«

»


Print this Post

அங்காடித்தெரு, நூறாவது நாள்.


இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

188 அரங்குகளில் வெளியிடப்பட்ட அங்காடித்தெரு 30 க்கும் மேல் அரங்குகளில் நூறாவதுநாள் கொண்டாடுகிறது. பெரும்பாலான பிரதிகள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. திருப்பூர் முதல் நாகர்கோயில் வரை பல ஊர்களில் ஐம்பது நாட்களை கடந்த பின் மீண்டும் திரையிடப்பட்டு மேலும் இருபத்தைந்து நாள் ஓடியது

பலமுறை பல ஊர்களில் திரையரங்குக்குச் சென்று இந்தப்படத்தின் மாபெரும்வெற்றியைக் கூர்ந்து கவனித்து வந்தேன். படத்துக்கு வரும் கூட்டம் சீராக இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது படம் பார்க்க வருபவர்கள் பலர் ஏற்கனவே பார்த்தவர்கள். நிறையெபேர் வழக்கமாக படம் பார்க்காத பெண்கள், வயதானவர்கள். அவர்களை மீண்டும் பார்க்க வைப்பது அங்காடித்தெருவின் துயரம் மிக்க காட்சிகள்தான்.

ஐம்பதுநாட்களுக்குப் பின் பார்ப்பவர்களின் ரசனை மாறியிருக்கிறது . ஆரம்பநாட்களில் திரையரங்கில் பெரிய சலனத்தை உருவாக்காத காட்சிகளில் ஒன்று கனியின் அப்பா [விக்ரமாதித்தன்] சொல்லும் வசனம். ‘குட்டிகளை தூக்கிட்டுபோய் அங்கங்கே போட்டிட்டு போற நாய் மாதிரி நான் தம்பி..நாய் சென்மம்..’ இப்போது அந்தக் காட்சி பெரிய அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. அதைப்பற்றித்தான் அதிகம்பேர் பேசினார்கள்.

ஏனென்றால் அந்த அனுபவம் பல பெற்றோர்களுக்கு இருப்பதுதான். பிள்ளைகள் கடுமையாக உழைக்க அந்த பணத்தில் வாழும் நோயாளிப் பெற்றோரின் குரல் அது. நம் சமூகத்தில் நகரங்கள் ஊதிப்பெருத்து தராசின் ஒரு தட்டு கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறது. கிராமங்கள் காலியாகிக்கொண்டே இருக்கின்றன. நகரங்கள் அழுகிக்கொண்டிருக்கின்றன. அந்த யதார்த்ததைச் சொன்ன படம் அங்காடித்தெரு. ‘ஊர்ல வக்கிருந்தா ஏன் இங்க வரப்போறோம்’ என்று படம் சொல்லிக்கொண்டே இருக்கிறது- குப்பையாக வீசப்பட்ட தொழிலாளியின் குரலில்.

அதேபோல அந்த தங்கை அனாதையாக வயசுக்கு வரும் காட்சி. கிட்டத்தட்ட அதே காட்சியை நான் மீண்டும் கண்டேன். சென்னையில் பாரிமுனையில் நடுத்தெருவில் வெயிலில் தெருவாழ் சிறுமிக்கு சடங்கு நடந்துகொண்டிருந்தது. அங்காடித்தெருவில் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ‘தைரியமா இருக்கணும்’ என்று அறிவுரை சொல்லும் பாட்டி, அவர்களின் தெய்வம் நெற்றியில் பயங்கரமான பொட்டுடன் உக்கிரமான அன்னையாக இருப்பது, அந்தப்பெண் அந்த கையறுநிலையில் இருந்து மீண்டு அபாரமான தைரியத்தை அடைவது என விரியும் காட்சிகள் ஒரு தனியான குறும்படம். நம் நடுத்தர வற்கத்து ரசிகர்களால் அந்த காட்சியை உள்வாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரும் அடித்தள மக்களுக்கு அந்தக்காட்சி அவர்களின் வாழ்க்கையாகவே தெரிகிறது.

