தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு [ஏழும் இரண்டும் ஒன்பது] துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்‘ என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால் அதை இங்கே அளிக்கிறோம். சுருக்கமாக. ஆத்திகத்துக்குரிய அடாசு மொழி சற்றே நவீனப்படுத்தப்பட்டிருப்பதை ஆத்திக அன்பர்கள் மனமுவந்து மன்னிக்கவேண்டும்.
ஆலயம் என்பது இந்துப்பண்பாட்டின் அடிப்படையான அமைப்பாகும். ஆ+லயம் என்ற சொல்லாடியே ஆலயமானது என்று புராணகதாசாகரம் லட்சுமிகிருஷ்ணமாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கே எடுத்துரைக்கிறோம். ஆ என்று வாய்திறந்து லயித்து நிற்பதற்குரிய இடமென பொருள்படும். இ·து. கோவில் என்றும் சொல்வதுண்டு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அறிவுரை உள்ளதல்லவா? “go with will என்ற ஆங்கிலச் சொல்லாட்சியே அப்படி மருவிற்றென்று சிவநெறிக்காவலர் சிவ.வல.குழ.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் ஓருரையில் குறிப்பிட்டார்கள்.
ஆகவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று. நன்றே செய்க அதுவும் இன்றே செய்க. தீதும் நன்றும் பிறர்தர வாரா. நன்றுக்கும் தீதுக்கும் அ·தே துணை. [நினைவுக்கு வரும் இன்னவையன்ன பிற சொல்லாட்சிகளைச் சேர்த்துக்கொள்க. ஆசிரியர் குழு] ஆலயத்துக்குச் செல்லும்போது செய்யவேண்டிய சமயக்குறிப்புகளை இனி காணலாம்.
குளித்து கும்பிடுதல் நமது மரபு. ஆலயம் சென்று அங்குள்ள திருக்குளத்தில் நீராடி நீறோ மண்ணோ அணிந்து கைகூப்பி பக்தி மேலிட இறைநாமங்களைச் சொல்லியபடி ஆலயம்புகுதல் முறை. சுகாதாரம் கருதி ஆலயக்குளத்தில் நீராடுவதை தவிர்க்கலாமென்பது ஆஸ்திகமண்டலியின் கருத்து. ஆயினும் முறைவழுவலாகாது என்பதனால் வெளியே ரூ.இருபதுக்கு விற்கப்படும் குடிநீர்குப்பி ஒன்றைவாங்கிக் கொண்டு உள்ளே சென்று ஆலயக்குளத்தில் மெல்லமெல்ல வழுக்காமல் காலெடுத்து வைத்து இறங்கி கால்நகங்களை மட்டும் நனைத்து அக்கணமே மேலேறி குடிநீர் குப்பி திறந்து நல்லநீரால் கால்களை கழுவிக்கொள்ளவும். அவ்வாறு கழுவாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பதையே ‘அசுத்தம்செய்யாதீர்’ என்று ஆலய நிர்வாகிகள் அங்கே எழுதிவைத்திருக்கிறார்கள்.
ஆயினும் நம் சடங்குகளைக் கைவிடலாகாது. ஆங்கே பெரிய சாக்குப்பைகளில் வைத்து விற்கப்படும் பொரி சிலநாழி வாங்கி ஆலயக்குளத்தில் பக்தியுடன் கொட்ட வேண்டும். குளத்து மீன்கள் பலவருடம் முன்னரே இறந்துவிட்டிருக்குமென்றாலும் அவற்றின் ஆவிகளுக்கு நாம் தர்ப்பணம் செய்தாக வேண்டியிருக்கிறது. கைவசம் கொண்டுவந்த வீட்டிலுள்ள பழைய பூசனைப்பொருட்களான வாடிய மாலைகள் காகிதப்பூக்கள் எலிப்ப்புழுக்கை கலந்த மிஞ்சிய பொரிசுண்டல்கள் இன்னபிறவற்றையும் ஆலயக்குளத்தில் வீசலாம்.
