தினமலர்,நேர்காணல்

ஜெயமோகன் நேர்காணல்

தென்பாண்டியன்

நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத எழுத்தாளார் ஜெயமோகன். பிறரது படைப்புகளை விமர்சிப்பதிலும் விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் துணிவானவர். தமிழில் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் இவர், ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார். கடந்த மே மாதம் ’விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு கோவை வந்திருந்த அவர் தினமலர் நாளிதழுக்காக அளித்த நேர்கணாலின் விரிவான வடிவம்…

தென்பாண்டியன்: நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி….

ஜெயமோகன்: நான் சினிமாவுக்குள் போய் என்னைச் சினிமா ஆர்டிஸ்டா எக்ஸ்பிரஸ் பண்ணிக்க நான் விரும்வில்லை. சினிமா வழியாக தமிழ்ச் சமூகத்திற்கு சொல்லகூடிய எதுவும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சினிமா என்னுடைய மீடியா கிடையாது. எழுத்துதான் என் மீடியா. அப்புறம் எதுக்கு நீங்க சினிமாக்கு போனீங்கன்னு கேக்கலாம். நான் ஏற்கனேவேச் சொல்லிய பதில்தான் இது. எனக்கு வருஷத்துக்கு 5 அல்லது 6 லட்சம் ராயல்டி வந்திருச்சி என்றால் நான் சினிமாவுக்கு போக வேண்டிய அவசியமே இருக்காது.

எழுத்தாளான் என்பவன் எழுத்தை நம்பித்தான் வாழனும். ஆனால் தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளனும் எழுத்தை நம்பி வாழமுடியாது என்பதுதான் உண்மை. எழுத்தாளன் 8 மணி நேரம் கல் உடைக்கும் வேலையைச் செய்து விட்டோ அல்லது ஆபிஸில் பைல் பார்க்கும் வேலையைச் செய்துவிட்டோ எழுதுவது என்பது சிரமமானது. எல்லா எழுத்தாளனும் மொனோடொனஸ் ஆன லெஸ்கிரியேடிவ்வான வாழ்க்கையில இருந்து தப்பிக்கத்தான் முயற்சி செய்துட்டு இருக்கான். நான் கண்டுபிடிச்ச வழி சினிமா.

நான் ஒரு அரசாங்க ஊழியன். என் வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரத்தைச் சொற்பமான சம்பளத்திற்காகச் செலவிட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை நான் சினிமாவில்ச் செலவிட்டால் இதை விட பத்து மடங்கு வருமானத்தை என்னால் ஈட்டமுடிகிறது. நேரத்தை மிச்சம் செய்து கொடுக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கிறது. பயணத்திற்கான சுதந்திரத்தைக் கொடுக்கிறது. நான் இலக்கியத்தை கைவிட்டு சினிமாக்கு போகவில்லை. அரசாங்க வேலைக்கு பதிலாக சினிமாக்கு போயிருக்கேன்.

தென்பாண்டியன்: எழுத்தாளர்களுக்கு வருமானம் முக்கியம் என்று சொல்கிறீர்களா?

ஜெயமோகன்: கண்டிப்பாக வருமானம் முக்கியம்தான். உலகத்தில் எந்த ஒரு முன்னேறிய நாட்டிலும் எழுத்தாளன் வேறு வேலை செய்து கொண்டு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு எழுத்தாளன் காலையில் எழுந்து அவன் எழுத்தைப்பற்றி மட்டுமே சிந்தித்து வாழ கூடிய வாழ்க்கையின் உயரத்தை வேறு வேலை செய்து கொண்டு எழுதுகிற எழுத்தாளன் அடைய முடியாது. ஒரு மேலை நாட்டு எழுத்தாளனுக்கும் இந்திய நாட்டு எழுதாளனுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். ஒரு வங்காள, மலையாள மொழி எழுத்தாளனுக்கும் தமிழ் எழுத்தாளனுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்.

ஒரு எழுத்தாளன் எழுதுவதை மட்டுமே செய்யவேண்டும். இதுவே 200 வருடங்களுக்கு முன் என்றால் ஏதாவது ஒரு வள்ளல் அரசவையில் உட்கார்ந்து கொண்டு எழுதியிருப்பார்கள். அப்படித்தான் கம்பன் எழுத முடிந்தது. இந்த நவீன யுகத்தில் கம்பன் இருந்திருந்தால் காளி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்திருப்பான். மீதி நேரத்தில் என்ன ராமாயணத்தை எழுதியிருக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன். தற்போது சடையப்ப வள்ளலின் இடத்தை திரைப்படம் வகிக்கிறது.

தென்பாண்டியன்: வருமானம்தான் முக்கியம் என்றால் அதிகம் விற்பனையாகக்கூடிய வெகுமக்கள் ரசனைக்குரியவைகளை எழுதலாமே? பெஸ்ட் செல்லர் ரைட்டிங் என்று சொல்கிறார்களே அதைப்போல…

ஜெயமோகன்: இன்றைக்கு பெஸ்ட் செல்லர் எழுதினால் கூடத் தமிழ்நாட்டில் பெரிதாகச் சம்பாதிக்க முடியாது. இரண்டாவது சினிமாவுக்காக எழுதும் போது அதிகபட்சம் ஒருவாரம் வேலை பார்த்தால் போதும். நான் ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்வது இல்லை. அதில் கிடைக்க கூடிய ஊதியம் என்பது 2 வருட அலுவலகப்பணியில் கிடைக்க கூடிய ஊதியம் ஆகும். இதையே நான் கமர்சியல் பிக்சன் எழுதினாலும் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கைதான் வாழ முடியும். இலக்கியத்தை கைவிட்டுவிட்டு முழுநேரமாக அதை எழுதிக்கொண்டிருக்கவேண்டும் அது பைத்தியகாரத்தனமாக் அல்லவா இருக்கிறது.

தென்பாண்டியன்: எழுத்தாளனுக்கு ஹைகிளாஸ் வாழ்க்கை அவசியம் என்று கூறுகிறீர்களா?

ஜெயமோகன்: ஒரு எழுத்தாளன் ஹைகிளாஸ் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் அவனை அரிக்கக்கூடாது. வறுமையில்லாமல் வாழவேண்டும் என்று சொல்கிறேன். அவன் சுதந்திரமாகப் பயணம் போக வேண்டும் நண்பர்களைப் பார்க்க வேண்டும். புத்தகங்கள் வாங்க வேண்டும். அவன் தனது ஸ்பிர்ச்சுவலான மனநிலையைத் தக்கவைக்க வேண்டும். அதோட முக்கியமா தேவைப்படும் போது அவன் சும்மா இருக்க வேண்டும். எப்பவுமே பிசியான ரைட்டர் என்று ஒருத்தரும் இருக்க முடியாது.

அதை வந்து, கண்டம்பிளேஷன் என்று சொல்லலாம். இதை எத்தனை பேர் புரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலை. ஐடிலா உட்கார்ந்து இருப்பது என்று கூடச் சொல்லலாம். அதற்கான சுதந்திரத்தை வாழ்க்கை கொடுக்கனும். இந்த சுதந்திரம் யாருக்கு மறுக்கப்படுகிறதோ அவன் காலப்போக்கில் எழுத்தாளனாக இல்லாமல் போய்விடுவான்.

தமிழில் பார்த்தீர்கள் என்றால் எல்லா எழுத்தாளார்களும் தீவிரமாக அறிமுகமாவார்கள். அறிமுகமான இடத்திலேயே நின்று விடுவார்கள். அதற்கு மேல் போகிறதே இல்லை. எத்தனை பேர் படிப்படியாகத் தன்னுடைய மொத்த திறமையை வெளிப்படுத்துமாறு எழுதியிருக்கிறார்கள் என்றால் மிகமிகக் குறைவான ஆட்கள்தான். 5 வருடம் கிரியேடிவாக எழுதியவர்கள் தமிழில் குறைவு. தமிழில் தன்னுடைய முழு பொடன்சியலோடு எழுதிய எழுத்தாளன் என்று சொன்னால் அது ஜெயகாந்தன்தான். அதற்குக் காரணம் அவருக்கு அரசியலும் சினிமாவும் வாழ்க்கைக்கு பின்புலமாக அமைந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக ஜெயகாந்தனுக்கு சினிமா அளித்ததை இலக்கியம் அளிக்கவில்லை. சினிமாதான் அவருக்கான வாழ்க்கை வசதிகளை சுதந்திரத்தை உருவாக்கிக் கொடுத்தது. அந்த அளவில்தான் நானும் சினிமாவைப் பார்க்கிறேன்.

தென்பாண்டியன்: இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்கு வசனம் மட்டும்தான் எழுதினீர்களா கதை உங்களுடையது இல்லையா? உங்களோட சிக்கலான கதைகளாஇ சினிமாவா ஆக்க முடியுமா?

ஜெயமோகன்: என்னுடைய படைப்புகள் எல்லாமும் சிக்கலானவை கிடையாது. விஷ்ணுபுரம் மாதிரி ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு கதைக்கருவை தேர்வு செய்யும் போது அது அதற்குரிய சிக்கலோடுதான் வெளிப்படும். அதை எளிமைப்டுத்த முடியாது. அதே போல் சாதாரண ஒரு ஒழுக்கப்பிரச்சனை சார்ந்து எழுதப்பட்டிருக்கும் கன்னியகுமரி மாதிரியான நாவல் எளிமையாக இருக்கும்.

எந்த ஒரு படைப்பையும் படிக்கும் முன் மானசீகமான ஒரு தயார் நிலை வேண்டும். அந்த ஆரம்பகட்ட பயிற்சியடைந்தவர்கள்தான் படிக்க முடியும். அது எந்த ஒரு கலைக்கும் பொருந்தும். நவீன ஓவியமாக இருக்கலாம். நவீன இசையாக இருக்கலாம். எந்த அளவிற்கு அதில் நமக்கு பயிற்சியிருக்கிறது என்பதைப் பொருத்துதான் அது புரியும். நான் எந்த பயிற்சியும் எடுக்கமாட்டேன், என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து என் வேலையைத்தான் பார்ப்பேன் என்றால் நீங்கள் டி.வி. சீரியல் மட்டும்தான் பார்க்க முடியும்.

பாமர வாசகர்கள், சாதரண வாசகர்கள் என்னுடைய எழுத்துப் புரியவில்லை என்றால் என் படைப்புகளைப் படிக்க வேண்டாம். நான் அவர்களுக்காக எழுதவில்லை. ஒரு தரமான படைப்புதான் வாழ்க்கைகுத் தேவை, அதற்காக என் நேரத்தையும் பொருளையும் கொடுக்கத்தயார், உழைக்கத் தயார் னு சொல்ற வாசகர்கள்தான் எனக்குத்தேவை. என்னுடைய படைப்பை வாசிக்கும் போது கற்பனையையும் ரசனையையும் அதற்கேற்ப விரித்துக் கொள்ளும் வாசகர்களுக்காகத்தான் என் படைப்பு எழுதப்படுகிறது.

ஏழாவது உலகம் ஒரு நேரடியான நாவல். அது விளிம்பு நிலை மக்களைப்பற்றியும் அதற்கு கீழ் உள்ளவர்களைப் பற்றியும் வலுவான சித்தரிப்பு. ஆனால் அது ஒரு இலக்கிய படைப்பு. நல்ல இலக்கியப்படைப்பு என்பது பல திரைப்படங்களுக்குச் சமம். ஏழாவது உலகம் நாவலில் பல மனிதர்களின் கதை இருக்கு. பல கோணங்கள் இருக்கு. பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையும் இருக்கு. பிச்சை எடுப்பவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கையும் இருக்கு. பிச்சை எடுத்தாலும் அதற்கப்பால் ஸ்ப்ரிச்சுவல் ஹைட்டில் ஒரு வாழ்கை இருக்கு – மாங்காண்டிச்சாமி.

இது எல்லாவற்றையும் சினிமாவில் கொண்டு வருவது என்பது சர்வதேச அளவில் எடுக்கக் கூடிய கிளாசிக்கான ஒரு சினிமாவுக்குதான் சாத்தியம். ஹாலிவுட்டில் இருந்தோ, ஐரோப்பாவில் இருந்தோ ஒரு மேஜர் பிலிம் மேக்கர் வந்து ஸ்கிரிப்ட் எழுதி இந்தப்படத்தை எடுக்க முடியும். தமிழ் சினிமாவின் வணிக வட்டத்திற்குள் அதைப் படமாக எடுக்க முடியும் என்றுத் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் தமிழ் சினிமான்னா அது ஓடியாகவேண்டும் கோடிக்கணக்கான மக்களுக்கு அது புரிந்தாகவேண்டும். நான் இலக்கியத்தில் சொல்வது மாதிரி தயாராக உள்ளவர்கள் மட்டும் வாங்க மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆகவே ஏழாவது உலகம் நாவலை சினிமாவாக ஆக்க முடியுமா என்றால் முடியாது. ஏழாம் உலகம் சினிமாக்குத் தேர்வு செய்யப்படவும் இல்லை. நான் கடவுள் படம் பாலாவோட கதைதான். பாலாவின் கதைக்கு நான் டிரீட்மெண்ட் எழுதிக்கொடுத்தேன். நான் வசனம் எழுதும் போது கதைக்கு ஏற்றபடி சில கதாபாத்திரங்களை என்னுடைய நாவலில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டேன். ஆகவே நான் கடவுள் ஏழாவது உலகம் நாவலின் கதையல்ல. அது பாலாவின் கதை.

தென்பாண்டியன்: சினிமா என்பது கேளிக்கையை அடிப்படையாக கொண்டு இயங்கும் துறை அதற்கென்று ஒரு பார்மாலிட்டி, செண்டிமெண்ட் எல்லாம் உண்டு. ஒரு நவீன எழுத்தாளன் இதற்குள் இயங்குவது சிரமமாக இல்லையா?

ஜெயமோகன்: நான் என்றைக்குமே கேளிக்கையான படைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் தமிழ் இலக்கியத்திற்குள் எழுத வரும் போதுக் கேளிக்கை சார்ந்த இலக்கியம் இழிவானது என்று எல்லாவற்றையும் டிஸ்மிஸ் செய்யக்கூடிய மனநிலை இங்க பெரும்பாலவர்களுக்கு இருந்தது. நான் ஆசானாக நினைக்க கூடிய சுந்தரராமசாமியும் அந்த மனநிலைதான் கொண்டிருந்தார். ஆனால் அவர் இருந்த போதே 1991ல் நான் எழுதிய நாவல் என்ற புத்தகத்தில் கேளிக்கைச் சார்ந்த கலையும் ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதது என்றுதான் எழுதியிருக்கிறேன்.

அதே நேரத்தில் தீவிர இலக்கியத்தையும் இதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நல்ல கேளிக்கை எழுத்துங்கிறது உங்களை உயர்வான மனநிலைக்கு கொண்டுச் செல்லும். ஒரு இளைபாறலையும் மகிழ்ச்சியையும் சமூகம் சார்ந்த பார்வையையும் குடுக்கும். ஆனால் இலக்கியம் என்பதோ தீவிரக் கலை என்பதோ ஒரு ஆன்மீகமான நகர்வைக் குடுக்கும். . ஒட்டுமொத்தமான வாழ்க்கையைப் பற்றிய பார்வையைக் கொடுக்கும். தத்துவம் சார்ந்த மன எழுச்சியைக் கொடுக்கும். இப்படி பிரித்து உணரும் தன்மை இருக்க வேண்டுமே தவிர; கேளிக்கைச் சார்ந்த கலைகளை நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே திரைப்படத்தையோ அது சார்ந்த ஊடகங்களையோ நான் நிராகரிப்பவன் அல்ல.

இப்ப நான் திரைப்படத்துறைக்குள் நுழையும் போதுத் தமிழ் சினிமாவில் சூழல் மாறியிருந்ததால்தான் எனக்கு ஒரு இடம் கிடைத்தது. ஏனெனில் இயக்குநர் பாலா என்னுடைய வாசகராக அறிமுகமாகி அதன் பிறகுதான் அவருடன் பணியாற்றினேன். வசந்தபாலன் என்னுடைய வாசகர், மிகச்சிறந்த நண்பர், ஏற்கனவே எனக்குத் தெரிந்தவர். அதன் பிறகுதான் அவர் அழைப்பின் பேரில் அங்காடித்தெரு படத்தில் பணியாற்றினேன். இன்னும் பல இயக்குநர்கள் என் வாசகர்களாகவும் நண்பர்களாவும் இருக்கிறார்கள். இந்த சூழல் 20 வருடங்களுக்கு முன்பு இல்லை. அப்போது என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சினிமாவில் இடம் இல்லை.

ஆனால். தெலுங்கு, மலையாள சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் இடம் தமிழில் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். இன்றைக்கும் கதை, திரைக்கதை எழுதக்கூடிய இடத்தில் எழுத்தாளர்கள் வைக்கப்படவில்லை. திரைப்படத்தை எடுக்கக்கூடிய இயக்குநர்கள் அந்தக் கதையை செப்பனிடுதல் பிண்ணனி அமைப்பது. சில உணர்ச்சிகரமான சந்தர்பங்களை உருவாக்குவது போன்றவற்றில் ஒரு எழுத்தாளனின் பங்களிப்பு தேவை என்ற அளவில்தான் தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் பங்களிப்ப்பு இருக்கிறது.

தென்பாண்டியன்: வணிக சினிமா, நடுவாந்திர சினிமா, மாற்றுச்சினிமா இதில் தமிழில் எந்த வகை வெற்றியடைந்திருக்கிறது?

ஜெயமோகன்: இந்த வார்த்தைகளை ரொம்பக் கவனமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மலையாளத்தை எடுத்துக் கொண்டால் இந்த மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ஜோஷி, ஐ.வி.சசி போன்ற இயக்குநர்கள் எடுப்பது வணிக சினிமா. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்கள் எடுப்பது மாற்றுச் சினிமா, பரதன், பத்மராஜன், சிபி மலயல் போன்றவர்கள் எடுப்பது நடுவாந்திர சினிமா.

தமிழில் மாற்றுச் சினிமா என்பதைப் பொருத்தவரையில் சில முயற்சிகள் நடைபெற்று இருக்கிறது. கே.எஸ். சேதுமாதவன் உச்சிவெயில் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திரா வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். பாரதிராஜா அந்திமந்தாரைகள் மூலம் முயற்சி செய்தார். தமிழில் முதல் மாற்றுச் சினிமா என நான் நினைக்கக்கூடிய படம் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன். ஆனால் இது ஒரு வலுவான இயக்கமாகவோ வெற்றிகரமான இயக்கமாகவோ தமிழில் இல்லை. மலையாளத்தில் கன்னடத்தில், ஹிந்தியில், வங்காளத்தில் இருப்பது போல் ஒரு ஈவண்டாக இங்கு இல்லை. அதற்கான பைனான்சியல் சப்போர்ட் தமிழில் இல்லை. இருந்தாலும் விடாப்பிடியாக சின்ன முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வணிக சினிமா தமிழில் மிகவும் பிரபலமாக இருப்பது தெர்ந்த விஷயம். இதற்கும் மாற்று சினிமாவுக்கு இடையில் நடுவாந்திர சினிமா என்ற முயற்சி என்றைக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. 70 களிலிருந்து பார்த்தால் முள்ளும் மலரும், உதிர்ப்பூக்கள், புதிய வார்ப்புகள் எனப் பல படங்களைச் சொல்லலாம். இன்றைக்கு சொல்லவேண்டும் என்றால் பாலாஜி சக்திவேலின் காதல், கல்லூரி, வசந்தபாலனின் வெயில், அங்காடித்தெரு போன்றவைகள் உள்ளன.

நடுவாந்திரப்படங்களுக்கு தமிழில் இப்போது வரவேற்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கமர்சியல் படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் நடுவாந்திரப்படங்கள் தோல்வி பெற்றதில்லை. இது நடுவாந்திரப்படங்களின் பொற்காலம். எனவே இம்மாதிரி படங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். முழுமையான கமர்சியல் படத்தில் என்னால் பணியாற்ற முடியாது. நல்ல நடுவாந்திரப்படம் எடுக்க கூடிய ஒரு இயக்குநர் ஒரு எழுத்தாளரைக் கூப்பிடுகிறார். அப்படித்தான் நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற படங்களில் நான் பணியாற்றினேன்.

தென்பாண்டியன்: 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் திரைப்படங்களுக்கு கலைஞர்.கருணாநிதி கதைவசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு வசனகர்தா என்ற முறையில் அவரது சினிமா பங்களிப்புகள் பற்றி சொல்லுங்கள்….

ஜெயமோகன்: அவருடைய காலகட்டத்தில் அவர் சிறப்பாக வசனங்களை எழுதியிருக்கிறார். சினிமாவின் முகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு காலகட்டத்தில் ஸ்டூடியோக்களில் படங்கள் எடுக்கபட்ட போது எல்லா விஷ்யங்களையும் உணர்சிகரமாக வசனங்கள் வழியாக சொல்ல வேண்டிய நிலை இருந்தது. அப்போது கருணாநிதி அவர்களின் வசனங்கள் மிக முக்கியமானதாக இருந்தது. அது தமிழின் நாடகப்பாரம்பரியத்திலிருந்து வந்த வசனம். இன்றைக்குச் சினிமாவில் வசனம் முக்கியப்பங்காக இல்லை. எங்களை வசனகர்தா என்று சொன்னால் கூட வசனங்கள் எழுதுபவர்கள் இல்லை. திரைபடத்திற்கு டிரீட்மெண்ட்தான் எழுதுகிறோம். வசனம் வழியாக இப்போது எதையும் சொல்லவேண்டிய தேவையும் இல்லை. அதனால் இன்றைக்கு யார் வேண்டுமானலும் வசனம் எழுதலாம். வசனம் எழுதுபவரின் பணி என்பது இயக்குநர் எழுதிய கதைக்கு உதவியாக கதையை செப்பம் செய்வது மட்டும்தான். அதனால் என்னை ஒரு வலுவான வசனகர்த்தாவாக சொல்லிக்கொள்வதில்லை. வலுவான வசனங்களை எழுதக்கூடியவனாகவும் என்னை நான் நினைக்கவில்லை. ஆனால் அன்றைக்கு அவரைப்போன்றவர்கள் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்கள்.

தென்பாண்டியன்: சில எழுத்தாளர்கள் தமிழில் இன்னும் நல்ல நாவல்கள் எழுதப்படவில்லை என்றும் உலகத்தரமான படைப்புகள் வரவில்லை என்றும் கூறுகிறார்களே. இப்படியெல்லாம் பேசுவது பற்றி…

ஜெயமோகன்: இப்படிச் சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சலில்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழில் உலக இலக்கியங்களை படித்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்படித்தவர்கள் யாரும் இப்படி சொல்லமாட்டார்கள். போகிற போக்கில் இந்த மாதிரி கருத்து சொல்பவர்களுக்கு படிக்கிற பழக்கமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

கடந்த 25 ஆண்டுகளாக உலக இலக்கியங்களின் எல்லா போக்குகளையும் கூர்ந்து வாசித்து வருபவன் நான். மேலும் என்னை போல் தொடர்ந்து வாசிக்கக்கூடியவ்ர்களோடு தொடர்ச்சியான உரையாடல்களில் இருக்க கூடியவன். அந்தத் தகுதியில் உறுதியாக ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். தமிழ் இலக்கியத்தின் அளவு சிறியது. ஆனால் தரம் சர்வதேச அளவில் பேசக்கூடிய எந்த ஒரு இலக்கிய மரபுக்கும் நிகரானது. போகிற போக்கில் எது வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அது உண்மையில்லை.

நாம் பொதுவாக ஜெர்மன் லிட்ரேச்சர், பிரெஞ் லிட்ரேச்சர், லத்தீன் அமெரிக்க லிட்ரேச்சர் போன்றவைகளில் எது பெஸ்ட் என்று படுகிறதோ அதைத்தான் படிக்கின்றோம். அங்கு ஒரு வருடத்தில் ஆயிரம் புத்தகங்கள் வெளி வருகிறது என்றால் அதில் 3 புத்தகம்தான் நம் கவனத்திற்கு வரும். அந்த மூன்றை வைத்துக் கொண்டு இங்கு உள்ளதைக் கணக்கு போடக்கூடாது. இங்குள்ள பெஸ்ட் புத்தகங்கள் அங்குள்ள புத்தகங்களை விட மேலாத்தான் இருக்கு.

ஆனால் என்ன வித்யாசம் என்றால் ஸ்பானிஸ் மொழியை எடுத்துக்கொண்டால் படிக்கக்கூடிய தகுதி கொண்ட புத்தகம் 300 அல்லது 400 வரும். நம் மொழியில் 5 அல்லது 10 தான் தேரும். காரணம் நம் வாசிப்பின் அளவு சிறியது. ஒரு புத்தகம் 1000 பிரதிதான் விற்கும். முன்னர் சொன்னது மாதிரி ஒரு எழுத்தாளான் எழுத்தை நம்பி வாழ முடியாது. ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் வேலை செய்துவிட்டு இரண்டு மணிநேரம் எழுதக்கூடிய ஒரு எழுத்தாளன் 5 அல்லது 6 வருடங்களாகிறது ஒரு புத்தகம் எழுத. அவ்வளாவுதான் எழுத முடியும் ஆனால் மேலை நாட்டுப் படைப்பாளிகள் நிறைய எழுதுவார்கள் நிறைய புத்தகங்கள் வரும். அவர்களுக்கு உதவியாக எடிட்டர்கள் இருப்பார்கள். ஆராய்ச்சி செய்து கொடுக்க ஆட்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் எழுதக்கூடிய வேகமும் திவீரமும் இங்குள்ளவர்களுக்கு வராது.

பிரான்சு மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் எறத்தாழ ஒன்றுதான். ஆனால் அங்குள்ள வாசிப்பின் அகலம் வரும் புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். நம்மிடம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடக்கூடிய படைப்புகள் கூட கிடையாது. எவ்வளவு பெரிய மாஸ்டர் பீஸாக இருந்தாலும் 1000 பிரதிகள்தான். அதுவும் விற்பனையாவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதிகபட்சம் இலக்கியம் வாசிக்க கூடியவர்கள் 5000 பேருக்கு மேல் கிடையாது. இந்தச் சின்ன உலகத்திற்குள் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர பிரான்ஸ், ஸ்பானிஷ் மாதிரி பிரம்மாண்டமான உலகத்தோடு ஒப்பிடும் அளவு நாம் வளரவில்லை. வளரவில்லை என்றால் நம்முடைய வாசிப்பு வளரவில்லை அது வளர்ந்திருந்தால் புத்தகங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் அதற்கேற்றார்போல் படைப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும்.

ஆனால் படைப்பின் ஆழம் என்பது வாசகனை சார்ந்தது அல்ல படைப்பாளியைச் சார்ந்தது அந்த வகையில் தமிழ்ப்படைப்புகள் யாருக்கும் குறைந்தது இல்லை. தமிழில் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, மெளனி, சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், ஜெயகாந்தன், லா.ச.ரா போன்ற நம் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகள் உலகத்தின் எந்த மொழிக்கதைகளுக்கும் குறைந்தவை அல்ல. நாவலகளில் நாம் பெரிதாக அட்டண்ட் பண்ணவில்லை காரணம் இங்கு பிரசுரச்சூழல் இல்லை. பதிப்பகத்தார் வந்து 100 பக்கங்களில் எழுதிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். என்னிடமே கவிதா பதிப்பகம் விஷ்ணுபுரத்தை 200 பக்கமாக சுருக்கிக் கொடுங்கள் போடலாம் என்று சொன்னார்கள். தமிழ் நாவலுக்கான பதிப்புச் சூழல் இப்படித்தான் இருக்கு. 1997ல் விஷ்ணுபுரம் ஒரு சரியான திறப்பு எனச் சொல்லலாம். அது வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு தமிழில் பெரிய நாவல்களை துணிந்து அச்சிடும் பழக்கம் நம்மிடையே வந்தது.

இப்போது தமிழில் என் பெயர் சிவப்பு என்ற ஓரான் பாமுக்கின் நாவல் ஒன்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 1997 வந்த உலகப்புகழ் பெற்ற புத்தகம் அது. பாமுக் நோபல் பரிசு பெற்றவர் இலக்கியத்தில் அடிப்படை ரசனையோ தேர்ச்சியோ உள்ளவர்கள் விஷ்ணுபுரம், மை நேம் இஸ் ரெட் இரண்டு நாவல்களையும் ஒப்பிட்டு பார்த்தால் விஷ்ணுபுரம் மேலாகத்தான் இருக்கும். ஒரான் பாமுக் நாவல் உலக அளவில் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்ட நாவல். தமிழில் விஷ்ணுபுரத்தை 5000 பேர் படித்திருந்தால் அதிகம். நம்முடைய தரம் என்பதை அளவை வைத்துத் தீர்மானிக்கூடாது. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நாவல்களும் எழுத்தாளர்களும் வர வேண்டுமெ என்றால் அந்த அளவிற்கு நாம் வாசிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேராவது வாசிக்கும் பழக்கம் வேண்டும். ஒரு புத்தகம் வந்தால் 50000 பிரதிகள் அச்சிட வேண்டும் அந்த நிலை வந்தால் நாம் வளர்ந்திருப்பதாக சொல்லலாம்.

தென்பாண்டியன்: தமிழிக் கவிஞர்களில் குறிப்பிட்ட சில கவிஞர்களை மட்டுமே உதரணமாக தேவதேவன், கலாப்ரியா போன்றவர்களை மேஜர் பொயட்டாக முன்வைக்கிறீர்கள் இதற்கு என்ன காரணம்?

ஜெயமோகன்: தமிழில் நான் விமர்சகன் என்ற அளவில் கூர்ந்து கவனித்து எனக்கு முந்தைய தலைமுறைக் கவிஞர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பிரமிள், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இலங்கைக் கவிஞர்கள் சு.வில்வரத்தினம், சேரன் போன்றவர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன். உள்ளுணர்வின் தடத்தில் என்ற புத்தகமாக இவைகள் வந்துள்ளன.

இதில் பிரமிளை மெட்டா பிசிக்கல் பொயட் என்று சொல்லலாம். அதே மாதிரி எதார்த்தமாக அன்றாடப்பிரச்சனைகளைப் பற்றிக் கவிதை எழுதக்கூடியவர் கலாப்ரியா. இரு வேறு எல்லைகளிலே நிக்கிறாங்க. 1930 முதல் 60 வரை வடிவத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கியவர்களை புதுக்கவிஞர்கள் என்றார்கள். கலாப்ரியா என்ன மாற்றம் கொண்டு வந்தார் எனில் அதுவரைக்கும் ஒரு காட்சியை சொல்ல வேண்டும் என்றால் ஒரு குறியீட்டு அர்த்தம் இருந்தால்தான் சொல்ல முடியும். கலாப்ரியா நாம் அன்றாடம் சாதரணமாக பார்க்க கூடிய காட்சிகளை எந்தக் குறியீடும் இல்லாமல் சொன்னார். உதரணமாக

கொல் வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்பதற்காக
தங்கை குழந்தைகளை
தூக்க முடியாமல்
தூக்கிச் செல்லும்
அக்கா குழந்தைகள்

புகைகூண்டு வழியே
வீட்டுக்குள் வந்துவிட்ட
பச்சோந்திக்கு
என்ன நிறம்
மாற்றிக்கொள்வதென்று
தெரியவில்லை

இந்தக் கவிதைகளில் எந்த குறியீட்டு அர்த்தமும் கிடையாது ஆனால் அதில் ஒரு வாழ்க்கையிருக்கிறது. ஒரு சின்ன காட்சி ஒரு வாழ்க்கையைச் சொல்றது.

பிரமிள் கவிதைகள் ஒரு அறிவார்ந்த தளாத்தில் இருந்தது. உணர்ச்சி நிலையில் பித்து நிலையில் இருக்கக்கூடிய கவிதைகளை அவர் எழுதினார். இப்படியாக தேவதேவன் தலை முறை வரைக்கும் பார்த்தோமானால் ஒவ்வொரு கவியும் வடிவத்தை தனக்கேற்றார்போல் மாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகும் முக்கியமானக் கவிஞர்கள் எனில் ரமேஷ் பிரேதன், யூ.மா.வாசுகி, மனுஷ்யபுத்திரன் இப்படி இன்னும் சிலரைக் குறிப்பிடலாம்.

அதன் பிறகு அடுத்த தலைமுறைக் கவிகள் வருகிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றுவடிவத்தில் பிரஷ்ஷா எழுதிகிறவர் என்றால் முகுந்த் நாகராஜனைச் சொல்லலாம். முழுக்க முழுக்கக் குழந்தைகளின் உலகத்திலிருந்து ஆழமாக உணர்ச்சிகளை உருவாக்க முடியும் என்று அவர் காட்டுகிறார். மற்றபடி நல்ல கவிதைகள் எழுதக் கூடிய கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இரண்டு மூன்று நல்ல கவிதைகளைச் சொல்ல முடியும். ஸ்ரீநேசன், இளங்கோ கிருஷ்ணன் இசை இப்டி பல கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களுமே கூட தங்களுக்கு எனத் தனியான மொழி ஒன்றைக் கொண்டிருக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் கவிதைகளுக்குள் ஒரு சிறிய மாற்றத்தை வேரியேஷனைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு கவிதை வாசகன் என்ற முறையில் எனக்கிது போதவில்லை.

தென்பாண்டியன்: நவீன படைப்பிலக்கியவாதிகளில் செவ்வியல் சார்ந்த பதிவுகளை தங்கள் படைப்புகளில் அதிகம் வெளிப்படுத்துபவராகவும் மரபார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வமுடையவராகவும் நீங்கள் இருக்கறீர்கள். இதற்கான காரணம் என்ன?

ஜெயமோகன்: முக்கியமான விஷயம் என்பது நான் தமிழில் எழுத வந்த போது ஓங்கி நின்றது நவீனத்துவம். மாடர்னிசம் என்பது மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வது. தன்னுடைய விதிகளை தானே உருவாக்கிக் கொள்வது.என்னுடைய காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் சுந்தரராமசாமி இதைப் பற்றிச் சொல்லும் போது இதை மரபின் சுமை என்று குறிப்பிடுகிறார். புதுமை என்பது மரபின் சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். அந்தக் காலத்தில் எல்லோருடைய மனதிலும் இருந்தது இதுதான். அசோகமித்திரன் உட்பட பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.

நான் வரும் போது நவீனத்துவத்தை முழுவதுமாக நிராகரிக்கிர மனநிலையோடுதான் வந்தேன். ஏனென்றால் ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையோ ஒரு சின்ன இனக்குழுவினுடைய வாழ்க்கையயோ ஒரு நகரத்தின் வாழ்கையையோ சொல்லக்ககூடியவனாக என்னை நான் நினைக்கவில்லை. ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடியவனாக, ஒரு ஆயிரம் வருட வரலாறைச் சொல்ல கூடியவனாக என்னை நினைத்தேன். ஏனெனில் என் பிரச்சனை எல்லாமே தத்துவார்த்தாமானப் பிரச்சனை. தத்துவார்த்தமானப் பிரச்சனைக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது எனத் தெரியாது. என்னுடைய வாழ்வு இன்று எப்படி இருக்கிறது என்பது எனக்கு முக்கியமில்லை. நேற்று, முந்தைய நாள் எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம். அப்போதுதான் தத்துவமாக யோசிக்க முடியும். அப்படி யோசிக்கும் போதுதான் வரலாறு உள்ளே வருகிறது. அதன் தொடர்ச்சியாக காலம் உள்ளே வருகிறது. இவைகள் வரும் போது வேறு வழியே இல்லாமல் செவ்வியலும் உள்ளே வருகிறது.

மேலும் ஒரு இலக்கியத்திற்கு தேவையான படிமங்கள் முழுக்க முழுக்க தங்களது சொந்த வாழ்க்கையில் இருந்து பயன்படுத்துவதுதான் நவீனத்துவர்களின் பழக்கம். சுந்தரராமசாமி, அசோகமித்ரன் எல்லோரும் அப்படித்தான் பயன் படுத்துவார்கள். அவர்களின் வாழ்வைச் சார்ந்து அந்தப் படிமங்கள் இருக்கும். ஆனால் எனக்கு நான் பேசக்கூடிய தத்துவார்த்தமான விஷயங்களுக்கு அது போதாது. எனக்கு இன்னும் காலத்தை மீறி நிற்கக்கூடிய படிமங்கள் தேவைப்படுகிறது. நெடுங்காலம் நிற்கக்கூடிய படிமங்கள் தேவைப்படுகிறது. ’என் கை தவறி எங்கே வைத்தேன் என் மூக்கு கண்ணாடியை’ என்றப் படிமம் எனக்குத் தேவையில்லை. ஆனால் சிவலிங்கம் என்ற படிமம் எனக்குத் தேவைப்படுகிறது. பத்தாயிரம் வருடங்களாக ஒரு உருவத்தைக் கடவுள் என நினைக்கிறான் எனில் அது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பது எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே மரபிலிருந்து படிமங்கள் தேவைப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக நான் கிளாசிக்குகளுக்குள் போக வேண்டியிருக்கிறது.

எனவே என்னைப் போஸ்ட் மாடர்னிஸ்ட் எனச் சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் மாடர்னிசத்துக்கு பின்னால் வந்தவன் எனலாம். என்னுடைய எழுத்தை நவீனத்திற்கு பிந்தையது, ஆப்டர் போஸ்ட்மாடர்னிசம் எனலாம். மாடர்னிசம் முழுதையும் தாண்டி வந்தது எனச் சொல்லலாம். மாடர்னிசம் பாரம்பரியம் இல்லாதது. செவ்வியல் இல்லாதது. எனக்கு பாரம்பரியமும், செவ்வியலும் முக்கியம். ஆகவே என்னுடைய ஒரு கால் மதத்தில்தான் இருக்கிறது. மதத்தை எப்படி நுண்ணுணர்வோடு அணுகுவது, மதத்தின் படிமங்களை எப்படி அணுகுவது என்பதைத்தான் என் எழுத்தில் பயன்படுத்துகிறேன்.

இன்னொரு பக்கம் தமிழ்ச் செவ்வியல் மரபையும் வடமொழி செவ்வியல் மரபையும் ஒரே பார்வையில் பார்க்க கூடிய பார்வை எனக்கு இருக்கு. தமிழ் இலக்கியத்தில் ஆரம்பத்தில் என்னுடைய படைப்புகளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறேன். பிறகு விமர்சனம் எழுதும் போது அந்த அளவுகோளை எடுத்தாளுகிறேன். இன்று தேவதேவனையோ கலாப்பிரியாவையோ பார்க்கும் போது தொல்காப்பியர் முதலான மரபுகளில் வந்தவர்களாக அவர்களைப் பார்க்கிறேன். கபிலன் முதல் இன்று வரக்கூடிய கவிஞர்கள் வரை வைத்துப் பார்க்கிறேன். என் பழக்கம் அதுதான். இது இன்னும் தெளிவான அளவுகோளைக் கொடுக்கும் என நினைக்கிறேன். அதனால் மரபிலக்கியத்தை பெரும்பாலும் பயன் படுத்துகிறேன். என்னுடைய தலைமுறை எழுத்தாளர்களில் என்னளவு மரபு இலக்கியத்தைப் பொருட்படுத்தி பேசுபவகள் கிடையாது. இது என்னுடைய பார்வையை முழுமையாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

தென்பாண்டியன்: கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி உங்கள் கருத்தென்ன?

ஜெயமோகன்: யார் அங்கீரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் தமிழ் செம்மொழிதான். தமிழைச் செம்மொழியாக நினைப்பது என்பது தமிழர்கள் மனநிலையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக நூல்கள் வழியாக உலக அறிஞர்கள் மத்தியில் தமிழ் வாழும் செம்மொழி என நிறுவும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இந்த இரண்டையுமே நாம் செய்யவில்லை. நமக்கு மொழி சார்ந்த உள்ளீடற்ற பீடு இருக்கிறதேத் தவிர செம்மொழி என்ற உண்மையான உணர்வு கிடையாது. அப்படி இருந்தால் இந்தளவிற்குத் தமிழைக் கைவிட்டுத் தமிழுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் மக்களாக இருந்திருக்க மாட்டோம்.

தமிழ்ச் செம்மொழி,ஆனால் தமிழைப்படிக்க மாட்டோம், தமிழ் இலக்கியங்களைப் படிக்க மாட்டோம், தமிழ் நவீன இலக்கியங்களைப் படிக்க மாட்டோம். எங்கும் தமிழில் பேச மாட்டோம் – இதுதான் நம் பழக்கமாக இருக்கிறது. தமிழ் செம்மொழியா இல்லையா என்பதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் தமிழ் மக்களாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும் .

இரண்டாவதாக தமிழை செம்மொழியை அங்கீகரிக்க வேண்டியவர்கள் உலக அளவில் இருக்கும் அறிஞர்கள். உலக அளவில் தமிழ் பயிற்றுவிக்க கூடிய பல பல்கலைக்கழகங்கள், பீடங்கள் இன்று மூடக்கூடிய நிலையில் உள்ளன. நான் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குப் போன போது அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட்டை சந்தித்தேன் அங்கும் தமிழ்த்துறை மூடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது என்றார். மாணவர்கள் வருவதில்லை. நிதியுதவியில்லை. போதுமான ஆதரவு இல்லை. அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியால்தான் அந்த துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூடப்படும் என்ற நிலையில்தான் உள்ளது. அநேகமாக அவர்தான் கடைசிப்பேராசிரியாராக இருப்பார் போல் தோன்றுகிறது. ஆக இந்நிலையில்தான் தமிழ் உலக முழுதும் இருக்கிறது.

தமிழ் உலகின் செம்மொழிகளில் ஒன்றுதான், இம்மொழியை ஆராய வேண்டியது அவசியம், தமிழர்களின் உலகத்தைத் தெரிந்துகொளவதற்கும். உலகத்தின் பண்பாடுகளை மரபுகளை தெரிந்து கொள்வதற்கும் தமிழை ஆராய வேண்டியது அவசியம் என்ற எண்ணத்தை உலக அறிஞர்கள் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க தமிழில் பேரரறிஞர்கள் தோன்ற வேண்டும். இந்தப் பேரரறிஞர்கள் நூலகள் தொடர்ச்சியாக உலக அறிஞர்கள் மத்தியில் போக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அப்படி உலக அளவில் போன தமிழறிஞர் நூல்கள் எத்தனை. அப்படி போவதற்கு தகுதியான தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் இங்கிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப வருத்தப்படக்கூடிய நிலையில்தான் உள்ள்து. கடந்த 30 அல்லது 40 வருடங்களாகத் தமிழாய்வுத் துறையில் என்ன நடக்கிறது என்றால் ஏற்கனவே வந்த ஆய்வுகளை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது. தமிழாய்வுகளின் பொற்காலம் என்று சொன்னால், தொ.போ.மீ., மு.அருணாச்சலம் போன்றோரோடு முடிந்தது. அந்த நூல்களில் இருப்பதைக் கூட படிக்காமல், அதிலிருந்து அங்கும் இங்கும் பிரதியெடுத்து பி.ஹெச்.டி வாங்கும் நிலைதான் இன்று உள்ளது. நான் தொடர்ந்து பல்கலைக் கழக ஆய்வுகளைக் கவனித்து வரக்கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழாய்வு என்பது அற்றுப் போய்விட்டது. தேடினல் உருப்படியாக ஒன்று இரண்டு கூட இல்லை.

ஏன், நமக்கு ஒரு தனி தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது. இத்தனை வருடத்தில் ஒரு தமிழ்க்கலைக் களஞ்சியத்தைக் கூட பதிப்பித்து முடிக்கவில்லை. வாழ்வியல் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு போட்டார்கள் அதை இன்னும் முடிக்கவில்லை. ஒரு நல்ல கலைக் களஞ்சியம் தமிழில் இதுவரை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று போட்டார்கள் அது மறுபதிப்பு கூட வரவில்லை. அதை ரீ-பிரிண்ட்தான் போட்டிருக்கிறார்கள். ஆகவே தமிழறிஞர்கள் என்ற ஒரு வம்சமே அற்றுப் போய்விட்டது. இங்கு தமிழறிஞர்களே கிடையாது. அரசியல் காற்றுக்கு ஏற்றபடி பாய்விரித்த்து மேலே போகக்கூடிய புரபஸனலிஸ்டுகள், தொழில் லாபத்தை மட்டுமே விரும்பக்கூடிய பேராசிரியகள் நிரம்பியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழ் மொழி மேல் தமிழர்களுக்கு அக்கறையில்லை. உலகம் முழுதும் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் 1 கோடி பேர்கள் கூடத் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில்லை. 5000 வாசகர்கள் கூட தமிழில் இல்லை எனும் போது தமிழ் செம்மொழியானால் என்ன ஆகாவிட்டால் என்ன? இவர்கள்தானே தமிழைச் செம்மொழியாக்க வேண்டும்.

