‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58

பகுதி 12 : நச்சுமலர்கள் – 3

காந்தாரி தன் வெண்பட்டு இறகுமஞ்சத்தில் எழுந்து அமர்ந்திருக்க அவள் காலடியில் சத்யசேனை அமர்ந்திருந்தாள். சத்யவிரதையும் சுதேஷ்ணையும் சம்ஹிதையும் அருகே தாழ்வான பீடங்களில் அமர்ந்திருக்க, தேஸ்ரவையும், சுஸ்ரவையும், நிகுதியும், சுபையும், தசார்ணையும் சுவர் சாய்ந்து நின்றனர். காலடிகளைக் கேட்டதும் காந்தாரி முகம்தூக்கினாள். சத்யசேனை “யாதவரும் மருகரும்” என அறிவித்தாள். துச்சளை “அன்னையே, யாதவரிடம் தாங்கள் நோயுற்றிருப்பதை சொல்லிவிட்டேன்” என்றாள். “நோயென ஏதுமில்லை, உள்ளம் தளர்ந்தது உடலுக்கு வந்தது” என்ற காந்தாரி “அமர்க யாதவரே” என்றாள்.

இருவெண்பட்டுப்பீடங்கள் இருந்தன. கிருஷ்ணன் சென்று காந்தாரியின் அருகே சேக்கையில் அமர சாத்யகி திகைத்து முகங்களை நோக்கினான். ஆனால் காந்தாரியின் முகம் மலர்ந்துவிட்டது. அவள் தன் வெண்ணிறமான பெரிய கைகளை நீட்டி அவன் கைகளைப்பற்றி பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்து “பாரதவர்ஷத்தில் உன்னை நெஞ்சோடு சேர்த்து முலையூட்டமுடியாது போயிற்றே என ஏங்கும் அன்னையர் பலர். நானும் அதில் ஒருத்தி யாதவனே” என்றாள். கிருஷ்ணன் சிரித்து “இங்கே பலகோடிப் பிறவிகள் எடுத்து அத்தனை அன்னையர் கைகளிலும் தவழ எண்ணியிருக்கிறேன்” என்றான். “மூடா” என்று சிரித்து அவள் அவன் தலையை வருடினாள்.

”நீ சென்றமுறை வந்து உடனே திரும்பிவிட்டாய் என்று சொன்னார்கள். என்னை சந்திக்க அழைத்துவந்திருக்கலாமே என விதுரரிடம் சொன்னேன்… அதன் பின் ஒவ்வொருநாளும் உன்னைப்பற்றிய கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆண்டுகள் செல்லச்செல்ல நீ வளர்ந்துவிடுவாயே என ஏங்கினேன்” என்றாள் காந்தாரி. “இல்லை அன்னையே, வளரவேயில்லை…” என்றான் கிருஷ்ணன். “ஆம், அப்படித்தான் சொன்னார்கள். உனக்கு முதிர்ச்சியே வரவில்லை. வழியெங்கும் பெண்களைப்பார்த்தால் வாய் நிறையும் பற்களுடன் நின்றுவிடுகிறாய் என்று…” அவள் சிரிக்க முகம் சிவந்து குருதி நிறம் கொண்டது.

பதறிய குரலில் கிருஷ்ணன் “அய்யோ, அதெல்லாம் அவதூறு… நான் பெண்களின் நகைகளை மட்டுமே பார்க்கிறேன்” என்றான். “எதற்கு?” என்றாள் காந்தாரி சிரித்தபடி. “துவாரகையில் எந்த நகையை விற்கமுடியும் என்றுதான்.” “சரிதான், பொய்சொல்வதிலும் இன்னும் முதிரவில்லை” என்று சத்யசேனை சிரித்துக்கொண்டே சொன்னாள். பத்து அன்னையரும் காந்தாரியின் அதே முகத்தை அடைந்து சிவந்து சிரித்துக்கொண்டிருப்பதை சாத்யகி கண்டான்.

