«

»


Print this Post

சாதியுடன் புழங்குதல்…


அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் ‘சாதி பேசலாமா?’ என்றகட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்கள் எனக்குக் குழப்பத்தை அளித்தன. ஏன் நாம் சாதியைப்பற்றிப் பேசவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவருடைய சாதியைப்பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? தெரியாமல் அல்லது அதைப்பற்றி அறிந்துகொள்ளாமல் வாழ்வதுதானே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்? நான் எவருடைய சாதியைப்பற்றியும் தெரிந்துகொள்வது இல்லை. அதைப்பற்றிய அக்கறையும் எனக்கு கிடையாது. யாரிடமும் நான் சாதியைச் சொல்வதும் இல்லை. நீங்கள் சாதியை தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. அதனால்தான் இந்த சந்தேகம்

விஜய் மணிகண்டன்

அன்புள்ள விஜய்,

உங்கள் கடிதத்தின் மனநிலை, நோக்கம் இரண்டும் எனக்குப் புரிகிறது. சாதியைப்பற்றிய அக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. ஆனால் அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய சாதியையும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.

அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். பறையர் சாதியைச் சேர்ந்தவர். அது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.

நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது சாதியைச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு குவளை மதுவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்

நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘எந்தினுடா மோஷ்டிச்சு? பற நாயிண்டே மோனே’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.

நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே மலையாளத்தில் அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். மலையாளத்தில் ‘பற நாயிண்டேமோனே’ என்றால் ‘சொல்லுடா நாயின் மகனே’ என்று அர்த்தம். பறைதல் என்றால் சொல்லுதல் .[அது தூய பழந்தமிழ்ச் சொல். பறையர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் முரசு அறையக்கூடிய, விழாக்களிலும் கோயில்களிலும் மங்கலக் கௌரவம் கொண்ட உயர்சாதியினர். அதற்கு தொல்லாதாரங்கள் உள்ளன]

நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் ஒட்ட முடியாது.

கடந்த இருபதாண்டுக்காலமாக தொழிற்சங்கம், இலக்கியம் இரு தளங்களிலும் புதியவர்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். சாதியை அறிந்துகொள்ளாமல் ஒருபோதும் நெருக்கமான உரையாடல்களை நிகழ்த்த முடியாது. சாதாரணமான வணிக,அலுவலக பேச்சுகளுக்கு அதை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒட்டாமல் மேலோட்டமாக உரையாடி வேலைகளைச் செய்துகொள்ளலாம். எளிமையான முகமன் பேச்சுக்களைபேசி வருடக்கணக்காக தொடரலாம். ஆனால் தொழிற்சங்கம் போன்ற தனிப்பட்ட உறவு தேவையான அடித்தள வேலைகளில் அது முடியாது. எப்போது எந்தச் சொல் எங்கே தைக்கும் என்றே தெரியாது. சொற்களின் மீது எப்போதும் கவனம் தேவை, அதற்கு ஆளை தெரிந்திருக்கவேண்டும்.

தலித்துக்களைப் பொறுத்தவரை இன்று பிற அனைவருமே தங்களை இழிவாக நினைக்கிறார்கள், இழிவுபடுத்தும் மனநிலையுடன் பேசுகிறார்கள் என்ற எண்ணம் கொண்டவர்களே மிகமிகப் பெரும்பாலானவர்கள். ஆகவே அவர்கள் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் உள்ளூர அலசிப்பார்த்தபடியே இருக்கிறார்கள். புண்பட்டால் அதை வெளியே காட்டிக்கொள்வதுகூட இல்லை. அதேசமயம் பிற்பட்ட சாதியினர் புண்பட்டால் உடனே குரல் உயரும், அடிதடி வரை போகக்கூடும். ஆகவே உரையாடலில் சுதந்திரம் எடுக்கும் நிலையில் வேறுசாதியினர் இல்லை என்பதே உண்மை. என் நண்பர் வட்டம் என்பது மிகமிகப்பெரிது. மிகநெருக்கமானவர்களிடமே அந்த கவனத்தை கலைத்துக்கொண்டு சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் நாலைந்து தலித் நண்பர்களே எனக்கு அந்த சுதந்திரத்தை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

ஏன், நம் தலித் எழுத்தாளர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள்கூட அந்த எச்சரிக்கை மனநிலையில்தான் எப்போதும் இருக்கிறார்கள் என்பதை எழுத்துக்களை படித்தாலே தெரிந்துகொள்ளலாம். பிற அனைவரையுமே அவர்கள் ஐயப்படுகிறார்கள். பிறசாதியினர் என்ன சொன்னாலும் அதை இழிவுபடுத்தலாக , தலித் விரோதமாக அவர்கள் புரிந்துகொள்ள தயராக இருக்கிறார்கள்.ஆதரித்தாலும் எதிர்த்தாலும். நம் முற்போக்கு தலித் ஆதரவாளர்கள் அனைவருமே அந்த குற்ற்ச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சும்மா இருந்தால் அதை மௌனம் என்ற குற்றமாகச் சொல்லக்கூடும்.

ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக உணராத சாதிகளே இல்லை என்பதுதான். தலித் சாதிகள் அப்படி உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள். அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.

என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் ஜைமினியின் மீமாம்ச சூத்திரங்களைப்பற்றி நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. சிலப்பதிகார மணமுறைகளைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் ”சமணனாகிய கோவலன் எப்படி ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட’ கண்ணகியை மணந்தான்?” என்று சொன்னதைக் கேட்டு பார்ப்பான் என்ற ‘வசை’ச்சொல்லை நான் வேண்டுமென்றே பயன்படுத்தினேன் என்று எண்ணி புண்பட்டு விலகிய நண்பரும் உண்டு.