அங்காடித்தெருவின் கதையை ஒற்றைக்கோடாக எடுத்தால் இந்தக் காட்சிகள் தேவையே இல்லை. ஆனால் இம்மாதிரி சில கணங்களாகவே உண்மையான வாழ்க்கை சினிமாவில் வர முடியும். ஆகவேதான் அடித்தள உழைப்பு நிறைந்த திருப்பூர் சிவகாசி கரூர் போன்ற ஊர்களில் அங்காடித்தெரு தொடர்ந்து பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பல ஊர்களில் மீண்டும் திரையரங்குக்கு வரும் இப்படம்.

சென்னையில் பல அரங்குகளில் ஓடுகிறது என்றாலும் நூறாவது நாள் விழா காஞ்சிபுரம் அரங்கு ஒன்றில் நிகழ்கிறது. சென்னையில் படம் ஓடுவது புதிதல்ல. ஆனால் காஞ்சீபுரம் போன்ற ஒரு சிறிய ஊரில் ஒரு படம் நூறுநாள் ஓடுவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லாத விஷயம். ஆகவே வசந்தபாலனுக்கு அதுதான் பெரும் கௌரவம் என்று பட்டிருக்கிறது .மேலும் இன்னொன்று, தயாரிப்பாளர்களுக்கு பதிலாக திரையரங்க உரிமையாளரே நடத்தும் விழா இது. வசந்தபாலன் அஞ்சலி மகேஷ் எல்லாரும் செல்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் இப்படத்தின் துயரக் காட்சிகளை பலர் விமரிசித்தார்கள். நம் வாழ்க்கை இபப்டி இல்லை என இவர்களால் சொல்ல முடியவில்லை. அதை ஏன் காட்ட வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஒருவருடம் வெளிவரும் படங்களில் ஒன்றோ இரண்டோதான் இப்படி இருக்கிறது. மிச்ச படங்களெல்லாம் கேளிக்கையை மட்டுமே காட்டுகின்றன. இந்த படமும் அப்படி இருக்கலாகாதா என்பவர்களிடம் என்ன பேச?

முதல் பத்துநாட்கள் படம்பார்த்தவர்கள் இருவகை. ஒருசாரார் எல்லா படங்களையும் பார்ப்பவர்கள். மானசீகமாக தங்களை படமெடுப்பவர்களாக எண்ணிக்கொள்பவர்கள். ரசிகனாக அல்லாமல் படைப்பாளியாக நின்று கருத்து சொல்ல முற்படுபவர்கள். சினிமாவழியாகவே சினிமாவை பார்ப்பவர்கள். இரண்டாம் சாரார் தனிமை காரணமாக, கேளிக்கையை மட்டும் விரும்பி, எல்லா படங்களையும் பார்ப்பவர்கள்.

ஆகவே நம்மைச்சுற்றி உள்ள வாழ்க்கையின் உண்மையான துயரம் அவர்களுக்கு ‘அழுவாச்சி’யாக ப் பட்டது. அவர்களில் சிலரின் கருத்துக்களைக் கண்டு வசந்தபாலனே கூட படம் ரொம்பவும் அழுகையாகி விட்டதா என சந்தேகம் கொண்டார். ஆனால் இன்று அந்த அப்பட்டமான கனத்த துயரம் காரணமாகவே படம் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது.

‘வாழ்க்கை துக்கமாக இருக்கிறது, சினிமாவில் துக்கம் எதற்கு’ என ஒரு குரல் கேட்கிறது. அது கலையை புரிந்துகொள்ளாதவர்களின் குரல். வாழ்க்கையில் இருக்கும் துக்கமே கலையின் துக்கம். சொந்த வாழ்க்கையின் துக்கங்களை கலை வழியாக மீண்டும் நிகழ்த்தி, கண்ணீர் விட்டு, தூய்மை கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் ரசிகர்கள். அதை கதார்ஸிஸ் என்றார் அரிஸ்டாட்டில்.

