சாதி பேசலாமா?

சமீபத்தில் ஒரு இணைய விவாதக்குழுவில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதில் பேசிக்கொண்ட சில நண்பர்கள் ஒருவரின் சாதியை ஒருவர் சொல்லி கிண்டல்செய்துகொண்டார்கள். அதற்கு என் நண்பர் சிறில் அலெக்ஸ் எதிர்வினையாற்றியிருந்தார். சிறில் அவ்வாறு சாதியைப்பற்றிப் பேசுவது தவறான விஷயம் என்று சொல்லி கீழ்க்கண்ட இரு காரணங்களைக் குறிப்பிட்டிட்டிருந்தார்.

1. ஓர் பொது உரையாடல்வெளியில் அவ்வாறு சாதியைச் சொல்லிக்கொள்வது பொதுவாக சமூகத்தின் உயர்படிகளில் உள்ள சாதிகளுக்கே சாத்தியமாகிறது. வேடிக்கைக்காக இருந்தாலும்கூட. மற்றவர்கள் சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு தாழ்வுணர்ச்சியோ ஒவ்வாமையோ உருவாகிறது.

2 சாதி என்பது மறைய வேண்டிய ஒன்று. ஆகவே அதைப்பற்றி பேசலாகாது. இத்தகைய பேச்சுகள் மூலம் சாதி பற்றிய நினைவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

சிறில் அலெக்ஸ் சொல்லியிருந்த தரப்பு என்பது பரவலாக தமிழில் உள்ள மனநிலையை பிரதிபலிப்பது. நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒன்று இது. நாம் இன்னொரு கோணத்தில் யோசித்தே பார்த்திருக்க மாட்டோம். அதற்காகவேனும் நாம் மறு தரப்புகளை கணக்கில் கொண்டு யோசித்துப்பார்க்கலாம்.

சிறில் இருக்கும் மனநிலையில் இருந்துதான் ஒரு முக்கியமான கேள்வி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு என்றும் ஈ.கே.நாயனார் என்றும் எம்.டி.வாசுதேவன்நாயர் என்றும் கேரளத்தில் எல்லா பெயர்களிலும் சாதி உள்ளது. புத்ததேப் பட்டாச்சாரியா என்று வங்கத்திலும் சாதி பெயருடன் உள்ளது. தமிழகத்தில் இன்று எவருமே சாதியை பெயருடன் சேர்த்துக்கொள்வதில்லை. தமிழகத்தில் வந்த இந்த முற்போக்கான மாற்றம் ஏன் இடதுசாரிகள் ஆளும் கேரளத்தில் வரவில்லை?

உண்மையை முன்னிறுத்தி விவாதிப்பதாக இருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பார்க்கலாம். தமிழகத்தில் கேரளத்தை விட சாதி உணர்வுகள் குறைவா? சாதிப்பெயர்கள் இல்லாத காரணத்தால் சாதி இங்கே இல்லாமலாகிவிட்டிருக்கிறதா? சாதி உணர்ச்சி கொஞ்சமேனும் மட்டுப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும்.

கடந்த ஐம்பது வருடங்களில் தமிழகத்தில் சாதியுணர்ச்சி மெல்லமெல்ல வலுவடைந்து இன்று உச்சத்தில் உள்ளது என்பதே உண்மை. நம் அரசியல் எப்போதுமே சாதியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. இன்று அந்த அடித்தளத்தை நாசுக்கு கருதி மறைக்க வேண்டியதில்லை என்ற நிலை வந்திருகிறது.

நாம் சாதியைப்பற்றி ஒரு இரட்டைவேடத்தை போடக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த இரட்டைவேடத்தை அரசியல்சரிநிலையாக ஆக்கிக்கொண்டு அதை அனைத்து இடங்களிலும் ஒரு விதியாக முன்வைக்கிறோம். அதாவது நாம் தனிப்பேச்சுகளில், பழக்கங்களில் சாதி குறித்து ஒரு வகை கள்ளமௌனம் சாதிப்போம். ஆனால் எங்கும் எதிலும் சாதிதான் தீர்மானிக்கும் விசையாக இருக்கும்.

