மின்தமிழ் பேட்டி 4

download (1)

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை).

பதில்

இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு கருதினார். ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என்ற அவரது நூல் புகழ்பெற்றது. [சாகித்ய அக்காதமி விருது அதற்குத்தான் கிடைத்தது] சிறிய அளவிலேனும் வெவ்வேறு இலக்கிய இயக்கங்கள் ஆரம்பிக்கபப்டவேண்டும் என்றார் அவர். அதற்கு பல தளங்களில் ஏராளமாக எழுதப்படவேண்டும் என வாதிட்டார். அவரே துப்பறியும் நாவல் வகையில் கூட எழுதிப்பார்த்தார்.

[அவர் இலக்கியத்தை இயக்கமாக ஆக்கக்கூடாது, தனிமனிதர்களே செயல்பட வேண்டும், கொஞ்சமாக எழுதவேண்டும் என்றெல்லாம் சொன்னவர் என்று சிலர் இன்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்]

இலக்கிய இயக்கங்கள் தமிழில் எப்போதுமே இருந்துள்ளன. தீவிரமான படைப்பாளிகள் அதை நடத்தினார்கள் டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி திரிலோக சீதாராம் நடத்திய அமரர் மன்றம் போன்றவை தமிழியக்கத்துக்கான இலக்கிய இயக்கங்கள் நா.வானமாமாலையின் ஆராய்ச்சி போன்றவை நாட்டுப்புறவியல் , தமிழாய்வு ஆகியவற்றுக்கான அமைப்புகள்

க.நா.சு, .சி சு செல்லப்பா, சுந்தர ராமசாமி,. ஜெயகாந்தன் போன்றவர்கள் அவரவர் அளவில் இலக்கிய இயக்கங்களை நிகழ்த்தியவர்கள் அவர்கள் பல ஆண்டுக்காலம் தொடர்ந்து சந்திப்புகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நண்பர்குழுக்களை வழிநத்தி இதைச்செய்தனர்.க.நா.சுவின் இலக்கியவட்டம்,எம்வி.வெங்கட்ராம் காவேரிக்கரையில் நடத்திய தேனீக்கள் , சுந்தர ராமசாமியின் காகங்கள், தஞ்சை பிரகாஷ் நடத்திய கதைசொல்லிகள் போன்றவை உதாரணம்

இன்று இணையமும் பிற ஊடகங்களும் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னும் விரிவான அளவில் இலக்கிய இயக்கங்களை முன்னெடுக்கிறோம். .விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அப்படிப்பட்ட ஓர் அமைப்பு. சமானமான எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு இது. இன்று குழுமங்களில் உரையாட முடிகிறது. அதை அவ்வப்போது தனிப்பட்ட சந்திப்புகளாக ஆக்கிக்கொள்கிறோம்.

இது ஒரு குறிப்பிட்ட கொள்கை, அழகியல் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது அல்ல. எதையாவது செய்யலாமே என்று தோன்றுபவர்களின் கூட்டம் என்று சொல்லலாம். தனியாக எதையும் செய்யமுடியாது. சமமான மனநிலை கொண்டவர்களுடன் இணைந்தே செய்யமுடியும். அதற்கு நட்புதான் அடிப்படையாக இருக்கமுடியும். ஆகவே இவ்வமைப்பு.

இது இலக்கியச்சந்திப்புகளை நடத்துகிறது. கூட்டங்களை நடத்துகிறது. மற்றபடி கருத்தியல்செயல்பாடு என ஏதும் இல்லை. நாங்கள் உத்தேசித்ததும் இதுவே. ஆரம்பத்தில் உத்தேசித்தது சுந்தர ராமசாமியின் காகங்கள் போல ஒரு சின்ன சந்திப்பு முயற்சி. இத்தனை பெரிதாகும், இவ்வளவு தீவிரமாக ஆகும் என நினைக்கவில்லை. இதற்கான ஒரு தேவை இருந்திருக்கிறது.

நேற்றும் இதைப்போன்ற சிறிய அளவிலான பல இயக்கங்கள்தான் இலக்கியத்தை முன்னெடுத்துவந்தன. இலக்கியசிந்தனை, இலக்கியவீதி போன்ற பல அமைப்புகள் இருந்தன. இன்றும் கோவையில் களம் போன்ற அமைப்புகள உள்ளன.

ஆனால் க.நா.சு கனவுகண்டது இன்னும் பெரிய ஓர் எழுச்சி. கிட்டத்தட்ட ஊருக்கு ஓர் இயக்கம். அவறை இணைக்கும் ஓர் ஒட்டுமொத்த இயக்கம். இதைப்போல பலவகையான இயக்கங்கள் பல தளங்களில் நடந்து மேலும் மேலும் அதிகமான வாசகர்கள் உள்ளே வரவேண்டும். இது மண்ணில் நீரூற்றிக்கோண்டே இருப்பதுதான். விதைகள் இருந்தால் முளைத்துவரும்.

கலாச்சாரச்செயல்பாடுகளின் விளைவுகள் மெல்லமெல்லத்தான் தெரியவரும். ஆகவே எதிர்பார்க்கலாம்

39. உங்கள் சினிமா பங்களிப்பு திருப்திகரமாக இருக்கிறதா? இடைநிலைப் படங்கள் மட்டும் எனக் குறுக்கிக் கொள்ளக் காரணம் என்ன? திரைக்கதையிலும் உங்கள் பணி இருக்கிறதா? ஆலோசகராகவும் இருக்கிறீர்களா? (உதாரணமாய் காவியத் தலைவன் போன்ற சரித்திரப் படங்களில் உங்கள் அறிவு பயன்பட்டிருக்கக்கூடும்). தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா?

பதில்:

சினிமாவில் மதிப்பு மரியாதை பணம் எதுவும் குறைவில்லை. சொல்லப்போனால் நான் பெருமதிப்புடன் இருப்பதே சினிமாவுக்குள்தான். [அவமதிப்புகளை உணர்வது கல்லூரிகளில்]. சினிமாக்காரர்களுக்கு இலக்கியவாதிகள் மேல், அதிலும் தீவிரமாகச் செயல்படும் இலக்கியவாதிகள்மேல் பெரும் மதிப்பும் ஈடுபாடும் உள்ளது. அதை நீங்களே பார்க்கலாம். நான் நிகழ்த்தும் விழாக்களில் சினிமா நட்சத்திரங்கள் இலவசமாக வந்து பங்கெடுக்கிறார்கள். இந்த இயக்கம் முக்கியமானது, நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அது என் மேல் உள்ள மதிப்பினால்தான்

ஆனால் இன்னமும்கூட சினிமாவில் எழுத்தாளனின் இடமென்ன என்பது வகுக்கப்படவில்லை. ஆகவே எழுத்தாளனை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று தெளிவாக இல்லை. எழுத்தாளன் என்பவன் இன்றும் ஒரு ஆலோசகனாக, விவாதித்து முடிவெடுக்கப்பட்ட விஷயத்தை மொழிவடிவில் எழுதி அளிப்பவனாக மட்டுமே இங்கே இருக்கிறான். அவ்வெழுத்துவடிவில் இருந்து வெகுவாக விலகியே சினிமா உருவாகி வருகிறது.

இது எவருடைய பிழையும் அல்ல. வணிக சினிமா என்பது பல்வேறு எதிர்வினைகள் மூலம் திரண்டுவரும் ஒரு கலை. அப்படித்தான் அது உருவாகி வந்திருக்கிறது. அதை மாற்றுவது எளிய விஷயமும் அல்ல. சினிமாவுக்குள் எழுத்தாளன் மற்றும் இயக்குநர் என ஒரு பெரிய நட்புக்கூட்டு ஒன்று நிகழ்ந்து அது வெற்றிகரமாக ஆனால்தான் ஏதாவது நிகழும். எம்டிவாசுதேவன் நாயர் + ஹரிஹரன் போல. லோகிததாஸ்+ சிபி மலையில் போல.அது ஒரு தற்செயல்தான்

40. சினிமா வசனங்களில் சுஜாதா அளவு வெற்றிகரமாய் நீங்களோ எஸ்ராவோ இல்லை என்பதே பரவலான கருத்து. ஓரளவுக்கு அது ஏற்கக்கூடியதாகவும் இருக்கிறது. சுஜாதா வெகுஜன எழுத்தாளராய் இருந்தது அவர் சினிமாவிலும் அதே பாணியில் கைதட்டல் வசனங்களை எழுத சுலபமாக இருந்தது எனக் கொள்ளலாமா?