ஐம்பதுநாட்கள் கழிந்த பின் அங்காடித்தெரு அரங்கில் விசும்பி விசும்பி அழுபவர்களை கண்டு நானே ஆச்சரியத்துடன் அதை நினைத்துக்கொண்டேன். உண்மையில் அரிஸ்டாடில் சொன்னது எனக்கு இப்போதுதான் பூரணமாக புரிந்தது, நம்பிக்கையும் வந்தது. மானுட உணர்ச்சிகளை சந்தேகப்படும் சுந்தர ராமசாமியின் பரம்பரையில்தானே நானும் வந்தேன்.

‘இந்த ஒருத்தன் கிட்டயவது மானமா இருந்துக்கறேனே’ என்று கனி சொன்னபோது சத்தம் போட்டு அரங்கில் விசும்பிய ஒர் அம்மாளை திரும்பி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அக்கணம் மிக வலுவாக என்ன உணர்ந்தேன் என்றால் நான் அப்படி அவளுடன் சேர்ந்து அழ முடியாது என்பதைத்தான். நான் வாசித்த அத்தனை புத்தகங்களும் சேர்ந்து எனக்கு தடையாக ஆகின்றன

http://way2online.com/?p=67742

http://www.jeyamohan.in/?p=631
http://www.jeyamohan.in/?p=624

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7295/

22 comments

1 ping

Skip to comment form

 1. ramji_yahoo

  வாழ்த்துக்கள் பல,

  நூறு நாட்கள் ஓடினது மட்டும் அல்ல, நூறு ஆண்டுகள் கடந்தும் இந்த படம் பேசப் படும்.

  ஒரு சில சிறிய குறைகள் (ஊழியர்களை அடிப்பது, திருச்செந்தூர் பையன் நாஞ்சில் தமிழ் பேசுவது)

  காதல், பருத்திவீரன், சேது, வெய்யில், சுப்ரமணியபுரம் வரிசையில் அங்காடி தெருவும் சேரும்

 2. ஜெயமோகன்

  ஆங்காடித் தெரு நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தங்களிடம் நீண்ட இடைவெளிக்கு பின் பேசுவது மகிழ்ச்சியாய் உள்ளது . நான் கடவுள் திரைபடத்தை கண்ட பின் தங்களின் மேல் ஒரு புதிய அபிமானம் என்னுள் பரிமளித்தது . ஏற்கனவே ஏழாவது உலகம் நாவலை வாசித்த உத்வேகம்தான் நான் கடவுள் திரைபடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டாகியது . சிறிய இடைவெளிக்கு பின்
  இன்று பெற்றவையில் உள்ள தங்களின் கட்டுரையின் வாயிலாக தங்களை உணர்வுகளில் மிக நெருக்கமாக உணர்கிறேன் . இப்போது டெல்லி வாசம் . தேடல்களோடு பயணம் தொடர்கிறது .
  தங்களின் வலைத்தளத்தில் இன்னும் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

  என்று உண்மையுள்ள
  தேவராஜ் விட்டலன்
  வலைத்தளம் : http://vittalankavithaigal.blogspot.com

 3. sundaravadivelan

  உறுதியாக மிக நீண்ட நாட்களுக்கு பேசத்தக்க படம். மிக சரியான வட்டார தமிழ் பயன்படுத்த பட்ட படம். பல படங்களில் வட்டாரத் தமிழ் என்று கூறி ஒரு சில வட்டாரச் சொற்களை மட்டும் பயன் படுத்திவிட்டு மற்றவைகளை பொதுவான தமிழாக விட்டுவிடுவர். இதில் முழுமையாகவே வட்டார வழக்காகவே உள்ளது.

  வசனங்கள் பற்றி குறிப்பிடுகையில், என் மனதில் நிறைந்த மற்றுமொரு வசனம் . உடல் பாதிப்படைந்தவரின் மனைவி தன குழந்தையும் குறையுடன் பிறந்த போதும் ‘இப்படி பிறக்கணும்னு தான் வேண்டிக்கிட்டேன்…’ என்று குறிப்பிடுவது.

  சமுதாயத்தில் புரையோடி போயுள்ள மனித விகாரங்களின் மீதான சாடல். நினைத்து பார்க்கையில் இந்த சமுதாயம் அந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை நிச்சயம் இவ்வாறுதான் அவதூறு பேசும்.

