‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51

பகுதி 11 : முதற்தூது – 3

கிருஷ்ணனும் பலராமரும் தங்கள் அறையை அடைவதற்கு முன்னரே துரியோதனன் துச்சாதனன் தொடர விரைந்த காலடிகளுடன் ஓடிவந்தான். அவ்வொலியைக்கேட்ட பலராமர் “அவன்தான், அவனுக்குத்தான் காட்டெருமையின் காலடிகள்” என்று முகம் மலர்ந்து திரும்பி நின்றார். வந்த விரைவிலேயே பலராமரின் காலடிகளில் பணிந்த துரியோதனன் “என் பிழை பொறுத்தருள்க ஆசிரியரே, அரசமுறைமையை மீறலாகாது என்றனர். தாங்களும் அரசமுறைமையையே விழைவீர்கள் என்றார் விதுரர். ஆகவே தங்களை கங்கைக்கரையிலேயே வரவேற்காமல் நின்றுவிட்டேன்” என்றான்.

“மூடா, நான் என்றைக்கு முறைமைகளை பேணியிருக்கிறேன்?” என்று சொன்னபடி பலராமர் அவன் தோள்களைப்பற்றித் தூக்கி அணைத்துக்கொண்டார். “தாழ்வில்லை, உன் தோள்கள் இறுகியிருக்கின்றன. மீண்டும் வல்லமை கொண்டவன் ஆகிவிட்டாய். முந்தைய முறை பார்த்தபோது தோல்பை என தெரிந்தாய்” என்றார். “நாளும் நான்கு நாழிகை நேரம் பயிற்சி செய்கிறேன் ஆசிரியரே” என்றான் துரியோதனன். “இன்று தங்களை இங்கே பார்க்க முடிந்தது என்னுடைய நல்லூழ்.”

துச்சாதனன் வந்து பலராமரை வணங்கினான். அவனை வாழ்த்தி தூக்கியபடி “இவன் என்ன உன் நிழலாகவே தெரிகிறான்?” என்றார் பலராமர். “என் நிழலேதான்” என்று துரியோதனன் புன்னகைத்தான். “பார்த்துக்கொள், அந்திவேளையில் நிழல் தன் உருவை கடந்து நீளும்” என்ற பலராமர் “இவனும் கதாவீரன்தான். ஆனால் முறையான பயிற்சி எடுக்கவில்லை. பயின்ற கதாவீரனின் இடையில் இத்தனை தசை இருக்காது” என அவன் விலாவை தொட்டார். “பசுவின் அகிடு போல அல்லவா தொங்குகிறது? உன் ஆசிரியர் யார்?”

துச்சாதனன் “துரோணர்தான்” என்றான். “அவர் எதற்கு கதாயுதம் கற்பிக்கிறார்? நான் இதுவரை எவருக்காவது வில்வித்தை கற்பித்திருக்கிறேனா என்ன?” என்ற பலராமர் கிருஷ்ணனிடம் “வலுவான இளையோர். இவர்கள் இன்னமும் நாடாளவில்லை என்பது துயர் அளிக்கிறது இளையோனே. இவர்களுக்குரிய நாட்டை பாண்டவர்கள் கோரினார்கள் என்றால் அதை நான் ஒப்பமுடியாது. என் மாணவன் அஸ்தினபுரியை அடைவதை பார்த்தபின்னரே நான் இந்நகர் விட்டு மீள்வேன்” என்றார்.

கிருஷ்ணன் புன்னகையுடன் “அனைத்தையும் பேசிவிடுவோம் மூத்தவரே” என்றான். “என்ன பேச்சு? பேசி நிலத்தைப்பெற நாமென்ன வைசியர்களா? கதையைத் தூக்கி மண்டைகளை உடைத்தால் நமது மண் நமக்கு வருகிறது. இதிலென்ன மந்தணமும் மாயமும் உள்ளது? நான் சொல்கிறேன், நாம் இன்றே பேரரசரிடம் பேசுகிறோம். அவர் நிலத்தை அளிக்க மறுத்தால் அவரையே நான் மற்போரிட அழைக்கிறேன்…” என்றார். கிருஷ்ணன் மீண்டும் புன்னகை புரிந்தான்.

