சலசலப்புகள்

ஜெ,

மூன்றுநாட்களுக்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மின்னஞ்சல் இல்லை, திருவண்ணாமலையில் இருப்பதாகச்சொன்னீர்கள். இதற்குள் அதை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதை நானே திரும்பப்பெற்றுக்கொள்ளத்தான் இதை எழுதுகிறேன்.

உங்கள் மின்தமிழ் பேட்டியில் நீங்கள் இளம்எழுத்தாளர்களைப்பற்றி சற்று sweeping ஆகச் சொல்லிவிட்டிருந்தீர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்பிறகு ஃபேஸ்புக்கில் சில இளமெழுத்தாளர்கள் உங்கள்மேல் தொடுத்த தாக்குதல்களை போய் வாசித்துப்பார்த்தேன். அடச்சே என்று ஆகிவிட்டது. அவர்கள் கோபம் கொள்வது சரிதான். ஆனால் கொஞ்சமாவது முதிர்ச்சியோடு அதைச்செய்யவேண்டாமா?

உண்மையில் உங்கள் மேல் தரமான வாசகன் பொருட்படுத்தும்படி ஏதாவது ஒரு எதிர்விமர்சனம் வந்தால் நல்லதுதானே என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அனால் எந்த ஒரு சாதாரண வாசகனுக்கும் இவர்கள் அரைகுறை வாசிப்புடன் அல்லது வாசிக்காமலேயே அடித்துவிடுகிறார்கள் என்று தெரியும்படியான கருத்துக்கள். வளவளவென்ற வம்புமொழிநடை. கூடவே கீழ்த்தர வசைகள். நாங்கள்லாம் யார் தெரியுமா? என்ற வகை சவடால்கள். ஒருவர் டி ராஜேந்தர் சொடக்கு விட்டு இங்கிலீஷ் பேசுவதுபோல ஃபூக்கோ நீட்சே என்றெல்லாம் கூட சம்பந்தமே இல்லாமல் அடித்து முழக்கியிருந்தார்.

அதிலும் உங்கள் வாசகர்கள் அனைவருமே அல்லக்கைகள் அடிவருடிகள் என்ற வகையில் வசைகள். சென்ற ஐம்பதாண்டுக்கால நவீன இலக்கியவரலாற்றில் உங்கள் வாசகர்கள் போல இலக்கிய வாசகர்கள் இப்படி வசைபாடப்பட்டிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படியும் சிலர் போய் பொறுப்பாகவும் நிதானமாகவும் பதில்சொல்லி அவர்களின் அசட்டுத்தனங்களை வெளிப்படுத்த முயல உடனே அவர்கள் பிளாக் செய்யப்பட்டு அவர்களின் பதிவுகளும் அழிக்கப்பட்டன. அதன்பின் புலம்பல்கள். தன்னிரக்கங்கள்…

இவர்கள் எழுதிய நூல்களை வாசித்தவன் என்றமுறையில் இவர்கள் அமெச்சூர் எழுத்தாளர்கள், எதையும் படிக்கும்படி இன்னமும் எழுதாதவர்கள் என்று எனக்கும் தெரியும். ஆனால் தமிழ்ச்சூழலில் தன்னம்பிக்கை இழப்பு எப்போதும் வந்துவிடக்கூடியது. ஆகவே எழுதுபவர்கள் குறிப்பாக இளமெழுத்தாளர்கள் தன்னம்பிக்கை இழக்கும்படிச் சொல்லக்கூடாது என்றுதான் உங்களிடம் முதலில் எழுதினேன். ஆனால் இப்போது ஆழமான பரிதாப உணர்ச்சியையே அடைந்தேன். இங்கே என்னதான் நடக்கிறது என்றே புரியவில்லை.

சண்முகம்
மதுரை

அன்புள்ள சண்முகம்,

நான் இன்னும் ஊர்திரும்பவில்லை. நீங்கள் அளித்த சுட்டிகளை வாசித்தேன்.

தமிழ்ச்சூழலில் உள்ள ஒரு வசதி என்பது நாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித்தால் மட்டும்போதும் , நாங்கள்தான் நாங்களேதான் என பாய்ந்துவந்து நின்று நான் சொன்னவற்றை முழுமையாக நிரூபித்துவிட்டுச்செல்லும் நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு என்பதுதான்.

நீங்களே சொன்னதுபோல இந்த தாளவே முடியாத ‘அமெச்சூர்’த்தனம்தான் எரிச்சலூட்டி கடும் சொற்களை நோக்கித்தள்ளுகிறது. நுட்பமான எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. எதையும் எழுதவும் முடியவில்லை. அதிலிருந்து வரும் தாழ்வுணர்ச்சி, அதை மறைக்கும் மிகைபாவனைகள்.