துச்சளை “அவருக்கு பெண்களிடம் அணியுரை சொல்ல நன்றாகவே தெரிந்திருக்கிறது அன்னையே” என்றாள். “ஆம், அதையும் அறிவேன். நீ சொன்ன அத்தனை அணிச்சொற்களும் இங்கு அனைவருக்கும் தெரியும். அதைக்கேட்ட பெண்கள் எங்கும் அவர்களே அதை பரப்பிவிடுகிறார்கள்” என்றாள் காந்தாரி. “நேற்று அவையில் நான் உன்னையன்றி எவர் பேசியதையும் கவனிக்கவில்லை. நீ மெல்லமெல்ல உன் வளைதடியால் தட்டி மந்தையைக் குவித்து கொண்டுசென்று சேர்ப்பதை உணர்ந்தேன்.” கிருஷ்ணன் “என்ன சொல்கிறீர்கள் அன்னையே? நான் என்ன கண்டேன்?” என்றான். “நீ கன்றோட்டத்தெரிந்த யாதவன்… நான் அதை மட்டும்தானே சொன்னேன்?” என்றாள் காந்தாரி.

”நடந்தது உங்களுக்கு நிறைவளித்ததா அன்னையே? வேறுவழியில்லை. அனைவரும் விரும்பும் தீர்வென்பது பங்கிடுவது மட்டுமே” என்று கிருஷ்ணன் சொன்னான். காந்தாரி “ஆம், வேறுவழியில்லை என நானும் உணர்ந்தேன். என் மைந்தன் அரியணை இன்றி அமையமாட்டான். அவனுள் ஓடும் காந்தாரத்தின் குருதி அத்தகையது. அதற்கென்றே என் இளையோன் இங்கு அமர்ந்திருக்கிறான். அஸ்தினபுரியை அவன் அடைந்தது நன்று” என்றாள். “பாண்டவர்களுக்கு நிகர்ப்பங்கு கிடைப்பதும் நன்றே. என் மைந்தன் பழிசூழாமல் நாடாளமுடியும். தமையனும் இளையோனும் இணைந்தால் பாரதவர்ஷத்தையே வென்று இரு பேரரசுகளை இருவருமே ஆளமுடியும். அந்த எண்ணம் இருவரிலும் திகழ மூதாதையர் அருளவேண்டும்.”

“நன்று சூழ்க!” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆனால் பாஞ்சாலன் மகள் வந்து அஸ்தினபுரியின் அரியணையில் அமர்வாளென்பது எனக்கு அச்சமூட்டுகிறது கண்ணா. அவள் கையிலிருந்து என் மைந்தன் அரியணையை அறக்கொடையென பெறவேண்டும். அது அவன் நெஞ்சில் வேல்பாய்வது போன்றது.” கிருஷ்ணன் ஒன்றும் சொல்லாமல் நோக்கியிருந்தான். “அவள் எப்படி அதை கொடுத்தாலும் அவனால் அந்தப் புண்ணை ஆற்றிக்கொள்ளமுடியாது. அத்துடன் அவளும் அப்படி கனிந்து கொடுப்பவள் அல்ல” என்றாள் காந்தாரி. “அதற்கு என்னசெய்யவேண்டுமென எனக்குத்தெரியவில்லை. ஆனால் என் நெஞ்சு விம்மிக்கொண்டே இருக்கிறது.”

“நீங்கள் துரியோதனரை நேற்று கவனீத்தீர்கள் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஆம், நேற்று அவைமுடிந்ததும் அவன் இடைநாழியில் என்னை கண்டான். அப்போது அவன் குரலில் மகிழ்வு தெரிந்தது. ‘அன்னையே, முடிசூட எந்தையின் ஆணைவந்துவிட்டது. அதுபோதும். முடியை பெருக்கி வையத்தலைமைகொள்வது இனி என் திறன். காணட்டும் புவி’ என்றான். ஆனால் அங்கிருந்து சகுனியை பார்க்கச்சென்றுவிட்டு மீண்டும் இரவில் என்னைக் காணவந்தபோது அவன் குரல் மாறியிருந்தது. சகுனியின் அரண்மனையில் அங்கநாட்டரசனும் இருந்திருக்கிறான்.”