துரியோதனன் “தங்களுடன் இன்று களம்பயில முடிந்தால் நான் நிறைவடைவேன் ஆசிரியரே” என்றான். “நான் இன்னமும் உணவருந்தவில்லை. நல்ல முதிர்பன்றி ஊனை உண்ண விழைகிறேன்” என்றார் பலராமர். “இப்போதே ஆணையிடுகிறேன். நீராடி வாருங்கள்” என்று துரியோதனன் சொன்னான். “ஊனை ஊனாகவே சமைக்கச் சொல். பெருநகர்களில் சமையல்ஞானிகள் ஊனை காய்கறியாக ஆக்குகிறார்கள். காய்கறியை ஊன் போல மாற்றுகிறார்கள். மூடர்கள்” என்றார். துரியோதனன் பணிந்து “முறைப்படி சமைக்க ஆணையிடுகிறேன்” என்றான். “சமைக்காமலிருக்க” என்றார் பலராமர்.

கிருஷ்ணன் நீராடி வருவதற்குள் சாத்யகி தன்னை சித்தமாக்கிக்கொண்டான். பலராமர் ஏற்கெனவே சென்றுவிட்டிருந்தார். கூடத்தில் அவன் அமர்ந்திருக்கையில் சுநீதரின் ஏவலன் வந்து செய்தி சொன்னான். “காந்தார இளவரசர் சகுனி அவரது கோடைமாளிகையில் யாதவ அரசரைக் காண ஒப்புவதாக சொல்லியிருக்கிறார் யாதவரே.” “ஆனால் அரசச்செய்திகள் எதையும் பேச அவர் ஒப்பவில்லை. அரசரின் முன்னிலையிலன்றி அவற்றைப் பேசுவது முறையல்ல என எண்ணுகிறார். இது காந்தாரர்களின் அணுக்கநாடாகிய யாதவபுரியின் அரசருடன் அவர் நிகழ்த்தும் நட்புசாவல் மட்டுமே.” சாத்யகி “நான் அரசரிடம் அறிவிக்கிறேன்” என்றான்.

கிருஷ்ணன் கிளம்பும்போது இயல்பாக “நீரும் என் தேரில் வாரும்” என்றான். சாத்யகி ஒரு கணம் தயங்கியபின் கிருஷ்ணனின் தேரில் ஏறிக்கொண்டான். அஸ்தினபுரியின் எளிய தேரில் கிருஷ்ணன் ஏறி அமர்ந்ததுமே திரைகளை போட்டுக்கொண்டான். சாத்யகி அருகே அமர்ந்ததும் “அங்கே கணிகரும் இருப்பார்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. “நான் உம்மை அழைத்துச்செல்கிறேன். நீர் ஒருபோதும் வாய்திறந்து ஒரு சொல்லும் சொல்லலாகாது. ஆனால் உம் விழிகளை கணிகர் மீது மட்டுமே நிலைநாட்டியிருக்கவேண்டும். ஒரு கணம் கூட விழிகள் விலகலாகாது” என்றான். “ஆணை” என்றான் சாத்யகி .

சிலகணங்கள் கழித்து கிருஷ்ணன் சிரித்தபடி “யானையை வெல்ல மதத்துளையில் அங்குசம் ஏற்றுவார்கள். கணிகரை வெல்ல அவர் விழிகளை நம் விழிகளால் தொட்டால் போதும்” என்றான். “எவரும் தன்னை நோக்காத இடத்தை தேர்வு செய்து அமர்ந்துகொள்வது அவரது இயல்பு. பெரும்பாலும் அவையின் இருளான இடங்கள். அவர் அவையில் இருப்பதை ஒவ்வொருவரின் ஆழமும் உணர்ந்திருக்கும். ஆனால் விழிகளும் உள்ளமும் அவையில் எழும் சொற்களில் மிக விரைவில் அவரை மறந்துவிடும். இல்லாமல் இருப்பதே அவரை வல்லமைகொண்டவராக ஆக்குகிறது.”

“அதிலும் அவரது நுட்பம் மிகக்கூரியது. அவையில் மறைந்து அமர்பவர்கள் எவரும் நோக்காத எளியவர்களுடன் அமர்வது வழக்கம். ஆனால் அவை முதல்வர்கள் அவர்களை நோக்கி பேசத் தொடங்கினால் அவையின் விழிகளனைத்தும் அவர்கள் மேல் திரும்பிவிடும். அதன்பின் தப்ப முடியாது. ஆகவே கணிகர் அவைமுதல்வர் எவரோ அவருக்கு நேர்பின்னால் நிழலிருளுக்குள் அமர்ந்துகொள்கிறார். அவை முதல்வர் அவரை பார்க்கவேண்டுமென்றால் தலையையும் உடலையும் நன்றாக திருப்பவேண்டும். அது அடிக்கடி நிகழ்வதில்லை” என கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“அவையின் முழுஉள்ளமும் அவைமுதல்வர் மீதும் அவரால் நோக்கப்படுபவர்கள்மீதும்தான் இருக்கும். அத்துடன் மொத்த அவையும் அவைமுதல்வரை நோக்கி அமைந்திருக்குமென்பதனால் கணிகர் அவர் விழைவதைப் பேச எழும்போது அவையின் அனைத்துவிழிகளையும் தன்மேல் ஈர்த்துக்கொள்ளவும் முடியும். அப்போது அவர் புதிதாகப்பிறந்தெழுபவர் போலிருப்பார். அவையில் அப்படி அவர் தோன்றுவதே அதிர்ச்சியை ஊட்டி அவர் சொல்லும் சொற்களை எடைமிக்கவையாக ஆக்கிவிடும்.”