நீங்கள் சொல்லும் இந்த எழுத்தாளர்கள் எழுத வந்து பத்துவருடம் தாண்டிவிட்டது. பத்துவருடமென்பது நீண்டகாலம். சோதனைப்பருவம் கடந்துவிட்டதென்று சொல்லலாம். இன்னமும் நல்ல வாசகன் பொருட்படுத்தும் ஒரு படைப்பை, ஒரு கட்டுரையை எழுதமுடியாதவர்களிடம் மேலும் ஏதும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அவர்களுடைய தன்னம்பிக்கையை பேணவேண்டியதுமில்லை.

*

என் எழுத்துக்கள் மீதான எதிர்விமர்சனம் என்பது என் எழுத்துக்களை கூர்ந்து வாசித்த, அவை அளிக்கும் உட்குறிப்புகளை அறியும் நுண்ணுணர்வுகொண்ட, அப்படைப்புகள் அமைந்திருக்கும் பண்பாட்டு, தரிசனப்பின்புலத்தில் பரிச்சயம் கொண்ட விமர்சகனால் உருவாக்கப்படக்கூடியது.

அப்படிப்பட்ட விமர்சனம் வரும்போது நானே அவற்றை அடையாளப்படுத்தியதுண்டு- உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகத் என்பவர் எழுதிய விமர்சனங்கள். என் படைப்புகளின் தீவிரவாசகனுக்கு அவை வாசிப்பின் மறுபக்கத்தைக் காட்டக்கூடியவை. இவற்றைப்போல அவன் ஏளனத்துடன் சிரித்துவிட்டுக்கடந்துசெல்லக்கூடியவை அல்ல.

ஆனால், இதைவைத்து நாம் எதையும் சொல்லிவிடமுடியாது. திரும்பத்திரும்ப சிற்றிதழ்சூழலில், ஃபேஸ்புக்கில் வசைபாடி புலம்பி எதையாவது மொண்ணையாக எழுதி உழல்பவர்கள் எப்போதும் உண்டு. அதேசமயம் புதிய படைப்புகளுடன் எங்கிருந்தாவது எழுந்து வீரியமான படைப்பாளிகள் முன் வருவார்கள். அவர்களின் வேகமும் மனநிலையும் முற்றிலும் வேறு.

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் கவிதை நிகழ்வில் மனோஜ் குறூர் என்ற மலையாளக் கவிஞர் எழுதிய மரபார்ந்த கவிதைகளை நான் கடுமையாக விமர்சனம் செய்தேன். அவர் அவற்றைமுன்வைத்து வாதிட்டார். நாங்கள் இலக்கிய இதழ்களின் கட்டுரைகள் வழியாக மாறிமாறி விமர்சனம் செய்துகொண்டோம்.

ஆறுமாதம் முன்னர் அவர் எழுதிய புதிய நாவலின் மென்வடிவை எனக்கு அனுப்பியிருந்தார். அப்படி அனுப்பியதில் ஓர் அறைகூவல் இருந்தது. அது உண்மையிலேயே ஒரு முக்கியமான படைப்பு. என் வகையான எழுத்து அல்ல, ஆனால் நான் பயணம்செய்யக்கூடியது அது. நான் அவரிடம் அதைப்பற்றி என் பெருமதிப்பை குறிப்பிட்டுப் பேசினேன். என்னிடமே முன்னுரை எழுதித்தரும்படிக்கோரினார். ஏனென்றால் அது அவர் என் மீது கொண்ட வெற்றி. நான் சொன்ன சொற்களை நானே கடக்கவைத்துவிட்டார். அது அதுவே படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளனின் மனநிலை என்பது.

என் வரையில் அப்படி எழுதவந்த ஒரு முக்கியமான படைப்பாளியைக்கூட அடையாளம் கண்டு சொல்லாமல் இருந்ததில்லை. இன்று முக்கியமானவர்களென கவனம்பெற்றுள்ள அனைவருமே அதில் அடங்குவர்.

*
கூரிய விமர்சனங்கள் உண்மையான படைப்புத்திறன் கொண்டவர்களை ஒருபோதும் புண்படுத்துவதில்லை. அவை அவர்களுக்கு முன் தேர்ந்த வாசகனின் அறைகூவல்களாகவே ஒலிக்கும்

அப்படி அறைகூவலை ஏற்றுக்கொள்ளும் படைப்பாளிகள் வருவார்கள். பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59