“நான் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டேன், என்ன நிகழ்ந்தது என்று. அவன் சொல்லவில்லை. மணிமுடியை தமையனின் அறக்கொடையாகப் பெற கூசுகிறாயா என்றே கேட்டேன். ஆம், அது கூச்சமளிப்பதே, ஆனால் என் வெற்றியாலும் கொடையாலும் அதை வென்றுசெல்ல என்னால் முடியும் என்றான். பின் என்ன என்றேன். மீண்டும் மீண்டும் ஏதோ சொல்லவந்தான். பின்னர் எழுந்து வெளியேறினான். அவன் சென்றபின்னரே அவன் சொல்லவந்ததென்ன என்று உணர்ந்தேன். அவளை அவனால் ஒருகணமும் நெஞ்சிலிருந்து நீக்கமுடியாது கண்ணா. அவள் அவனுள் சென்றுவிட்ட நஞ்சு.”

“அவர் காதல்கொண்டார் என நினைக்கிறீர்களா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அது காதலல்ல. ஆம், அதை அன்னையென நான் அறிவேன். காதலுக்கு அப்பால் ஒன்றுள்ளது. அது…” என்று குழம்பிய காந்தாரி தன் மேலாடையை இழுத்து தோளிலிடும் அசைவின் வழியாக உறைந்து நின்ற சொற்களை மீட்டுக்கொண்டு “அதை வழிபாடு என்பதே பொருத்தம்” என்றாள். கிருஷ்ணன் அவளை நோக்கியபடி விழி அசையாமல் அமர்ந்திருந்தான். “கண்ணா, மிகமிக அரியதோர் உணர்வு இது. பெண்ணை தாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்று நிகழ்கிறது. அந்த ஆண் ஒரு பெண்ணை வழிபடுகிறான். அவள் காலடிமண்ணையும் போற்றும் பெரும் பணிவை அடைகிறான்” என்றாள் காந்தாரி.

“அது மிக ஆபத்தானது யாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அது புரிந்துகொள்ளப்படாது போகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகலாம்” காந்தாரி தொடர்ந்தாள். நெடுநாட்களாக அவள் எண்ணியிருந்த சொற்களென்றாலும் அவளால் அவற்றை பொருள்திகழ கோத்தெடுக்க முடியவில்லை. “அன்னையின் புறக்கணிப்பும் காதலியின் புறக்கணிப்பும் கொடுநஞ்சாக ஊறக்கூடியவை. அதற்கும் அப்பாலுள்ள இப்பெரும்புறக்கணிப்போ ஆலகாலம்…” மேலும் சொல்ல விழைந்து சொற்களுக்காக தவித்து “அங்கன் அகம் கொண்ட புண் ஆறிவிடும்…” என்றாள்.

“அன்னையே, நானும் அதை அறிவேன். தாய்மைக்குள்ளும் காமம் உள்ளது என்பர் முனிவர். சற்றும் காமம் இன்றி பெண்ணை கண்டுகொண்டவன் அடைவது பெருங்காட்சி ஒன்றை. அவன் மீளமுடியாது.” காந்தாரி அவன் சொற்களால் அதைக்கேட்டதும் அதிர்ச்சி கொண்டு முன்னால் நகர்ந்து அவன் கைகளை தன் கைகளால் பற்றி மீண்டும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றாள். “எளிய பலவற்றை நீங்கள் அறிந்ததில்லை அன்னையே. கூர்மதியாளர்கூட அறியாத இதை மட்டும் அறிந்துவிட்டீர்கள். அது ஏன் என்றும் தெரிகிறது.”

காந்தாரியின் கை தளர கிருஷ்ணனின் கை மெத்தைமேல் விழுந்தது. “உங்கள் மேல் இதே வழிபாட்டுணர்வுகொண்ட ஒருவரை நீங்கள் அறிவீர்கள். உங்கள் இளவல் சகுனி” என்றான் கிருஷ்ணன். அதிர்ந்து உடலில் மெல்லிய விரைப்பு எழ இல்லை என்பது போல தலையாட்டிய காந்தாரி “ஆம்” என்றாள். “என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று அது. நான் எளியபெண். இளமையில் என் பாலைநகரின் ஆற்றல்மிக்கபெண்களில் முதன்மையானவளாக இருந்தேன். ஆனால் இளையோனின் விழிகளில் நான் காணும் என் வடிவம் என்னை அச்சுறுத்துகிறது.”

