«

»


Print this Post

உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை


அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.

எங்கே நான் ஒரு பேருரையை ஆற்றிவிடப் போகிறேனோ எனும் பயத்தில் நண்பர்கள் தெளிவாக ’அறிமுக உரை’ என்று குறிப்பிட்டுவிட்டார்கள். எனக்கும் அது வசதிதான். நான் இங்கே இரு அறிமுகங்களை செய்ய வேண்டும். ஒன்று எழுத்தாளர் ராய் மாக்சம் குறித்தது இன்னொன்று உப்பு வேலி எனும் புத்தகத்தை குறித்து.

IMG_5948[1]

ராய் மாக்சம் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ராட்ஃபர்ட் அப்பான் ஏவனிலிருந்து சுமார் பதினைந்து மைல்கள் தொலைவில் இருக்கும் எவிஷாம் எனும் ஊரில் 1940ல் பிறந்தார். அவருக்கு பத்த வயது இருக்கும்போது ஒரு விபத்தில் தன் தந்தையை இழந்தார். சிறுவயதில் அவருக்கு இரு ஆர்வங்கள் இருந்தன. ஒன்று இங்கிலாந்தின் கிராமங்களில் வாழ்ந்த எளிய குடியானவர்களைப்போலவே சிறிய தோட்டங்களில் விவசாயம் செய்வது, இன்னொன்று பள்ளியில் வேதியியல் சோதனைகள் மூலம் வெடி வெடிப்பது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேதியலில் மேற்படிப்பை தொடர்வதற்கு அவருக்கு விருப்பம் இருந்தது. பணம் அதிகம் செலவாகும். அவரது எளிய குடும்பத்திற்கு அது பெரும் சுமை என்பதால் ஷெல் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தேவையான பணம் கிடைத்ததும் அவரது சிறுவயது ஆர்வங்கள் இரண்டையும் பூர்த்தி செய்யும் வேளாண் வேதியல் துறையில் உயர்கல்வி கற்க நாட்டிங்கம் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்தார். படித்துக்கொண்டே பழங்களை விளைவித்த பண்ணை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அந்தப் பண்ணையின் உரிமையாளர் வட கிழக்கு இந்தியாவின் கடைசி கவர்னராக இருந்த சர். ஜேம்ஸ் அட்சர்சன். அவர் வழியாக ஆப்ரிக்காவின் மீது ராய்க்கு ஆர்வம் வந்தது/ ஆப்ரிக்காவில் வேலை வேண்டும் என ஒரு விளம்பரத்தை அவர் வெளியிட்டார். 1961ஆம் ஆண்டில் தனது 21ஆவது வயதில் மலாவியில், தேயிலை தோட்டத்தில் உதவி மேலாளராக பணியில் அமர்ந்தார். அடுத்த பதிமூன்று வருடங்கள் ஆப்ரிக்காவில் பல்வேறு சுவையான அனுபவங்களுக்கிடையே தேயிலை தோட்டங்களில் நாட்களை கடத்தினார் ராய். ஆப்ரிக்காவின் எல்லா நாடுகளுக்கும் பயணம் புரிந்த ஒரு தொடர் பயணியாகவே அவர் இருந்தார்.

மலாவிக்கு சுதந்திரம் வந்தபோது காலனிய சமாதான இயக்கத்திலும் அவர் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து திரும்பிய ராய் ஆப்ரிக்க கலைப்பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். தனது நாற்பது வயதில் மீண்டும் கல்லூரிக்குச் சென்று பழைய புத்தகங்களைப் பேணுவது குறித்து படித்து சான்றிதழ் பெற்றார். முதலில் கேண்டபெரி பேராலயத்திலும் பின்னர் லண்டன் பல்கலைகழகத்தின் நூலகத்திலும் பழைய, அரிய புத்தகங்களைப் பேணும் பணியில் ஈடுபட்டார். மிகப்பழமை வாய்ந்த மத நூல்களையும், கலிலியோ போன்ற வரலாற்று நாயகர்களின் கையெழுத்து பிரதிகளையும் இன்றைய, நாளைய தலைமுறைகளுக்காகப் பேணும் பணியை ராய் செய்துள்ளார்.

இவற்றிற்கிடையே 1990ல் அவரது முதல் நாவல் The Freelander வெளியானது. உண்மை வரலாற்றை புனைவாக்கிய இந்த நாவல் 1894ல் கென்யாவில் ஐரோப்பியர்களால் அமைக்கப்பட்ட ஒரு இலட்சியவாத சமூகத்தினை பின்னனியாகக் கொண்டது. இதற்கு அடுத்ததாக அவர் 2001ல் எழுதிய புத்தகம் ‘The Great hedge of India’. இதுதான் இன்று தமிழில் உப்புவேலி எனும் பெயருடன் வெளியிடப்படுகிறது.

