நான் கல்லூரிமாணவனாக இருந்தபோது ரஸவாதம் பற்றி ஒரு கதை எழுதினேன். அது விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு பல பெயர்கள். அந்தக்கதைக்கு தகவல்கள் தேவைப்பட்டன. நூலகத்தில் போய் அங்கே எனக்கு பழக்கமான உதவியாளரிடம் ரஸ்வாதம் பற்றிய ஏதாவது புத்தகம் வேண்டும் என்றேன். ”அப்படியெல்லாம் கிடையாது, வேணுமானா அபிதான சிந்தாமணியிலே தேடிப்பாரு” என்றார். அப்போதுதான் நான் அபிதான சிந்தாமணியை முதலில் பார்த்தேன். வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. ஆயிரத்துக்குமேல் பக்கம். தூக்கி ஒரு கட்டையில் வைத்து புரட்டிப்படித்தேன். அன்றுமுழுக்க படித்துக்கொண்டே இருந்தேன். ஆராய்ச்சியெல்லாம் பின்னுக்குப்போய் அந்த நூலே என்னை ஆட்கொண்டது. பலவாரங்கள், பல மாதங்கள்.
அன்றுமுதல் இன்றுவரை அபிதானசிந்தாமணி நான் மீண்டும் மீண்டும் படிக்கும் நூலாக உள்ளது. என் கைக்கருகே அந்நூல் எப்போதுமே இருக்கும். பல பகுதிகள் எனக்கு மனக்கண்ணிலேயே தெரியும். அபிதான சிந்தாமணியை நம்முடைய தொல்மரபைச்சேர்ந்த ஒருவகை கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம். சம்ஸ்கிருதத்தில் அகரவரிசைப்படி சொற்பொருள் கொடுத்திருக்கும் நூல் நிகண்டு எனப்படும். அகரவரிசைப்படி செய்திகள் கொடுக்கப்பட்ட நூல் கோஸம் என்று சொல்லப்படும். ஒரு குட்டி கலைக்களஞ்சியம் அது. அபிதானசிந்தாமணி கோஸம் என்ற நூல்வகையைச் சேர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை நூல்
சமணம் தமிழ்நாட்டில் வேரூன்றியபோது சம்ஸ்கிருதம் ஒரு புரோகித மொழி என்ற இடத்தை விட்டு ஒரு பயிற்றுமொழியாகவும் இணைப்புமொழியாகவும் மாறியது. ஆகவே அவர்கள் சம்ஸ்கிருத பாணியிலான நூல்களை உருவாக்கினார்கள். இலக்கண நூல்களையும் மருத்துவ நூல்களையும் உருவாக்கினர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வாறு உருவானவை. சமணர்கள் ஆரம்பகால நிகண்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார். 1855ல் சென்னையில் பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1890 ல் இந்நூலை உருவாக்க ஆரம்பித்தார். தன்னுடைய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான சி.கோபால ராயர் ஒருநாள் தன்னை அழைத்து எனமண்டாரம் வெங்கடராமய்யர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய புராணநாம சந்திரிகை என்ற நூலை அளித்து அதைப்போல ஒன்றைச் செய்யக்கூடாதா என்று கேட்டதாக பச்சையப்ப முதலியார் சொல்கிறார். அதை முதல்நூலாகக் கொண்டு சிங்காரவேலு முதலியார் அதையே புராணநாமாவலி என்று பெயரிட்டு எழுத ஆரம்பித்தார்.
ஆனால் விரைவிலேயே புராணநாம சந்திரிகை போதாமைகள் மிக்க சிறிய நூலே என்று கண்டு கொண்டு மேலும் மேலும் நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். நூல்கள் மிகவும் குறைவென உடனேயே உணர்ந்தார். ஊர் ஊராகச் சென்று சிறு பிரசுரங்களையும் ஏடுகளையும் சேகரிக்க ஆரம்பித்தார். செவிவழிக்கதைகளை திரட்டினார். ஸ்தலபுராணங்களை ஓதுவார்களிடமிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதைசொல்லிகள், ஹரிகதைப் பிரசங்கிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டே இருந்தார். மெல்லமெல்ல மறைந்து வந்த பழைய ஞானத்தின் எஞ்சிய பகுதிகளை, மூழ்குபவனின் துணியைப் பிடித்து இழுத்தெடுப்பதுபோல, அவரால் மீட்க முடிந்தது.