 4. sundaravadivelan

  ‘இந்த ஒருத்தன் கிட்டயாவது மானமா இருந்துக்கிறேன்’ வலி மிக்க வரிகள்.

  http://suzhiyam0.blogspot.com

 5. elama

  அக்கணம் மிக வலுவாக என்ன உணர்ந்தேன் என்றால் நான் அப்படி அவளுடன் சேர்ந்து அழ முடியாது என்பதைத்தான். நான் வாசித்த அத்தனை புத்தகங்களும் சேர்ந்து எனக்கு தடையாக ஆகின்றன…..
  அடடா…அற்புதமான வார்த்தைகள்….

  இளம்பரிதி

 6. uthamanarayanan

  All encomiums have been showered on you for what you have done to this movie and I also join with them in wishing you success in your foray into the movies as a writer ……. and who knows you may even become an actor in the years to come , may be as a father or brother and what ever role given to you. Any word or deed which creates and sustains human emotions never fail to sustain itself in the hearts and minds of people.Man is emotional which you know already, difference being some hide , some show and some proactive to emotions.Any mother dying in any story or cinema or any place is an emotion to anyone who is human enough despite the advanced age one is in. Well……… I am haranguing………. sorry Jeyamohan.
  Best wishes

 7. kamaljamo

  “விக்க தெரிஞ்சவன் வாழ தெரிஞ்சவன் ”

  வசந்த பாலன் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் !!!

 8. rangadurai

  //சென்னையில் படம் ஓடுவது புதிதல்ல. ஆனால் காஞ்சீபுரம் போன்ற ஒரு சிறிய ஊரில் ஒரு படம் நூறுநாள் ஓடுவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லாத விஷயம்.//

  நீங்கள் காஞ்சிபுரம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றே கருதவேண்டியுள்ளது. காஞ்சிபுரம் சென்னையின் புறநகராகவே மாறிவிட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் ”அக்கரைக்கும் இக்கரைக்கும் பரிசல் ஓட்டி பரிசல் ஓட்டி எக்கரை என் கரை” என்று மறந்தவர்கள் சில ஆயிரம் பேர்களாவது இருப்பர்.

  ”சங்கர மடம் போன்ற அமைப்புகள் மையம் கொண்டிருப்பதால் காஞ்சிபுரம் வளர வாய்ப்பே இல்லை; அது சிறியதாகத்தான் இருக்க முடியும்” என்று வேண்டுமானால் சிலர் பிரச்சாரம் செய்து கொள்ளலாம். ஆனால் யதார்த்தம் என்பதோ பிரச்சாரங்களைச் சார்ந்து இருப்பது அல்ல. .

 9. ramanikkutty

  படத்தின் துவக்கத்தில் ப்ளாட்பாரத்தில் படுத்திருக்கிற மனிதர்கள் மீது ஏறி நசுக்குகிற வாகனம், விளிம்பு நிலை மனிதர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் நமது மனதையும் ஒருசேர நசுக்கிவிடுகிறது. படம் முழுக்க ஒரு கனத்த மவுனம் – எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகள் இருந்தபோதிலும் – நம் மனதை ஆட்கொள்கிறது. இறுகிய அந்த மெளனம் நம் இயலாமை குறித்த குற்றவுணர்ச்சியாலானது. இந்தக்குற்றவுணர்ச்சியிலிருந்து மீளவிரும்பாது உண்மை நெஞ்சிலறைந்து அரற்றுவதை நான், நாம் அதே மெளனத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான், நாம் படத்தை மீண்டும், மீண்டும் பார்க்க விழைகிறோம்.

