அதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)

”உங்கள் மனமெங்கும் விஷ்ணுபுரம் நிரம்பி இருக்குமெனில் அங்கு எல்லையற்ற கருணையே நிரம்பி இருக்கும். விஷ்ணுபுரத்தின் ஒரு நாய் துயரப்படுவதைக்கூட நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்குள் நீங்களன்றி வேறு எவரும் இல்லை. நீங்கள் மகத்தான ஆட்சியாளர் என்பதில் ஐயம் இல்லை. அது வரலாற்றின் சாபம். கருணையுள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அகங்காரிகள் மிகச்சிறந்த ஆட்சியாளர்கள்.”

(சூரியதத்தரிடம் அவர் மகன் ஸ்வேததத்தன்)

அன்பு ஜெயமோகன்,

திரும்பத் திரும்ப ஒன்றையேதான் பலவடிவங்களில் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றினாலும் விடாப்பிடியாக அதைப் பேசியாக வேண்டிய தேவை இருக்கிறது என்றே நம்புகிறேன். விஷ்ணுபுரம் எனும் சொல்லால்தான் உங்களை இந்துத்துவா என்று முத்திரை குத்துகின்றனர். அப்படியே அந்நாவலை வாசிப்பவர்களையும், ஆதரிப்பவர்களையும் மதவாதிகள் எனும் அடையாளத்துக்குள் இழுத்து வருகின்றனர். இந்துத்துவா எனும் பதம் சிக்கலானதுதான். அப்பதத்திற்கு அடிப்படைவாதிகள் தரும் பொருளைக் கொண்டால் நாம் இந்துத்துவா அல்ல. மேலும், இந்து மதத்தைத் தூக்கிப் பிடித்து அதைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் நமக்கில்லை என்றே நான் கருதுகிறேன். தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய மண்ணில் இருக்கும் பன்முக மரபுகளின் தனித்துவம் பற்றி; நாம் வியக்கும் மரபை அல்லது நம் மண்ணின் தனித்துவத்தைக் கண்டுகொள்ள உதவிய குறியீடுகளைப் பற்றி. இயற்கையிலிருந்து நம்மைப் பிரித்து செயற்கையான வாழ்வில் சிக்க வைக்க முனையும் மேலைநாட்டுச் சிந்தனை மரபுதான் சிறந்தது என்பதான கருத்துக்கு நவீன சமூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் இயற்கையோடு இணைந்திருக்கும் வாழ்வியலைத் தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியச்சிந்தனை மரபின் அவசியத்தையும், ஆழத்தையும் உணர்த்த வேண்டிய தேவை நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.

இன்றைய மதங்கள் மனிதர்களைத் தங்கள் அடிமைகளாக்கவே முயல்கின்றன. அப்படியான தளத்திற்கு இந்து மதமும் நகர்ந்து வந்திருப்பதாகப் படுகிறது. நிறுவனமயமான மதங்கள் எனும் கருத்தே நம் சிந்தனை மரபுக்கு முற்றிலும் எதிரானது. அப்படி இருக்க இந்து மதம் எனும் பெயரைச் சொல்லிக்கொண்டு அரங்கேறும் செயல்களுக்கு நம் மரபைக் காரணமாகக் கொள்வது சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும். மரபைச் சரியாக விளங்கிக் கொள்ளாதவர்களே மதவாதிகளாக இருப்பதுதான் காலத்தின் நகைமுரண். இந்து எனும் சொல்லாட்சியைக் கொண்டு கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் (பிற மதத்தினரையும்தான்) எதிரிகளாக முன்வைப்பவர்கள் நம் மரபுக்கு முற்றிலும் எதிரானவர்களே. ”இந்திய நாடு இந்துக்களின் நாடு” எனும் சொல்வதையும் நாம் ஒப்புக்கொள்ளக் கூடாது. நம் மண்ணின் மரபு அடையாளங்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. அடையாளங்களின்றி இருத்தலே நம் மரபின் ஆகச்சிறந்த தனித்துவம். அறிவைப் பெரிதாகக் கருதும் நம்மைப் போன்றவர்களாலோ அடையாளங்கள் அற்று இருக்க முடியாது. அப்படியான சூழலில் அடையாளங்களில் சிறந்தது நாங்கள்தான் என தங்களுக்குள் மோதிக்கொள்வதைத் தவிர்க்கப் பார்க்கலாம். நம் மரபுக்கு நாம் செய்யும் ஆகப்பெரும் கைமாறு அதுவாகவே இருக்கும். குறிப்பிட்ட மதத்தினரின் வரவாலும், பரப்பலாலும் நம் மரபு அழிந்துபோய்விடும் எனப் பயப்படத் தேவையில்லை. நம் மரபுக்குத் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் திறனுண்டு. மேலும், அது குறிப்பிட்ட அமைப்பாலோ குழுவாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. “பெரியோரை வியத்தலும் இலமே / சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனும் சிந்தனையை நம் மரபைத் தவிர எங்கு காணமுடியும்?