பதில்

சினிமா கதை வசனங்களில் மிக வெற்றிகரமானவர் ஆரூர்தாஸ் மட்டுமே. அக்காலத்தில் அவரைப்போல பலர் அடுத்தடுத்த படிகளில் இருந்தனர். பாலமுருகன், வியட்நாம்வீடு சுந்தரம்,

சுஜாதாவின் ஆரம்பகால திரை எழுத்துக்கள் எல்லாமே மிகப்பெரிய தோல்விகள். குமுதம் ‘சுஜாதாவை விட்டுவிடுங்கள்’ என்று ஒரு பெரிய கட்டுரையையே எண்பதுகளில் வெளியிட்டு தொடர் விவாதம் நடந்திருக்கிறது

சுஜாதா முழுமையாக கதை -திரைக்கதை எழுதி வென்ற ஒரு படம் பெயர் சொல்லுங்கள். சரி, அவர் எழுதி ஒரு அறிமுக இயக்குநர் அல்லது இளம் இயக்குநர் எடுத்த வெற்றிகரமான படத்தின் பெயரைச் சொல்லுங்கள். சரி, அவர் எழுதிய ஒரு நடுவாந்தரப் படத்தை குறிப்பிடுங்கள். இன்றும் சொல்லும்படி இருக்கும் ஒரு திரைக்கதையைக் குறிப்பிடுங்கள் சுஜாதாவின் சினிமா என தமிழில் ஏதேனும் உண்டா, சொல்லுங்கள்.

சுஜாதாவின் வெற்றிகள் எல்லாமே சங்கர், மணிரத்னம் ஆகியோருடன் அவர்களின் வெற்றிப்படங்களில் அவர் இணைந்து இருந்ததனால் வந்தவை. அவர்களின் படங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை அவர்களின் படங்கள் மட்டுமே. அவற்றுக்கு ஓர் ஆலோசகராக, எழுதித்தருபவராக மட்டுமே அவரது பங்களிப்பு இருந்தது. மணிரத்னத்தின் ஆரம்பகாலப் படங்களின் வெற்றியிலும் பிற்காலப்படங்களின் தோல்வியிலும் சுஜாதா இருந்தார். அவை மணிரத்னத்தின் வெற்றி தோல்விகளே. மணி ரத்னம் சினிமாவின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாகவே கட்டுப்பாடுள்ள இயக்குநர்

சுஜாதாவின் வெகுஜன எழுத்தில் இருந்த வெற்றிக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. அவர் எழுதியபடங்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தாலே தெரியும். எனக்காவது நான்கடவுள், அங்காடித்தெரு என சில படங்கள் இருக்கின்றன. காலம் கடந்தபின்னரும் அவை பேசப்படுகின்றன. விருதுகள் பெற்றிருக்கின்றன. நான் கடவுள் ஓரளவு என் படம் என சொல்ல முடியும். நான் ஒரு நவீனத் திரைக்கதையை அனைத்து நுட்பங்களுடனும் முழுமையாகவே எழுத முடியும் என்று காட்ட ஒழிமுறி போன்ற ஒரு படமாவது உள்ளது.சுஜாதாவிற்கு அதுவும் எஞ்சவில்லை. என்னிடம் அவரே ‘என்னோடது ஸ்க்ரீன்பிளே இல்ல ’ஃபோர்பிளே’ என்று சொல்லியிருக்கிறார்.

41. இலக்கியத்தில் தீவிரமாய் விமர்சனம் செய்யுமளவு நீங்கள் சினிமா, இசை இரண்டையும் தொடுவதில்லையே. அப்படியே சொல்லும் ஓரிரு விமர்சனங்களும் மிக மேலோட்டமானவையாகவே இருக்கின்றன, அவையும் எதிர்மறையாய் இருப்பதில்லை. அந்தத் துறையில் பங்களிப்பதால் சங்கடம் கூடாது என்பதாலா? அல்லது அதற்கான அவசியமோ பயிற்சியோ இல்லை எனக் கருதுகிறீர்களா?

பதில்:

சினிமா இசை என இரண்டையும் நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. சினிமாவில் என் மகனும் மகளும் பார்த்திருக்கும் மாஸ்டர்பீஸ்களை நான் பார்த்ததில்லை. இசையில் என்நண்பர் சுகாவோ ஷாஜியோ அறிந்த எதுவும் எனக்குத்தெரியாது. என் எல்லைகளை சொல்லிவிட்டு சில கருத்துக்களைச் சொல்வேன். இசை அல்லது சினிமாவை நான் மதிப்பிடுவதில்லை. அவற்றின் பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலம் பற்றி மட்டுமே சொல்வேன். என் ‘ஏரியாவை’ விட்டு வெளியே போய் சொல்லி விடக்கூடாது என்ற கவனம்தான்

என் எல்லைக்கு வெளியே செல்கிறேனோ என்று தோன்றும் எந்த கட்டுரையையும் சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர் ஒருவருக்கு அனுப்பி வாசிக்கவைத்து அதன்பின்னரே பிரசுரிக்கிறேன்.

எம் கோவிந்தன்
எம் கோவிந்தன்

42. எழுத்தின் பாணி மற்றும் உள்ளடக்கத்தில் நீங்கள் தமிழில் யாருடைய நீட்சி எனக் கருதுகிறீர்கள்? போலவே இப்போது உங்கள் வாரிசு என யாரைச் சொல்லலாம்?

பதில்

நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் பாதிப்புடன் எழுதவந்தவன். அழகியல் கோட்பாட்டுத் தளத்தில் என் முன்னோடி என்றால் மலையாள எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணன். அரசியலில் எம்.கோவிந்தன்

ஆனால் விரைவிலேயே அவர்களில் இருந்து வெளியே சென்றேன். அது என் நடையை உருவாக்கியது. இன்றைய என் எழுத்து எவருடைய நீட்சியுமல்ல. அது தனித்த ஓர் புனைவுலகம்.

இப்போது எழுதுபவர்களில் எவரிடம் என் பாதிப்பு உள்ளது என அவர்கள்தான் சொல்லவேண்டும். நான் சொல்வது முறையல்ல.

43. சமகாலத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? இந்திய அளவில் அதன் இடம் என்ன? தமிழ் எழுத்தாளர் எவரேனும் நொபேல் பரிசு தகுதி கொண்டிருக்கிறார்களா?

பதில்

தமிழ் நவீன இலக்கியம் குறைவாக எழுதப்பட்டு அதைவிடக் குறைவாகவே வாசிக்கப்படுவது. ஆனால் எப்போதுமே அது உலக அளவில் எழுதப்பட்டுவந்த நவீன இலக்கியத்திற்கு நிகரானதாகவே இருந்து வந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர் காலத்தில் உலக அளவில் எந்த மொழியில் எழுதிய பெரும்படைப்பாளிகளுக்கும் நிகரானவர். இன்று எழுதுபவர்களில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள்தான்.

சமகாலத்தில் நோபல் பரிசுபெற்றுவரும், பரிந்துரைக்கப்படும் எந்தப்படைப்பாளியின் படைப்புலகுக்கும் நிகரானது என் படைப்புலகம். நோபல்பரிசு பெற்ற பலரை விடவும் தீவிரமானது விரிவானது. உதாரணமாக, 1997இல் என் பெயர் சிவப்பு நாவலும் விஷ்ணுபுரம் நாவலும் ஒரே சமயம் வெளிவந்தன. இரண்டுமே தமிழில் உள்ளன. ஒப்பிட்டுப்பாருங்கள். ஓரான்பாமுக் அவரது நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார்

எந்த ஒரு முதன்மையான புனைவெழுத்தாளனையும்போல என் புனைவுலகும் தனித்தன்மை கொண்டது. ஆகவே என் ஆக்கங்களில் ஒன்றை உதிரியாக மொழியாக்கம் செய்தாலும் அதனால் பயனிருக்காது. ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஏற்கனவே வாசிக்கும் படைப்புகளில் ஒன்று அல்ல அது. இந்தப் புனைவுலகை இதன் நுட்பங்களுடன் மொழியாக்கம் செய்து தொடர்ந்து அறிமுகம் செய்து விவாதித்து கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வகை கவனிப்புகள் இந்திய எழுத்தாளர் எவருக்கும் கிடைப்பதில்லை. தமிழில் சாத்தியமே இல்லை.

இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி தமிழிலக்கியத்திற்கு பெரிய மதிப்பு ஏதும் இன்று இல்லை. முதல் காரணம் மொழியாக்கங்கள். இங்குள்ள எளிய சமூக ஆவண நாவல்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவற்றை இலக்கிய வாசகர் எவரும் கலைப்பெறுமதி உள்ளவை என நினைக்க முடியாது இங்குள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள், மதமாற்ற அமைப்புகள், நிதியளிக்கும் அமைப்புகள் இங்குள்ள வாழ்க்கை பற்றி உருவாக்கும் ஓர் எதிர்மறை நோக்கை மேலும் பிரச்சாரம் செய்வதற்கான புனைவுசார்ந்த ஆதாரங்களாகவே அவை மொழியாக்கம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு பெரிய அரசியல் வலை.

அபூர்வமாக நல்ல ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மோசமான மொழியாக்கங்கள். பாடப்புத்தக நடை கொண்டவை. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு சமகால புனைவுமொழியில் நல்ல மொழியாக்கங்கள் வரவேண்டும். அவை நல்ல பதிப்பகங்களால் வெளியிடப்படவும் வேண்டும்.

அத்துடன் பரவலாக அவை சென்றடையவும் வேண்டும். இலக்கியத்தைக் கொண்டுசேர்ப்பதற்கு தேசிய ஊடகங்களிலும் உலக அளவிலான ஊடகங்களிலும் அவற்றைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கும் இலக்கிய ஆர்வலர் [ கனாய்ஸியர்கள்] தேவை. அப்படி இங்கே எவரும் இல்லை. கன்னடத்திற்கு ஏ.கே.ராமானுஜம் போல, வங்காளத்திற்கு காயத்ரி ஸ்பிவாக், மீனாட்சி முகர்ஜி போல , மலையாளத்திற்கு சச்சிதானந்தன்போல.

அதாவது நல்ல அறிவுத்திறனும் கலையுணர்வும் மொழிநடையும் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் நல்ல படைப்புகளை முன்னிறுத்தி எழுதவேண்டும். அது இங்கே நிகழ்வதில்லை. இங்கு கொஞ்சம் ஆங்கிலம் எழுதத்தெரிந்தால் அவர் தன்னையே இலக்கியமேதை என நினைத்துக்கொண்டுவிடுகிறார். ஆங்கிலமறிந்த இளைய தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை அறியும் ரசனை இல்லை.அப்படி எழுதப்பட்டிருந்தால் அசோகமித்திரனோ கி.ராஜநாராயணனோ தேசிய அளவில் அறியப்பட்டிருப்பார்கள்.

ஆகவே தமிழுக்கு நோபல் கிடைக்க வாய்ப்பு இந்தத்தலைமுறையில் இல்லை. இந்திய எழுத்தாளர்களுக்கேகூட நோபல் கிடைக்க வாய்ப்பில்லை.இந்திய ஆங்கில எழுத்துக்களையே இங்குள்ள ஆங்கில ஊடகங்கள், பல்கலைகள் முன்வைக்கின்றன. அவற்றைப்பற்றியே எழுதிக்குவிக்கப்படுகிறது. அவர்களில் எவரேனும் நோபல் வெல்லலாம்

ஆனால் என்ன பிரச்சினை என்றால் அவர்கள் பல்வேறு சக்திகளால் நோபல் வரை கொண்டுசெல்லப்படுகிறார்கள். அங்கே தரமில்லை என்பதனால் நிராகரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சர்வதேசப்புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் எனக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ஆங்கில எழுத்துக்களின் போலித்தனம் பற்றி புலம்பி எழுதியிருந்தார். ஆனால் இந்திய எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்தால் அவருக்கு மொழியின் முதிர்ச்சியின்மை காரணமாக வாசிப்பனுபவம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் புரியவும் இல்லை. இதுதான் இன்றுள்ள நிலை.

images (3)

44. இன்று எழுதும் இளைய எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?

பதில்:

நம்பிக்கையூட்டுபவர்கள், கவனத்திற்குரியவர்கள் என எப்போதும் சில பெயர்களை சொல்வது என் வழக்கம். அது ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவசியம் இது ஒரு பெரிய பத்திரிகை என்றால் சொல்லியிருப்பேன். ஆனால் இங்கே அடுத்த தலைமுறையின் படைப்பாளிகளில் எவர் உண்மையிலேயே முக்கியமானவர்கள் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்

கறாராக நீங்கள் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையில் இருந்து அப்படி உத்வேகமூட்டக்கூடிய, புதிய திறப்பாக அமையக்கூடிய ஏதாவது வந்திருக்கிறதா?

இது ஏன் என்று பார்க்கிறேன். எனக்கு பொதுவாகச் சில விஷயங்கள் தோன்றுகின்றன. ஒன்று, புது எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. பலர் புத்தகங்களை ஒற்றைவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார்கள். அந்த புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள் என்ற தடயமே அவர்களின் மொழியிலும் நடையிலும் இல்லை. கடுமையான அரசியல், கோட்பாட்டு நூல்களை குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே பேசப்படுவனவற்றில் ஒரு கருத்து சற்று சிக்கலாக இருந்தால்கூட புரிந்துகொள்வதில்லை. அதன் மிக எளிமையான வடிவத்தையே எடுத்துக்கொண்டு மேலே விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதேபோல சமகால எழுத்து அல்லது முன்னோடிகளின் எழுத்து பற்றி எழுதினால் மிக எளிமையான அரசியல்கருத்துக்களை தோண்டி எடுத்துவைத்து பேசுகிறார்களே ஒழிய வாழ்க்கை நுட்பங்கள் சார்ந்தோ கலையமைதி சார்ந்தோ ஒன்றுமே சொல்வதற்கில்லாமல் மொத்தையாக எழுதுகிறார்கள். நிராகரிக்க முனைந்து உட்காரும்போதுகூட மிக எளிய அரசியல்சரிநிலைகளைச் சொல்லித்தான் ஒரு படைப்பை அவர்களால் நிராககரிக்க முடிகிறது. சமீபத்தில் இப்படி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வாசித்தபோது வந்த சலிப்பு கொஞ்சமல்ல.

பலசமயம் இவர்களின் அரசியல், இலக்கியக் கட்டுரைகளை வாசித்தால் பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இனிமேல் ஒரு நூலைப்பற்றிச் சொன்னால் அதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரையை எழுதாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். சமகாலப் புனைவுகளை பற்றி ஆழ்ந்த கட்டுரை ஒன்றை எழுதாதவன் உலக இலக்கியம் அல்லது உலக சினிமா பற்றிச் சொல்வது அவனுடைய சொந்த எழுத்து அல்ல என்றே கொள்ளப்படவேண்டும்

நல்ல நாவலாசிரியன் நல்ல கட்டுரையாளனாகவே ஆரம்பிக்கிறான் என்று இ.எம்.ஃபாஸ்டர் சொல்கிறார். சிக்கலான, பலமுனைகொண்ட ஒன்றை கட்டுரையாகச் சொல்லமுடியும் என்றால் மட்டுமே நாவலை எழுதமுடியும். நம் அடுத்த தலைமுறையில் அப்படி எழுதப்பட்ட ஒரே ஒரு கட்டுரையைச் சுட்டிக்காட்டுங்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதினால் அதில் சில ஒற்றைவரிகளை பிடுங்கி அதை திரித்து வம்புக்கட்டுரைதான் எழுதமுடிகிறது இவர்களால். இதுதான் கனமான புனைவை உருவாக்கமுடியாத குறுகலை உருவாக்குகிறது. இது நிராகரிப்பு அல்ல, விமர்சனம். ஒருவகையில் எதிர்பார்ப்பும்கூட

இன்று வரும் நாவல்களை வாசித்ததுமே தூக்கிப்போடுகிறேன். ஆங்காங்கே சில விஷயங்கள் நன்றாக இருப்பதாகத் தோன்றும், அவ்வளவுதான். இப்போது எழுதுபவர்களில் கணிசமானவர்களுக்கு இங்கோ உலகமொழிகளிலோ எழுதப்பட்ட தீவிரமான இலக்கியம் பற்றிய வாசிப்போ அக்கறையோ இல்லை என்று தோன்றுகிறது. அவ்விலக்கிய மரபின் நீட்சியாக அவர்கள் தங்களை உருவகித்துக்கொள்வதில்லை. பரவலாக வாசிக்கப்படும் பல்ப் ஃபிக்ஷனின் நீட்சியாக தன்னை உருவகித்துக்கொண்டு எழுதுகிறார்கள்.

