‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47

பகுதி 10 : சொற்களம் – 5

குந்தியின் மாளிகையிலிருந்து காம்பில்யத்தின் மையச்சாலை சற்று தொலைவில் இருந்தது. கங்கைக்கரையில் துருபதனின் இளவேனில் உறைவிடமென கட்டப்பட்டது அது. அதிலிருந்து எழுந்த தேர்ச்சாலை வளைந்து வந்து கோட்டையை ஒட்டி துறைமுகம் நோக்கிச்சென்ற வணிகச்சாலையில் இணைந்தது. வணிகச்சாலையில் அவ்வேளையில் குறைவாகவே பொதிவண்டிகளும் சுமை கொண்ட அத்திரிகளும் சென்றன. அவை இரவில்தான் பெரும்பாலும் சாலைநிறைத்து ஒழுகிக்கொண்டிருக்கும்.

தேர்ப்பாகன் மணியை ஒலித்தும் சவுக்கை காற்றில் சுழற்றியும் வழி உருவாக்கி முன்னால் சென்றான். கிருஷ்ணன் தேர்த்தட்டில் கைகட்டி நின்று இருபக்கமும் கிளைவிட்டுப் பிரிந்து சென்ற நகர்த்தெருக்களை நோக்கிக்கொண்டிருந்தான். விடிகாலையில் தொடங்கி வெயிலுடன் இணைந்து விரைவுகொண்ட நாளங்காடியின் பரபரப்பு வெயில் அனல்கொள்ளத்தொடங்கிய பின்னரும் நீடித்தது. காம்பில்யத்தின் பெரிய மரக்கட்டடங்களின் நிழல் சிறிய சாலைகளில் விழுந்திருந்தமையால் அங்கே சிறுவணிகர்கள் கடை விரித்திருந்தனர். பலவகையான மக்கள் அங்கே தோளோடு தோள் நெரித்துநின்று கூவியும் சிரித்தும் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் தேரை நிறுத்தச்சொல்லி இறங்கி தன் சால்வையை தேரிலேயே விட்டுவிட்டு இடையில் கச்சையாகக் கட்டிய செம்பட்டை உருவி காதுகளின் மணிக்குண்டலங்கள் மறையும்படி கட்டிக்கொண்டு தெருவில் நடந்தான். கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றி கச்சை மடிப்புக்குள் வைத்துக்கொண்டான். அலையடிக்கும் நதியொன்றில் கால் குளிர இறங்கி மூழ்கி நீந்தத் தொடங்கியதுபோல அந்த மக்கள்பெருக்கில் சென்றான்.

அங்கு பெரும்பாலும் அன்றாடப்பொருட்களே விற்கப்பட்டன. உப்பிட்டு உலர்த்தப்பட்ட கடல்மீன்கள் அந்தத் தெருமுழுக்க நிறைந்திருந்தன. திரைச்சி மீனின் உப்பிட்ட ஊன் பிளந்து பரப்பப்பட்ட வெண்ணிறமான பாறையைப் போல தெரிந்தது. தாழைமடல்கள் போன்ற வாளைகள். மாவிலைச்சருகு போன்ற சாளைகள். துருவேறிய குறுவாள்களைப்போன்ற குதிப்புகள். குத்துவாள்களைப்போன்ற முரல்கள். காய்ந்த ஆலிலைகளைப்போன்ற நவரைகள். வேப்பஞ்சருகுக் குவியல்களைப்போன்ற பரல்கள். கங்கையில் பசுமீன் கிடைத்தாலும் காம்பில்யத்தினர் கடலின் உலர்மீனை விரும்பி உண்டனர் என்று தெரிந்தது.

கிருஷ்ணன் உலர்ந்த செங்கூனிப்பொடியைக் குவித்து வைத்திருந்த வணிகன் முன் நின்று கூர்ந்து நோக்கினான். “இது வங்கத்து செங்கூனி. தினையுடன் கலந்து இடித்து உருட்டி உண்பவன் பீமனுக்கு நிகரான தோள் பெறுவான். பீமன் கைச் சமையலை வெறுப்பான்” என்றான் வணிகன். “வாங்குக… கொண்டுசெல்ல உயர்ந்த கமுகுப்பாளையாலான தொன்னையை நாங்களே தருகிறோம். இப்போது வாங்காதவர் எப்போதும் இதைப்பெற முடியாது… ஆம்!”

கிருஷ்ணன் அமர்ந்து அதை கையால் அள்ளி நோக்கினான். அதன்பின்னரே அது என்ன என்று புரிந்தது. அது தென்னாட்டில் பிடிக்கப்படும் ஓடுள்ள சிறியவகை மீன். மீன் என்பதைவிட கடற்பூச்சி என்றுதான் சொல்லவேண்டும். எறும்பு அளவுக்கு செவ்வெறும்பின் நிறத்தில் எட்டு கால்களும் கொடுக்குகளுமாக ஓடுகொண்ட கூன்முதுகுடன் இருக்கும். கூனிருப்பதனால் கூனி என நினைத்துக்கொண்டான். தென்னாட்டில் அதை உலரச்செய்து இடித்து போர்க்குதிரைகளுக்கு உணவாக அளித்தனர். மானுடர் உண்பது மிகக்குறைவு.