இவ்வாறு சாதியைப்பற்றிப் பேசாமல் இருப்பதென்பது ஒருவகையான பொதுமரியாதை , மென்பழக்கம் [Manners ] என நாம் நினைக்கிறோம். ஒரு சமூகம் பொதுப்பழக்கங்களில் எதை விதியாகக் கொண்டிருக்கிறதோ அதை கடைப்பிடிப்பதே நல்லது. சங்கடங்களை தவிர்க்கும். தவறான புரிதல்களும் உரசல்களும் இல்லாமலாகும். ஆகவே சாதியைப்பற்றி பொதுத்தளத்தில் பேசாமலிருப்பது சரிதான் என்றே நான் நினைக்கிறேன். நான் பொதுவாக யாரிடமும் சாதியைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை.

ஆனால் இது ஓர் ஒட்டுமொத்த விதியாக அமைய முடியாது. எங்கும் எப்போதும் சாதியைப்பற்றிச் சொல்லவே கூடாது என்பது ஓர் அரசியல் சரிநிலையாக முன்வைக்கப்படுவதென்பது ஒருவகை மூர்க்கம் மட்டுமே. இந்த மூர்க்கத்தின் விளைவாக நாம் நம்மை நேர்மையாக பார்ப்பதையும் புரிந்துகொள்வதையும் நம் சிக்கல்களை கடந்துசெல்வதையும் தவிர்த்துவிடுகிறோம் என்பதே உண்மை.

தமிழகம் என்பது பலநூறு சாதிகளின் பெரும்பரப்பு. நம் மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் சாதிகளைப்பற்றி அறியாமல் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த அரைநூற்றாண்டு அறிவியக்கத்தில் நம் சாதிகளைப்பற்றி குறிப்பிடும்படியான ஆய்வுகள் என எவையுமே வரவில்லை. ஆகவே நம் மக்கள் வரலாறு இன்னமும் எழுதபப்டவில்லை. சொல்லப்போனால் நம்மை ஆளவந்த வெள்ளையர் அக்காலத்தில் பதிவுசெய்தவற்றை நம்பியே நம் ஆட்சி நிர்வாகம் நடந்துவருகிறது

ஆகவே வரலாற்று நோக்குள்ள புறவயமான ஆய்வுக்கு இடமே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. ஒருசாதி அச்சாதியைப்பற்றி என்ன சொல்லிக்கொண்டிருக்கிறதோ அதையே பிறரும் சொல்லியாகவேண்டும், இல்லாவிட்டால் வன்முறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையே இன்றுள்ளது.

உதாரணமாக தமிழினி மாத இதழில் ராமச்சந்திரன் அவர்கள் வேளாளர்களைப்பற்றி எழுதி வரும் கட்டுரை. புறவயமான ஓர் ஆய்வு அது. ஆனால் அதன்பொருட்டு இதழாளருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த வகையில் தமிழக பிற்படுத்தப்பட்ட ஏதாவது சாதிகளைப்பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது. அத்தகைய பல முன் நிகழ்வுகள் இங்கே உள்ளன.

சாதியைப்பற்றி பேசாமலிருப்பதன் விளைவு என்னவென்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதியின் உண்மையான வரலாறோ தொடர்ச்சியோ தெரியாமல் செவிவழியாக வரும் பெருமிதக்கற்பனைகளை மட்டுமே அகத்தே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கு ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்ந்த’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும்.

இவ்வாறு உள்ளே ஒரு மனப்பிம்பம் வைத்துக்கொண்டு வெளியே பேசாமலிருப்பதன் சிக்கல்கள் பல. தமிழகத்தில் வாழும் எவருக்கும் இந்த இக்கட்டைப்பற்றி தெரியும். பலர் இருக்கும் அவையில் அக்குளில் முட்டையை வைத்துக்கொண்டு கைகுலுக்குவதுபொல மிக மிக ஜாக்ரதையாகவே நாம் பேசமுடியும். எந்தச் சொல் எவரைப் புண்படுத்தும் என்று சொல்ல முடியாது. அலுவலக, தொழிற்சங்கச்சூழல்களில்கூட சட்டென்று தற்செயலான சொற்களில் இருந்து சாதிசார்ந்த முட்கள் தைக்கப்பெற்று சிலர் கொதித்தெழும் இக்கட்டான சந்தர்ப்பங்களைக் கண்டிருக்கிறேன்.

இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் மென்பழக்க நாசூக்குகளை களைந்துவிட்டு ‘கவன’மில்லாமல் பேசுவதென்பது சொந்த சாதியினர் மட்டும் அடங்கிய அவைகளில் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவாகிறது. விளைவாக உண்மையான நட்பென்பது ஒரே சாதிக்குள் மட்டுமே நீடிப்பதாக இருக்கிறது. இலக்கியம் போன்ற தளங்களில்கூட இதையே காணமுடிகிறது.

