கேள்வி பதில் – 23

மாந்திரிக யதார்த்தம் [magical realism] என்பது என்ன? தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை? அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன் கவனத்தில் கொள்ளவேண்டியவை எவை? மேஜிகல் ரியாலிசத்தின் தேவை என்ன?

— ஹரன்பிரசன்னா.

லத்தீன் அமெரிக்காவில் அவர்களுடைய நாட்டுப்புறக் கதைமரபிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கிய உத்தி மாய யதார்த்தம்.

பொதுவாக நாட்டுப்புறக் கதைகள் எங்குமே ஒரு அதீத அம்சத்தைக் கொண்டிருக்கும். அதற்கு இரு காரணங்கள்.

1] கதைக்கு அவசியமான அற்புத உணர்வை உருவாக்குதல்
2] உருவகங்கள்மூலம் கருத்துகளை முன்வைத்தல்.

நவீன இலக்கியம் உருவாகிவந்தபோது ‘உள்ளது உள்ளபடி’ சொல்லும் கதைப்பாணி மேலோங்கியது. இதையே நாம் யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதம் என்கிறோம். இந்தப் பாணி உருவானதற்குக் காரணம் மேலைநாட்டில் உருவாகி வந்த பகுத்தறிவு நோக்கு மற்றும் நிரூபணவாத அறிவியல் நோக்கு. இன்றைய இலக்கியத்தில் மைய ஓட்டம் இதுவே. யதார்த்தவாதம் பலவகை வேறுபாடுகளுடன் மையச்சரடாக இருப்பது இயல்பானதுமாகும்.

ஆனால் உண்மையிலேயே உள்ளது உள்ளபடி சொல்வது மொழியில் சாத்தியமல்ல. அது ஒரு புனைவுப்பாவனையே. நான் ஒருபேருந்து நிலையத்தை யதார்த்தமாகச் சொல்லும்போதுகூட சிலவற்றைச் சொல்லிச் சிலவற்றை விலக்கி நான் விரும்பும் யதார்த்தத்தையே கட்டமைக்கிறேன். அதை யதார்த்தம் என வாசகனை நம்பவைக்கிறேன். அதன் மூலம் ஒரு விஷயத்தை மையப்படுத்துகிறேன். அதாவது என்னால் அர்த்தமளிக்கப்பட்ட பேருந்து நிலையமே என் படைப்பில் வரமுடியும்.

ஒரு படைப்பாளி அப்படிப் புறவயமான தோற்றத்தை நம்பவைக்க விரும்பவில்லை, அது கற்பனையே என்று வாசகனிடம் முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் என்று கொள்வோம். அவர் தன் விருப்பப்படி அதைக் கட்டமைக்கலாம். அவர் அளிக்கும் அர்த்தம் மட்டுமே அப்போது முக்கியமாகிறது. அப்பேருந்துநிலையத்தில் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தனிபேருந்துகள் வருவதாக அவர் எழுதலாம். அவர் அப்போது சொல்லவரும் உண்மை என்ன என்பதே முக்கியமாகிறது.

இப்படி யதார்த்தச் சித்தரிப்பை விலக்கி எழுதும்போது புறவுலகை எளிதில் படிமங்களாக மாற்றிவிடமுடிகிறது. மேலும் செறிவாக அர்த்தங்களை அளிக்கமுடிகிறது. உதாரணமாக நான் ‘நாகம்’ என்ற கதையை எழுதியுள்ளேன். ஆண் பெண் உறவில் உள்ள அச்சம், வன்முறை, இனக்கவர்ச்சி ஆகியவைகலந்த நிலையை அதில் சொல்லியிருக்கிறேன். அதை நேரடியாகச் சொல்ல மிக சிக்கலான நிகழ்ச்சிகள் தேவை. ஒரு சர்ப்பம் வந்து பெண்ணுடன் உறவு கொண்டு போவதுபோல நான் எழுதினேன். அப்போது செறிவாக சுருக்கமாக அதை எழுதமுடிந்தது. விஷ்ணுபுரத்தில் அப்படிப் பல கதைகள் உள்ளன. ஞானத்தேடலின் குறியீடான மிருகநயனி ஓர் உதாரணம். இவ்வகை எழுத்தை மிகுபுனைவு அல்லது அற்புதப்புனைவு [fantacy] என்கிறார்கள். இது எல்லாக்காலத்திலும் இலக்கியத்தில் உண்டு.