அதன்பின்னர் நாம் ஆலயமுகப்புக்குள் செல்கிறோம். இங்கே கருங்கல் தரையில் பலவகையான மாந்தர் கால்களை நீட்டியும், குந்தியும், குடும்பமாகவும், குடும்பங்களை வெறித்துப் பார்க்கும் தனியர்களாகவும், பல கோணங்களில் நிரம்பி அமர்ந்திருக்கக் காணலாம். இவர்கள் நடுவே குழந்தைகள் வாழைப்பழம், தேங்காய், பொங்கல், சுண்டல் முதலியவற்றை தின்றும் அள்ளி இறைத்தும் மலசலம் கழித்தும் களித்து விளையாடுகின்றதைப் பார்க்கலாம். இங்குள்ள பெண்கள் சரம்சரமாக பூச்சூடி உரக்கப்பேசி ‘ய்யக்காவ்’ என்று அகவி பிறரை அழைத்து தத்தம் இருப்பை நிறுவிக்கொண்டிருப்பார்கள். இவர்களினூடாக ஐம்புலன்களையும் குவித்து நடந்து உள்ளே செல்வதென்பது ஒரு வகை தியானமாகும்.
நுழையும்போதுள்ள மண்டபங்களில் பெரிய தூண்களில் ஏராளமான கருங்கற்சிலைகள் பல அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். யாளிகளின் குறிகளை பார்க்கும் இளம்பெண்கள் கிளுகிளுத்து சிரித்து தோழிகளை கிள்ளுவதில் தவறில்லையென்றாலும் குலமாதர் தத்தம் கணவர்களை அழுத்தமாக கிள்ளியோ நகம் இல்லாவிட்டால் ஊசியால் குத்தியோ கவன ஈர்ப்பு செய்து பளபளக்கும் உருண்டைமுலைகளில் இருந்து மீட்டு உள்ளே கொண்டுசெல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி இருந்தும் கையெட்டும் உயரத்துச் சிலைகளில் முலைகள் தனி வழவழப்புடன் இருப்பதை ஆராய்ந்த மாதல்ல நாராயணையா கமிட்டி அவற்றில் இடமுலைகள் மேலும் எண்ணைப்பிசுக்குடனிருப்பதை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான தமிழர்கள் வலதுகையர்கள் என்ற முதற்கட்ட முடிவுக்கு வந்திருக்கிறது.
இப்பகுதியின் தூணிடுக்குகளுக்கும் சிற்ப இடைவெளிகளுக்கும் பலவகை பயன்கள் உண்டு. கோயில்பணியாளர்களின் செருப்புகள் மஞ்சள்பைகள் போன்றவற்றை இறுக்கி வைத்துவிட்டு போவதற்கும் வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் பிரசாதப்பொட்டலங்களைப் போடுவதற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். தாம்பூலப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனித்தால் எந்தச்சிலைமீது சுண்ணாம்பு தடவுதல் அங்கே மரபென்பதை அறிந்துகொள்ளலாம்.
கொடிமரத்தை அணுகியதுமே ஆண்கள் கரசரணங்களை அங்குள்ள புழுதித்தரையில் அழுந்தப்பதித்து விழுந்து கும்பிடுதல் நன்று. பெண்கள் முழந்தாளிடலாம். குண்டு மாமிகள் முழந்தாளிடுவது எப்படி என்று தனி கைப்பிரசுரம் எங்களிடம் கிடைக்கும். சில எளிய செய்முறைகள் இதோ. முதலில் மெல்ல சரிந்து இடக்கையை தரையில் ஊன்றவும். அதன் பின் இடது காலை மெல்ல மடித்து பகவானே என்ற கூக்குரலுடன் மெல்லமெல்லச் சரிந்து அதன்பின் வலக்காலையும் மடிக்கவும். பின்பு இரு கைகளையும் தரையில் ஊன்றி தலையை நிலம் சேர்த்து வணங்கும்போது பின்னல் தரையில் வீழ்ந்து பிறரால் மிதிபடாமலிருக்கவும் நந்தியென எண்ணி பிறபக்தர் காதில் குறைகள் சொல்ல வராமலிருக்கவும் கவனம் கொள்ளவும். எழுந்திருப்பது எப்படியானாலும் உங்கள் கையில் இல்லை, காலிலும். கூடவே வலுவான துணை கொண்டு செல்லவும்.