சாத்யகி அவன் மேலே சொல்ல எதிர்பார்த்து நோக்கினான். “இல்லாமல் இருப்பவரை வெல்லும் வழி நம் நோக்கு வழியாக இடைவிடாத இருப்பை அவருக்கு அளிப்பதே. இளமைமுதலே குறையுடல் கொண்டவர். என்பிலதனை வெயில் என விழிகள் அவரை வருத்தியிருக்கலாம். அவ்விழிகளுக்கு எதிரான சமரையே இன்றுவரை அவர் நிகழ்த்தி வருகிறார். ஏளனம் தெரியும் விழிகளை தன் மேல் இருந்து தவிர்க்க அவர் கண்டடைந்த வழி அவற்றை வஞ்சமும் வெறுப்பும் கொண்டவையாக மாற்றிக்கொள்வதே. பிறரது கடும் வெறுப்பின் முன் நச்சுமிழும் நாகத்தின் பேராற்றலை அடைகிறார். நம் விழியால் அவரை புழுவாக ஆக்குவோம்” என்றான் கிருஷ்ணன்.

சாத்யகி சில கணங்களுக்குப்பின் “அவரை நீங்கள் நோக்கும்போது உங்கள் விழிகளில் எதை நிறைப்பீர்கள்?” என்றான். கிருஷ்ணன் “இளையோனே, எவரை நான் நோக்கினாலும் என் விழிகள் ஒன்றையே சொல்கின்றன, உன்னை நான் அறிவேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அதை உணர்கிறார்கள். கணிகர் கூசி தன்னுள் சுருங்கிக்கொள்கிறார்” என்றான்.

காந்தாரமாளிகை முன்பு தேர் நின்றதும் மாளிகை செயலகன் வந்து வணங்கி இளவரசர் சகுனி மேலே தன் தென்றலறையில் காத்திருப்பதாக சொன்னான். அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்றான். பெரிய மரமாளிகை முழுக்க காந்தாரத்தின் பொருட்களால் ஆனவையாக இருந்தன. ஒட்டக எலும்பால் பிடியிடப்பட்ட காந்தாரத்து வேல்கள், செங்கழுகின் இறகுகளால் அணிசெய்யப்பட்ட தலைக்கவசங்கள், ஈச்சையோலையால் செய்யப்பட்ட சிறிய பெட்டிகள். முகப்புச்சுவரில் இருந்த பாலைவனநரியின் பாடம்செய்யப்பட்ட தலையின் விழிகளுக்கு செந்நிறமான பவளங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

ஓசையெழுப்பாதபடி தடித்த பலகையால் செய்யப்பட்ட படிகளின் வழியாக அவர்கள் ஏறி மேலே சென்றனர். ஏவலன் உள்ளே சென்று வரவறிவித்தபின் வெளிவந்து உள்ளே ஆற்றுப்படுத்தினான். உள்ளே நுழைந்ததும் சாத்யகி மெல்லிய குளிர் ஒன்றை உணர்ந்தான். கங்கைக்கரைக் காற்று சாளரங்கள் வழியாக வந்தமையால் அவ்வறை குளிர்ந்துதான் இருந்தது. ஆனால் அந்தக்குளிர் உள்ளத்தால் அறியப்பட்டது என அவனுக்குத்தெரிந்தது. திரௌபதியின் மணநிகழ்வில் அவன் சகுனியை பார்த்திருந்தான். அப்போது அவர் நோயுற்ற முதியவராக மட்டுமே தோன்றினார். அங்கே அவர் பிறிதொருவராக இருந்தார்.

சகுனி மெல்ல எழுந்து “யாதவரை வரவேற்கிறேன். தங்கள் மாநகர் குறித்த அத்தனை செய்திகளையும் அறிவேன். ஒவ்வொரு நாளும் அதைப்பற்றிய ஒற்றர்கூற்று வந்துகொண்டிருக்கும் எனக்கு… ஒருநாள் அதை பார்க்கவேண்டுமென விழைவதுண்டு. இன்று தங்களை சந்தித்தது அந்நகரையே கண்டதுபோலிருக்கிறது” என்றார். “தங்களை துவாரகைக்கு வரவேற்கிறேன் காந்தாரரே. துவாரகையும் யாதவரும் தங்கள் வருகையைப் பெறும் பெருமையை அடைய அருள்புரியவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.