புதுமைப்பித்தனின் கபாடபுரம் தமிழின் மிகச்சிறந்த மிகுபுனைவு. சுந்தர ராமசாமியின் ‘கொந்தளிப்பு’, அசோகமித்திரனின் ‘பிரயாணம்’, ‘இன்னும் சில நாட்கள்’, லா.ச.ராமாமிருதத்தின் ‘புற்று’, ‘பச்சைக்கனவு’, ‘ராஜகுமாரி’, ‘அபூர்வ ராகம்’, கி.ராஜநாராயணனின் ‘பேதை’ போன்றவை தமிழின் மகத்தான மிகுபுனைவுப் படைப்புகள்.

மாய யதார்த்தம் லத்தீன் அமெரிக்காவில் உருவான ஒருவகை மிகுபுனைவு. அவர்கள் அதைத் தங்கள் நாட்டார் கதைமரபிலிருந்து எடுத்தார்கள். மாலுமிக்கதைகள், வேட்டைக்கதைகள் இடையனின் கதைகள் ஆகியவற்றின் அழகியல்கூறுகள் அவற்றில் உள்ளன. பயணம் அளிக்கும் புதிய அனுபவம் அவற்றின் முக்கியமான கூறு. 1940களில் கியூப எழுத்தாளர் அலேஜோ கார்ப்பெண்டீர் [Alejo Carpentier] இச்சொல்லை உருவாக்கினார். ஜோர்ஜ் அமடோ [பிரேசில்], போர்ஹெ [அர்ஜெண்டைனா], ஜூலியோ கொர்த்தசார் [அர்ஜெண்டைனா], கப்ரியேல் கர்ஸியா மார்கோஸ் [கொலம்பியா], இசபெல் அலண்டே [சிலி] ஆகியோர் உலக அளவில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் படைப்பாளிகள்.

மாய யதார்த்தம் எப்படி மற்றவகையான மிகுபுனைவிலிருந்து மாறுபடுகிறது?

1] பிற மிகுபுனைவுகள் உத்வேகமான மாயமொழியில் கதை சொல்கின்றன. மாய யதார்த்தம் மாயச்சம்பவங்களை யதார்த்தபாணியில் தகவல்களுடன் உணர்ச்சியில்லாமல் சொல்ல முயல்கிறது. உதாரணமாக மார்கோஸின் ‘நூறுவருட தனிமை’ நாவலில் ரெமிடியோஸ் அழகி என்பவள் ஒரு வீட்டுக் கூரைமீது நிற்கிறாள். அவளிடம் ஒரு காதலன் தன் காதலைச் சொல்கிறான். அவளுக்கு அம்மாதிரி உணர்வுகள் புரிவது இல்லை. தேவதை போன்ற பெண். அவள் போர்வை காற்றில் சிறகடிக்கிறது. அப்படியே எழுந்து பறந்து வானில் சென்று விடுகிறாள். ஏன் போர்வை சிறகாக வேண்டும்? சும்மா போனால் என்ன? நம் கதைகளில் யட்சிகள் சும்மாதானே பறக்கின்றன? துணி சிறகடித்து அதன்மூலம் பறப்பதுபோல ஒரு யதார்த்தப் பிரமையை உருவாக்குவதே மாந்திரிக யதார்த்தம்.

2] மற்ற மிகுபுனைவுகள் மாய உலகை யதார்த்த வாழ்வுடன் தொடர்பற்ற ஒரு புனைவு வெளியில் நிகழ்த்தும். மாய யதார்த்தம் அதை அன்றாடவாழ்வின் தளத்தில் நிகழ்த்திக் காட்டும். மார்கோஸின் ‘மாபெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன்’ என்ற கதையைப் பார்த்தால் அதில் சிறகுள்ள வயோதிகன் ஒரு மலினமான சாதாரண நகருக்கு வந்து இறங்குகிறான்.

