அண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)

”பூமியில் பூத உடலோடு இருக்கும்வரை இருநிலை உண்டு. பிரபஞ்சமே இருத்தல் இல்லாமலிருத்தல் என்ற இருநிலைகளில் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? அனுபவ உலகமே அங்கிருந்துதான் துவங்குகிறது. எனினும், இருநிலையின் பரஸ்பரப் போராட்டம் தேவையில்லை குழந்தை. இந்த இருநிலையானது நம் இருப்பின் அடிப்படையில் நாமே கற்பிதம் செய்து கொள்ளும் சாமானிய சாத்தியம் மட்டுமே. நம்மைத் தாண்டிய பரமார்த்திக நிலையில் எல்லாம் ஒன்றுதான். ஒன்றின் பலபக்கங்கள்தான் இவை எல்லாம்.”
(பிங்கலனின் கலக்கம் குறித்து மகாபிரபு)

அன்பு ஜெயமோகன்,

மனிதன் என்பவன் உடலாலும், உயிராலும் ஆனவன். உள்ளம்(மனம்) அவனுக்கான சிறப்புத் தகுதி. அதுவே அவனின் உடலையும், உயிரையும் அவனுக்குக் காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியும் புலன்களால் பெறும் அனுபவங்களைக் கண்ணுக்குப் புலப்படாத மனமே உணர்கிறது. மனம் உணர்வதையே தான் உணர்வதாய் நாம் நம்புகிறோம். அவ்வுணர்வே நம் வாழ்வையும் அடையாளப்படுத்துகிறது. வாழ்வில் நேரும் அல்லது எதிர்கொள்ளும் சம்பவங்களைக் குறித்த பன்முகமான சித்திரங்களை அளிப்பதும் மனமே. அதன் வழியாகவே நம் இருப்பை உணரவும், நமக்கான உலகை வரையறுக்கவும் முயல்கிறோம். அருவமான மனதின் இயக்கமே உருவமான உடலுக்கு அடிப்படையாக இருக்கிறது. பொதுவாகப் பார்த்தால் உடலாகத் தெரியும் நாம், நுட்பமாகப் பார்க்கும்போது மனமாக இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கும்போது உயிராக மட்டும் இருக்கிறோம்.

மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில் உறுதியுடன் இருக்கும் நமக்கு மனதின் ஒழுங்கின்மை பயத்தைத் தருகிறது. அதாவது, தெளிவற்ற தொடர் எண்ணங்களால் நம்மை அலைக்கழிப்பதையே ஒழுங்கின்மை எனச் சொல்கிறேன். ஒழுங்கு எனும் வார்த்தையை புனித அர்த்தத்தில் நான் கையாளவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டி இருக்கிறது. நாம் எண்ணத்துணியாத ஒன்றைக் கூட நம் நினைவுக்குக் கூட்டி வரும்போது மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கிறதா எனும் கேள்வி தானாகவே உதித்து விடுகிறது. நம் எல்லாச் சிக்கல்ல்களுக்கும் மனமே காரணம் எனச் சமயங்கள் வலியுறுத்துவதும் நம்மைப் பயமுறுத்துகின்றன. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனும் அகத்தியரின் பாடலில் அச்செய்தியே தொக்கி நிற்கிறது. மனதைச் செம்மைப்படுத்திவிட முடியும் என்றால் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். சில பயிற்சிகள் மூலம் மனதைச் சீரமைத்து விடலாம் எனத் தொடர்ந்து சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மை அதுதானா என்றால், நிச்சயம் இல்லை. மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தோற்றமளிக்கும் மாயமான். மான் போலத்தெரிகிறது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. அதற்காக மான் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று சொல்லிவிட முடியுமா? முடியாது. அதுதான் மாயமானுக்கான இலக்கணம்.

