அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘மீண்டும் அண்ணா’ வில் கார்ப்பரேட்டுகளை நன்றாகவே திட்டியிருக்கிறீர்கள்.
கார்ப்பரேட் என்ற பொருளாதார அமைப்பு உருவான பிறகே, பெரும் பண முதலீடு தேவையான முயற்சிகள் சாத்தியமாயின. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் காட்டிய முன்னேற்றத்தின் பலன்கள் மக்களை அடைய முடிந்தது. இந்த அமைப்பு நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றும் உரித்தானதே. ஆனால், இரும்பையோ, சிமெண்டையோ, கார்ப்பரேட் அமைப்பு இல்லாமல் செய்ய முடியாது. கார்ப்பரேட்டுகள் அல்லாமல் அரசுத்துறை மூலமாக செய்தால் நேர் சுரண்டல் மட்டுமல்லாமல், நட்டத்தாலும் மீண்டும் சுரண்டல் ஏற்படும். இரண்டு கொள்ளிகளில் இது கொஞ்சம் நல்ல கொள்ளி. இதைத் திருத்த வழி சொல்லுங்கள்.
நிலம் கொடுக்க மக்கள் என்றுமே தயங்குவது இயல்பு. கேரளாவில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய நிலம் தர மறுத்தது போக சாலை அகலத்தைக் குறைக்கலாமே என்று மக்கள் கேட்கின்றனர். நர்மதா நதியில் நிலம் கை வசப்படுத்தி அணை கட்டி குஜராத் விவசாயிகளுக்கு நீர் கொடுத்தபோது அவர்களுக்கு எந்தக் குறையும் கண்ணில் படவில்லை.
நிலம் வேண்டுபவர்களே நிலம் கையகப்படுத்தலாம். அரசு இதில் நடு நிலை வகிக்கலாம். ஆனால், 1000 ஏக்கர் தேவையான இடத்தில் 950 ஏக்கரை பேச்சு மூலமாகப் பெற்ற பிறகு 50 ஏக்கர் நிலம் மறுக்கப்பட்டால் இதற்கு தீர்வு உண்டா? பட்டா தெளிவில்லாத நிலையில், அரசு கையகப்படுத்தினால் வில்லங்கம் இருக்காதே என்று தொழில் முனைவோர் நினைப்பதும் உண்மை.
இரு தரப்பினருக்கு இடையேயான பிரச்சினை என்று அரசு ஒதுங்கி இருந்து விட முடியாது. எந்த விதமான பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அரசுக்கு பெரும் பங்கு உண்டு. விவசாயத்திலிருந்து, உற்பத்தித்தொழிலுக்கு, பிறதொழில்களுக்கு சமூகம் நகர்வது உலகெங்கும் நிகழ்வது. இந்த மாற்றத்தை பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்றே நினைக்கிறேன். நகர் மயமாதலையும், தொழில் வளர்ச்சியையும் வேண்டாதவர் சிறுபான்மையினரே என்று நினைக்கிறேன்.
நம் முன்னோர், குறிப்பாகப் பெண்கள், உடல் உழைப்பிலேயே வாழ்நாளைச் செலவிட்டார்கள். கிணற்றில் நீர் இறைத்து, விறகு வெட்டி, சுள்ளியில் அடுப்பு மூட்டி, அம்மியிலும், உரலிலும் அறைத்து, ஆற்றில் துணி துவைத்து, கை நோகப் பாத்திரம் தேய்த்த காலத்திற்கு யாரும் போக விரும்பவில்லை, அந்த நிலையில் இருக்கும் அடித்தள மக்களும் இந்த தீரா உழைப்பிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள் என்பதே என் கருத்து. வருடத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் இளைஞர்கள் படிப்பு முடித்து வேலை தேட வருகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எங்கே? தொழில் வளர்ச்சியே அரசு வரி விதித்து வருவாய் ஈட்ட வழிவகுக்கும். அந்த வருவாயில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வழிவகுக்கும்.
இந்த பிரச்சினையை முன் வைப்பவர்கள் அரசையும் கார்ப்பரேட்டுகளையையும் மட்டுமே பழிக்காமல் மக்கள் நோக்கிலிருந்து கருத்து சொல்ல வேண்டும். அதாவது, நிலம் இல்லாதவர்கள், வேலை தேடுபவர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள், பெண்கள் அனைவரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்.
என்கிறார் வள்ளுவர்.
ஆனால் மேதா பாட்கர், க்ரீன் பீஸ், உதயகுமார் இவர்கள் யாருமே இந்தக் கோணத்திலிருந்து பிரச்கினையை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை. அதாவது, தலைக்கு இவ்வளவு மின்சாரம், இவ்வளவு இரும்பு, இவ்வளவு சிமெண்ட், இவ்வளவு ப்ளாஸ்டிக் போதுமானது. அதற்குள் உங்கள் தேவையை அடக்கிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அரசுடைய, கார்ப்பரேட்டுகளுடைய கொட்டம் அடங்கும் என்று எடுத்துச் சொல்லலாமே. விவசாயிகள் பாசன வசதி குறைந்த இடங்களில், மிகுந்த நீரும், நிலத்தடி நீரை எடுக்க மின்சாரமும் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுவானேன்? சர்க்கரை உபயோகத்தை குறைக்கலாமே? தேவைப்பட்டதை இறக்குமதி செய்து கொள்ளலாமே?