கொடிமரத்தில் இருந்து வலம் வந்து ஆலயபிராகாரத்தை சுற்றிவரல் வேண்டும். மருமகளையும் பக்கத்து வீட்டுக்காரியையும் வைவது, பிறபெண்டிர் நகைகளை நோக்கி நொடிப்பது, சீரியல் விவாதம் போன்றவை இத்தருணத்தில் உகந்தவை. இளம்பெண்கள் தலையையும் கைகளையும் பலமாக ஆட்டி ஆனால் குரல் எழாமல் பேசிக்கொண்டு செல்லலாம். ஆண்கள் செல்போனை காதில் ஒட்டிவைத்து ”ஆ? ஆ? அப்டியா? ஆ? ஏ? ஓ! அதுசரி ! அஹ்ஹஹ்ஹா!!!” என்று கூவியபடி சுற்றிவரலாம். நடுவே கல்மேடாக எதைக் கண்டாலும் கவனம் நில்லாமலேயே கன்னத்தில் போட்டு கும்பிட்டுச் செல்லவேண்டும், சற்று பழகினால் தண்டுவடமே இதைச்செய்ய ஆரம்பித்துவிடும்.
சிவன் கோயிலில் இடப்பக்கம் சண்டிகேஸ்வரர் சன்னிதி கோயில் கருவறைச்சுவரை நோக்கி நெருக்கமாக இருக்கும். உள்ளேசெல்லும்போது ஆப்புபோல அவ்விடைவெளியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கும் என்பதனால் எடையர்கள் நின்றுவிடுதல் நன்று. சண்டிகேஸ்வரரை கைதட்டிக் கும்பிடுதல் வேண்டும்–நம்முடைய கையை. அது ஆட்டோ ரிக்ஷாவைக் கூப்பிடுதலாகவும் அமையலாகாது.பொதுக்கூட்டத்தில் தட்டுவதாகவும் அமையலாகாது.நடுவாந்தரமாக மென்மையாக அமையலாம். மிக்சர் பொரி சாப்பிட்டுவிட்டு கைகளை தட்டுவது போல.
அர்த்தமண்டபத்தில் பல வகையான சிலைகள். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான நோக்கம் உண்டு. சில சிலைகளின் மீது மிஞ்சிய குங்குமம் விபூதியை நாம் போடவேண்டும். சில சிலைகள் மீது வேட்டி, புடவை நுனிகளை பிய்த்து நூலைப்போட வேண்டும். சில சிலகளைப் பிடித்துக்கொண்டு எம்பி கருவறையைப் பார்க்கலாம். சிலசிலைகள் மீது நாம் கொண்டுபோகும் சிறு பைகளை தொங்கவிடலாம். அவற்றுக்கான அடையாளங்கள் அச்சிலைகள் இருப்பதை அவதானித்து அவற்றைச் செய்தல் நலம். புதுவேட்டி, புதுப்புடவை என்பதற்காக உள்ளாடைகளை வெளியே எடுத்து நூல் பிய்ப்பது மாண்பல்ல.