பிள்ளைமாரும் முதலியாரும் தங்களை அரசியலதிகாரமும் நில உரிமையும் பறிக்கப்பட்டவர்களாக நினைக்கிறார்கள். அத்தனை சிறிய சாதிகளும் ‘சிறுபான்மை உளச்சிக்க’லில் இருக்கிறார்கள். முஸ்லீம்களோ இந்தியாவில் ‘வாழ்வுரிமை’ கோரி மாநாடுகள் நடத்துகிறார்கள். ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”பேசிவரும்போது தமிழ்நாட்டில் ஒடுக்கப்படாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — நாயர் சாதி !” டீக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகவே சாதிபேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாகப் பேசாமலே இருப்பது மட்டுமே. எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் சாதி சர்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில்சாதி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே சாதியைப்பற்றி பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.

ஆனால் சாதி என்ற அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7317

26 comments

4 pings

Skip to comment form

 1. uthamanarayanan

  Very practically written article with thorough understanding of the day to day living in Tamil Nadu, as I said earlier in my comment on one of your articles , this is again a problem individually one has to overcome if his or her mindset is born out of either superiority or inferiority approach one has towards his caste knowingly or unknowingly printed on him owing to sheer accident of birth. One has to think positively on the accent of caliber than the accident of birth.This takes sometimes a few generations to overcome.One of my friends who is working in U.S now as a Marketing man in very senior position , was my colleague in the same field of Marketing In India.We were and are good friends , whose father and mother were with BSNL and he studied in one of the premier institutions in Coimbatore in one of the modern Sciences by then , a rare course of those days standard, and his grand father had been a General Manager in Spencers. Absolutely broad minded without inhibition and I never knew which caste he belonged to , once when we were conversing in his home , his son by then five years old was trying to chase a goat with a stick in hand , and having seen that my friend commented , ‘ Hai, he is doing his great great grandfather’s work’ which I could not understand, and he explained that he is a Yadav [Konar ] and his son was trying to relearn the work. We laughed it away and further talking about our profession and other related matters.
  Why I describe it here is , this kind of making fun of oneself will be achieved only through hard work and education and needs a few generations to overcome this stigma of caste .What is needed is selfless approach and staying away from the exploitation in the name of caste. I personally speaking am not belonging to a so called upper class and I don’t have any inhibition with regard to the caste I am born into, neither my brother or sister , but this is possible since we are generations together well educated family with good status .My father and grand father and maternal side grand father and all studied in Colleges and my brother married into another community whose son , who is a Post Graduate Doctor married in another state, whose uncles even married foreigners.So this kind of inhibitions is again born out of either superiority or inferiority complex which needs a few generations to overcome.
  Thanks for bringing out good articles .

 2. Dondu1946

  //தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள். அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

  பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். //

  இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? முதல் பாராவில் நீங்களே குறிப்பிட்டுள்ளீர்களே?
  உங்களது இந்த இடுகையை ஒட்டி நான் இட்ட ப்திவு இதோ:
  http://dondu.blogspot.com/2010/07/blog-post_18.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. ramji_yahoo

  மிக அற்புதமான பதிவு.

  எல்லாருக்கும் புரிகிறது ஒரு பிரச்னை இருக்கிறது என்று, ஆனால் தீர்வுதான் சொல்ல தெரியவில்லை.

  இந்த சாதி பாகுபாடு, வேறுபாடு மனோபாவம் , கல்லூரி பருவத்தில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது என நினைக்கிறேன்.
  ( Till higher secondary classes students mingle freely except in schools like ramakrsihna madam, highly orthodox Christian convents, saradha college schools)
  அதிலும் குறிப்பாக ஆண்கள் தான் அதிகம் சாதி வேறுபாடு பார்க்கிறோம் என நான் எண்ணுகிறேன். பெண்கள் இந்த விசயத்தில் ஆண்களை விட சற்று உயர்ந்து இருப்பதாக காணுகிறேன். என் பார்வை, அனுபவம் தவறாக கூட இருக்கலாம்.

 4. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  இது ஒரு சிக்கலான விஷயம். நம் தமிழ் நாட்டில் நிலவி வரும் பல்வேறு விதமான போலித்தனங்களில் இந்த ஜாதி பாராதிருத்தல், ஜாதி பேசாதிருத்தல் என்பதும் ஒன்று. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஜாதிப் பெயரை சர் நேமாக வைத்துக் கொள்ளும் வழக்கம் அழிந்திருக்கிறது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். ஈ வெ ரா வினால்தான் அது சாத்தியமானது என்றும் புளங்காகிதம் அடைவார்கள். ஜாதியின் பெயரை பெயரில் இருந்து மட்டுமே எடுத்திருக்கிறார்களே அன்றி மனதில் இருந்து இவர்கள் இன்னமும் எடுக்கவேயில்லை என்பதுதான் உண்மை. இண்ட்டர்நெட்டிலும் , எம் என் சி கம்பெனிகளிலும் நிலவும் சூழலை வைத்து இன்று பலரும் உண்மை நிலமை என்னவென்று அறியாமல் பேசுகிறார்கள். ஜாதி பார்க்காமல் பழகும் வழக்கம் தமிழ் நாட்டில் இன்னும் போகவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஒருவர் என்ன ஜாதி என்று அறியும் கொள்ளும் வரை பேச்சில் ஒரு நிதானம் இருக்காது மனசு அலை பாய்ந்து கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கும். கிராமத்துக்காரர்கள் என்றால் சட்டென்று முகத்துக்கு நேராக “நீங்க என்ன ஆளுங்க?” என்று கேட்டு விட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள். நம் ஜாதியைத் தெரிந்து கொண்டு நம் குணாதியங்கள் பற்றி ஒரு முன் முடிவு அல்லது தீர்மானம் செய்து கொண்டு அடுத்த பேச்சைத் தொடர்வார்கள். என் தோற்றம் வைத்தோ பேச்சை வைத்தோ என் ஜாதியை யாராலும் எளிதாக எடை போட முடியாது என்பதினால் என்னிடம் குழம்பிப் போனவர்கள் நிறைய உண்டு அவர்களை யூகத்திலேயே வைத்திருந்து அவர்களின் தவிப்பை ரசித்த தருணங்கள் பல உண்டு. ஒரு சிலர் இந்த ஜாதியைத் தெரிந்து கொள்வதற்காகப் போடும் தருணங்களும் முஸ்தீபுகளும் படு வேடிக்கையாக இருக்கும். ஆக ஜாதி பார்த்து ஒருவரின் நடவடிக்கைகளை, குணங்களை, தீர்மானித்து நடந்து கொள்ளும் ஒரு சமூகத்தில் அதைப் பற்றி பேசமாட்டேன் என்று சொல்வதும் இரட்டை வேடமாகவே இருக்கும்.