இவ்வாறு பல்லாயிரம் பக்கங்கள் கைப்பிரதியாக எழுதிச்சேர்ந்த்தார் சிங்காரவேலு முதலியார். இன்றைய அபிதான சிந்தாமணி ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாக மிகப்பொடி எழுத்து. அப்படியானால் எப்படிப்பார்த்தாலும் கடைசிக் கைப்பிரதி 9000 பக்கங்களுக்கு இருந்திருக்க வேண்டும். தனித்தனிக்குறிப்புகளாக எழுதியவற்றை கட்டுரைகளாக ஆக்கி அவற்றை மீண்டும் அகராதிமொழிக்கு சுருக்கி எழுதினார் சிங்காரவேலு முதலியார். அதாவது மூன்றுமுறை நகல் எடுத்திருக்கிறார். அகரவரிசைப்படி இவற்றைக் கோர்ப்பதற்கே சில மாதங்கள் ஆகினவாம்.
சிங்காரவேலு முதலியார் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலைபார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி இந்தப்பெரும்பணியை செய்து முடித்தார். சொற்களுக்கு நடுவே போடும் கட்டை இல்லாமல் நெருக்கி ஏறத்தாழ 1050 பக்கங்கள் அச்சுகோத்து ஒரு சில நகல்கள் எடுத்துக்கொண்டார். அவற்றுடன் சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.
சென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணத்தை நாடினார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைப்பிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டி பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவவேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார். அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேஷகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது ‘நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை குயுரேட்டரும் பச்சையப்பன் கல்லூரி தருமகர்த்தாவுமான வ.கிருஷ்ணமாச்சாரியிடம் சென்று மன்றாடினார் சிங்காரவேலு முதலியார். அவர் சில அச்சுக்கூடத்தவர்களிடம் கேட்டுவிட்டு இதற்கு செலவு நிறைய ஆகுமே என்று சொல்லி போகச்சொல்லிவிட்டார்.
இதற்கிடையே சிங்காரவேலு முதலியார் மீது பச்சையப்பா பள்ளி மேலாளர்களுக்கு பொறாமையோ கோபமோ உண்டாயிற்று. அவர் ஆசிரியப்பணியை செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டார். உயர்கல்வித்தகுதி இருந்தும் பச்சையப்பா அறக்கட்டளையைச் சேர்ந்த பி.டிசெங்கல்வராய நாயக்கர் ஆரம்பப்பள்ளி, கோவிந்த நாயக்கர் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். ஆரம்பப்பளி ஆசிரியருக்கான மிகக்குறைவான வருமானத்தில் சென்னையில் வாழவே முடியாத நிலை.
மனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை வெளியிடுவதற்கு நிதி கோரி இதழ்களில் ஓர் கைச்சாத்து அறிக்கையை வெளியிட எண்ணி பலரிடம் கையெழுத்து கோரினார். அக்கால வழக்கப்படி ஒரு நூலை அச்சிடும் முன் அதன் முதல் அச்சு நகலைப் பார்வையிட்டு, பிரசுரமாகும்போது அதைப் பணம் கொடுத்து வாங்கிகொள்கிறோம் என்று கையெழுத்திட்டு கொடுக்கும் வழக்கம் இருந்தது. பெரிய நூல்கள் அவ்வாறுதான் அச்சில் வந்தன. ஆனால் பெரும்பாலானவர்கள் இது தேவையற்ற ஆடம்பர முயற்சி என்று சொல்லி ஒதுங்கினர். சிலரே கையெழுத்திட்டனர். இரண்டு அறிக்கைகளை பிரசுரித்துப் பார்த்தார். அம்முயற்சியும் வீணாயிற்று.