ஆகவே எந்த ஆழ்ந்த அவதானிப்பும் இல்லாத மேலோட்டமான பாலுணர்வு எழுத்துத்தன்மையே அதிகமாக காணக்கிடைக்கிறது. அது பரவலாகக் கொண்டு சேர்த்துவிடும் என நினைக்கிறார்கள். அவைகூட அனுபவமோ அவதானிப்போ அல்ல. வெறும் பகற்கனவுகள் . என்னைப்போல ஐம்பதைக் கடந்த ஒருவனால் அந்தப் பகற்கனவுலகை ஒரு சிரிப்புடன் மட்டுமே பார்க்கமுடிகிறது. இந்த வகை எழுத்துக்களை பார்க்கையில் சின்னப்பையன்கள் ரகசியமாக அமர்ந்து தன்புணர்ச்சி செய்வதை பார்ப்பது போல உணர்கிறேன். சரிதான் சின்னப்பையன்கள், செய்துவிட்டுபோகட்டும் என்று சிரிப்புடன் கடந்து செல்லத்தான் தோன்றுகிறது

நான் ஒருவரை மனம் கவர்ந்தவர் என்று சொல்லவேண்டுமென்றால் அவர் நான் எழுதாத எழுதமுடியாது என எண்ணக்கூடிய ஒரு இடத்தை அடைந்தவராக இருக்கவேண்டும் இல்லையா? அப்படி அரிதாகவே காண்கிறேன். விதிவிலக்கு சமகாலக் கவிஞர்களில் சிலர் இசை முக்கியமானவர். அவர் எழுதும் எல்லாமே அவருடைய தனித்தன்மையுடன் ஆழத்துடன் இருக்கின்றன.

45 சாகித்ய அகாதமி போன்ற விருதுகளில் தொடர்ந்து நீங்கள் ஒதுக்கப்படுவதாகத் தெரிகிறது. சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கே கிடைக்காத விருது தான் எனினும் சமீப ஆண்டுகளாக தகுதி கொண்டவர்கள் (நாஞ்சில் நாடன், சு.வெங்கடேசன், ஜோ டி குரூஸ், பூமணி) பெறுவதும் நிகழ்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? வெள்ளை யானை கூட முக்கியமான ஒரு வரலாற்று நாவல் தான். சாகித்ய அகாதமி விருது வாங்கும் நிலையை எல்லாம் தாண்டி விட்டதாக என நினைக்கிறீர்களா?

பதில்

சாகித்ய அக்காதமியை ஆரம்பம் முதல் விமர்சித்து வருபவன் நான். 1992இல் சாகித்ய அக்காதமியின் டெல்லி மேடை ஒன்றில் இந்தி திணிக்கப்பட்டதற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினென். பின்னர் கோவி மணிசேகரனுக்கு விருதளிக்கப்பட்டதற்கு எதிராக எதிர்வினை ஆற்றினேன். அதன்பின் அதன் எந்தப்பட்டியலிலும் நான் இல்லை. அதன் நிதிக்கொடைகளை நான் பெற்றுக்கொண்டதில்லை. அதன் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டதில்லை. அதன் பரிசுப்பரிந்துரைகளில் முதல் பட்டியலிலேயே நான் இருப்பதில்லை.அதை அறிந்துதான் நான் விமர்சித்தேன். விமர்சிக்கிறேன்

ஆம், இன்றையநிலையில் சாகித்ய அக்காதமி எனக்கு மிகச்சிறிய விருதுதான். அதை என் வாசகர்கள் எவரும் அறிவார்கள்.‘உங்களுக்கு சாகித்ய அக்காதமி கிடைக்கணும் சார்’ என ஒருவர் என்னை வாழ்த்தினால் அவர் என் எழுத்துக்களின் வாசகர் அல்ல, என் எழுத்துக்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றே புரிந்துகொள்வேன். அவர் ஏற்கனவே வாசித்து ஒன்றும் பிடிகிடைக்காதவர் என்றால் அவரை முழுமையாக ஒதுக்கிவிடுவேன். அது என்னை அவமதிப்பதுதான்.

46. ஒரு படைப்பாளி தனக்குப் பிடித்த வேற்று மொழிப் படைப்பிற்குத் தரும் ஆகச் சிறந்த மரியாதை அதைத் தன் மொழியில் மொழிபெயர்த்தல். சுந்தர ராமசாமியின் படைப்புகளின் ஒன்றாகவே அவர் மொழி பெயர்த்த தகழியின் நாவல்களைப் பார்க்கிறேன். நீங்களும் ஒருகாலத்தில் தொடர்ச்சியாய் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டீர்கள். இப்போது மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லையா? அல்லது அவ்வளவாய் வேற்று மொழிப் படைப்புகளை வாசிப்பதில்லையா?

பதில்

முக்கியமான விஷயம் நான் புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. ஒருநாளில் ஐந்துமணி நேரம் வாசிக்கிறேன். ஆனால் பெரும்பாலும் இந்தியதத்துவம், இந்தியவரலாறு, தொன்மங்கள் போன்றவைபற்றி. புனைவுகள் என்றால் என்னை உடைத்து ஆட்கொள்ளும் படைப்புகளாக இருக்கவேண்டும்

ஆகவே மொழியாக்கம் செய்ய நேரமில்லை .ஆனால் மொழியாக்கம் செய்ய வைப்பதுண்டு. தமிழில் பல நூல்கள் நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்து செம்மை செய்து வெளியானவை. கடைசியாக கல்பற்றா நாராயணனின் சுமித்ரா

47. சில பெண் படைப்பாளிகள் தகுதி மீறி அங்கீகாரம் பெறுகிறார்கள் என்ற உங்கள் கருத்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாயிற்று. அம்பை உட்பட ஒரு பெண் படைப்பாளி கூட உங்கள் கருத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்து அதற்கு ஆதரித்ததாய்த் தெரியவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? நேர்மையான சுயபரிசீலனை என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டதா? அல்லது தோற்கக்கூடாது என்ற வீம்பா?

பதில் :

அதில் கோபம் கொள்ள ஏதுமில்லை. இயல்பான எதிர்வினைதான் அது. எதிர் விமர்சனம் கோபத்தையே முதலில் கொண்டுவரும். குழுவாகச் சேர்ந்து கொள்வதும் கன்னாபின்னாவென்று எதிர்த்தாக்குதல் செய்வதும் எல்லாம் அந்த கோபத்தின் விளைவு. ஆனால் கோபம் தணிந்ததும் சிலராவது எண்ணிப்பார்ப்பார்கள். அத்துடன் அத்தகைய கடும் விமர்சனம் வாசகர்களை சிந்திக்க வைக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புகளைக் கூட்டுகிறது. அது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். உண்மையான விமர்சனங்கள் வீணாவதில்லை

1990இல் தமிழ் நாவல்களைப்பற்றி நான் ஒரு கடும் விமர்சனத்தை முன்வைத்தேன். அவை நாவல்களாக இல்லை, தொடர்கதைகளோ குறுநாவல்களோதான் என. நாவலுக்கு ஒரு தரிசனம் அல்லது எதிர்தரிசனமும் அதனடிப்படையிலான ஒட்டுமொத்த வடிவமும் தேவை என. எதிர்விமர்சனங்களாக வந்தவை கசப்புகள் மட்டுமே. ஆனால் அதன்பின்னரே தமிழில் நாவலின் முழுமையை நோக்கிய முயற்சிகள் தொடங்கின. ஆழிசூழ் உலகோ, காவல்கோட்டமோ, மணல்கடிகையோ அந்த விவாதம் இல்லாவிட்டால் வந்திருக்காது

தன்னம்பிக்கை இல்லாத படைப்பாளி விமர்சனத்தால் புண்படுகிறார். தன்னம்பிக்கை உள்ளவர் சீண்டப்படுகிறார். அப்படி எவரேனும் எழுந்து வருவார்கள்.