  முன்பு ஒரு முறை ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நண்பர் ஒருவர் தனக்கு முடி வெட்டி விடும் பார்பர்கள் குறித்து எழுதியிருந்தார். அவர் ஜாதி பார்ப்பவர் அல்ல என்பதும் நிஜ வாழ்க்கையில் நிஜமாகவே முற்போக்காளர் என்பதும் படிப்பவர்களுக்குத் தெரியாது. அவர் ஒரு அனுபவத்தைச் சொல்லி அந்த நாளில் வீட்டுக்கு வந்து முடி வெட்டி விடுவார்கள் என்று எழுதிய பொழுது உடனே மற்றொரு முற்போக்கு நண்பர் அதெப்படி ஜாதிகளைப் பற்றி எழுதி இழிவு செய்யலாம் என்று கடுமையான ஆட்சேபணை செய்து விட்டார். இன்னொரு நண்பர் தனக்கு சுந்தரராமசாமியைப் பிடிக்காது என்றும் அவர் ஜாதி வெறியர் என்றும் சொன்னார். நான் எப்படிச் சொல்கிறீர்கள் அவர் அப்படி இல்லையே என்றேன். இல்லை அவரது புளியமரத்தின் கதையில் தலித்துக்களின் ஜாதி பெயரைச் சொல்லி இழிவு செய்திருக்கிறார் என்றார். ஐயா அது அந்தக் காலத்தில் நடந்த ஒன்றைக் கதையாகச் சொல்லும் பொழுது ய்தார்த்த நடையில் சொல்வது அதற்காக அவரும் அப்படி நினைக்கிறார் என்று அர்த்தம் கிடையாது என்று விளக்கிய பொழுதும் அவருக்குப் புரிபடவேயில்லை. அப்படி அவருக்குச் சு ராவைப் பிடிக்காது என்று அவர் சொல்வதினாலேயே அவர் தன்னைத் தானே முற்போக்காளர் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கதையில் எழுதியதை யதார்த்தம் என்று சொல்லப் போன நான் ஜாதி வெறியன் ஆகிப் போனேன் :))

  ஆனால் வெளிப்படையாக ஜாதிகளை அறிந்து அதை இயல்பாக எடுத்துக் கொண்டு ஜாதியை வைத்து மனிதர்களை எடை போடாத பலரையும் இந்த முற்போக்காளர்கள் ஜாதி வெறியன் என்று எளிதில் முத்திரைக் குத்தி விடுவார்கள் என்பதுதான் வேடிக்கை.

  நண்பர்களுக்கிடையிலும் சரி பொதுவிலும் சரி ஜாதி அறிந்து ஜாக்கிரதையாகப் பேச வேண்டிய சூழல்தான் தமிழ் நாட்டில் இன்னும் நிலவுகிறது. நான் ஒரு அரசுத் துறையில் தமிழ் நாட்டில் பத்து வருடங்கள் வேலை பார்த்தவன் அங்கு நிலவும் கடுமையான ஜாதீய மனப்பான்மையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். நம்மை யார் எந்த ஜாதி என்று தெரிந்த பின்னால்தான் அடுத்த பேச்சே ஆரம்பிப்பார்கள். ஜாதியை வைத்தே எவரையும் எடையும் போடுவார்கள். சாதாரணமாக சகஜமாகவும் நட்புடனும் பழகும் நபர்கள் கூட ஏதாவது மனஸ்தாபம் என்று வரும் பொழுது “அவன் அந்த ஜாதில்லா இந்த புத்திதானே இருக்கும்” என்று உடனடியாக ஜாதியை வைத்துத் திட்டுவதை நாம் சகஜமாக தமிழ் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கேட்க்க முடியும். அப்படியே ஒருவர் வேறு மாதிரியாக நடந்து கொண்டாலும் உடனே இந்த ஜாதியில் பிறந்தாலும் கூட இப்படி இருக்கிறானே என்று ஆச்சரியப் பட்டுக் கொள்வார்கள். அனேகமாக தமிழ் நாட்டின் எந்தவொரு ஜாதிக்கும் அந்த ஜாதியினரின் குணாதிசயங்களை விளக்கும் ஒரு பழமொழியாவது குறைந்தது இருக்கும் அது வெகு சகஜமாகப் பயன் படுத்தவும் படுகிறது. இதில் அந்த ஜாதியினரைப் பாராட்டும் பழமொழிகளும், திட்டும் பழமொழிகளும், கேலி செய்யும் பழமொழிகளும் அடக்கம்.