“உங்களை இவ்விழியிழந்த அரக்கன் தடையுடைத்து வந்து கைப்பற்றிக் கொணர்ந்தபோது மகிழ்ந்தீர்கள். நீங்கள் விழைந்தது சகுனியிடமிருந்து விடுதலையை மட்டுமே. இதோ விழிகளைக் கட்டி அமர்ந்திருப்பதுகூட அதன்பொருட்டே. சித்தத்தால் மட்டுமல்ல விழிகளாலேயே உங்கள் முழு அர்ப்பணிப்பும் திருதராஷ்டிரருக்கு உரியது என்று காட்டுகிறீர்கள். உங்களை செதுக்கி ஆலயமுகப்பில் நிறுத்தப்பட்ட சிலை என ஐயத்துக்கிடமின்றி ஒன்றை மட்டுமே சொல்லும் தோற்றமாக ஆக்கிக்கொண்டீர்கள்.” காந்தாரி தலைகுனிந்து கைகளைக் கோத்து அமர்ந்திருந்தாள். பின் பெருமூச்சுடன் “நானறியேன். நான் எதையும் எண்ணிச்செய்யவில்லை” என்றாள்.

”அதன்பின் உங்கள் மைந்தன் பிறந்தான். அவனைநோக்கி உங்கள் விழியின்மையின் பெருக்கை திசை திருப்பியதும் அதனாலேயே. ஆனால் மெல்ல அறிந்தீர்கள், ஒருபோதும் நீங்கள் மீளப்போவதில்லை என.” காந்தாரி மெல்ல “ஆம், யாதவனே. நேற்று என் மைந்தன் சகுனியைக் கண்டுமீண்டதும் அதையே எண்ணினேன்” என்றாள். “அவன் என் மைந்தனுக்குள் தன்னுள் எரியும் தீராத விடாயை செலுத்தி அனுப்பிவிட்டிருந்தான். என் மைந்தன் எங்கும் அமர அவன் விடமாட்டான்.”

”அன்னையே, உங்கள் இளையோனை வழிபடச்செய்வது எதுவென நீங்கள் அறியவில்லையா?” என்றான் கிருஷ்ணன்.  “எது இப்படி ஒரு கணத்தில் விழிகளைக் கட்டி இருளைத் தேர்வுசெய்யும் உறுதியை உங்களுக்கு அளிக்கிறதோ அது. அன்னையே, சகுனியில் திகழ்வதும் அந்த உறுதியின் மறுவடிவம் அல்லவா? நாற்பதாண்டுகாலம் ஒற்றைநினைப்புடன் அங்கே பகடை கையிலேந்தி அவர் செய்யும் தவமும் இதுவேதானே?” காந்தாரி பெருமூச்சுடன் “ஆம், அவ்வாறே இருக்கலாம். சிந்தித்துப்பார்த்தால் மிகமிக எளியவற்றை பெரிதாக்கிக்கொள்கிறோம் என்று படுகிறது. நம் ஆணவம் பெரிதை விரும்புகிறது. துயரைப்பெருக்கி ஆணவத்தை நிறைவடையச்செய்கிறோம்” என்றாள்.

“துரியோதனர் திரௌபதியிடம் பார்ப்பதும் நிகரான ஒன்றையே” என்றான் கிருஷ்ணன். “யாதவரே, அவளும் என் தமையனைப்போல முற்றிலும் நிகர்த்த தோள்களைக் கொண்டவள் என்கிறார்களே” என்றாள் துச்சளை. கிருஷ்ணன் “சற்று உண்மை. சற்று மிகை. நாம் வாழ்வது சூதர்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்காவியத்தில்…” என்றான். கரியமுகத்தில் வெண்பற்கள் ஒளிர சிரித்து “ஆம், அதுதான் அச்சமாக இருக்கிறது. நானும் என் அன்னையரும் அக்காவியத்தில் எவரென்று இருப்போம்?” என்றாள்.

”நேற்று இங்கே ஒரு சூதன் பாடினான், அவர்களெல்லாம் தேனீக்கள் என. பாரதவர்ஷம் முழுக்க அலைந்து அவர்கள் கொண்டுசென்று தேன்சேர்க்கும் கூடு தெற்கே வியாசவனத்தில் உள்ளது என்று…” கிருஷ்ணன் சிரித்தபடி “நாம் விழைந்து போராடி வென்று தோற்று கண்ணீரும் செந்நீரும் சிந்தி அந்தக்கூட்டை நிறைத்துக்கொண்டிருக்கிறோம். எளிய எண்ணம். ஆனால் அவ்வளவுதான் என நினைக்கையில் ஒரு நிறைவும் அமைதியும் நெஞ்சில் ஏற்படுவதை உணரமுடிகிறது” என்றான்.