அறைக்குள் கணிகர் இருப்பதை அதன்பின்னர்தான் சாத்யகி கண்டான். கிருஷ்ணன் சொன்னதுபோல அது மிகநுட்பமாக தேர்வுசெய்யப்பட்ட இடம் என தெரிந்தது. சகுனியைப் போன்ற ஒருவர் முன்னால் நிற்கையில் எவரும் பார்வையைத் திருப்பி அங்கே நின்ற உடல் ஒடிந்த குள்ளமான மனிதரை நோக்கப்போவதில்லை. கணிகர் “யாதவப்பேரரசரின் வருகையால் காந்தாரம் மகிழ்கிறது. காந்தாரக்குடிகளும் பெருமைகொள்கிறோம்” என்றார். கிருஷ்ணன் “தங்கள் இன்சொற்கள் இன்று தெய்வங்கள் அளித்த நற்கொடை கணிகரே” என்றான்.

முகமன்களுக்குப்பின் அவர்கள் அமர்ந்துகொண்டனர். சகுனி கிருஷ்ணனுக்கும் சாத்யகிக்கும் இன்கடும்நீர் கொண்டுவரும்படி ஏவலனுக்கு ஆணையிட்டார். “நான் துவாரகைபற்றிப் பேசுவது என் இயலாமையினாலேயே” என்றார் சகுனி. “நான் காந்தாரபுரியை கட்டத்தொடங்கியது நாற்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னர். வலுவான ஒரு கோட்டை கட்டவேண்டுமென எண்ணினேன். அதை இன்னும்கூட என்னால் முடிக்கமுடியவில்லை.” கிருஷ்ணன்  “ஆம், அதைப்பற்றி நானும் அறிவேன். நானே வந்து அக்கோட்டையை பார்த்தேன்” என்றான். சகுனி திகைப்புடன் “உண்மையாகவா? காந்தாரபுரிக்கு சென்றீரா?” என்றார்.

“ஆம், வணிகர்குழுவுடன் சென்று நோக்கினேன்” என்றான் கிருஷ்ணன். “அது ஏன் முடிக்கப்படவில்லை என்று பார்ப்பதற்காகவே சென்றேன்.” சகுனி அவன் சொல்லப்போவதென்ன என்று நோக்கினார். “கற்களை நெடுந்தொலைவிலிருந்து கொண்டுவருகிறீர்கள். கற்களைக் கொண்டுவர இங்கே ஆறுகளையே பயன்படுத்துகிறோம். அங்கே நீரோடும் பேராறுகள் இல்லை. புதைமணல்பாதையில் எடைமிக்க வண்டிகள் வருவதும் கடினம். கல்லுக்காகவே பெரும்நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. கல்லைக்கொண்டுவரும் வண்டிகள் செய்யப்பட்டன. கல்வரும் வழி முழுக்க பாலைமணல்மேல் கற்பாதை அமைக்கப்பட்டது.”

“வேறுவழியில்லை. பாலையில் தொலைவிலுள்ள மலைகளில் மட்டுமே பெரிய கற்கள் உள்ளன. ஆற்றங்கரைக் கற்கள் உருளைவடிவு கொண்டவை. எங்கள் நிலம் நிலையற்று உருமாறும் மணலால் ஆனது. ஆகவே அடித்தளம் உறுதியாக நிற்பதில்லை. உருளைக்கற்களால் ஆன எங்கள் அரண்மனைகள் அனைத்துமே ஒருதலைமுறைக்குள் விரிசல் விட்டுவிடுகின்றன. எத்தனை ஆழமாக அடித்தளம் தோண்டினாலும் அதுவே நிலை” என்றார் சகுனி. கிருஷ்ணன் “ஆம், பாலைநிலம் முழுக்க இந்த இடர் உள்ளது. ஆகவேதான் முற்காலத்தில் தோல்கூடாரங்களை மட்டுமே அமைத்து வாழ்ந்தனர். அல்லது பாறைகளைக் குடைந்து குகைகளை அமைத்தனர்” என்றான்.