  இதைப் பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் என் அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு பெரிய ஆராயச்சிக் கட்டுரையே எழுதி விடலாம் :)) நீங்கள் சொல்ல வருவதை நிறைய பேர்கள் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் சொல்வதைச் சரியான விதத்தில் புரிந்து கொள்ள கொஞ்சம் வாழ்க்கை அனுபவம் வேண்டும். இப்பொழுதுள்ள இளைஞர்கள் பலருக்கும் என்ன ஜெயமோகன் இப்படி சொல்லி விட்டாரே என்ற புரியாத குழப்பம் மட்டுமே மிஞ்சும்.

  அமெரிக்காவில் ”சன் ஆஃப் எ பிட்ச்” என்பதும் ”பாஸ்டர்ட்” என்பதும் மிகச் சாதாரணமான ஒரு ஸ்லாங். செல்லமாகத் திட்டுவதற்குக் கூட அதைப் பயன் படுத்துவார்கள். அதை யார் எங்கு சொல்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு அதை திட்டா, பாராட்டா, செல்லமாகச் சொல்வதா என்பதை நாம் புரிந்து கொண்டு போக வேண்டும். ஆனால் அதே வார்த்தைகளுக்கு ஈடான ”தே பையன்” போன்ற வார்த்தையை நாம் தமிழ் நாட்டில் எல்லா இடத்திலும் பயன் படுத்தி விட முடியாது. அது ஒரு ஜாதியைக் குறித்துச் சொல்லப் படும் சொல்லாக எடுத்துக் கொள்ளப் பட்டு அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் இருந்தால் அவர்களுக்கு மனக் கஷ்டத்தையோ கோபத்தையோ ஏற்படுத்தி விடலாம். ”பறையா” என்பது இன்று ஆங்கில அகராதியில் இடம் பெற்று விட்டச் சொல். தென் கொரியார் போன்ற நாடுகளை ஒரு சில தொலைக்காட்சி சம்பாஷணைகளில் ”இண்ட்டர்நேஷனல் பறையா” என்று அழைப்பார்கள். அதையே தமிழ் நாட்டில் பயன் படுத்தினால் உள்ளே தள்ளி விடுவார்கள். சுப்ரமணியன் சுவாமி அப்படி ஒரு ஸ்லாங்கை பயன் படுத்தி விட்டார் என்று சொல்லி அவர் மீது வன்கொடுமை வழக்குப் போட ஜெயலலிதா முயன்றார். ஆக வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் புழங்கப் படும் ஒரு சில வார்த்தைகளைக் கூட நாம் தமிழ் நாட்டுக்குள் வரும் பொழுது ஜாக்கிரதையாகப் புழங்க வேண்டி வரும். கேரளத்தில் யானைப் பாகனை பாப்பான் என்று அழைப்பார்கள். தமிழில் அது பிராமணர்களை இன்று திட்டுவதற்காகப் பயன் படுத்தப் படும் ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுகிறது. அதைச் சிலேடையாக வைத்துக் கொண்டு இரட்டை அர்த்தத்தில் பிராமணர்களைத் திட்டப் பயன் படுத்தி அரிப்பைத் தீர்த்துக் கொண்டவர்களும் உண்டு.

  ஆனால் தமிழ் நாட்டில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அசிங்கமாக பிராமணர்களை மட்டும் மேடை போட்டுத் திட்டி விட்டு , சினிமாக்களில் அசிங்கமாகச் சித்தரித்து விட்டு அதற்கு முற்போக்கு பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடியும் இரட்டை நிலையும் இருக்கிறது. சாதாரணமாக எந்தவொரு தி க , தி மு க, தமிழ்ப் போராளி மேடைகளிலும் தமிழ் இணைய ப்ளாகுகளிலும் இதை சர்வ சாதாரணமாக உணர கேட்க்க அனுபவிக்க முடியும். ஆனால் அப்படிச் செய்பவர்கள் தங்களை ஜாதிகளைத் தாண்டிய சீர்திருத்தவாதிகளாக அறிவித்துக் கொள்வது பெரிய வேடிக்கை.

  தமிழ் நாட்டிலும் கூட ஒரு ஜாதிப் பெயரை ஒருவர் எப்படிச் சொல்கிறார் என்பதை வைத்து அவர் கிண்டலுக்குச் சொல்கிறாரா அல்லது அசிங்கமாகத் திட்டுகிறாரா என்பதை நாம் முடிவு செய்து விட்டலாம். ஜாதியை ஒழித்து விட்டதாக மார் தட்டும் இன்றைய திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் கடுமையான ஜாதீயவாதிகள், ஜாதீய உணர்வு உள்ளவர்கள் என்பதை நேரில் பேசும் பொழுது பழகும் பொழுது கண்டிருக்கிறேன். ஆக தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு வித இரட்டை வேட நிலமை மட்டுமே.