மனம்சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார். இக்காலகட்டத்தில் பல கோஸங்கள் அரைகுறையாக எழுதப்பட்டு அவசரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் ஊத்துத்தம்பிப் புலவர் எழுதிய அபிதானகோஸம் மட்டுமே ஓரளவேனும் முக்கியமானது. இந்நிலையில்தான் தான் வழிபட்ட முருகக் கடவுள் தன்னைப் பார்த்து கனிந்தார் என்று சிங்காரவேலு முதலியார் எழுதுகிறார். நாலாவது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் பாலவநத்தம் ஜமீந்தாருமான பாண்டித்துரை தேவர் சிங்காரவேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையைப் பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார்.
அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் ஆனந்தக்களிப்பு அடைந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார். கைப்பிரதியை மதுரைக்குக் கொண்டுசென்று மீண்டும் செம்மையாக்கி எழுதுவித்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அச்சகம் இருந்தும் கூட சிங்காரவேலு முதலியாரின் வசதிக்காக அந்நூல் சென்னையிலேயே அச்சாகியது. சிங்காரவேலு முதலியார் அதன் முதல் பதிப்புக்கு மெய்ப்பு பார்த்தார். அக்கால் வழக்கப்படி தினமும் அச்சகம் சென்று பிழைதிருத்தம் செய்ய வேண்டும். பத்துமுறைக்குமேல் பிழை நோக்கப்பட்ட இந்த மாபெரும் நூலில் அச்சுப்பிழை என்பதே கிடையாது.
இந்நூலில் இருவருக்கு தனியாக நன்றி சொல்கிறார் சிங்காரவேலு முதலியார். ஒருவர் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர் . சமணமதம் சார்ந்த தகவல்களைச் சொல்லித்தந்த அப்பாசாமி நயினார் இன்னொருவர்.1910ல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுபோன விஷயங்களை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932ல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்!
சிங்காரவேலு முதலியார்யின் மைந்தர் ஆ.சிவப்பிரகாச முதலியார் இரண்டாம் பதிப்பை தந்தை மரணமடைந்தபின் வெளியிட்டார். திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இதன் இரண்டாம்பதிப்புக்கு பிழை திருத்தம்செய்தார். இந்நூல் ஸி.குமாரசாமி நாயிடு ஆன்ட் ஸன்ஸ் நிறுவனம் 1934ல் வெளியிட்டது. அதன்பின் நெடுநாட்கள் அபிதான சிந்தாமணி மறு அச்சு வரவேயில்லை. 1981ல் ஆசிய கல்வி சேவை நிறுவனம் டெல்லி சிவப்பிரகாச முதலியாரின் இரண்டாம் பதிப்பை அப்படியே ஒளிநகல் எடுத்து நூலாக்கியது. அதன் 11 ஆவது மறு அச்சு 2006ல் வெளிவந்ததுது இப்போதும் கிடைக்கிறது.
அபிதான சிந்தாமணி எப்படிப்பட்ட நூல்? முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் அனேகமாக எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே ரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை. ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.
இரண்டாவதாக, தொன்மையான சாஸ்திரநூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தொன்மையான தமிழ் வாழ்க்கையின் சித்திரம் கற்கக் கற்க முடிவிலாது விரியும்.தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப்பற்றிய தகவல்கள் என இந்நூல் அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை.
மூன்றாவதாக, தொல்தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கபப்ட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் தமிழ்நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.
மூன்றாவதாக, தமிழரின் அன்றாட வாழ்வியல் குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உபசாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள்… நூறு வயது கண்ட ஆயிரம் பாட்டிதாத்தாக்களுச் சமம் இந்த நூல்.
