சமயிகளை முழுக்கப் புறந்தள்ளும் சித்தர்களை மட்டும் முன்வைப்பதா? இரண்டையுமே தனக்குள் கொண்டிருப்பதே சமயத்தின் பலம். அதுவே நாம் வேண்டி நிற்கும் முழுமையும். சமூகப்பொதுப்புத்தியின் தருக்கங்களில் சிக்கிக் கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த என்னைத் தனியாகப் பன்முகங்களில் யோசிக்கும் வாய்ப்பை வழங்கியது சமயமே. அதன்பொருட்டே அதை நேசிக்கவும் செய்கிறேன். எப்போதும் அதைப் புனிதப்படுத்திவிடக்கூடாது என்பதும் சமயம் எனக்களித்திருக்கும் தெளிவு. அத்தெளிவு எவ்வித புறச்சிக்கல்களையும் தீர்த்து விடவில்லை என்றாலும் அச்சிக்கல்களால் நான் பாதிப்படையாமல் வைத்திருக்கிறது. அதுவே எனக்கு ஆனந்தமாக தொனிக்கிறது.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைபிச்சை கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலைமேல் எழுத்து