2003ல் தனது தேயிலைத் தோட்ட அனுபவங்களையும் உலக தேயிலை தோட்டத் தொழிலின் வரலாறையும், சமூக விளைவுகளையும் உள்ளடக்கிய ‘Tea – Addiction, Exploitation and Empire,’ எனும் நூலை எழுதினார். 2009ஆம் ஆண்டு இது A brief history of Tea எனும் பெயரில் மறு வெளியீடானது. இது தேயிலை சீனாவில் கண்டுபிடிப்பதில் துவங்கி, இங்கிலாந்துக்கு வந்தது, இங்கிலாந்து தேயிலைக்காக சீனா மீது படையெடுத்தது, தமிழர்கள் தேயிலைத் தோட்ட பணிக்காக நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறியது என வரலாற்றையும் தேயிலை வளர்ப்பது தயாரிப்பது, விற்பது குறித்த நுட்பமான தகவல்களையும் கொண்ட நூலாகும். இந்த புத்தகம் சீன மொழியில் வெளியாகி 10,000க்கும் மேற்பட்ட பிரதிகளும் விற்பனையாகியுள்ள இந்த நூலையும் விரைவில் தமிழில் எதிர்பார்க்கலாம்.

1992ல் சம்பல் கொள்ளைக்காறி பூலன் தேவி அரசுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் காலம் கடந்தும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். மக்களின் கவனத்தை ஈர்க்க அவர் சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். இங்கிலாந்தில் இது செய்தியானது. அதை படித்த ராய் எந்த எதிர்பார்ப்புமின்றி சிறையிலிருந்த பூலன் தேவிக்கு ஊக்கமூட்டும் கடிதம் ஒன்றை எழுதினார். எழுதப் படிக்கத் தெரிந்திராத பூலன் தேவியிடமிருந்து எதிர்பாராமல் பதில் கடிதம் வந்தபோது ராயின் ஆர்வம் தூண்டப்பட்டது.

அவர்கள் இருவரும் தொடர்ந்து கடிதங்களை பகிர்ந்துகொண்டனர். அந்த ஒற்றைக் கடிதத்தில் துவங்கிய, நட்பு பூலன் தேவி சுடப்பட்டு இறக்கும் வரைக்கும் தொடர்ந்தது. ராய் பூலனுடன் தொடர்ந்து பல பயணங்களை செய்திருக்கிறார், அவரின் திருமணம், பொதுவாழ்க்கை உட்பட பல முக்கிய நிகழ்வுகளில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். பூலனின் வாழ்கையும், பூலன் எனும் படிப்பறிவற்ற இந்திய கொள்ளைக்காறி, ராய் எனும் ஆங்கிலேய எழுத்தாளருடன் கொண்ட நம்பமுடியாத நட்பின் கதையும் 2010ல் Outlaw: India’s Bandit queen and me எனும் புத்தகமாக வெளிவந்தது.

காலினி ஆதிக்கத்தின் வரலாற்றில் அதிக ஈடுபாடுகொண்ட ராய் மாக்சம் 2014ல் The East India company wife எனும் நாவலை எழுதினார். காத்தரீன் குக் எனும் பெண்மணியின் வாழ்கையை புன்னைவாக்கி ராய் எழுதிய இந்த புத்தகம் அமேசானின் கிண்டில் வெளியீடாக மட்டும் வெளியிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு காலினிய இந்தியா குறித்த பல துல்லியமான தகவல்களை உள்ளடக்கிய மிக சுவாரஸ்யமான நாவல் இது. பல நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது இந்த நாவல். தற்போது ராய் இந்தியாவில் காலனியமைத்து அதை கொள்ளையடித்த ஐரோப்பியர்களின் வரலாற்றை வாஸ்கோ ட காமாவில் துவங்கி இராபர்ட் கிளைவ் வரை அடுக்கி ‘The great theft of India’ எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதிவருகிறார்.

1995ல் லண்டனில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை ஒன்றில் ஒரு புத்தகத்தை தற்செயலாய் புரட்டிக்கொண்டிருந்தார் ராய். அது ஒரு முன்னாள் கிழக்கிந்திய அலுவலரின் நினைவுத் தொகுப்பு. அதிலிருந்த அடிக்குறிப்பில் ஒரு வேலிபற்றிய தகவல் இருந்ததை ராய் பார்க்கிறார். 1500 மைல் நீளமுள்ள ஒரு வேலி. வடமேற்கில் இமய மலையின் அடிவாரத்திலிருந்து துவங்கி தென்கிழக்கே ஒரிசா வரைக்கும் நீண்ட வங்காள மாகாணத்தின் எல்லையை பாதுகாக்க அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய புதர் வேலி அது. சீனப் பெருஞ்சுவருக்கு ஒப்பான அந்த வேலி குறித்து வரலாற்றில் வேறெந்த பதிவையும் ராய் கேள்விப்பட்டிருக்கவில்லை. அது குறித்த குறிப்புகளைத் தேட ஆரம்பித்தார். இந்திய காலனியை நிர்வகித்த Indian Offices துறையின் வருடாந்திர அறிக்கைகளைத் தேடி அதில் வேலி குறித்த பல குறிப்புகளையும், வேலியின் அளவு, அதில் வேலைபார்த்தவர்களின் எண்ணிக்கை, பராமரிப்புச் செலவு உட்பட பல தகவல்களையும், வேலியின் வழித்தடங்களையும், வரைபடங்களையும் கண்டுபிடித்தார்.

தற்செயலாக அப்போது ராய் இந்தியாவிற்கு வந்து, பூலன் தேவியின் தாயாரின் கிராமத்துக்குச் சென்று தங்க திட்டமிட்டிருந்தார். அந்த சிறிய கிராமத்தின் அருகே சுங்கப் புதர் வேலி இருந்ததாக வரைபடம் காட்டியது. அங்கிருந்து துவங்கிய அவரது தேடல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. இண்டியானா ஜோன்ஸ் போன்ற ஒரு சாகச கதையின் நாயகனாக ராய் இங்கிலாந்தின் நூலகங்களிலும், இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் வேலியை வெறித்தனமாகத் தேடினார். அந்த சாகசத் தேடலின் சுவாரஸ்யமான கதை உப்பின், உப்பு வரியின் வரலாற்றுடனும், இந்திய பஞ்சங்கள், உப்பின்மையால் உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்த தகவல்களுடனும் உலக அளவில் உப்பின் மீது எவ்வாறு வரிகள் விதிக்கப்பட்டன, எவ்வாறு வசூலிக்கப்பட்டன எனும் தகவல்களுடனும். இந்திய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுடனும் ஒரு நேர்த்தியான நாவலைப்போல கோர்க்கப்பட்டு The great hedge of India எனும் புத்தகமாக 2001ஆம் ஆண்டு வெளிவந்தது.

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இந்திய வரலாறு பல்வேறு தரப்பினரால் எழுதப்பட்டுள்ளது. நம் கிராமியப் பாடல்களில் பஞ்சங்கள் குறித்தும், அன்னியர் ஆட்சி குறித்தும் பாடல்கள் உள்ளன, இன்றளவும் நாம் ஆங்கிலேய ஆட்சியின் பல்வேறு கூறுகளை அலசி ஆராய்ந்து வருகிறோம் ஆனாலும் உலகிலேயே மிகப் பெரிய அந்த வேலியை தேடிச் சென்ற ஒரே மனிதர் ராய் மாக்சம் என்பது மிகுந்த வியப்புக்குரியது. இத்தனைக்கும் உள்நாட்டு சுங்கத் துறையின் ஆண்டறிக்கைகள் ஒவ்வொன்றிலும் அந்த மாபெரும் வேலி குறித்த குறிப்புகள் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன.

வரலாறு எத்தனை எளிதில் மறக்கப்படுகிறது என்பதை இந்த புத்தகம் நமக்குச் சொல்கிறது. வரலாற்றின் முக்கியத்துவத்தை சொல்கிறது. பெயர்தெரியாத ஊர்களில் பெயர் தெரியாத மனிதர்களுக்கு நடக்கும் விஷயங்களெல்லாம் செய்திகளாகிக்கொண்டிருக்கும் இந்த காலத்திலும் வரலாறு மிக எளிதில் மறக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

நம் வரலாற்றின் மீதான உதாசீனமே நமது அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாய் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இந்தியர்களாகிய நாம் நம் வரலாற்றை வெறுக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இது எனது வரலாறு அல்ல எனும் எண்ணம் நம்முள் ஆழப்பதிந்து கிடக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஒரு சட்டைக்குத் துணியை வெட்டிக்கொள்வதைப்போல நமக்கு வேண்டியவற்றை மட்டும் வெட்டி வரலாற்றை நம் விருப்பத்துக்கு மாற்றிக்கொள்ள முயல்கிறோம். சாதிக்கொரு ’ஆண்ட’ வரலாறு எழுதப்படும் இக்காலத்தில் தன்னுடைய சொந்த அடையாளங்களை விமர்சிக்கும் வரலாறொன்றை தன் உயிரையும் பணயம் வைத்து, தன் தனிப்பட்ட வாழ்கையை தியாகம் செய்து, அவர் வார்த்தையில் சொன்னால் ஒரு ’பைத்தியத்தைப்போல’ தேடி அலைந்து கண்டுபிடித்து ஒரு அற்புதமான புத்தகமாகத் தந்திருக்கும் ராய் மாக்சம் எனும் நண்பரை, எழுத்தாளரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்சியடைகிறேன். நன்றி.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/73004