«

»


Print this Post

அரவான்


வசந்தபாலனும் நானும் அவரது அடுத்த படமாக உத்தேசித்திருந்தது இன்னொரு கதை. கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டோம். எழுத எழுத பெரிதாகியது. ஒருகட்டத்தில் முக்கியமான ஒரு நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது என்ற நிலை. கடந்தகாலத்தைச் சித்தரிக்க வேண்டுமென்பதனால் பெரிய செலவு. வசந்தபாலனுக்கு முன்பணம் அளித்திருந்த தயாரிப்பாளர் பெரியபடம் செய்ய தயாராக இல்லை, அப்போது அங்காடித்தெரு தயாரிப்புநிலையிலேயே இருந்தது.

ஆகவே அந்தப்படத்தைத் தள்ளி வைத்து இன்னொரு கதை யோசித்தோம். ஒரே தொடர்ச்சியாக ஒரே கிராமத்தில் எடுத்துமுடிக்கவேண்டிய படமாக. கதைகள் வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன. நான் அப்போதுதான் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் பற்றி ஒரு நெடுங்கட்டுரை எழுதியிருந்தேன். அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று வசந்தபாலனிடம் ‘காவல்கோட்டத்தில் இப்படி ஒரு கதை வருகிறது. அது ஒரு அபாரமான சினிமா’ என்று உற்சாகமாக சொன்னேன். அவர் பாய்ந்து எழுந்து ‘சார், அதை உங்ககிட்ட பேசத்தான் நானே வந்தேன்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது

இன்று ‘அரவான்’ பூஜை. இதன்மூலம் இலக்கியப்புரிதலும் தனக்கே உரிய அரசியலும் கொண்ட இன்னொரு தீவிரமான இலக்கியவாதி சினிமாவுக்குள் வருகிறார். சு.வெங்கடேசனின் வருகை இன்னும் பல எழுத்தாளர்களுக்கு வாசலாக அமையவேண்டும். தமிழ் சினிமாவில் இன்று நடுத்தர சினிமாவுக்கான ஒரு தேடல் தொடங்கியிருக்கிறது. எழுபதுகளில் மலையாளத்தில் நிகழ்ந்தது போல. இன்னமும் பெரிய கதாநாயகர்கள் நடுத்தர சினிமாவுக்காக முன்வர ஆரம்பிக்கவில்லை. ஆனால் அது விரைவிலேயே நிகழும். அப்போது பல கோணங்களில் தமிழ் வாழ்க்கையை எழுதக்கூடிய எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வரவேண்டிய தேவை இருக்கும்.

எழுத்தாளர்களும் இயக்குநர்களும் இரு தளங்களில் நின்று செலுத்தினால் மட்டுமே நல்ல படங்கள் வரமுடியும். நல்ல எழுத்தாளன் அபூர்வமாகவே நல்ல இயக்குநராக முடியும். அதேபோல நல்ல இயக்குநர் அபூர்வமாகவே நல்ல எழுத்தாளனாகவும் ஆக முடியும். ஒரு நல்ல படைப்பில் எழுத்தாளன் நுட்பமாக இயக்குநருக்கு எதிரான சக்தியாக இருப்பான். அவன் அந்தப்படத்தை மொழிவயமாக ஆக்க முயன்றபடியே இருப்பான். இயக்குநர் அவனை வென்று அதை காட்சிவடிவமாக ஆக்குகிறார். இந்த முரணியக்கமே நல்ல படைப்புக்கு உயிரை கொடுக்கிறது.

நல்ல எழுத்தாளர்கள் பலர் திரைக்குள் நுழையக்கூடிய தருணம் இது. அவர்களின் பங்களிப்பு மூலம் சினிமாவிலிருந்து சினிமா என்ற வழக்கம் மறையக்கூடும். இன்று தொடங்கும் அரவானின் வெற்றி அந்த போக்குக்கு அடுத்த கட்ட உத்வேகத்தை அளிக்கக் கூடும். இலக்கியம் அறிந்த வசந்தபாலன் போன்ற இயக்குநர்களே அந்த அலையை உருவாக்க முடியும்.

வசந்தபாலனுக்காக நாங்கள் உருவாக்கிய அடுத்த படம் இன்னும் பெரிய அளவில் முக்கியமான நடிகர் ஒருவரின் பங்கேற்போடு அடுத்த வருடம் தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ளது.

வசந்தபாலனுக்கும் சு வெங்கடேசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

http://www.aravaanthemovie.com/

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7308/

5 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்தப படமும் அங்காடி தெருவை போல வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  வசந்த பாலனின் பாசெபூக் (முக புத்தகத்தில்) எழுதி இருந்தார். இயக்குனர் ஷங்கர் இன்று இந்தப் படம் குறித்து விவாதிக்க /பிரதிஷ்டை செய்ய வருகிறார் என்று.

 2. Prasanna

  ஒரு நல்ல படைப்பு நம் வாழ்கையை பாதிக்கும் அளவு தான் அந்த படத்தின் வெற்றியின் அளவு. அந்த வகையில் இலக்கிய தாக்கம் நிறைந்த எந்த ஒரு படைப்பும் இது வரை சோடை போனது இல்லை.
  இந்த “அரவானும்” ஒரு நல்ல இலக்கிய படைப்பாய் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கட்டும்.
  படம் சிறப்பாக அமைய உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

  பிரசன்னா

 3. ramji_yahoo

  அரவான் என்றால் அரவாணியினரில் ஆண் பாலா

 4. V.Ganesh

  “இலக்கியம் அறிந்த வசந்தபாலன் போன்ற இயக்குநர்களே அந்த அலையை உருவாக்க முடியும்.”
  தமிழ் சினிமா ஒரு நல்ல களம் என்ற நிலைமை அடைய வாழ்த்துகள்

 5. tdvel

  அரவான் என்பது ஒரு முழுமையான ஆண் என்பதால் களப்பலியிடப்படும் மகாபாரதக்கதாபாத்திரம். கிருஷ்ணர் தன்னை ஆயிரம் பெண்களாய் உருவெடுத்துக்கொண்டு அவன் களப்பலியில் இறப்பதற்கு முதல்நாள் அவனை மணந்துகொள்வார். அந்த அவதாரங்களின் வழிதோன்றல்களாக தன்னை திருநங்கைகள் கருதிக்கொள்வதால் தங்களின் அரவாணிகள் என அழைத்துக்கொள்கின்றனர். இக்கதைப்பிரிவு வியாச பாரதத்தில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை.

Comments have been disabled.