“என்ன விலை?” என்றான். ”ஒரு கல் அரைச்செம்பு…” என்றவன் “வேண்டுமென்றால் சற்று குறைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நான் இன்றே இதை விற்றுவிட்டு ஊர் செல்லவேண்டும்” என்றான். கிருஷ்ணன் “நீர் வங்கரா?” என்றான். “இல்லை. நான் பிரமாணகோடியை சேர்ந்தவன்…” என்றான் வணிகன். “ஒரு கல் போடும்” என்று சொல்லி வாங்கிக்கொண்டு கிருஷ்ணன் நடந்தான். ”இங்குதான் என் கடை… மீண்டும் வாங்க இங்கேயே வருக!” என்று வணிகன் பின்னால் கூவினான்.

நாளங்காடியில் பெரும்பாலும் பெண்களே பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். வற்றலாக ஆக்கப்பட்ட கோவைக்காயும் வழுதுணையும் வெண்டைக்காயும் சிறிய குன்றுகளாக குவிந்திருந்தன. மலையிலிருந்து வந்திறங்கிய பலாக்கொட்டைகள். கன்னங்கரிய பளபளப்புடன் காராமணி. சிப்பிக்குவியல்போல மொச்சை. ஒரு குவியலை அடையாளம் காணமுடியாமல் அவன் நின்றான். குனிந்தமர்ந்து அது என்ன என்று நோக்கினான். பூசணி விதை. “வறுத்து உண்ணலாம் இளைஞரே. மழைக்காலத்தை சுவையானதாக ஆக்கலாம்.” கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்துகொண்டான்.

தொலைவிலேயே அவன் பீமனை கண்டான். தோலுடன் முழுதாகவே உலரவைத்து தொங்கவிடப்பட்டிருந்த பெரிய காட்டுப்பன்றிகளின் அருகே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அருகே சென்று நின்றதும் இயல்பாகத் திரும்பி நோக்கிய பீமன் “நீயா? இங்கே என்ன செய்கிறாய்?” என்றான். “இளவேனில் மாளிகைக்கு சென்றேன். திரும்பும் வழியில் இந்த அங்காடியை பார்த்தேன்” என்றான் கிருஷ்ணன். “நானும் அங்கு செல்லவேண்டும். அன்னை ஐவரையும் வரச்சொல்லியிருந்தார்கள். பிறர் சென்றுவிட்டார்கள். செல்லும் வழியில் நான் இங்கே புகுந்துவிட்டேன்” என்றான் பீமன். “அது என்ன கையில்?”

கிருஷ்ணன் “கூனிப்பொடி என்றான் வங்க வணிகன். அவனை ஏமாற்றவேண்டாமே என வாங்கினேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். பீமன் அந்த பாளைப்பையை வாங்கி திறந்து “சிறந்தது. அப்படியென்றால் இதை விற்றவன் பிரமாணகோடியின் வணிகனாகிய கருடன். அவன் என் நண்பன்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “நினைத்தேன்” என்றான். பீமன் அதை அள்ளி வாயிலிட்டு மென்றான். “பச்சையாகவா?” என்றான் கிருஷ்ணன். “நான் எதையும் பச்சையாகவே உண்ண விழைபவன். இங்கே பச்சையாகக் கிடைக்காது என்பதனால் உலரச்செய்ததை உண்கிறேன்” என்ற பீமன் “இது மிகவும் சுவையானது. இதை கடல்பொரி என்கிறார்கள். விலைதான் கூடுதல். வங்கத்தில் இருந்து வரவேண்டும். தாம்ரலிப்தியிலேயே இதற்கு மிகவும் விலை அதிகம். கீழே தென்பாண்டி நாட்டிலிருந்து வருகிறது…” என்றான்.

“வணிகர்களின் கொள்நிதி கூடுதல்…” என்று கிருஷ்ணன் சொன்னான். “உண்மையில் இதற்கு தென்பாண்டி நாட்டில் பெரிய விலை இல்லை. கௌடநாட்டில் மிகுதியாகவே கிடைக்கிறது.” பீமன் தின்று முடித்து அந்தப்பையை அருகே இருந்த ஒரு வணிகனிடம் அளித்தான். “என்ன செய்வது? சுவை என்றால் விலைகொடுத்தாகவேண்டும் அல்லவா?” என பீமன் சொன்னான். “அடுத்த மாதம் முதல் இங்கும் விலை குறையும். இதைவிட சுவையான கூனிப்பொடி கிடைக்கும்.” பீமன் திரும்பி நோக்கினான். “கௌடநாட்டிலிருந்து துவாரகை வழியாக இங்கே வரும்” என்றான் கிருஷ்ணன்.

அவர்கள் நெரிசலினூடாக நடந்தார்கள். “நாளங்காடியின் உணவுக்கடைகள் வழியாக உலவுவதைப்போல இன்பமளிப்பது அடர்காடு மட்டுமே” என்றான் பீமன். “புழுக்கள் நல்லூழ் கொண்டவை என நான் எண்ணுவதுண்டு. அவற்றுக்குத்தான் உண்பதும் உறங்குவதும் உறைவதும் உணவிலேயே என தெய்வங்கள் வகுத்துள்ளன. இங்கு வரும்போது உணவில் நெளியும் புழுக்கூட்டங்களில் ஒன்றாக ஆகி நெளியும் பேருவகையை அடைகிறேன்.” கைவிரித்து “எத்தனை உணவுகள். சமைக்கப்படாத உணவு என்பது சமையலுக்கான பல்லாயிரம் இயல்தகவுகளின் பெருக்கம்…” என்றான்.