48. சுந்தர ராமசாமி போல் இறுதி வரை எழுத வேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது ஜெயகாந்தன் போல் ரிட்டயர்ட் ஆவீர்களா? இரண்டில் எந்த பதில் என்றாலும் ஏன்? பெரிய அளவிலான எதிர்கால எழுத்துத் திட்டங்கள் என்ன?

பதில்:

எழுதி எழுதி ‘தீர்ந்துவிடவேண்டும்’ என நினைக்கிறேன். தீர்ந்துவிட்டால் எழுதமாட்டேன். பயணம் செய்வேன். அப்படி நிகழ்ந்தால் இங்கிருந்து சென்று முற்றிலும் புதிய ஒரு நிலத்தில் முற்றிலும் புதிய ஒரு வாழ்க்கையை தொடங்கவேண்டும் என நினைக்கிறேன் இந்த மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலில் இருந்து முழுமையாகவே வெளியே சென்றுவிடவேண்டும்.

49. A private life question. அருண்மொழி நங்கை அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்த கதையைச் சொல்லுங்கள். உங்கள் பிம்பம் அறிவார்ந்த, கறாரான ஆளுமை என்பது தான். இப்படிப்பட்டவர் காதல் முகத்தை அறியும் முகமாகவே இக்கேள்வி.

என் நண்பர்களுக்குத் தெரியும் அறிவார்ந்த கறாரான ஆளுமை அல்ல நான் என. அது என் எதிர்வினைகள் வழியாக உருவானது. அதாவது அது சூழலின் விளைவு. நான் எப்போதுமே மிகமிக விளையாட்டான, கொஞ்சம் அசட்டுத்தனமான ஆள். சிரிக்காத எந்த நட்பு உரையாடலையும் விரும்பாதவன். தொழிற்சங்க அரசியலில் ‘கொஞ்சமாச்சும் சீரியஸா இருங்க தோழர்’ என்ற கெஞ்சலைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அருண்மொழி மட்டும் அல்ல அஜிதனும் சைதன்யாவும் கூட ‘ஒரு ரைட்டரா லட்சணமா இருந்தா என்ன?’ என்று கண்டிக்கும் இடத்தில்தான் இருக்கிறேன்.

அருண்மொழி என் வாசகியாக அறிமுகமானாள். 1990ல் ரப்பர் வெளிவந்தபோது. அவளை மதுரை வேளாண் கல்லூரியில் சந்தித்தேன். துடிப்பான இலக்கிய வாசகி. பெரிய கண்கள். ஜானகிராமனின் ஒரு கதாநாயகியைத்தான் மணம் செய்துகொள்ளவேண்டும் என நினைத்திருந்த நாட்கள் அவை. அவள் பேசிக்கொண்டே நடந்தபோது சட்டென்று இயல்பாகத் துள்ளி தன் கையில் இருந்த புத்தகத்தால் தாழ்வாக நின்ற கொன்றைப்பூமரக் கிளை ஒன்றை தட்டினாள் பொன்னிறப்பூக்கள் உதிர்ந்து அவள் தலையில் விழுந்தன. அந்தக்கணம் அவள்மேல் காதல் கொண்டேன்.

இப்போது கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. அந்தக்காதல் அதே வேகத்துடன் இன்றும் நீடிக்கிறது. என் வாழ்க்கையில் ஒரே பெண் தான். ஒரே காதல்தான். என்னால் எப்போதுமே பெண்களை விரும்பி நெருங்க முடிந்ததில்லை. பெண்களை தவிர்த்தேன். என் அறிவார்ந்த ஆணவம்தான் காரணம். பெண்கள் எனக்கு சலிப்பூட்டினார்கள். அழகிய பெண்கள் சூழ்ந்த கேரள அலுவலகத்தில் அவர்களை புறக்கணித்தே செயல்பட்டேன். எந்தப்பெண்ணிடம் பேசினாலும் மூன்றே நிமிடத்தில் சலிப்பு. இன்று என் மகனும் அதைத்தான் சொல்கிறான். நான் சலிப்படையாத பெண், ரசனையும் அறிவார்ந்த கூர்மையும் கொண்டபெண், அருண்மொழி. அவளை காதலித்து மணம் செய்துகொண்டது ஒரு நல்லூழ்தான்.

பெண்களை வெறும் உடலாக மட்டுமே எண்ணி ஆர்வம் கொள்ளும் சிலர் அன்றி பிற அறிவார்ந்த ஆண்களுக்கு நம் பெண்கள் மிகமிக சலிப்பூட்டுபவர்கள் என்பதே என் எண்ணம். நீங்கள் இலக்கியவாசகர் என்றால், யோசிப்பவர் என்றால், மொத்த வாழ்நாளிலும் சுவாரசியமான நாலைந்து இந்தியப் பெண்களைக்கூட சந்திக்கப்போவதில்லை.

ஒருபக்கம் மழலையும் பேதமையுமாக தங்களை ஆக்கிக் கொள்ளூம் பெண்கள். இதை ஆண்கள் விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம் அறிவுத்திறனோ நுண்ணுணர்வோ இல்லாமல் வெறுமே ஒருவகை பாவனையையும் தோரணையையும் மட்டும் கொண்ட பெண்ணியப் பெண்கள். பொய்யான மிடுக்குகள். மிகையான வேகங்கள். எரிந்து கொண்டே இருப்பதுபோன்ற நடிப்புகள். Repulsing என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் பலரை நேரில் தெரியும். சுத்தமாக நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.அதேசமயம் சிரிக்காத ஒரு தமிழ் எழுத்தாளர் என்றால் எனக்குத்தெரிந்து சிலர் மட்டும்தான். சிரிக்காத ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு பெரிய வதை. பெண்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். விதிவிலக்கு சிலரே. முக்கியமாக லீனா மணிமேகலை. அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் எனக்குப்பிடித்த பெண்கவிஞர்.

இதைச் சொன்னால் என்னை மேல்ஷாவனிஸ்ட் பிக் என்றால் சரிதான். [சைதன்யாவிடம் ஒரு பேராசிரியர் சமீபத்திய பெண் எழுத்து பற்றிய விவாதம் பற்றி கேட்டாராம். அவள் Yes Madame, he is a male chauvinist pig, but unfortunately we intelligent women love these male chauvinist pigs only என்று சொன்னதாகச் சொன்னாள். கேட்க ஜாலியாக இருந்தது.]

எனக்கு அருண்மொழி மேல் காதல் ஏன் என்றால் அவள் எனக்கான அறிவுத்தோழியாக இருப்பதனால்தான். அவளுடன் சேர்ந்து சிரிக்க முடியும் என்பதனால்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் ஒருமுறை என் நண்பரான ஒரு ஓவியர் காதலியுடன் வீட்டுக்கு வந்தார். ‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே செவிகொடு ஸ்நேகிதனே’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

அருண்மொழி அவர் காதலியிடம் சொன்னாள். ‘இந்தமாதிரி பாட்டெல்லாம் அவர் கேக்கக்கூடாது செவிய அறுத்து குடுத்திடுவார்”. அவர் இம்பிரஷனிஸ்ட் ஓவியர். வான்காவை கேள்விப்பட்டிராத அந்தப்பெண் விழித்துக்கோண்டிருந்தாள். நானும் அவரும் சிரித்தோம்.

நான் பெண்களில் இருந்து அருண்மொழியை வேறுபடுத்தி அறிவது இந்த அம்சத்தால்தான். இந்த அறிவார்ந்த தோழமைதான் காதலுக்கே அடித்தளமாக இருக்கிறது.