மனதைப் பற்றிப் பேசும்போது மனதின் இயல்பைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. நம்மால் மனதின் இயல்பை உள்ளவாறே விளங்கிக்கொள்ள இயலும் என யார்சொன்னாலும் அது அறிவீனமாகவே இருக்கும். புரிதலுக்காக, மனதை எண்ணங்களின் தொகுப்பெனும் அமைப்பாகக் கொள்வோம். உண்மையாகவே மனமானது எண்ணங்களின் தொகுப்பாக இருப்பின் அதனுள் இருக்கும் எண்ணங்களை மட்டுமே நமக்குக் காட்டும். அப்போது நமக்கு அதிர்ச்சியோ, பயமோ ஏற்படாது. ஏனென்றால், மனமெனும் அமைப்புக்குள் இருக்கும் எண்ணங்களை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். இங்கு சிக்கல் என்னவென்றால் அதற்குள் இல்லாத புதிதான எண்ணங்களும் மின்னிச் செல்வதே. அப்படியானால் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாக இல்லையா? நிச்சயம் இல்லை. அது எண்ணங்களின் தற்காலிக இருப்பிடம். அவ்விடத்திற்குள் நுழையும் எல்லா எண்ணங்களும் அங்கு தங்கி விடுவதில்லை. தொடர்ந்து நினைவுகொள்ளப்படும் எண்ணங்களே ஓரளவு நிலைக்கின்றன. மற்றபடி, உள்வரும் எண்ணங்களைத் தொடர்ந்து நிரப்பிக்கொண்டிருக்கும் கொள்கலனாக மனம் இல்லை. அப்படி மட்டும் மனம் இருந்திருப்பின் நம்மால் வாழவே இயலாது. கடந்தகாலத்தின் துயரங்களை மனம் அப்படியே தக்க வைத்திருப்பின் யோசித்துப் பாருங்கள். நிகழ்காலத்தை நம்மால் வாழவே முடியாது. ஆக, எண்ணங்கள் வந்து போகுமிடமாக மனதைக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

எண்ணங்களே அனைத்துக்கும் அடிப்படை என்பதைப் புரிந்துகொண்டவுடன் நம் அறிவு நிறைவடைந்து விடாது. எண்ணங்களுக்கு யார் காரணம் அல்லது எண்ணங்களின் மூலம் எது எனும் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள அறிவு தயாராகிவிடும். உண்மையைச் சொன்னால் அக்கேள்விக்கான பதிலை நாம் கண்டடைந்துவிடவே முடியாது. வேண்டுமானால் சூழலுக்குத் தக்கவாறு யூகிக்கலாம். அதுவும் ஒருகட்டம் வரையிலுமே நம்மைத் திருப்திப்படுத்தும். அப்படியானால் எண்ணங்களைக் கண்டறியவும், அவற்றைச் சீர்படுத்தவும் நம்மால் முடியாதா? நிச்சயம் முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் ஒன்றுதான். நமக்குள் நுழையும் எண்ணங்களில் எதைத்தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை மட்டும் முடிவு செய்யலாம். மற்றபடி, நம்மைப் பற்றிய அடையாளத்தை முன்வைத்து நாம் இப்படி யோசித்து விட்டோமே எனப் பதறுவது முட்டாள்தனமாகவே இருக்கும்.

எண்ணங்களை நாம் இரண்டு வடிவங்களில்(அடையாளங்களில்) பார்க்கிறோம். ஒன்று நல்ல எண்ணம், மற்றொன்று கெட்ட எண்ணம். உண்மையில் அப்படியான இரண்டுவித எண்ணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. இருப்பது ஒரு எண்ணம் மட்டுமே. அதை இரண்டு கோணங்களில் நாம் பார்க்கிறோம். அவ்வளவே. காட்டாக ஒன்றைச் சொல்லலாம். அரசன் சிபியிடம் புறாவும், கழுகுவும் உதவி கேட்டு வருகின்றன. புறாவுக்கு உதவினால் அவன் கழுகுக்கு விரோதியாகி விடுவான். கழுக்குக்கு உதவினாலோ புறாவுக்கு எதிரியாகி விடுவான். ஆக, எப்படி இருந்தாலும் அவன் யாருக்காவது எதிரியாகமால் ஒரு செயலைச் செய்ய முடியாது. இரண்டுக்குமே உதவ நினைப்பது எதார்த்தத்தில் மடத்தனமாகவே இருக்கும். ஆக, நாம் நல்ல எண்ணம் என நினைப்பது பிறிதொருவருக்கு கெட்ட எண்ணமாகத் தோன்றலாம். அவர் கெட்ட எண்ணம் எனச் சொல்வது நமக்கு நல்ல எண்ணமாகத் தோன்றலாம். எப்படி என்றால், ”புலியிடமிருந்து மானைக் காப்பது அறம்” என்று சொல்வதும் “புலியிடமிருந்து மானைக் காப்பது அறத்துக்கு முரணான செயல்” எனச் சொல்வதும் இரண்டு எண்ணங்கள் எனும் வகையில் ஆகச்ச்சரியானவையே. முதல் எண்ணத்தை நல்ல எண்ணம் என்றும், இரண்டாவது எண்ணத்தைக் கெட்டது என்றும் நாம் பாகுபடுத்திப் பொதுமைப்படுத்தும்போது சிக்கல் வந்துவிடுகிறது. அந்தச் சிக்கலின் மாயவலைக்குள் அகப்பட்டுக்கொண்டு நாம் அல்லல்படுகிறோம். உடனே, நாம் நம் அலைக்கழிப்பிலிருந்து விடுதலை பெற புறத்தில் சொல்லப்படும் ஏதாவது கருத்தியலுக்குள் நம்மைத் திணித்துக்கொண்டு அதன் நகல்களாகி விடுகிறோம். எப்பேர்ப்பட்ட அபத்தம்?