“நீர் வாயால் உண்பதைவிட கூடுதலாக உள்ளத்தால் உண்கிறீர்” என்று கிருஷ்ணன் சிரித்தான். “ஆம், நாம் அறியும் அனைத்துச்சுவைகளும் அவ்வாறுதானே?” என்றான் பீமன். “உண்மை” என்றான் கிருஷ்ணன். “இங்கே ஏனித்தனை உலருணவுகள்?” பீமன் “மழைக்காலம் வரவிருக்கிறது. பாஞ்சாலர் பெரும்பாலும் மலைகளில் வாழ்ந்தவர்கள். அக்காலத்தில் மழைக்காலத்தில் இங்கே மலைப்பாதைகள் அழிந்துவிடும். மீண்டும் சாலைகள் உருவாகி வரும்வரை உணவை சேர்த்து வைப்பார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது” என்றான்.

“இன்னும் மழைமுன் வணிகம் விரைவுகொள்ளவில்லை. உலர்ந்த ஊனும் மீனும் கொட்டைகளும் காய்களும் இங்கே குவியும். அத்தனை பாஞ்சாலரின் இல்லங்களும் உணவுக்கலவறைகளாக மாறும். மழைக்காலத்தில் காம்பில்யத்தில் மக்கள் வாழ்கிறார்களா என்ற ஐயம் எழும். மலைச்சாரல்களில் எங்கும் மானுடச்சாயலையே காணமுடியாது. வறுத்தும் சுட்டும் கொறித்தபடி மூதாதையர் கதைகளைக் கேட்டுக்கொண்டு மனைவிகுழந்தைகளுடன் ஒடுங்கி அமர்ந்திருப்பார்கள்.”

“இத்தனை ஒடுக்கமாக ஏன் அங்காடித்தெருக்களை அமைத்திருக்கிறார்கள்? சற்று அகன்ற தெருக்களை அமைக்கலாமே?” என்றான் கிருஷ்ணன். பீமன் ”கருணர் அமைச்சராக வந்ததும் கங்கையை ஒட்டி பெருவீதிகளை அமைத்து அங்காடியை அங்கே கொண்டுசென்றார். அந்த அங்காடிவீதிகள் இன்றும் உள்ளன. அங்கு எளியமக்கள் செல்வதில்லை. அங்கு பெருவணிகம் மட்டுமே உள்ளது” என்றான்.

கிருஷ்ணன் ”ஏன்?” என்றான். “எளியமக்கள் வாங்கும் அளவு மிகக்குறைவு. அத்துடன் அவர்கள் விலைப்பூசல் செய்து வாங்க விழைகிறார்கள். பெரிய கடைவீதியில் அவர்கள் தனித்து நிற்கும் உணர்வை அடைகிறார்கள். தாங்கள் பிறரால் பார்க்கப்படுவதாக எண்ணி கூசுகிறார்கள். இங்கே நெரியும் பெருங்கூட்டம் ஒவ்வொருவருக்கும் பெரிய திரையென ஆகிவிடுகிறது. தங்களைப்போன்றவர்கள் சூழ பெருங்கூட்டமாக இருக்கையில் தனியாகவும் உணர்கிறார்கள்” என்றான் பீமன். கிருஷ்ணன் நோக்கியபின் “உண்மை… இந்தப் பெண்கள் எவராவது நோக்குகிறார்கள் என எண்ணினால் இத்தகைய ஓசையை எழுப்ப மாட்டார்கள்” என்றான். “ஓசையும் பெரிய திரையே” என்றான் பீமன்.

”நல்ல அறிதல்” என்றான் கிருஷ்ணன். “அறியாதவை ஏதுமில்லை என உணரும் கணத்தில் ஒரு புதிய அறிதல் வந்து பேருரு காட்டுகிறது… துவாரகையில் நெரிசலான மிகச்சிறிய தெருக்களே இல்லை. அவற்றை உருவாக்கவேண்டும். இந்தச் சிறிய தெருவில் சிறிய அளவில் நிகழும் வணிகம் ஒட்டுமொத்தமாக மிகக்கூடுதல்.” பீமன் “ஆம், இதை எறும்புப்புற்று என்கிறார்கள் வீரர்கள். இங்கே சில களஞ்சியங்களில் இப்பெருநகரை ஒருமாதம் ஊட்டும் அளவுக்கு உணவு குவிந்திருக்கிறது” என்றான்.

மீண்டும் சாலைக்கு வந்து அங்கே ஒதுங்கி நின்ற தேரை நோக்கி செல்லும்போது பீமன் “உன்னிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்” என்றான். கிருஷ்ணன் நிமிர்ந்தான். “திரௌபதி உன்னை தனிமையில் சந்திக்க விழைகிறாள். உன்னிடம் சொல்லும்படி என்னிடம் சொன்னாள்.” “காம்பில்யத்தின் இளவரசியை யாதவ அரசன் சந்திப்பதற்கு என்ன?” என்றான் கிருஷ்ணன். பீமன் “அவ்வாறல்ல. இது அரசமுறை சந்திப்பு அல்ல. உன்னிடம் அவள் பேச விழைவது வேறு…” என்றான். “அவள் தன் இளையோன் இருக்கும் ஆதுரசாலையில்தான் பெரும்பாலும் இருக்கிறாள். நீ அங்கே சென்று அவனை நலம் கேட்பது மரபே. அங்கு அவளும் இருப்பாள்.” கிருஷ்ணன் “ஆகட்டும்” என்றான்.

