”கவிதையும் கலையும் வெறும் மனமயக்கங்கள். சாமானியனான நான் என்னைப் பற்றி மிகையான கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள அவை உதவின. அவ்வளவுதான். தெளிவாகச் சொல்லப்போனால் உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான ஞானம் மட்டுமே உண்மை. அதைப் பிறருக்குப் பகிரும் நோக்கத்துடன் உருவானதே மொழி. எப்போதும் எந்தத் தருணம் ஞானமும் மொழியும் இந்த மாயையால் மூடப்பட்டன? நான் ஒரு மிகப்பெரிய பொய். பொய் என்பது மெய்யின் ஆடிப்பிம்பம். மெய் போலவே அகன்றது, எல்லையற்றது, மகத்தானது. ஆனால் அது புக முயன்றால் தடையாக மாறி முகத்தில் அறையும்.”
(கவிஞன் சங்கர்ஷணனின் தவிப்பு)
அன்பு ஜெயமோகன்,
சில கவிதைகளின் வரிகள் என்னைத் திகைக்கச் செய்வதோடு கொஞ்சம் அதிரவும் வைக்கின்றன. நதியின் மேற்பரப்பைத் தாண்டி குதிக்கும் மீன்கள் எப்படி அதை வியப்பில் ஆழ்த்துகின்றனவோ அப்படியே கவிதைகள் எனக்கு. அவை எனக்கு எவ்வித விளக்கங்களையும் அளிப்பதில்லை. கொஞ்ச நேரம் என்னை என்னிலிருந்து பிடுங்கித் தனியே அமர வைத்து விடுகின்றன. அக்கொஞ்சநேரத் தனிமை தரும் வெறுமையை என்னால் இதுவரை எதிர்கொள்ளவே முடிந்த்தில்லை. என்றாலும், அவ்வெறுமையின் வழியே நான் பெற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அதற்காகவே கவிதைகளை நேசிக்கிறேன். மேலும், கவிதைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அர்த்தங்களையே சுமந்து நிற்பதில்லை.
பல கவிதைகள் என்னை அதிர வைத்திருத்திருக்கின்றன. அவ்வதிர்வு எப்போது அக்கவிதைகளை வாசித்தாலும் கிட்டுமா என்றால் கேள்வியே எஞ்சுகிறது. சில கவிதைகளே எப்போது வாசித்தாலும் அப்போதுதான் வாசிப்பதான மனவெழுச்சியையும் அதிர்வையும் தருகின்றன. சில கவிதைகள் தங்களின் வார்த்தைகளை மாற்றிப்போட்டுப் பார்க்கவும் என்னைத் தூண்டுகின்றன. “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று / காற்றின் தீராத பக்கங்களில் / ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” எனும் பிரமிளின் கவிதை அப்படியான ஒன்று. “சிறகிலிருந்து பிரிந்த இறகு”, ”காற்றின் தீராத பக்கங்கள்”, “ஒரு பறவையின் வாழ்வு” போன்ற சொல்லாட்சிகளின் வடிவங்களையே நான் அப்போது அதிகம் வியந்திருந்தேன். மிகச்சமீபமாய் அக்கவிதையை நண்பர் ஒருவர் குறிப்பிட்டபோது வேறுவித வியப்பு என்னில் தோன்றியது. கவிதையின் வார்த்தைகள் மாறி அமர்ந்த ஆச்சர்யமே அது. ”ஒரு பறவை / காற்றின் தீராத பக்கங்களில் / தன் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்றி வாழ்வை எழுதிச் செல்கிறது” என நான் அக்கவிதையையே தலைகீழாக்கினேன். பறவையும், இறகும் இடம்மாறியதும் அக்கவிதை தரும் அனுபவமே புதிதாய் இருந்தது. பிரமிள் எதன்பொருட்டு அக்கவிதையை எழுதியிருப்பார் எனும் விசாரணைக்குள் எப்போதும் நான் செல்லவிரும்பியதில்லை. அக்கவிதை எனக்களிக்கும் அனுபவங்களைக் கண்டுகொள்வதையே முக்கியம் என்று கருதுகிறேன்.
