காவியம்


காவியம்

இரங்கற் பாடல்களினாலான ஒரு காவியம்
இதுவரை யாரும் எழுதியதில்லை.
ஒவ்வொரு வரியும் ஒரு ஆத்மாவுக்கு
ஒவ்வொரு சொல்லும்
சிதைந்துபோன ஒரு கனவுக்கு
ஒவ்வொரு எழுத்தும்
ஒரு துயர நினைவுக்கு

அப்படியொரு காவியத்தை எழுதினால்
அதற்கு முற்றுப்புள்ளியே போடமாட்டேன்
கண்ணீருடன் அவ்வப்போது
காற்புள்ளிகள் வைப்பேன்
எல்லையற்ற நிம்மதியுடன் முக்காற்புள்ளிகள்
பரவசமூட்டும் ஒரு கனவாக முற்றுப்புள்ளி
என்முன் மிதந்துகொண்டிருக்க செய்வேன்

இரங்கற் பாடல்களினாலான காவியத்தில்
மலைகளும் சமன்வெளிகளும் புட்களும் பூக்களும்
சதுப்புகளும் வனமிருகங்களும் இருக்காது.
பனிவிரிந்த சாம்பல்நிற வெட்டவெளி அது
காற்று உலாவும் குளிர்ந்த மௌனப்பரப்பு.

இரங்கற் பாடல்களினாலான காவியத்தில்
ஒரே வரி மீண்டும் மீண்டும் வரக்கூடும்
ஒரே சொல் மீளாது ஒலிக்கக்கூடும்
அச்சொல் ஒருவேளை
வெறுமொரு விசும்பலாக இருக்கக்கூடும்

இரங்கற்பாக்கள் உதிரும் இலைகள்போல
அவ்வளவு தூரம் அர்த்தமற்றவை வெறுமையானவை
உதிர்க்கும் மரத்தை தவிர
மீதி அனைவருக்கும்.

[பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் இருந்து]

முந்தைய கட்டுரைகண்ணதாசன் விருதுகள்
அடுத்த கட்டுரைஅங்காடித்தெரு, நூறாவது நாள்.