இந்நிலை கேரளத்தில் இல்லை என்பதை நான் பலமுறை பதிவுசெய்திருக்கிறேன். மிகநெருக்கமான நண்பர்குழுக்களில் அனைத்துச் சாதியினரும் அனைத்து மதத்தவரும் இருக்கும் நிலை அங்கே சாதாரணமாக இருக்கிறது. ‘புண்படுதல்’ அனேகமாக இருப்பதில்லை. [சமீபகாலமாக இத்தகைய நண்பர்குழுக்களில் இஸ்லாமியர் இடம்பெறாமலாகிவிட்டிருக்கிறார்கள் அங்கே. எண்பதுகளில் அப்படி இருக்கவில்லை. இதற்கு இஸ்லாமிய அடிப்படை வாதம் மூலம் அவர்கள் தங்களை இனம்பிரித்து விலகிக்கொள்ளும் மனநிலை உருவாகி இருப்பதே காரணம்]

இந்த சகஜநிலை எப்படி உருவாகிறது? நாம் இறந்தகாலத்தின் நீட்சியில் நின்றிருக்கிறோம். இறந்தகாலத்தின் கசப்புகளும் பேதங்களும் நம் பிறப்பாலேயே நம்மிடம் வந்து சேர்கின்றன. அவற்றை எப்படி நாம் தாண்ட முடியும்? உலகம் முழுக்க அதற்கான வழிகளாக அடையாளம் காணப்படும் இரு விஷயங்கள் உள்ளன. புறவயமான வரலாற்று நோக்கு அதில் முக்கியமானது. அபத்தமான பெருமிதங்களையும் தூய்மைநோக்குகளையும் அது உடைத்து வீசிவிடும். இரண்டாவதாக கலை, இலக்கியம் போன்றவை உருவாக்கும் மனவிரிவு. அது நம்மை மானுடமாக உணரச்செய்யும்.

இவ்விரண்டும் நம் அகத்தை அந்த இறந்தகால எச்சங்களில் இருந்து விடுவிக்கின்றன. ஆனால் அந்த மனவிடுதலையை எப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் எய்த முடியும்? அதற்கான இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று விளையாட்டு, இன்னொன்று நகைச்சுவை. ஆர்தர் கோஸ்லர் அவரது ‘ஆர்ட் ஆ·ப் கிரியேஷன்’ நூலில் இவ்விரண்டையும் பதிலிப் போர்கள் [Proxy wars ] என்றே சொல்கிறார்.

ஆம்,நேரடியான போர்கள் மூலம் சென்றகாலங்களில் தீர்க்கப்பட்ட உணர்ச்சிகளையே விளையாட்டுக்கள் இன்று தீர்க்க்கின்றன. பெரும்பாலான நகைச்சுவைகளுக்கு அடியில் சென்றகாலத்தில் நேரடியான காழ்ப்பாக வெளியான உணர்ச்சிகளே உள்ளன. ஆனால் நகைச்சுவையும் விளையாட்டும் அவற்றை உன்னதம் [sublime] நோக்கிக் கொண்டு செல்கின்றன. அவற்றை தலைகீழாக்கி விடுகின்றன. அவ்வாறாக அவற்றை தூய்மைப்படுத்துகின்றன

சமூக இயக்கம் இயல்பாகக் கண்டு பிடித்த வழிமுறை அது. நம் சமூகத்திலேயே அதைக் காணலாம். நெல்லைப்பகுதியில் நாயக்கர்களும் பட்டாணி முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் கிண்டல்செய்துகொண்டே இருப்பார்கள். பலசமயம் அப்பட்டமான பாலியல் நக்கலாக அது இருக்கும். அவ்விரு சாதிகளும் முந்நூறு வருடம் ஒருவரோடொருவர் போரிட்டு கொன்று குவித்தவர்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நவீன வாழ்க்கையில் அவர்கள் பொருந்திக்கொள்ள வேண்டியுள்ளது. கிண்டல்கள் மூலம் அந்த அவநம்பிக்கைகளும் வஞ்சங்களும் வேடிக்கையாக ஆக்கப்பட்டு கவிழ்க்கப்படுகின்றன.