 10. madhan

  ஒரு படம் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய, மிக நுண்ணிய ஆய்வுடன் கூடிய ஒரு கட்டுரை. அதை அப்படத்தின் வசனகர்த்தாவே எழுதிருப்பது ஒரு புதுமையாகவே இருந்தது. நீங்கள் உங்கள் படங்களின் தோல்வி குறித்து எழுதிய போது புரியாதது ஏனோ நீங்கள் உங்களின் வெற்றி படத்தை எழுதிய போது புரிகிறது. நீங்கள் உங்கள் எழுத்தின் தாக்கத்தை நேரில் சமனுடன் ஏற்றுக்கொள்ளும் தைரியம்! கலையைக் காண்பவனின் ரசனையை உயர்த்துவதே கலைஞனின் கடமை. என் ரசனை உயர்ந்திருக்கிறது. உங்களை வசனமெழுத வைத்ததாலேயே வெற்றியின் முழுப் பெருமைக்கும் இப்படத்தின் இயக்குனர் உரியவராகிறார். உங்களின் படைப்பே உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஏக்கம் வழி நீங்கள் இருக்கும் உயரம் புரிகிறது.

 11. tamilsabari

  அணைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்

 12. ramasamy

  அன்புள்ள ஜெ..

  இந்தியில் ராவண் பார்த்து நொந்து போய் ஒரு நாள் மாலை “பூ” படம் பார்த்து கண்ணீர் சிந்தினேன். என்ன ஒரு இயல்பான கதைமாந்தர்கள்? பேனாக் காரர்.. அவர் மகன்.. பார்வதி.. அவளின் மாற்றுக் குறையாத அன்பு.. மிக முக்கியமான இடத்தை தமிழ் சினிமா அடைந்திருக்கிறது இப்போது.. இங்கே தேங்கி விடாமல் மேலே செல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.. மணி கிராமப்புற கதை எடுப்பதும், அதற்கு ரகுமான் இசையமைப்பதும், ராகிக் களிக்கு மேகி சாஸ் போல இருக்குது.. அங்காடித் தெரு பார்க்கணும் பகவானே..

 13. ramasamy

  சிந்திக்கும் போஸ் கலக்கல் வாத்தியாரே.. அடுத்த படியா மேலே நோக்குவது போல் இன்னொரு போஸ்..பேனாவுடன் ஒரு போஸ்..

 14. sivasakthi

  ஜே எம்,
  மற்றும் தமிழ் சினிமாவின் ரசிகர்களே,
  நெல்லை தமிழ் பேசி வளர்ந்த மலர்ந்த சகோதர சகோதரிகளே,

  பல வருட காலம் புழுத்து போயிருந்த தமிழ் சினிமா உலகிற்கு புது உயிர் கொடுத்த படம்.

  ஜே எம் கூறியது போல காதர்சிஸ் (CATHARSIS) பாதிப்பு கொண்டு வரும் படம்.
  ஒவ்வொரு மனிதனிடம் ஒளிந்து அல்லது மறைந்து கிடக்கும் மனசாட்சிக்கு அறைகூவல் விட்ட ஒரு காவியம்.

  இந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவரையாவது அங்கு நடந்து கொண்டிருக்கும் கொடும் வாழ்வை ஒரு கணமாவது பார்த்து உணர வைத்தாலே போதும், இந்த படத்துக்கு ஒரு ஆன்மீக வெற்றி கிடைத்து விடும். கோயில்களும் சர்ச்களும் பெறாத வெற்றியை இந்த ஒரு படம் பெற்று விடும்.

  இந்த படத்தை இது வரை மூன்று முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு உண்மையை உணர்த்தி ஒரு ஆன்ம சுத்தியை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.

  ராம்ஜி கூறிய குறைகள் சரியல்ல. நெல்லை தமிழின் பல சொற்கள், பேச்சு வழக்குகள், சொலவடைகள் நாஞ்சில் நாட்டுக்கும் நெல்லை சீமைக்கும் பொதுவானவை. தொழிலாளிகள் அடிபடுவதும் உண்மை.

  திருநெல்வேலி மாவட்ட, நாஞ்சில் நாட்டு மக்கள் ஆன தயாரிப்பாளர், இயக்குனர் வசந்த பாலன், படத்தில் வாழ்ந்த நடிக நடிகைகள், வசனகர்த்தா ஜெயமோகன் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் உளமார்ந்த நன்றி.