காந்தாரி “என் சிறுவனுக்காக நான் அஞ்சுகிறேன் யாதவனே… என்ன நிகழுமென என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை” என்றாள். அவள் உதடுகள் நடுங்குவதை சாத்யகி கண்டான். “என்ன செய்யக்கூடுமென நீ எண்ணுகிறாய்?” கிருஷ்ணன் “அன்னையே, மிக எளிய விடை. வழிபடுவதன் முன் முழுமையாகப் பணிவதை அல்லவா மூதாதையர் காட்டியிருக்கிறார்கள்?” என்றான். காந்தாரி “அது நிகழப்போவதில்லை. என் மைந்தனின் அகம் நிகரற்ற ஆணவத்தால் ஆனது. அதை இழப்பதென்பது அவன் தன் குருதியை இழப்பதுபோல. அவன் எஞ்சமாட்டான்” என்றாள்.

“கற்பூரம் காற்றை அஞ்சுவதுபோல என்று வேதமுடிபில் ஒரு ஒப்புமை உண்டு” என்றான் கிருஷ்ணன். “ஆக, இது நாம் கையாளும் களமே அல்ல. இப்புவியில் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருநாடகத்தின் ஒரு பகுதி. அதை அவ்வாறே விட்டுவிடுவோம்.” காந்தாரி சற்றே சினத்துடன் “அதை நீ எளிதில் சொல்லிவிடலாம். நான் அன்னை. ஒருபோதும் என்னால் விலகியிருக்கமுடியாது” என்றாள். “ஆம், நாங்கள் எங்கள் மைந்தர்களை விட்டு விலகமுடியாது” என்றாள் சத்யசேனை.

சிரித்துக்கொண்டு “அதுவும் இந்தப் பெருநாடகத்தின் பகுதியே” என்றான் கிருஷ்ணன். “நாம் செய்வதற்கென்ன உள்ளது என்று தெரியவில்லை அரசி. நேற்று அரசர் சில ஆணைகளை இட்டார். அது சிறந்தவழியென எனக்கும் பட்டது. அப்பால் என்ன என்று அறியேன்.” காந்தாரி “திரௌபதி நகர்நுழைவதையும் முடிசூடுவதையும் பெருநிகழ்வென கொண்டாடலாகாது. அயல்நாட்டரசர்களும் தூதர்களும் அந்நிகழ்வுக்கு வரவேண்டியதில்லை. குலத்தலைவர் குடிமூத்தார் முன்னிலையில் மிக எளியதோர் அடையாளநிகழ்வாக அது நடந்தால்போதும்” என்றாள்.

“ஆம், அது சிறந்ததே” என்றான் கிருஷ்ணன். காந்தாரி “ஆனால் இதை நான் சொல்லமுடியாது. நான் சொன்னால் என் அரசர் தன் இளையோன்மைந்தருக்குச் செய்யும் இழிவென அதை எண்ணி சினந்தெழுவார். மும்மடங்கு ஒருக்கங்களைச் செய்யவே முயல்வார்” என்றாள். கிருஷ்ணன் ”நான் அவரிடம் சொல்கிறேன் அரசி” என்றான். “அதுவும் பிழையாகலாம். அதை தருமன் தன் கோரிக்கையாக முன்வைக்கவேண்டும். அதை மறுக்கமுடியாதநிலை என் அரசருக்கு வரவேண்டும். தருமனின் ஆணை என்றால் குந்தியும் பாஞ்சாலமகளும் ஒன்றும் சொல்லமுடியாது” என்றாள் காந்தாரி. “அதை நீயே தருமனிடம் சொல்லி ஏற்கவைக்கவேண்டும்.”