கோயில்கருவறைக்கு இருபக்கமும் இரு பெரும் சிலைகளைக் காணலாம். இவை துவாரபாலகர்கள் என்று சொல்லப்படுகின்றன. ‘ஒருரூபாய்’ என்று ஒரு சிலையும் ‘உள்ளே கொடுங்கள்’ என்று இன்னொரு சிலையும் கைகாட்டி மிரட்டி உறுத்து நோக்கி நம்மிடம் சொல்கின்றன. உள்ளே அர்ச்சகர்கள் இருபபர்கள். இவர்கள் கட்டுக்குடுமியை தளர்வாக கட்டி தோளில் தவிட்டுநிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ஒரு நூல் அணிந்திருப்பார்கள். இவர்களை நூல்கள் நூலோர் என்று சொல்கையில் அவர்கள் தங்களை மேலோர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பத்துநாள் தாடி, காவிப்பல், கைதூக்கி அக்குள் சொறியும் பழக்கம், உடம்பெங்கும் தேமல் போன்றவை இவர்களின் தோற்ற இலக்கணங்கள்.சிவாச்சாரியார்களுக்கு பூச்சுத்தேமலும் பட்டர்களுக்கு பட்டைத்தேமலும் காணப்படும்.
கருவறைக்கு நேரெதிராக இருபக்கமும் இரு எவர்சில்வர் குழாய்கள் மாட்டப்பட்டு இடம் பிரிக்கப்பட்டிருக்கும். இறைச்சன்னிதி முன் பெண்டிரின் கற்பு காப்பாற்றவேண்டுமென்பதே நோக்கம். பெண்டிரை ஆண்கள் நேர்நின்று நோக்கும் வசதிக்கெனவும் ஆகமக்குறிப்பு உண்டு. கருவறைக்குள் இருட்டு நிறைந்திருக்கும். சிவாலயங்களில் தாழ்வான சிவலிங்கம் காணப்படும். அதனைச் சுற்றி வெள்ளியாலான வட்டம் அமைந்திருக்கும். இருபக்கமும் விளக்குகள் தொங்கி ஆடும். வைணவ ஆலயங்களில் கரியசிலைகள் நின்றோ படுத்தோ இருக்கையில் முன்னால் வெண்கலச்சிலைகள் அலங்காரங்களுடன் இருக்கும். அவையே கும்பிடுவதற்குரியவை. அவற்றைப்பற்றிய விவரணைகளுக்குள் செல்ல இங்கே இடமில்லை.
கருவறைக்குள் புகுதல் ஆகமமுறைப்படி வகுக்கப்பட்டுள்ளது. நூலோர் தவிர எலி, கரப்பாம்பூச்சி, பாம்பு, பல்லி, பூரான் போன்றவை உள்ளே அனுமதிக்கப்படலாம் எனினும் பெருச்சாளியே முதன்மையானது. பறப்பனவற்றில் வௌவாலுக்கு முதலிடம். இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல்வேண்டும். சாமிமீது கரப்பாம்பூச்சி ஊர்ந்து ஏறும்போது அங்கே கவனம் திரும்புதல் கூடாது. ”அம்மா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா பாத்தியா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா”என்று கத்தி நம் புடவையைபிடித்திழுக்கும் சிறு குழந்தைகளை மண்டையில் குட்டி அழச்செய்து வாயடைய வைக்க ஆகம அனுமதி உண்டு.
பொதுவாகவே குழந்தைகளை ஆலயங்களில் கண்டிப்பாக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தடுப்புக் கம்பிகளில் ஏறி விளையாடுதல், சக குழந்தைகளை நோக்கி உதடுகளைக் கோட்டிக் காட்டுதல், கையில் உள்ள பொருட்களை உண்டியல் துளையில் போடுதல், நந்தியை அடையாளம் தெரியாமல் ”பண்ணி பாத்தியா ப்ப்ப்பண்ணி படுத்திருக்கு” என்று சொல்லி சுட்டிக்காட்டுதல் போன்றவை மன்னிக்கப்படலாமென்றாலும் சயனப்பெருமாளை நோக்கி ”சாமிக்கு ஜொரமா? படுத்தே கெடக்கு?” என்றும், நடராசரைப்பார்த்து ”இந்த சாமிக்கு காலிலே முள்ளு குத்திச்சு ..பாவம்” என்றும் சொல்லும் குழந்தைகள் ஆகமவிதிகளை மீறுகின்றன என்று உணரல் வேண்டும். குழந்தைகளை கட்டுப்படுத்த செவி என்ற உறுப்பை உருவாக்கிய வாஸ்துதேவனை நாம் இங்கே நினைவில் கொண்டு வழுத்துவோமாக.