சாதியின் அடுக்கதிகாரத்தை கடந்துசெல்ல அவற்றை மறைப்பது ஒரு வழியல்ல. சாதியை உக்கிரமாக பேணுவதற்கான வழி அது. சாதியை வெளிப்படையாக புறவயமாக ஆராய்ந்து வரலாற்று ரீதியாக புரிந்துகொள்வதே அதை தாண்டுவதற்கான முதல் படி. அதை வேடிக்கையாகவும் கிண்டலாகவும் ஆக்கிக்கொள்வது நடைமுறைச்செயல்பாடு. சாதிசார்ந்த கடந்தகால அவநம்பிக்கைகளும் அவமரியாதைகளும் அந்த கிண்டலில் அர்த்தமிழந்து வெளிறும்

அதை கேரளத்தில் நான் அன்றாட வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். நான் கேரளத்தில் சென்ற புதிதில் நாலைந்து இஸ்லாமியநண்பர்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரு மீன்விற்கும் முஸ்லீம் பெரியவர் தராசை ஆற்றில் தூக்கி தூக்கிக் கழுவுவதை கண்டேன். என்னுடன் வந்த நாயர் நண்பன் ‘ஓ, இந்த மாப்பிளைகள் ஆற்றையும் எடைபோட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்களா?’ என்றான். நான் திடுக்கிட்டு முஸ்லீம் நண்பர்களை பார்த்தேன். அவர்கள் பயங்கரமாக சிரித்தார்கள். அது ஒரு திறப்பு எனக்கு.

சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் பேசிக்கொண்டிருக்கையில் ஷாஜி எதையோ சொல்லும்போது ‘இது ரொம்ப சிம்பிள், எந்த நாயருக்கும் புரியும் விஷயம்’ என்றார். கேரளத்தில் கிறித்தவர்களுக்கு நாயர்களை கிண்டல்செய்வதில் நூறு வருட அனுபவ பாத்தியதை உண்டு. ஆனால் கூட இருந்த தமிழக நண்பர் திடுக்கிட்டு என்னை பார்த்தார்.

ஆனால் இந்த நகைச்சுவையை தன் சாதி சார்ந்த போலிப்பெருமிதங்களை அல்லது சுய இழிவைத் தாண்டிய ஒருவரிடமே செய்யவேண்டும். சாதியபிமானம் அல்லது சாதித்தாழ்வுணர்வு அவரிடம் எங்கோ இருக்குமென்றால் ஏதோ ஒருபுள்ளியில் நெருப்பு பற்றிக்கொள்ளும்.என்னைபொறுத்தவரை மிகமிக நன்றாகத் தெரிந்த, நம்பகமான நகைச்சுவை உணர்ச்சிகொண்ட நவீன மனிதரிடம் மட்டுமே அந்தக் கேலியை வெளியே எடுப்பேன். அத்தகைய மிகமிகச்சிலரை மட்டுமே நான் தமிழகத்தில் கண்டிருக்கிறேன். அந்தக்கேலி எங்களுக்குள் இருக்கும் அந்த நுண்ணிய அந்தரங்க இடைவெளியை கடப்பதற்கான முயற்சி.

சாதியைப்பற்றி பேசாமல் இருப்பதனால் உருவாகும் அறியாமை காரணமாக நாம் சாதியை ஒற்றைப்படையாக புரிந்து வைத்திருக்கிறோம். அதாவது சாதி என்றால் ஒரு மாபெரும் சமூக அநீதி, ‘யாரோ’ உருவாக்கி நம்மிடம் திணித்தது, அதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது. ஆனால் நாம் அதை விடவும் மாட்டோம். அந்தரங்கமாக பெருமிதமும் கொள்வோம்.

சாதிக்கு இரு முகங்கள். ஒன்று அது ஓர் மரபடையாளம். இரண்டு, அது சமூக அடுக்கதிகாரத்தில் ஓர் இடம். இந்த இரு முகங்களில் இரண்டாவதை நவீன யுகத்தில் முழுமையாகவே நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் அது சென்றகாலத்து பொருளியல் தேவைகளுக்காக, சென்றகால பண்பாட்டுப்புழக்கம் காரணமாக உருவாகி வந்த ஒன்று. முந்தையது அப்படி அல்ல.