“தங்கள் ஆணையை செய்கிறேன் அரசி” என்றான் கிருஷ்ணன். “அவள் மிகுந்து எழுவாளென்றால் அதை தன் செயல்களால் தருமன் முழுமையாக ஈடுகட்டவேண்டும் என அவனிடம் சொல். ஓடு நீக்கப்பட்ட ஆமைபோன்றவன் ஆணவம் கொண்டவன் என்றொரு காந்தாரத்து முதுமொழி உண்டு. சிறுதூசும் முள்ளாகக்கூடும்… என் மைந்தனின் உள்ளம் எனக்குத்தெரிகிறது. ஒன்றும் நிகழாமல் அந்த ஒருநாள் கடந்துசெல்லும் என்றால் நான் அஞ்சுவது நிகழாமலிருக்கும்.” கிருஷ்ணன் பெருமூச்சுடன் “செய்கிறேன்” என்றான்.

துச்சளை “அன்னையே, நீங்கள் செய்வது பிழை. அவ்வாறு திரௌபதி நகர்நுழைவாள் என்றால் அதுவே அவளை மேலும் தருக்கி நிமிரச்செய்யும். அவளுடைய பெருந்தன்மையை நம்புவதே நன்று என நான் நினைக்கிறேன். அவளை அணிவாயிலில் சென்று நான் வரவேற்று கொண்டுவருகிறேன். நகரம் அவளை வாழ்த்தி கொண்டாடட்டும். அவள் அரியணை அமர்ந்து கோலேந்தியபின் முடியை அளிக்கட்டும். அவள் நெஞ்சு நிறைந்து அங்கே கருணை ஊறட்டும்… அது ஒன்றே வழி” என்றாள்.

”நீ சிறியவள். இன்னும் நீ அரியணை எதிலும் அமரவில்லை, மணிமுடி அளிக்கும் மதிமயக்கை உணரவில்லை” என்றாள் காந்தாரி. “நகர்மக்களின் கொண்டாட்டம் என்று சொன்னாய் அல்லவா? அது வெறும் முகக்கொந்தளிப்பும் ஓசைக்கொப்பளிப்பும் அல்ல. அதில் ஓர் உள்ளடக்கம் எப்போதும் உண்டு. அது எந்த ஊமைச்செவிக்கும் புலப்படும்படி வெளிப்படவும் செய்யும்… அதைத்தான் நான் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறேன்.” துச்சளை “இதெல்லாம் வெறும் பேச்சு” என்றாள். கையசைத்து அவளைத் தடுத்து “நீ அறியமாட்டாய். இந்நகரமே பேருருக்கொண்டு எழுந்து அவளை விண்வடிவாக ஆக்கி அவள் காலடிப்பொடியாக என் மைந்தனை போடக்கூடும்” என்றாள் காந்தாரி.

“இந்த நகரே அவள் நகர்நுழைவதை எண்ணி காத்திருக்கிறது என நான் நன்கறிவேன்” என்று கிருஷ்ணனை நோக்கி காந்தாரி தொடர்ந்தாள். “அவர்கள் முன் அவள் மணிமுடிசூடி செங்கோலேந்திச் சென்று நிற்கக்கூடாது. அவள் தேவயானியின் முடியை சூடுவதை சூதர்பாடக்கூடாது. தருமனின் கொடையைப் பாடட்டும். உடன்பிறந்தார் அன்பையும் இணைவையும் போற்றட்டும்….” கிருஷ்ணன் “ஆம், அவ்வண்ணமே நிகழவேண்டும்” என்றான். “அது உன்னிடம் இருக்கிறது யாதவனே. நீ சென்று தருமனை உடன்படச்செய்…” “ஆணை” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான்.

துச்சளை விருப்பின்மை தெரிய தலையை திருப்பிக்கொள்ள மற்ற காந்தாரியர் முகங்களில் ஆறுதல் தெரிந்தது. “யாதவனே, என் நெஞ்சில் உன்னை சந்தித்ததும் நிறைவு ஏற்பட்டது. இப்போது அது முழுமை அடைந்துவிட்டது. உன் கைகளைத் தொடும் பேறெனக்கு வாய்த்தது. புவியெங்கும் உனக்கு அன்னையர் இருப்பார்கள். இங்கு இந்த அந்தப்புரத்து இருளிலும் பத்துபேர் இருக்கிறோம் என்பதை மறவாதே” என்றாள். “என்றும் என் அன்பும் அர்ப்பணமும் தங்களுக்குண்டு அன்னையே. நூற்றுவர் பெருகி பிறிதொருவன் சேர்ந்தான் என்றே எண்ணுங்கள்” என்ற கிருஷ்ணன் எழுந்து அவள் காலடியைத் தொட்டு வணங்கினான். “நலம்திகழ்க!” என அவள் அவனை வாழ்த்தினாள்.