விஷ்ணுபுரத்துக்கு மீண்டும் வருவோம். விஷ்ணுபுரம் என்றாலே விஷ்ணுவைக் குறித்த புராணக்கதைகளின் என்பதான பொருளிலேயே நாம் அர்த்தப்படுத்திக் கொள்வதாகக் கருதுகிறேன். பலநூற்றாண்டுகளாக நம்மவர்களைப் பிடித்தாட்டும் நோயென்றுகூட அதைச்சொல்லலாம். அதன்பொருட்டே அப்பனுவலைத் தவிர்த்துவிடவும் முனைகிறோம். அத்தோடு நின்றுவிட்டால்கூட பரவாயில்லை. “ஜெயமோகன் இந்துவாகி விட்டார். இனி, அவரிடம் நடுவுநிலைமையை எதிர்பார்க்க முடியாது” எனும் பரப்புரையையும் துவங்கி விடுகிறோம். உண்மையில் விஷ்ணுபுரம் இந்துமதத்தை அல்லது இந்து மதத்தின் வைணவத்தைத் தூக்கிப் பிடிக்க எழுதப்பட்ட நூல் அன்று. தொடர்ந்து இலட்சியவாதக் கருத்தியல்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு தனிமனிதனை அவன் தவிப்பிலிருந்து விடுவித்த (சிலை ஒன்லிருந்து விரிந்த) பெருந்தரிசனத்தைப் பகிர்ந்து கொள்ள முனைவது. உங்களுக்கான அனுபவங்களின் வழியே குறுகி இருந்த நீங்கள் விடுபட்டு விட்ட பேரதிசயத்தையே அந்நாவலில் தொடர்ந்து எழுதி இருக்கிறீர்கள். பலவகையான இலட்சிவாதங்களையும் அந்நாவல் தனக்குள் கொண்டிருக்கிறது. கூடவே, அவற்றுக்கான போதாமைகளையும் மறவாமல் குறிப்பிடுகிறது. அதனாலேயே விஷ்ணுபுரம் தனித்துவமானதாக இருக்கிறது. நவீன அறிவுஜீவிகள் குறிப்பிடுவது போல் விஷ்ணுபுரம் புனித நூலன்று; ஆத்திகம் நாத்திகம் எவ்விதப்புனிதமானாலும் தயங்காது அவற்றைக் கட்டுடைப்பது. ஒருகட்டத்தில் தன் மையத்தையே கட்டுடைப்பது. இந்தியச் சிந்தனை மரபின் பன்முகப் பரிணாமங்களில் திகைக்கும் ஒருவனுக்கு விஷ்ணுபுரம் போன்றதோரு அனுபவம் வாய்க்கலாம். அப்படியான மனநிலையைத் தூண்டுவதே அந்நாவலின் மூலம். மற்றபடி, உங்களையும் அந்நாவலையும் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டாடுவதாகச் சொல்பவர்களை நாங்கள் எவ்விதத்திலும் பொருட்படுத்தப்போவதில்லை.

காலிப்பானை எனச் சொல்கிறோம். தன் வெற்றிடம் முழுக்கக் காற்றைக் கொண்டிருப்பதால் அதை நாம் நிரம்பிய பானை என்று எப்போதாவது சொல்லி இருக்கிறோமா? ஏன் என்றால் காற்று எப்போது வேண்டுமானாலும் வரும்; அதைப்போன்றே வெளியேறியும் விடும். நம் மனதும் காலிப்பானைதான். தருக்கங்களால் அதை நிரம்பி இருப்பதாகக் கொண்டால் ஏமாந்து போவோம். காற்றைப்போலவே தருக்கங்களும். தருக்கங்களை முற்றிலும் புறக்கணிக்க நம்மால் இயலாது. என்றாலும், தருக்கங்களின் இருப்பை நிரந்தரமென்று நம்பிவிடலும் ஆபத்து. விஷ்ணுபுரம் தருக்கங்களைக் கடந்து நின்று அவற்றை அலசிப் பார்க்கும் மனநிலைக்கு நம்மைத் தயார்படுத்துகிறது. குறிப்பிட்ட தருக்கத்தை விட்டு வெளியேறவும், தருக்கங்களை உள்ளடக்கியிருக்கும் அதருக்க நிலையிலிருந்து அவற்றை அணுகவும் தூண்டுவதே விஷ்ணுபுரம். விஷ்ணுபுரம் எனும் தருக்கத்தின் வழியாக நீங்கள் முன்வைக்கும் அதருக்க நிலையை அவ்வளவு எளிதில் எதிர்கொண்டுவிட முடியாது. அதனாலேயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 69
அடுத்த கட்டுரைஎம்.டி.எம்மின் நூறுநாவல் பட்டியல்