இருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)

”உடைப்பதும், பிரிப்பதும், பெயரிடுவதும் தொகுப்பதும்தான் தருக்கத்தின் போக்கு. ஆனால், பெருவெளியில் திசை இல்லை. எந்தப் பயணமும் போதியதூரம் சென்றால் ஒரே புள்ளியைச் சென்றடைகிறது. தருக்கத்தின் உச்சியில் மனம் அதருக்க நிலையை அடைகிறது. மகத்தான முழுமையுடன் பிரபஞ்சம் மீண்டும் காட்சி தருகிறது. வாதகதிகள் பயனை உத்தேசித்து ஓர் எல்லைக்குள் மனிதமனம் உருவாக்குபவை. கோழைகளின் புகலிடம் அவை. வீரன் என்பவன் வெறுமையில் காலூன்றி நிற்பவன். வாதங்கள் தாங்கள் கட்டியெழுப்பதை ஒரு கணத்தில் சாஸ்வதமாக எண்ணிக் கொள்கின்றன. அவற்றின் நிழலில் தங்கி விடுகின்றன. காலம் தருக்க வடிவம் கொண்டு அப்போது. உடைத்து வீசும். வெறுமை நோக்கி அனைத்தையும் இழுத்துச் சென்றபடியே இருக்கும் பிரவாகமே காலம் என்பது”

(சிற்பியிடம் கங்காளர்)

அன்பு ஜெயமோகன்,

”நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்” எனச் சொன்னார் தெகார்தே. ’நான்’ எனும் சொல்லை அவர் முதலில் மனமாகவும், பிறகு உடலாகவும் கண்டு கொண்டிருக்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். தருக்கங்களைப் பெரிதும் நம்பி இருக்கும் மேலைச் சிந்தனை மரபிலிருந்து நாம் நிறையப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். என்றாலும், அத்தருக்கங்கள் நமக்கு வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலையும், சக உயிர்களை நேசிக்கும் கருணையையும் வழங்கி இருக்கின்றனவா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். முழுக்க முழுக்க உலகியல் வாழ்வை மட்டுமே முன்வைத்து மேலை நாட்டுச் சிந்தனை மரபு இயங்குகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அறிவைத் திருப்திப்படுத்தும் தருக்கங்களை மட்டுமே அம்மரபு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆதியின் முதல் புள்ளியில் இருந்து எல்லாவற்றையும் அறிவுக்குள் அடக்கிவிடலாம் என்றும் அது கணக்கு போடுகிறது. மேலும், கொஞ்சம் அறிவுக்கு முரண்படினும் அச்சிந்தனையை முட்டாள்தனம் என்று தயங்காமல் ஒதுக்கிவிடுகிறது.

மேலைநாட்டுச் சிந்தனையின் அடிப்படையே கால, இட எல்லைக்குட்பட்டது என்பதைத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். தெகார்தேவின் சிந்தனையையே எடுத்துக் கொள்வோம். ”நான்” என அவர் முதலில் குறிப்பிடும் ’மனம்’ கால இட எல்லைக்குள் அடங்காதது. பிற்பாடு அவர் முன்வைக்கும் ’உடலை’ அவ்வெல்லைகள் இன்றிப் புரிந்து கொள்ள முடியாது. அப்படியானால் இருப்பதாக அவர் நம்பும் ‘உடலுக்கு’ மூலமாக இருப்பது ‘மனமே’ என்பது தெளிவாகப் புலனாகிறது. மனமே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது என்பதாக அதைக் கருதி மேல் நகர்வோம். கால இட எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாத மனதின் இயக்கம் எப்படி கால இட எல்லைகளுக்குட்பட்ட உலக வாழ்வை மட்டுமே சார்ந்திருக்கும்? அப்படி இருக்க சில குறிப்பிட்ட உலக வாழ்வின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பின்னப்படும் தருக்கங்களால் அதை நாம் நிறைவு செய்துவிட முடியுமா? திரும்பத் திரும்ப தருக்கங்களை உருவாக்கி, கலைத்துப்போட்டு, அடுக்கி என எவ்வகையில் முயன்றாலும் நம் முயற்சிகள் கால இட எல்லைகளால் ஆன அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவை வீணே. அதனால்தான் பகுக்கும் குணம் கொண்ட அறிவை மட்டுமே முதன்மைப்படுத்தும்போது நாம் பிளவுற்றவர்களாகி விடுகிறோம். நம் தொடர்முயற்சிகளால் அப்பிளவுகள் மேலும் பலப்பல பிளவுகளாகின்றன. பிற்பாடு, உண்டாக்கிக் கொண்ட பிளவுகளில் ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி பிற பிளவுகளோடு முரண்படத் துவங்குகிறோம். பிளவுகளுக்குள் நம்மைப் புதைத்துக் கொண்டு துன்புறுகிறோம். முழுமையைப் பிளவுகளாக்கி பிளவுகளில் முழுமையைத் தேடும் அதிபுத்திசாலிகளான நமக்கு இறுதிவரை அது சாத்தியமே இல்லை. ”நாய்வாலை நிமிர்த்த முடியாது” என்பதை முழுமையாகக் கொண்டால் அதை ஒப்புக்கொள்வதே அறிவின் பயனாக இருக்க வேண்டும். நாமோ சில தருக்கங்களை முன்வைத்து அம்முழுமையிலிருந்தே வெளிவந்து விடுகிறோம். அத்தருக்கங்களைத் தொடர்ந்து எழுப்பியவாறே நமக்குள் சண்டையிட்டும் கொள்கிறோம். காலப்போக்கில் ’நாய்வாலே’ நம்மிடமிருந்து மறந்து தருக்கங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் அவலம் நேர்ந்துவிடுகிறது.