”நீ இப்போதே செல்வது நன்று. நீ சென்று சேர்வதற்குள் நான் என் செய்தியை அவளுக்கு அனுப்பிவிடுவேன்” என்றான் பீமன். “ஏன்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “இன்று காலையில் நீ அன்னையின் மாளிகைவிட்டு வெளியே வரும்போதே உன்னிடம் இதை சொல்லவேண்டுமென சொன்னாள். இந்த அங்காடியைக் கண்டதும் அதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்” என்றான் பீமன். “நான் செல்கிறேன். நீங்கள் என்னிடம் முன்னரே சொல்லிவிட்டதையும் சொல்கிறேன்…” என்றான் கிருஷ்ணன்.

தேரில் ஏறிக்கொண்டதும் கிருஷ்ணன் “நீங்கள் அத்தையை பார்க்கச் செல்லவில்லையா?” என்றான். “செல்லவேண்டும். ஆனால் இன்னொரு சுற்று சுற்றிவிட்டு சற்று உணவருந்திவிட்டுத்தான் செல்லவேண்டும். அவர்கள் அரசமுறைப்பேச்சுகளை முடித்துவிட்டு இயல்பாக பேசிக்கொள்ளத் தொடங்கும்போது சென்றுவிடுவேன்.” கிருஷ்ணன் சிரித்தபடி தேரோட்டியிடம் செல்லும்படி ஆணையிட்டான். தேரோட்டியிடம் அரண்மனை ஆதுரசாலைக்கு செல்லும்படி சொல்லிவிட்டு அக்கணமே தன்னைச் சூழ்ந்து ஒழுகிச்சென்ற நகர்க்காட்சிகளில் மூழ்கினான்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப இயல்பாக எதிர்வினையாற்றியபடி அவன் சென்றான். நகரம் முழுக்க காலையின் பனிப்பொருக்கு முழுமையாக உலர்ந்து மென்புழுதி பறக்கத்தொடங்கிவிட்டிருந்தது. குதிரைகளின் சாணி குதிரைகளால் மிதிபட்டு மண்ணுடன் கலந்து உலர்ந்து ஆவிநிறைந்த மணமாக எழுந்த சாலையில் காலடிகள் விழுந்துகொண்டே இருந்தன. விலங்குகளும் மனிதர்களும் வியர்வையில் நனைந்த உப்புவீச்சம் மெல்ல தொங்குவிசிறி அசைந்தது போல் விசிய மென்காற்றை நிறைத்தது.

அவன் நேராகவே ஆதுரசாலைக்குச் சென்று இறங்கினான். ஆதுரசாலையின் காப்பாளரான உர்வரர் அவன் தேரைக்கண்டதும் ஓடிவந்து வணங்கி முகமன் சொல்லி வரவேற்றார். “இளவரசரை காண விழைகிறேன்” என்றான் கிருஷ்ணன். “வருக!” என அவர் அவனை இட்டுச்சென்றார். அங்கிருந்த காவலர்கள் மருத்துவர்கள் மாணவர்கள் அனைவரிலும் அவன் வருகை வியப்பை உருவாக்கியது. அவர்களின் விழிகள் தொட்டுக்கொண்டன. கிருஷ்ணன் உர்வரரிடம் “நலமடைந்து வருகிறார் அல்லவா?” என்றான். அவர் “ஆம் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றார்.

மரத்தூண்கள் நிரைவகுத்த நீண்ட இடைநாழியில் இருந்து வலப்பக்கம் அறைகள் பிரியும் அமைப்பு கொண்ட கட்டடம் அது. இடப்பக்கம் முற்றத்தில் மருத்துவர்களும் மாணவர்களும் உரல்களில் பச்சிலைகளையும் வேர்களையும் இடித்தும் உலரவைத்த காய்களையும் கொட்டைகளையும் திரிகல்லில் திரித்தும் கலுவங்களில் குழம்புகளைக் கலந்து அரைத்தும் மருந்துகளை செய்து கொண்டிருந்தனர். பெரிய வெண்கலத்தாழிகளில் கனலடுப்பில் பச்சிலை எண்ணைகள் குமிழிகள் வெடித்து சுண்டிக் கொண்டிருந்தன. அத்தனை மணங்களும் கலந்தபோது தசமூலாதி எண்ணையின் மணம் எழுவதை அவன் உணர்ந்தான்.

பெரிய சாளரங்கள் திறந்த அறைக்குள் அகன்ற கட்டிலில் மென்மையான மரப்பட்டைகளால் ஆன படுக்கையில் திருஷ்டத்யும்னன் கிடந்தான். உடல் மிகவும் மெலிந்து, நெடுநாள் பச்சிலை எண்ணையில் ஊறியதனால் கருமைகொண்டு மரப்பட்டை போல மாறிய தோலுடன் தெரிந்த அவன் உருவை நோக்கி கிருஷ்ணன் நின்றான். அந்த அறையில் பல்வேறு மருந்து மணங்கள் இருந்தாலும் அவற்றை மீறி மட்கும் மானுட ஊனின் வீச்சம் எழுந்தது.

திருஷ்டத்யும்னனின் கன்னம் நன்றாக ஒடுங்கியிருந்தமையால் மூக்கு புடைத்து எழுந்திருந்தது. வளையங்களை அடுக்கியது போலத் தெரிந்தது கழுத்து. ஒன்றுடன் ஒன்று பின்னியவை போன்ற கைவிரல்கள் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க மணிக்கட்டும் முட்டுகளும் புடைத்த மெலிந்த கரங்களை மார்பில் வைத்து நெஞ்சுக்குழியும் கழுத்துக்குழியும் அசைய வறண்ட கரிய இதழ்களுக்குள் இருந்து மூச்சு வெடித்து வெடித்துச் சீற துயின்றுகொண்டிருந்தான்.