திருமணமாகி இத்தனை வருடங்களில் ஒருவகையான மேலாதிக்கம் அவளுக்கு என் மேல் வந்தது. மனைவி தாயாக ஆகும் இடம் என்று அதைச் சொல்லலாம். அதுவும் காதல்தான்.

50. அருண்மொழி நங்கை உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுணையாய் இருக்கிறார்? இன்னமும் உங்கள் எழுத்துக்களின் முதல் வாசகியாக நீடிக்கிறாரா? உங்கள் பிரபல்யம் மற்றும் செல்வாக்கு தாண்டி உண்மையில் உங்கள் விஸ்தாரத்தைச் சரியாய் உள்வாங்கி இருக்கிறாரா? அவரும் எழுத்தாளர். வீட்டைக் கவனித்துக் கொள்ள அவர் தன் எழுத்தார்வத்தைக் கைவிட்டாரா?

அருண்மொழிதான் இன்றும் என் எழுத்துக்களின் முதல் வாசகி. என் எழுத்துக்களை மட்டும் அல்ல சமகால எழுத்துக்கள் அனைத்தையும் வாசிப்பாள். அசோகமித்திரனின், சு.வேணுகோபால் மீது பெரும் ஈடுபாடு உண்டு.

என் அரசியல் கருத்துக்களை அவள் பெரிதாக எண்ணுவதில்லை. அரசியலே வெறும் சில்லறை விவகாரம் என பெரும்பாலான பெண்களைப்போல அவளும் நினைக்கிறாள். என் பிராபல்யம், செல்வாக்கு என ஏதும் அவளுக்கு தெரியவில்லை. கண்டித்து ஒழுங்ககா வளர்க்கவேண்டிய ஆள் என்ற எண்ணம்தான் இருக்கிறது என நினைக்கிறேன். அருண்மொழி என் தனிவாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவள். என் நிதி விவகாரம் முதல் நண்பர்களுடனான உறவுகளை சீராக அமைப்பது வரை.

சமீபத்தில் சென்னை விஷ்ணுபுரம் விழாவுக்கு மனுஷ்யபுத்திரனை அழைத்திருந்தேன். பொதுவான மெயில் ஆக இருந்தாலும் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் எழுதியிருந்தார். மன்னிப்பு கோரி நான் ஒரு நட்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ’எதுக்கும் நேர்ல போய் ஒருமுறை கூப்பிட்டிரு, அவர் உன் கவிஞர்’ என்றாள். உறவுகள் உடையாமல் கொண்டுசெல்வதில் தான் அவளுடைய மிகப்பெரிய பங்களிப்பு

அருண்மொழி ஓரளவு எழுதிக்கொண்டிருந்தாள். ஏதோ ஓர் இடத்தில் எழுதவேண்டியதில்லை என்று தோன்றியிருக்கலாம். தொடர்ந்து எழுதும்படி அவளை தூண்டியிருக்கிறேன். வற்புறுத்தியும் இருக்கிறேன். ஒருமுறை கேட்டபோது நான் ரசிக்கும் படைப்புகளின் தரத்துக்கு என்னால் எழுத முடியாது என்றாள் “எழுதினா உன் அளவுக்கு தரமா நான் எழுதணும். இல்லேன்னா என் ஈகோ ஒத்துக்காது” என்றாள். . சரிதான்.

51. எழுத்தாளன் என்பதைத் தாண்டி தனி வாழ்வில் உங்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? சமீபத்தில் திருமதி சுஜாதா அவர்கள் தன் கணவர் குடும்பத்தைச் சரியாய் கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஓர் இதழில் பகிர்ந்திருந்தார். ஒரு கணவனாக, தந்தையாக உங்கள் செயல்பாடுகள் எப்படி?

அதை நான் செத்துப்போன பிறகு என் மனைவியும் பிள்ளைகளும் சொல்லவேண்டும். கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய அதிகாரத்தை நாம் எப்படி எளிதாகக் கொடுத்துவிடுகிறோம்.

ஆனால் என் வரையில் அவர்களுடன் மிக இனிய நட்பார்ந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். சுஜாதா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் ஒரு விலகலை குடும்ப உறுப்பினருடன் வைத்திருந்தது அக்கால வழக்கம். எனக்கும் அருண்மொழிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த விலக்கம் இல்லை. நான் அவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதில்லை. எதையும் கட்டாயப்படுத்துவது இல்லை. படிப்பு உட்பட .எப்போதும் அவர்களுடன் மிகநல்ல உரையாடலில் இருக்கிறேன். எங்கள் வீட்டில் இதுநாள் வரை சண்டைகள் மோதல்கள் என ஏதும் நிகழ்ந்ததில்லை.

என் மனதுக்கு மிகநெருக்கமான அறிவார்ந்த துணைவர்களாகவே மூவரும் இருக்கிறர்கள். ஒவ்வொருநாளும் வெண்முரசு பற்றி மூவரிடமும் விரிவாக உரையாடுகிறேன். பதின்பருவத்துப் பிள்ளைகள் நையாண்டி நிறைந்தவர்கள். அவ்வுலகில் சென்று அதில் விளையாடுவது ஓர் அற்புதம்.

கொஞ்சநாள் முன்னால் சுசீந்திரத்தில் மதம் சார்ந்த எதிர்ப்பு என் எழுத்துக்கு வந்தது. என்னை மல்லாக்க போட்டு காளி என் நெஞ்சில் மிதித்து சூலாயுதத்தை குத்துவது போல ஒரு பெரிய பேனர் நகரில் வைத்திருந்தனர். சைதன்யா சொன்னாள், “சே, அந்த காளியப் பாத்தா அம்மா மாதிரியே இருக்கு”.

குடும்பத்தில் இலகுவாக இருக்கக் கற்றுக்கொண்டாலே போதும் வீடும் உறவுகளும் இனிதாக ஆகிவிடும் என்றே நினைக்கிறேன்.

அதோடு இன்னொன்றும் சொல்லவேண்டும். சுஜாதா குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்பதெல்லாம் பெரிய பொய். அவரை அறிந்த அனைவருக்கும் அது தெரியும். அவர் ஒரு குடும்பத்தலைவனாக தன் கடமையை முழுமையாகச் செய்தவர். மனைவி பிள்ளைகளுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். நானே அவரது குடும்பப் பொறுப்பை நக்கலடித்திருக்கிறேன்.

இந்தியக் குடும்பச்சூழலின் வன்முறை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இங்கே மனைவி கணவனை முழுமையாக தனக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறாள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்களுக்காக வளர்க்கிறார்கள். அது தங்கள் உரிமை என்றே உண்மையில் நம்புகிறார்கள். அவர்களின் அறிவார்ந்த சுதந்திரம் ஆன்மீகமான மலர்வு எதையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் அதை நோக்கிச் சென்றால் தங்கள் உரிமைகள் மீறப்படுவதாகவே எண்ணுகிறார்கள்.

நம் சூழலில் கணவன் ஒரு புத்தகம் படிப்பதை ஒப்புக்கொள்ளாத பெண்கள்தான் பெரும்பாலானவகள். என்னிடம் பல வாசகர்கள் அதைச் சொல்வதுண்டு. தான் புத்தகம் படித்தால் தன் மனைவி உடனே சாப்பிட மறுத்துவிடுகிறாள் என்று என்னிடம் புலம்பியவர்கள் உண்டு. ஆகவே இங்கே ஒருவர் அன்றாட லௌகீகங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலையிலக்கியங்களில் ஈடுபட்டால், சேவைகளைச் செய்தால், ஏன் தனக்கென ஓர் பொழுதுப்போக்கை வைத்திருந்தால்கூட குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்படுவார். வெறுக்கப்படுவார். அநீதி இழைக்கப்பட்டதாக குடும்பமே புலம்பும். நான் இதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

அத்துடன் இன்னொன்று. நமது பெண்கள் பெரும்பாலும் வென்றுசெல்லும் முனைப்பு இல்லாதவர்கள். அப்படி முனைப்பு இருந்தால்கூட வாழ்க்கையில் சாதிப்பதென்பது எல்லாருக்கும் உரியதல்ல. ஆண்களிலேயே பெரும்பாலானவர்கள் சாதிப்பதில்லை. அவர்கள் சமூகச்சூழலை குறை சொல்வார்கள். பெண்கள் கணவனை குறை சொல்வார்கள்.