முறைமைச்சொற்கள் சொல்லி விடைபெற்று மீண்டும் வெளிவந்ததும் துச்சளை “அதை செய்யவிருக்கிறீர்களா யாதவரே?” என்றாள். “ஆம், அது ஆணை அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஆனால்…” என அவள் சொல்லத்தொடங்க கிருஷ்ணன் “நான் வீண்வாக்குறுதிகள் அளிப்பதில்லை” என்றான். அவள் பெருமூச்சுடன் அமைதியானாள். “நான் கிளம்புகிறேன். இன்றுமாலை குருகுலம் சென்று கிருபரையும் துரோணரையும் பார்க்கவேண்டும்” என்றான். துச்சளை “அவர்கள் இங்கு வருவது குறைவு. மாணவர்களுடன் இருப்பதையே விழைகிறார்கள்” என்றாள்.

“காந்தாரத்து அன்னையரில் ஒருவர் நோயுற்றிருக்கிறார் என்றார்களே” என்றான் கிருஷ்ணன். “ஆம், இளைய அன்னை சம்படை. பல்லாண்டுகளுக்கு முன் அவரை அணங்கு கொண்டது. அன்றுமுதல் அவ்வண்ணமே அமர்ந்திருக்கிறார்… இளமையில் அவரே பதினொருவரில் பேரழகி என்றனர். தேய்ந்து நிழலுருவாக ஆகிவிட்டார். என் நினைவறிந்த நாள் முதல் அவ்வாறே இருக்கிறார்.”

“நான் அவரை பார்க்க விழைகிறேன்” என்றான் கிருஷ்ணன். துச்சளை “அவர் எவரையும் அடையாளம் காண்பதில்லை. அவர் விழிகளில் திகழும் அணங்கு மானுடரை நோக்க விழைவதில்லை. அவர் பேசி நான் கேட்டதுமில்லை” என்றாள். “அவரைப்பாராமல் நான் செல்லமுடியாது” என்றான் கிருஷ்ணன்.

அவள் மேலும் ஒரு சொல்லில் தயங்கி “வருக!” என அழைத்துச்சென்றாள். நீண்ட இடைநாழியினூடாக நடக்கும்போது ஏன் என்று தெரியாமல் சாத்யகியின் நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கியது. அரியதோ ஒவ்வாததோ ஒன்று நிகழவிருப்பதாக தோன்றியது. அதைத் தவிர்த்து திரும்பிச்செல்லவேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான். அந்த எண்ணம் வேறு எவருடையதோ என அப்பாலிருந்தது. அவன் சென்றுகொண்டுதான் இருந்தான்.

“இந்தச் சாளரத்திலேயே அன்னை அமர்ந்திருக்கிறார்” என்றாள் துச்சளை. “இரவும்பகலும் இங்குதான் இருப்பார். வெளியே பார்த்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றும். ஆனால் வெளியேயும் எதையும் பார்ப்பதில்லை.” அவன் அதன்பின்னரே அவளை கண்டான். இளமஞ்சள் பட்டாடையும் மணிப்பொன் நகைகளும் அணிந்த பெண்ணுருவம். அந்த அணிகளாலேயே அதை பெண்ணென காணமுடிந்தது. சாளரமேடையில் கால்தூக்கி வைத்து அமர்ந்து கைகளை மடிமேல் வைத்தபடி மான்கண் அழிப்பரப்பினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள்.

ஒரு மனித உடல் அத்தனை மெலியமுடியும் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. கூந்தல் உதிர்ந்து மெல்லிய மயிர்ப்பிசிறுகள் கொப்பரைபோன்ற தலையில் பரவியிருந்தன. வற்றி உலர்ந்து சுருங்கிச்சிறிதான முகத்தில் மூக்கு எலும்புப்புடைப்பாக எழுந்திருக்க கண்கள் இரு காய்ந்த சேற்றுக்குழிகளென தெரிந்தன. பற்களில்லாத வாய்க்குள் உதடுகள் உட்புதைந்திருந்தன. கழுத்து புயங்கள் கைகள் என அனைத்துமே முற்றிலும் நீரற்று மரப்பட்டைகள் போல செதில்கொண்ட தோலும் எலும்பும் மட்டுமாக எஞ்சியிருந்தாள்.