  ஜாதி என்பது ஒரு சமூகக் குழுவாக, சம்பந்தம், நட்பு, உறவு பேணுவது, ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்ற அளவில் வைத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் நம்மிடம் ஜாதி என்பது உயர்வு தாழ்விற்கான அளவு கோலாகவும், அடுத்த வரை மட்டம் தட்ட, இழிவாகப் பார்க்க, அதை வைத்து ஒரு ஆளின் தரத்தை எடை போட என்று பல விதங்களில் தவறான நோக்கங்களுக்குப் பயன் படுத்தப் படுவதில்தான் பிரச்சினையே. யார் வேண்டுமானாலும் எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் அதை வைத்து நாம் அவர்களை அளக்க முயலக் கூடாது யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களும் இல்லை உயர்ந்தவர்களும் இல்லை என்ற மனப்பான்மை தான் வளர வேண்டுமே ஒழிய ஜாதி பற்றியே பேசக் கூடாது என்பதோ பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது போன்ற போலிப் பெருமிதங்களோ அல்ல. இப்படிப் போலிப் பெருமிதங்களில் மிதக்கும் பலரும் தன் வீட்டுக்குள் அடுத்த ஜாதியினரை தாழ்வாக நடத்துவதையும் பேசுவதையும் நாம் காணலாம். ஆக இது தமிழ் நாட்டில் காண்வெண்டுகளில் பிள்ளைகளைப் படிக்க அனுப்பி விட்டு ”தமில்” பற்று பேசுவது போல, அடுத்த ஜாதியினரை இழிவாகப் பேசுக் கொண்டே அதை “சுயமரியாதை” சுயமரியாதை என்று அழைத்துக் கொள்வது போலவே மற்றுமொரு இரட்டை வேடம்.

  அன்புடன்
  ராஜன்

 5. raghunathan

  அன்பு ஜே சார். சாதி உயர்வோ தாழ்வோ, அது ஒரு நிதர்சனமான அடையாளம் தானே, அட் லீஸ்ட் பல பேருக்காவது? குழு அடையாளங்களே இல்லாமல் வாழ்க்கையை நடத்திச்செல்ல எத்தனை பேருக்கு இயலும்? நாகரிக மனிதன் உருவாக்கிய எல்லா நிறுவனங்களையும் போலவே சாதி அடையாளத்திலும் ஒரு குறிப்பிட்ட மாதிரியான பண்பாட்டு, கலாச்சார வாழ்க்கை முறைகளும் உண்டு, அதே சமயம் அதன் மற்றொரு முகமான சாதி வெறி மூலம் உண்டாகும் கொடுமைகளும் உண்டு. அப்பட்டமான, தீமைக் கலப்பே இல்லாத நிறுவனங்களை உருவாக்க மனிதனால் இயலுமா தெரியவில்லை. சாதியை உதறிவிடுவது போல் எல்லா அடையாளங்களையும் (என் – குடும்பம், தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம்) உதறிவிட முடியுமா? உதறினால் வாழ்வில் சுவைதான் தொடருமா (சென்னை பாஷை, மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, கோவை மரியாதை, நாகர்கோவிலின் பசுமை, சாரல், குன்றுகள், தமிழ் மொழியின் செம்மை, பாரதத்தின் பண்பாடு, இன்ன பிற ) ? எல்லா நிறுவனங்களையும் அதன் குறைகளைக் குறைத்து, நிறைகளை பயன்படுத்தி , உபயோகப் படுத்திக் கொள்ளக் கூடாதா?

 6. moulischandra

  அன்புள்ள ஜெ
  நமது சமூகத்தில்- குறிப்பாக தமிழ் நாட்டில் ஜாதியின் யதார்த்த நிலை பற்றி மிக ஆழமாக சிந்தித்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள். ஜாதியை ஆயுதமாகவோ அல்லது கேடயமாகவோ பயன்படுத்துவது இங்கே வெகு சகஜமாக இருக்கிறது. துணிவக, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
  அன்புடன்
  எஸ். சந்திர மௌலி, பத்திரிகையாளர்,

 7. ganesan

  அன்புள்ள ஜெயமோகன்,
  மிகவும் தேவையான ஆனால் பேசுவதற்கு (எழுதுவதற்கு) தயங்கும் ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள். இது சரியான நோக்கத்தில் புரிந்து கொள்ளப்படவேண்டும்.
  என் அனுபவத்தில் ஒரு நல்ல நண்பரை இதனால் இழந்திருக்கிறேன். மதுரையில் ஒருவரை நண்பராக ஏற்றுகொள்ள விரும்புவதை பரஸ்பர கிண்டல்களினாலே புரிந்து கொள்வோம். உடை, தோற்றம், நிறம் ஆகியவற்றையும் யதார்த்தமாக நடக்கும் சிறு தவறுகளை மிகைப்படுத்தியும் பயங்கரமாக கிண்டல் செய்வோம். அதன் உண்மையான அர்த்தம் நான் உனக்கு நெருக்கமானவனாக விரும்புகிறேன் என்பதே. அதை ஏற்றுக்கொள்பவர்களிடம் இருந்து பதிலுக்கு அதி பயங்கரமான கிண்டல்கள் பரிசாக கிடைக்கும். பின்னர் அந்த நட்பு நிலைக்கும். அந்த நண்பரின் அண்மையை வேண்டி நான் கிண்டலாக சொன்ன வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர் ஒதுங்கிவிட்டார், அவர் தலித் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. ஒரு ஆறு மாதம் கழித்து அதே வார்த்தையை என் மீது பிரயோகித்து விட்டு ‘நீ என்னை சொன்னதை நான் உன்னை திருப்பி சொல்கிறேன்’ என்று சொன்னார். அந்த வார்த்தை ‘போடா’.
  இந்த அளவிற்கு சென்சிடிவாக இருப்பார்கள் என்று தெரிந்த பிறகு, ஒருவரின் ஜாதியை தெரிந்து கொள்ளாமல் அவர் மீது உரிமை என்ற பெயரில் நான் வார்த்தைகளை விடுவதில்லை. மிகவும் யோசித்து மரியாதயாக மட்டுமே பேசும் போது நெருக்கம் சுலபமாக வர மறுக்கிறது, ஆனால் வேறு வழி இல்லை.
  – கணேசன்