பின்பக்கம் ரிஷபன் வந்து நின்றான். கிருஷ்ணன் திரும்பியதும் தலைவணங்கி “பின்பக்கம் இருந்தேன். தாங்கள் வந்திருப்பதாக சொன்னார்கள்…” என்றான். கிருஷ்ணன் தலையசைத்துவிட்டு பின்னால் சென்று இடைநாழியில் நின்றான். “மருத்துவரை சந்திக்கலாம்” என்றான் ரிஷபன். “திறன் மிக்கவர். காமரூபத்தில் இருந்து வரவழைத்தோம். அவர் வந்தபின்னர்தான் இளையவர் விழிதிறந்தார்.” கிருஷ்ணன் “எத்தனை புண்கள்?” என்றான். “ஆறு… ஆறும் விழுப்புண்கள். நெஞ்சில் இரண்டு. தோளில் மூன்று. விலாவில் ஒன்று… இரண்டு புண்கள் ஆழமானவை. அவை இன்னும் ஆறவில்லை” என்றான்.

கிருஷ்ணன் நடக்க “வடக்குவாயிலை அஸ்வத்தாமர் தாக்குவார் என முந்தையநாளே தெரிந்துவிட்டது. அவரை தானே எதிர்கொள்வேன் என்றார் இளவரசர். முன்வாயிலை அங்கநாட்டரசர் தாக்குவார் என்பதனால் அர்ஜுனர் அங்குசெல்லவேண்டியிருந்தது. இளைய மன்னர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் மேற்குவாயிலில் தாக்கவிருந்த ஜயத்ரதரை செறுக்கவேண்டியிருந்தது. ஆகவே வேறு வழியே இல்லை. மேலும் எங்கள் பக்கம் அர்ஜுனருக்கு நிகரான மாவீரர் என்றால் இளையவர்தான். துரோணரிடம் வில்கற்றுத்தேர்ந்தவர். அவரே அஸ்வத்தாமரை எதிர்கொள்ளமுடியும் என போரவையும் எண்ணியது” என்றபடி ரிஷபன் தொடர்ந்து வந்தான்.

“ஆம், அது உண்மை” என்றான் கிருஷ்ணன். ரிஷபன் “களத்தில் எங்கள் இளையமாவீரர் மட்டும் இல்லை என்றால் அரைநாழிகை நேரம்கூட போர் நீடித்திருக்காது யாதவரே” என்றான். “முகப்பில் கர்ணருக்கும் அர்ஜுனருக்கும் நிகழ்ந்த போரைப்பற்றியே உலகம் அறியும். அதைவிட மும்மடங்கு விரைவும் வெறியும் கொண்டதாக இருந்தது வடக்குவாயிலில் அஸ்வத்தாமருக்கும் இளவரசருக்கும் நிகழ்ந்த போர்” என்றான்.

கிருஷ்ணன் இடைநாழியில் நின்று ரிஷபன் சொன்னதை கேட்டான். போரைப்பற்றி பேசுகையில் வீரர்கள் கொள்ளும் அகஎழுச்சி எழுந்த குரலில் ரிஷபன் சொன்னான் “எங்கள் குலம் என்றும் அதை நினைவில் கொண்டிருக்கும். செறுகளத்தில் இளவரசருக்கு பக்கத் துணையாக ஏழு பாஞ்சால இளவரசர்கள் உடனிருந்தனர். இரும்புக் காப்புடையுடன் கோட்டைக்குமேல் நின்று வடதிசையை நோக்கிய இளவரசரை நான் இப்போதும் விழிகளுக்குள் காண்கிறேன். போர்த்தேவன் போலிருந்தார்.”

ரிஷபன் உணர்ச்சியுடன் தொடர்ந்தான் “நாங்கள் தொலைவில் புல்படர்ந்த மேட்டின்மேல் அஸ்வத்தாமர் தன் படைகளுடன் வந்து நிற்பதை கண்டோம். ஆவசக்கரங்களும் சதக்னிகளும் கோட்டையை நெருங்காமலிருக்க காவல்காடுகளை கோட்டையருகே வளர்ப்பது இங்குள்ள வழக்கம். அது குதிரைப்படை விரைந்து கோட்டையை அணுகுவதையும் தடுக்கும். ஆனால் அதையே அஸ்வத்தாமர் தனக்கு உகந்ததாகக் கொள்ளலாம் என்றார் இளவரசர். விரைந்து வந்து காட்டுக்குள் நுழைந்துவிட்டால் அவரது வில்லாளிகளை நம்மால் காணமுடியாது. மேலிருந்து அம்பெய்யவும் முடியாது.”

“ஆகவே நீண்ட பாஞ்சால வேல்களுடன் சிருஞ்சய குலத்தைச் சேர்ந்த ஆயிரம் காலாட்படையினரை காட்டுக்குள் அனுப்பலாம் என்றார் இளவரசர். நான் அது உகந்ததல்ல என்று எண்ணினேன். ஆனால் இளைய பாண்டவராகிய பீமசேனர் அதையே விரும்பினார். அவர் வில்லேந்துபவரல்ல. அணுகிப்போரிடும் அவரது முறைமைக்கு மிக உகந்தது இளவரசர் சொன்னமுறை. அவர்களிருவரும் சொன்னபோது என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.”