முன்னரே துச்சளை கால்தயங்கி நின்றுவிட்டாள். சாத்யகி மேலுமிரு அடி வைத்தபின் திரும்பி துச்சளையை நோக்கியபின் தானும் நின்றான். கிருஷ்ணன் பிறரை உணராதவனாக அவளை நோக்கிச்சென்று இயல்பாக அவளருகே அமர்ந்தான். அவள் அவன் வந்தமர்ந்ததையே அறியவில்லை. அவன் அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு ஏதோ சொன்னான். அவள் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் மெல்லியகுரலில் புன்னகையுடன் பேசிக்கொண்டே அவளுடைய இன்னொரு கையையும் எடுத்து தன் கைகளால் பற்றிக்கொண்டான். அவளிடம் எந்த மாறுதலும் நிகழவில்லை.

சாத்யகி பெருமூச்சுவிட்டான். எதுவும் நிகழாதென்றுதான் உண்மையில் நினைத்தோம் என்றும் நிகழவேண்டுமென்பது வெறும் விழைவே என்றும் தோன்றியது. கிருஷ்ணன் அவளருகே அமர்ந்து மென்சிரிப்புடன் பேசிக்கொண்டே இருந்தான். சாத்யகி கால் தளர்ந்து எங்காவது அமர விழைந்தான். துச்சளை அவனிடம் “அவருக்குள் வாழும் அணங்குக்கு மானுடரை நோக்கும் ஆணை இல்லை” என்றாள். அவளும் எதையேனும் பேசவிழைந்தாள் என அவன் உணர்ந்தான். ஏதோ நிகழுமென அவள் எதிர்பார்த்திருக்கலாம்.

சாத்யகி பொறுமை இழந்தான். எதையும் கேளாதவளிடம் என்னதான் சொல்லிக்கொண்டிருக்கிறான்? அதுவும் இத்தனைநேரம்? அவனை மட்டும் நோக்கினால் அவளிடம் இனிய உரையாடலொன்றில் ஆழ்ந்திருப்பதாகவே தெரிந்தது. அவன் முன்னால் சென்று கிருஷ்ணனிடம் “செல்வோம்” என்று சொன்னான். பின்னர் அவன் அதை செய்யவில்லை என உணர்ந்தான். அவள் விழிகளில் அசைவுகூட இல்லை. பிணத்தின் நிலைவிழிகள். அல்லது ஆழத்தை அறிந்த மீனின் விழிகள்.

மேலும் ஏதோ சொல்லி சிரித்து அவள் கால்களைத் தொட்டு தலையில் சூடி வணங்கியபின் கிருஷ்ணன் எழுந்துகொண்டான். துச்சளையின் உடல் இயல்பாவது நகைகளின் ஒலியாக வெளிப்பட்டது. கிருஷ்ணன் அருகே வந்து “செல்வோம்” என்றான். “நாம் நாளை மறுநாள் பீஷ்மபிதாமகரை பார்க்கவேண்டும். அதன்பின் மீண்டும் பாஞ்சாலம். ஆறாம் நிலாவன்று திரும்பி வருவதாக பார்த்தனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றான். துச்சளை பெருமூச்சுடன் “தங்கள் வருகையால் நிறைவுற்றோம் யாதவரே” என்றாள். “ஆம், இம்முறை பல இனிய சந்திப்புகள்” என்று அவன் சொன்னான்.

தேர்முற்றத்திற்கு வந்ததும் கிருஷ்ணன் “இளையோனே, அந்த வணிகரிடம் இன்னொருமுறை பேசும். அவரது உறவினர்களையும் நான் அழைத்ததாக சொல்லும்… சுங்கக்கணக்குகளை அவரிடம் நானே சொல்லியிருக்கிறேன். பிறிதொருமுறை நம் அமைச்சர்களும் பேசுவார்கள் என்று தெரிவித்துவிடும்” என்றபடி தேரில் ஏறிக்கொண்டான். சாத்யகி அவனருகே அமர்ந்தான். கிருஷ்ணன் “யானைச்சாலை வழியாக செல்க கூர்மரே! நான் யானைகளை காணவிழைகிறேன்” என்றான்.

முந்தைய கட்டுரைகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைமாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)