 8. srinarayanan

  ஜெ,
  முற்றிலும் தவறான பார்வை.
  எந்த விஷயமும் அதை மாற்றும் தருணத்தில் நடைமுறைக்கு சாத்தியமற்று தான் தெரியும்.
  “இந்து” அல்லது இந்திய மதங்களில் இருப்பதாலேயே இதை ஆதரிக்க வேண்டாம்.
  இன்று இருக்கும் இந்த நிலையை ஓர் ஐம்பது வருடத்திற்கு முன்னர் நினைத்து பார்த்து இருப்போமா??????
  என் தந்தை சொல்வார்… காவிரியில் குளித்து வரும் , எதிரே தாழ்ந்த ஜாதிஇனர் வந்தாலே சாபம் இடுவார்கலாம்!!!!!!
  “சாதி”-அது எதற்காக ஏற்படுத்த பட்டிருந்தாலும் அது தவறாகவே எக்காலத்திலும் பயன்பட்டிருக்கிறது.
  நினைத்து பாருங்கள்! ஒரு குழந்தை, கீழ் சாதியில் பிறந்த காரணத்தினால் எல்லா வாய்ப்புகளும் மறுக்க பட்டு பீ அல்ல போக வேண்டும் என்றால் கண்டிப்பாக அது தவறான அமைப்பு (System) அல்லவா?
  மாறி வரும் காலத்தில் இது போன்ற பின்னுக்கு இழுக்கும் கட்டுரைகள் வேண்டாமே…
  நன்றி
  ஸ்ரீ

 9. santhana raj

  ஜெ
  மிக சரியான பார்வை.
  எங்கள் ஊரில் ஜாதியை கேட்டுத்தான் வீடே வாடகைக்கு கொடுப்பார்கள். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் உட்பட . ” ஸ்ரீ ” கிறிஸ்துவர்களாக மதம் மாறியவர்கள் சாதி பார்பதில்லை என சொல்ல முடியுமா? உபி-யில் “பி” அல்ல விண்ணபித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிராமணர்களே (தின மலர் செய்தி).

  இதில் செய்ய வேண்டியது மனித கழிவு நீக்கும் டெக்னாலஜியை (ஆட்டோமடிக்) வேண்டிய இடங்களில் உபயோகபடுத்துவதுதான்.

  சந்தனராஜ்
  தூத்துக்குடி

 10. samyuappa

  ஏதோ ஒரு வசதிக்காக ஜாதி இருக்கிறது. அந்த அடையாளத்தை அழித்துவிட்டு சவ்கர்யமாக பழகுவதென்பது சாத்தியப்படாது. குறிப்பிட்ட வகையான நண்பர்களுடன் அவர்களுக்கேற்றாற்போல் பழகுவது போலத்தான். இப்போ… நம் Managing Director நம்ப தோள்மேல கைய்ய போட்டு பேசினா… பத்து பேர்கிட்ட சொல்லுவோம். ஆனா House Keeping Boy பேசினா? …அப்படி ஒருவேளை பேசினா…….நிச்சயமா அதிகமான ரத்தம் மூளைக்கு செல்லும். ஒரு முறை அவன் கையையும் முகத்தையும் பார்ப்போம். ஜாதியின் மறுவ

 11. samyuappa

  கல்லூரி விடுதியில் இருந்தபோது கிட்டத்தட்ட 20 பேர் ஒரே தட்டில் கழுவாமல் ஆள் மாற்றி மாற்றி சாப்பிடுவோம். இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்தால் அப்படித்தான் இருப்போம். இதே போல் தான் உங்களுக்கும் ஒரு அன்யோன்யமான நண்பர் வட்டம் இருக்கும். அவர்களுடன் மிக நெருக்கமாக இருப்போம்……உங்கள் நண்பரிடம் நான் முடியாது. என் நண்பர்களுடன் நீங்கள் முடியாது. ஜாதியின் மிக குறுகிய வடிவம் போலத்தான் இருக்கிறது. நாங்கள் 20 பேர் வெவ்வேறு ஜாதியாக இருப்பினும் ஒரு புதிய ஜாதி உருவாகிவிட்டது அன்றோ?????…எனக்கென்னமோ அப்படித்தான் தெரியுது. எல்லாரையும் இஸ்து ஒரே இதுல பண்றது கஸ்டம்.

 12. ஜெயமோகன்

  அன்புள்ள ஸ்ரீ,

  ஒரு எதிர்வினையை பதிவுசெய்யும் முன் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை படித்துவிட்டு, புரியாவிட்டால் புரிந்துகொள்ள முயன்றுவிட்டு, செய்வது நல்லது. தயவுசெய்து இம்மாதிரி தீவிர விவாதம் நிகழும் தளங்களில் வந்து உளறவேண்டாம்
  ஜெ

 13. ADHITYA

  சாதி ஒரு அடையாளம். அடையாளம் இல்லாத மனிதனுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொள்பவர்களும் பிற சாதியை இழிவுபடுத்தி பேசுபவர்களும் என்ன சாதிக்கபோகிறார்கள்? யதார்த்தத்தை புரிந்து கொண்டால் சமரசமே சிறந்தது.அரசியல் சமூக தலைமைகளின் லாபத்திற்காக உருவாக்கப்படும் பிரச்சினை இது.
  நன்றி.