“நான் சிற்பிகளிடம் கலந்தபின் சோனகர்நாட்டிலிருந்து பெரியகற்களை வைத்து கட்டும் முறையை கொண்டுவந்தேன்” என்று சகுனி தொடர்ந்தார். “ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பெருங்கற்கள் தங்கள் எடையாலேயே ஒன்றை ஒன்று கவ்விக்கொள்ளும். கல்லால் ஆன தெப்பம் போல மொத்தக்கட்டடமும் மணல் மேல் மிதந்து கிடக்கும். அடித்தளம் அசைந்தால் அக்கற்கள் நகர்ந்து அவ்வசைவை வாங்கிக்கொள்ளும். கட்டடம் இடிந்துவிடாது. சோனகர்நாட்டில் அப்படி கட்டப்பட்ட மாபெரும் சதுரக்கூம்பு வடிவக் கட்டடங்கள் மணல்மேல் மிதந்து நின்றிருப்பதாக சோனகச் சிற்பிகள் சொன்னார்கள்.”

“காப்திகரின் கலை அது, மானுடகுலம் காணாத மாபெரும் சதுரக்கூம்பு கோபுரங்களை தங்கள் அரசர்களுக்காக அவர்கள் அமைத்துள்ளார்கள்” என்றான் கிருஷ்ணன். “அந்த முறையிலேயே நீங்கள் காந்தாரத்தை அமைக்கமுடியும். ஆனால் கல்லைத்தேடிச்சென்றது மட்டுமே பிழை. அங்கேயே மிக அருகிலேயே கல் உள்ளது. அதை தேடியிருக்கவேண்டும்.” சகுனி அவன் சொல்லட்டும் என நோக்கினார். “பாலைநிலத்துக்கு அடியில் பெரும்பாறைவெளி இருக்கும். அதை உங்கள் ஆறு அரித்துச்சென்ற தடத்திலேயே காணமுடியும்.”

சகுனி “மிக ஆழத்தில்” என்றார். “எத்தனை ஆழமாக இருந்தாலென்ன? தோண்டி உள்ளே சென்று வேண்டிய வடிவில் கல்லை வெட்டியபின் மணலைப்போட்டு குழியை மூடியே கற்களை மேலே எடுத்துவிடமுடியுமே? எந்த ஆற்றலும் தேவையில்லை” என்றான் கிருஷ்ணன். “நான் காற்றை பயன்படுத்தினேன். நீங்கள் எடைதூக்க மணலை பயன்படுத்தியிருக்கலாம்.” சகுனி சிலகணங்கள் திகைத்த விழிகளுடன் நோக்கியபின் முகம் மலர்ந்து “உண்மை… மிக எளியது. ஆனால் இது தெரியாமல் போய்விட்டது” என்றார்.

“மிக எளிய ஒரு வழி அருகே உண்டு என்பதை அறிஞர்கள் உணர்வதில்லை. குழந்தைகள் கண்டுபிடித்துவிடும்” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆகவே நான் எப்போதும் குழந்தையாக இருக்கவும் முயல்கிறேன்.” சகுனி சிரித்தபடி “ஆம், உமது தலையில் அந்த மயிற்பீலியைக் கண்டதுமே எண்ணினேன். முதிர்ந்த ஆண்மகன் எவனும் அதை சூடிக்கொள்ளமாட்டான்” என்றார். “நான் முதிரப்போவதில்லை காந்தாரரே” என கிருஷ்ணன் சிரித்தான்.

சாத்யகி அவர்களின் உரையாடலைக் கேட்டபடி கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தான். கணிகர் அவனுடைய பார்வை பட்டதும் முதலில் சற்று திகைத்தார். அவரது உடலிலேயே அந்தப்பார்வைபடும் உணர்வு தெரிந்தது. அவரது உடல்மேல் ஒரு சிறு பொருள் வைக்கப்பட்டு அது கீழே விழாமல் அவர் அமர்ந்திருப்பதுபோல. அவன் விழிகளை அவர் முதல்முறைக்குப்பின் சந்திக்கவில்லை. தன் விழிகளை பக்கவாட்டில் திருப்பி கிருஷ்ணனை நோக்குவதுபோலவும் பின்னர் சகுனியை நோக்குவதுபோலவும் நடித்தார். அது நடிப்பு என்றும் அவரது உள்ளம் முழுக்க தன் மீதுதான் இருக்கிறது என்றும் சாத்யகிக்கு தெளிவாகவே தெரிந்தது.

சற்றுநேரம் கடந்ததும் அவரது உடல் மெல்ல அசைந்தது. அந்தச் சிறுபொருளின் எடையை தாளமுடியாமல் தோள்மாற்றிக்கொள்வதுபோல. அப்போதும் அவர் சாத்யகியை பார்க்கவில்லை. அத்தனை பிடிவாதமாக அவர் இருப்பதே அந்தப்பார்வை அவரை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறது என்பதைக்காட்டுகிறது என எண்ணினான். அவர் பெருமூச்சு விட்டார். மடித்துவைக்கப்பட்ட கால்களை மெல்ல நீட்டிக்கொண்டார். அவன் அதன்பின்னர்தான் அவரது கைவிரல்களை பார்த்தான். வலது கையின் இரு விரல்களில் சிறிய பாசி மணி ஒன்றை இறுகப்பற்றியிருப்பதுபோல வைத்திருந்தார்.