எண்ணம் எதுவாய் இருந்தாலும் அதைத் தக்க வைப்பதையும், தவிர்ப்பதையும் நாமே முடிவு செய்ய வேண்டும். அதுவே எண்ணங்களை எதிர்கொள்ளும் வழிமுறை. புறக்கருத்தியல்கள் ஓரளவே நமக்குப் பயன்படும். அவை நமக்கு உத்தேச வரைபடங்களே தவிர உண்மையான வழிகளன்று. எண்ணங்களைப் பொறுத்த அளவில் நாம் அதிகத் தீவிரம் காட்டுவது பேராபத்தானது. எண்ணங்கள் வருவதையும் போவதையும் சாட்சியாக நின்று கவனிக்கச் சொல்லும் ஓஷோவின் சிந்தனையை நுட்பமாகப் பாராமல் ‘சாட்சி’ பாவத்தை நம்மால் விளங்கிக்கொள்ளவே இயலாது.

சாட்சி பாவனைக்கு ஒருவன் தயாராக தவம் இருக்க வேண்டாம், கடினமான யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம், தத்துவக்கருத்துகளை ஊன்றிப்படிக்க வேண்டாம், கோயில் கோயிலாகச் செல்ல வேண்டாம், குறிப்பிட்ட குருவிடம் தீட்சை பெற வேண்டா. கொஞ்சம் அவனின் அகத்தில் நுழைந்து ’நான் யார்’ எனும் விசாரணையை மேற்கொண்டால் போதும். அக்கேள்வி அவனின் அடையாளங்களில் இருந்து முதலில் அவனை விடுவித்து பிற்பாடு அவனிலிருந்தே அவனை விடுவித்து விடும். ‘நான் யார்’ எனும் ஆய்வைத் துவங்கும்போது பிண்டமும், அண்டமுமாக இருக்கும் அண்டம் ஒருகட்டத்தில் அண்டமாக மட்டுமே காட்சியளிக்கும் அற்புதத்தை நிகழ்த்தும். அவ்வற்புதம் குறித்தான அனுபவங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். என்றாலும் அவ்வற்புதத்தின் வேராய் இருப்பது ’பன்மை ஒருமையாக மாறி நிற்கும்’ காட்சியே. இங்கும் அறிவு நிறைவடைந்துவிடாது. அண்டத்தின் இயல்பான ஒருமையை உணர்ந்தாலும் பிண்டமாகிய தன் இயல்பான இருமை அல்லது பன்மையிலிருந்து வெளிவந்துவிட முடியுமா எனக் கேட்கும். நல்ல கேள்விதான். எங்கும் நம் இயல்பிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என நாம் பேசவே இல்லை. நம் இயல்பு என நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் இருமை அல்லது பன்மைகளின் பாதிப்பிலிருந்து விடுபட முயன்றால் போதும். அதற்கான முயற்சியை இயல்பாகத் தூண்டுவதே ‘நான் யார்’ எனும் கேள்வியின் வழியாக நாம் பெறும் அனுபவம்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55
அடுத்த கட்டுரைகுந்தவை பீபி