இந்தமுறை பருவமழைப்பயணம் கொஞ்சம் பெரிய நண்பர் படையுடன் ஆரம்பிக்கிறது. பல நண்பர்களை தவிர்த்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவது கடினமாக் இருந்தது. கொஞ்சம் போனால் ஜக்கி வாசுதேவ் போல ஆன்மீகப்பயணங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்திவிடுவீர்கள் என்று ஒரு நண்பர் கிண்டல் செய்தார்.
ஜூலை பதினைந்து பதினாறும் ஒரு மலையாள இயக்குநருடன் சென்றது. சீனிவாசன் நடிக்க ஒரு மலையாளப்படம் பற்றி ஆலோசனை. மதுபால் என்ற அந்த இயக்குநர் மலையாளத்தின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘தலப்பாவு’ என்ற படத்தை இயக்கியவர். அவரே எழுத்தாளர், கவிஞர். ஆனால் படத்துக்கு இயக்குநரே எழுதக்கூடாது என்ற கேரள மரபை கடைப்பிடிப்பவர். தலைப்பாவுக்கு பாபு ஜனார்த்தனன் திரைக்கதை எழுதி நான்கு விருதுகள் பெற்றிருந்தார்
தென்குமரி பின்னணியில் நான் எழுதிய சில அனுபவக்கதைகளை கொண்டு திரைக்கதை அமைப்பதாக இப்போதைக்கு திட்டம். சீனிவானுடன் விரிவான விவாதம் முடிந்தபின்னரே கதை முடிவாகும். மலையாளத்தில் இடைநிலை, கலைப் படங்களுக்கு எழுதவேண்டுமென்பது என் கனவுகளில் ஒன்று. அதன் சவால்களே வேறு. வணிகச் சமரசங்கள் தேவை இல்லை.
அங்கிருந்து தேனிக்கு வந்தேன். தேனிக்கு ஈரோடு கிருஷ்ணனும் கார்த்தியும் விஜயராகவனும் வந்தார்கள். அரங்கசாமியும் செல்வேந்திரனும் திருப்பூர் சந்திரகுமாருடன் கோவையில் இருந்து வந்து, வரும் வழியில் கொடை ரோட்டில் ரயிலிறங்கும் சென்னை நண்பர்கள் ராஜகோபாலன், கெ.பி.வினோத் ஆகியோரைகூட்டிவருவார்கள். நான் தேனி விடுதியில் 17 அன்று அதிகாலை அவர்களைச் சந்தித்து கேரளக்காட்டுக்குள் செல்ல திட்டம்
வழக்கம்போல பீர்மேடு, பருந்தப்பாறை மழைப்பிராந்தியங்கள். மழை வலுவாக இருப்பதாகப் பேச்சு. இத்துடன் இம்முறை கெவி என்ற கேரள அடர்காட்டுக்குள் ஒரு பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது, செல்லுமளவுக்கு மழை கொஞ்சம் விட்டால். இல்லையேல் வெறும் புல்வெளிப்பயணம் மட்டுமே