அர்ச்சகர் ஒரு பெரிய தட்டில் கற்பூரச்சுடர், பூக்கள் போன்றவற்றுடன் வருவதைக் கண்டு உடலில் உள்ள எல்லா சட்டைப்பைகளுக்குள்ளும் கையை விட்டு துழாவ ஆரம்பித்தல் பிழை. கோடுபோட்ட அண்டர்வேரை வெளியே எடுத்து பணம் எடுப்பது பாவம். பெண்கள் முந்தானை விலக்கி ஜாக்கெட்டுக்குள் இருந்து எடுப்பதில் பிழையில்லை.
எனினும் முன்னரே சில்லறை மாற்றி வைத்தல் நன்று. போடுவது ஒருரூபாய்க்கு குறைவல்ல என்று உறுதிசெய்யவே அவர் அவ்விளக்கை வைத்திருக்கிறார் என்றும் பேருந்து நடத்துனர் சீட்டு அளிப்பதுபோல மலர் அளிக்கிறார் என்றும் எண்ணற்க. பெருமாள் ஆலயங்களில் அளிக்கப்படும் துளசி தீர்த்தத்தை உதடுகளின் வைத்து உடனே எடுத்துவிடுதல் உடலாரோக்கியத்துக்கு நன்று. அமீபாசுரன் தூணிலும் துரும்பிலும் இருக்கும் மாயாவியென்க. கர்ப்பூரச்சுடரை தொட்டு கும்பிடும்போது அணைத்து வசைபெறல் உகந்ததல்ல.
இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல் வேண்டும்.ஆகவே கையில் உள்ள குப்பைகளை எங்குபோடுவதென்று அலைமோதலாகாது. அங்கேயே அபப்டியே போட்டுவிடுதல் நலம். அப்போது நினைவுக்கு வந்த பக்திப்பாடல்களை முன்னால் நிற்பவரின் செவி அதிரும்படி கதறுவது நெறியாகும். வரிகள் தெரியாதவர்கள் சிவசிவா என்றோ சம்போ மகாதேவா என்றோ நாராயணா பெருமாளே என்றோ கூப்பாடு போடலாம்.
கோயிலுக்கு நாம் என்ன செய்தாலும் அதை சாமி அறிந்து கொள்வதுடன் அவர் மறக்காமலும் இருக்க வேண்டும். ஆகவே நாம் அளிக்கும் பொருட்களில் நம் பெயரை குறித்து வைக்க வேண்டும். ஏழு ரூபாய் குண்டுபல்ப் வாங்கிக் கொடுத்தாலும் கூட ‘பல்ப் சுப . வல. அருணாச்சலம் செட்டியார் வகையறா உபயம்’ என்று எழுதி வைப்பது நல்லது. கோயிலை அத்தனை பெரிதாகக் கட்டிய பாண்டியர்களும் சோழர்களும் எழுதி வைக்காத காரணத்தால் எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் பார்த்தீர்கள் அல்லவா?