இதில் தான் காந்தி இவர்களிடமிருந்து வேறுபடுகிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்கு சற்றும் குறையாமல், தன் நாட்டு மக்களுடைய போக்கையும் எதிர்த்தார். அவர்கள் மேலும் பொறுப்பைச் சுமத்தினார். நீங்கள் மாறாவிட்டால் நாடு மாறாது என்று எடுத்துச்சொன்னார். மக்கள் அத்து மீறிய போது, சான்றாக சௌரி சௌரா சம்பவம் நடந்த போது, போராட்டத்தையே ஒத்தி வைத்தார். மக்களிடம், விவசாயிகளிடம் நுகர்வதை குறைப்பதற்க்கு போராட்டம் நடத்தாமல், அரசையும் கார்ப்பரேட்டையும் மட்டும் எதிர்த்துப் போராட்டம் நடத்துவது காந்தி வழி அல்ல.
எனக்கு காந்தியப் பொருளாதாரம் உடன்பாடல்ல. நான் தொழில் முன்னேற்றம் வேண்டுபவன். என் கருத்து தவறாக இருக்கலாம். ஆனால் காந்திய, பசுமை, எளிய வாழ்க்கை போராட்டக்காரர்கள் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் சொல்லக்கூடாது. வேலை வாய்ப்புக்கும் வழி சொல்ல வேண்டும். இடிந்தகரை மக்கள் நலன் வேண்டுபவர்கள் மின்வெட்டால் வேலையில்லாமல் இருக்கும் திருப்பூர், சிவகாசி எளிய மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நாட்டின் பாதுகாப்பு செலவு, கடந்த காலத்தில் வாங்கிய கடன்களுக்கு வட்டி, மானியங்கள் போன்ற செலவினங்களுக்கான வருவாய் எவ்வாறு ஈட்டப்படும் என்பதை தெளிவாக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் ஒரு 5 வருட நிழல் திட்டம், ஒரு வருட நிழல் பட்ஜெட் போட்டு மக்கள் முன் வைக்க வேண்டும். மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதைச்செய்யாதீர்கள், அதைச்செய்யாதீர்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். ராமேஸ்வரம் போகலாம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் கொடைக்கானல் போகலாம் என்று மக்கள் தீர்மானித்து பேருந்து புறப்பட்டபிறகு, பேருந்தை நகர விட மாட்டோம் என்று சொன்னால் ராமேஸ்வரமும் போக முடியாது, கொடைக்கானலும் போக முடியாது.
– கே ஆர் வைகுண்டம்
மதுரை –
அன்புள்ள வைகுண்டம் அவர்களுக்கு,
கார்ப்பரேட்டுகள் என்ற சொல்லை பூதங்கள் என்ற பொருளில் கையாள்பவர்காளில் நானும் ஒருவன் அல்ல. மக்களின் முதலீடுகள் திரட்டப்பட்டு பெருமூலதனமாக ஆகி பெரிய அளவிலான தொழில்முயற்சிகள் உருவாவது கார்ப்பரேட் முறை உருவானபின்னர்தான். பெருந்தொழில்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்பு நிகழ்வதும் அதன் வழியாகவே.
ஆனால் இப்படி நிறுவனமயமாக்கப்பட்ட மூலதனம் கட்டற்ற ஆற்றல் கொண்டதாக ஆகிவிடுகிறது. லாபம் மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும் நிலையில் அது அழிவுச்சக்தியாகவும் ஆகிறது. இயற்கையை, சமூகக் கட்டமைப்பை அழிக்கும் போக்கைக் கைக்கொள்கின்றது
ஜனநாயக அமைப்பில் இத்தகைய பெரும் அமைப்புகள் இணையான அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படவேண்டும். அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றம், பலவகையான மக்கள் இயக்கங்கள், ஊடகங்கள் ஆகியவை அவற்றைக் மட்டுப்படுத்தவேண்டும். அப்போதுதான் அவை பயனுள்ளவை
ஆனால் இன்று அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றம் போன்ற அமைப்புகளையும் பணபலத்தால் கார்ப்பரேட்டுகள் சீரழித்துவருகின்றன. ஊடகங்களை அவையே கைப்பற்றி நடத்துகின்றன
ஆகவே அவை உருவாக்கும் அழிவுகளைப்பற்றி மக்கள் அமைப்புகள் பேசவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே முடிந்தவரை கார்ப்பரேட்டுகளின் லாப நோக்குக்கு எதிரான விசைகளை வலுப்படுத்தவேண்டிய நிலை உள்ளது. இங்கு மட்டும் அல்ல, அமெரிக்கா ஐரோப்பா போன்ற வலுவான அரசமைப்புள்ள நாடுகளிலும் கூட இதுவே நிலை.
நிலம் விஷயமாகவும் நான் என் தரப்பைச் சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்வது வழக்கமான வாதம்தான். அதெல்லாமே காகிதக் கணக்கு. இந்தியாவில் அரசு, அதிகாரிகள், நீதிமன்றம், கார்ப்பரேட்டுகள் ஆகியவை ஒரே தரப்பாகச் செயல்படும் நிலையே இன்றுள்ளது. அவர்களின் தரப்பு எதையும் செய்யும் விசை உடையதாக ஆகிறது. அந்நிலையில் இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஜெ