‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 46

பகுதி 10 : சொற்களம் – 4

சூரியன் குந்தியின் மாளிகைக்குப் பின்னால் இருந்தமையால் முற்றம் முழுக்க நிழல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணனின் தேர் முற்றத்தில் வந்து நின்றபோது காவலர்தலைவன் வந்து வணங்கி “யாதவ அரசி பின்பக்கம் அணிமண்டபத்தில் இருக்கிறார்கள். தங்களை அங்கே இட்டுவரும்படி ஆணை” என்றான். கிருஷ்ணன் இறங்கி சால்வையை சீராகப்போட்டபடி நிமிர்ந்து நிழலுருவாக நின்ற மூன்றடுக்கு மாளிகையை நோக்கினான். மரத்தாலான அதன் மூன்று குவைமுகடுகளில் மையத்தில் துருபதனின் விற்கொடி பறக்க அருகே இடப்பக்கம் மார்த்திகாவதியின் சிம்மக்கொடி சற்று சிறிய கொடித்தூணில் தெரிந்தது.

கிருஷ்ணன் ஏவலனிடம் ”செல்வோம் சூரரே” என்றான். சூரன் திகைத்து “அடியேன் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான். “வரும்போதே கேட்டுத்தெரிந்துகொண்டேன்…” என்றான் கிருஷ்ணன். “உமது மைந்தர் அக்ஷர் லாயத்தில் நூற்றுக்குதிரையாளர் என்றும் அறிந்தேன். ஒரு மகள் தெற்குக்கோட்டை நூற்றுவர்தலைவனுக்கு மனைவி. அவள் பெயர் சம்பா…” புன்னகையுடன் “சரிதானே?” என்றான்.

சூரன் மகிழ்ச்சியுடன் “தாங்கள் இத்தனை எளியோர் பெயர்களை அறிந்திருப்பதை எண்ணி வியக்கிறேன்” என்றான். “நான் அனைவரையும் அறிந்துகொள்ள விழைகிறேன் சூரரே…” என்றான் கிருஷ்ணன். “அனைவரையும் என்றால்?…” என்றான் சூரன். ”அனைவரையும்தான்….” சூரன் சிரித்து “தாங்கள் சந்திக்கும் அனைவர் பெயரையும் வாழ்க்கையையும் அறிந்திருப்பது இயல்வதா என்ன?” என்றான்.

“சூரரே, துவாரகையில் ஒவ்வொரு படைவீரரையும் ஒவ்வொரு வணிகரையும் நான் நன்கறிவேன். அவர்களின் குலங்களையும் குடிகளையும் அறிவேன். வந்தது முதல் இந்தப் பாஞ்சாலநகரியில் அனைவரையும் அறிந்துகொண்டிருக்கிறேன். இங்கிருந்து செல்கையில் இப்படைகள் குடிகள் அனைவரையும் அறிந்திருப்பேன்.” சூரன் “மறக்கமாட்டீர்களா?” என்றான். “இல்லை, நான் எதையும் மறப்பதில்லை.”

சூரன் சற்று நேரம் சொல்மறந்து நடந்தபின் சற்று தயங்கி பின் கிருஷ்ணனை நோக்கி அவன் புன்னகையால் அண்மையை உணர்ந்து துணிவுகொண்டு “அரசே, தாங்கள் இத்தனை மானுடரையும் அறிவது எதற்காக?” என்று கேட்டான். கிருஷ்ணன் உரக்க நகைத்து “விளையாடுவதற்காகத்தான், வேறெதற்கு? சூரரே, மானுடரைப்போல சிறந்த விளையாட்டுப்பாவைகள் எவை?” என்றபின் தனக்குத்தானே என “மானுடரைக்கொண்டு விளையாடத் தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை…” என்றான்.

சூரன் வியந்து நோக்கி நடக்க கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே நடந்தான். “காமகுரோதமோகங்களின் விசைகள். நன்மை தீமையின் கருவெண் களங்கள். என்னென்ன என்னென்ன ஆடல்கள்!… ஆட ஆட முடிவடையாத ஆயிரம்கோடி புதிர்கள்… என்ன சொல்கிறீர்?” சூரன் “உண்மைதான் அரசே… எளியவர்கள் நாங்கள்” என்றான். கிருஷ்ணன் மேலும் சிரித்தபோது அவர்கள் நுழைந்த மாளிகையின் முகப்புக்கூடம் எதிரொலி எழுப்பியது. “ஆம், மிக மிக எளியவர்கள்.” அவன் சொற்களை அக்கூடமும் திருப்பிச் சொன்னது. ”அற்பர்கள். ஆகவே ஆணவம் கொண்டு இறுகிவிரைத்திருப்பவர்கள்…”