தமிழறிஞர்கள் பெருகி தமிழின் வளத்தையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டிய நேரத்தில் அதற்கான தகுதிகொண்ட இரண்டு மூன்று தமிழறிஞர்கள் கூட இல்லை என்று சொன்னால் பிறகு எப்படி அவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள். ஆக இப்போது எஞ்சியிருப்பது மத்திய அரசு இதற்காக தரக்கூடிய நிதியாதரங்களை பெறுவதற்கான முயற்சிமட்டுமே. மத்திய அரசு தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழுக்கு கூடுதலாக சில கோடி ரூபாய்கள் கிடைக்கும். இதில் இது ஒன்றுதான் லாபம்.

சரி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்த நிதிகளைக் கொண்டு தமிழ்வளர்ச்சிக்கு என்ன நடந்திருக்கிறது என படைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை என தெரிய வரும். இப்போது தமிழுக்கு உயர் தமிழ் ஆய்வு மையம் என்ற ஒன்று இருக்கிறது. ஒன்று மைசூரில் இன்னொன்று சென்னையிலிருக்கிறது. இத்தனை வருடங்களாக என்ன செய்தார்கள். இன்றைக்கும் புத்தக சந்தையில் போய் சங்க இலக்கியம் பிழை திருத்தப்பட்ட ஒரு பதிப்பை வாங்க வேண்டும் என்றால் அது தனியார் பதிப்பகம் வெளிடப்பட்ட நூலாகத்தான் இருக்கும் அதிகாரப்பூர்வமான ஒரு தொகுதி கிடையாது. அப்படி இருந்தால் கூட முழுக்க முழுக்க அது தவறாகத்தான் இருக்கும்.

கடந்த 50 வருடங்களில் மாஸ்டர் பீஸ் எனச் சொல்லக்கூடிய நூல்கள் வந்திருக்கிஇன்றன . அந்த நூல்களுக்கு ஒரு ஒழுங்கான மறுபதிப்பு போடக்கூட செம்மொழி அந்தஸ்தால் கிடைத்த கோடிக் கணக்கான ரூபாய்களால் முடியவில்லை. ஒரு உதாரணம் சொல்லலாம். விபுலாணந்த அடிகளின் யாழ்நூல் தமிழிசை பற்றிய ஒரு மாபெரும் நூலாகும். அந்த நூலை கனடாவைச் சேர்ந்த சிவதாஸ் என்ற வணிகர் தனது சொந்த செலவில் மறுபதிப்பு போட்டிருக்கிறார். 50 வருடங்களுக்கு பிறகு, கருணாமிர்தசாகரம் எனும் தஞ்சை ஆபிரகாம பண்டிதருடைய நூல் இன்றைக்கு வரை மறுபதிப்பு போடவில்லை. தமிழாய்வின் ஒரு பொற்காலம் அப்படியே அஸ்தமித்து போய்விட்டது. பல நூல்கள் சந்தையில் கிடைப்பதில்லை. வையாப்புரிப்பிள்ளையின் பேரகராதி விற்காமல் கிடக்கிறது. ஒரு அகராதி என்பது வருடம் தோறும் வர வேண்டும் அப்போதுதான் அதை வாழும் அகராதி என்று சொல்வார்கள். 5 வருடம் வரவில்லை என்றால் அது செத்த அகராதி என்பார்கள். ஆனால் 50 வருடமாக பதிப்பிக்கபடாத அகராதியை பேரகராதி என்று சொல்கிறோம்.

ஆகவே செம்மொழிக்காக கிடைக்கும் நிதியை தமிழ் வளர்ச்சிக்காக பயன்படுத்த போவதில்லை. அதனால் செம்மொழி என்பது ஒரு அரசியல் வார்த்தையே தவிர அதனால் மூன்று தளங்களிலும் பயன் கிடையாது. அதனால் தமிழர்கள் தமிழை வாசிக்கவோ எழுதவோ எந்த மறுமலர்ச்சியும் வந்துவிடாது. உலக அளவில் தமிழை எடுத்துப்போகும் முயற்சியும் வெற்றியடையாது. செம்மொழிக்கு அளிக்கபட்ட நிதி மதிப்பிற்குரிய வகையில் பயன்படுத்தபட போவதில்லை. எனவே செம்மொழி என்பது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தபட்ட வார்த்தைதானே தவிர வேறொன்றும் இல்லை. என் போன்ற சிந்தனையாளர்களுக்கோ படைப்பாளர்களுக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை அதனால் எனக்கு இதில் ஆர்வமும் இல்லை.

தென்பாண்டியன்: சரி, இந்த நிதியை பயனுள்ள வகையில் எப்படி செல்விடலாம் என நீங்களே சொல்லுங்களேன்.

ஜெயமோகன்: நான் மட்டுமல்ல, இதைச் சொல்லக்கூடிய செய்யக்கூடிய எண்ணற்ற அறிஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இன்றையச் சூழலில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்னிடம் கேட்டால் ஆய்வு சார்ந்து தமிழில் வெளிவந்த அத்தனை முக்கியமான செவ்விலக்கிய நூல்களையும் மறுபதிப்பு செய்ய வேண்டும். அவை அத்தனையும் இண்டர் நெட்டில் ஏற்ற வேண்டும். எந்த நூலையும் யாரும் எப்போதும் தேடி எடுக்கும் அளவிற்கு யூனிக்கோட்டில் பதிவேற்ற முடியும். ஒரு அலுவலகத்தைத் திறந்து 10 கோடி ரூபாய் செலவிட்டால் 5 வருடத்தில் இவை அத்தனையையும் நெட்டில் பதிவேற்றி விடலாம். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் யாரும் படிக்கலாமே. மாநாடுகளுக்கு இவ்வளவு செலவு செய்யக்கூடியவர்கள் இதற்கு செலவிடக்கூடாதா?

இந்தியாவில் அதிகம் கல்வெட்டுகள் கிடைத்த இடம் தமிழ்நாடுதான் ஏனெனில் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்பட்டது. தமிழகத்தில் அப்படி இல்லை. கோயில்கள் பாதுகாக்கப்பட்டதால் நிறைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கல்வெட்டு ஆதரங்களில் 20 சதவீதம் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது. கேட்டால் நிதியாதரம் இல்லை என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் ஏன் நெட்டில் பதிவேற்றக் கூடாது. இது போன்று ஆக்கபூர்வமான வகையில் எவ்வளவோ செய்யமுடியும்.

நன்றி: தினமலர்

முந்தைய கட்டுரைகாடு,கடிதம்
அடுத்த கட்டுரைஅனல் காற்று – விமரிசனம்