கருவறைக்கு முன் நாம் குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும். ”மஞ்சூ அம்மா கையை புடிச்சுக்கோ…டேய் ராகவ், தண்டக்கருமாந்தரமே எங்க போற…ஏண்டி அவனை புடிச்சுக்கச் சொன்னா அங்க என்ன செய்து எழவெடுக்கிறே” என்று கூவி நிலைமையை நம் கட்டுக்குள் கொண்டுவரலாம். ”வந்து தொலையேண்டி சனியனே”என்று மனைவியை அழைத்து அடுத்த சன்னிதிக்குச் செல்வது தொல் தமிழ் மரபு
மிஞ்சிய விபூதிகுங்குமத்தை சிலைமீது கொட்டிவிட்டு வெளியே செல்லும்போதே பேசி நிறுத்திய மிச்சத்தை தொடரலாம். வெளியே வெவ்வேறு இடங்களில் பலவகையான நூலோர் நின்று பலவகையான வழிபாடுகளைச் சொல்லி நம்மை ஈர்ப்பதைக் காணலாம். இவ்வாறு ஆலயங்களில் நாள்தோறும் புதுப்புது வழிபாட்டுமுறைகள் உருவாகி வருகின்றன. அவற்றை கணக்கிலெடுத்து ஆகமங்களை திருத்தியமைப்பதறகாக கமிட்டி ஒன்று செயல்படுகிறது. சராசரியாக நாள்தோறும் பதினேழு புதிய சடங்குகள் உருவாகி வருகின்றன என்பது கணக்கு. சிலவற்றை ஈண்டு பட்டியலிடுவாம்
ஆஞ்சனேயருக்கு வடைமாலை சார்த்துதல். காகிதத்தில் ராமஜெயம் எழுதி மாலையாகக் கட்டி அவர் கழுத்திலணிவித்தல். ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட் போன்றவையும் ஆகலாம் என்றானபின் கோடிராமநாமம் வழக்கமாக உள்ளது. நாநூறுகோடி ராமநாமத்தை சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் அச்செடுத்து சமர்ப்பிக்கும் ஒரு வேள்விகூட இப்போது நிகழ்ந்தது. நிறைய அனுமன்கள் தேவைபப்டுவதனால் சில இடங்களில் சுக்ரீவன், வாலி, அங்கதன் போன்ற சிலைகளுக்கும் இதேவழிபாடு செய்யப்படுகிறது.
காலபைரவன் காளி போன்ற சிலைகள் மீது வெண்ணையை ‘பொச்சக்’ என்று தூக்கி வீசுவது. அதே வெண்ணை வழித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருட்டி விற்கப்படுவதால் நாற்றம் குமட்டும் என்பதனால் கையில் வாங்கியதுமே சிலையை நோக்கி ஓடுவோர் முந்தையோர் இட்ட வெண்ணையில் வழுக்கி விழுதல் நிகழ்வதுண்டு. பெருமாள் சிலைகளுக்கு மேலே சந்தனத்தை வீசுவதும் பிள்ளையார் மீது நாணயங்களை வீசுவதும் காணப்படுகிறது. நெல்லைமாவட்டத்தில் ஒரு ஆலயத்தில் ஆனாய நாயனார் மீது செல்பேசியை வீசும் மரபு இருப்பதாகச் சொல்லபப்டுகிறது. ஆனால் குறிபார்ப்பதற்காக பலமுறை பொருட்களை சாமி முன்பு முன்னும் பின்னும் ஆட்டுவதும் ஒரு கண்ணைமூடிக்கொள்வதும் சம்பிரதாய விரோதமாகும்.
முஞ்சூறு சிலைகளுக்கு பூசை செய்து எலித்தொல்லை நீங்கப்பெறுதல். கோயில் சுவர்களில் உள்ள பல்லிசிலைகளுக்கு குங்குமம் சார்த்தி பூசை செய்தல். இதனால் பல்லிவிழுந்த தோஷம் நீங்கும் என்று புது ஐதீகம். ஒரு கோயிலில் தேள்கடித்த தோஷம் தீர அங்கே தேள்சிலைக்கு வெண்னைசாத்தும் வழக்கம் சூடுபிடித்தபோது ஆய்வுக்குழு சென்று நோக்கி அது தேளல்ல பத்து கை கொண்ட ராவணனே என்று நிறுவியபோது பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அந்த நிரூபணம் கைவிடப்பட்டது.
மூலமூர்த்திக்கு அபிடேகம் செய்த எண்ணையை ஒரு குழியில் சேமித்து அந்த எண்ணையை அள்ளி நல்மருந்தென வணிகம்செய்தல். எண்ணைத்தேவை அதிகரிக்க அதிகரிக்க வடை மற்றும் அதிரசம் சுட்ட எண்ணையும் அதில் கலக்கப்பட்டது. கன்னங்கரேலென இருப்பதனால் அதை குரூடாயில் என்று இந்திய எண்ணை சுத்திகரிப்பகத்துக்கு சிலர் செய்த புகார் தவறானது.