சூரன் “தங்களுக்கு ஆணவம் இல்லையா அரசே?” என்றான். கிருஷ்ணன் அவன் தோளை தன் கையால் வளைத்து “உண்மையை சொல்லப்போனால் சற்றும் இல்லை. ஆகவே எனக்கென எந்தத் தன்னியல்பும் இல்லை. அந்த முற்றத்தில் வந்திறங்கிய நான் அல்ல இப்போது உம்முடன் பேசுவது. உள்ளே அரசியிடம் பேசப்போகிறவன் இன்னும் பிறக்கவில்லை” என்று ஆழ்ந்த தனிக்குரலில் சொன்னான். சூரன் “நம்புகிறேன்…” என்றான். “எதை?” என்றான் கிருஷ்ணன். “நீங்கள் விளையாடுகிறீர்கள். இப்போது என்னிடமும்.” கிருஷ்ணன் சிரித்து “என்னை அறியத்தொடங்கிவிட்டீர்… என்னிடம் வந்து சேர்வீர்” என்றபின் “வசுதை காத்திருக்கிறாள். அழகி…” என்றான்.

குந்தியின் சேடியான வசுதை வந்து வணங்கி “அரசே, தங்களை அழைத்துவரும்படி ஆணை” என்றாள். “நீ அழகி என சூரரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் வசுதை” என்றான் கிருஷ்ணன். வசுதையின் விழிகள் விரிந்து புன்னகையில் கன்னங்கள் குழிந்தன. “ஆம்… நான் அறிவேன்” என்றாள். சூரன் வியப்புடன் இருவரையும் நோக்க கிருஷ்ணன் அவர் தோளில் தட்டி “உம்மைப்போலவே அவளையும் நான் அறிவேன்… வருகிறேன்” என்றான்.

வசுதையுடன் நடக்கையில் அவள் “நீங்கள் என் கனவில் வந்து இச்சொற்களையே சொன்னீர்கள்… நான் அழகி என்றீர்கள். நான் பிற ஆண்களின் விழிகளுக்கு அழகியெனத் தெரியவில்லையே கண்ணா என்றேன். என்விழிகள் போதாதா என்றீர்கள். நான் போதும் போதும் என்றேன்” என்றாள். முதிரா இளமங்கை என கிளர்ச்சியடைந்திருந்தாள். முலைகள் எழுந்தமைந்து மூச்சிரைக்க கைகள் ஒன்றை ஒன்று பின்னியும் விலகியும் பதைக்க ”இதே சிரிப்பை நான் கண்டேன்” என்று தழுதழுத்து இறங்கிய குரலில் சொன்னாள். “அதன் பின் நான் உன் கூந்தலை புகழ்ந்து அதிலொரு செம்மலரை சூட்டினேன்” என்றான் கிருஷ்ணன். “ஆம் ஆம்” என்றாள்.

“நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான் கிருஷ்ணன். “சந்திப்போம் கண்ணா…” என்றாள் வசுதை. அவள் குழல்சுருளைத் தொட்டு “இதுதான் அணிமண்டபமா?” என்றான். “ஆம்… இங்குதான் தங்களைச் சந்திக்க அரசி விழைந்தார்.” அவள் காதோரக்கற்றையைப் பற்றி மெல்ல இழுத்து “வருகிறேன்” என்றான். “ஆ” என செல்லமாகச் சிணுங்கி அனல்கொண்ட முகத்துடன் “என்ன இது? இங்கு எங்கும் விழிகள்…” என்றாள் வசுதை. கிருஷ்ணன் ”விழிகள் எல்லாம் என்னுடைய விழிகளெனக் கொள்… அச்சமிருக்காது” என்றபின் நீண்ட ஒடுங்கிய இடைநாழி வழியாக நடந்து உள்ளே சென்றான்.

மைய மாளிகையுடன் இடைநாழியால் இணைக்கப்பட்டு தனியாக நின்றிருந்த அணிமண்டபம் பன்னிரு சிற்பத்தூண்களால் தாங்கப்பட்ட உட்குவைக்கூரை கொண்ட வட்டமான கூடம். அதன் வட்டமான மரச்சுவரில் ஏழு அணிச்சாளரங்கள் இருந்தன. திரைகளற்ற சாளரங்கள் வழியாக மறுபக்கம் பிறைவடிவாக வளைந்து ஒழுகிச்சென்ற கங்கையையும் அதன்மேல் ஒளியுடன் கவிந்திருந்த வானையும் காணமுடிந்தது. வெண்பட்டு விரிக்கப்பட்ட நான்கு பீடங்கள் ஒழிந்து கிடந்தன. ஒரு சாளரம் வழியாக வெண்கதிர் விரித்து மேலெழுந்துவிட்டிருந்த காலைச் சூரியனை நோக்கியபடி குந்தி நின்றிருந்தாள்.

கிருஷ்ணன் தலைவணங்கி “மார்த்திகாவதியின் அரசியை வணங்குகிறேன்” என்றான். குந்தி விழிதிருப்பி அவனை நோக்கி “வா” என்று பீடத்தை சுட்டிக்காட்டினாள். கிருஷ்ணன் சென்று அவளருகே ஒரு சாளரத்தின் மேல் சாய்ந்து நின்று “சூரியனை நோக்க காம்பில்யத்திலேயே சிறந்த இடம் இது என எண்ணுகிறேன்…” என்றான். “ஆம், பிற இடங்களில் எல்லாம் மேற்கேதான் கங்கை. இங்கு ஆறு வளைந்து செல்வதனால் மேற்கிலும் கிழக்கிலும் கங்கைக்குமேல் கதிரவனை நோக்க முடிகிறது” என்று குந்தி சொன்னாள். கிருஷ்ணன் சூரியனை நோக்கிக்கொண்டு கைகளை மார்பில் கட்டியபடி நின்றான்.

குந்தி பெருமூச்சுவிட்டு தன் மேலாடையை சீரமைத்து திரும்பி ஏதோ கேட்க முனைவதற்குள் “அஸ்தினபுரியில் இருந்து என் ஒற்றர்கள் செய்திகொண்டுவந்தனர். அங்கமன்னன் நலமடைந்து வருகிறான்…” என்றான் கிருஷ்ணன். குந்தியை நோக்காமல் கங்கையில் விழிநட்டு “அவனுடைய நலம் நமக்கு முக்கியம் அத்தை. அஸ்தினபுரிக்காக நம்முடன் போர் புரிந்தவன் அவன். அவன் மேல் துரியோதனன் பெரும்பற்று கொண்டிருக்கிறான். அவன் நலமடையாமல் நாம் கௌரவர்களிடம் எதையும் பேசமுடியாது. ஆகவே நான் பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த மருத்துவர் நால்வரை அஸ்தினபுரிக்கு அனுப்பினேன்” என்றான்.

குந்தியின் மெல்லிய மூச்சொலியை அவன் கேட்டான். “அவர்களை நான் அனுப்பியதை அங்கே எவரும் அறியாதபடி பார்த்துக்கொண்டேன். நால்வரும் தனித்தனியாக வெவ்வேறு பயணங்களின் பகுதியாக அங்கே சென்றனர். அவர்களை துரியோதனன் உடனே அங்கநாட்டரசனுக்கு மருத்துவர்களாக அமைத்தான். அவர்கள் ஒவ்வொருநாளும் எனக்கு செய்தியனுப்புகிறார்கள். இன்னும் சிலநாட்களில் அங்கன் எழுந்துவிடுவான்.”

குந்தி “முன்னிலும் வஞ்சம் கொண்டவனாக, இல்லையா?” என்றாள். கிருஷ்ணன் “அவ்வஞ்சம் தெய்வங்கள் ஆடும் நாற்களத்தின் விசைகளில் ஒன்றல்லவா?” என்றான். குந்தி “ஆம்” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள். “அவன் சூதமைந்தன் என்பதல்ல அவன் தீயூழ் அத்தை. தான் கடக்கவேண்டியதென அவன் எண்ணுவது சூதமைந்தன் என்னும் சொல்லை மட்டுமே என அவன் எண்ணுவதுதான். கொடுத்துக் கொடுத்து செல்வமெனும் தளையை அவன் கடக்கிறான். அதேபோல விளையாடி விளையாடி வீரமென்பதையும் கடந்துவிட்டான் என்றால் அவன் விடுதலை பெறுவான். தெய்வங்கள் திருவுளம் கொள்ளவேண்டும் அதற்கு.”

“இன்று அவனை வைத்துத்தான் கௌரவர்களின் ஆடல் என்பதனால்தான் நாம் அவனைப்பற்றி இவ்வளவு பேசநேர்ந்திருக்கிறது” என்று கிருஷ்ணன் சொன்னான். சற்று பதறிய குரலில் “உண்மை” என்று குந்தி சொன்னாள். “அவனுடைய வஞ்சத்தில் இருந்து மூத்தகௌரவனை சற்றேனும் பிரிக்க முடிந்தால் நன்று… அதுவே இப்போது நாம் விழையக்கூடியது” என்ற கிருஷ்ணன் திரும்பி அவளை நோக்கி “தாங்கள் துர்வாசமுனிவரை மீண்டும் கண்டதை அறிந்தேன்” என்றான்.

குந்தியின் முகம் மேலும் இறுக விழிகள் சற்று சுருங்கின. “ஆம், அவரிடம் பேசவேண்டுமென தோன்றியது. இங்கு என்னால் அமைந்திருக்க இயலவில்லை. ஒவ்வொன்றும் என் கைகளை விட்டு நழுவிக்கொண்டே செல்வதாக என் நெஞ்சு கலுழ்ந்தது. அவரிடம் என்ன செய்யலாமென்று கேட்டேன்.” கிருஷ்ணன் “முந்தையநாள் திரௌபதியும் அவரை சந்தித்திருக்கிறாள்” என்றான். குந்தி சற்று சினத்துடன் “உனக்கு என்னென்ன தெரியும்? முதலில் அதை சொல்” என்றாள். கிருஷ்ணன் சிரித்து “அண்டமும் பிண்டமும் அருவும் உருவும் ஆன அனைத்தும் தெரியும்” என்றான். குந்தி “போடா” என்றாள். “இப்படிக் கேட்டால் பின் என்ன விடை சொல்வேன்? நானும் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருக்கிறேன். அதை மட்டுமே சொன்னேன்…” என்றான்.

“ஆம், அவள் துர்வாசரை சந்தித்தாள் என அறிந்ததனால்தான் நான் அவரைப்பார்க்கச்சென்றேன். அவள் என்ன பேசினாள் என அவரிடமிருந்து அறியமுடியாது என நான் நன்கறிவேன். ஆனால் நான் என்ன செய்யமுடியும் என அவர் சொல்வார் என எதிர்பார்த்தேன். நான் மண்கொள்ளவேண்டும், வேறுவழியே இல்லை என்று அவர் சொன்னார். அதற்கு கௌரவர்களிடம் பேச உரியவர்களை அனுப்புவதே நன்று என்றார். ஆகவேதான் நான் உன்னை வரும்படி சொல்லி செய்தி அனுப்பினேன்” என்று குந்தி சொன்னாள். “உண்மையில் அவர் சொல்லச் சொல்ல நான் உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். அவரும் உன்னைத்தான் சொன்னார் என புரிந்தது.”

“வாளுடன் செல்பவன் வெல்ல முடியாத இடங்களுக்கு குழலுடன் செல்பவனை அனுப்பலாம் என்று துர்வாசர் சொன்னார்” என்று குந்தி தொடர்ந்தாள். “உனக்கு செய்தி அனுப்பியதுமே அதை அவளும் அறிந்திருப்பாள் என உய்த்துக்கொண்டேன். உன்னிடம் அவள் சொல்லப்போவதென்ன என்று எண்ணி எண்ணி காத்திருந்தேன். நேற்று அவைநிகழ்ச்சிகளிலும் உண்டாட்டிலும் அதை சொல்லிவிட்டாள்.” கிருஷ்ணன் சிரித்து “ஆம், ஐயத்திற்கிடமில்லாமல்” என்றான். “எத்தனை கூரிய பெண். கிருஷ்ணா, நான் அவளை நினைத்து அஞ்சுகிறேன். அமுதமும் நஞ்சும் நிறைந்தவள் என தேவயானியைப்பற்றி சூதர் பாடுகிறார்கள். இவள் தேவயானியின் மறுவுரு.”

கிருஷ்ணன் “அவளை அஞ்சுவது நன்று” என்றான். குந்தி “அவள் என் குலமகளாக வந்தபின் ஒவ்வொரு கணமும் என் அகவிழி அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. அவளிடம் ஒரு சிறு பிழைகூட தெரியவில்லை. என்னிடம் அன்பையன்றி எதையும் அவள் காட்டவில்லை. என் கனவில்கூட அவள் இன்முகத்துடன்தான் வருகிறாள். குலமுறைமை குடிமுறைமை எதிலும் அணுவிடை தவறில்லை. ஆனாலும் மணிப்பொன் உறைக்குள் வைக்கப்பட்ட குருதிச்சுவை விழையும் வாள் என்றே என் அகம் அவளை எண்ணுகிறது” என்றாள்.

“நேற்றைய நிகழ்வின்போது ஒவ்வொரு கணமும் நான் கொதித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது முற்றிலும் முறைமைசார்ந்தது என்றும் அறிந்திருந்தேன். அவள் அதை ஒழுங்கு செய்யவில்லை. அதில் எதிலும் அவளுக்கு பங்கில்லை. ஆனால் அது அவள் விழைவு நிகழ்வது என அறிந்தது என் அகம். எப்படியோ தன் விழைவை பிறரிடம் தெரிவிக்க, அதை அவர்கள் ஆணையெனக் கொள்ளச்செய்ய அவளால் முடிகிறது. நேற்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் முற்றிலும் சரியானதே. எங்களுக்குத்தேவையான அறிவுறுத்தலே. மேலும் என் மைந்தரை நான் விழையும் இடம் நோக்கி கொண்டுவர நேற்றைய நிகழ்வுகள் உதவின. ஆயினும் என் அகம் அவளை எண்ணும்போதெல்லாம் எரிகிறது” என்றாள் குந்தி.

“அது இயல்பானதே” என்று கிருஷ்ணன் சொன்னான். “முதல்நாள் இரவு விடிந்ததுமே நீங்கள் மைந்தனைக் காண பதைத்துச் சென்றீர்கள்.” குந்தி கடும் சினத்துடன் மூச்சாக மாறிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றாள். “அவளுடைய சொற்களால் மூத்தவர் மண்ணை மறந்துவிடலாகாதென எண்ணினீர்கள் அத்தை. அது இயல்பானதே. ஒவ்வொருநாளும் நீங்கள் மைந்தர்களைக் கண்டு பேசி பதைபதைத்தீர்கள். விதுரர் வந்தபோது முதல்முறையாக அவர்முன் உடைந்து அழுதீர்கள்…” குந்தி அவனை விழி சுருக்கி நோக்கிக்கொண்டு நின்றாள். “மைந்தர்கள் நாடாளவேண்டும் என்ற உங்கள் பெருவிழைவை அறிகிறேன்…”

கால்தளர்ந்தவள்போல நடந்து சென்ற குந்தி பீடத்தைப் பற்றி மெல்ல தலைகுனிந்து அமர்ந்தாள். கிருஷ்ணன் “உங்கள் விழைவுகளுடன் தெய்வங்கள் ஒழிந்த விண்ணுக்குக் கீழே நீங்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறீர்கள் அத்தை” என்றான். தடைமீறி வந்த உரத்த கேவலுடன் அவள் தன் தலையாடையை முகத்தின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டு அழத்தொடங்கினாள். அவன் கைகளைக் கட்டியபடி அவள் அழுவதை நோக்கி நின்றான்.

அழுகையில் அவள் தோள்கள் குலுங்கின. அழும்தோறும் அவள் மேலும் மேலும் உடைந்துகொண்டே சென்றாள். ஒன்றன் மேல் ஒன்றென எழுந்த அழுகையோசைகள் மெல்ல அடங்கி விசும்பல்களும் கேவல்களுமாக மாறி ஓய்ந்து அடங்கும் கணத்தில் மீண்டும் அழுகை வெடித்தெழுந்தது. பின்னர் முகத்தின் மேல் திரையை நன்கு இழுத்து விட்டுக்கொண்டு அவள் பீடத்தில் நன்றாகவே குனிந்து ஒடுங்கிக்கொண்டாள்.

கிருஷ்ணன் அணுகி வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்து அவள் கைகளைப்பற்றினான். அவை மெலிந்து குளிர்ந்து மீன்களைப்போல அதிர்ந்துகொண்டிருந்தன. “அத்தை, நான் உங்கள் அகத்தை நன்கறிவேன்” என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நானிருக்கும்வரை நீங்கள் தனித்திருக்கப்போவதில்லை.” அவன் கைகளுக்குள் இருந்த தன் விரல்களை அவள் இழுக்க முனைந்தாள். “உங்கள் மைந்தர்கள் அஸ்தினபுரியின் முடியை அடையவேண்டும் என நீங்கள் கொண்டிருக்கும் வேட்கையை அணுகியறிகிறேன் அத்தை… அதற்காக நானும் உறுதிகொள்கிறேன்.”

குந்தி பெருமூச்சுவிட்டு “ஆம், இப்புவியில் நான் விழைவதென பிறிதொன்றும் இல்லை” என்றாள். “அதை நானும் அறிவேன்” என்றான் கிருஷ்ணன். “ஆனால் அது இவள் சக்ரவர்த்தினியாகவேண்டும் என்பதற்காக அல்ல” என்றாள் குந்தி. “அதையும் நானறிவேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். “யாதவனாக நானல்லவா உங்கள் வழித்தோன்றல்? உங்கள் குருதியல்லவா நான்?”

அவள் கைகளை உருவிக்கொண்டு தன் மேலாடையால் கண்களைத் துடைத்தாள். பின்பு அந்த வெண்பட்டாடையை கூந்தல்மேல் சரித்து தன் முகத்தை வெளிக்காட்டினாள். மூக்கும் கன்னங்களும் கழுத்தும் காதுகளும்கூட சிவந்திருந்தன. கீழிமை சிவந்து தடித்திருக்க கன்னத்தில் இமைமயிர் ஒன்று ஒட்டியிருந்தது. வெண்சங்கில் விழுந்த கோடுபோல. அவன் தன் சுட்டுவிரலால் அதை ஒற்றி எடுத்தான். “என்ன செய்கிறாய் மூடா?” என்றாள். “உங்கள் இமைப்பீலி இத்தனை நீளமானதா?” என்றான் கிருஷ்ணன். “ஆகவேதான் இத்தனை அழகிய விழிகள் கொண்டிருக்கிறீர்கள்.”

“சீ, மூடா. என்ன பேச்சு பேசுகிறாய்?” என்று குந்தி அவன் கையை தட்டினாள். புன்னகையில் அவள் கன்னங்கள் மடிய செவ்விதழ்களுக்குள் நான்கு வெண்மணிப்பற்கள் தெரிந்தன. “தேவகி மதுராவிலா இருக்கிறாள் இப்போது?” என்றாள். கிருஷ்ணன் ”ஆம், மூத்த அன்னை ரோகிணி என்னுடன் துவாரகையில் இருக்கிறார்கள். கோகுலத்தில் யசோதை அன்னை இருக்கிறார்கள். மூன்று வாட்களை ஓர் உறையில் வைக்கமுடியாதல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஒருவழியாக அஸ்தினபுரியை அடைந்தால் நான்காவது வாளை அங்கே வைத்துவிடலாம்.” குந்தி நகைத்து அவன் தலையைத் தட்டி “போடா…” என்றாள்.

“அத்தை, நான் நூற்றெட்டு பெண்களை மணந்துகொள்ளலாம் என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். ”என்ன சொல்கிறாய்?” என்று குந்தி உண்மையிலேயே குழம்பிப்போய் கேட்டாள். “மூன்று அன்னையரை ஆளக் கற்றுக்கொண்ட நான் மூவாயிரம் மனைவியரை எளிதில் கையாளலாம் என்கிறார்கள்.” குந்தி சிரித்து ”உனக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் என்று இங்கே ஒரு நாகினி சொன்னாள். நீ செல்லும் விரைவைக் கண்டால் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது” என்றாள். கிருஷ்ணன் அவள் ஆடையைப்பிடித்து தன் கைகளால் சுருட்டியபடி “அத்தை, கன்னியரெல்லாம் என் காதலியர் என எண்ணத் தோன்றுகிறது. இதோ உங்கள் சேடி வசுதை. அவள் கனவுக்குள் சென்று நேற்று ஒரு மலர் சூட்டி வந்தேன்” என்றான்.

“எப்படி?” என்று குந்தி கண்களைச் சுருக்கி கேட்டாள். “உள்ளத்தை வெல்லும் கலைகள் மூன்று. ஜாக்ரத்தை ஊடுருவும் கலையை மனோஹரம் என்கிறார்கள். கனவுகளுக்குள் செல்லும் கலைக்கு ஸ்வப்னோஹரம் என்று பெயர். சுஷுப்திக்குள் நுழையும் கலைக்கு சேதோஹரம் என்று பெயர். மூன்றையும் நான் கற்றிருக்கிறேன்.” குந்தி கேலியாகச் சிரித்து “சரிதான், அப்படியென்றால் இனிமேல் நீ போருக்கே செல்லவேண்டியதில்லை. எதிரியின் சித்தத்தில் நுழைந்தால் போதும்” என்றாள். “அப்படி சென்றால் நான் முதலில் என்னை கொன்றுவிடுவேனே அத்தை. ஏனென்றால் என்னை முழுதறிந்தவன் நான் அல்லவா?”

“என்ன அறிந்தாய்?” என்றாள் குந்தி. “பெரும் கொலைகாரன். பரசுராமரின் மழுவை தலைமுறை தலைமுறையாக ஷத்ரியக் குருதியைக் குடித்து ஒளிகொண்டது என்பார்கள். நான் நூறுமடங்கு ஒளிகொண்ட மழு.” குந்தி “உளறாதே” என்றபின் “எப்போது கிளம்புகிறாய்?” என்றாள். “நாளை…” என்றான் கிருஷ்ணன். “நேராக அஸ்தினபுரிக்கே செல்கிறேன். நான் செல்லவிருப்பதை இன்றிரவே பறவைச்செய்தியாக அனுப்புவேன்.”