 14. stride

  அருமையான விளக்கம் ஜெ. சிறு வயதில் நகரத்தில் பள்ளிக்கூடம் செல்லும் போது சாதி ஏன் பேசி வீணடிக்கிறார்கள் என்று தோன்றும். நீங்கள் கூறுவதை நான் பல ஆண்டுகள் கழித்தே உணர்ந்தேன். நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதாரண பேச்சின் மூலம் புண்படும் மன நிலையை அமெரிக்காவில் கறுப்பின மக்களிடம் கண்கூட காணலாம்.

  முன்னூறு ஆண்டுகள் வன்முறை மூலம் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையும் அதன் பிறகு அதிலிருந்து விடுதலை கிடைத்தும் இன்னொரு நூறு ஆண்டுகள் வெள்ளை இன மக்களால் விலக்கி வைக்கப்பட்ட கடுமையான வாழ்க்கையின் வடுக்கள் மிக ஆழமாக அவர்கள் மனதில் பதிந்துள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்து அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் பெற ஆரம்பித்திருக்கின்றனர். இன்னமும் கூட வரலாற்றின் பிடியிலிருந்து அவர்கள் விலக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பழகும் போதும் மிக எச்சரிக்கையாக பழக வேண்டும். ஒரு சொல் போதும் அவர்கள் மனதை புண்படுத்த. ஆழமாக புண்படுத்தப்பட்டாலும் அவர்களும் சண்டை எல்லாம் போட மாட்டார்கள்.

  கறுப்பின இளைஞர்களுக்கு ஹிப்-ஹாப் மற்றும் ராப் இசை பிடிக்கும். அதனால் அவர்களிடம் போய் அந்த இசை பற்றி விளக்கம் கேட்டு விட கூடாது நெருங்கிய நண்பர்கள் தவிர. பிப்டி சென்ட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு புன்னகையுடன் ஏதாவது சிறிது சொல்லி விட்டு போய் விடுவார்கள். அந்த இசைகள் அவர்களால் அவர்களுக்காகவே இயற்றப்பட்டவை. அவர்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். அதிலுள்ள அவமானம், கோபம், வன்முறை, துரோகம் போன்றவை மற்றவர்களுக்கு புரியாது என்பது அவர்கள் எண்ணம்.

  அதே போல் வெகு காலம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததினால் அவர்கள் உண்ணும் உணவும் வேறு மாதிரி இருக்கும். அதிகம் வறுக்கப்பட்ட உணவு வகைகளே அவர்களால் விரும்பப்படும். உணவு பழக்கம் இப்போது மாறி வந்தாலும் அவர்களிடம் வறுத்த வெண்டைக்காய் பற்றி கேட்டால் அவமானப்படுத்துவது போல் இருக்கும்.

  இயற்கையால் பெற்ற உடல் வலிமையினால் கூடைப்பந்து, அமெரிக்க கால் பந்து விளையாட்டுகளில் பெருவாரியாக பங்கேற்பதை பற்றி பேசும் போதும் யோசித்து பேச வேண்டும். வெள்ளை இன மக்களால் அறிவு குறைந்தவர்களாக கருதப்பட்ட “stereotype” இன்னமும் தொடர்வதால், படிக்கும் திறன் இல்லாததினால் தான் விளையாட்டில் அதிகம் இடம் பெறுகின்றனர் என்பது போல் எடுத்துக்கொள்ளப்படும். நடைமுறையில் இலட்சியம் வேறு யதார்த்தம் வேறு.

  சிவா

 15. kthillairaj

  பெண்கள் ஜாதி பார்க்க மாட்டார்கள் எனபது தவறானது. பெண்கள் இடத்தில் இருந்து தான் ஜாதி வெளிபடுத்த படுகின்றது. காதல் என்று வரும் பொது பெற்றோர்களில் ஜாதியை முன்னிறுத்துவது முதலில் பெண்களே

 16. manovenkat

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
  இந்த பதிவில் தாங்கள்
  பறையர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் முரசு அறையக்கூடிய, விழாக்களிலும் கோயில்களிலும் மங்கலக் கௌரவம் கொண்ட உயர்சாதியினர். அதற்கு தொல்லாதாரங்கள் உள்ளன
  என்று சொல்லியுள்ளீர்கள்.

  என்ன தொல்லாதாரங்கள் என்று கூற முடியுமா ?

  நன்றி

  மனோகர்

 17. ஜெயமோகன்

  அன்புள்ள மனோகர்

  நீங்கள் அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் நூலை வாசித்துப்பார்க்கலாம். முழுமையான விரிவான விவாதம் அதில் உள்ளது. பாளாயங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை வெளியீடு. ‘அயோத்தி தாசர் சிந்தனைகள்’

 18. srinarayanan

  அன்புள்ள ஜெ,
  எனது மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்த பட்ட காரணத்தை அறிய விரும்புகிறேன்.

  தனித்த மடலில் கூட தெரிவிக்கலாம்.
  –Srinarayanansv @ஜிமெயில்.com
  நன்றி,
  ஸ்ரீ.

 19. ஜெயமோகன்

  ஸ்ரீ.அதை முந்தைய கடிதத்திலேயே சொல்லியிருக்கிறேன். நீங்கள் புரிந்துகொள்ள முயல்வதே இல்லை. முற்றிலும் அபத்தமான ஒரு பொருளை கற்பித்துக்கொண்டு அதை பிடிவாதமாக விவாதிக்க நினைக்கிறீர்கள். விளைவாக விவாதங்கள் திசைமாறிச் செல்கின்றன. கருத்துரிமை என்றபேரில் விவாதங்களை முழுமையாக திசைதிருப்புவதை அனுமதிக்க இயலாது. எந்தக்கட்டுரையும் அதை வாசிப்பவர்கலுக்காக, புரிந்துகொள்ள குறைந்தபட்ச முயற்சி எடுப்பவர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது

 20. hayyram

  திரு ஜெ.. எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை. சரி உங்கள் உரிமை. ஆனால் நீங்கள் வசனம் எழுதிய அங்காடித்தெரு படத்தில் ப்ராமணரை கொடுமைக்காரர்களாக காட்டி இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டது உங்களைக் குத்தியதா என்பதையாவது விளக்குங்கள்!