மனிதர்களுக்கே உரித்தான ஆறாவது அறிவையே மனம் எனச் சொல்கிறோம். அது எப்போதும் தருக்கங்களாலேயே தனக்கான வடிவத்தைக் காட்ட முயலும். கூடுதலாக, அப்போதைக்கான நிறைவையும் வேண்டி நிற்கும். ஆக, தருக்கங்கள் அவசியம் என்பது தெளிவாகிறது. எப்படியான தருக்கம் என்பதுதான் குழப்பமாய் இருக்கிறது. நம் மரபில்தான் அதற்கான விடை இருக்கிறது என நான் துணிந்து சொல்வேன். உலக வாழ்வை மையப்படுத்தி நாம் வரையறுத்துக் கொள்ளும் தருக்கங்கள் எல்லாம் ‘நான்’ எனும் ஆணவத்தால்(இறுமாப்பால்) விளைந்தவை. ஆணவம் என்றால் சாதாரனமானதா என்ன? எல்லை கடந்திருக்கும் பெருவெளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பார்க்கும் ஆணவம். நாடுகளுக்கு இடையேயான நமது போர்களுக்கு அதுவே காரணம். முதலில் உலகில் வல்லமை பெற்ற நாடாக மாற வேண்டும். பிறகு, உலகம் கடந்திருக்கும் பரப்பையும் வெற்றி கொள்ள வேண்டும் எனும் ஆணவம் பெரும்பாலான நாடுகளுக்கு இருக்கிறது. அவ்வாணவத்தான் ‘நான்’ என்பதை சரியான கோணத்தில் ஆராய்வதற்கு நாம் மறந்து விடுகிறோம். அதையே நம் மரபு சுட்டிக் காட்டுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்புள்ள மனதிற்கு கால இட எல்லைகள் கடந்திருக்கும் பெருவெளியின் தரிசனத்தை அகத்தில் நிகழ்த்திக் காட்டுகிறது நம் மரபு. ’நான்’ என்பதை ‘அக்காட்சியோடு’ பொருத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் மனதின் தருக்கங்கள் பொடிப்பொடியாக உதிரத் தொடங்குகின்றன. ஒருகட்டத்தில் மனம் தனது இயக்கத்தையே நிறுத்திவிடும்படியான திகைப்பை நிச்சயம் எதிர்கொண்டிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் கூச்சல் ஓய்ந்து அதருக்க நிலைக்கு நகர்ந்து விடும். திரும்பவும் மனம் உலக வாழ்வுக்கு வந்துதான் தீரும் என்றாலும் முன்பிருந்த வடிவில் அது தன்னைக் காட்டிக் கொள்ளவே விரும்பாது.

தெளிவாகப் புரிந்து கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வரையறையை முன்வைத்தே தருக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. என்றாலும், தருக்கங்கள் எப்போதும் பகுதிகளே. அவை முழுமை அன்று. சான்றாக, ஒரு மரத்தைக் காட்சியாக வரைவோம். பூதான் மரம் என்பது ஒரு தருக்கம். இலைதான் மரம் என்பது இன்னொரு விதமான தருக்கம். அப்படியாக கனி, கிளை, வேர் என தருக்கங்களை நாம் பகுத்துக் கொண்டே செல்லலாம். தவறில்லை. ஆனால், என்ன நேர்கிறது எதற்காக தருக்கங்களை உண்டாக்கத் துவங்கினோமோ அதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம். பகுத்துக் கொண்டு தருக்கங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது மேலைநாட்டு சிந்தனை மரபு. பகுத்துக் கொள்வதோடு அவற்றைத் தொகுக்கப் பார்க்கவும் தூண்டுவதே நம் சிந்தனை மரபு. ’தொகுப்பது’ எனும் செயல் எதிர்காலத்தில் நடக்கும் ‘பகுத்தல்’ செயலையும் உள்ளடக்கியதால் அது வளர்ந்தபடியே இருப்பது. பகுத்தல் தருக்கங்களுக்கு இடையே மோதலை உருவாக்க, தொகுத்தலோ அவற்றுக்கு இடையே ஒருங்கிணைவை உண்டாக்குகிறது. பகுத்தல் பிளவுகளாகக் காட்சியளிக்க, தொகுத்தலே முழுமையாக இருக்கிறது.

“அவையே தானே யாய்” எனும் சிவஞானபோதத்தின் வரியைக் கொண்டு தொகுத்தலைப் புரிந்து கொள்ளப் பார்ப்போம். “அவையேயாய்”, “தானேயாய்”, “அவையே தானேயாய்” எனும் மூன்று தனித்த தருக்கங்களின் ஒருங்கிணைவே “அவையே தானே யாய்” எனும் வரி. தனித்தனியாய் மூன்றுமே பிளவுகளாக இருக்க, இணைவில் எப்பேர்ப்பட்ட முழுமை சாத்தியமாகி இருக்கிறது? அம்முழுமை தருக்கங்களை உள்ளடக்கியதாக ஒருகோணத்திலும், அதருக்கமாக மறுகொணத்திலும் தன்னைக் காட்டிக் கொள்வதையும் கொஞ்சம் அணுகிப்பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைகொற்றவைப் பித்து- 2
அடுத்த கட்டுரைஇலக்கியமும் மீறல்களும்