3] மாய யதார்த்தம் கறாரான தகவல்கள் கொண்ட புறவய நடையைக் கையாள்கிறது. அதாவது அது இயல்புவாதம் உருவாக்கிய கூறுமுறையில் மாயங்களைச் சொல்கிறது.

4] பொதுவாக மிகுபுனைவுகள் அடிப்படை உணர்வுகளைப்பற்றி பேசுகின்றன. ஆனால் மாய யதார்த்தம் சமகால விமரிசனத்தை அதிகமாகச் செய்கிறது.

மாயயதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப் பின்புலம் கொண்டது. அதை ரசிக்கலாம். இறக்குமதி செய்வது அபத்தம். பீட்சா சென்னையில் செய்யப்பட்டாலும் இத்தாலிய உணவே. நமது உணவு தோசைதான். நமது நாட்டார் மரபு, புராண மரபு ஆகியவற்றிலிருந்தே நம் மிகுபுனைவு வரமுடியும். என் ஆக்கங்களான விஷ்ணுபுரமும், நாகமும் புராண அழகியலில் இருந்து உருவானவை, படுகை நாட்டார் அழகியலில் இருந்து. மேலேசொன்ன தமிழ் மிகுபுனைவுகள் அப்படிப்பட்டவையே. கபாடபுரத்தின் நீட்சியே விஷ்ணுபுரம்.

என்ன வேறுபாடு? நமது புராணங்களில் விழுமியங்கள் ஏற்றப்பட்ட வரலாறு உள்ளடங்கியுள்ளது. நமது நாட்டார் மரபில் குலமுறைக் கதைகளும் உதாரணக்கதைகளும் மேலோங்கியுள்ளன. நமது தனித்தன்மை இங்கேதான் உள்ளது.

தமிழில் மிக ஆரம்பகாலத்தில் கிருஷ்ணன்நம்பி அங்கதமாக எழுதிய ‘நகரம்‘ மாந்திரிக யதார்த்தச் சாயல் கொண்ட கதை. தமிழவன் [‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மற்றும் தமிழவன் சிறுகதைகள்], கோணங்கி [‘பாழி‘ நாவல் மற்றும் பொம்மைகள் உடைபடும் நகரம் போன்ற கதைகள்], எஸ்.ராமகிருஷ்ணன் [காட்டின் உருவம், தாவரங்களின் உரையாடல் போன்ற கதைகள்] ஆகியோரின் பல கதைகள் மாய யதார்த்ததைக் கையாண்டவை. இவற்றை ஒட்டுமொத்தமாக அவற்றின் காகித மதிப்புக்கூட இல்லாத குப்பைகள் என்றே சொல்வேன். அன்று இவை ஐந்துவருடம் கூட தாக்குப்பிடிக்காமல் மறைந்து விட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த மாயையிலிருந்து வெளிவந்து எழுதிய ஆக்கங்களே முக்கியமானவை.

போலி செய்தும் இறக்குமதி செய்தும் ஒருபோதும் இலக்கியம் உருவாக்கப்பட முடியாது. மேலும் இவர்கள் எவருக்குமே மிகுபுனைவை உருவாக்குமளவுக்கு திறன்மிக்க மொழிநடை இல்லை. மொழிபெயர்ப்புநெடி அடிக்கும் செயற்கைநடை அல்லது எழுவாய்ப்பயனிலை சிதறிய நொண்டிநடை ஆகியவையே இவர்களுடையது. பயிற்சியற்ற நடையில் யதார்த்த எழுத்தை சகித்துக் கொள்ளலாம். சமயங்களில் அது நம்மைக் கவரவும் கூடும். முதிரா நடையில் மிகுபுனைவைப் படிப்பது சித்திரவதை. இங்கே சில குழுக்கள் முரசறைந்து கூவியும்கூட வாசகர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தமையால் நல்லவேளையாக இந்த அலை சீக்கிரமே ஓய்ந்துவிட்டது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 22
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 24