சுஜாதா கொஞ்சம் மரபான மனிதர்தான். அதை நானே எழுதியிருக்கிறேன். அவரது ரசிகர்கள் என்னை அதற்காக திட்டினார்கள். ஆனால் அவரது அகவுலகை அவரது மனைவியால் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அதை அவர் அந்தரங்கமாக வைத்திருக்கலாம். அதற்காகத்தான் அந்த அம்மையார் அவரை குறைசொல்கிறார்.

52. நேர்காணல்கள் என்றால் என் மனதில் மூன்று முதன்மையாய் நினைவுக்கு வரும்: 1) சுபமங்களா நேர்காணல்கள் 2) காலச்சுவடு நேர்காணல்கள் 3) நீங்களும் சூத்ரதாரியும் இணைந்து எடுத்த இலக்கிய உரையாடல்கள். ‘தமிழ்’ மின்னிதழில் நேர்காணல்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என நான் தூண்டப்படக் காரணமே அவை தாம். நீங்கள் எடுத்ததில் உங்களுக்கு மிகத் திருப்திகரமாய் அமைந்த நேர்காணல் எது? போலவே நீங்கள் கொடுத்ததில் சிறந்த நேர்காணல்களைக் குறிப்பிட முடியுமா?

பொதுவாக இங்கே நேர்காணல்கள் ஒருவகை வம்புப் பேச்சுக்கள்தான். சமீபத்தில் அசோகமித்திரனை பேட்டி எடுத்த ஒரு கும்பல் ‘கணையாழியிலே நீங்கள் பொட்டலம் மடிச்சதுக்குமேலே என்ன செஞ்சிருக்கீங்க?’ என்று வரலாற்றுக்கேள்வியை கேட்டது. கணையாழி வழியாக ஓர் எழுத்துமுறையையே உருவாக்கிய முன்னோடி மேதையிடம் இப்படி ஒரு கேள்வி!

நான் exclusive வகையிலான பேட்டிகள் தமிழில் வரவேண்டும் என விரும்பினேன். விரிவான உரையாடல். அந்த ஆசிரியரை அணுக்கமாக அறிந்து எடுக்கப்படும் பேட்டிகள். பழைய encounter, esquire, partisan review இதழ்களில் வந்தவை போன்ற பேட்டிகள் கோமலிடம் அதைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்படிப்பட்ட பேட்டிகள் சுபமங்களாவின் அடையாளங்களாக ஆயின. அவற்றில் எனக்கும் பங்கிருந்தது.

பின்னர் காலச்சுவடு தொடங்கியபோது அப்படிப்பட்ட பேட்டிகளை மேலும் நீளமாக எடுக்கலாமென சொல்லி அதற்காக முயன்றோம். கெ.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ் நித்ய சைதன்ய யதி மூவருடைய பேட்டிகளும் அன்று தமிழில் வந்த முக்கியமான பேட்டிகள் மூன்றுமே முக்கியமானனவை.

பின்னர் சொல்புதிதுக்கு பேட்டிகள் எடுத்தோம். ஆனால் எல்லா பேட்டிகளும் நல்ல பேட்டிகள் அல்ல. பேட்டிகளில் பேட்டி கொடுப்பவர்கள் கொஞ்சம் இலகுவாக இருக்கவேண்டும் பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கவேண்டும்

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் பேட்டிகளில் பயங்கரமாக எதிர்விசை கொடுப்பவர்கள். தப்பாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதனாலேயே ஒன்றையும் சொல்லாமல் தவிர்ப்பார்கள். இலக்கியவாதி ராஜந்தந்திரப் பேட்டி கொடுப்பதைப்போல அபத்தம் வேறில்லை.

சுஜாதாவை ஒரு பேட்டி எடுத்தேன். கவனமான ஒற்றைவரி பதில்கள். வீட்டுக்கு வந்தபின் அவருக்கு ‘இது ஒன்றும் சென்சஸ் கணக்குஃபாரம் இல்லை, இலக்கியப் பேட்டி. கிழித்துவீசி விட்டேன்’ என ஒரு கடிதம் போட்டேன். ‘நல்ல விஷயம். நானே சொல்லவேண்டுமென்று நினைத்தேன்’ என்று எழுதினார்.

அவரது ‘கறுப்பு சிவக்கு வெளுப்பு’ நாவலுக்கு நாடார்ப் பேரவை அளித்த எதிர்ப்பு அவரை மிகவும் அச்சுறுத்தியிருந்தது. இளமையில் பிராமணனாக அவர் தன்னை உணர்ந்ததில்லை. இவர்கள் அதை அவர் உணர்ந்து குன்ற வைத்தார்கள். இருபதாண்டுகாலம் கழித்துக்கூட அதைப்பற்றி பேசினால் கைகள் நடுங்கும் அவருக்கு.

53. எழுத்தாளன் என்ற எல்லையைத் தாண்டி தமிழின் முதன்மைச் சிந்தனையாளர்களுள் ஒருவர் நீங்கள். உங்களை ஏற்கலாம் மறுக்கலாம். ஆனால் பொருட்படுத்தாமல் கடந்து போக முடியாது. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற ஓரிருவர் தவிர மற்ற எந்த தமிழ் எழுத்தாளரும் இப்படி சிந்தனைத் தளத்தில் பிரம்மாண்டம் கொண்டதில்லை. குறிப்பாய் சமகாலத்தில் மிகக்குறைவு. இருப்பவர்களும் ஓர் அரசியல் சார்புடன் தம்மைக் குறுக்கிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். படைப்பாளி ஜெயமோகன் ஏன் சிந்தனையாளராகவும் இருக்கிறார்?

புனைவுக்கு வெளியே வந்து சிந்தனைகளை முன்வைக்கும் எழுத்தாளர்கள் உண்டு. வைக்காத எழுத்தாளர்களும் உண்டு. இது பெரும்பாலும் சூழல் மற்றும் அவ்வெழுத்தாளனின் ஆளுமை சார்ந்தது.

எனக்கு இலக்கியமளவுக்கே தத்துவம் மீது ஈடுபாடுண்டு. சிலகாலம் தத்துவத்தையே முதன்மையாகக் கருதியும் இருக்கிறேன்.இது என் ஆளுமையின் ஒரு பகுதி. புனைவிலக்கியம் தத்துவத்தை தவிர்த்து இயங்கினால் அது ஆழமாக இருக்காது என நினைக்கிறேன். தத்துவத்தை தூக்கிக்கொண்டு அது பறக்கவேண்டும். என் ஆதர்ச எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவவாதிகளாகவும் இருந்தவர்கள்தான்.

நான் ஆசிரியர்களாகக் கருதும் சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் பி.கேபாலகிருஷ்ணனும் ஒருவரிடமிருந்து உத்வேகம் பெற்றவர்கள். கேரளச் சுதந்திரச் சிந்தனையாளரான எம்.கோவிந்தன். ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவரை எம்.கெ.கோவிந்தன் என்ற பேரில் சுந்தர ராமசாமி சித்தரிக்கிறார். ஜே.ஜே யின் மூலமான சி.ஜெ.தாமஸின் நண்பர்.

கோவிந்தன் சிந்தனையாளர். ‘படைப்பாளியின் சிந்தனை’ என்ற விஷயத்தைப்பற்றி பேசியவர் என அவரைச் சொல்லலாம். படைப்பாளியின் சிந்தனையின் அடிப்படைகளாக அவர் சொன்னவை ஐந்து

1. அச்சிந்தனைகள் அந்தப்படைப்பாளியின் அந்தரங்கமான அவதானிப்பு மூலமும் படைப்பியக்கம் மூலமும் கண்டடைந்தவையாக இருக்கவேண்டும் 2. அவை தர்க்கபூர்வமாக இருக்கவேண்டுமென்றில்லை. அவற்றை அவன் முன்வைக்கும் மொழியின் உண்மையான எழுச்சியே அவற்றை நிறுவ போதுமானது 3. அவை வெறும் சிந்தனையாக இல்லாமல் அழகியல்நோக்குடனும் கலந்திருக்கும். 4 .அவை அவ்வெழுத்தாளனின் புனைவுலகுடன் பிணைந்து ஒரு முழுமையான கருத்துலகை உருவாக்கவேண்டும் 5. பிற அனைத்து சிந்தனையாளர்களும் சொல்லாத ஒன்றை சொல்ல அவனால் முடியும். அவன் பங்களிப்பு அதுவே.

பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி ஆகியோர் கோவிந்தன் சொன்ன முறைமையில் சிந்தனைகளை முன்வைத்தவர்கள். அவை பிற அரசியல் சிந்தனையாளர்கள், இலக்கியச் சிந்தனையாளர்க்ள், தத்துவச் சிந்தனையாளார்கள், சமூகச் சிந்தனையாளர்கள் சொன்னவற்றில் விடுபட்டுப்போகும் ஒன்றை எப்போதுமே சுட்டிக்காட்டின. நான் கோவிந்தனுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி, பி.கே.பாலகிருஷ்ணன் இருவரையும் அணுகியறிந்திருந்தேன்.

பிற சிந்தனையாளர்களின் கருவி புறவயமான தர்க்கம். புறவயமான தகவல்களைத் திரட்டி தர்க்கபூர்வமாக முன்வைப்பது அவர்களின் வழி. ஆகவே அவர்கள் எழுத்தாளர்களை முறைமை இல்லாமல் பேசுபவர்கள் என எப்போதும் சொல்வார்கள். ஆனால் எழுத்தாளன் அவர்கள் அறியாத ஓர் ஆய்வுக்கருவியைக் கொண்டவன், ஆழ்மனதை. அவன் சொல்வதை அவர் சொல்லமுடியாது என்றார் கோவிந்தன்.

அதேபோல அரசியல்வாதிகள். அவர்களுக்கு ஒரு தரப்பு உண்டு. ஒரு நிலைபாடு உண்டு. அதை மூர்க்கமாக வாதிட்டு முன்வைப்பார்கள். பிற அனைவரையும் எதிரிகளாகக் காண்பார்கள். எழுத்தாளன் அவர்களின் தரப்புகள் நடுவே மங்கலான பகுதிகளில் உள்ள உண்மைகளைக் கண்டு சொல்லமுடியும். அதுவே அவன் பங்களிப்பு.

படைப்பாளிக்கு வெளிஅரசியல் சார்பு தேவையில்லை படைப்பாளிக்கு என்றே ஓர் அரசியல் இருக்க முடியும் என்று கோவிந்தன் சொன்னார். அந்த அரசியல் அவனுடைய மனசாட்சியின் அரசியல். ஆழ்மனதின் அரசியல். அதற்கும் சூழலில் ஒரு பெரிய இடமுண்டு என்றார்.

எழுத்தாளனின் சிந்தனை என்பது இவ்வகையில் தனித்தன்மை கொண்டது. அது முறைமைகளை விட கூறுமுறையை பெரிதாக நினைப்பது, தர்க்கத்தை விட உள்ளுணர்வை நம்புவது. அது அந்த எழுத்தாளனின் புனைவுலகுடன் இணைந்து முழுமை பெறுவது. உலகமெங்கும் எழுத்தாளர்களின் சிந்தனைகளின் இயல்பு இதுவே.

தமிழில் எழுத்தாளர்களின் சிந்தனைகள் பெரிய அளவில் முன்வைக்க இடமிருந்ததில்லை. அரசியல் அமைப்புகளை ஒட்டிப்பேசும் எழுத்தாளர்களே இங்கே அதிகம் பேசியிருக்கிறார்கள். நான் எந்தத் தரப்பையும் சாராது நின்று பேசமுயல்கிறேன். மரபிலிருந்து நவீனத்தை அடையும் ஓரு அசலான பாதையை அடைய, நமக்கே உரிய அழகியலை உருவாக்க, நம் அறவியலை வகுத்துக்கொள்ல முயல்கிறேன். அதுவே என் சிந்தனையின் இலக்கு.

54. எல்லா நேர்காணல்களிலும் இடம்பெறும் ஒரு க்ளீஷே கேள்வி. புதிதாய் எழுதுபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? (உங்கள் எழுத்துக்கள் தான் இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமைய முடியும். ஆனாலும் explicit-ஆக உங்கள் கருத்தைப் பதிவு செய்யும் முகமாகவே இதைக் கேட்கிறேன்.)

பொதுவாக சொல்ல விரும்பவில்லை. இப்போது உள்ள போக்குகளை வாசித்ததனால் சொல்லும் சில விதிகள்:

1. வாசியுங்கள். வாசித்தவற்றை பற்றிய விமர்சனங்களை தெளிவாக விரிவாக பதிவுசெய்யுங்கள். பிறர் எழுதிய படைப்புகளைப் பற்றி பேசும்போது வேறெவரும் சுட்டாத நுட்பங்களை நீங்கள் சுட்டமுடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான எழுத்தாளர்.

2. இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியை கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது.

3 மொழியை அளைந்துகொண்டே இருங்கள். மொழியில் உங்களுக்கென ஓர் அடையாளம் வரும் வரை நீங்கள் எழுத்தாளரே அல்ல. எளிய மொழி வாசகர்களுக்கு பிடிக்கும். ஏற்கனவே இருக்கும் மொழிநடையில் எழுதினால் அதிகம்பேர் வாசிப்பார்கள். ஆனால் நீங்கள் எழுத்தாளர் ஆகமாட்டீர்கள். மொழியே ஆழ்மனம். அதில் சிக்குவதே உங்களுடைய எழுத்து. அதை தியானியுங்கள்.

4 சிறிய அரசியலை புனைவுலகில் நுழைய விடாதீர்கள். அரசியல் எல்லாம் இலக்கியத்தின் முன் மிகமிகத் தற்காலிகமானவை. மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting-ஐ சமீபத்தில் மகளுக்கு பரிந்துரைத்தேன். டால்ஸ்டாய் அவளுக்கு புதிய சமகால எழுத்தாளராக தெரியும்போது குந்தேரா பழையவராக தெரிந்தார். ஏனென்றால் அவர் பேசிய அரசியலே காலாவதியாகிவிட்டது. அரசியல் புனைவுகளில் இருக்கும் என்றால் அது மானுட அரசியலாக, தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் தொட்டு விரியும் அரசியலாக இருக்கவேண்டும்.

5. வடிவச்சோதனைகளில் பிரக்ஞைபூர்வமாக ஈடுப்டாதீர்கள். எந்தப் புதிய வடிவமும் பத்துவருடம் புதியதாக இருக்காது. சொல்லவரும் விஷயத்துக்கான வடிவமாகவே அது இருக்கட்டும்.

பத்திரிக்கை அனுபவமே இல்லாத ஒரு புதியவன் தொடங்கும் ஓர் இதழ், அதிலும் இணையத்தில் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கக்கூடிய மித வீச்சுடைய மின்னிதழ் என்கிற பாரபட்சம் பாராது எந்தவொரு கேள்வியையும் விலக்காது, நேரம், உழைப்பு, சிந்தனையைச் செலவிட்டு இவ்வளவு விரிவான, ஆழமான ஒரு நேர்காணலை அளித்தமைக்கு ஜெயமோகனுக்கு மிக நன்றி. ஜெயமோகன் என்ற பேராளுமையின் பன்முகத்தன்மையை மனச்சாய்வுகளின்றி கணிசமாய் இந்நேர்காணல் பதிவு செய்துள்ளது என நம்புகிறேன்.

ஜெயமோகன் நல்ல ஆரோக்கியத்துடன், மனம்நிறை மகிழ்ச்சியுடன், குன்றாத சுயதிருப்தியுடன் நீண்ட ஆயுள் வாழ்ந்து, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போல் அவரது மனதிற்குகந்த இன்னும் பல இலக்கிய உச்சங்களைத் தொட வேண்டும் என ‘தமிழ்’ இதழ் வாழ்த்துகிறது.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51
அடுத்த கட்டுரைபஞ்சம்,சுரண்டல்,வரலாறு