  இறுதியாக ஒன்று. என்னிடம் இருக்கும் நெல்லை பெருமையை பன்மடங்காக்கிய பெருமையும் இந்த படத்துக்கும் சேரும்.

 15. Ramachandra Sarma

  காலச்சூராவளியில் சிக்கி சிதைந்துபோகும் மனிதன் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை, எதிர்காலத்தை எதிர்கொள்ளும் தருணம் மிகவும் அழகாக வந்திருந்தது. ஒரு சக மனிதனின் வாழ்கை ஒரு உணர்ச்சிகரமான துன்பியல் சம்பவம் போல நம்மை கடந்துசெல்லும் போது நமக்கு மூச்சு முட்டுகிறது. லா ஸ்ட்ராடா என்றொரு இத்தாலிய மொழி படம் பார்த்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவம் இதிலும். வாழ்த்துக்கள். தனிப்பட்ட முறையில் இதுபோன்ற படங்களை பார்க்க நான் பெரும்பாலும் விரும்புவதில்லை. :(

 16. sathiawin

  “நேத்து முழுசும் எந்தங்கச்சி உன்னை யாரு யாரு ன்னு கேட்டுட்டே இருந்திச்சி”
  நீ என்ன சொன்ன?
  சிரிச்சேன்”.

  மிக நயமான, இயல்பான வசனம், எனக்கு பிடித்தது”.

  ஆனால், தங்கச்சி வேலை செய்யும் வீட்டு அம்மாளை பிராமணாக காட்டியிருப்பதில் நடைமுறை எதிர்ப்பு, மிரட்டல்களில் இருந்து தப்பித்து கொள்ளும் திரையுலக வசதி தெரிகிறது எனினும், பிற உயர்சாதி/முதலாளிகள் குற்ற உணர்விலிருந்து தப்பிவிட மாட்டார்களா?

 17. sathiawin

  பிற சாதி ஏழைகளை சுரண்டிய நிலப்ரபுத்வம் காலாவதியாகி, சொந்த சாதி மக்களாக திரட்டி, சுரண்டும் நவ-முதலளித்வம் ( சாதி சங்கங்கள் செய்வதும் இதையே!?) இப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

  வசந்தபாலன் மேலும் உயரம் போவார்,கூட்டணி பலமாக இருப்பதால்.

 18. raghunathan

  அன்பு ஜே சார். விக்ரமாதித்தனின் புலம்பல் பொட்டில் அறைந்தது ஆரம்பத்திலேயே .
  இதே தாக்கம், துக்கம், இதே விக்ரமாதித்தனின், புலம்பல், படைத்தவனின் மேல் விட்ட சாபம் (நான் கடவுள் படத்தில்) கேட்ட போதும் ஏற்பட்டது. கையறு நிலையின் உச்சம். இந்த நாட்டில் மற்றவன் வேதனய்யை உணரும் ஒவ்வொரு
  குழைந்த மனதுடையவனுக்கும் ஏற்படும் உச்சகட்ட கையாலாகாத நிலையின் துயரம். மற்றபடி, எவ்வளவு புத்ததகங்கள் படித்திருந்தாலும், உணர்வின் சில குறிப்பிட்ட
  நரம்புகளை ஜக்கி வாசுதேவ் போன்ற குருமார்கள் தொட்டுத் திறந்துவிட்டால்,
  பிறகு எல்லார் துயரங்களையும், நம் தோளில் போட்டு, கரைந்து அழுவதற்கு எதுவும் தடையாய் இருப்பதில்லை.

 19. Sanjeevi

  ===
  அக்கணம் மிக வலுவாக என்ன உணர்ந்தேன் என்றால் நான் அப்படி அவளுடன் சேர்ந்து அழ முடியாது என்பதைத்தான். நான் வாசித்த அத்தனை புத்தகங்களும் சேர்ந்து எனக்கு தடையாக ஆகின்றன…..
  ====

  ஆஹா இந்த மாதிரி எழுத்துக்களை படித்து எத்தனை நாள்கள் ஆயிற்று . அருமை அருமை குறிப்பாக மேலுள்ளது.