”இரவின் நிழலே பகல்; இருளின் சாயை ஒளி” என முடியும் கவிதை ஒன்றையும் பிரமிள் எழுதி இருக்கிறார். ”பூமியின் நிழலே வானத்திருளா / பகலின் நிழல்தான் இரவா” என அக்கவிதையை அவர் தொடங்கி இருப்பார். இரவு, பகல், நிழல் மற்றும் சாயை போன்ற வார்த்தைகள் தரும் வெளிச்சத்தை எல்லா வாசகர்களாலும் உணர்ந்து கொள்ள முடியாது. அதற்கான வாசகர்களை அதுநிச்சயம் சேரும். ஒரு கவிதை எப்போதும் தன்னைத் திறந்தே வைத்திருக்கிறது. அதைத் தேடி வருபவனை எப்போதும் அது ஏமாற்றுவதில்லை. நாமோ நம்மை மூடிக்கொண்டல்லவா வாசிப்பை நிகழ்த்துகிறோம்? ஒரு குறிப்பிட்ட தருக்கத்தின் பிடியில் அகப்பட்டவர்களுக்கு கவிதைகள் எப்போதும் பயன் தரா. கவிதைகளை முன்முடிவுகளோடு அணுகுபவர்களுக்கு அது எவ்வித அனுபவத்தையும் தருவதில்லை. எளிமையாகச் சொல்வதாயின், குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் ஆய்வாளர்களுக்கு கவிதைகள் சலிப்பூட்டுபவை. கவிதைகளை ”அலங்காரமாய் நிறுத்தப்பட்ட வார்த்தைகள்” என்றே அவர்கள் சொல்வர்.
கவிதைகளை எல்லோராலும் நெருங்கி விட முடியாது என்பதால்தான் கலைகள் தோன்றுகின்றன. கலைகளும் மக்களின் மனநிலைக்கேற்ப பலவடிவங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. வாழ்வின் எதிர்பாராமைகளைக் கண்டு நொறுங்கிப்போகும் சாதாரண மனிதர்களைக் கலைகளே ஆசுவாசப்படுத்துகின்றன. வேட்டைச் சமூகக் காலகட்டத்திலேயே கலைகள் இருந்திருக்கின்றன. குகை ஓவியங்கள் அதற்குத் தகுந்த சான்று. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டதாக இன்று கண்டறியப்படும் குகை ஓவியங்கள் ஆதிமனிதனின் வாழ்வியலை ஓரளவு புரிந்து கொள்ள உதவுகின்றன. வேட்டைச் சமூகக் காலத்தில் நாடோடிகளாக இருந்தனர் நம் முன்னோர். இரவுப்பொழுதை குகைகளிலும், மரப்பொந்துகளிலும் கழித்தனர். அவர்களுக்கான அடுத்த வேளை உணவு என்பதே பெருஞ்சிக்கல். அவ்வுணவைப் பெறும்பொருட்டுத் தங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ள விலங்குகளை வேட்டையாடி வெற்றிகொள்வது போன்ற காட்சிகளை தங்கியிருந்த குகைகளில் முன்கூட்டியே வரைந்தனர். அப்படியான பாவனைகளே காலப்போக்கில் சடங்குகளாக மாறி இருக்கின்றன. தற்காலச் சடங்குகள் பொருளற்றவை என்றாலும் அது ஒரு நவீன மனிதனுக்குள்ளிருக்கும் ஆதிமனிதனை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. மலைநிலத்தின் வேட்டைக்க்கருவியான வில்லே காலப்போக்கில் யாழாக மாறுகிறது. காட்டில் கிடைக்கும் மூங்கிலே குழலாக மாறுகிறது. இசைக்கலையின் வரலாற்றை இப்படியாகவே நாம் அணுக வேண்டும். தோல், நரம்பு மற்றும் காற்று இசைக்கருவிகளில் குறிப்பிட்ட இனக்குழுமக்களின் வாழ்வும் மறைந்திருக்கிறது. மருத நிலத்தின் வேளாண்மைத் தொழிலே கும்மி, கோலாட்டம் முதலிய நடனங்களாக மாறுகின்றன. வயல்வெளியில் நாற்று நடும் பெண்களின் அசைவுகளே கும்மியில் அடவுகளாகின்றன. நெய்தல் நிலத்தின் மீன்பிடித்தொழிலாளர்களின் படகைச் செலுத்தும் “ஏலேலோ ஐலசா” எனும் உரத்த சீரான குரலே வாய்ப்பாட்டுக்கு வித்திட்டிருக்கலாம். ஒவ்வொரு நிலப்பகுதியிலுமான வாழ்வை நாம் சடங்குகளாகவும், கலைகளாகவும் இன்றுவரை சுமந்து வந்தபடியே