“என்ன பேசப்போகிறாய்?” என குந்தி கேட்டாள். ”யுதிஷ்டிரருக்கு அஸ்தினபுரியின் மணிமுடி தேவை என்பதே என் கோரிக்கை” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், அதிலிருந்து இறங்காதே. அது பாண்டுவின் முடி. என் மைந்தரின் தந்தையின் நிலம். அதை அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.” கிருஷ்ணன் “விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே என் எண்ணமும்” என்றான். “ஆனால் சொற்களம் என்பது எப்போதும் முன்னும் பின்னும் செல்லும் மையத்தால் ஆனது.” குந்தி “அதை நானும் அறிவேன்” என்றாள். “ஆனால் எதன்பொருட்டும் நான் இழக்கமுடியாத சில உள்ளன. அஸ்தினபுரியும் பாண்டுவின் மணிமுடியும் எனக்குத்தேவை…”

கிருஷ்ணன் “நான் அதைத்தான் கோருவேன்” என்றான். குந்தி “கௌரவர்கள் விழைந்தால் யமுனைக்கு அருகே இருக்கும் எல்லைநகர்களில் சிலவற்றை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்கள் அங்கே தட்சிணகுருநாட்டை உருவாக்கிக்கொள்ளட்டும். அதற்குரிய நிதியை அஸ்தினபுரியின் கருவூலத்தில் இருந்தே அளிக்கலாம். துரியோதனனுக்குத் தேவை அவன் ஆணவம் நிறைவுறும் ஒரு முடி அல்லவா? அதை அளிப்போம். அவன் தந்தை உயிருடன் இருக்கும்வரை தட்சிணகுரு நமக்கு நட்புநாடாக இருக்க விடுவோம். அதன்பின் அது அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டும்படி சொல்வோம்” என்றாள்.

“ஆம், அது சிறந்த திட்டம்” என்றான் கிருஷ்ணன். குந்தி எழுந்து சென்று “நான் இதை விரிவாக எண்ணி வரைந்தே வைத்திருக்கிறேன். அதை உன்னிடம் அளிக்கவே உன்னை வரச்சொன்னேன்” என்று மரச்சுவரில் இருந்த பேழையறையைத் திறந்து சந்தனப்பெட்டி ஒன்றை எடுத்தாள். அதைத் திறந்து மூங்கிலில் சுருட்டப்பட்டிருந்த கன்றுத்தோல் சுவடியை கையில் எடுத்து விரித்தாள். ”அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டிய நகர்களும் ஊர்களும் இதில் செந்நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன… பார்” என்று நீட்டினாள்.

கிருஷ்ணன் அதை வாங்கி கூர்ந்து நோக்கி தலையை அசைத்தான். “மிகச்சிறந்த திட்டம் அத்தை. நெடுநாட்களாக இதை எண்ணியிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது” என்றான். குந்தி மகிழ்வுடன் “ஆம், நான் இதை ஏகசக்ரபுரியிலேயே வரைந்துவிட்டேன்” என்றாள். “கௌரவர்களுக்கு ஒப்புநோக்க கூடுதல் நிலமும் ஊர்களும் அளிக்கப்பட்டிருப்பதாக வரைபடத்தை நோக்கினால் தோன்றும். ஆனால் அந்த நிலம் யமுனையின் பல துணையாறுகளால் வெட்டப்பட்டிருக்கிறது. ஆகவே படைநகர்வு எளிதல்ல. அத்துடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நகர்கள் அனைத்தும் யாதவகுடிகளால் சூழப்பட்டவை. அவர்களின் வணிகம் வளரவேண்டுமென்றால் யாதவர்கள் உதவவேண்டும்.”

”ஆம், அவர்கள் வணிகத்தில் உதவமாட்டார்கள். போரில் நமக்கு உதவுவார்கள்” என்றாள் குந்தி. “போர் நிகழுமென உறுதியுடன் இருக்கிறீர்கள்.” குந்தி “வேறுவழியில்லை. மூத்த அரசரின் மறைவுக்குபின் போர் வழியாக நாம் தட்சிணகுருவை வென்றாகவேண்டும்” என்றாள். “உண்மை, வரலாறு அப்படித்தான் எப்போதும் நிகழ்கிறது” என்றபின் கிருஷ்ணன் அதை சுருட்டினான். “அது உன்னிடம் இருக்கட்டும். அதை உன் திட்டமாக அங்கே முன்வைத்து வாதிடு” என்றாள் குந்தி .கிருஷ்ணன் “ஆணை அத்தை” என்றான்.