  சிந்தனைய பலமாக தூண்டும் எழுத்து உங்களது

 20. ravibala28

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

  நான் உங்கள் எழுத்துக்களை சிறிய அளவில் மட்டுமே படித்திருக்கிறேன்.

  உங்கள் எழுத்துக்கள் மீது எனக்கு மரியாதை உண்டு.

  நீங்கள் எழுதிய அங்காடித்தெரு படம் என்னுள் நிறைய பாதிப்புகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த படத்தில்
  படமாக்களில் எனக்கு திருப்தி இல்லை. இந்த மெல்லிய உணர்வுகளை பற்றி சொல்லக்கூடிய படத்தில் வசந்தபாலன் காட்சிகளை மிக வேகமாக காண்பித்திருக்கிறார். குறிப்பாக அந்த காதலி தற்கொலை செய்து கொள்ளும் காட்சி.. இதில் நெட்டிவிட்டி வர வேண்டும் என்பதற்க்காக வசனங்கள் மிக வேகமாக உச்சரிக்க வைத்து அந்த காட்சியை வெகுஜண ரசிகர்களுக்கு புரியாத மாதிரி எடுத்திருக்கிறார். அவள் தற்கொலை செய்வதை வைத்து
  அந்த காட்சிக்கான பலத்தை ரசிகர்கள் அவர்களாகவே உணர்ந்து கொள்கின்றனர். முதலில் இந்த படத்தில் அங்காடி தெரு என்பதே சரியாக காண்பிக்கப்பட வில்லை. இதில் அந்த தெருவில் இருக்கும் குள்ளன் கதாபாத்திரம் குருட்டு பெரியவர் என பல கதாபாத்திரங்கள் கதையில் இருந்தாலும் அவர்கள் தனியாக வந்து போகிறார்கள். இப்படத்தில் மிக முக்கியமான கேள்வி… மகேஷும் அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பது தெரிந்து கொண்டு மகேஷின் மீது திருட்டு பழி சொல்லி போலிஸ் நிலையத்தில் வைத்து அடிக்க, அவன் அண்ணாச்சி செய்யும் தப்பை பகிரங்கபடுத்த அப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணாச்சி அவனுக்கு வாய்ப்பு
  கொடுக்க திரைக்கதையில் வாய்ப்பே இல்லை. இந்த விசயம் நீங்கள் சொல்லப் போகும் கதைப்போக்கிற்க்காகவே வற்புறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  ஆனாலும் இந்த படம் பார்த்துவிட்டு அந்த வணிக நிறுவனத்தின் கடைக்கு செல்லும் போது அங்கு வேலை
  செய்பவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது….

  வசந்த பாலன் இந்த கதையை இன்னும் நல்ல வடிவத்தில் எடுத்து இருக்கலாம்.

  அன்புடன்
  சினிமா ரசிகன்.

 21. M.A.Susila

  இந்தத் தள அமைப்பு , காடு , ஆயிரங்கால் மண்டபத்தை நினைவுபடுத்தும் வகையில் நன்றாக இருந்தாலும் ஜெ.எம்மின் இந்தப் புகைப்படம் வேண்டாம் என்று தோன்றுகிறது.
  இன்னும் சற்று முயன்று பார்க்கலாமே.

 22. tamilsabari

  //மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரும் அடித்தள மக்களுக்கு அந்தக்காட்சி அவர்களின் வாழ்க்கையாகவே தெரிகிறது.//

  //‘வாழ்க்கை துக்கமாக இருக்கிறது, சினிமாவில் துக்கம் எதற்கு’ என ஒரு குரல் கேட்கிறது. அது கலையை புரிந்துகொள்ளாதவர்களின் குரல். வாழ்க்கையில் இருக்கும் துக்கமே கலையின் துக்கம். //

  ஆம். நன்றி

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » அங்காடித்தெரு, நூறாவது நாள். -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by nchokkan and Tamil investors. Tamil investors said: RT @thennarasu: இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது :ஜெயமோகன் http://bit.ly/aewEd4 […]

Comments have been disabled.