”கோட்டைவாயில் திறக்கப்படவில்லை. பிற இளவரசர்கள் அனைவரையும் கோட்டைமேல் அம்புகளுடன் நிறுத்திவிட்டு திட்டிவாயில் வழியாக வேல்வீரர் ஒவ்வொருவராக ஓசையேதும் இன்றி  காட்டுக்குள் சென்றனர். அவர்களுடன் வில்லேந்தி புரவியில் இளவரசரும் பீமசேனரும் நானும் சென்றோம். புதர்க்காடுகளுக்குள் மறைந்து காத்திருந்தோம். நான் அஸ்வத்தாமரை எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தேன் என்பதை மறுக்கவில்லை யாதவரே. அச்சுறுத்தும் கதைகள் வழியாக மட்டுமே அவரை அறிந்தவன் நான்.”

”நான் எண்ணியதுபோலவே அஸ்வத்தாமர் தன் புரவிப்படையில் வில்லவர்களுடன் அம்புக்கூட்டம் போல காட்டுக்குள் நுழைந்தார்” என ரிஷபன் சொன்னான். கண்டு நிகழ்த்தி அறிந்த போரையே அவன் சூதர்பாடல்கள் வழியாக மீண்டும் சொற்களாக ஆக்கிக்கொண்டிருந்தான் என தோன்றியது. ”கோட்டைமேலிருந்து அம்புகளைத் தொடுத்த ஆவசக்கரங்களையும் அனல் கொட்டிய சதக்னிகளையும் அவர் எதிர்பார்த்திருந்தார். விரைவைக்கொண்டே அவற்றைக் கடந்துவந்து காட்டுக்குள் நுழைந்தார். அங்கே எங்களை எதிர்பார்க்கவில்லை.”

“அவரது வில்லாளிகள் மிக அண்மையில் நீண்ட வேல்களுடன் வந்து தாக்கிய எங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. இளவரசரின் அந்தப் போர்சூழ்கைதான் காம்பில்யத்தை காத்தது. அஸ்வத்தாமரின் பின்படைகளை தொடர்ச்சியாக சதக்னிகளின் அனல்மழையால் துண்டித்துவிட்டோம். அதன்பின் நிகழ்ந்தது நேருக்கு நேர் போர். பீமசேனர் அவரது கதையால் உடைத்து வீசிய மூளையும் நிணமும் குருதியும் இலைகளில் இருந்து மழையென சொட்டின.”

”அஸ்வத்தாமரை எதிர்கொள்ள அர்ஜுனராலும் கர்ணராலும் மட்டுமே இயலுமென ஏன் சொன்னார்கள் என அன்று கண்டேன். யாதவரே. என் விழிகளால் அவர் கைகளை பார்க்கவே முடியவில்லை. புதர்மறைவில் இருந்தவர்களை இலையசைவைக்கொண்டே அறிந்து வீழ்த்தினார். விண்ணிலெழுந்த அம்புகளை முறிக்கும் வில்லவர்களை கண்டிருக்கிறேன். அம்பெடுக்க எழுந்த கையை ஆவநாழியுடன் வெட்டி வீசும் வில்லவரை அன்று பார்த்தேன்.”

“பாஞ்சாலப்படை குறுகி வந்தது. இளவரசே, பின்வாங்கி கோட்டைக்குள் சென்றுவிடுவோம் என நான் கூவினேன். இல்லை, இப்போது பின்வாங்கினால் இனி எனக்கு போர் என ஏதும் இல்லை என கூவியபடி இளவரசர் வில்லுடன் அஸ்வத்தாமரை எதிர்கொண்டார். இருவரும் வல்லூறுகள் வானில் சந்திப்பது போல அம்புகோர்த்தனர். இருவருக்கும் நடுவே இலையுடன் கிளைசெறிந்த காடு இருந்தது. இலைகளும் கிளைகளும் வெட்டுண்டு சிதறின. பின்பு மரங்களே சரிந்தன. இறுதியில் வெட்டவெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளால் சூழ்ந்தபடி நின்றனர்.”

“இரு புரவிகளும் ஒன்றை ஒன்று நோக்கி பற்கள் தெரிய சிம்மங்கள் என ஓசையிட்டன. கால்களால் மண்ணை உதைத்து துள்ளிப்பாய்ந்தன. இரு முகில்களில் ஏறிக்கொண்டு தேவர்கள் போரிடுவதுபோல. இரு அலைகள் மேல் கடலரசர்கள் வில்லுடன் எழுந்தது போல. போர்புரிந்த அனைவரும் அவர்களை நோக்கி நின்றோம். அது கனவென்றே நான் எண்ணினேன். கனவில் மட்டுமே காலம் அப்படி துளித்துளியாக செல்லும். கணம் ஒன்று விரிந்து விரிந்து முடிவிலாது கிடக்கும்.”

“அஸ்வத்தாமர் எங்கள் இளவரசின் பேராற்றலை அன்றுவரை முழுதறியவில்லை என்பதை அவரது விழிகளின் திகைப்பைக்கொண்டே அறிந்தேன். பின்னர் அத்திகைப்பு கடும் சினமாக ஆகியது. சினம்கொண்டபோது அஸ்வத்தாமரின் ஆற்றல் குறைந்தது. அவரது இலக்குகள் பிழைத்தன. அவரது புரவியை இளவரசர் வீழ்த்தினார். அவர் காற்றில் தாவி எழுந்து பின்னால் வந்த புரவியில் ஏறிக்கொண்டு பெரும்சினத்துடன் நகைத்தபடி இளவரசரை பன்மடங்கு வெறியுடன் தாக்கினார். இளவரசரின் புரவியின் செவி ஒன்றை மட்டுமே அவரது அம்பு வெட்ட முடிந்தது. ஆனால் அஸ்வத்தாமரின் தோளில் இளவரசரின் அம்பு தைத்தது. அவரது தொடையில் அடுத்த அம்பு தைத்தது.”