அது அவரது உள்ளமா என சாத்யகி எண்ணிக்கொண்டான். அதைநோக்கியதும் அந்தப்பிடி இறுகுவதை கண்டான். பின் அவர் அறியாமலேயே இரு விரல்களும் நெகிழ்ந்தன. மீண்டும் பெருமூச்சுடன் அவர் அசைந்து அமர்ந்தார். அவர் தன் விழிகளை சந்தித்தார் என்றால் அதுவே அவரது தோல்வி என சாத்யகி எண்ணினான். அதை அவரும் அறிந்தமையால்தான் முழு உளஆற்றலாலும் அதை தவிர்க்கிறார். ஆனால் அவரது உச்சஎல்லை என்று ஒன்று வரும். அதுவரை செல்லவேண்டும்.

கிருஷ்ணன் சகுனியை முழுமையாகவே கட்டமைவுக் கலைக்குள் இழுத்துவிட்டதை சாத்யகி உணர்ந்தான். சகுனி அவர் இயல்பாக இருப்பதாக காட்டும்பொருட்டு அந்தப்பேச்சை எடுத்தார். ஆனால் அதற்குள் இருந்த அவரது உண்மையான ஆவலை உணர்ந்து அதைத்தொட்டு விரித்து விரித்து வலையாக்கி அவரை முழுமையாகவே அதில் சிக்கவைத்துவிட்டான். காந்தாரநகரியை எப்படி கட்டி எழுப்பலாமென்று அவன் விரிவாக சொல்லிக்கொண்டிருந்தான்.

காந்தாரநகரிக்கு மிக அண்மையில்தான் வெண்ணிறக்கற்கள் கிடைக்கும் குன்றுகள் உள்ளன. வெண்கற்களை வெட்டிக்கொண்டுவந்து வெண்மாளிகைகளை அமைக்கலாம். ஆனால் பெரிய கற்களை கொண்டுவருவது கடினம். அதற்கு எளிய வழி உண்டு. அக்கற்களை பெரிய உருளைகளாகவே வெட்டி உருட்டிக்கொண்டு வருவது. மணலில் வருவதனால் அவை மேலும் மெருகேறித்தான் வந்து சேரும். முற்றிலும் உருளைத்தூண்களால் ஆன மாளிகைகள் பெண்மையின் அழகுடன் இருக்கும். அந்த மாளிகைகளால் ஆன உள்நகரை தவளபுரி என அழைக்கலாம். நகரம் என்றால் அதற்கு ஒரு தனித்தன்மை இருக்கவேண்டும். அந்தத்தனித்தன்மையே அதன் பெயருமாக இருக்கவேண்டும்.

கணிகரின் விழிகள் வந்து சாத்யகியைத் தொட்டு விரல்பட்ட புழு என அதிர்ந்து விலகின. சாத்யகி புன்னகை புரிந்தான். கணிகர் வீழ்ந்துவிட்டார். அப்போது அவரை மெல்ல தொடமுடிந்தால் அவர் அழுவார் என்று தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில் கனிவு தோன்றியது. கனிவா என அவனே வியந்துகொண்டான். ஆனால் அவனை மீறியே அக்கனிவு பெருகியது. எளிய மனிதர். பெரும் உளவல்லமையும் கல்வித்திறனும் கொண்டவர். ஆனால் இப்புவியில் மானுடர் உடலால்தான் அறியப்படுகிறார்கள். பிற அனைத்துமே நிலையற்றவை. மாறக்கூடியவை. மாறாதது, திட்டவட்டமானது உடல். அனைவரும் அறிவது அதையே.

உடல் ஓர் அறிவிப்பு. ஓர் அடையாளம். சிதைந்த உடல்கொண்டு பிறந்த இம்மனிதன் தன்னை அறிந்த முதற்கணம் முதல் ‘இல்லை நான் சிதைந்தவனல்ல’ என்று மட்டுமே கூவிக்கொண்டிருக்கிறார். இப்புவியை நோக்கி. விண்ணகத்தேவர்களை நோக்கி. ஆனால் அமைதியாக குனிந்து அத்தனை விழிகளும் அவரது உடலை மட்டுமே நோக்குகின்றன. அவன் சென்று அவரை தொடவிழைந்தான். அவர் தேடுவது எதுவாக இருக்கும்? அழகிய இளம்மனைவியையா? தோள்நிறைக்கும் குழந்தைகளையா? தோள்திரண்ட ஒரு மைந்தன் அவர் கலியை தீர்ப்பானா என்ன? அல்லது அவரை ஞானம் மட்டுமேயாக பார்க்கும் ஒரு மாணவனையா அவர் தேடுவது?