 21. manovenkat

  அன்புள்ள ஜெயமோகன்,
  பறையர் புலையர் போன்ற தாழ்த்தப்பட்டோரின் முன்னாள் நிலையை முனைவர் சு. பழனியப்பன் என்பவர் இலக்கியம், மொழியியல், கல்வெட்டுகள், சமண மதக் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பன்னாட்டுச் சமண ஆராய்ச்சி இதழில் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையின் சுட்டி;
  http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf

  இக்கட்டுரையின்படி பறையர்கள் 7-ஆம் நூற்றாண்டில் வீரர்களாக இருந்துள்ளனர். புலையர் என்றால் மங்கலம் ஆக்குபவர்கள் என்று நிறுவியுள்ளார். இக்கட்டுரையைத் தொடர்ந்து ஒரு ஆய்வுக் குழுமத்தில் நடந்த மடலாடல்களில் பறையர்களைப்பற்றி மேலும் சில அரிய தரவுகளையும் தந்துள்ளார். அம்மடலாடல்களின் சுட்டிகள்:
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0906&L=indology&D=1&O=D&F=P&P=12873
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0906&L=indology&D=1&O=D&F=P&P=13373
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=274
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=586
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=1637
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=1797
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=2112
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=2272
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=3023
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=3704
  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=P&P=3883

  நான் வெளிநாட்டில் வாழ்வதால் நீங்கள் குறிப்பிட்ட நூல் கிடைக்கும் வாய்ப்பு அரிது. எனவே அந்நூலில் உள்ள தொல்லாதாரங்களில் முக்கியமான சிலவற்றையாவது நீங்கள் சுருக்கமாக எழுதினால் என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

  நன்றி.

  அன்புடன்

  மனோகர்

 22. jasdiaz

  J has been often referring to books written by D.D Kosambi in many of his posts. I got curious and started reading his books on Indian history and culture. I am fascinated by his multi-faceted personality. Apart from a reputed historian & committed Marxist, I was surprised to note he is mathematician of repute.

  Many of his books are available as pdf files in http://www.arvindguptatoys.com/

  jas

 23. samyuappa

  Dear Jas, Thank you very much. Most useful link.

 24. osaichella

  // பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம் //

  அப்படியா சேதி? ஆமாங்க .. ரொம்ப நிசமாத்தான் சொல்றீங்க.. அவங்களை இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்கத்தான் வேணுமுங்க.. இல்லேன்னா வரலாற்றுப்பிழையாகிவிடுமுங்க… என்ன பண்ணலாமுன்னு அடுத்து சொல்லிடுங்க…

  ஆவலுடன்..
  ஓசை செல்லா

 25. கோவை அரன்

  திரு ஓசை,

  //கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. கட்டுரையின் கைகால்களை ஒடித்து முடமாக்கி நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள். அங்கே வைத்து ஆர அமர பிய்த்து குதறுகிறீர்கள்.//

  http://www.jeyamohan.in/?p=7499

 26. kallapiraan

  எல்லோருக்கும் !
  சாதியும் ஒரு அடையாளம்தான் . அது பிறந்த தேதி ,பிறந்த ஊர் , பெற்றோர் பெயர் ,இந்த மாதிரியான ஒரு அடையாளந்தான் .இதற்குமேல இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை .அவங்க அப்படி நினைக்கிறாங்க ,இவங்க இப்படி நினைக்கிறாங்க -என்று நாம எடுக்குற நிலைமைக்கு சப்பகட்டு செய்யகூடாது .எது நியாயமோ ,எது நல்லதோ அதை நாம் பின்பற்றித்தான் ஆகவேண்டும் .எந்த குடும்பத்த சேர்ந்தவங்க ,எந்த பாரம்பர்யத்தில் வந்தவங்க என்கிற தேவை திருமணத்திற்கு தவிர வேறு எதற்கும் பயன்படாது .கலப்புதிருமனத்தால் சாதி ஒழியாது .கிருஸ்தவ பிள்ளை ,கிருஸ்தவ நாடார் என புதுப்புது பிரிவுதான் ஏற்படும் ,ஆடு மாடுகளில் புதுப்புது இனம் உருவாக்குவதுப்போல . எதையும் ஏற்பதுவும் ஏற்காததுவும் நமது மனம்தான்.நல்லது கெட்டதை நாம்தான் உணர்ந்து பின் பற்றவேண்டும் ,ஊர் அப்படித்தான் இருக்கும் .முதலில் நாம் திருந்த வேண்டும் .நாம் திருந்தாமல் ஊரை திருத்தமுடியாது .நாம் திருந்துவோம் ! நல்லது !! !

 1. சாதியும் கதைகளும் | jeyamohan.in

  […] சாதியுடன் புழங்குதல் சாதி பேசலாமா? […]

 2. சாதி, இருகேள்விகள் | jeyamohan.in

  […] சாதியுடன் புழங்குதல் […]

 3. சாதி ,நூறுநாற்காலிகள்

  […] சாதியுடன் புழங்குதல் சாதி பேசலாமா […]

 4. எந்த அடையாளம்?

  […] சாதியுடன் புழங்குதல்… […]

Comments have been disabled.