“அதுவரை அரிய அம்புகள் எதையும் அஸ்வத்தாமர் வெளியே எடுக்கவில்லை. இரு புண்கள் பட்டதும் அவர் விரைவழிந்து பின்னகர்ந்தார். அவரது விழிகள் மாறுவதை நான் கண்டேன். இளவரசே, போதும் அவர்களை தடுத்துவிட்டோம். பின்னகர்ந்து கோட்டையை மூடிக்கொள்வோம் என்று கூவினேன். இன்று இவர் தலையுடன் மட்டுமே மீள்வேன் என கூவியபடி இளவரசர் நாணொலி எழுப்பி முன்னால் சென்றார்.”

“அஸ்வத்தாமர் முகம் யோகத்திலமர்ந்த முனிவருடையதென மாறியதைக் கண்டேன். அவர் போரிட்ட முறை நடனமாகியது. இனி அதில் ஒருபிழையும் நிகழாதென உணர்ந்தேன். ஒற்றைநாணிழுப்பில் ஒன்பது அம்புகளை தொடுத்தார். பின் பன்னிரு அம்புகள். பின்னர் இருபத்துநான்கு அம்புகள். இளவரசரின் புரவியின் உடலெங்கும் அம்புகள் தைத்தன. குருதி வழிய அது அலறியபடி விழுந்தது. நான் கூவியபடி சென்று இளவரசரை பின் துணைத்து என் புரவியில் ஏற்றிக்கொண்டேன்.”

“இன்னொரு புரவியில் ஏறியபடி இளவரசர் மீண்டும் அஸ்வத்தாமரை எதிர்கொண்டார். இளவரசே, அரிய அம்புகள் அவை. நம்மால் எதிர்கொள்ளத்தக்கவை அல்ல என நான் கூவியதை அவர் கேட்கவில்லை. கூகை போல குமுறியபடி வந்த அம்பு ஒன்று பறவைபோல எழுந்து பக்கவாட்டில் வளைந்து வந்தது. அதை நான் பார்த்து இளவரசே என கூவுவதற்குள் அது இளவரசரின் தோளில் பாய்ந்தது. இன்னொரு அம்பு அவரது நெஞ்சைத் தாக்கியது.”

”அந்த அம்புகள் ஒவ்வொன்றும் விந்தையானவை யாதவரே. நகைக்கும் ஒலியுடன் வந்த இன்னொரு அம்பு சுழன்று வந்தது. இளவரசர் அதை நோக்கி அம்பெய்தார். அது அவ்வம்பை சிதறடித்து எழுந்து மீண்டும் இலக்கை நோக்கியே வந்தது. அவரது விலாவை நொறுக்கியது அதுதான். நான் ஓடிச்சென்று அவரை பிடிப்பதற்குள் மேலும் மூன்று அம்புகள் அவர் மேல் பாய்ந்தன.”

”நான் அவரை காக்கச்சென்றேன். என் தோளிலும் நெஞ்சிலும் அஸ்வத்தாமரின் அம்புபட்டு மண்ணில் விழுந்தேன். என் குருதியின் மணத்தை நான் அறிந்த கணம். மேலும் சில கணங்களில் போர் முடிந்திருக்கும். ஆனால் பீமசேனர் என்னையும் இளவரசரையும் அள்ளி புரவியில் ஏற்றிக்கொண்டு ஆணைகளைக் கூவியபடி விரைந்து கோட்டைக்குள் நுழைந்துகொண்டார். குறுங்காட்டுக்குள் சென்ற எங்கள் படைகளில் உயிருடன் மீண்டவர்கள் நாங்கள் மூவர் மட்டுமே.”

“பீமசேனரின் பின்னால் அஸ்வத்தாமரின் எஞ்சிய படைகள் கூச்சலிட்டபடி துரத்திவந்தன. அவற்றில் பெரும்பகுதியை பீமசேனர் அழித்துவிட்டிருந்தார். ஆயினும் வெற்றிக்களிப்பு அவர்களை துணிவுகொள்ளச் செய்தது. நினைவழிந்திருந்த இளவரசரை ஆதுரசாலைக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டுவிட்டு பீமசேனர் கோட்டைக்குள் எங்கள் படைகளைத் திரட்ட ஓடினார். நான் என் புண் மேல் மெழுகுத்துணி வைத்துக்கட்டியபின் கோட்டைமேல் ஏறிச்சென்றேன்.”

“நாங்கள் உள்ளே நுழைந்ததும் கோட்டை வாயில் மூடியது. ஆவசக்கரங்கள் மழையென அம்பு பெய்து கோட்டைமுகப்பை காத்தன. அஸ்வத்தாமரின் முன்படையில் மிகச்சிலரே இருந்தனர். அவர்களால் கோட்டையை வெல்லமுடியாது. எரியம்பு எய்து பின்னணிப்படைகளை அணுகும்படி ஆணையிட்டனர்.”