இருக்கிறோம். வேலன் வெறியாட்டம் எனும் சங்ககாலச் சடங்கு இன்றுவரை கேரளாவில் தெய்யாட்டமாக தொடர்ந்தபடிதான் இருக்கிறது. என்றாலும், கொஞ்ச வருடங்கள் முன்புவரை அவற்றில் இருந்த உயிர்ப்பு இப்போதில்லையோ எனும் அச்சம் எழுகிறது. மேலைச் சிந்தனைகளின் தாக்கத்தில் கலைக்கோட்பாடுகளை வகுக்க முயலும் நாம் நம் மரபுக்கலைகளைப் பொருளற்றதாகக் கருதத் துவங்கி விடுகிறோம். அதனடிப்படையில் அவற்றை உதாசீனப்படுத்தவும் செய்கிறோம். ஒரு கலையைக் குறிப்பிட்ட வடிவில் பொதுமைப்படுத்தவே மேலைச்சிந்தனை முயல்கிறது. நம் இந்திய மரபோ ஒரு கலையின் பன்முக வடிவங்களை உள்ளவாறே கொண்டுசெல்ல முயல்கிறது. நம் செயல்பாட்டு அடிப்படையில் சிக்கல்கள் இருக்கலாம். அதைக்களையப் பார்க்கலாமே ஒழிய, நம் மரபையும் கலைகளையும் எச்சூழலிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது.
ஒரு எளிய மனிதனுக்கு கவிதைகளும், கலைகளும் பயனுள்ளவையாக இருக்கலாம். எனினும், ஞானத்தைத் தேடும் சான்றோர்களுக்கு அவை பயனளிக்குமா எனப்பார்த்தால் நிச்சயம் இல்லை என்பதே பதில். உலகியல் வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ளத் தடுமாறும் சாதாரண மனிதர்கள் கலைகளில் தம் தடுமாற்றங்களைக் கொஞ்ச நேரம் மறக்கின்றனர். அதுபோதும் அவர்களுக்கு. அதிகம் யோசிப்பதை அறியாத, நான் யார் என சிந்திக்க விரும்பாத எளிய மனிதர்கள் கலைகளிலும், சடங்குகளிலும் தங்கள் உளவியலைச் சமப்படுத்திக் கொள்கின்றனர். “முருகனுக்கு காவடி எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்” எனச் சொல்லும் ஒருவர் அப்படி காவடி எடுத்தவுடன் தன் பிரச்சினைகள் சரியாகிவிடும் என உண்மையாக்வே நம்புகிறார். அதனால் தன் பிரச்சினைகளை எளிதாக எதிர்கொள்ளவும் தயாராகிறார். அவர்களுக்கு ஞானமோ, நான் யார் என்பது பற்றியோ துளியும் அக்கறையில்லை. அப்படியான வாழ்வு வாய்க்க நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே? பிறகெப்படி நாம் அலைபாயாமல் இருப்பது? முருகன்(கடவுள்) யார், நாம் யார், உலக வாழ்வு என்பது எதுவரை, உலகத்தோற்றம், பிரபஞ்ச மூலம் என அல்லாடத்துவங்குகிறோம். கருத்துக்கள் நம்முள் நிரம்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். இதுவரை கற்றவை, இனி கற்பவை என யாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும்படி வெட்டவெளியின் தரிசனம் சாத்தியமாகிறது. அழுத்திக் கொண்டிருந்த துயரங்கள் யாவும் ஒருநொடியில் விலகியது போன்ற ஆனந்தம். தொடர்ந்து அந்நிலையிலேயே இருக்க முயல்கிறோம். “முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா”(காட்டாகச் சொல்கிறேன்) எனும் சில குரல்களால் எதார்த்தத்துக்கு வருகிறோம். வெட்டவெளியின் பிம்பங்கள்தான் நாம் என்றாலும் நாமே வெட்டவெளியில்லை. பிம்பங்கள் எப்போதும் அவற்றுக்கான இயல்பிலிருந்து வெளிவந்துவிடவே முடியாது. ஆக, எப்போதும் அதன் இயல்பைப் பெற்றுவிட முடியாது. வேண்டுமானால், வெட்டவெளியின் பிம்பம்தான் நாம் என்பதை விதவிதமாகக் கொண்டாடலாம். அதையே நம் மரபு கோயில், திருவிழா, சடங்குகள் எனும் வடிவங்களில் முன்வைக்கிறதோ என்றும் அதிசயிக்கிறேன்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.