ஆனால் அவரை அணுகவும் முடியாது என சாத்யகி எண்ணிக்கொண்டான். அணுகுவதையே அவர் அவமதிப்பாக எண்ணிக்கொள்ளலாம். மதிப்பையே பிச்சையாக கருதலாம். அவன் தன் உள்ளத்தால் அவரை தழுவினான். அவரது ஒடிந்து மடங்கிய மெல்லிய உடலை தொட்டு வருடினான். அவரது பாதங்களைத் தொட்டு ‘உத்தமரே, உங்களுக்கு பிழையிழைத்த தெய்வங்களை பொறுத்தருளுங்கள்’ என்றான். ஆனால் விழிகளை அவர்மேலேயே நிலைநிறுத்தியிருந்தான்.

“இன்று அவையில் நான் பேசப்போவதை தங்களிடம் சொல்ல விழைந்தேன் காந்தாரரே. ஆனால் அதைப்பற்றி அவையில் மட்டுமே பேசவிழைவதாக சொல்லிவிட்டீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம், அதுவே முறை. நாம் முன்னரே பேசிக்கொண்டு அவைசென்றால் அதை எவ்வகையிலும் மறைக்கமுடியாது. விதுரர் நம் விழிகளைக் கொண்டே அனைத்தையும் அறிந்துவிடுவார். பிறிதொரு நாட்டின் மணிமுடியைக்குறித்து இரு அரசர்கள் பேசிக்கொள்வதை சதி என்றே சொல்வார்கள்” என்று சொல்லி சகுனி புன்னகையுடன் தாடியை நீவினார்.

“உண்மை, ஆனால் நான் தங்களிடம் பேச விழைந்தது காந்தாரத்தைக் குறித்தே” என்றான் கிருஷ்ணன். “அஸ்தினபுரியின் நட்புநாடாகவே என்றும் இருக்கப்போகிறது துவாரகை. காந்தாரமோ மணநாடு. நம்மிருவருக்குள் என்ன உறவு இருக்கமுடியும்?” என்றான் கிருஷ்ணன். “ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மையே. இங்கு நாம் அதைக்குறித்துப் பேசுவது அஸ்தினபுரியின் மணிமுடியைப்பற்றிய பேச்சேயாகும்…” நெய் பற்றிக்கொள்வதுபோல சிரித்தபடி “ஆகவே ஒரு முறை பகடை உருட்டி மீள்வதே நான் செய்யக்கூடியதாக இருக்கும்” என்றான்.

“ஆம், அதைச்செய்வோம்” என்று சகுனி பகடைகளை எடுத்தபடி கைதட்டினார். சேவகன் ஓடிவந்து அவரது புண் கொண்ட காலைத்தூக்கி சிறிய பீடச்சேக்கை மேல் நீட்டி வைத்தான். குறுபீடத்தை எடுத்துப்போட்டு அதன்மேல் மென்மரத்தாலான நாற்களப்பலகையை வைத்தபின் தந்தத்தாலான காய்களும் கருக்களும் கொண்ட பொற்பேழையை எடுத்து வலப்பக்கம் சிறிய பீடத்தின்மேல் வைத்தான். “காந்தாரரின் வலக்கைப் பக்கம் எப்போதும் நாற்களப்பகடை இருக்கும் என நான் அறிவேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், என்னசெய்வது? இங்கு நான் எப்போதும் தனிமையில் இருக்கிறேன். முப்பத்தேழு வருடங்களாக…” என்று சொன்ன சகுனி தன் பகடையை கையில் எடுத்தார்.

“அந்தப் பகடை எலும்புகளால் ஆனது என்று சொன்னார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், கதைகளை நானும் அறிவேன். ஆனால் இது பாலைவனத்து ஓநாயின் எலும்பு” என்று சகுனி சிரித்தார். “ஓநாய் இறுதிவரை நம்பிக்கை இழக்காது. உயிரின் துளி எஞ்சும்வரை போராடும்” என்றபடி “தொடங்குவோமா?” என்றார். கிருஷ்ணன் பகடைகளை எடுத்து “இது யானைத்தந்தத்தால் ஆனதாக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்” என்றான். “நான் யானையை விரும்புகிறேன். காட்டை ஆளும் வல்லமை கொண்டதென்றாலும் அது தனித்திருப்பதில்லை. குலம் சூழும் நிறைவாழ்வு கொண்டது.”