”அது தெய்வங்கள் வகுத்த தருணம் யாதவரே. மேலும் கால்நாழிகைநேரமே எங்களால் கோட்டையை காத்திருக்கமுடியும். பின்னணிப் படைகள் அஸ்வத்தாமரின் வில்லவர்களை நோக்கி எழுந்த கணம் ஜயத்ரதனின் படைகள் பின்வாங்கும் எரியம்பு எழுந்தது. தெற்குவாயிலில் எங்கள் வெற்றிமுரசு ஒலிக்கத்தொடங்கியது. சத்ராவதியின் பின்படைகள் அப்படியே பின்வாங்கிச்செல்லத் தொடங்கின. இங்கிருந்து அஸ்வத்தாமர் விடுத்த எந்த செய்தியையும் அவர்கள் கேட்கவில்லை. மீளமீள கொம்புகளும் எரியம்புகளும் அழைத்தன. ஆனால் படைகள் பின்வாங்கத் தொடங்கிவிட்டால் பின்னால் நிற்கும் ஒருபடை மட்டுமே அவர்களை தடுக்கமுடியும்.”

“நான் உடனே வடக்கு வாயிலிலும் வெற்றிமுரசைக் கொட்ட ஆணையிட்டேன். சற்றுநேரத்தில் கோட்டைமுகப்பைத் தாக்கிய அஸ்தினபுரியின் படைகளும் பின்வாங்கிவிட்டன என எரியம்பு எழுந்தது. அதன்பின் அஸ்வத்தாமர் செய்வதற்கு ஏதுமிருக்கவில்லை. அவர் தளர்ந்த கைகளுடன் தன்னந்தனியாக தன் படைகளுக்கு மிகவும் பின்னால் செல்வதைக் கண்டேன். புண்பட்ட சிம்மம் போல தெரிந்தார்” என்றான் ரிஷபன். “அப்போது ஒரு சதக்னியால் அவரை எளிதில் கொன்றிருக்கலாம். உண்மையில் அவரும் அதையே விழைந்தார் என தோன்றியது. ஆனால் நான் தோள்புண்ணில் இருந்து குருதி வழிந்த கைகளைக் கூப்பி அவரை நோக்கி நின்றேன்.”

“அது ஒரு பிழையின் விலை” என்றான் கிருஷ்ணன். “நீர் சொன்னதுபோல எப்போதும் படைகளுக்கு மிகவும் பின்னால் முன்னணியுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு மூன்றாம் படை நிற்கவேண்டும். அந்தப்படை வழிநடத்தும் படைத்தலைவனுக்கு நிகரானவனால் நடத்தப்படவும் வேண்டும். அஸ்வத்தாமன் தன் பெரும்படைத்தலைவன் தலைமையில் ஆயிரம்பேரை அப்படி வரச்சொல்லியிருந்தால் தன் படைகளை ஒருநாழிகைக்குள் மீண்டும் தொகுத்து திருப்பித்தாக்கியிருக்க முடியும்.”

“அவர் இளவரசரின் அந்தப் பெருவீரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. பொதுவாகவே அவர்கள் மிக எளிதில் வென்றுவிடலாமென எண்ணியிருந்தார்கள்” என்றான் ரிஷபன். “இங்கே அர்ஜுனரும் பீமரும் இருக்கிறார்கள் என்றுகூட அவர்கள் எண்ணவில்லை என்பது விந்தையே.” கிருஷ்ணன் “படைத்தலைவர்கள் படையணியை படைகிளம்புவதற்கு சற்றுமுன்னரே முழுமையாகப் பார்க்கவேண்டும். முன்னரே பார்த்தார்கள் என்றால் மிகையான நம்பிக்கையை அடைவார்கள். அனைத்துத் திட்டங்களையும் அதைக்கொண்டே அமைப்பார்கள்… நல்ல படைத்தலைவன் மனிதர்களைக்கொண்டே களத்தை மதிப்பிடுவான், தளவாடங்களைக்கொண்டு அல்ல. அந்தப்பிழைதான் இந்தப்போரிலும் நடந்தது. கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரதன் மூவருக்கும்.”

“அவர்களுக்குத் தெரிந்திருக்கும் அல்லவா, இப்பக்கம் போரிடுபவர்கள் எவரெவரென்று?” என்றான் ரிஷபன். “அனைவரையும் அல்ல” என்றான் கிருஷ்ணன். ரிஷபன் சிலகணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் நீள்மூச்சுடன் “நான் அஸ்வத்தாமரை சதக்னியால் கொன்றிருக்கவேண்டும் என்றார்கள்” என்றான். “யார்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “இளவரசிதான். என்னை அதற்காக பழித்துரைத்தார்கள். தண்டிப்பதாக அச்சுறுத்தினார்கள்.” கிருஷ்ணன் “அதெப்படி முறையாகும்?” என்றான். “நான் அதை சொன்னேன். அவர் அதை கேட்கவில்லை. என்றோ ஒருநாள் இளவரசரை அஸ்வத்தாமர் போரில் எதிர்கொள்ளவிருக்கிறார். இன்று பிழைத்தது அன்று நிகழலாம். இப்போதே அவரை கொன்றிருந்தால் அது தடுக்கப்பட்டிருக்கும் என்கிறார். எனக்கு அந்த சொல்முறையே புரியவில்லை யாதவரே.”

கிருஷ்ணன் புன்னகை மட்டும் செய்தான். “இங்கு சற்று நேரத்தில் இளவரசி வருவார்கள். அவர்களிடம் என் தரப்பை சற்றுசொல்லுங்கள் யாதவரே. நான் சொல்வன அவர் செவிகளில் நுழையவில்லை” என்றான் ரிஷபன். “சொல்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைராய் மாக்ஸம் நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைவாசகர்கள்- கடிதம்