கோயில் கிணற்றில் சில்லறைகளை வீசுவது முறையென்றாலும் வீட்டிலெஞ்சிய செல்லாத சில்லறைகளை கொண்டுவந்து போடவேண்டிய இடமென அவ்விடத்தை எண்ணுதல் முறையன்று. பொதுவாக மூலச்சிலை அன்றி அத்தனை சிலைகளை நோக்கியும் சில்லரைகளை வீசியெறியலாம். திருப்பி நம்மை சாமி பணத்தால் அடிப்பார் என்பது ஆகம விதி. அதே மாதிரி சில்லறையால்தான் அடிக்கிறார், நோட்டைக் காணோமே என்றால் அது அவரவர் விதி.
செவிசாய்த்த நந்தியின் காதில் புருஷனைப்பற்றிய குறைகளைச் சொல்லலாம் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒரு காதின் துளை வழியாக குச்சிவிட்டால் மறுகாதில் வெளிவரும் யாளியின் காதில் சொல்வது கணவனிடம் பேசும் இன்பத்தை சில பெண்டிருக்கு அளிப்பதனால் அதுவும் இப்போது மரபாகி வருகிறது. அந்த யாளி தன் வாய்க்குள் துப்பவோ விழுங்கவோ முடியாத கல்லுருளையுடன் நிற்குமென்றால் மேலும் விரும்பப்படுகிறது.
சிற்பக்கலையை ரசிப்பதற்கான எளியவழிகள் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளன. தூண்களை சிறு கல்லால் தட்டிப்பார்த்து ஏழிசைக் கற்கள் என்று சொல்வது பல இடங்களில் உண்டென்றாலும் சில இடங்களில் நக்கிப்பார்த்து நவரசத்தூண்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை இன்னும் ஆகமக் கமிட்டி அங்கீகரிக்கவில்லை. பொதுவாக சிற்பங்களை கொட்டியும் தட்டியும் பார்த்து நல்ல ஓசை வரக்கூடிய சிற்பமெ சிறந்தது என்ற முடிவுக்கு வருதல் எளிய வழி.
இதைத்தவிர அர்ச்சனை சார்ந்த சில புதிய சடங்குகளும் உள்ளன. சிவலிங்கத்துக்கு அழுக்குத் துண்டால் இடைக்கச்சை கட்டி விடுதல், கல்லிலேயே அலங்கார உடையணிந்த அம்மனுக்கு அதற்குமேல் நாலரை ரூபாய் சீட்டிப்பாவாடையை எண்ணைபிசுக்குடன் கட்டிவிடுதல், கால்தூக்கி நின்றாடும் ஆடவல்லானுக்கு பஞ்சக்கச்சம் கட்டுதல், போர்கோலம் கொண்ட வீரபத்ரனுக்கு கோவணம் கட்டிவிடுதல் போன்றவை இப்போது பரவலாக கடைப்பிடிக்கப்படுகின்றன. திருவிடைநல்லூர் பக்கம் ஒரு கோயில்யானைக்கு ஜட்டி தைத்துபோட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவை ஆராயப்பட்டு முறைப்படி ஆகமங்களில் சேர்க்கப்படும்.
ஆகமம் என்பது மாறாத விதி அல்ல. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பதைப்போலவேதான் இதுவும். ‘Ah! Come! Come! ” என்ற சொல்லில் இருந்தே ஆகமம் வந்தது என்பதை தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளையவர்கள் ஒரு மேடையிலே அழகுற விளக்கினார் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.’நாலுபேருக்கு நல்லது செஞ்சா தப்பேயில்லை’ என்று சைதாபேட்டை பாலகுமாரசுவாமிகள் அருளிச்செய்ததும் நினைக்கற்பாலது.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 28, 2008