சகுனி தாடியை நீவியபடி “என்ன ஆட்டம்?” என்றார். “ஒருவாயில் கோட்டை” என்றான் கிருஷ்ணன். சகுனி புன்னகைத்து “நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றபடி கருக்களை சீராகப்பரப்பி நாற்கோண வடிவில் கோட்டையை அமைத்தார். காய்களை எடுத்தபடி “யார் காப்பு?” என்றார். “நீங்கள்தான்” என்றான் கிருஷ்ணன். “நான் மீறல்.” சகுனி உரக்க நகைத்து “பார்ப்போம்” என்றார். அவரது விழிகள் மெல்ல மாறத்தொடங்கின. மெல்ல ஒவ்வொரு காயாக எடுத்து அடுக்கி வைத்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக காலாட்களும் குதிரைவீரர்களும் அணிவகுத்தனர். வழக்கமாக குதிரைகளையும் வீரர்களையும் வைக்கையில் அவற்றின் எண்ணிக்கையை மட்டுமே ஆட்டக்காரர்கள் நோக்குவார்கள். சகுனி ஒவ்வொரு வீரனையும் குதிரையையும் தனித்தனியாக நோக்கி மலர்தொடுப்பதுபோல இணைத்து இடம் அமைத்தார். காலாள் வளையம் முன்னால் ஒருவன் பின்னால் இருவர் என்ற அமைப்பில் அமைந்தது. முன்னால் நின்ற வீரன் எளிதில் பின்னகர்ந்து பின்னால் நின்றிருக்கும் இரு வீரர்கள் நடுவே நுழைந்துவிடமுடியும் வகையில்.

குதிரைவளையத்திற்குப் பின்னால் யானைகளின் வளையம். அதன்பின்னால் தேர்களின் வளையம். ஒவ்வொரு வளையமும் தனித்தனி தலைவர்களால் நடத்தப்பட்டன. அவர்கள் தனியாக தூதர்களால் இணைக்கப்பட்டனர். புரவிகள் யானைகள் நடுவேயும் யானைகள் தேர்கள் நடுவேயும் பின்வாங்கவும் முன்னால் செல்லவும் வழி விடப்பட்டிருந்தது. அவர்களால் பாதுகாக்கப்பட்ட கோட்டையின் நடுவே ஒருவாயில் மட்டும் திறந்திருந்தது.

வாயிலின் மேல் கோபுரமுகப்பில் ஏழு படைத்தலைவர்கள் நின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக நான்கு தொடர்புகொண்டிருந்தனர். உள்ளே அரண்களுக்குள் மூன்று அமைச்சர்களுக்கு மேல் அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். கோட்டை மேரு வடிவில் இருந்தது. முதல் வீரனில் இருந்து தொடங்கிய மேருவின் உச்சியில் அரசன் தன் பொன்முடியுடன் நின்றிருந்தான். சகுனி அரசனை அமைத்து முடித்ததும் மீண்டும் பொறுமையாக அரசனில் தொடங்கி இறுதி வீரன்வரை தொட்டு கணக்கிட்டார்.

கணிகர் அமைதியிழந்து எழுவதைப்போல அசைந்தார். கிருஷ்ணன் கணிகரை நோக்கி புன்னகைசெய்தபின் மீண்டும் உருவாகி வந்து நின்ற நகரை நோக்கினான். உள்ளே செல்லும் வழி மட்டுமே கொண்டது. வென்றவனும் பின்வாங்காமல் மீளமுடியாதது. சகுனி அதன் அரசனை கீழிருந்து நோக்கியபின் வீரனை மேலிருந்து நோக்கினார். தாடியை வருடியபடி விழிக்குள் அமிழ்ந்து மறைந்ததுபோன்ற நோக்குடன் அதை நோக்கு கூர்ந்தார்.

பின்னர் நிமிர்ந்து கிருஷ்ணனை நோக்கி மெல்லிய புன்னகையுடன் “நீங்கள் களம் அமைக்கலாம் யாதவரே” என்றார். கிருஷ்ணன் “வல்லமை வாய்ந்த கோட்டை காந்தாரரே” என்றான். “எளிமையானது. ஆகவே முடிவில்லாமல் தன்னை மாற்றிக்கொள்ளும் அமைப்புகொண்டது. வல்லமைகளில் முதன்மையானது அதுவே” என்றான்.

முந்தைய கட்டுரைகி ரா உடன் ஒரு மாலை….
அடுத்த கட்டுரைமின்தமிழ் பேட்டி 4