“முதல்நாளிலேயே இதை கையில் எடுக்கவேண்டியதில்லை. முதலில் சிலநாட்கள் முழு முடியுரிமையையும் கேட்டு வாதிடு. விட்டுக்கொடுத்து பின்னகர்ந்து பாதிநாடு என அவர்களும் ஒப்புக்கொண்டபின் இதை நீயே உன் கையால் பிறிதுரு எடுத்து கொண்டுசென்று அவைமுன் வை… அவர்களால் மறுக்க முடியாது” என்றாள் குந்தி. “இதை நோக்கினால் இந்தத் திட்டம் நமக்குக் கீழே யாதவகுடிகள் திரள்வதைத் தடுக்கும் என்றும் யாதவர்களை இரு நாடுகளிலாக பிளந்து வலிமையைக் குறைக்கும் என்றும் கணிகரும் சகுனியும் எண்ணவேண்டும். அத்திசை நோக்கி உரையாடல் சென்றபின் இதை முன்வைத்தால் அவர்கள் இதை ஏற்பார்கள். ஐயமே இல்லை.”

“ஆனால் உண்மையிலேயே இது யாதவர்களை பிளக்கிறதே” என்றான் கிருஷ்ணன். “நீ இருக்கையில் எவராலும் யாதவர்களை பிளக்க முடியாது” என்றாள் குந்தி. கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்துகொண்டு “நான் வருகிறேன்… பயணத்திற்கான ஒருக்கங்கள் செய்யவேண்டும். துருபதரை இன்று பிற்பகலில் சந்திக்கிறேன். மாலையில் அவைக்கூட்டமும் உள்ளது” என்றான். “நீ செல்லும்போது வழியனுப்ப நானும் வருகிறேன்” என்று குந்தியும் எழுந்தாள். ”உகந்தது நிகழும் அத்தை… மூதாதையர் யாதவர்நலனை நாடி நிற்கும் காலம் இது” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான். “அவ்வாறே ஆகுக!” என்றாள் குந்தி.

அவன் கிளம்பும்போது “கிருஷ்ணா” என அவள் பின்னிருந்து அழைத்தாள். அவன் நின்று திரும்ப அவள் இதழ்கள் இருமுறை தயங்கி வீணே அசைந்தன. “உண்மையிலேயே உன் அன்னையருக்குள் பூசல் உள்ளதா என்ன?” என்றாள். கிருஷ்ணன் “உண்மையிலேயே உள்ளது அத்தை. ஒவ்வொருவரும் பிற இருவரைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பொறாமையையும் கசப்புகளையும் உருவாக்கி வளர்க்கிறார்கள்” என்றபின் புன்னகைத்து “அது விந்தையும் அல்ல” என்றான். குந்தி சிரித்து “ஆம், நான் அங்கிருந்தால் என் உள்ளமும் அப்படித்தான் இருக்கும்” என்றாள்.

கிருஷ்ணன் “நான் சற்றுமுன் எண்ணிக்கொண்டேன், நாம் இந்த நிலப்பகுப்பை முடித்தபின் நம் அனைத்துத் திறன்களையும் கொண்டு அங்கநாட்டரசனை வென்றெடுக்கவேண்டும் என்று. அவனை கௌரவர்களிடமிருந்து பிரித்து நம்முடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்…” என்றான். குந்தி முகம் மலர்ந்து ஓரடி முன்னால் வந்து “ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றாள். “ஏனென்றால் அவன் அவர்களுடன் இருக்கும்வரை அவர்களை நம்மால் எளிதில் வெல்ல முடியாது” என்றபின் “அஞ்சவேண்டாம் அத்தை, நானே அதையும் முடிக்கிறேன்” என்றான். குந்தி “அது மட்டும் போதும். நாம் அஞ்சவே வேண்டியதில்லை” என்றாள். அவள் முகத்திலும் உடலிலும் முதுமை முழுமையாகவே அகன்று சிறுமியைப்போல ஆகிவிட்டதாக தோன்றியது.

முன்னால் வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “இதுவரை என் நெஞ்சில் இருந்த சுமை முழுக்க அகன்றது கிருஷ்ணா. நீ அளிக்கும் நம்பிக்கைக்கு எல்லையே இல்லை” என்றாள் குந்தி. ”திடீரென இளமைக்கு மீண்டுவிட்டீர்கள்” என்று அவள் தலையை தொட்டு சொன்னான் கிருஷ்ணான். முகம் சிவந்து “போடா” என்றாள் குந்தி. கிருஷ்ணன் நகைத்தபடி வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைஇரண்டாயிரத்துக்குப்பின் நாவல்
அடுத்த கட்டுரைமத்துறு தயிர்-கடிதங்கள்