இந்தியாவில் எந்த ஒரு சாதியை எடுத்துப் பார்த்தாலும் அது சாதிக்குள் சாதியாக சென்றுகொண்டே இருக்கும். உபசாதிகள். அதற்குள் கூட்டங்கள். அதற்குள் குலக்குழுக்கள். அதற்குள் குடிகள். சாதி என்பது பிரிந்து பிரிந்து உருவானதல்ல, தொகுத்து தொகுத்து உருவானது. குடிகள் இணைந்து குலங்களும் கூட்டங்களும் ஆகி சாதியாகின்றன.

அந்தப் பரிணாமமே நம் சமூக வரலாறு. அதில்தான் நம்முடைய ஆழ்மனதை உருவாக்கிய அத்தனை பண்பாட்டுக்கூறுகளும் உருவாகி வந்திருக்கின்றன. அந்தப்பண்பாட்டுக்கூறுகள் இல்லையேல் நமக்கு கலைகளும் இலக்கியமும் இல்லை. நமக்கு சுய அடையாளமும் இல்லை. நாம் நவீன முதலாளித்துவம் வடித்தெடுத்த சுத்தமான நுகர்வு இயந்திரங்கள் மட்டுமே.

இந்த அடையாளத்தில் உள்ள அனைத்துமே உயர்வானவை, தேவையானவை என சொல்ல மாட்டேன். எவை தேவையானவை, எவை உயர்வானவை என்பதை நாம் நம்முடைய அறவுணர்ச்சியால் தீர்மானிக்கவேண்டும். மானுட சமத்துவத்துக்கு எதிராக உள்ளவை, மானுட மேன்மைக்கு உதவாதவை தேவையற்றவை, களையப்படவேண்டியவை. பாரம்பரியமாக அடையப்பெற்ற நுண்ணுணர்வுகள், பழக்க வழக்கங்கள், ஆழ்மனப்படிமங்கள் தேவையானவை. சாதியை நான் பார்க்கும் விதம் இதுவே

சாதி சார்ந்து புறவயமாக ஆராயும் ஒருவர் இரு விஷயங்களில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஒன்று சாதிமேன்மை அல்லது கீழ்மை என்பது வெறும் ஒரு பொருளியல் கட்டுமானமே. நிலத்தை அடைந்த சாதி மேல்சாதி. இழந்த சாதி கீழ்சாதி. இந்த மிக எளிமையான வாய்ப்பாடு சாதிகளின் அடுக்கதிகாரத்தை எளிதில் விளக்குகிறதென்பதை காணலாம். இந்த அடுக்குமுறைக்கு இன்று பொருளே இல்லை.

சாதித்தூய்மை என்பதற்கு வரலாற்றில் இடமே இல்லை என்பதையும் புறவயமாகப் பார்க்கும் எவரும் அறியலாம். இந்திய சாதிகள் எல்லாமே பல்வேறு பிற இனக்குழுக்களுடன் இணைவதற்கான மனநிலையையும் அதற்கான ஆசார வழிமுறைகளையும் கொண்டவை என்பதை டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்றாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக மேல்தட்டு சாதிகள் தொடர்ச்சியான இனக்கலப்பு மூலம் உருவாகி வந்தவை.

ஆகவே இன்றைய நவீன மனிதன் ஒருவன் சாதியை கடந்தகாலப் பெருமிதம் என்ற பொருளிலோ, தன் தூய்மை அடையாளம் என்ற பொருளிலோ கொள்ள முடியாது. அதை சென்றகாலத்தில் இருந்து தனக்கு வந்து சேர்ந்த ஓர் பண்பாட்டு குவை என்ற பொருளில் மட்டுமே கொள்ள முடியும்.

ஆனாலும் சாதி சார்ந்த இழிவு, மேன்மை இரண்டில் இருந்தும் எளிதில் விலகிவிட முடியாது. அது மனப்பழக்கமாக அடிமனத்தில் நீடிப்பது. அதை வெல்ல மிகச்சிறந்த வழி என்பது அதை கேலியாக, பகடியாக ஆக்கிக்கொள்வதே. ஒளித்து வைப்பதல்ல.

சாதி என்றும் அழியாது. நவீன முதலாளித்துவம் மூலம் சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். உலகம் எங்கும் ஏதேனும் முறையில் மனிதர்களிடம் பிறப்பு சார்ந்து உருவாக்கப்படும் பண்பாட்டுச்சின்னங்கள் நீடிக்கத்தான் செய்கிறன. அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைசெவ்வியல்,ஒருகடிதம்
அடுத்த கட்டுரை19 ஆவது படி