இதைத்தவிர அன்றைய அறிவியல்தகவல்களையும் அளித்திருக்கிறார் சிங்காரவேலு முதலியார். அவை இந்நூலில் போதாமையுடன் உள்ளன. அவற்றை முழுக்க உதாசீனம் செய்ய முடியாது. பல அறிவியல் விஷயங்கள் அக்காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதற்கான ஆதாரம் அவை.
இதன் தலைப்புகளைப் பார்த்தால் வியப்பூட்டும். உதாராணமாக, க வரிசையில் ககந்தன், ககபதி, ககமுகன்,ககனமூர்த்தி,ககுத்சதன்,ககுத்து,ககுத்தன்,ககுத்மி,ககுபு,ககுபை,ககுப்தேவி,ககேந்திரன்,ககோலன்,ககோளர்,ககோள விவரணம்…என்று போகிறது சொல் வரிசை. ஒரு தலைப்பின்கீழ் செய்திகளை மிகச்சுருக்கமான மொழியில் கொடுத்திருப்பதில் நவீன கலைக்களஞ்சியங்களுக்கெல்லாம் இது வழிகாட்டியாக சொல்லலாம்.
உதாரணம். கண்ணகி என்ற தலைப்பில் இரண்டு பத்திகள். கண்ணகி– 1. பத்தினிக்கடவுள். மங்கல மடந்தை, திருமாபத்தினி ,வீரபத்தினியென்பன இவளுக்குரிய பர்யாய நாமங்கள். கோவலன் மனைவி[கோவலனைக் காண்க] 2. வையாவிக் கோப்பெரும்பேகனுக்குரியவள். இவள் ஒரு காலத்தில் இன்னாதுறக்கப்பட்டு கபிலர் பரணர் அரிசிற்கிழார் முதலியவர்களை நோக்கி அரசனைப்பாடி அரசனுடன் சேர்த்து வைக்க வேண்டியவள் [புற.நா]
கண்ணகியில் இருந்து கோவலனுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இளங்கோவுக்கும்சென்றால் மிக விரிவாகவே மொத்தக் கதையும் கிடைக்கும். இத்தகைய செறிவான நூலில் இந்திரன், ஔவையார் போன்ற தலைப்புகளில் இரண்டு மூன்று பக்கங்கள் அளவுக்குக் கூட தகவல்கள் காணப்படுகின்றன.
சிங்காரவேலு முதலியார் தமிழுக்கு பெருந்தொண்டு புரிந்திருந்தாலும் சாதாரணமானவர்கள் நினைக்கப்படும் அளவுக்குக் கூட அவர் நினைவுகூரப்படுவதில்லை. அவரைப்பற்றிய தகவல்களேகூட அரிதாகவே உள்ளன. அபிதான சிந்தாமணி மிகப்பழைய கல்லச்சுப் பதிப்பே இப்போதும் ஒளிநகலெடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதை மறுபடியும் அச்சுகோர்த்து பிழைதிருத்தம்செய்து புதிய பதிப்பு கொண்டுவருவதற்கு நம்மிடம் இன்று அறிஞர்கள் இல்லை. இந்த மாபெரும் நூலை உரிய முறையில் பிழைதிருத்தம்செய்வது எத்தனை பெரும்பணி என்பதை சொல்ல வேண்டியதில்லை. அத்துடன் தஞ்சை தமிழ்பல்கலை போன்றவை வெளியிட்டுள்ள பிழை மலிந்த நூல்களைப் பார்க்கையில் தமிழ் கல்வித்துறையால் அது சாத்தியமா என்ற பிரமிப்பே ஏற்படுகிறது.
தமிழகத்துப் பேராலயங்கள், மாபெரும் ஏரிகள் போன்றவற்றைப் பார்க்கையில் இந்த மகத்தான செல்வங்களை பேணி வைத்துக்கொள்ளக்கூட திறனற்ற தலைமுறையினராக இருக்கிறோமே என்ற சோர்வு ஏற்படுவதுண்டு. ஒவ்வொருமுறை அபிதான சிந்தாமணியைப் பார்க்கும்போதும் அதே நினைவுதான் எழுகிறது.